
இதுவரை இந்திர வர்மனின் அழகிலும் ஆளுமையிளும் உருகி அவன் இழுப்பிற்கு வளைந்து கொடுக்கும் பெண்களையே கடந்து வந்தவனுக்கு முதல்முறை அவனை பொருட்டாகவே மதிக்காத இழையின் மீது கட்டுகடங்காத ஆத்திரம்… அதோடு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் பெண்களை ஏமாற்றி வந்தவனுக்கு இப்போது இவள் மூலமாக மாட்டிக்கொண்டதில் கட்டுக்கடங்காத ஆத்திரம்.
வெளிநாட்டில் காதலியுடன் செட்டிலாகிவிட்ட இந்திரவர்மனுக்கு குழந்தையும் உண்டு.. ஆனால் சூதாட்டம் இன்னபிற ஆடம்பர செலவுகள் என்று அவன் வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்கி இருப்பவனுக்கு அதை அடைப்பதற்கான எளிய வழியாக தோன்றியதுதான் திருமணம்.
பின்னே வெளிநாட்டு மாப்பிள்ளை கைநிறைய சம்பளம் கண்ணுக்கு நிறைவாக இருக்கிறான் என்ற தகுதி போதாதா இன்னும் இரண்டு மாதத்தில் கிளம்பவேண்டும் என்று சொல்லி கேரளாவின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு பெண்களை திருமணம் செய்தவன் மற்ற மாநிலங்களில் வேறு சில பெண்களுடன் நிச்சயம்வரை சென்று இழையை போலவே திருமணத்திற்கு முன் அவர்களை அணுகி இருக்கிறான்.
அப்பெண்களும் நிச்சயமாக போகிறேது என்பதால் அவன் அழகிலும் பேச்சிலும் தன்னை இழந்து பணத்தையும் இழந்திருக்கின்றனர்.
முதலில் அவன் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாத பெற்றோரை கடன்சுமை கழுத்தை நெறிக்கிறது ஒப்புக்கொள்ளவில்லை என்றால் உயிரை மாய்த்துகொள்வேன் என்றதும் அவர்களும் அவன் திட்டத்தில் இணைந்தனர்.
அவன் தாய் மலையாளி என்பது அவன் திட்டத்தை மேலும் சுலபமாக்கிட அவர்களை கேரளாவுக்கு அனுப்பிவிட்டவன் அங்கு வாடகை வீடெடுத்து தங்கசெய்து அக்கம் பக்கத்தினரோடு நன்றாக பழக சொன்னவன் அவர்களது உண்மை பெயரை எங்கும் உபயோக படுத்தவேண்டாம் என்றிருந்தான்.
மூன்று வருடங்களுக்கு முன் இந்தியா வந்தவன் ஒருமாதம் மனைவியோடு ஊர்சுற்றியபின் சொத்து பிரச்சனையை தீர்த்துவிட்டு வருவதாககூறி இங்கேயே தங்கிவிட அவன் மனைவியும் குழந்தையும் மட்டும் நாடு திரும்பினர்.
அப்போது வசீகரனோடு ட்ரெக்கிங் செய்ய வந்தவன் செய்த முதல் தவறே தன் உண்மையான பெயரையும் தகவல்களையும் கொடுத்ததுதான்.. அதுவே வசீகரனுக்கு அவனை அடையாளம் காண உதவியது.
பலரோடு பயணித்திருந்தாலும் சிலர் எப்போதுமே அவர்களின் நினைவுகளை விட்டுசெல்வார்களே அதுபோல தான் இந்திரவர்மன் என்ற வித்யாசமான பெயரும் அவன் குழந்தையின் குறும்புத்தனமும் வசீகரனின் மனதில் ஆழ தடம் பதித்திருந்தது. .
இந்திரவர்மனுக்கு இழையை திருமணம் செய்துவாழும் எண்ணமெல்லாம் கிடையாது.. அவனது பணத்தேவையை பூர்த்தி செய்ய அவனுக்கு ஒரு பெண் தேவை. திருமணம் என்ற பெயரில் வரதட்சணையும், காரும் பெற்றுகொள்பவன் அடுத்த இரண்டு மாதங்களிலேயே ஏதேனும் ஒரு கதையை அளந்துவிட்டு பறந்துவிடுவான்.
கணவன் வருவான் என்று காத்திருப்பவள் அவனுக்கு அழைத்தால் அந்த எண் உபயோகத்தில் இருக்காது.. அதுமட்டுமா அவன் வேலை செய்வதாக கூறிய நாடே உண்மையானதாக இருந்திருக்காது..
அவன் தோற்றம், பேச்சு, நிறம், காட்டக்கூடிய புகைப்படங்கள், என்னை பற்றி தெரிந்துகொள்ள என் முதலாளியையே கேட்டுகொள்ளுங்கள் என்று தன் நண்பனின் எண்ணை கொடுத்து முதலாளியாக பேசசெய்வதில் யாருக்குமே மேலும் கேள்வி கேட்க தோன்றாது. பின்னே இன்றைய தொழில்நுட்ப உலகில் எதுவும் சாத்தியமாக இருக்கையில் அவனுக்கும் தடையமே இல்லாமல் ஏமாற்றுவதும் எளிதாக இருந்தது.
பெண் பார்க்க செல்லும் இடத்தில் தன்னை பற்றிய எந்த உண்மையான தகவல்களையும் கொடுக்க மாட்டான் இதற்காகவே வெவ்வேறு பெயர்களில் போலியாக பல அக்கவுன்ட்களை கைவசம் வைத்திருப்பவனை பற்றி சோஷியல் மீடியாவில் தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாது.
அவன் குறி வைப்பதே உடன்பிறந்தோர் யாருமில்லாத ஒற்றை பெண்ணைதான்..!! அப்போதுதானே மொத்த சொத்தும் அவளை சேரும் வரதட்சனையும் கணிசமாக வரும் அதோடு நாளை எது நடந்தாலும் இவ்வளவு ஏன் அவளை கொன்று போட்டாலும் கேட்பதற்கு ஆள் இருக்கமாட்டார்கள்.
அப்படி தேர்தெடுத்து திருமணம் செய்து வரதட்சணை, கார் என்று பெற்றுகொள்பவன் அடுத்த இருமாதங்களிலேயே தொழிலில் நஷ்டம் என்று அவள் நம்பும்படியாக கதை புனைந்து என்றிருந்தாலும் உனக்கு சேர வேண்டியதுதானே நம் வளமான எதிர்காலத்திற்காக செய்யசொல்லி அதையும் விற்றிருக்கிறான்.
பெரும்பாலும் குறைந்த உறவுகளை கொண்டு கோவிலில் திருமணத்தை நடத்திக்கொள்வான். அடுத்தமுறை வரும்போது அழைத்து செல்கிறேன் என்பவன் வரமாட்டான் அவனை பற்றி தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது… பின்னே திருமணம் முடிந்தபிறகு அனைத்து அக்கவுண்ட்டையும் அழித்துவிடுவான்.
வசீகரன் இந்தர் தன்னிடம் அளித்த அக்கவுன்ட்டையும் இப்போது இழையின் பெற்றோரிடம் அளித்த அக்கவுன்ட்டையும் சரிபார்க்க இரண்டுமே அவனுடையதுதான் என்பதை அறிந்துகொண்டான். இதுவரை மாட்டாமல் இருந்தததில் இம்முறை சற்று அலட்சியமாக இருந்ததால் சொந்த பெயரையே கொடுத்திருந்தவன் இவர்களிடம் காட்டுவதற்காக வேறொரு அக்கவுன்ட் ஆரம்பித்து இருந்தான்.
உடனே இந்தரின் மனைவியை தொடர்புகொண்ட வசீ இழையை பெண் பார்க்க வந்த விஷயத்தை கூற முதலில் நம்பமுடியாது அதிர்ந்தவர் பின் வசீயின் ஏற்பாட்டில் அங்கு அவளுக்கு உதவ வந்த அவன் நண்பனும் அவருடைய காவல்துறை நண்பரின் உதவியுடன் இந்தரின் நண்பனை விசாரித்து தெரிந்துகொண்டாள்.
முதலில் மனைவி இருக்க மற்றொரு திருமணம் என்றுதான் வசீ நினைத்திருந்தான் ஆனால் இத்திருப்பத்தை அவனே எதிர்பார்க்கவில்லை. நொடியும் தாமதிக்காது உடனே பெற்றோரிடம் நிலவரத்தை தெரிவித்து அனைவரையும் சென்னை அழைத்து வந்துவிட்டான்.
நடந்ததை அறிந்துகொண்ட பார்கவி இழையை அழைக்கிறேன் என்றதும் “கால் பண்ண வேண்டாம் அத்தை நானே இழையை கூட்டிட்டு வரேன்..” என்று அவள் கிளினிக்கிற்கு வர அப்போதுதான் இந்திரவர்மன் அவளிடம் முறைகேடாக நடக்க தொடங்கியிருந்தான்.
இழையை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்று வசீகரன் தகவலளித்ததில் நிலைகொள்ளாமல் தவித்திருந்த பார்கவி சர்வஜித், ப்ரணவ் மற்றும் வசீகரனுடன் உள்ளே நுழைந்த மகளின் கோலம் கண்டு இன்னுமே பதறிபோனார்..
“என்னதான் உடையை மாற்றி முகத்தைத் திருத்தியிருந்தாலும், அன்னையின் கண்களுக்கு மகளின் வித்யாசம் தெரியாமல் போகுமா என்ன?”
வீடு திரும்பும் வழியிலேயே வசீகரன் எச்சரித்திருந்த போதும், பார்கவியை கண்டதுமே “அம்மா…” என்ற கதறலோடு இழை அவரை அணைத்துக்கொள்ள, மற்றவர்களுக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது.
“பிங்கி, என்னடாச்சு? ஏன் அழற?” என்று அபியும் நாயகியும் அவளிடம் செல்ல,
“தம்பு காய்ச்சல் இருந்தது, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறோம்னு சொன்ன அப்புறம் ஏன் பிங்கி?” என்று திரு மகனை கேள்வியாக பார்த்தார்.
“பிங்கி எதுக்கு அழற?” என்ற கைலாசமும் புரியாமல் வசீயைத்தான் பார்த்தார்.
“இவளை…” என்று இழையை முறைத்துக்கொண்டு நின்றிருந்தான் வசீகரன்.
“ப்பா, யாரும் டென்ஷனாக வேண்டாம்,” என்று சர்வஜித் சொல்ல,
“என்ன பேசுற ஜித்து?” என்ற அபியும் அவள் அழுகையின் காரணம் புரியாமல் நின்றிருந்தார்.
“அத்தை… ஒண்ணுமில்ல, நீங்க பதறாதீங்க. அவகிட்ட இந்திரன் பற்றிய விஷயத்தை சொல்லவும் ரொம்ப ஷாக்காகிட்டா. வேற ஒண்ணுமில்ல.”
“அபிம்மா, டாக்டர் இழையை நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கார். இந்தாங்க இந்த டேப்லெட்ஸ். கொடுத்து படுக்க வைங்க,” என அபிராமி இழையோடு அவளறையினுள் நுழைந்தார்.
“தம்பு, என் பெண்ணுக்கு என்னாச்சு? உண்மையை சொல்லு. அவனோட லட்சணம் தெரிஞ்சதுக்காக என் பெண் அழமாட்டா. வேற ஏதோ காரணமிருக்கு. தயவுசெய்து சொல்லு,” என்றதும், பொறுமையாக நடந்ததை வசீகரன் எடுத்துச் சொல்லவும்,
“நானே என் பொண்ணோட வாழ்க்கைக்கு எமனாகிட்டேனே…” என்று அழுகையினூடே கீழே அமர்ந்த பார்கவியின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடியது.
“என்ன பேசுற கவி?” என்று அதட்டினார் நாயகி.
“இல்ல, உனக்கு தெரியாது அம்மூ. அவசரப்பட்டு நானே என் பெண்ணை படுகுழியில தள்ளப் பார்த்திருக்கேன். நான் என்ன அம்மா? என் பொண்ணு என்னை ரொம்ப நம்பினா. ஆனா… ஆனா…” என்றவரின் அழுகை அதிகரித்தது.
“பார்கவி, என்னம்மா இது? இப்பவும் ஒண்ணுமாகிடலை. நம்ம பிங்கி சேஃப்ஃபா இருக்கா,” என்று திரு சமாதானப்படுத்த முயல,
“இல்லண்ணா, உங்களுக்கு தெரியாது. எப்பவும் என் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத என் பெண், முதல்முறையா ‘இவனை வேண்டாம், வேற பாருங்க’ன்னு சொன்னா. ஆனா நான்தான் என் சின்ன மாமனார் பேசினதை உண்மையாக்கப் போறியான்னு கேட்டு அவளை ரொம்ப பேசிட்டேன். இவனுக்கே ஒத்துக்கோன்னு கிட்டத்தட்ட அவளை கட்டாயப்படுத்தினேன்னு சொல்லலாம்,” என்று கூறவும், வசீகரனின் முகத்தில் நிம்மதி பிறந்தது. அவனையுமறியாமல் இதழ்கள் புன்னகையில் மிளிர்ந்தது.
“என்ன கவி இது? பிள்ளைகளோடு கல்யாண விஷயத்துல உன்னோட விருப்பத்தை திணிக்கிறது தப்பில்லையா? இதை செய்தா நல்லா இருக்கும்னு சொல்ல வேண்டியது எப்படி நம்ம கடமையோ, அதேபோல அவங்களுக்கு சுத்தமா விருப்பமே இல்லாத ஒன்றை நமக்காக செய்யச் சொல்றது எந்த விதத்துல நியாயம்? இன்னைக்கு ஊருக்காக, உறவுக்காக நாம அவசரப்பட்டு கல்யாணம் செய்துட்டா, நாளைக்கு அதனால் வரக்கூடிய கஷ்டநஷ்டத்தை அனுபவிக்கப் போறது யாரு?” என்று கேட்க, பார்கவியிடம் கட்டுப்படுத்த முடியாத கண்ணீர் மட்டுமே.
“என்ன வேற என்ன செய்யச் சொல்ற அபி? என்னதான் கண்டிப்பா வளர்த்திருந்தாலும், எப்பவும் என் பெண்ணோட விருப்பத்தை மதிக்கிறவ நான். அது உனக்கே தெரியும். ஆனா என் சின்னமாமனார் என்னைக் கேட்க, மாமனார் மாமியார்னு யாருமில்லாததால என் பெண்ணை முப்பது வயசானாலும் கட்டிக் கொடுக்காம முதிர்கன்னியா வச்சிருக்கப் போறேன்னு சொன்னப்போ நான் என்ன செய்ய?” என்று அழுகையினூடே பேசிட,
“என்ன சொல்ற கவி?” என்ற நாயகிக்கு, பெரிதாக அவர்களுடன் உறவாட விரும்பாத கைலாசத்தின் சித்தப்பா இன்று அதிகாரம் செய்வதை நம்ப முடியவில்லை.
“நடந்ததை சொல்றேன். எப்படி பூக்கட்டறப்போ இடையில அறுந்துபோச்சுன்னா முடிச்சு போட்டு அது தெரியாம இருக்க மேல நாலு பூவை வச்சு கட்டிட்டு போவோமோ, அதுபோல தான் உறவு விட்டுப் போயிடக்கூடாதுன்னு எல்லா பூசலையும் மொழுகி, விரிசல் அதிகமாகாம சேர்த்து பிடிச்சேன். கண்டிப்பா முடிச்சு போட்டு கட்டி முடிச்ச பிறகு நம்மாலேயே எங்க விரிசல் வந்ததுன்னு கண்டுபிடிக்க முடியாதுன்னு நம்பிக்கையில.”
“அப்படி என்ன அவசியம் கவி? உனக்காக யாருமே நிற்கலையே…”
“அதுக்காக அப்படியே விட முடியாதே அம்மூ. நாளை பின்ன என் பொண்ணுக்கு நல்லது கெட்டதுல ஆதரவு வேணுமே. அதான் சில முடிச்சுகள் தெரியாத வகையில் சில நிமிடங்களை கடந்து போகப் பழகிட்டேன்.”
“ஒரு பெண்ணுக்குக் கூட பிறந்தவங்க யாருமில்லாம அவ படக்கூடிய கஷ்டங்களை என்னைவிட வேற யாரும் அனுபவிச்சிருக்க முடியாது. என்னதான் இவர் என்னை ராணியா தாங்கினாலும், சில நேரம் சொல்லி அழக்கூட நமக்குன்னு ஒரு ஆள் இருக்காது அம்மூ. எனக்கு ஆதரவா அரவணைக்க அண்ணன் தம்பி கிடையாது. கஷ்டத்துல மடி சாய அம்மாவும் கிடையாது. அப்பா முகமே மறந்துபோச்சு. எங்க அம்மா இறந்த பிறகு எனக்கு போக்கிடம் கூட இல்ல அபி. என் நிலைமை என் பெண்ணுக்கு வந்துடக் கூடாதுன்னுதான் நான் ரொம்பவே கவனமா இருந்தேன்,” என்று சிறு குழந்தை போல அவர் தேம்பி அழ,
“அக்கா, வேண்டாம் அழாதீங்க,” என்ற அபியின் சமாதானமும் அவரிடம் எடுபடவில்லை.
“நீயே சொல்லு அபி, நானென்ன அம்மா வீட்டுக்கு பொழுது போக்கவா வந்தேன். எந்த மாதிரி சூழல்ல வந்தேன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருக்கப்போ என்னாலதான் பின்னாடி வந்த மருமகள்கள் கெட்டு போயிட்டாங்க. கடைசி காலத்துல யாரும் என் மாமியாரை பார்க்காம போனதுக்கு காரணம் நான்தான்..”
“ஆஷ்மியை சாக்கு வச்சு வீட்டுக்கு பெரியவங்க இருந்திருந்தா, மூத்தவ இருக்க இளையவளுக்கு கல்யாணம் பண்ண விட்டிருப்பாங்களான்னு கேட்டவர், என்னை பதிலே சொல்ல விடாம பேசிட்டே போனார். ஒருகட்டத்துல என்ன சொன்னார் தெரியுமா?” என்று குறையாத வலியோடு வசீகரனின் மொத்த குடும்பத்தையும் பார்த்த பார்கவியின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
“அத்தை, அதிக ஸ்ட்ரெஸ் எடுக்காதீங்க. இழைக்கு ஒண்ணுமில்ல. ப்ளீஸ் காம் டவுன்,” என்று வசீகரன் அவர் முன்னே அமர்ந்தான்.
“இல்ல தம்பு. அவர் என்னை பார்த்து, ‘எல்லாரும் உன்னை மாதிரி பணப்பேயாவா இருப்பாங்க. பெண்ணைவிட எனக்கு பணம் முக்கியமா போயிடுச்சு. காலா காலத்துல நடக்க வேண்டியது நடந்தாதான் எல்லாருக்கும் மதிப்பு. உன் பொண்ணுக்காக அடுத்தவங்க காத்திருக்க முடியுமா’ன்னு பேசினார்.”
அவர் பேச பொறுக்க முடியாம இவரும் பேச, அன்னைக்கு பெரிய பிரச்சனையே ஆகிடுச்சு.
கூட வந்த இவரோட தம்பிங்க தான் சமாதானம் செய்தாங்க. அப்பவும் விடாம இவர்கிட்ட, “சம்பாதிக்கப் போறேன்னு வெளிநாட்டுக்கு போய் உன் பொண்டாட்டியை நீ தண்ணி தெளிச்சு விட்டதுதான் டா என் பேத்தியை இந்த நிலையில நிறுத்தியிருக்கு. குடும்பம்னா ஒரு கட்டுக்கோப்பு இருக்கணும். இங்க அது இருக்கா?”ன்னு கேட்டு ரொம்ப பேசிட்டார்.
“கிளினிக்கில் இருந்த பிங்கி, அவர் கடைசியா பேசிட்டு இருக்கப்போ தான் வந்தா. அவகிட்டயும் எங்களை மோசமா பேசினவர், ‘இவங்களை நம்பி இருக்காத. பிடிச்சவன் யாராவது இருந்தா கூட்டிட்டு போய் உன் வாழ்க்கையை பாரு’ன்னு சொன்னார். அப்போ எனக்கு மொத்தமா விட்டுப் போச்சு அம்மூ. நானென்ன அவ்வளவு மோசமான அம்மாவா?” என்றார் குறையாத கதறலோடு.
“விடு கவி. நாளைக்கு இழைக்காக நீ சொல்ற உன் சின்ன மாமனார் வந்து முன்ன நிக்க மாட்டார். எல்லாமே நாமதான் பார்க்கணும். அப்புறம் ஏன் அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்த?”
“எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. அவளுக்குன்னு அண்ணன் தங்கச்சி யாருமே இல்லை. நாளைக்கு எங்க காலத்துக்கு பின்ன ஏதோ ஒண்ணுன்னா அவளுக்கு போக்கிடம் கூட கிடையாது அபி. சொல்லி அழவும் யாருமே இல்லாத நிலையில, என் பெண்ணை கண்ணுக்குள்ள பார்த்துக்க கூடிய ஒருத்தனுக்கு கட்டி கொடுக்கணும். பையன் மட்டும் இல்ல, அவனோட குடும்பமும் அன்பா அனுசரணையா இருக்கணும்னு எதிர்பார்த்து சல்லடை போடாத குறையா தேடினது தப்பா, நீங்களே சொல்லுங்க?” என்று கேட்க, யாருக்குமே பதிலளிக்க முடியவில்லை.
பார்கவியின் முன் அமர்ந்திருந்த வசீகரன் மெல்ல அவர் கையைப் பிடிக்க, அதில் இன்னும் நடுக்கம் குறையாதிருந்தது. பின்னே மகள் முழுதாக சேர்ந்திருந்தாலும், அதற்கு காரணமே அவரல்லவா? உரிமையாக கயவன் நுழைவதற்கான வழியை ஏற்படுத்தி கொடுத்த தன் மீதே கோபம் அதிகரித்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விடுங்க கவி .. இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் ..