
என்னுள் நீ காதலாய் 💞 25
“நான் அதெல்லாம் இல்லன்னு சொன்னேனா .. நம்ம ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்னு தான அவர் நமக்கு எல்லாம் செஞ்சார் .. அப்புறம் என்ன .. முதல்ல இந்த டாக்குமெண்ட்ஸ்ல கையெழுத்து போடு .. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்று அந்த ஆசாமி சொல்ல .. இனியன் ஒன்றும் பேசாமல் அழுது கொண்டே இருந்தான் . இப்போ உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் அந்த ஆசாமி இனியனின் உடன்பிறந்த அண்ணன் .
இனியன் கையெழுத்து போட்டிருந்தால் இந்த பிரச்சனை உடனே முடிவுக்கு வந்திருக்கும் . ஆனால் கூட பிறந்த அண்ணன் தந்தையின் உடலை தூக்க விடாமல் இப்படி ஹாஸ்பிடலில் வைத்து பிரச்சனை செய்வதால் அவன் மனம் நொந்து போனான் . இவ்வளவு அவசரமாக ஏன் இதை செய்ய வேண்டும் என்ற யோசனை வேறு அவனுக்கு . அதனால் தான் கையெழுத்து போடாமல் பேசாமல் நின்றான் .
இனியனின் அப்பா , அம்மா இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி புரிந்தவர்கள் . அவர்களின் திருமணம் பெற்றோர் செய்து வைத்த திருமணம் தான் . இருவரும் அவர்கள் திருமணத்திற்கு பிறகு நிறைய காதலித்தார்கள் . அவர்கள் அன்பாக அன்னியோன்யமாக இருப்பதை .. இனியனே பல தருணங்களில் பார்த்து வியந்திருக்கிறான் . இனியனும் அவன் அண்ணனும் மட்டும் தான் அவர்களுக்கு குழந்தைகள் . தங்கள் உழைப்பில் சொந்த வீடு .. பிள்ளைகளுக்கு படிப்பு .. வேலை .. பெரியவனுக்கு திருமணம் என்று பார்த்து பார்த்து செய்து வைத்தார்கள் .
ஒரே வீட்டில் தான் எல்லோரும் இருந்தார்கள் . மாமியார் மெச்சும் மருமகளாக தான் இனியனின் அண்ணன் மனைவியும் இருந்தாள் . காலம் ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றியது . இனியனின் அம்மா இறந்து விட அவர் பிரிவை தாங்காமல் .. கொஞ்ச நாட்களில் பக்கவாதம் வந்து அவன் அப்பாவும் படுக்கையில் விழுந்து விட்டார் .
அவருக்கு எல்லா பணிவிடைகளும் இனியன் தான் செய்தான் . இருந்தாலும் அவன் ஆபீஸுக்கு போன பிறகு .. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அவரை பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு . அவன் அண்ணன் மனைவிக்கு போக அவளுக்கு அது கடுப்பாக இருந்தது .
நாளாக நாளாக அவரை பார்த்து கொள்ள சொன்னால் அவள் புலம்ப ஆரம்பித்தாள் . இனியனிடம் “அவரை பார்த்து கொள்ள முடியாது” என்று அவள் சொல்ல .. ஒருநாள் ஏதோ கோபத்தில் இனியன் அவன் அண்ணனிடம் “எனக்கும் வெளில கொஞ்ச வேலை இருக்கு .. அந்த டைம்ல அப்பாவை நீ பார்த்துக்கோடா” என்றான் .
அவ்வளவு தான் இனியனுடைய அண்ணி வீட்டில் இருந்து எல்லோரும் வந்து விட்டார்கள் . “என் பொண்ணை உன் அப்பாவுக்கு சேவகம் பண்ண தான் கல்யாணம் பண்ணி கொடுத்தோமா” என்று வாய்க்கு வந்தபடி பேசினார்கள் .. ஏசினார்கள் .
“நீங்க என் பொண்ணுக்கு வேலை சொல்லலாம் .. அவன் சின்ன பையன் .. அண்ணி கிட்ட என் அப்பாவை பார்த்துக்கோண்ணு சொல்றது தப்பில்லையா” என்று அவர்கள் கேட்க .. அதை விட அண்ணன் அவர்களுக்கு எதுவும் பதில் சொல்லாமல் பேசாமல் இருப்பதை பார்த்தும் இனியன் அதிர்ச்சியானான் .
அவன் அண்ணியிடம் செய்ய சொல்லவில்லை . ” நீ பண்ணு..” என்று அவன் அண்ணனை தான் உரிமையாக கேட்டான் . அப்பா இருவரையும் தான் வளர்த்தார் .. அவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருவருக்கும் தானே என்ற நினைப்பில் கேட்டு விட்டான் . அது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகுமென்று அவன் நினைக்கவில்லை .
வந்தவர்கள் நன்றாக பேசி விட்டு சென்று விட .. மனமுடைந்து போனவன் அன்றிலிருந்து என்ன வேலை இருந்தாலும் .. அப்பாவை அவனே கவனித்து கொண்டான் .
தன் சம்பளத்தில் ஒரு பாதியை மட்டும் வீட்டிற்கு கொடுத்த இனியனை மொத்த சம்பளத்தையும் கேட்டான் அண்ணன் . அவன் பெற்றோர்கள் அவனிடம் சம்பள பணமே கேட்டதில்லை . இருந்தாலும் அவ்வப்போது வீட்டிற்கு செலவுக்கு பணம் தந்து .. படிப்பு லோன் .. அவனுடைய பைக் லோன் எல்லாம் கட்டிக் கொண்டிருந்தான் .
“முடியாது..” என்று அவன் மறுக்க அன்றும் வீட்டில் பெரிய களேபரம் . அன்றில் இருந்து மாதம் மாதம் வீட்டிற்கு உணவு சப்ளை செய்யும் கேட்டரிங் கில் .. தினமும் உணவு வாங்கி சாப்பிட்டார்கள் இனியனும் அவன் அப்பாவும் . அவனுடைய அப்பா இதெல்லாம் பார்த்து கலங்கி போனார் . “இனியன் இன்னும் தன் வாழ்வை தொடங்கவில்லையே .. அவனுக்கு யார் செய்வார்கள் .. யார் ஆதரவாக இருப்பார்கள்” என்று நினைத்து கவலைப்பட்டு கொண்டே இருந்தவருக்கு உடல்நிலை மோசமாகி போனது .
உயிருக்கு போராடிய அப்பாவை இனியன் ஹாஸ்பிடலில் சேர்க்க .. அவர்கள் கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு பரிந்துரை செய்தார்கள் . அங்கு சென்றால் அத்தோடு அவர் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் .
இனியனுடைய அண்ணன் அவர் உடலை வீட்டுக்கு கொண்டு செல்லாமல் நேரடியாக மயானத்திற்கு எடுத்து செல்ல சொன்னதுடன் .. சொத்து பிரிக்க வேண்டும் என்று ஹாஸ்பிடலிலேயே பிரச்சனை செய்ய ஆரம்பித்தான் .
அவர்கள் பெற்றோரின் முழு சொத்துகளுக்கும் இருவருக்கும் சம பங்கு உண்டு . ஆனால் அதை முழுமையாக எடுத்துக் கொண்டு இனியனுக்கு கொஞ்சம் பணத்தை மட்டும் கொடுத்து அவனை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிட திட்டம் . இப்போது மன கஷ்டத்தில் கேட்டால் தான் அவன் சம்மதிப்பான் . ஈம காரியங்கள் முடிந்த பிறகு அவன் சொத்து வேண்டும் என்று பிடிவாதமாக நின்றால் .. கேஸ் போட்டால் என்ன செய்வது என்று யோசித்த அண்ணன்காரன் இவ்வளவு பிரச்சனைகளையும் செய்து கொண்டிருந்தான் .
அங்கு அவர்களுடன் வந்திருந்தவர்களில் முக்கால் வாசி பேர் அண்ணியின் வீட்டை சேர்ந்தவர்கள் . இருக்கும் கொஞ்ச பேரும் இது அண்ணன் தம்பி பிரச்சனை என்று அமைதியாக இருந்து விட்டனர் .
“அய்யோ அப்பா .. என்னை இவங்க கிட்ட தனியா விட்டுட்டு போயிட்டீங்களே” என்று இனியன் துக்கம் தாளாமல் கதறி அழுது கொண்டிருக்க .. அதை பார்த்து ரேவதிக்கும் செந்தமிழுக்கும் கண்கள் கலங்கி விட்டது .. அவர்களும் வாழ்க்கையில் பிரச்சனைகளை பார்த்தவர்கள் . தங்களை போல உறவுகளால் காயப்பட்டிருக்கும் அவனை பார்த்து இருவருக்கும் மனம் வேதனையில் துடித்தது .
“என்ன மாப்ள?? இவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்கீங்க .. உங்க தம்பி தான உரிமையா ரெண்டு அடி போட்டு கையெழுத்து போடுன்னு சொன்னா போட போறான்” என்று அண்ணனுடைய மாமனார் சொல்ல இனியனுக்கு கோபம் வந்து விட்டது .
“எதுவா இருந்தாலும் அப்பா கடைசி காரியங்களை பண்ணிட்டு வந்து தான் நான் பண்ணுவேன் .. இது எங்க குடும்ப விஷயம் நீங்க தலையிடாதீங்க” என்றான் கோபமாக .
அண்ணன்காரனும் கோபத்தில் இனியனின் சட்டை காலரை பிடித்து அவனை அடிக்க போக ..
“பேசிட்டு இருக்கும் போது யாருடா அவன் மேல் கையை வைக்கிறது?!” என்று வேகமாக இனியன் அண்ணனை தள்ளி விட்டு வந்து நின்றான் இளமாறன் . இனியனுடைய அப்பா இறந்த விஷயம் கேள்விப்பட்டு அப்போது தான் அங்கே வந்திருந்தான் .
“இனியா .. இவனுங்க கிட்ட என்ன பேசிட்டு இருக்க” என்று சொன்ன இளமாறன் .. “அண்ணா.. வாங்க இவரை தூக்குங்க .. நாம நேரா மயானத்துக்கு போயிடலாம்” என்று ஆம்புலன்ஸ் டிரைவரை அழைக்க ..
கீழே விழுந்த அண்ணன்காரன் வேகமாக வந்து இளமாறன் சட்டையை பிடித்து .. “இது எங்க குடும்ப விஷயம் நீ எதுக்கு தலையிடுற” என்று ஆவேசமாக கேட்க .. “இனியன் என்னோட ஃப்ரெண்ட் அவனுக்கு ஒண்ணுனா நான் தான் கேட்பேன்” என்றவன் அவன் கையை தட்டி விட்டான் .
“விடுங்க மாப்ள .. இவனுங்க எப்படி பிணத்தை வெளியில கொண்டு போறாங்கன்னு பார்க்கலாம் .. உன் தம்பி ஒரு ஆளு .. அவனுக்கு சப்போர்ட் பண்ண வந்திருக்கிற இவன் ஒரு ஆளு” என்று இளமாறன் காலை பார்த்து மாமனார் கேலியாக பேச .. அவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் அப்பாவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றினார்கள் .
“இந்த பிரச்சனை முடிவுக்கு வர்ற வரைக்கும் நீ வண்டிய எடுக்கக்கூடாது” என்று அந்த மாமனார் டிரைவரை மிரட்ட .. அவர் வண்டியில் ஏறாமல் நின்றிருந்தார் . “டேய் உனக்கு என்னடா பிரச்சன?? செத்தவரை நிம்மதியா கூட போக விட மாட்டியா” என்று இனியன் அவன் அண்ணனிடம் அதிக கோபத்தில் சீற .. “நீ கையெழுத்து போடு” என்று பிடிவாதமாக நின்றான் அண்ணன்காரன் .
“என்னால கையெழுத்து போட முடியாது .. நீ என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ” என்று அவனும் பிடிவாதமாக மறுக்க .. “நீ எங்க அப்பா அம்மாவுக்கே பிறக்கல .. நீ அனாதை .. உன்னை அனாதை ஆசிரமத்துல இருந்து எடுத்து வளர்த்தாங்கன்னு சொல்லிடுவேன் .. அப்புறம் சொத்துல உனக்கு ஒரு ரூபா கூட கிடைக்காது” என்றான் அண்ணன் .
இருந்த மன வேதனையில் அனாதை என்று சொல்லி விட்டான் என்ற கோபத்தில் இனியன் அவன் அண்ணனை அடிக்க .. இதை பார்த்த அண்ணனுடைய மாமனார் இனியனை அடிக்க .. நண்பனை அடித்து விட்டார்கள் என்ற ஆவேசத்தில் இளமாறன் அந்த மாமனாரை அடிக்க .. வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது .
இளமாறனுக்கு காலில் மட்டும் தான் சின்ன பிரச்சனை .. மற்றபடி பலமானவன் தான் .. ஆறடி உயரம் .. அவன் கடந்து வந்த பிரச்சனைகளால் மனதை மட்டுமல்ல அவன் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருந்தான் . அவன் ஜிம்மிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை . இயற்கையாகவே அவனுக்கு இருந்த பரந்த மார்பும் … அகன்ற தோளும் .. தொப்பையில்லாத வயிறும் அவனுக்கு கூடுதல் அழகு தான் !!
இனியனும் அப்படிதான் .. இளமாறனை விட கொஞ்சம் உயரம் கம்மி .. நிறமும் கம்மி . ஆனால் பார்க்க அழகாக இருப்பான் . ஒல்லியான தேகம் தான் .. உயரத்திற்கு ஏற்ற எடை .. கச்சிதமான உடலமைப்புடன் இருந்தான் !!
என்னடா .. சண்டைக்கு நடுவுல ரெண்டு பேரோட அழகை வர்ணிக்கிறேன்னு பார்க்குறீங்களா .. நான் இல்லங்க .. ரேவதி இனியனையும் .. செந்தமிழ் இளமாறனையும் தான் இப்படி பார்த்து ரசிச்சுட்டு இருந்தாங்க . பார்த்ததும் காதல்னு கேள்விபட்டிருக்கோம் . இங்க நடந்த கூத்தை எல்லாம் பார்த்து பெண்கள் ரெண்டு பேரும் அவங்கள காதல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க . காதல்னு சொல்ல முடியாது ஒரு ஈர்ப்பு .. பிடிப்பு .. கிரஷ் அப்படின்னு வச்சுக்கலாம் .
சரி வாங்க .. நாம சண்டை நடக்கிற இடத்துக்கு போவோம் . அடிதடி பயங்கரமா போயிட்டு இருக்கு . போலீஸ் வந்துட்டாங்க . அப்புறம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில பிரச்சனை பண்ணா வரமாட்டங்களா . போலீஸ் வந்து “என்ன பிரச்சனை??”ன்னு கேட்க .. அந்த மாமனார் போலீஸை தனியா கூப்பிட்டு போய் பேசினார் .
அதன் பிறகு அங்கு என்ன நடக்கும்னு புரிந்து கொண்ட இனியன் .. அவன் அண்ணன் கையில இருந்து பத்திரத்தை வாங்கி கையெழுத்து போட்டு அவனிடம் கொடுத்தான் . ஒன்றும் பேசாமல் அவன் ஆம்புலன்சில் ஏற .. இளமாறனும் இன்னும் சிலரும் ஏறிக் கொண்டார்கள் .
கொஞ்ச நேரம் இனியன் அண்ணனுக்காக வண்டி காத்திருந்தது . அவன் வரவில்லை . இன்னும் மாமானாருக்காகவும் .. அவர் அழைத்து சென்ற போலீஸுக்காகவும் காத்திருந்தான் .
அவன் வராமல் போக வண்டியை எடுத்தார்கள் . மின் மயானத்திற்கு சென்று அப்பாவின் உடலுக்கு இறுதி சடங்குகள் முடித்து .. மின்தகனம் செய்து அஸ்தியை வாங்கிக் கொண்டு இனியன் வீட்டிற்கு சென்றார்கள் . இறப்பு நடந்ததற்கான எந்த அறிகுறிகளும் அந்த வீட்டில் இல்லை . விசேஷம் போல் கூட்டமும் , பேச்சு சத்தமும் , சாப்பாடும் தயாராகி கொண்டு இருக்க .. இனியன் அண்ணனும் அவன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான் .
காதலாய் வருவாள் 💞
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இனியனையும், மாறனையும் முன்பே அறிந்து உள்ளனரா தமிழும், ரேவதியும்.
வயதானவரை கவனித்துக்கொள்வதில் சிரமம் என்றால் பக்குவமாக எடுத்துச் சொல்லிவிட்டு ஒதுங்கி இருக்கலாம்.
அதை விட்டுவிட்டு கிடைத்தவரை லாபம் என்று அவர்களிடம் இருந்து அனைத்தையும் பறித்து கொள்வதில் மட்டும் உரிமை போராட்டம்.
எப்படிதான் மனது வருகிறதோ இவர்களுக்கு. கடமையில் இருந்து ஒதுங்கிக்கொள்வதை கூட மன்னித்து விடலாம். ஆனால், தனக்காக மட்டும் என்று அனைத்து சொத்துக்களையும் எடுத்து கொள்வது அநியாயம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை பிரச்சனை. மாறனின் கஷ்ட நாட்களில் உறுதுணையாக இருந்திருக்கின்றான் மாறன்.
நிஜத்திலும் இப்படிப்பட்ட சில சுயநல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. நல்ல நட்பு கடினமான சூழ்நிலைகளில் நமக்கு தோள் கொடுத்து தாங்குவது தான்.. இனியனும் மாறனும் நல்ல நண்பர்கள்