Loading

புன்னகையுடன் வசீகரன் தன் புல்லட்டை எடுத்திட, அவனுக்கு குறையாத மலர்ச்சியோடு அமர்ந்த இழையின் பார்வை கண்ணாடி வழியே அவனறியாமல் பார்க்க முயல, அவனோ விழி அகலாமல் கண்ணாடியினூடே அவள் செய்கைகளை சத்தமின்றி அவதானித்திருந்தான்.

அதை எதிர்பாராதவள் சட்டென கண்களை மூடிக்கொள்ள,
“ஒன் சைட் உட்காராத. டபுள் சைட் உட்கார்.”

என்றவனின் பேச்சுக்கு மறுப்பேச்சு பேசாமல் அமர்ந்திட, அவர்கள் பயணம் இனிதே துவங்கியது.

எங்கே செல்கிறோம் என்ற அனுமானமே இல்லாமல் அமர்ந்திருந்தவள், அவன் சென்று நிறுத்திய இடத்தை கண்டு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியோடு வசீயை பார்த்தாள்.

பின்னே அவன் அழைத்து சென்றது சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருந்த புத்தகக் கண்காட்சி.

“என்ன பார்த்துட்டு இருக்க. இன்னைக்கு முதல் நாள், கூட்டம் அதிகமா இருக்கும். என் கையை விட்டுடாத.”

என்று அவள் விரல்களோடு இறுக்கமாக தன் விரல்களை கோர்த்தவன், “வா..” என்று நடக்க, “உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று ஆச்சர்யத்தோடு இழை.

“என்னது?”

“எனக்கு புக் வாசிக்க பிடிக்குங்கிறது..” என்று இன்னும் குறையாத அதிர்ச்சியோடு இழை.

“தெரியும்.” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான்.

“எப்படி?”

“எனக்கும் புக் படிக்கிற பழக்கம் உண்டு. இன்ஃபாக்ட் அதுக்கு ஸ்டார்டிங் பாயிண்ட் நீதான்.”

“எப்படி?”

“ஏன், உனக்கு தெரியாதா?”

“ம்ஹும்.” என்றவள் ‘எப்படி தான் காரணமானோம், எப்படி அவனுக்கு தன் விருப்பம் தெரிந்தது’ என்று புரியாமலே நடந்து கொண்டிருந்தாள்.

நூற்றுக்கணக்கான ஸ்டால்களில் தமிழ் புத்தகங்கள் இருக்குமிடம் நோக்கி நகர, வசீகரனோ அவளை முன்னே அழைத்து செல்ல முயன்றான்.

“என்னங்க, எங்க போறீங்க?”

“இங்கிலிஷ் புக்ஸ் ஸ்டால் அந்தப்பக்கம்.”

என்றவன், அவள் தமிழ் புத்தகங்கள் இருக்குமிடத்தில் தேங்கி நிற்பதை கண்டு,

“நீ தமிழ் புக்ஸ்கூட படிப்பியா?”

“ஹான், படிப்பேனே. இங்கிலீஷைவிட தமிழ்ல தான் நிறைய புக்ஸ் படிச்சிருக்கேன். பக்கத்துலயே லைப்ரரி இருக்கு. ஸோ ஆட்டோபயோகிராஃபி, ஹிஸ்டாரிக்கல், பொலிட்டிக்கல், சயின்ஸ் ஃபிக்ஷன், ரிலீஜியஸ், த்ரில்லர்னு பெரும்பாலும் எல்லா ஜானரும் படிப்பேன்.”

“பிடிச்ச ரைட்டர்ஸ்?”

“இங்கிலிஷ்ல ஜேன் ஆஸ்டன், சார்ல்ஸ் டிக்கின்ஸ், ஆண்டர்சன், சிட்னி ஷெல்டன், சுதா மூர்த்தி. ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சது தமிழிலக்கியம்..”

“ரியலி?”

“தமிழ் இலக்கியமே ஒரு பெருங்கடல். சிலப்பதிகாரம், மணிமேகலைன்னு சிலது படிச்சிருந்தாலும் இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கு.” என்று இழை சில புத்தகங்களோடு கிளம்பப் பார்க்க,

“எங்க போற. இரு.”

என்றவனுமே சில ஆசிரியர்களையும், புத்தகங்களையும் பரிந்துரை செய்து, மேலும் மூன்று மணிநேரம் அவளோடு கண்காட்சியில் செலவிட்டு புத்தகங்களை அடுக்கிக்கொண்டே போனான்.

“என்னங்க, எதுக்கு இவ்ளோ. இதெல்லாம் நான் எப்போ படிக்க?”

என்றபோதும் விடாமல் மருத்துவம், இலக்கியம், மேலும் இழைக்கு பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் என்று அள்ளிக் குவித்திருந்தவன், இறுதியாக மூன்று பெட்டிகளோடு அவளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தான்.

“ஏன் வீட்டுக்கு வராம…” என்றவாறே அவள் கதவைத் திறக்க பெட்டிகளை உள்ளே அடுக்கியவன், “இதுதான் நான் உனக்கு கொடுக்கணும்னு சொன்னது. பிடிச்சிருக்கா?”

“ரொம்ப பிடிச்சிருக்கு…” என்ற மலர்ச்சியோடு சொன்ன இழையை, காற்று புகாதவாறு இழுத்தணைத்து நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன்,

“இது உனக்காக. பிடிச்சிருக்கா?” என்று கேட்க, கருவிழிகள் அசைந்தாட மௌனித்திருந்த இழையின் வதனம் செங்கொழுந்தாகிப் போனது.

அதை ரசித்தவாறே அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன், “இது எனக்காக. பிடிச்சிருக்கா?” என்று கேட்க, மறுபுறம் நாணச்சிவப்பு மேலும் கூடியிருந்தது.

அதை ரசித்திருந்தவனின் அதரங்கள் இறுதியாக அவள் இதழ்களில் சங்கமித்து, சில நிமிடங்களில் மீண்டு,
“இது நமக்காக. பிடிச்சிருக்கா?”

என்று கேட்டவனின் மார்பில் முகம் புதைத்தவளிடம், “டேக் கேர். ஸீ யூ ஆன் மேரேஜ்…” என்று சொல்லிவிட்டு சென்றான்.

நிச்சயத்திற்கு பிறகு வேலையில் அமிழ்ந்துவிட்ட வசீகரன், அதிகமாக இழையோடு பேசாது போனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசியிருந்தான். ஆனால் அதுவுமே அவசரமாக ஒன்றிரண்டு நிமிடங்களுக்குள் முடிந்துபோகும். ஆனால் நாயகியும் அபியும் தினமும் மருமகளிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

திருவேங்கடமும் கைலாசமும் இருவருக்குமே ஒற்றை வாரிசு என்பதால், திருமணத்தை இருவருமே சேர்ந்து நடத்துவதாக முடிவெடுத்திருந்தனர்.

இங்கு வேலை ஒருபுறம், திருமணத்திற்கான ஷாப்பிங் மறுபுறம், உறவுகளின் வரவு என்று இழைக்கு நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறந்திட, இரவில் வசீயின் சட்டையும் அவன் பரிசளித்த புத்தகங்களும் பெரும் துணையாகி அவன் உடனில்லாத குறையை போக்கியிருந்தது.

ஆம், அன்று இந்திரவர்மனை போலீஸ் அழைத்து செல்லும்போது வெளியில் வந்த இழையின் முன், வசீகரன் தன் வலதுகையை நீட்ட, அவளோ புரியாமல் பார்த்தாள்.

“ஷேர்ட் கொடு.”

“ஷேர்ட்டா?” என்று திகைப்போடு பார்த்த இழையிடம், ஆம் என்று தலையசைத்தான்.

“அது… அதுவந்து…” என்று இழை தயக்கத்தோடு நிறுத்த,

“என்ன?”

“இல்ல, ஷேர்ட்ல முகத்தை துடைச்சுட்டேன். அழுக்காகிடுச்சு. நீங்க வேற வாங்கிக்கோங்க.”

என்றவள் கையில் இருந்த கவரை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

“பரவல்ல, கொடு. ஹாஸ்பிட்டலுக்கு இப்படியே போனா நல்லா இருக்காது.”

என்று உள்பனியனோடு நின்றிருந்தவன் சொல்ல,

“அது ரொம்ப அழுக்காகிடுச்சு. நான் வேணும்னா உங்களுக்கு வேற வாங்கி கொடுக்குறேனே.” என்றவள், வசீ இமைக்காமல் தன்னையே பார்க்க,

“ஜித்து, எனக்கு நிற்க முடியலை. ரொம்ப வலிக்குதுடா.”

என்று உடைந்த குரலில் நண்பனை துணைக்கு அழைக்க, அவள் கையைப் பிடித்துக்கொண்டவன்,

“ண்ணா, பிங்கிக்கு வலி தாங்க மாட்டா. வழியில வாங்கிக்கலாம். வாங்க.” என்று வசீயை சமாதானப்படுத்த, ஆசுவாசமாக காரில் அமர்ந்தாள் இழையாள்.

அன்று முதல் வசீகரனின் சட்டை, இழையாளின் இரவு உடையாகிப் போனது.

வசீகரனின் ஊரில் திருமணம் என்று ஏற்பாடாகியிருந்த நிலையில், ஜித்துவும் பிரணவும் பம்பரமாக சுழல, வேலைகள் அத்தனை தூரிதமாக நடைபெற்றன.

திருவும் நாயகியும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றபோதும், நகை, சீர்வரிசை, திருமண செலவுகள் என்று எதிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை கைலாசம்–பார்கவி தம்பதியினர்.

ஒருவழியாக திருமணத்திற்குள் ஜீவியை இழை சரிகட்டியிருக்க, வசீகரன் குறித்து பேசி தனக்கு எந்த அதிர்ச்சியும் அளிக்கக்கூடாது என்ற கட்டளையோடே திருமணத்திற்கு வந்திருந்தாள்.

கனவு கைகூடிய மகிழ்ச்சியில், சொல்லில் வடிக்கவியலாத ஆனந்தத்தோடு இருவரும் திருமண வரவேற்பில் நின்றிருந்தனர். இருவருக்குமே மற்றவரின் அருகாமை இனிய அவஸ்தையை கொடுக்க, கூட்டம் அலைமோதியதில் பார்வை பரிமாற்றமும் மௌன பரிபாஷையுமாக நொடிகள் கடந்திருந்தன.

பிள்ளைகளின் ஜோடி பொருத்தமும் அவர்களின் அன்னியோனியமும் கண்டு, நாயகி மற்றும் பார்கவியின் விழிகளில் நீர் கோர்த்துக்கொண்டது.

வரவேற்பில் ஓரளவு கூட்டம் குறைந்திருக்க, மணமக்களுக்கு ஃபோட்டோஷூட் எடுக்க வேண்டும் என்றதில், வசீகரன் போட்டோகிராஃப்பரிடம் புகைப்படம் குறித்து கலந்தாலோசித்திருக்க, இழையிடம் வந்தான் சர்வஜித்.

“என்ன ஜித்து?”

“அண்ணி, அம்மா உங்களுக்கு இன்னொரு ட்ரெஸ் கொடுத்திருந்தாங்களாமே. அதை போட்டோஷூட்க்கு யூஸ் பண்ண சொன்னாங்க.”

“ஜித்து, எத்தனைமுறை சொல்றது. என்னை இப்படி கூப்பிடாதடா. என்னமோ உன்னைவிட வயசான மாதிரி ஃபீலாகுது. ப்ளீஸ், பிங்கின்னே கூப்பிடு.”

என்றிட, அவனோ முடியாது என்பதாக தலையசைத்தான்.

பெண்பார்த்து உறுதி செய்த அன்றிலிருந்தே அவளை “அண்ணி” என்றுதான் அழைக்கிறான். இழையும் எத்தனையோ முறை சொல்லிவிட்டாள். ஆனால் அவன்தான் மாற்றிக்கொள்வதாக இல்லை.

“இருக்கட்டும் அண்ணி. எங்கண்ணனோட லைஃப் பார்ட்னரா, எங்க வீட்டுக்கு மூத்த மருமகளா யார் வந்திருந்தாலும் அப்படித்தான் கூப்பிட்டிருப்பேன். அது அந்த ஸ்தானத்துக்கு உண்டான மரியாதை.”

“ப்ச், ஜித்து. ஆனா நாம சின்ன வயசுல இருந்து ஃபிரெண்ட்ஸ்.”

“ஃபிரெண்ட்ங்கிறதால எந்த காம்ப்ரமைசஸும் என்னால செய்ய முடியாது. ஸோ பெட்டர் நீங்க பழகிக்கோங்க, அண்ணி.”

“சரி, கொழுந்தனாரே.”

என்றவள், நாயகி சொன்னது போலவே ஜீவியின் உதவியுடன் வேறு உடை மாற்றி புகைப்படம் எடுத்த பின் உணவருந்த சென்றாள்.

அதன்பின் மணமக்கள் இருவருக்கும் நலங்கிட்டு முடிக்க, உடையை மாற்றிக்கொண்டு வந்து ஜீவி மற்றும் ஆஷ்மியின் அருகே படுத்தாள்.

அதிகாலை விரைவாக எழுந்து தயாராகியவளை மண்டபத்தினுள் இருந்த கோவிலுக்கு அழைத்துச் செல்ல, அங்கு இரு வீட்டுச் சொந்தங்களும் குழுமியிருக்க, பட்டுவேட்டி சட்டையில் வசீகரனும் நின்றிருந்தான்.

இழை சென்று வசீகரனின் அருகே நிற்க, இருவரின் பார்வையும் மோதிக்கொள்ள, அங்கே சடங்குகளைத் தொடங்கினர்.

கரம் கூப்பி நின்றிருந்த இழையின் அருகே, மற்றவர்களின் கவனம் ஈர்க்காதவண்ணம்,

“நான் என்ன படிச்சிருக்கேன்னு தெரியுமா?” என்றவன் கேள்வியை எதிர்பாராதவள் சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

“தெரியுமா?”

கருவிழிகள் அலைபாய, “தெரியாது…” என்றாள்.

என்றாள் காற்றாகிப் போன குரலில்.

“என்ன வேலை செய்யறேன்னு தெரியுமா?”

என்று கேட்க, அதையும் எதிர்பாராதவள், அன்று அவன் பேசிய பின்னர்கூட எதையும் கேட்டு அறிந்திராத தன் மடமையை நொந்தவண்ணம்,

“இல்ல, தெரியாது.”

“எவ்ளோ சம்பாதிக்கிறேன்னு தெரியுமா?”

“இல்ல”

“டென்டிஸ்ட்கு அட்லீஸ்ட் என்னோட கேரக்டர் எப்படின்னு தெரியுமா?”

“தெரியும்..” என்று சொல்ல வந்தவளின் தலை அன்னிச்சையாக “இல்ல” என்றசைந்தது..

“அப்புறம் எப்படி கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட?” என்றதுமே அதிர்வோடு வசீயை பார்த்தவள்…,

“அது அம்..மா..ப்பா பார்..த்த மா..ப்பிள..” என்று இழை வார்த்தைகளை மென்று விழுங்க..

“ஆஹான்!!…” என்றவனின் பார்வையே உன்னை நம்புவதற்கில்லை என்ற செய்தியை கடத்த அதற்கு மேல் தொடர முடியாதவள் சட்டென தலை குனிந்து கொண்டாள்.

“ரிலாக்ஸ்!! எந்த நம்பிக்கையில் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டயோ அந்த நம்பிக்கையை நான் காலம் முழுதும் காப்பாத்துவேன்..” என்று அவள் வலக்கரத்தை தன் கையில் ஏந்தி,
“ஐ ப்ராமிஸ் யூ மை பெட்டர் ஹாஃப்!!” என்று உறுதியளித்தவன் அவளுக்கு குங்குமமிட பேச்சின்றி விழியகலாது பார்த்து நின்றாள்.

அதன்பின் திருமணசடங்குகள் தொடங்கிட குறித்த நேரத்தில் மங்கலநாண் அணிவித்து இழையாளை தன் சரிபாதியாக ஏற்றிருந்தான் வசீகரன்.

பெற்றோரின் ஆசிபெற்று சென்னை கிளம்ப தயாராகிய தம்பதிகளை உடனே அனுப்ப நாயகி சம்மதிக்கவில்லை. நேற்று முழுக்க ஓய்வில்லாது போனது இன்றும் அதிகாலையே எழுந்தது திருமண களைப்பில் இருப்பவர்களை மீண்டுமான உடனடி நெடுந்தூர பயணம் சோர்வடைய செய்யும் என்பதால் மணமக்களோடு பார்கவி கைலாசத்தையும் அங்கேயே ஓய்வெடுக்க வைத்தார்.

சொந்தங்களோடு ஆஷ்மியும் சாரதியும் சென்னை கிளம்ப ஜீவிகாவும் கிளம்ப பார்த்தாள். ஆனால் அவளை தடுத்து தன்னோடு வைத்துகொண்ட இழை சென்னை சென்று சேர்ந்த பின்பும் விடவில்லை.

இழையின் வீட்டிற்கு வந்து சேர்ந்த போதே இருள் கவிழ தொடங்கியிருந்தது.

இழையின் வீட்டுக்கு வந்ததுமே மணமக்களுக்கு பால் பழம் கொடுத்து சம்பிரதாயங்களை முடிக்கவும் “சரி மச்சி நான் கிளம்பறேன்” என்றாள் ஜீவிகா.

“ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் நேரம் இருடி..” என்றவள் வசீகரன் சாரதியோடு பேசிக்கொண்டிருக்க சமையலறையில் இருந்த பார்கவியிடம் “ம்மா நான் மாடியில ஜீவிகூட பேசிட்டு இருக்கேன்.. எதாவதுன்னு கால் பண்ணுங்க..” என்றாள்.

“இப்போ என்ன பேச்சு உனக்கு.. ஜீவி இன்னும் கிளம்பலையா? மணி என்னாகுது இன்னும் வயசு பெண்ணை அனுப்பாம வச்சிருக்க..”

“ம்மா ஒரு அரைமணி நேரம்… தனியா போகலை அங்கிள் வரார் கூட்டிட்டு போக..” எனவும் தான் சற்று தணிந்தவர்,

“சரி சரி தம்புக்கு என்ன வேணும்னு கேளு ரெஸ்ட் எடுக்கணும்னா உன் ரூம்க்கு கூட்டிட்டு போ.. வேற எதுவும் வேணும்னா கொடுத்தப்புறம் சொல்லிட்டு கிளம்பு.. புரிஞ்சதா?”

“சரிம்மா..” என்றவள் வசீயிடம், “ஏதாவது வேணுமா? ரெஸ்ட் எடுக்குறீங்களா?” என்று கேட்க., “இல்ல எதுவும் வேண்டாம் தேவைபட்டா கூப்பிடுறேன்..” என்றதும் ஜீவியுடன் மாடியில் இருந்த அறைக்கு சென்றிருந்தாள்.

கீழே இழையின் அறையில் முதலிரவிற்கான பூக்களை கொண்டு வைத்த ஆஷ்மி இரவு உணவை முடித்து அலங்காரம் செய்யபோவதாக இழைக்கு தகவலளித்து இருந்தாள்.

அதை படித்தவள் “ஜீவி..” என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே செல்ல அங்கிருந்த மெத்தையில் படுத்திருந்த ஜீவிகாவோ அதை காதிலேயே வாங்காமல் தன்போக்கில் கைபேசியில் விளையாடி கொண்டிருந்தாள்.

“உன்கிட்ட தான் சொல்றேன் ஜீவி கேட்குதா?”

“எல்லாம் கேட்குது சொல்லு..” என்றவள் இங்குவரும் முன்னமே இருகாதிலும் பஞ்சை அடைத்து கொண்டு வந்திருந்ததால் இழை பேசிய எதுவும் பெரிதாக அவள் காதில் விழவில்லை..

இறுதியாக ஜீவியை உலுக்கி “புரியுதாடி” என்று கேட்கவும் ஆம் என்று தலையசைத்தாள்.

“அப்போ ஏதாவது ஒரு ஐடியா கொடுடி..”

“எதுக்கு?”

“ஃபர்ஸ்ட் நைட் கேன்சல் பண்றதுக்கு..” என்றதுமே ஜீவிகா வாரிசுருட்டி கொண்டு எழுந்தமர்ந்தாள்.

“என்ன சொன்ன திரும்ப சொல்லு?” என்று பஞ்சை எடுத்து காதை குடைந்து கொண்டு கேட்க..,

“அதான்டி..” என்று ஆரம்பித்து காலை வசீ பேசியதை சொன்னவள் அவர் திரும்ப ஏதாவது கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லன்னு தெரியலை பயமாயிருக்கு..”

“ஏன் இதெல்லாம் கல்யாணம் செய்யும் முன்ன யோசிக்கலையா?”

“இல்லடி அவசரத்துல தோணலை..”

“என்ன அவசரம்?”

“அவரை கல்யாணம் செய்துக்குற அவசரம்..”என்றதும், “உன் அவசரத்துல தீயை வைக்க!!” என்று முறைத்தாள்.

“ஜீவி எனக்கு இப்பவே லைட்டா ஃபீவர் வரமாதிரி இருக்கு…”

“என்னடி சொல்ற நிஜமாவா?” என்று கேட்கையிலேயே இழைக்கு வசீகரனிடமிருந்து மெசேஜ் வந்தது.

எடுத்து பார்க்க, உனக்கு ஒன்னு கொடுக்கணும் கீழ வா..” என்று அவளறைக்கு தனியாக வர சொல்லியிருந்தான்..

“கொடுக்கனுமா? இப்போதா?” என்றவளின் முகம் கலவரமாக இனம்புரியா உணர்வுகள் படையெடுக்க தொடங்கியது..

“ப்ச் கண்டதை யோசிக்காத இழை புக்ஸ் போல ஏதோ கிஃப்ட் கொடுக்க கூப்பிடுறார்” என்று தனக்குதானே சொல்லிக்கொண்டாலும் கீழே அத்தனை பேர் இருக்க இப்போது சந்திக்க சென்று யாரேனும் பார்த்தால் என்னாவது என்ற எண்ணமே மேலோங்கியது.

“என்னடி என்னாச்சு?”

“ஒன்னுமில்ல அம்மா கீழ வர சொல்றாங்க..”

“சரி வா போகலாம்..”

“இல்லல்ல என்னை மட்டும் வர சொன்னாங்க ஒரு பைஃவ் மினிட்ஸ் இரு வந்துடுறேன்..” என்றவள் படியிறங்கி கீழே வர ஹாலில் கைலாசமும் அவர் தம்பிகளும் அமர்ந்திருந்தனர்..,

அவள் சித்திகளோ திருமணவீட்டை ஒதுக்கி வைக்கும் முனைப்பில் இருக்க கீழே வந்தவள் அறைக்குள் செல்ல முயன்றாள்..

“பிங்கி மாப்பிள்ளை எங்கடா?” என்றார் கைலாசம்..,

“அது… அதுவந்துப்பா.. தெரி..” என்றவள் தன் அறையை பார்த்தவண்ணம் அங்கேயே நின்றுவிட்டாள்.

“சொல்லுங்க மாமா..” என்று வெளியில் வந்த வசீகரன் அவரெதிரே அமர்ந்தான்.

“மாப்பிள்ளை இது மறுவீட்டு விருந்துக்கான லிஸ்ட் உங்களுக்கு ஏதாவது மாத்தணும் இல்ல சேர்க்கணும்னா சொல்லுங்க இதுவே உங்க அத்தைகிட்ட கேட்டு உங்களுக்கு பிடிச்சதுன்னு சொன்னதைதான் எழுதி இருக்கேன்..” என்றதும் பட்டியலை பார்த்தவன்,

“எனக்கு ஓகே எந்த கரெக்ஷனும் இல்ல மாமா இதுவே ஃபைனல் பண்ணிடுங்க..” என்றான்.

“சரிங்க மாப்பிள்ளை..” என்றதும் தன்பின்னே கைகளை பிசைந்துகொண்டு நின்றிருந்த இழையிடம் “டின்னர் ரெடியா?” என்றான்.

“ஹான்.. ரெடி ஆகிட்டு இருக்கு”

“சரி வா..” என்றவன் எழுந்து அறைக்கு செல்ல அவனை பின்தொடர்ந்தாள் இழை.

அவள் அறைக்குள் நுழையும் முன்னமே “பிங்கி உன்னை அக்கா கூப்பிடுறாங்க..” என்று அங்கே வந்தார் ஆஷ்மியின் அன்னை.

“அம்மாவா இதோ வரேன் சித்தி..” என்றவள் அறைக்குள் நுழைய முயல.,

“ப்ச் பிங்கி இப்போ உள்ள போகவேண்டாம் அக்கா உடனே வர சொன்னாங்க வா..”

என்றதும் கைபேசியில் கணவனுக்கு தகவலளித்தவள் சமையலறைக்கு சென்றாள்.

“ஆஷ்மிகிட்ட புடவை கொடுத்திருக்கேன் பாரு குளிச்சுட்டு அதை மாத்திக்கோ தம்புவை கூட்டிட்டு சாப்பிட வாடா.. ஜீவியையும் வர சொல்லு” என்றிட அங்கே வந்த ஜீவிகா “இல்ல ஆன்ட்டி அப்பா வந்துட்டாங்க நான் கிளம்பறேன்..” என்றிட ஜீவி.. என்று இழை தவிப்புடன் பார்க்கவும்..

“டைம் ஆச்சு மச்சி எங்கப்பா இவ்ளோ நேரம் இங்க விட்டதே பெருசு இனி பார்த்துக்கோ நாளைக்கு பேசுறேன் பை..” என்று கிளம்பியிருந்தாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்