
பெண்கள் அனைவரும் பஸ்ஸில் ஏறியிருக்க, வீட்டை பூட்டிக்கொண்டு வந்த சர்வஜித் வசீயின் பின்னே அமர்வதற்குள் அங்கே வந்த ஆண்ட்ரியா, வசீயின் பின்னே இருபுறமும் காலிட்டு அமர்ந்தாள். துரதிர்ஷ்டவசமாக பஸ்ஸில் இருந்து வசீயை படமெடுத்து கொண்டிருந்த இழையின் விழிகளில் இக்காட்சி விழவும், அதிர்ந்து போனவள் சட்டென திரும்பிக்கொண்டாள்.
இதை எதிர்பாராத வசீகரனும், “What the hell is this? Get down, Andrea” என்றவன் அவள் இன்னமும் அமர்ந்திருப்பதை கண்டு, “I say get down!” என்றாவன் அவள் கீழே இறங்கியதும் தானும் இறங்கியிருந்தான்.
“How can you…” என்று கோபமாக ஆரம்பித்தவன் தன்னை நிதானித்து, “Okay listen, இது உன்னுடைய இடம் கிடையாது. நீ அதுல தான் போகணும்,” என்று பஸ்ஸை சுட்டிக்காட்டி,
“Go and join with them,” என்றான்.
“No, Vaseegaran. I want to…” என்று தொடங்கியவள், தனக்கு செல்லும் வழியெங்கும் காணொளி எடுக்க இதுதான் வசதி, பஸ்ஸில் இருபுறமும் எடுக்க முடியாது என்றாள்.
“வழி சரியில்லை” என்றபோதும், “நான் சமாளித்துக்கொள்வேன்” என்றவள் அடமாக நின்றுவிட்டாள்.
“சரி ஜித்து, நீ இவங்களை கூட்டிட்டு வா. நான் பஸ்ல வரேன்,” என்றவன் கிளம்பவும்,
“No, no Vaseegaran. I can’t go with a stranger. அது உங்களோட தம்பியாகவே இருந்தாலும் முடியாது. நீங்கள்தான் எங்களுக்கு பொறுப்பு” என்றாள்.
வேறு வழியின்றி தலையசைத்தவன் அவள் மீண்டும் இருபுறமும் அமரவும், “No, I am not comfortable. Don’t sit double side,” என்றதும், அவனுடனான பயணத்தை மட்டும் கருத்தில் கொண்டவள் “சரி” என்று ஒருபுறமாக அமர்ந்து, அவன் இடையோடு கரம் கோர்த்து, மற்றொரு கையில் செல்ஃபோனை இயக்கினாள்.
பஸ்ஸில் இருந்து இக்காட்சியை கண்டு கொண்டிருந்த இழைக்கு மனம் நிலைகொள்ளாமல் தவிக்க, மெல்ல தன் பார்வையை திருப்பவும் பஸ் கிளம்பியது.
ஆனால், “கையை எடு” என்ற வசீகரனின் சீற்றத்தை எதிர்பாராத ஆண்ட்ரியா, சட்டென அவனிடையிலிருந்து கையை எடுத்து, வசீகரன் சொன்ன இடைவெளியில் அமர்ந்து கொண்டாள்.
இழைக்கோ அன்று ஏலகிரியில் குழந்தைக்காக நக்ஷத்திராவை வசீகரன் அழைத்து சென்றபோது ஏற்படாத ஏதோ ஒரு உணர்வு, இன்று ஆண்ட்ரியாவை அழைத்து செல்லும்போது தோன்றியது.
“தப்பா யோசிக்காத இழை,” என்று தன்னையே கடிந்து கொண்டவள், முடிந்த வரை பார்வையை மற்றவர்புறம் செலுத்த முயன்று தோற்று போனாள்.
அதுவும் வசீகரன் அவள் அமர்ந்திருந்த பக்கம் ஓவர்டேக் செய்து முன்னே செல்வதை கண்ட இழைக்கு, விழிகளில் நீர் ததும்பியது.
அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்கு மேல் பொறுக்க முடியாது போக, தன் அருகே இருந்த ப்ரணவிடம், “அப்பு, கொஞ்சம் இந்த பக்கம் வரியா. நான் அந்த சைட் உட்காந்துக்குறேன்,” என்றதுமே, “சரி அண்ணி,” என்றவன் கேள்வியே கேட்காமல் ஜன்னலோரம் அமர்ந்தான்.
இப்போது முன்பக்க கண்ணாடி வழியே அவர்களை பார்த்துகொண்டு பயணித்தவளுக்கு, “எப்போதுடா இது முடியும்” என்பது போலிருந்தது.
“அண்ணி, கொசு தொல்லை தாங்கலைதானே,” என்று அவள்புறமாக சரிந்து மெல்லிய குரலில் கேட்டான்.
“என்ன சொல்ற அப்பு?”
“அதோ போகுதே அந்த கொசுவைத்தான் சொல்றேன்,” என்றதும் இழை பதிலின்றி அவனை பார்த்தாள்.
“இரண்டு மூணு நாளா அண்ணா பக்கமே சுத்திட்டு இருக்கு. அவருக்கு கல்யாணமாகிடுச்சுன்னு நானே நாலுமுறை சொன்னேன். அப்பவும் அடங்கலை.”
“நீ சொன்னியா?”
“நான் மட்டுமில்ல. அண்ணாவே சொன்னார்.”
“அவர் சொன்னாரா?”
“ஆமா அண்ணி. கூட்டிட்டு வந்த அடுத்த நாளே அந்த கொசு ஏதோ அவருக்கு குடிக்க கொடுத்துச்சு. அதை வேண்டாம்னு சொல்லி அப்போதான் கல்யாண ஃபோட்டோஸ் காட்டினார். ஆனா உங்களுக்கு டிஸ்கம்ஃபோர்ட் கொடுக்கக்கூடாதுன்னு தான் உங்களை அங்க கூப்பிடலை. இன்னைக்கும் வேற வழியில்லாமதான் புடவை கட்டிவிட கூப்பிட்டார். அதுவும் நான் சொன்னதால தான்.”
“நீயா? ஏன்டா?”
“பின்ன என்ன அண்ணி. உரிமையா நீங்க அண்ணா பக்கத்துல இருந்தா, கண்ட கொசு பக்கத்துல பறக்க முடியுமா. அதைவிட அந்த கொசு நம்மள கடிக்க வந்தா, அடிச்சு தூக்கி தூர போட்டுட்டு போயிட்டே இருக்கணும். அதைவிட்டுட்டு அழுதா ஆச்சா?”
“நான் ஒன்னும் அழல. அது கண்ணுல தூசி விழுந்துடுச்சு,” என்றவளின் சிவந்த விழிகளை கண்டவன்,
“உங்களுக்கு அண்ணாவை ரொம்ப பிடிக்குமா? அவரை லவ் பண்றீங்களா அண்ணி?” என்றான்.
பதில் சொல்லாதவளின் விழிகளில் மீண்டும் நீர் துளிர்த்தது.
“இதுவரை கட்டின பொண்டாட்டிக்கு ஒரு முழம் பூ, புடவைதான் வாங்கி கொடுக்கலைன்னு பார்த்தா, இப்போ பிங்கியை விட்டுட்டு ஏதோ ஒரு கொரங்கை கூட்டிட்டு போறான். என்னடி இது? எதுக்கு இவனுக்கெல்லாம் கல்யாணம்?” என்று திருவேங்கடத்திற்கு அத்தனை ஆதங்கம்.
இழையின் முன் எதையும் காட்டிக்கொள்ளாமல், இத்தனையும் அவர்களுக்குள் மட்டுமே நடந்து கொண்டிருந்தது.
“என்னங்க, அது அவனோட வேலை…”
“எது, இதுவா? அப்போ இப்படி பொண்ணுங்களை கூட்டிட்டு சுத்தற வேலையைதான் இத்தனை நாள் பார்த்துட்டு இருந்தானா? அதுக்கு நீயும் உன் தங்கச்சியும் துணை. எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டே சொல்லாம மறைச்சிருப்பீங்க?”
“ஏங்க, நீங்க தானே தம்பு பிங்கியை விரும்பி கட்டிகிட்டான்னு சொன்னீங்க. இப்போ இப்படி பேசலாமா?”
“வேண்டாம் அம்மூ, இன்னும் என் கோபத்தை கிளராத. விரும்பி கட்டிகிட்டவன் செய்யற வேலையா இது? நானும் தான் உன்னை விரும்பி கட்டிகிட்டேன். எத்தனை ஸ்டேட் மாறினாலும், என்னைக்காவது உன்னை தனியா விட்டிருப்பேனா?”
“நீயேதான் இவன் படிப்பை காரணம் காட்டி வந்துட்ட. ஆனாலும் உங்களுக்காக நான் விஆர்எஸ் வாங்கிட்டு வரலையா? பொண்டாட்டியைவிட அப்படியென்ன வேலை? இதில்லைன்னா வேற பார்த்துக்கலாம். ஆனா காலம் திரும்ப வருமா? பிங்கி முகத்தை பார்த்தியா?” என்று தங்களுக்கு நேரெதிர் சீட்டில் அமர்ந்திருந்த மருமகளை சுட்டிக்காட்டினார்.
நாயகிக்குமே என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை.
“என்னங்க, நான் வேணும்னா பிங்கி கூட உட்காந்துக்கட்டா.”
“ஆமா, பிங்கிகூட உட்காரு. தூங்கு, சாப்பிடு, ஊர் சுத்து, கதை பேசு. ஆக மொத்தத்துல அவன் தாலி கட்டி கூட்டிட்டு வந்தான். ஆனா இங்க இருபத்திநாலு மணிநேரமும் நீதான் உன் மருமககூட குடும்பம் நடத்திட்டு இருக்க. இதுக்கு தானே ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வச்சேன். சத்தியமா எனக்கு சந்தோஷம் தாளலடி,” என்று பல்லைக் கடித்தார்.
“நம்மள நம்பி அனுப்பியிருக்க கவிக்கு என்ன பதில் சொல்லப்போறேன்னு தெரியல. பிங்கி நமக்காக எதையும் காட்டிக்கலைனாலும், அவ ஒவ்வொரு நாளும் சொல்ற குட்மார்னிங் எப்போ அவளுக்கு உண்மையான விடியலா இருக்கும்னு எதிர்பார்த்துட்டு இருக்கேன்,” என்று தங்களை கடந்து செல்லும் மகனை பார்த்தார்.
“என்ன பேசுறீங்க?”
“வேற என்ன பேச சொல்ற? எல்லாரும் கல்யாணம் பண்ணி பொண்டாட்டி பின்னாடி சுத்திதான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா உன் மகன் வித்யாசமா இருக்கான். ராத்திரி ரெண்டு மணிவரை கூத்தடிக்கிற அவங்க கிட்ட இவனுக்கு என்ன வேலை? அதுவும் பிங்கியை தனியா விட்டுட்டு.”
“அதனாலதானே அதோ அந்த கொரங்கு என் மருமக இடத்துல உட்காந்திருக்கு. ப்ச்… தப்பு பண்ணிட்டேன். இவனுக்கெல்லாம் கல்யாணமே பண்ணியிருக்க கூடாதடி. அப்படியே காடு மலைன்னு சுத்தட்டும்னு விட்டிருக்கணும்,” என்றிட நாயகியால் எதுவுமே பேச முடியவில்லை.
“எனக்கு சந்தேகமா இருக்கு?”
“என்னதுங்க?” என்ற நாயகி, பல வருடங்களுக்கு பிறகான கணவரின் கோபத்தில் சற்று அரண்டுபோனார்.
“உனக்காக வீட்டை விட்டு வேலையை விட்டு வந்த என் மகன் தானா இவன்னு எனக்கே சந்தேகமா இருக்கு. குழந்தையை யாராவது மாத்திட்டாங்களான்னு செக் பண்ணணும்,” என்றதும் பதறிப் போனார்.
ஒருவழியாக அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்று சேர்ந்தனர். பொங்கலிடுவதற்கான வேளைகளில் பெண்கள் ஈடுபட்டிருக்க, இங்கு திருவிடம் சிக்கிக்கொண்டார் நாயகி.
“கல்யாணமான பிறகு பெண்ணையும் பிள்ளையையும் குலதெய்வத்துக்கு கூட்டிட்டு வந்து பொங்கல் வைப்பாங்க. இங்க உன் மகன் ஒரு ஊரையே ஏத்திட்டு வந்திருக்கான்,” என்று காய்ந்தார்.
“என்னங்க, நம்ம பக்க விசேஷம் ஏதாவது பார்க்கணும்னு ஆசைப்பட்டிருக்காங்க. அதை எதுக்கு தனியா செஞ்சுட்டுன்னு. தம்பு இன்னைக்கே கூட்டிட்டு வந்தான். இதையும் தப்பு சொன்னா எப்படி?”
“வந்தது தப்பில்லைடி. ஆனா அங்க பாரு, பொண்டாட்டி பக்கத்துல நிற்காம அந்த தடிதாண்டவராயன்கள் கூட நின்னுட்டு இருக்கான். என் மருமக புகையில கஷ்டப்பட்டுட்டு இருக்கா. கூட நின்னு ஒத்தாசை பண்ணாம…” என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கையிலேயே, இழையின் அருகே வந்தவன் அவளை எழச் சொல்லி புகைந்து கொண்டிருந்த அடுப்பை சரிபடுத்தினான்.
இழை பொங்கலிட்டு முடிக்கவும், அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று படையலிட்டு வழிபடச் செய்தனர்.
ஜித்து இருவரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க, “டேய் ப்ரோ, சாப்பிட்டு முடிச்சதும் எப்படியாவது இந்த கூட்டத்தையும் அண்ணாவையும் அந்த பக்கம் கூட்டிட்டு போ. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு,” என்றான் ப்ரணவ்.
“என்னடா பண்ணப் போற?”
“ப்ச்… சொன்னதை செய்.”
அதற்குள் ஜித்து அனைவரையும் அழைத்து செல்ல, வசீகரனிடம் கேள்வி கேட்டவாறு ஆண்ட்ரியா அவனுடன் சேர்ந்துகொண்டாள்.
மறுபுறம் வந்த ப்ரணவ், வசீயின் புல்லட் டையரை பஞ்சர் செய்து கொண்டிருந்தான்.
“அப்பு, என்ன பண்றே?”
“கொசு திரும்ப கடிக்காம இருக்க வழி பண்ணிட்டு இருக்கேன் அண்ணி…”
“உங்க அண்ணா பார்த்தா என்ன ஆகுறது. வேண்டாம் டா. மாட்டினா அவ்வளோதான். உண்டு இல்லைன்னு ஆக்கிடுவார். எனக்கு பயமா இருக்கு.”
“அண்ணி, எதுக்கு இவ்வளவு பயப்படுறீங்க?”
“உனக்கு அவரோட கோவத்தைப் பத்தி தெரியாது. வந்துடு டா. அவளை நாம வேற விதமா டீல் பண்ணிக்கலாம்.”
“அண்ணி, அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். இப்போ எதுக்கும் அண்ணா கண்ணுல படாத மாதிரி தள்ளி நின்னு பேசுங்க.”
“நான் தள்ளி நிற்கிறது இருக்கட்டும். நீ அவர் கண்ணுல படாத.”
“வேலைன்னு வந்துட்டா எங்கண்ணா வெள்ளைக்காரன் மாதிரி.”
“இந்த படம் நான் பார்த்துட்டேனே…”
“ப்ச்… அண்ணி, நான் அண்ணாவைப் பத்தி சொல்றேன். அவர் வேலையில இருக்கப்போ எந்த டிஸ்ட்ராக்ஷனும் இருக்கக் கூடாதுன்னு சொல்லுவார். அங்க பாருங்க, கொசு அண்ணா பின்னாடி பறந்துட்டிருக்கு. வர நேரமாகும்.” என்றவன் பின் சக்கரத்தின் எதிரில் அமர்வதை கண்டவள்,
“ஒரு வீல் பஞ்சர் பண்ணினா போதாதா? எதுக்கு இன்னொன்னு. கண்டிப்பா டவுட் வரும். வேண்டாம்.”
“அப்படியா சொல்றீங்க.”
“ஆமா!!”
“நீங்க சொல்றதும் சரிதான். எது பண்ணினாலும் ப்ளான் பண்ணி பண்ணனும். அண்ணா உங்களோட வருவார். நான் பைக் எடுத்துட்டு வருவேன். ஓகேதானே?”
“ஓகே அப்பு. ஆனா இங்க பக்கத்துல எதுவும் கடை இல்லையே. எப்படி?”
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்ல. ஆளெல்லாம் ரெடியா இருக்கு. நீங்க கிளம்புங்க, நான் பின்னாடியே வரேன்.”
“தேங்க்ஸ் அப்பு.”
“இனி அந்த கொசு ஊருக்கு கிளம்பற வரைக்கும் அதை நான் டீல் பண்ணிக்கிறேன். நீங்க கவலைப்படாம இருங்க.”
“சரி” என்றவள், அனைவரும் பஸ்ஸில் ஏறுவதை கண்டு தானும் சென்று அமர்ந்தாள். புல்லட்டை நோக்கி சென்ற வசீயின் பின்னே ஆண்ட்ரியா செல்லவும்,
“அண்ணி, இப்பவே அந்த கொசுவை அடிச்சு பாடையில் ஏத்தணும்னு தோணுது..” என்றான் குறையாத கோபத்தோடு.
“டென்ஷனாகாத அப்பு. உங்க அண்ணா சரியா கவனிக்கலை போல. இல்லன்னா அவரே அந்த கொசுவை ஒரே நசுக்கா நசுக்கிடுவார். பாடையில் ஏத்த கூட ஸ்பேர் பார்ட்ஸ் சிக்காதுன்னு பார்த்துக்கோ..” என்று சிரித்தாள்.
“அட ஆமால்ல. இதை எப்படி மறந்தேன்?” என்றவன் இழையுடன் ஹை-ஃபைவ் போட்டுக்கொண்டான்.
“உன்னை விட அவரை எனக்கு நல்லா தெரியும் அப்பு.”
“அப்புறம் ஏன் அண்ணி அழுதீங்க?”
“அது என்னமோ தெரியல. சட்டுன்னு கலங்கிடுச்சு. உங்க அண்ணாக்கு தெரிய வேண்டாம்.”
“ஏன் அண்ணி?” என்று கேட்டுக்கொண்டிருக்க, அங்கே ஆண்ட்ரியாவிற்கு இம்முறை வாய்ப்பு கொடுக்காத வசீ, டேவிட்டிடம் புல்லட்டை கொடுத்து அவனுடன் செல்லுமாறு கூறி பஸ்ஸில் ஏறிவிட்டான்.
நாயகியிடம் வசீ பேசிக்கொண்டிருக்க, டேவிட் அவனை அழைத்து சென்று புல்லட்டை காட்டிட, வசீ ஜித்துவை அழைத்தான்.
“டேய் ஜித்து, பாவம்டா,” என்று இழை பதறினாள்.
“அண்ணி, நாம தான் பைக் பஞ்சர் பண்ணிட்டோமே. இனி கொசு யாரோடவும் சுத்த முடியாது.”
“அதுக்கில்லடா. அங்க பாரு, உங்க அண்ணா ஜித்துவை எடுத்துட்டு வர சொல்லுறார். அவன் எப்படி வருவான்?”
“நீங்க பதறாதீங்க. நான் மெக்கானிக்கிட்ட சொல்லிட்டேன். பஸ் கிளம்பினதும் அவன் ரெடி பண்ணிடுவான். நீங்க இப்படி வாங்க..” என்று இழையை ஜன்னலோரம் அமர்த்தி, அவன் மறுபுறம் அமர்ந்து கொண்டான்.
“உங்க அண்ணா எங்க உட்காருவார்?”
“அங்க பாருங்க. கொசு அண்ணாக்காக வைட்டிங்..” என்று ஆண்ட்ரியாவை சுட்டிக்காட்டியவன், “நான் அது பறக்க முடியாதபடி பார்த்துக்குறேன். அண்ணா உங்க கூட இருப்பார். ஓகேவா?”
“சூப்பர் அப்பு. டபுள் ஓகே..”
ஆண்ட்ரியாவிடம் அவர்களின் குலதெய்வ வரலாறு தெரியுமா? என்று கேட்டவன், “ஐ வில் எக்ஸ்ப்ளெயின் யூ பெட்டர் தேன் மை ப்ரதர்,” என்று சொல்லி அவளோடு அமர்ந்துகொண்டான்.
அனைத்தையும் சரி பார்த்த வசீ, இழை அருகே வந்து அமரவும், “இன்னும் எத்தனை நாள் அவங்களோட ஸ்டே?” என்று கேட்டவாறே அவள் தண்ணீர் எடுத்து கொடுத்தாள்.
“இன்னும் த்ரீ டேஸ். ஆமா, பொங்கல்ல ஸ்வீட் ஏன் கம்மியா இருந்தது?”
“அத்தை சொன்ன அளவு தானே போட்டேன். நல்லாயில்லையா?”
“நல்லாயிருந்தது. ஆனா உன்னளவு ஸ்வீட் இல்ல..” என்றவனின் ஒரு கரம் அவள் கரத்தை இறுக்கப் பிடிக்க, மற்றொரு கரம் இழையின் தோள்களை சுற்றிக்கொள்ள, அவளும் ஆசுவாசமாக கணவன் தோளில் சாய்ந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
+1

