
வானவில்-05
தேஜஸ்வினி தன்னெதிரே வந்து கொண்டிருந்தவனை திகைத்துப் போய் பார்த்து நிற்க, அவனோ தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பேசியபடி அவளைக் கடந்து சென்றான்.
நெஞ்சில் நீர் வற்றியது போல பிரம்மை அவளுக்கு.
‘என்னை அடையாளம் கூடத் தெரியவில்லையா அவனுக்கு. அத்தனை அந்நியமாகப் போனேனா? ‘மனம் குமைந்து அழத் தயாரானவளை சொடக்கிடும் ஓசை தடுத்தது.
“என்னா ஃபீலிங்கா? “என்று அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பிட, அங்கே அருண் அவளை முறைத்தபடி நின்றிருந்தான்.
கண்களில் நீர் ததும்ப நின்றவளைப் பார்க்க பாவமாக இருந்தாலும், “என்னா ஃபீலிங்கா இல்ல ஃபீலிங்கானு கேட்கிறேன் எனக்கு தான் மா ஃபீலிங்கு வா போகலாம்” என்று வடிவேல் வசனத்தை வாரி இறைத்தவன் அவளை அங்கே நிற்க விடாமல் அழைத்துச் சென்றான்.
அவளால் எதுவுமே பேச முடியவில்லை. பேசவும் விரும்பவில்லை. தன் மனதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் பிடிக்காமல் அமைதியாக நடந்தாள்.
அருணுக்கும் அவள் முகத்தைப் பார்த்ததும் எதுவும் கேட்கவோ பேசவோத் தோன்றவில்லை.
‘பார்த்ததை கிரகித்துக் கொள்ளட்டும்.’ என்று அமைதி காத்தான்.
இவர்கள் வீடு சேர்வதற்குள் அங்கே அத்தனை சலசலப்பு.
தேஜா எதற்காக அங்கு செல்ல வேண்டும் இப்போதும் கூட அவன் நினைவில் இருக்கிறாளா, ‘என்ன பொண்ணு இது அறிவில்லை வளர்ப்பு சரியில்லை ?’என்று அத்தனை கிசுகிசு ஆற்றாமை என்று திரிபுரசுந்தரியை அவலாக்கி மென்று கொண்டிருந்தனர் உறவுகள்.
“போதுமாத்தா ஒனக்கு. அப்படி என்ன ஆவலாதிங்குறேன் ஆம்பளைக தான் போறாகள்ள நீ என்னதுக்கு கூட்டத்துக்கு போனவ இப்ப அவல்ல பேச்சு வாங்குதா இன்னும் எத்தனை காலத்துக்கு அவள பேச்சு வாங்க வைப்ப நீ.” என்று அவளின் பெரியம்மா திட்ட தேஜஸ்வினி தலைகுனிந்து நின்றாள்.
“ஏதாச்சும் சொன்னா இந்தமானைக்கு நின்று. பொறவு வூட்டு பக்கம் வராம ஓ ஆத்தா அப்பன் மறுவி கெடக்கணும் அதுக்குத்தேன் இம்புட்டு தூரம் வந்தியா நீ? “என்று திட்ட
“எத்தே சும்மா அந்தப் புள்ளைய என்னத்துக்கு வையிறீக. இந்தா தேஜா போய் சோலிய பாரு போ” என்று அருண் தான் அதட்டினான்.
“நீயென்னடா அவளுக்கு வக்காலத்து? “என்று எகிறிக் கொண்டு வந்த தேஜாவின் ஒன்று விட்ட மாமாவை தீயாய் முறைத்தவன்
“சும்மா போறீங்களா எதுக்கு எடுத்தாலும் தாவி குதிச்சுக்கிட்டு என்ன இப்ப கூட்டத்தில் வந்து நின்றுச்சு அந்த புள்ள. மறுபடியும் தன்னால ஒரு பஞ்சாயத்து ஆகிப் போயிருமோனு பயந்து வந்திருக்கும். வேணும்னு வந்து உங்க கிட்ட வாங்கிக் கட்டிக்க ஆசையா அதுக்கு, பேசாம போ சித்தப்பு” என்ற அருண், “யப்பா பார்த்தாச்சுன்னா கெளம்புவோமா? “என்றான்.
“யய்யா பேராண்டி இருந்து இருந்து ரெண்டு குடும்பமும் ஒன்னு சேந்து இருக்கு திருவிழா வை கொண்டாடிட்டுப் போவாம என்னய்யா இது? அப்பத்தா சொல்லிட்டேன் நீ இங்கன தான் இருக்க. இந்தா பாரு கொள்ளு பேரன் கூட சேக்காளிக கூட ஆட்டம் கட்டுறத” என்று தன் சகவயது பிள்ளைகளுடன் விளையாடும் அவன் மகனைக் காட்டினார்.
“சர்த்தான்.” என்று முனகியவன், “எப்பா என்னப்பா ?”என தந்தையைப் பார்க்க அவர் பொங்கிய புன்னகையுடன் பேரனைப் பார்த்து கொண்டிருந்தார்.
‘ஒரு முடிவோடத் தான் இருக்காய்ங்க’ என்றபடி, “சரி அப்பத்தா இருக்கேன்” என்றவனை, “வா மச்சான் என் ரூமுல தங்கிக்கங்க” என சுதாகரனின் இளவல் தன்னோடு அழைத்துக் கொண்டான்.
தேஜஸ்வினி எப்போதோ தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றிருக்க, அதை கவனித்துக் கொண்டிருந்தான் யுகாதித்தன்.
‘தேவை இல்லாமல் போய் வாங்கிக் கட்டிக்கிறா.. அழுதிருப்பாளோ… எதுக்காக இருக்கும் ?’என்று யோசித்தவன் சட்டென தன்னை நிதானித்து, ‘இது நமக்கு தேவையில்லாத ஆணி’ என்றபடி போய் விட்டான்.
அறையில் இருந்த தேஜாவோ, “நான் வேணும்னா ஊருக்கு கிளம்பிடவா ம்மா? “என்று கேட்க திரிபுரசுந்தரிக்கு சங்கடமாய் போனது.
“நீ எதுக்கு டி கெளம்பணும்? “அப்பத்தா பேத்தியைக் கட்டிக் கொண்டு விட மறுத்தார்.
“என்னால தேவை இல்லாத சங்கடம் அப்பத்தா” சட்டென விசும்பி விட்டாள்.
மகள் மீது வருத்தம் இருக்கத்தான் செய்தது ஆனாலும் அதையேப் பிடித்து தொங்க வேண்டும் என்றெல்லாம் பத்மநாபன் திரிபுரசுந்தரி இருவருமே நினைக்கவில்லை. அவள் மனம் மாறி சரியாக இருந்தால் போதும் என்று தான் நினைத்தனர்.
அப்படி தேஜா செய்த தவறு தான் என்ன…
எட்டு வருடங்களுக்கு முன்பு:
செந்தாளம்பட்டி கிராமம் திருவிழா கொண்டாட்டத்தில் இருந்தது. காலையில் தான் அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து பக்தர்கள் தீமிதித்து விழாவைச் சிறப்பித்திருந்தனர். வீடு தவறாமல் கிடாய் வெட்டி அவரவர் சொந்தபந்தங்களை அழைத்து விருந்து வைத்துக் கொண்டிருந்தனர் மக்கள்.
கறி விருந்து என்றால் மதுபானம் இல்லாமலா? எல்லா கொண்டாட்டங்களும் நிறைந்து கிடந்தன.
அந்த கிராமத்திற்கு ஏற்ப திருவிழா கடைகள் வேறு வரிசையாக போடப்பட்டிருந்தது. ராட்டினங்கள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாம் குவிந்து கிடக்க, அக்கம் பக்கம் கிராம மக்கள் முதற்கொண்டு சுற்றி வந்தனர்.
அப்போது தேஜஸ்வினி பனிரெண்டாம் வகுப்பு முடித்து கோடை விடுமுறையில் திருவிழா வரவும், குஷியாக குடும்பத்துடன் ஊருக்கு வந்திருந்தாள்.
செந்தாளம்பட்டி வரவேண்டும் என்றாலே அவளுக்கு மனம் முழுவதும் குதூகலம் நிறைந்திருக்கும். சென்னையில் நான்கு சுவற்றுக்குள் தம்பி தங்கையுடன் விளையாடி பழகியவளுக்கு இங்கே பத்து இருபது பிள்ளைகளுடன் ஆண் பெண் பேதம் பாராமல் விளையாடி மகிழ்ந்து ஓடியாடுவது பிடித்தமான ஒன்று. அதுவும் ஆற்றில் குளிக்கவும் மண்ணில் விளையாடவும் அனுமதிக்கும் பெற்றோரைக் கண்டு மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். ஆசைப்பட்டதை செய்யலாம். நினைத்ததை கேட்கலாம். அந்த ஆவலில் வருடம் தவறாமல் இங்கே வந்து விடுவாள்.
பத்தாம் வகுப்பு நுழைந்ததில் இருந்து கிராமத்திற்கு படிப்பை காரணம் காட்டி அனுப்ப மறுத்து விட்டார் பத்மநாபன். இப்போது பரிட்சை எல்லாம் முடிந்து வந்தவளுக்கு கால் தரையில் பாவவில்லை.
“ம்மா ராட்டினம் சுத்துவேன் நீங்க எதுவும் சொல்லக் கூடாது. ஐஸ் வாங்கிப்பேன் திட்டக் கூடாது” என்று அத்தனை கூடாதுகளை பயணம் முழுவதும் சொல்லி அவரிடம் அனுமதி வாங்கி இருந்தாள்.
“சரிடா தங்கம் உன் இஷ்டமா இரு, யார் வேண்டாம்னா?” என்று சிரித்தார் திரிபுரசுந்தரி.
பதினேழு முடிந்து அவளுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பதினெட்டாம் வயது துவங்குகிறது. அந்த வயதுக்கே உரிய செழுமையுடனும் பளபளப்பும் கூடிப் போய் இருந்தவளை இளவட்டங்கள் ரசிக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம்.
‘அதிலும் ஊருக்கு வருகிறோம்’ என்ற ஆவலில் பியூட்டி பார்லர் உபயத்தில் த்ரெட்டிங் ஸ்ட்ரெய்ட்னிங் செய்து இம்முறை கூடுதலாக பேஷியல் செய்து வந்தவள் இன்னும் பளபளத்திருந்தாள்.
அரக்கு நிறப் பட்டு சுடிதாரும்,டல் கோல்டன் நிற ஷாலும் அணிந்து காதில் தொங்கிய ஜிமிக்கியும் வேறு அழகு சேர்த்திட செந்தாளம்பட்டியில் இறங்கியதும் அவன் கண்களைக் கவர்ந்தாள்.
“மச்சான் யார்டா இது ஜிகுஜிகுனு இருக்கா? யார் வீட்டு புள்ளை?” பக்கத்தில் இருந்த நண்பனிடம் கிசுகிசுத்தான் அவன்.
பின்னாலேயே இறங்கிய பத்மநாபன் திரிபுரசுந்தரி இருவரையும் பார்த்த நண்பன்,” நம்ம சுதாகரன் இருக்கான்ல அவங்க சித்தப்பா மக போல இந்தா பத்து பெரியப்பா வராறு” என்றான் அவன்.
“ஓஓஓ சுதாபய தங்கச்சியா… அப்ப எனக்கு மொறையாகுதா?” என்று முனகியவன்,” சர்றா சர்றா” என்று அப்போது அமைதிகாத்தான். அவன் பிரகாஷ்.
அப்போதைக்கு விட்டு விட்ட பிரகாஷ் அதன் பிறகு அவள் பார்க்க வேண்டும் என்றே பல சாகசங்களை செய்தான். பருவமங்கை அவளுக்கு அவனின் சாகசங்கள் ஈர்க்க விளைவு அவனைத் திரும்பி பார்த்து விட்டாள்.
“ஓய் என் கிட்ட எல்லாம் பேச மாட்டியா…?” வளையல் வாங்கிக் கொண்டிருந்தவளிடம் முணுமுணுத்து விட்டு அவன் வேறு எதையோ வாங்க
“நீங்க யார்னே தெரியாது உங்க கிட்ட நான் ஏன் பேசணும்?” என்றாள் நமட்டுச் சிரிப்புடன்.
“ஹ்ஹேய் சீன் போடாத. நான் உன்னை ஒரு வாரமா பார்க்கேன் நீயும் தான் என்னைப் பார்த்து உன் ஃப்ரெண்ட் கிட்ட ஏதோ சொல்லல”
“இல்லையே… பொய்”
“அப்புடியா…?”
“ஆமாம் ஆமாம்” என்று அங்கிருந்து ஓடிச் செல்ல, இப்படியாக நாலைந்து முறை அவளைப் பார்த்து பேச, சிரிக்க, ரசிக்க என்று அவளின் மனதை தன்பால் ஈர்த்து விட்டான். அதற்கு அவன் மட்டும் காரணமில்லை. கூடவே சுற்றிய அவள் வயது தோழிகளும் ஒரு காரணம்,’ அவன் உன்னை பார்க்கிறான் ஹேய் அவன் உன்னை மட்டும் தான் பார்க்கிறான்’ என்றெல்லாம் கேலி கிண்டல் பேச, இவளுமே முறைத்தாலும் அவன் எங்காவது தென்படுகிறானா என்று தேடத் துவங்கி விட்டாள்.
“எனக்கு எல்லாம் பிரசாதம் கிடையாதா சிட்டு. இந்த தாவணி பாவாடையில் செமையா இருக்க. அப்படியே உன்னை” என்று கண்கள் மூடி உணர்வு பொங்க நின்றவனைப் பார்க்க வெட்கம் தாளவில்லை.
“என் கிட்ட இப்படி எல்லாம் பேசாதீங்க” என்று துவங்கி அவன் மீண்டும் வந்து பேச மாட்டானா என்ற ஏக்கத்தில் வந்து நின்றாள் பெண்ணவள்.
“தேஜ் உன் கிட்ட முக்கியமா பேசணும் சின்னாறு பக்கம் வர்றியா? உன் கூட உன் ஃப்ரெண்ட் யாரையாவது வேணும்னாலும் கூட்டிட்டு வா. ப்ளீஸ் தேஜ் உன் கிட்ட பேசணும் வராம இருந்திடாத” என்று கெஞ்சி விட்டுப் போக அவனிடம் பேச வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் பெற்றோரை நினைத்து பயந்தாள்.
“நான் வர மாட்டேன்” என்று பயந்து பதிலளித்தவள் அவன் பக்கமே அதன் பிறகு திரும்பவில்லை.
திருவிழா கொண்டாட்டங்கள் முடிந்து அன்று கிராம மக்களுக்காக ஆடல் பாடல் நிகழ்ச்சி வைத்திருக்க, ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு உணர்வைக் காட்டி அவளைத் திக்குமுக்காட செய்தான் பிரகாஷ்.
“டேய் என்னடா என் மாமேன் மவளை இந்த பார்வை பார்த்து வைக்கிற?என்ன பங்கு சங்கதி?” என்று அருண் பிரசாத் அவனை கண்காணித்து கேட்க
“நான் மட்டுமா பாக்குறேன் அவளும் தான் பாக்குறா பங்கு.”
“என்ன பங்கு லவ்வா?” என்று விசாரிக்க
“ரொம்ப. சும்மா சேட்டையா இருக்கா பங்கு. நீ எதுவும் மொறைப் பொண்ணுனு ரூட்டு விடலையே?”
“அடச்சே நீ வேற ஏன் பங்கு ஒட்டகம் மாதிரி இருக்கா அவளைப் போய்”
“டேய் !கொன்றுவேன் பாத்துக்க”
“விடு மச்சி பருவத்தில் பன்னிக்குட்டி கூட தான் பப்பாளி மாதிரி தெரியும்”
“கொய்யால எத்துனேன்னு வையி “என்று அவன் மிரட்ட
“சும்மாடா… அவளுக்கும் புடிச்சா லவ்வு பண்ணு யாரு வேணாம்னா ?”என்றான் அருண்.
“பிடிக்காமலா எனக்கு கறிக்கொழம்பு குடுத்தா…”
“அடப்பாவி! இது எப்படா?” என்று அருண் ஆச்சரியம் கொள்ள
“நேத்து நைட்டு மாமனுக்கு ஸ்பெஷல் தான்”
“நீ நடத்து பங்கு. சூப்பர் டா. ஆமா ஒங்காளுங்க சாதி பாப்பாய்ங்களே எப்புடி பங்கு?”
“ஏன் எனக்காவ நீ வந்து நிக்க மாட்டியா?” என்றதும்,” நாம எப்பவும் காதலுக்கு மரியாதை தர்ற ஆளு விட்றா பாத்துக்கலாம்” என்று அருண் கூறவும் பிரகாஷ் சிரித்தான்.
மறுநாள் மாலையே… பிரகாஷை தனிமையில் சந்தித்தாள்.
“பார்க்க வர மாட்டேன்னு சொன்ன…?” கிண்டலாய் சிரிக்க
“ஒன்னும் சிரிக்க வேண்டாம் போங்க. எதுக்கு கூப்டீங்க சீக்கிரம் சொல்லுங்க நான் போகணும் “என்று அவசரப்பட்டாள்.
“என்ன தேஜ்… வந்ததுமே போகணுமா?” என்று அவன் குழையவும்,” ப்ளீஸ் பயமா இருக்கு ,சீக்கிரம் சொல்லுங்க” என்று சிணுங்கினாள் அவள்.
“இது உனக்கு வாங்கினேன்.” என்று ஒரு வண்ணத்தாள் சுற்றிய பொதி ஒன்றை நீட்ட,” அய்யோ எனக்கு வேணாம்” என்று பதறினாள்.
“உனக்காக ஆசையா வாங்கினேன்” என்று முகம் கூம்பியவன் அவளையேப் பார்க்க
“வீட்டில் கேட்டா பதில் சொல்ல முடியாது ப்ளீஸ் இது வேண்டாம்” என்று மறுத்தாள்.
“சரி பிரிச்சாவது பாரேன். நீ தந்தது மட்டும் வாங்கிட்டேன்ல, ரொம்ப பயப்படாதே நானும் உனக்கு முறைப் பையன் தான்” என்றான் பிரகாஷ்.
“அதுக்கில்லை” என்றவள் அக்கம் பக்கம் பார்த்து விட்டு அவன் தந்த பரிசை பிரித்து பார்த்தாள். இரு இதயங்கள் இணைந்து அதில் இருவரின் பெயரும் இருக்க, நடுவில் குட்டியான மெழுகு பொம்மை முத்தமிடுவது போல இருந்தது.
அதைப் பார்த்ததும் கூச்சம் வந்து ஒட்டிக் கொள்ள,” இது என்ன இப்படி?”
“ஏன் பிடிக்கலையா…?”மையலாய் அவன் வினவ, பாவையவள் நாணத்தில் தலை குனிந்தாள்.
“ஐ லவ் யூ” என்றவன் அவள் எதிர்பாராத நேரத்தில் முத்தமிட்டு சென்று விட, படபடப்பாய் நெஞ்சில் கை வைத்து விட்டாள்.
முதல் தனிமை சந்திப்பு அவன் தந்த முத்தம் என்று பதின்ம வயதிற்கே உரித்தான வேதியியல் மாற்றங்கள் நிகழ விளைவு காதலின் சுழல் தனில் சிக்கிக் கொண்டாள். அந்த விடுமுறையை அத்தனை மகிழ்ச்சியுடன் கழித்திருக்க பிரகாஷ் உடனான சந்திப்புகள் ரகசியமாய் பாதுகாக்கப்பட்டது அவளுள்.
…. தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பிரகாஷ் லவ்வை விட்டுட்டு வேற பெண்ணை கல்யாணம் பண்ணிட்டான் பாவம் தேஜு.