
மாலை நேரச் சூரிய அஸ்தமனம் சலசலத்து ஓடிய தாமிரபரணி ஆற்றில் பட்டுப் பிரதிபலிக்க, சுற்றிலும் தென்னை மரங்களின் அரணும் வயல் வெளியின் பசுமையும் காற்றின் ஈரப்பதமும் என்று பார்த்தவுடனேயே ஷக்தியின் கண்களை வாரிக்கொண்டது, ஆழ்வார்திருநகரி.
தன்னைப் போல் அவள் முகத்தில் வந்தமர்ந்தது ஒரு புன்னகை.
சில்லென்ற காற்று அவளின் பயண அழுப்பைக் குறைப்பதாக இல்லை. மாறாக மனதை நிறைப்பதாக இருந்தது.
“ஷக்தி, இங்க முன்னவே சாப்பிட்டு போயிடலாம். அங்க நிலவரம் தெரியாதே” என்று முன்னெச்சரிக்கையாகவே யோசித்தான், சிவா.
“மூள இருக்கு ஷிவ் உனக்கு” என்றபடி டிராலியைத் தள்ளிக்கொண்டு வந்தவள் ஒரு ஹோட்டலின்னுள் சென்றாள்.
தங்களுக்குத் தேவையான பட்சணங்களை உண்டு, உடைகளை நேர்த்தி செய்த உடன் ஊருக்குள் தங்கள் இல்லம் நோக்கி நடக்கத் துவங்கினர்.
நடக்கத் தான் பிடித்தது இருவருக்கும். அத்தனை ரம்மியமான இயற்கையை ரசிக்காமல் போவதா என்ற கூற்றுடன் தான் நடந்தனர் இருவரும்.
காலை அவன் அடித்த தடம் சற்று மங்கலாக மாறியிருந்தது அவள் முகத்தில். இருந்தும் அடித்த இடம் சிவந்து தான் போயிருந்தது.
திடீரென, “ஸாரி” என்றான் பக்கவாட்டாக அவளைப் பார்த்துக்கொண்டு.
“கேட்கமாட்டேன்ன?”
“அது அப்போ.. இப்போ ஒரு மாதிரியா இருக்கவும் கேட்டுட்டேன்” என்றான் தலையை அழுந்த கோதியபடி.
“நான் முன்னவே உன்கிட்ட சொல்லாதது தப்பு தானே ஷிவ்?. அதுக்கு, என்னை நீ அடிச்சது அதிகம்டா” கூம்பிய முகத்துடன் சொன்னவள் அவனைப் பார்த்தவண்ணம், “எனக்கு எதையும் என்னோட வெச்சிக்கத் தெரியாது, சமயம் பார்த்துத் திரும்ப தந்துடுவேன்” என்றாள் திரும்பவும்.
அவ்வளவு தான் அவள் எதிர்வினை. அதுதான் ஷக்தியும் கூட.
வேண்டாத பேச்சையும் எண்ணத்தையும் எப்போதும் நெருங்கமாட்டாள். ஒருத்தரின் செயல் ஏன் என்று ஆராய்ந்து நடப்பால். தவறு அவளிடம் இருக்கும் பச்சம் தயங்காது மன்னிப்பைக் கேட்டுவிடுவாள். அதேசமயம், அவளிடம் தவறு இல்லாது போது எதிராளியின் துளி பேச்சையும் காதிலே வாங்க மாட்டாள்.
திமிர் என்பர் பலர் ஆனால் அது சுயமரியாதை என்று புரிவதில்லை அந்த கூன் புழுக்களுக்கு.
“ஷக்தி”
“ம்ம்”
“முதல்ல கோவப்படாத. அங்க யார் என்ன சொன்னாலும் திரும்ப..” என்றவன் முடிக்கும் முன்,
“பேசுவேன்” என்றாள் அத்தனை அழுத்தமாய்.
அதில் முறைத்தவன், “நம்ம நிம்மதி ஏன் கெடுப்பான்” என்றான்.
“இங்க பாரு ஷிவ், நான் இங்க சிவனேஷோட வைஃப் மட்டும் தான். அதத் தாண்டி வேற பேச்சு என்னாவது வந்தா, ஐ ஆம் ஸாரி! நான் பேசுவேன்” என்றுவிட்டாள் ஸ்தீரமாய்.
“ம்ம்ப்ச், எனக்குப் பயமே என் அக்காவோட வாய் தான்” என்று சொல்லியே விட்டான் அவன்.
மெல்லச் சிரித்தபடி, “ஹலோ, இங்க இன்ஸ்பெக்டர் சிவனேஷ்ன்னு ஒருத்தர் இருந்தார். அவர பார்த்தீங்களா ஸார் நீங்க?” என்றாள்.
“நான் மிஸ்டர். ஷக்தி ஆராதனாவா தான் இப்போ இங்க வந்திருக்கேன். நீங்கச் சொல்லும் நபர் சஸ்பென்ஷன்’ல இருக்கார் மேம்” என்றான் தோளைக் குலுக்கியபடி.
“அப்படி போடு அருவாள” என்ற குரல் கேட்கவும் இருவரும் திரும்பினர்.
“மாமு” என்று அழைத்தபடி அந்த நபரை அணைத்துக்கொண்டான் சிவனேஷ்.
அது கருணாநிதி, பாரதியின் கணவர்.
“உன் பாட்டி விழுந்து எழுந்தாதென் ஊர் பக்கம் வருவ போல மாப்புள” என்று அவன் தோளில் கைப்போட்டவர்,
“வா ம்மா, ஆராதனா. நல்ல இருக்கியா” என்றவர் பார்வை அவள் முகத்தில் நிலைத்தது.
தோளோடு அணைத்திருந்தவனை முடிந்தவரை தன் வழு சேர்ந்து அவன் தோளை நெறித்தார்.
“ஸ்ஸ்.. மாமு” என்றவன் மெல்ல அலற,
“நீ பொட்டிய தந்துட்டு முன்ன நட மா. நாங்க பின்னோட வரோம்” என்றவருக்குத் தலையசைத்து அந்த நேர் சாலையில் நடந்தாள் ஷக்தி.
“அடிச்சியா புள்ளைய?” என்றார் அவனைக் கடுமையாய் முறைத்தபடி.
“ம்ம்” என்றபடி அவன் பார்வையைத் தாழ்த்தி.
“எதுக்கு?”
“ம்ம்ப்ச் டென்ஷன் பண்ணிட்டா மாமா ரொம்ப. அதான் என்னையும் மீறி அடிச்சிட்டேன்” என்றவன் அவர் பார்வையை உணர்ந்து, “ஸாரி எல்லாம் கேட்டாச்சு.. கேட்டாச்சு” என்றான் அவசரமாய்.
கருணாநிதியின் எண்ணங்களை அறிந்தவன் அத்தனை வேகமாய் சொல்லாது இருந்தால் தான் தவறாக போயிருக்கும்.
நல்ல மனிதர் அதைவிடப் பெண்களை மதித்து, மரியாதையோடு தூக்கி நிறுத்த தெரிந்த பண்பானவர். நேர் சிந்தனையும் உண்மைக்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கும் கம்பியூட்டர் எஞ்சினியர்.
“டென்ஷன் பண்ணா என்னடா, பொருத்து போக எண்ணம் வராதோ? பொம்பளபுள்ள என்ன சொன்னாலும் கைய நீட்டிடுவ, அவ பேச்சுக்குத் தக்க பொருத்து பேச வராதோ” என்றவர் அப்போதும் அவனையே சாட,
“மாமு” என்றவன் காலையில் நடந்ததைக் கூற, தலையில் அடித்துக்கொண்டார் மனிதர்.
“இத்த ஆரும் அப்போ யோசிக்கல பாருடா. கல்யாணம் நடந்தா போதும்னு நினைச்சோம் ஆனா இந்த புள்ளையும் இத உள்ள வெச்சு மருகிருக்கு பாரு”
“ம்ம்.. எனக்கும் இத்தன நாள் அவ தாலிய போடாதது என்னை பிடிக்காம தான்னு இருந்தேன் மாமு, ஆனா இத எதிர்பார்க்கல. நேத்து டாக்டர்கிட்ட கூட அப்படி ஒரு பேச்சு. அத்தோடத் தொடக்கம் போல தான் இது” என்றவன் மென்மையாய் சிரித்துக்கொண்டான்.
“என்ன சொன்னாங்க? இப்போ ஆராதனா முகத்தப் பார்த்தா கொஞ்சம் நல்லா இருக்கே” என்றவர் கேட்க,
அனைத்தையும் சொல்லி முடித்தான்.
“மூனு சிட்டிங் தானே போயிருக்கீங்க, அதுக்கே இத்தன மாற்றம். நல்லது தென். இத்தனையும் நெனச்சு நெனச்சு புள்ள மனசளவுல உடயரதுக்கு வெளியக் கொட்டி உன்னோட நல்லா இருந்தா போதும்டா சிவா”
“வந்துருவா மாமு, அவ எப்போ என்கிட்ட வர நினச்சாலோ அப்போவே எனக்கு நம்பிக்கை வந்துருச்சு. பார்ப்போம்” என்றவர்கள் நடக்க,
“மாப்புள, இந்த அடிச்ச தடத்தோட ஆராதனா வீட்டுக்கு வரவேண்டாம். தோட்ட வீட்டுக்குப் போங்க, மாமாகிட்ட நான் சொல்லிடுதேன். நீ மட்டும் நைட் வந்து ஆத்தாவ ஒரு எட்டுப் பார்த்துட்டு போ. காலேல முகம் சரியான பின்ன ஆராதனா வரட்டும்”
கருணாநிதி சொல்லச் சொல்ல சிவாவிற்கும் அது சரியாகப் பட்டது. வீட்டினர் எப்படியும் ஷக்தியின் வருகையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிலும் அவன் அடித்த தடத்தைத் தந்தையோ அக்காவோ பார்க்க நேர்ந்தால், அந்த நினைவே அவனை மேலும் சிந்திக்க விடவில்லை.
“ஊருக்கு வந்தும் வீட்டுக்கு வரலேனா அக்கா ஆடுமே மாமு”
“ஆடட்டும்ங்கேன், மலர மஞ்சத் தண்ணீய எடுதார சொல்லுதேன். தெளிச்சு விட்டு ஆட வைப்போம். ஆராதனா பார்த்தபின் உங்கக்கா மனசுல உள்ள எல்லாம் வரட்டும் வெளிய. பார்த்துக்களாம் விடுடா” என்றவாரு ஷக்தியிடம் விஷயத்தை சொல்லி நம்மாழ்வாரின் தோட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்றார் இருவரையும்.
தோட்டத்திலிருந்து சிவாவின் வீடு சற்று தூரம் தான். நடுவில் தோப்பு, அதனை ஒட்டிய வாய்க்கால் பின் வயல் என்று நீண்ட தூரம் வரும்.
மெல்ல இருட்ட ஆரம்பித்திருக்கத் தோட்ட வீடு செல்லும் பாதையிலிருந்த ஸ்ட்ரீட் லைட் வெளிச்சம் மட்டும்.
வீட்டு வாசலில் விளக்கெரிய, “அய்யா வந்திருக்கார் போல மாமு” என்று நடையை வேகப்படுத்தினான் சிவா.
சாலை முடிந்து வீட்டை நோக்கிப் போன செம்மண் சாலை வர, “அண்ணா, பேக் தூக்க முடியலை. இதுக்கு மேல தள்ளவும் முடியாது, சிவாவோட பேக் மட்டும் பிடிங்க” என்று கருணாவின் கையில் அதைத் திணித்தவள் நடந்தபடி,
“உங்க சிஸ்டர் என்ன பண்ணுறாங்க அண்ணா இப்போ” என்றாள்.
“ம்ம்.. நீ வரேன்னு கருங்கோழியடிச்சு கொழம்பு வெச்சிருக்கா”
அவரை திரும்பிப் பார்த்தவள், “ம்ம்ப்ச்.. காமெடி. நல்லாயில்ல ஸாரி”
அதில் சன்னமாய் சிரித்தவர், “நான் உண்மையைத் தான் சொன்னேன்.. நீ கேட்ட கேள்விக்கான பதில்”
“ராமா.. ஓல்ட் வெர்ஷன் ஓப் கடி”
“சரி, நீ வாடி”
“அட பாரேன். காக்கா தூக்கிப் போச்சா மரியாதைய”
“இல்லையே.. அந்தா அங்க ஓடுது பாரு பாம்பு. அது தூக்கிட்டு ஓடுது”
“வாவ் நல்ல கருப்பு கலரா இருக்கே இது” என்றபடி அதன் பக்கம் போகப் பார்த்தவளை,
“அம்மாடி, நீ வீராதி வீரிதென். அதுக்காண்டி நாகப்பாம்பு கிட்டப் போகாத சாமி. உன் புருஷன் என்னை அதாலேயே கடிக்க வெச்சுச் சாகடிப்பான்” என்ற கருணா அவள் செயலால் விளைந்த சிறு கோபத்தில்,
“இங்க இப்படி நிறைய அழையும் ஆராதனா, பக்கத்தில போகப் பார்க்காத. தினோம் இங்க மூன்னு பேராவது பாம்புக் கடி வாங்காம இருக்க மாட்டாங்க. வெஷம் இருந்தாலும் இல்லேனாலும் பாம்பு கடி எப்பவும் ஆபத்து. விளையாட்டு வினையாகிடாம பார்த்துக்கோ ஆத்தா” என்றார் எச்சரிக்கை குரலோடு.
அவள் சன்னமாய் சிரித்தபடி, “எனக்கும் தெரியும் அண்ணா. போன தடவ வந்தபோதே ஷிவ் சொல்லியிருக்கான். சோ, கவனமா இருப்பேன்.” என்றாள்.
கருணா, “இது இனி வேண்டாமே” என்றார் அவள் முகத்தை உற்றுப் பார்த்தபடி.
ஒரு விநாடி யோசித்தவள், “அவர் சொல்லியிருக்கார், போதுமா” என்றாள் விரிந்த சிரிப்போடு.
“குட்”
வீடு வந்திருந்தது. அங்கு நம்மாழ்வாருடன் மலர்விழி நின்றிருந்தாள்.
மலர்விழி, கருணாநிதியின் தங்கை. ஐடி துறையில் சாதிக்கப் பார்த்து, அதன் கலாச்சாரம் பிடிக்காது தற்போது தன் படிப்பில் டாக்டரேட் முடித்துவிட்டு ரிசர்ச் ஸ்காலராக புனே பல்கலைக் கழகத்தில் இருக்கிறாள்.
“அங்கிள்” என்று சிரித்த முகமாய் நம்மாழ்வாரின் பக்கவாட்டில் நின்றவள், “நல்லா இருக்கீங்களா? உடம்பு நல்லா இருக்கு தானே?” தலையசைத்துக் கேட்டவளை முகங்கொள்ளாச் சிரிப்புடன் பார்த்தார் மனிதர்.
“நல்லா இருக்கேன் ஆத்தா. வீட்டுக்கு வராம இங்கன வந்திருக்கீய?”
“நாதென் மாமா இங்கவே வர சொன்னேன்” என்ற கருணா,
“மலர், உள்ள கூட்டிட்டு போ ரெண்டு பேரையும்” என்றவர் திண்ணையில் நம்மாழ்வார் உடன் அமர்ந்துவிட்டார்.
சற்று பொருத்து, “அய்யா சாப்பிட்டீங்களா?” என்றுபடி வந்தமர்ந்தான் சிவா.
“நேரத்துக்கு உங்கம்மை கொடுத்துடுவாளே சாமி” என்றவர் முகத்தில் ஒருவித கலக்கம்.
அதையே கருணாவின் முகமும் பிரதிபலிக்க, “என்ன ரெண்டு பேர் முகமும் சரியில்லாம இருக்கு? அக்கா என்னாவது சொல்லுச்சா?” பொதுவாய் அவன் கேட்க,
கருணா, “அவ என்னத்த சொல்லுவா, பக்க வாத்தியத்தோட உன் வரவ எதிர்ப்பார்த்துக் காத்திருக்கா போல..”
சன்னமாய் சிரித்தவன், “எதையும் தாங்கும் இதயம் இருக்கு மாமா எங்கிட்ட” என்றவன், “ரொம்ப பேசுச்சுனா தான் பிரச்சன. ஷக்தி இப்போதான் கொஞ்சம் வெளிய வரா, அவள ஏதாவது பேசீடுமோன்னு தான்..” என்றவன் இழுக்க, நம்மாழ்வாருக்குத் தாங்கவில்லை.
“அய்யா, சிவா.. புகழு வந்திருக்கான் சாமி” என்றிட, அவன் உடல் தன்னைப்போல் இறுக்கம் கொண்டது.
அவன் பல்லைக் கடித்து தன் உணர்வை வெளியே தெரியாது இருக்கப் பார்க்க, அவன் தாடை இறுக்கத்தைக் கண்டுகொண்ட கருணாவோ,
“ஆராதனாகிட்ட மெல்ல சொல்லியே நாளைக்கு வீட்டுக்கு கூட்டியா சிவா. அறுத்து விடுற உறவு இல்ல இது, பொருத்து இருந்து சரியா நாம இருக்க வேண்டிய நேரம். புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன்” என்றவர் நம்மாழ்வாரை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
ஷக்தி, ‘புகழ்’ என்ற பெயரைக் கேட்டது
முதல் ஆழிப்பேரலையாய் மனதில் உருவான கொந்தளிப்பை அடக்க முடியாது தவித்தவள், “ஷிவா” என்று போட்ட சத்தத்தில் துளி கூட அசையாது அமர்ந்திருந்தான், சிவனேஷ் வீரபத்திரன்.
•••
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


“வேண்டாத பேச்சை எண்ணத்தை எப்போதும் நெருங்க மாட்டாள்” 👏🏼👏🏼
தெளிவான, தைரியமான செயல்பாடுகள் கொண்ட பெண்.
கருணாநிதியின் முற்போக்கான எண்ணங்களும், உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வதும் அருமை.
முன்னமே இயல்பாய் வந்து செல்லும் இடமென்றாலும் மாறிய உணர்வுகளோடு வருகையில் திகிலளிக்கும் புதிய இடம் போல் தான் தெரியும்.
மிக சுவாரசியமாக செல்கின்றது.♥️
மிக்க நன்றி ❤️✨