
அத்தியாயம் -25
தன் தோழி ஷோபனா இப்போது உயிருடன் இல்லை என்கிற செய்தியை ஜீரணிக்கக் கூட முடியாமல், இடிந்து போன நிலையில்,
சாவி கொடுத்த பொம்மை போல் நடந்து, தேர்வு அறைக்குச் சென்று அவளுடைய இடத்தில் அமர்ந்து கொண்டாள் மீனா.
வலுக்கட்டாயமாக கவனத்தைத் திருப்பிக் கொண்டு ஒரு வழியாக பரிட்சை எழுதி முடித்தாள்.
வெளியே வந்தும், அதே நினைவுடன் இருந்தாள்.
‘அவ அப்பா கிட்ட நாமளே ஃபோன் பண்ணிக் கேக்கலாம்னாலும் அவரோட ஃபோன் நம்பர் கூட தெரியாதே எனக்கு! பிரின்சிபால் ரூம்ல போயி கேக்கலாமா? குடுப்பாங்களா?’
ஷோபனாவின் தாயையும் தந்தையையும் ஒரே ஒரு முறை தான் பார்த்து இருக்கிறாள் மீனா. இவளும் ஷோபனாவும் சேர்ந்து கல்லூரிக்குச் செல்ல கோவைக்குப் பயணமாகும் போது விடுதியில் கொண்டு விடுவதற்காக என்று மீனா, ஷோபனா, அவர்களுடன் இருவருடைய பெற்றோர்களும் வந்திருந்தனர். அப்போது பார்த்துப் பேசியது தான்.
அப்போது ஒருவருக்கொருவர் அலைபேசி எண்ணை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று யாருக்குமே தோன்றவில்லை. இதுவரை அந்த மாதிரியான ஒரு அவசியமும் ஏற்படவில்லை.
மறுநாள் அலுவலக அறைக்குச் சென்று ஷோபனாவுடைய தந்தையின் அலைபேசி எண்ணை கேட்டுப் பார்த்தாள் மீனா. ஆனால் அப்படி எல்லாம் தேவையில்லாமல் யாருடைய எண்ணும் தர முடியாது என்று மறுத்து விட்டனர் அலுவலகத்தில் இருப்பவர்கள்.
அதுவும் இல்லாமல் ஷோபனாவைப் பற்றி இனி எந்த ஒரு விஷயமும் கேட்டு வரக்கூடாது என்றும் கூறி சத்தம் போட்டு அனுப்பி விட்டனர். வேறு வழியின்றி அந்த முயற்சியைக் கைவிட்டாள் மீனா.
ஆனால் சிறிது நாட்கள் கழித்து ஷோபனா, சாதாரணமாகச் சாகவில்லை என்றும் தற்கொலை செய்து இறந்ததாகவும் அரசல் புரசலாக
பேச்சு அடிபட்டது கல்லூரியில். பரிதவித்துப் போனாள் மீனா.
‘தற்கொலையா? இந்த முடிவு எடுக்கிற அளவுக்கு என்ன பிரச்சினை ஆச்சு அவளுக்கு? எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லுவாளே ஷோபனா! சொல்லாம இருக்க மாட்டாளே! என்ன தான் நடந்திருக்கும்?’
யோசிக்க யோசிக்க குழப்பம் தான் மிச்சமாயிற்று அவளுக்கு. ஆனால் அப்படியே விடவும் முடியாமல் அலுவலக அறையிலேயே கெஞ்சிக் கூத்தாடி, ஷோபனாவுடைய தந்தையின் எண்ணைக் கேட்டு வாங்கினாள்.
உடனே அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள். சில சத்தத்திற்குப் பிறகு அழைப்பை ஏற்று தொடர்புக்கு வந்தார் ஷோபனாவின் தந்தை.
“ஹ.. ஹ.. ஹலோ..”
அந்தப் பக்கம் இருந்து குரல் வருவதற்குள்ளாகவே அவசர அவசரமாகப் பதட்டத்துடன் பேசினாள் மீனா.
“ஹலோ” எதிர் திசையில் இருந்து சுரத்தே இல்லாமல் ஒலித்தது அவருடைய குரல்.
“நான் ஷோ..ஷோபனாவோட ஃபிரண்ட் மீ.. மீனா பேசுறேன் அங்க்கிள். அ.. அவளுக்கு என்னாச்சு அங்க்கிள்? அவ இறந்துட்டதா சொ.. சொல்றாங்களே. அது உண்மையா அங்க்கிள் ? என்னாச்சு அவளுக்கு? ஏன் திடீர்னு இப்படி? எ.. எப்படி அங்க்கிள் இறந்தா அவ?”
பொலபொலவெனக் கண்ணீர் வடித்தவாறு பேசினாள்.
“அது பத்தி எதுவும் பேசுறதா இல்லேம்மா நான். போனவ போயிட்டா. தயவுசெய்து இனிமே அவளைப் பத்தி எதுவும் கேட்டு யாரும் இனிமே ஃபோன் பண்ணாதீங்க”
“அங்க்கிள்.. அங்க்கிள்.. ப்ளீஸ் ஃபோன வச்சிடாதீங்க. தயவு செஞ்சு என்ன நடந்ததுன்னு சொல்லுங்க அங்க்கிள். ப்ளீஸ் வச்சிடாதீங்க!”
“ஃபுட் பாய்சன் ஆனதில வயித்துல ஏதோ பிராப்ளம் ஆயிடுச்சு . ஆஸ்பத்திரிக்குப் போற வழியிலேயே இறந்துட்டா. நடந்தது இது தான். போதுமா? இதுக்கு மேலும் சொல்றதுக்கு எதுவும் இல்ல. இனிமே ஃபோன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதேம்மா. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன்”
அடுத்த நொடி அழைப்பை அணைத்து இருந்தார் ஷோபனாவின் தந்தை.
ஷோபனாவை நினைத்து நினைத்து மனம் ஒடிந்து போனாள் மீனா. அதிலிருந்து வெளியே வருவதற்கே அவளுக்கு வெகு நாட்கள் ஆனது.
கல்லூரியில் நேர்முகத் தேர்வுக்காக வந்த ஒரு நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது அவளுக்கு. தன் முழுக் கவனத்தையும் வேலையில் செலுத்தினாள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிகழ்ச்சியை மறந்தாள்.
எப்போதாவது ஷோபனாவின் நினைவு வரும் போது கண்களில் கண்ணீர் திரண்டு வரும். சிறிது நேரம் உட்கார்ந்து அழுதுத் தன் துக்கத்தைக் கரைத்துக் கொள்வாள்.
மீனாவின் வாழ்க்கையில் ஷோபனாவின் சேப்டர் அத்துடன் முடிந்து போயிருந்தது. அவளுடைய நினைவுகள் மட்டும் மனதின் ஒரு ஓரத்தில் நிரந்தரமாகத் தங்கி விட்டிருந்தன. அது என்றும் அழியவும் அழியாது.
அப்படி இருக்க, இப்போது, இத்தனை வருடங்கள் கழித்து, திடீரென அவளுடைய புகைப்படத்தை சபரியின் டைரியில் இருந்ததைக் கண்டதும் அவளுடைய அந்த பழைய நினைவுகள் எல்லாம் மனதில் வந்து அலைமோதியது.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக இருந்தது.
‘ஷோபனாவுக்கும் சபரிக்கும் என்ன சம்பந்தம்? அவளோட ஃபோட்டோ இவரோட பெர்சனல் டைரியில இருக்குன்னா, ஷோபனாவுக்கு இவர் யாரு?’ மண்டையைக் குடைந்து யோசித்தாள்.
‘ஒ.. ஒருவேளை இவர் தான் ஷோபனாவோட முறைப்பையனோ?’ அதிர்ந்தாள் மீனா.
‘சரி, அப்படியே இருந்தாலும், இவங்களுக்கு நடுவில நான் எப்படி வந்தேன்? எங்கே வந்தேன்? என் மேலே இவ்வளவு வன்மம் இருக்கிறதுக்கு நான் என்ன செஞ்சேன் இதில?
இதை எப்படி தெரிஞ்சிக்கிறது நான்? இவர் கிட்ட இருந்து எல்லாம் எந்த உண்மையும் வாங்க முடியாது! அந்த டைரியில எழுதி இருக்கிறத முழுசா படிக்கணும். அது மட்டும் தான் ஒரே வழி! நாளைக்கே அது செய்யணும்’
இப்படியே வெகு நேரம் யோசித்தவாறு புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்து விட்டு, பாதி இரவுக்கு மேல் கண் அயர்ந்தாள்.
ஆனால் அவள் நினைத்தது போல், மறுநாள் அந்த டைரியை எடுத்து அவளால் படிக்க இயலவில்லை.
ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் வரவேற்பு விசேஷத்திற்காக, யாராவது ஒருவர் வீட்டிற்கு வரவும் போகவுமாக இருந்தனர்.
சமையலுக்கான ஆர்டர் எடுத்துக் கொண்டு கணக்கு சொல்வதற்கு, பூ ஆர்டர் வாங்க, மேடை அலங்காரம் செய்பவர் என்று வந்த வண்ணம் இருந்ததால், மீனாவால் அவள் பாட்டுக்கு எனக்கென்ன என்று அறைக்குச் செல்ல முடியவில்லை.
அடுத்த இரண்டு நாட்களில் வெள்ளிக்கிழமை வந்து விட்டது. ஊரிலிருந்து கல்பனா, தன் கணவன் பிரகாஷ் மற்றும் நான்கு வயது மகன் செல்வகணேஷுடன் வந்து இறங்கி விட்டாள்.
அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் வேகமாகச் சென்று செல்வாவைத் தன்னருகே இழுத்துக் கொண்டு வந்து பக்கத்தில் அமர வைத்துக் கொண்டான் சபரி.
“வாடா செல்வா, வா வா! எப்படி இருக்கே?” கேட்டுக் கொண்டே அவனுடைய கன்னத்தில் முத்தம் வைத்தான்.
“நல்லா இருக்கேன் மாமா” மழலை மாறாத குரலில் பதில் கூறினான் செல்வா. அவனும் தன் மாமாவின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“ஸ்கூலுக்குப் போறியா கண்ணா?”
“ம்ம்.. போறேன் மாமா”
“பிடிச்சிருக்கா உனக்கு?”
“ஓ! ரொம்பப் பிடிச்சிருக்கு”
“என்ன சொல்லிக் குடுக்குறாங்க உனக்கு?”
இப்படியாக தன் அக்கா பையனுடன் மிக உற்சாகமாகப் பேசிக் கொண்டு இருந்தான் சபரி.
வீடே கலகலப்பாக மாறி விட்டது. மீனாவின் கண்களுக்கு சபரி புது மனிதனாகத் தெரிந்தான். தன் குடும்பத்தின் மீது அவனுக்கிருந்த பாசமும் அன்பும் இன்னமுமே வெளிப்படையாகக் கண்டாள் அவள்.
தன் அப்பா அம்மாவிடம் அன்புடன் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு தம்பியிடம் வந்தாள் கல்பனா.
“வாக்கா! வாங்க மாமா!” சிரிப்புடன் வரவேற்றான் சபரி.
“என்ன சபரி, நல்லா இருக்கியா?” கேட்டான் பிரகாஷ்.
“அதுசரி, அவன் டபுள் சந்தோஷமால்ல இருப்பான்? இப்ப தான் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. புது மாப்பிள்ள, புடிச்ச பொண்டாட்டி, இவனுக்கென்ன குறைச்சல்?”
சபரியை முந்திக் கொண்டு நையாண்டித்தனமான பதில் ஒன்று வந்தது கல்பனாவிடம் இருந்து.
“ஏங்க்கா, வந்தவுடனேயே ஆரம்பிச்சிட்டியா?”
“ஆமா பின்னே! நாங்க இங்கே இருக்கப் போறது மொத்தமே அஞ்சே நாள் தான். அதுக்குள்ள உன்னை எவ்வளவு கலாய்க்கணுமோ அவ்வளவு கலாய்க்க வேணாம்? ம்ம்..” கல்பனா பேசியது பத்தாது என்று பிரகாஷும் சேர்ந்து கொண்டான்.
“ஏன் சபரி, இப்படிப் பண்ணிட்டியே! உனக்கே நியாயமா தோணுதா இது?” கேட்டான் பிரகாஷ்.
“என்ன மாமா.. நான் என்ன பண்ணேன்?” குழப்பத்துடன் கேட்டான் சபரி.
“ஆமா பச்சப் புள்ள பாரு! செய்றதையும் செஞ்சிட்டு பேசுறான் பாரு பேச்சு!” அருகில் சென்று தம்பியின் முதுகில் செல்லமாக அடித்தாள் கல்பனா.
இப்போது சபரிக்குப் புரிந்து விட்டது, தன் அக்காவும் மாமாவும் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று.
“மாமா.. அதுவந்து.. சாரி மாமா! என்னைத் தப்பா நினைக்காதீங்க. என்னோட சிச்சுவேஷன் அப்படி!” நெளிந்து கொண்டே கூறினான்.
“சரிடா சரி விடு! எப்படியோ நீ நல்லா இருந்தா சரி தான். உனக்குப் பிடிச்ச பொண்ணுன்னு வேற சொன்னியாம் இல்ல. பழச எல்லாம் மறந்துட்டு இனிமேலாவது சந்தோஷமா இருக்கணும் நீ. சரியா?”
கல்பனாவும் சபரியும் சட்டென்று திடுக்கிட்டுப் பார்த்தனர் பிரகாஷை. அதன் பிறகு தான், தான் அவசரப்பட்டு பேசி விட்டோம் என்பதைப் புரிந்து கொண்டான் பிரகாஷ்.
நாக்கைக் கடித்துக் கொண்டான். மூவரும் சேர்ந்து அவசரமாகத் திரும்பிப் பார்த்தனர் மீனாவை. அவளோ எதையும் கவனியாதது போல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் மனம் முழுவதும் யோசனையில் ஆழ்ந்து இருந்தது.
‘ஓ! அப்படின்னா, இவரோட வாழ்க்கையில வேற என்னமோ நடந்துருக்கு. நான் நினைச்சது சரியா இருக்கலாம். ஷோபனா சொன்ன முறைப்பையன் இவரா தான் இருக்கணும். அப்படின்னா அவளோட அப்பாவும் அம்மாவும் இவங்களுக்குச் சொந்தக்காரங்களா இருப்பாங்களே! ரிசப்ஷனுக்கு வருவாங்களே!’
சட்டென்று அவளுடைய மனம் உற்சாகம் அடைந்தது.
‘எஸ்.. நான் நினைச்சது சரின்னா, அவங்களும் ரிசப்ஷனுக்கு வருவாங்க. அப்படி வந்தாங்கன்னா, நான் அவங்க கிட்ட பேசிப் பார்க்கலாமே! அவங்களும் இப்ப அதிலே இருந்து கொஞ்சம் வெளியே வந்துருப்பாங்க. ஏதாவது தகவல் சொல்லுவாங்க’ நம்பிக்கை பிறந்தது அவளுக்கு.
‘ஆனா அவங்க முகம் எனக்கு மறந்து போச்சே! எப்படி இருப்பாங்க அவங்க?’ யோசிக்க ஆரம்பித்தாள்.
‘சரி, ஒருவேளை பாத்தா ஞாபகம் வருமோ என்னவோ பாக்கலாம்’
யோசித்து முடிப்பதற்குள் கல்பனாவின் குரல் அவளருகே கேட்டது.
“ஏண்டா, கல்யாணத்த சொல்லாம பண்ணே சரி.. உன் சூழ்நிலை அப்படி! ஒத்துக்குறோம். ஆனா நாங்க வந்து எவ்வளவு நேரமாகுது? உன் பொண்டாட்டிய அறிமுகப் படுத்தியாச்சும் வைக்கிறியாடா?”
“அதானே!” மனைவியின் பின்னாலேயே கூறினான் பிரகாஷ்.
“என்னக்கா இது! இங்கே தானே நிக்குறா அவ! தனியா என்ன அறிமுகம் வேண்டியிருக்கு? என்ன மாமா இது? நீங்களும் அக்காவோட சேந்துக்குறீங்க?”
மீனா, என்ன செய்வதென்று தெரியாமல் சங்கோஜம் மேலோங்க, திருதிருவென முழித்தாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சபரி தான் அத்தை பையனா? இல்லை வேற என்னவாக இருக்கும்?
Thank you sis 😊
மீனா என்ன தான் பண்ணியிருப்பா .. என்ன நடந்திருக்கும் ..
Thank you sis 😊
பழகிய நட்பை இழப்பது கொடிய வலி தான். இங்கோ அவள் ஏன் இறந்தால், அவளுக்கு என்னவாயிற்று என்று எதுவும் தெரியாத நிலையில் அந்த வலியை தனியே கடந்து வந்துள்ளால் மீனா.
டைரி கைகளில் இருந்தும் படிக்க சந்தர்ப்பம் அமையவில்லை மீனாவிற்கு.
சோபனாவிற்கும் சபரிக்குமான சம்மந்தம் என்னவாக இருக்கும்?
சபரியின் மாமா சொல்லும் பழைய விஷயம் என்னவாக இருக்கும்?
வெகு சுவாரஸ்யமாக செல்கின்றது.
உங்கள் ஆர்வமிக்க விமர்சனங்கள் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. மிகவும் நன்றி சிஸ் 😊