
“நீ என்ன சொன்னாலும் உங்க தாத்தா சொன்னதுக்காக ஆன்ட்டி அவசரபட்டிருக்க கூடாது மச்சி.. எப்படி எதையும் விசாரிக்காம முடிவெடுத்தாங்க?”
“ப்ச் நான்தான் சொன்னேனே ஜீவி எங்க அம்மா எப்பவும் ரொம்பவே கவனமா இருப்பாங்க.. இவன் புதுசா பார்த்த வரனும் இல்ல எங்கம்மா டக்குன்னு இவனை கட்டிக்கவும் சொல்லல…”
“என்னடி குழப்புற?”
“இதோபார் நான் ஏலகிரிக்கு போகும் முன்னமே இவனோட சேர்த்து இன்னும் சில போட்டோஸ் காட்டி அவங்களோட ஜாதகம் ஒத்துபோகுதுன்னு சொன்னாங்க நானும் வழக்கம்போல விசாரிச்சுட்டு சொல்லுங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்..”
“ஆனா நான் நல்லபடியா வீடு திரும்பனும்னு இருந்த டென்ஷன்ல எங்கம்மா யாரையும் விசாரிக்கலை அப்புறம் பார்த்துக்கலாம்னு அப்படியே வச்சிருந்தாங்க… நான் வந்தபிறகு அப்பா மாப்பிள்ளைகளோட அக்கம் பக்கம் விசாரிக்கவும் எல்லாருமே நல்லவிதமா சொல்லியிருக்காங்க.. அதுக்கப்புறம் அப்பாக்கு டைம் கிடைக்காததால சோஷியல் மீடியா அப்புறம் டிடெக்ட்டிவ்கிட்ட போக முடியலை..”
“அவர் போகலை சரி நீ என்ன பண்ணிட்டு இருந்த?”
“அது… அதுவந்து ஜீவி..” என்ற இழையின் முகத்தின் வெட்கப்பூக்கள் சிந்தி சிதறுவதை கண்டவள்,
“உன்னை போய் கேட்டேன் பாரு என்னை சொல்லணும், சரி நீ கண்டினியூ பண்ணு..”
“ஆக்ச்சுவலா அந்த ப்ரோசெஸ்க்கு அப்புறம்தான் மாப்பிள்ளை வீட்டாரை வரவைப்பாங்க அதைவிட எனக்கு பிடிச்சாதான் கல்யாணங்கிறதுல எங்கம்மா உறுதியா இருந்தாங்க.. ஆனா நடுவுல என் சின்னதாத்தா வந்து பேசவும் அதுல ரொம்ப ஹர்ட் ஆகிட்டாங்க…”
“ரொம்பவே எமோஷனலா இருந்தவங்ககிட்ட என்னால திடமா மறுக்கமுடியலை.. அந்த நாலு போட்டோஸ் கொண்டு வந்து ஒவ்வொன்னா காட்டவும் நான் வேண்டாம்னு சொல்லிட்டே வந்தேன் அதுல டென்ஷனாகிட்ட எங்கம்மா உன் தாத்தா சொன்னதை உண்மையாக்க போறியான்னு சொல்லி தேம்பி அழுதவங்க இவன் போட்டோவை காட்டி நல்ல வரன், நல்ல குடும்பம் அந்த பையனும் இனி திரும்ப வெளிநாட்டுக்கு போகபோறதில்லை இங்க சென்னையிலேயே இருக்கபோறாங்க.. இவனைதான் நீ கல்யாணம் செய்யணும்னு கிட்டத்தட்ட ஆர்டர் போட்டாங்க..”
“என்னடி பேசுற அவங்கதான் எமோஷனலா இருந்தாங்கன்னா நீ புரிய வச்சிருக்கணும்… அதைவிட்டுட்டு உங்கம்மாக்காக ஒத்துக்கிட்டேன் ஆட்டுக்குட்டிக்காக ஒத்துக்கிட்டேன்னு முட்டியில கட்டுபோடுமளவுக்கு வந்திருக்க.. இதெல்லாம் நல்லாவா இருக்கு?” என்று கேட்க இழையிடம் கனத்த அமைதி..
“என்னடி அமைதியாகிட்ட?”
“நான் ஒத்துக்க காரணம் எங்கம்மா இல்லைடி..”
“வேற யாரு.. உங்கப்பாவா?”
“இல்ல…”
“அப்போ வேற யார்?”
“ஆ.. அவர்தான்…”
இழையின் சம்மதம் வசீகரனின் பொருட்டு என்றதில் பேரதிர்ச்சி கொண்டிருந்தவளுக்கு அதை உறுதிபடுத்த வேண்டி இருக்கவும் “எவர்?” என்றாள்.
“ப்ச் நான் யாரை சொல்றேன்னு உனக்கு தெரியாதா?”
“எனக்கு தெரியும் ஆனா உன்னோட அவருக்கு ஒரு பேர் இருக்கே அதை சொன்னா ஈசியா புரியும்..” என்றதும் குரலை செருமிய இழை,
“இல்ல ஜீவி இப்போ இருக்க பொண்ணுங்க மாதிரி புருஷன பேர் சொல்லி கூப்பிடக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லி இருக்காங்கடி அதனால என்னால சொல்ல முடியாது ப்ளீஸ் புரிஞ்சுக்கோ..” என்றதும்…
“அடங்கப்பா!!!!!” என்று வாயில் கைவைத்துவிட்ட ஜீவிக்கு அடுத்து என்ன பேசுவது என்று புரியாத நிலை..
“ஜீவி என்னாச்சு திரும்ப தலைசுத்துதா.. உனக்காகவே மாத்திரை எடுத்துட்டு வந்து வச்சிருக்கேன்” என்று இழை மாத்திரையை நீட்ட கொலைவெறியோடு பார்த்தாள் ஜீவிகா..
“ஏன்டி முறைக்கிற.. உனக்குதான் இப்போ அடிக்கடி தலைவலி வருதே அதான் எடுத்துவச்சேன்..”
“சரி சொல்லு நீ இந்த பொறுக்கியை ஒத்துக்க அவர் எப்படி காரணம்…” என்ற ஜீவிக்கு சத்தியமாக கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலைதான்.
ஆனால் அசாத்திய மௌனம் கொண்டு ஜீவிகாவை மேலும் சோதித்திருந்தாள் இழை.
“சொல்லு மச்சி..”
“அது.. ஜீவி அதுவந்து.. உன்கிட்ட இன்னொரு உண்மையை மறைச்சுட்டேன்..” என்றாள் மெல்லிய குரலில்.
“இன்னுமா?” என்று அதிர்ச்சியோடு கேட்டவள், “அப்படி என்னடி மறைச்ச?”
“அது… அதுவந்து..”
“ஹ்ம்ம்..”
“அது ஜீவி… இதை சொன்னா நீ கோபப்படமாட்டியே?”
“கோபமா? ச்சை ச்சை பாவம் நீயே தப்பானவனுக்கு சரி சொல்லி அவன்கிட்ட மாட்டி பிழைச்சிருக்க உன்னை ஏன் கோபபட போறேன் நீ சும்மா சொல்லு” என்றாலும் இப்போது என்ன குண்டை வீசுவாலோ என்று உள்ளுக்குள் உதறல் இருக்கத்தான் செய்தது.
“அது வந்து ஜீவி ஏலகிரிக்கு போகும் முன்னாடியே நான் அவரை பார்த்துட்டேன்..”
“அதான் சொன்னியே கீழேயே பார்த்தேன்னு…”
“அதில்லடி அதுக்கும் முன்ன…” என்று இறுதி வார்த்தையில் அவள் அழுத்தம் கொடுக்க…
“அதுக்கும் முன்னாடியா எங்க?”
“அதுவந்து.. நம்ம ஆஷ்மி இருக்கால்ல..”
“ஆமா அவளுக்கென்னா?”
“அவளுக்கு ஒண்ணுமில்ல அவரோட வீட்டுக்காரர் இருக்கார்ல”
“சரி…” என்று ஜீவியும் கதை கேட்க தயாராகினாள்.
“அது வந்து… அது..” என்று குரலை செருமிய இழை..
“அதுவந்து ஜீவி அவளோட வீட்டுக்காரரை நான்தான் செலெக்ட் பண்ணேன்..”
“இதுல என்னடி இருக்கு… தங்கச்சிக்கு அக்கா மாப்பிள்ளை செலெக்ட் பண்றது ஒன்னும் புதுசில்லையே நாளைக்கு என் தங்கச்சி கேட்டாலும் நானும் செய்யத்தான் போறேன்..”
“அதில்ல ஜீவி நான் அவ வீட்டுக்காரரை சூஸ் பண்ண காரணம்..” என்று இழை நிறுத்த,
“என்ன காரணம் ரொம்ப நல்லவரா? இல்ல குடும்பம் வசதியா? நல்ல சம்பாத்தியமா இல்ல?” என்று ஜீவிகா காரணங்களை அடுக்கிக்கொண்டே போக,
“இல்லடி இவரோட ஃபிரெண்ட்ங்கிறதால தான் செலெக்ட் பண்ணேன்..” என்றதுமே ஜீவிகாவின் இருதயம் எகிறிகுதிக்க, “யா யாரோட ஃபிரெண்ட்?” என்று நெஞ்சை பிடித்துகொண்டாள்.
“ப்ச் அவரோட பிரெண்ட்ன்னு சொல்றேன் புரியலையா?” என்று கேட்க ஜீவிகாவிற்கு பேச்சு எழவில்லை..
“ஆமா ஜீவி ஆஷ்மியை பெண் பார்க்க வந்தப்போ அவ வழக்கம்போல எனக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்பினா.. அதுல அன்னைக்கு விஜய் மாமாவோட இவர் இருந்தார்..” என்று தன் கைபேசியில் வசீகரனின் மற்றொரு புகைப்படத்தை எடுத்துக்காட்டிட கேட்டு கொண்டிருந்த ஜீவிக்கு குரலே எழும்பவில்லை..
“அதான் கட்டினா நீ அவரைதான் கட்டணும்னு சொல்லிட்டேன்”
“ஓஹோ.. அவரை பத்தி எதுவும் விசாரிக்கலை”
“சித்தப்பா விசாரிச்சிருப்பாங்கடி ஆனா இவரோட ஃபிரெண்ட்டா இருக்கிற தகுதி போதாதா ஜீவி?” என்று கேட்க ஜீவிக்கு தான் ஏன் கேள்வி கேட்டோம் என்றாகிபோனது.
“ஸோ அம்மா இந்த பொறுக்கியை காட்டினபோது முதல்ல மறுத்தாலும் என்னோட நிச்சயத்தை ஆஷ்மி கல்யாணத்துக்கு அப்புறம்தான் வைக்கணும்னு தெளிவா சொல்லிட்டேன்..”
“ஏன்?”
“அப்போதானே அம்மா அத்தை எல்லாம் மீட் பண்ணமுடியும்..”
“அதுசரி… ஆனா நேத்து வந்து கல்யாணத்தை நிறுத்த சொல்லி கேட்டவ முன்னாடியே செய்திருக்கலாமே..”
“கொஞ்சமாவது அறிவோடு பேசு ஜீவி..”
“உன்னளவு எனக்கில்ல மச்சி!! ஆனா முன்னாடியே செய்திருந்தா அந்த பொறுக்கிக்கு வாய்ப்பில்லாம போயிருக்குமேன்னு கேட்டேன்..”
“நானே அவனை எதிர்பார்க்கலைடி .. ஆனா ஆஷ்மி கல்யாணத்துக்கு முன்னாடியே நிறுத்த ட்ரை பண்ணியிருந்தா அம்மா வேற மாப்பிள்ளையை பார்க்க கிளம்பி இருக்க மாட்டாங்களா? putting yourself in the right place at the right timeன்னு நீ கேள்விபட்டதில்லையா?” என்றாள் கோபமாக.
“ஓஓஒ நீங்க அப்படி வரீங்க !!!”
“ஆமா அதான் ஆஷ்மி கல்யாணம்வரை பொறுத்திருந்தேன்.. அம்மா அவரை பார்த்தபிறகு கல்யாணத்தை நிறுத்தினா தானே சரியா இருக்கும் ஆனா அதுக்குள்ள அவனே வந்து சிக்கி எனக்கு வேலையே இல்லாம பண்ணிட்டான்.. அதை விடுடி இப்போ நான் எவ்ளோ எக்ஸைட்டா இருக்கேன் தெரியுமா..” என்று முகம் கொள்ளா புன்னகையுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே,
“பிங்கி அத்தை வீட்ல எல்லாரும் வந்துட்டாங்க பூக்கூட வைக்காம இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க?”
“சும்மா பேசிட்டு இருந்தேன்மா..”
“ஜீவி இந்த பூவை வச்சு இவளை கூட்டிட்டு வாடா..”
“ஆன்டி எனக்கு கொஞ்சம் உடம்பு முடியலை நீங்களே கூட்டிட்டு போங்க..”
“என்னடா பேசுற பிங்கியோட மாமியார் வீட்டு ஆளுங்களை நீ பார்க்க வேண்டாமா?”
“ஆமா ஆன்ட்டி ஆனா எனக்கு இப்போ சுத்தமா பேசமுடியலை.. தலைவலிக்குது நான் கொஞ்சநேரம் படுத்திருக்கேனே ப்ளீஸ்.. அவங்களை இன்னொரு நாள் பார்க்கிறேன்” என்றாள் சோர்ந்து போன குரலில்.
“வரும்போது நல்லாதானேடா இருந்த இப்போ திடீர்ன்னு என்னாச்சு?” என்று கேட்க ஜீவிகா மெளனமாக இழையை பார்த்திருந்தாள்.
“விடுங்கம்மா அவளுக்கு இப்போல்லாம் இப்படிதான் அடிக்கடி தலைவலி வருது நீங்க வாங்க நாம போகலாம்..” என்றவள் அன்னையோடு வெளியில் வர வசீகரனின் குடும்பம் ஹாலில் குழுமியிருந்தது.
காலையே பார்கவியும் கைலாசமும் ஜாதக பொருத்தம் பார்த்து திருவிடம் கூறி அனைத்தும் முன்னரே தீர்மானித்திருந்தாலும் சம்பிரதாயமாக இழையை அவர்கள் முன் நிறுத்தினார் பார்கவி.
“என்ன ஃபார்மாலிட்டி இது கவி..” என்ற நாயகி இழையை தன்னருகே அமர்த்தினார்.
“அத்தை காஃபி சாப்ட்டீங்களா இல்லையா?” என்றவள் மேஜையில் எதுவும் இல்லாததை கண்டு, “ஒருநிமிஷம் வந்துடுறேன் அத்தை..” என்றவள் காஃபி கோப்பைகளோடு திரும்பினாள்.
ஒவ்வொருவருக்காக கொடுத்துக்கொண்டு வந்தவளுக்கு சற்றுதள்ளி தனியாக அமர்ந்திருந்த வசீகரனை நெருங்குகையில் சிறு படபடப்பு உண்டாக தன்னை சமாளித்து அவனிடம் கோப்பையை நீட்ட, “நோ தேங்க்ஸ்..” என்றான்.
புரியாமல் பார்த்த இழைக்கு அவனை கேள்விகேட்கும் தைரியம் இல்லாததில் அமைதியாக திரும்பி நாயகியின் அருகே சென்று அமர்ந்தவளுக்கு நிலைகொள்ளவில்லை.
பின்னே தைரியமாக அவனை திருமணம் செய்ய துணிந்து விட்டவளுக்கு அவன் எங்கு தன்னுடைய அன்றைய பேச்சு குறித்து கேட்டுவிடுவானோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்தது.. அப்படி கேட்டால் என்ன சொல்வது என்றும் புரியாத நிலையில் பேதை.
யோசனையுடன் இருந்தவள், “ஒருநிமிஷம் வந்துடுறேன் அத்தை” என்று மீண்டும் சமையலறைக்கு சென்றவள் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க, “தேங்க்ஸ்” என்று வாங்கிகொண்டான்.
இதை பார்த்திருந்த பெரியவர்கள் முகத்தில் அத்தனை நிறைவு !!
நேற்றைக்கும் இன்றைக்கும் இழையிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு திருப்தியுற்ற நாயகி, “உனக்கு சம்மதமா பிங்கி?” என்றார்.
“அம்மாக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்தான் அத்தை..”
“ப்ச் உனக்கு தம்புவை பிடிச்சிருக்கா சொல்லு பிங்கி” என்றார் அபி.
“அம்மா அப்பாக்கு பிடிச்சிருக்கே அத்தை.. நான் வேற தனியா சொல்லனுமா?” என்று வேறுவிதமாக பதிலளிக்க அபி மீண்டும்,
“அதில்லடா உனக்கு பிடிச்சிருக்கா?”
“போதும்விடு அபி.. பிங்கி முகத்தை பார்த்தாலே தெரியலையா தனியா வேற சொல்லனுமா?” என்றவர், “சின்னவயசுல பார்த்த மாதிரியே இருக்கடா எப்பவும் எல்லாமே அம்மாதான் உனக்கு! இன்னுமே மாறலை..” என்று பசுபதி சிரிக்க,
“அப்படியில்ல மாமா லக்ஷ்மணன் போட்ட கோட்டை மீறினதாலதான் சீதை ராமரை பிரியவேண்டியதா போச்சுன்னு அடிக்கடி எங்கம்மா சொல்லுவாங்க… எனக்கு எது நல்லதுன்னு அப்பம்மாக்கு தெரியும் அதனால எப்பவும் நான் அவங்க வார்த்தையை மீறினதில்ல.. நாளைக்கு கல்யாணத்துக்கு பிறகு உங்க வார்த்தையும் மீற மாட்டேன்..” என்று தன் சம்மதத்தை தெரிவிக்க கேட்டு கொண்டிருந்தவர்களின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“அப்போ அண்ணி அண்ணாவை பிரியக்கூடாதுன்னு தான் இனி அம்மாப்பா வார்த்தையை மீற மாட்டேன்னு சொல்றாங்களாடா ஃப்ரோ” என்று ப்ரணவ் தன் சந்தேகத்தை ஜித்துவிடம் கேட்க, “பிங்கி பேசுறது எனக்கு புரியலைடா..” என்றான்.
அதேநேரம், “பிங்கிக்கு எப்பவும் எங்களோட விருப்பம் தான் மா முக்கியம்.. அவளுக்குன்னு தனியா இருந்ததில்ல..” என்று கைலாசம் பெருமையாக அவர்களை பார்க்க,
“ஆனா நான்தான் நம்பின என் பெண்ணை..” என்று பார்கவி கலங்கிய விழிகளுடன் ஆரம்பிக்கவும்,
“முடிஞ்சு போனதை இன்னுமா நினைச்சுட்டு இருப்ப விட்டுத்தள்ளு கவி?” என்று கேட்ட நாயகி உடனே இழைக்கு பூ வைத்து கையோடு கொண்டு வந்த செயினை மருமகளுக்கு அணிவித்து அழகு பார்க்க,
“எனக்கு இழையோட பேசணும்” என்று எழுந்து நின்றுவிட்டான் வசீகரன்.
அதை எதிர்பாராத இழை திகைப்போடு அவனை பார்க்க,
“என்ன பார்க்கிற போய் பேசிட்டு வாடா..” என்றார் கைலாசம்.
“என்கூடவா?” என்று இழை தடதடத்த மனதோடு வசீயை பார்த்திருக்க அருகே வந்தவன் அவள் கையை பிடித்து வெளியில் அழைத்து வந்தான்.
அவர்கள் செல்லவுமே திருவும் கைலாசமும் நிச்சயம் மற்றும் திருமணத்திற்கான நாள் குறிக்க தொடங்கினர்.
“உனக்கு அந்த கல்யாணத்துல விருப்பமில்லைன்னு அத்தை மூலமா தெரிஞ்சுகிட்டேன் ஆனா இந்த கல்யாணத்துல விருப்பமான்னு உன்மூலமா தெரிஞ்சுக்கணும்” என்று நான்காவது முறையாக சொல்லி அவள் பதிலுக்காக காத்திருக்க இழையோ பிடித்து வைத்த பிள்ளையார் கணக்காக மெளனமாக நின்றிருந்தாள்.
“அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ஸ்பீக் அவுட்!” என்று பொறுமை இழந்துபோனான் வசீகரன்.
“அம்மாக்கு விருப்பம்னா எனக்கும் விருப்பம்..” என்றவளின் குரலில் இருந்த நடுக்கமும் புடவையை பிடித்திருந்த கரங்களின் பதற்றமும் ஏன் என்று வசீகரனுக்கு சுத்தமாக புரியாது போனது.
“என்ன சொன்ன? கம் அகெயின்…!”
“அது… அதுவந்து..”
“எது வந்தது புரியற மாதிரி சொல்லு…”
“அது… அதுதாங்க என் அப்பம்மாக்கு என்ன விருப்பமோ அதுவேதான் எனக்கும்.. இப்போ புரிஞ்சதா?”
“உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு கேட்டேன்?”
“எங்க அப்பாக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் …”
“அதுக்காக நான் அவரையா கல்யாணம் செய்துக்கமுடியும்?” என்றான் கடுப்பாக.
அதில் இழை சட்டென சிரித்துவிட,
“உனக்கு சிரிக்க தெரியுமா?” என்று ரசனையாக கேட்டவனின் பார்வை மாற்றத்தை கண்டவள் சட்டென இதழ்களுக்கு பூட்டிட,
“சொல்லு..”
“ஹ்ம்.. ஏன் கேட்கறீங்க?”
“எப்பவும் நீ அழுது தான் பார்த்திருக்கேன் அதான் கேட்டேன்.. உனக்கு சின்ன வயசுல நடந்த எதுவும் நியாபகமில்லையா? என்னை, அப்புறம் என்கிட்டே பேசினது..”
“இல்ல.. அது.. இல்லை..” என்றவளுக்கு இன்னுமே பதற்றம் தொற்றிக்கொண்டது.
“என்ன இல்ல..” என்று புருவத்தை நீவிக்கொண்டு இழையை பார்த்தவன் அப்பேச்சை விடுத்து,
“நீ அதிகமா பேசமாட்டியா?” என்றிட அவளோ அலைபாயும் விழிகளோடு வியர்வையை துடைத்தவாறு, “நான் போகட்டா அம்மா தேடுவாங்க..” என்றாள்.
“சொல்லிட்டு தானே வந்தோம்..”
“இல்ல உங்களுக்கு லஞ்ச் எடுத்து வைக்கணும்.. போகட்டா?”
“சரி” என்று வசீ தலையசைக்கவும் விட்டால் போதுமென்று திரும்பிய இழையை, “ஒரு நிமிஷம்..” என்று நிறுத்தியிருந்தான்.
“சொல்லுங்க..”
“உனக்கு ஒன்னு கொடுக்கணும் அதையாவது வாங்கிட்டு போறியா? நேரமிருக்கா?”
“ஹ்ம்..” என்றவள் கையை நீட்டிட, அவள் கரத்தோடு தன்னுடையதை கோர்த்தவன், “வா” என்றழைத்து மர நிழலுக்கு சென்றான்.
“அங்கேயே கொடுத்திருக்கலாமே.. ஏன் இங்க?” என்று இழை கேள்வியாக பார்க்க,
“அங்க கொடுத்தா எல்லாருக்கும் தெரியும்..”
“என்னது?” என்று கேட்டவளின் முகத்தை இருகரங்களாலும் தாங்கியவன் மெல்ல அவளை நெருங்க இழைக்கு படபடத்து போனது.
“எ.. எ.. ன்ன” என்றவளின் வார்த்தைகள் உடைபட வசீகரனோ அவள் தாடையில் இருந்த தழும்பில் மிக மென்மையாய் முத்தமிட்டு, “ஸாரி..” என்றிட இழைக்கு நெஞ்சில் நீர்வற்றி போனது.
தவிப்புடன் பார்த்திருந்த இழை அங்கிருந்து நகரும் முன்னமே வசீயின் இதழ்கள் மெல்ல ஊர்ந்து தழும்பின் அருகேயிருந்த மச்சத்திலும் தன் முத்திரையை பதிக்க.. அதன் பின்பே பெண்ணவளை விடுவித்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வசீகரா போப்பா நாங்க எதிர்பார்த்ததை பண்ணாம 😜😜😜😜 இழை ஏன் மனசுல ஒண்ணு வெளில ஒண்ணு பேசணும் .. அவன் மேல இவ்வளவு காதலை வச்சுகிட்டு சொல்லாம எப்படி ..