
காலை கனவு 44
இரவு வானில் நட்சத்திரங்களை கொட்டி குவித்த இடமாக அவ்விடம் ஜொலித்தது.
“ஆர்வி… ஆர்விக்” என்றழைத்த அன்விதா, அவன் திரும்பியதும், அவன் முன் ஒரு கால் குத்திட்டு மண்டியிட்டு, ஊதா வர்ண டாலியா பூங்கொத்தை ஒரு கையால் நீட்டி, மற்றொரு கை விரலை இதயம் போல் காண்பித்தாள்.
ஆர்விக் என்னவென்று யூகிக்கும் முன்னரே,
“லவ் யூ ஆர்வி… ஆர்விக்” என்றிருந்தாள்.
மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்ற ஆர்விக்,
“என்னை ப்ரொபோஸ் பண்ண என்னையவே வேலை செய்ய வைச்சிருக்க” என்று தாடையை நீவினான்.
“வில் யூ மேரி மீ?” காதல் ததும்பும் கண்களின் வசிகரிப்போடு கேட்டவளின் கரம் நீட்டியிருந்த மலர்க்கொத்தை ஒரு கையால் வாங்கியவன், அவளின் மற்றொரு கையின் விரல் காண்பித்த இதயத்தோடு தனது விரல் இதயத்தை இணைத்து தன் பக்கம் இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்.
எப்போதும் வரும் கனவு தான். ஆனால் இன்று பதறி எழாமல், உறக்கத்திலே ரசித்து, சந்தோஷித்து, காதலாய் சிறு அணைப்பில் சம்மதித்து இதழ் ஒளிர்ந்த புன்னகை சுமந்த வெட்க முகத்தோடு எழுந்தமர்ந்தான்.
இதுநாள் வரை வதை கொடுத்த கனவு இன்று வண்ணங்களை வாரி இறைத்தது.
படுக்கையில் அமர்ந்திருந்தவன் பக்கவாட்டிலிருந்த கண்ணாடியில் விடி விளக்கின் வெளிச்சத்தில் தன் முகம் பார்த்தான்.
அவனிடத்தில் அவனே கண்டிராத பொலிவு…
வலது கையால் இடது கன்னத்தை தேய்த்தவாறு நாடி நீவியவன்…
“என்ன ஆர்வி ஜொலிக்கிற?” என்று தனது நிழற்பிம்பத்திடம் கேட்டவனாக கால்களில் சுருண்டிருந்த போர்வையை விலக்கி கண்ணாடி முன் எழுந்து நின்றான்.
இடையில் கைகள்குற்றி ஒரு பக்கமாக சாய்ந்ததோ எனும் விதமாக தலை சரித்து வலது புருவம் தாழ்த்தி, இடது புருவத்தை உயர்த்தியவனாக தன்னை முழுதாய் பார்த்தவன்…
“இப்படி பார்க்க ரொம்ப நல்லாயிருக்கடா” என கண்ணாடியில் தெரியும் தன்னுடைய முகத்தை ஒற்றை கையால் குவித்து இழுத்தவனாக துள்ளலோடு அறையைவிட்டு வெளியில் வந்தான்.
வீடே நல்ல இருளில் இருக்க, கையோடு கொண்டு வந்த அலைபேசியில் நேரத்தைப் பார்த்தான்.
மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.
அனிதாவின் அறையை எட்டிப் பார்த்தான். அன்விதா விடுதிக்கு சென்ற பின்னர் அவரிடம் இன்னும் தனித்து அவன் பேசவில்லை. பேச வேண்டும் போலிருக்க உள்ளே சென்று அவரின் அருகில் மெத்தையில் அமர்ந்தான்.
“அனி” என்று கன்னம் இழுத்து, காதில் கிசுகிசுப்பாய் அழைத்தான்.
“பாதி ராத்திரிக்கே வருவன்னு நினைச்சேன்” என்று கண்கள் திறந்தார்.
அனிதா எழுந்து அமர்ந்திட, அவரின் மடியில் தலை வைத்துக்கொண்டான்.
“தூங்கலையா?”
“மனசெல்லாம் நிறைஞ்ச மாதிரி இருக்கு. தூக்கமே இல்லை. முழிப்பு வந்திட்டு. சப்ஜெக்ட் நோட்ஸ் எடுத்தேன் நேரமிருக்கேன்னு… இப்போதான் படுத்தேன்” என்றவர், ஆதுரமாய் ஆர்விக்கின் முகம் வருடினார்.
அவரின் இரு கன்னத்தையும் பிடித்து ஆட்டியவன்,
“எனக்கும் அப்படித்தான் இருக்கு அனி. எனக்கே நான் ரொம்ப அழகா தெரியுறேன்” என்றான்.
“எல்லாம் உன் மனசுக்குள்ள இருந்த காதல் வெளிவரதோடு தோற்றம்” என்ற அனிதா, “உன்னை, உன்னோட இந்த முகத்தை கடைசியாய் அன்னைக்குப் பார்த்தது” என்றார்.
“அனி” என்று அவரின் இடையில் கையிட்டு கட்டிக்கொண்டு, அவரின் வயிற்றில் முகம் புதைத்தவன்,
“உன்னை தான் அதிகமா கவலைப்பட வச்சிட்டேன்ல…” என்றதோடு, “சாரி சொல்லமாட்டேன். இன்னும் நிறைய கவலைப்பட வைப்பேன்” என்றான்.
“நீ எப்பவும் என்னோட சந்தோஷம் மட்டும்தான் ஆர்வி” என்று அவனின் சிகை கோதியவர்…
“என்ன இந்த நேரத்தில் எழுந்திருக்க… கனவு வந்துச்சா?” எனக் கேட்டார்.
“ஆமா… ரொம்ப நாள் ஆச்சு. செல்ஃப் கண்ட்ரோல் பண்ணியிருந்தேன். நைட்ல புக் ரீடிங்ல மைண்ட் டைவர்ட் பண்ண பழகியிருந்தேன். நேத்து இதுக்கெல்லாம் அவசியமில்லைன்னு ஆகிப்போச்சே… சோ, மனசு முழுக்க அவள் தான்… கனவுலையும் வந்துட்டாள்” என்று கண்கள் சிமிட்டினான்.
தனக்காக மகன் கொண்ட மெனக்கெடல் அதென புரிந்த அனிதாவுக்கு, அன்விதாவின் மாற்றம், ஆர்விக் மீது அவள் கொண்ட காதலெல்லாம் மகிழ்வு என்பதைத் தாண்டி பெருத்த ஆசுவாசத்தையே கொடுத்தது.
ஆர்விக்கின் வலி அவனது மகிழ்வு என்பதை கடந்து நிம்மதி எனும் வரையறைக்குள் சென்றுவிட்டதை அனிதா உணர்ந்தே இருந்தார்.
ஆதலால் மகனின் காதல் மனம் சேர்ந்ததில்… ஆத்மார்த்த நிறைவு.
“எனக்கானவன்னு உரிமையா அவளை இங்க வைச்சு நினைக்கவே ஒரு மாதிரி குளிரடிக்குது அனி மனசு முழுக்க” என இதயத்தில் கை வைத்துக் கூறினான்.
“இருக்கும்… இருக்கும்… உன் அப்பாவை இப்போ நினைச்சாலும் நானும் உன்னை மாதிரி தான்” என்று சிரித்த அன்னையின் முகம் காட்டிய உணர்வில்…
“அப்பாவை மிஸ் பண்றீங்களாம்மா?” எனக் கேட்டான்.
“மிஸ் பண்றேன் அப்படின்னு இல்லை ஆர்வி… அப்பா நம்மோட இருந்திருந்தா நல்லாயிருக்கும் எண்ணம் தான். நாட்டுக்காக இறந்து போனார் அப்படிங்கிறது கவலையை குறைச்சிடுச்சு” என்றார்.
“ஹ்ம்ம்…” என்ற ஆர்விக், “பட் நான் அப்பாவை மிஸ் பண்ணதே இல்லை… மிஸ் பண்றளவுக்கு நீங்க விட்டதில்லை” என்றான்.
கணவரின் இழப்பின் வருத்தம் இப்போது இல்லையென்றாலும், அவரில்லையெனும் பேச்சு ஒருவித அழுத்தம் கொடுக்கும் வகையில் இருந்திடுமென்பதால், அனிதாவே பேச்சை மாற்றினார்.
“விடிஞ்சதும் காலேஜ் போகுமுன்ன அன்வி அப்பாகிட்ட தாத்தா பேசலாம் இருக்கார்… நீ என்ன சொல்ற?” எனக் கேட்டார்.
“நான் என்ன சொல்லணும் அனி?” என்றவன், “நைட்டே பேசிடுவிங்க நினைச்சேன்” என்று குறும்பாய் ஒற்றை கண்ணடித்தான்.
“படவா” என்று அவனின் கன்னத்தை கொத்தாக பற்றியவர், “இந்த சந்தோஷமும், குறும்பும் உன்கூடவே இருக்கணும் ஆர்வி” என இதழில் ஒற்றிக் கொண்டார்.
“தாத்தாகிட்ட சொல்லிட்டீங்களா?”
“ம்ம்… நேர்ல போய் பேசலாம் சொன்னேன். பொண்ணு கேட்டு போறதுக்கு முன்ன போன்ல பேசிப்போம். நட்பு அடிப்படையில் நெருக்கமா இருந்தாலும் கல்யாணம் அப்படிங்கிறது யோசித்து செய்ய வேண்டிய விஷயம். நாம திடுதிப்புன்னு போய் நிக்கிறது சரி வராதுன்னு சொன்னார்” என்ற அனிதா, “அப்பா சொல்றதும் சரிதான?” என்றார்.
“எஸ்…” என்றவன், “அதுக்காக பேச்சு வார்த்தைக்கே ரொம்ப டேஸ் ஆக்கிடாதீங்க” என்று சிரித்தவன், அனிதா அடிக்கும் முன்னர் அவரின் மடிவிட்டு எழுந்து தரை நின்றான்.
“எனக்கு சர்ப்ரைஸ்சிங்கா இருக்கு ஆர்வி… இதெல்லாம்” என்ற அனிதா, “எனக்கும் லேட் பண்ற எண்ணமில்லை. அவங்க சைட் சம்மதம் முக்கியமாச்சே! தாத்தா பேசிட்டு சொல்லுவார்” என்றார்.
“ஓகே… ஓகே…” என்றவன், “நான் இப்போ அன்வியை பார்க்கப்போனா எதுவும் சொல்லுவியா அனி?” எனக் கேட்டான்.
“ஏன்… போகனுமா?”
“பார்க்கணும் தோணுது. பேசணும் தோணுது… இனி இப்படியெல்லாம் தோணும் போது என்னை நான் கண்ட்ரோல் பண்ணிக்க வேண்டாமே” என்றான்.
ஆர்விக் என்னவோ புன்னகையோடுதான் கூறினான். ஆனால் அவ்வார்த்தைகளின் ஆழ்பொருள், அவனின் முந்தைய வலிகளின் பிம்பமாக இருந்திட…
“பார்த்து போயிட்டு வா” என்றார் அனிதா. கனத்த மனதை மறைத்தவராக.
“தேங்க்ஸ் அனி” என்றவன், “யாஷ்கிட்ட சொல்லிடாதீங்க” என்று ஓடியிருந்தான்.
சிறு வயதில் கூட இத்தனை துறுதுறுப்பாய் ஆர்விக் தன்னைக் காட்டிக்கொண்டதே இல்லை. தந்தையின் இழப்பால் அன்னை துவண்டிருக்கிறார் என்பதற்காகவே அவரின் பாதுகாப்பிற்காக தன்னை பெரிய மனிதனாகக் காட்டிக்கொண்டவன். இன்று சிறுவனாய் தன்னை, தனது உணர்வுகளை வெளிப்படுத்திட அன்விதாவுக்கு கண்கள் கலங்கும் போலானது.
அடுத்த நொடி மகனின் மகிழ்வை தனது மகிழ்வாக எண்ணியவர் புன்னகைக் கொண்டிருந்தார்.
*****************************
வந்துவிட்டான்.
அன்விதா தங்கியிருக்கும் விடுதிக்கு முன் அந்த நேரத்தில் வந்து நின்று பத்து நிமிடங்களுக்கும் மேலானது.
இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தவன், இந்நேரத்தில் அவளை எப்படி அழைப்பதென நினைத்து தயக்கம் கொள்ளவில்லை. மாறாக தான் அழைத்தாள் அவளால் வர முடியுமா என நினைத்தே யோசித்து நின்றான்.
வாயிலில் காவலாளி இருக்கையில் அமர்ந்த நிலையில் உறங்கிக்கொண்டிருக்க…
“அவரை எழுப்பி ஹெல்ப் கேட்போமா?” என நினைத்தவன், “வேண்டாம்” என தலையை உலுக்கிக் கொண்டான்.
தனக்கு முன்னும் பின்னும் சாலையைப் பார்த்தான். ஆளரவமற்ற இருளில் மூழ்கியிருந்தது. ஆங்காங்கே மின் விளக்குகளின் வெளிச்சம்.
அலைபேசியை எடுத்து அன்விதாவின் எண்ணுக்கு,
“அன்வி” என துடிக்கும் ஒற்றை இதய எமோஜியை அனுப்பி வைத்தான்.
இணையத் தொடர்பு அணைத்து வைக்கப்பட்டிருக்க சிங்கில் டிக்கில் அவனின் மனதின் தவிப்பு கூடியது.
அவனுக்கே அவனது செயல்கள் வெட்கத்தைக் கொடுக்க, கண்ணாடியை உயர்த்தி தன்னுடைய முகம் பார்த்தவன் கன்னத்தில் தட்டிக் கொண்டவனாக கீழ் உதட்டை அழுந்த கடித்து விடுத்தான்.
“அச்சோ ஆர்வி…” என மனதில் குத்திக் கொண்டவன், “இது பெயினை விட பயங்கர ஃபீல்’ஆ இருக்கும் போலயே” என ஒற்றை கையால் முகத்தை மூடி நெற்றி தீண்டிய விரலால் தட்டிக்கொண்டான்.
அடுத்த கணம் எதையும் யோசிக்காது, சக்தி இந்நேரத்திற்கு தோட்டத்திற்கு செல்வான் என்பது தெரியுமாதலால் அழைத்துவிட்டான்.
“சொல்லுங்க மச்சான் சார்… என்ன காலையிலே மாமா ஞாபகம். உங்க அக்கா ஃபோன் எடுக்கலையோ?” அழைப்பை ஏற்றதும் சக்தி கேட்டிட,
“யோவ் மாம்ஸ் என்ன நக்கலா… ஹனிமூன் போயிருக்க நேரத்தில் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு கால் பண்ணாததுக்கு குத்தி காட்டுறிங்களாக்கும். வந்து ரெண்டு நாளாகுதே… நீங்க பண்ணியிருக்கலாமே” என்றான் ஆர்விக்.
“ஆமா… அக்காவுக்கு மட்டும் போன் பண்ண முடிஞ்சுதா?”
“பொண்ணை கல்யாணம் பண்ணிகொடுத்தா… நல்லாயிருக்காளா? நல்லா பார்த்துக்கிறீங்களான்னு தெரிஞ்சிக்க வேணாமா?” என்ற ஆர்விக், “என் அக்கா உங்களை கண்ணு கலங்காம பார்த்துக்கிறாளா மாம்ஸ்” என்று கிசுகிசுப்பான குரலில் வினவினான்.
“அடேய்… வாலு” என்று சிரித்த சக்தி, “என்ன இந்த நேரத்துக்கு கால்?” என்றான்.
“அன்வி ஆல்சோ லவ்ஸ் மீ” என்ற ஆர்விக்கின் குரலே அவனது சந்தோஷத்தை சக்திக்கு பறைசாற்றியது.
“ஹேப்பி ஃபார் யூ” என்றான் சக்தி.
சக்தியின் அந்த வார்த்தையே, நிதாஞ்சனியின் மூலம் தன்னுடைய காதல் கதையை அவன் அறிந்திருக்கிறான் என்பதை ஆர்விக் யூகித்தான்.
“உங்க ஒய்ஃப் சொன்னாங்களாக்கும்?”
“இப்போ மட்டும் என் ஒய்ஃப்’ஆ?” என்ற சக்தி, “நேத்து தான் சொன்னாள். அத்தை வீட்டுக்கு வந்திருந்தாங்க. எந்த முகத்தை வைச்சிக்கிட்டு கல்யாணத்துக்கு வரதுன்னு தெரியல. அதான் ஆசையிருந்தும் வரலைன்னு சொன்னாங்க. மாமன் சீர் கொடுத்திட்டுப் போனாங்க” என்றான்.
“ஹோ…”
“பழைய மாதிரி இருக்க முடியாது. ஆனால் மதிக்காக அமைதியா இருந்தாகணும்” என்ற சக்தி, “கௌதம் மேல முன்னிருந்த கோபம் இப்போயில்லை அவங்களுக்கு. ஒரு அம்மாவா மகனை தேட ஆரம்பிச்சிட்டாங்க” என்றதோடு, “ஒழுங்கா அன்வியையே கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பத்தோட ஒழுக்கமா இருந்திருக்கலாம். அதுக்காக அவன் பண்ணது சரின்னு சொல்லல. அவன்கிட்ட பேசாம என்னவோ மாதிரி இருக்கு அப்படின்னு அம்மாகிட்ட சொல்லி அழுதாங்களாம். அம்மா சொல்லிட்டு, இன்னும் கொஞ்சநாள் போனா மகன் பாசத்தில் நம்ம அன்வியை திரும்ப வந்து கேட்டாலும் கேட்பாங்க அன்விக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிடலாம் அப்படின்னு சொன்னாங்க” என்றான்.
“எப்படி கேட்பாங்க? அப்படியே அவங்க கேட்டா கொடுத்திடுவாங்களா?” என்ற ஆர்விக்கின் கடுப்பான பதில் சக்திக்கு சிரிப்பையே வரவழைத்தது.
“அதானே” என்று சிரித்தவன், “உன் அக்கா அப்படி கொடுக்க விட்டுடுவாளா என்ன?” என்றான்.
“புரியல?”
“அம்மா அன்விக்கு மேரேஜ் பண்ணனும் சொன்னதுமே நிதா என் தம்பிக்கு கட்டிக்கொடுங்கன்னு பட்டுன்னு கேட்டுட்டாள்” என்றான் சக்தி.
“ஹ்ம்ம்…”
“அவங்களுக்கும் ஓகே. யோசிக்கவே இல்லை. உடனே மேம்கிட்ட பேசணுமா இல்லை தாத்தாகிட்ட பேசணுமான்னு நிதாகிட்ட கேட்டாங்க… உடனே அவள் மொத்தமா உன் அக்காவா மாறிட்டாள். காலையில நான் பேசிட்டு சொல்றேன்னு உடனே பையன் வீட்டு முறுக்கு காட்டுறாள்” என்று சக்தி கூற ஆர்விக்கிடம் சத்தமின்றி உடல் குலுங்க அப்படியொரு சிரிப்பு.
“இந்த டாக் நைட் நைனுக்கு இருக்கும். பேச்சு முடிய பத்துக்கு மேல ஆகிடுச்சு. அப்போவே உனக்கு கால் பண்றேன்னு அவ்ளோ எக்ஸைட். நீ தூங்கியிருப்ப… எதுக்கு இவ்வளவு வேகம். மார்னிங் பொறுமையா பேசலாம் சொன்னதுக்கு… ஆர்வியோட காத்திருப்பு அதிகம். அவனோட பெயின் ரொம்பவே அதிகம் அப்படின்னு எல்லாம் சொன்னாள்” என்றான்.
ஆர்விக் அமைதியாக இருந்திட…
“உன்னோட லவ்…” என இடைவெளிவிட்ட சக்தி, “ஷீ இஸ் வெரி லக்கி. அவள் என்னோட தங்கச்சிதான்… பட் உனக்காகத்தான் இப்போ சந்தோஷப்பட முடியுது” என்றான்.
“ஆர்வியோட சந்தோஷம் அன்விதா.”
சக்தி அவ்வாறு சொல்லவும் ஆர்விக் பட்டென்று சொல்லியிருந்தான்.
உண்மையில் அன்விதாவின் அண்ணனாக சக்தியின் மனம், ஆர்விக்கின் வார்த்தையில் நிறைவு கொண்டது.
“தாத்தா பேசுவாங்க மாம்ஸ்” என்ற ஆர்விக், அன்விதாவின் காதல், இருவருக்குமிடையேயான பேச்சென சொல்ல வேண்டியவற்றை அவனிடம் கூறினான்.
“கௌதம்?” என்று சக்தி எவ்வாறு கேட்பதென்று தயங்க…
“என்கிட்ட என்ன தயக்கம் மாம்ஸ்? ஒரு அண்ணனா யோசிக்கிறீங்க” என்ற ஆர்விக், சக்தி கேட்க வருவது புரிந்தவனாக, “ஆர்வியோட அன்வி அவள்” என மொத்தமாக அப்பேச்சிற்கே முற்றுப்புள்ளி வைத்திருந்தான்.
“இனி எப்பவும் அந்த பெயர் வரக்கூடாது” என்ற ஆர்விக், “நான் உங்களுக்கு கால் பண்ணதே வேற ரீஸன்” என்றான்.
“என்னது?”
“நான் எங்க இருக்கேன் தெரியுமா?” அப்படியொரு குழைவு அவனிடத்தில்.
“எங்க?”
“நடுரோட்டில்!”
“என்னடா சொல்ற? இந்த நேரத்தில்…” சக்தி புரியாது வினவினான்.
“நீங்க இப்போ அன்வி அண்ணா கிடையாது… ஓகேவா?”
“ஓகே ஓகே… ஆர்வியோட மாம்ஸ் மட்டும் தான். என்னன்னு சொல்லுடா” என்றான் சக்தி. ஆர்விக்கின் நாணம், கிசுகிசுப்பான குரல் எல்லாம் சக்திக்கு என்னவென்ற ஆர்வத்தை தூண்டியது.
“அன்வியை பார்க்கணும் போல இருந்துச்சு… கிளம்பி வந்துட்டேன். இப்போ அவளை எப்படி கூப்பிடுறதுன்னு அவஸ்தையா இருக்கு மாம்ஸ்” என்றான்.
“டேய்…” என்று சிரித்த சக்தி…
“நானே லவ்ல வீக்டா மச்சான்” என்றான்.
“அதுதான் தெரியுமே” என்ற ஆர்விக், “இருந்தாலும் எதுவும் டிப்ஸ் கொடுப்பீங்க நினைச்சேன். மேரேஜ் பண்ணி சீனியர் ஆகிட்டிங்களே” என்றான்.
“சீனியராகி என்ன பிரயோஜனம்… உன் அக்கா இன்னும் என்னை பிளாக் பண்ணி வைச்சிருக்காடா” என்ற சக்தி, “அவள் பிளாக் பண்ணனும் யோசிக்கக்கூட மாட்டான்னு சொன்ன” என்றான்.
“அப்படித்தான் சொல்லுவோம். அதுக்காக ரிவெஞ்ச் எடுக்காம எப்படி” என்ற ஆர்விக், அலைபேசியின் அதிர்வில் என்னவென்று திரை பார்த்தான்.
அன்விதான் அவன் அனுப்பிய இதயத்திற்கு பதில் இதயம் அனுப்பியிருந்தாள்.
“எனக்கு பதில் வந்திடுச்சு மாம்ஸ்… நான் லவ் பண்ணப்போறேன்” என்றவன், “தாத்தா பேசினதும்… கொஞ்சம் வேகமா மூவ் பண்ணுங்க. நிஜமா கண்ட்ரோல் பண்ணவே முடியல. சட்டையை கிழிச்சிட்டு ஹார்ட் வெளிய குதிச்சிடும் போல” எனக்கூறி இணைப்பைத் துண்டித்தவன், அதே வேகத்தோடு அன்விதாவுக்கு அழைத்திருந்தான்.
“ஹாய்டா…” உறக்கத்தில் கரகரத்து ஒலித்தது அவளின் குரல்.
‘என்னை படுத்தி வைக்கிறாள்’ என சத்தமின்றி முனகியவன்,
“தூங்குறியா அன்வி?” எனக் கேட்டான்.
“இந்த நேரத்தில் வேறென்னடா பண்ணுவாங்க?”
“லவ் பண்ணலாம் அன்வி.”
முழுதாய் உறக்கம் கலையாது தண்ணீர் அருந்த எழுந்தவள் அலைபேசியை எடுத்து பார்த்தவளாக, உறக்க விழிகளோடு ஆர்விக் அனுப்பிய இதயத்தைப் பார்த்து முறுவல் கொண்டவளாக தலையணையில் கவிழ்ந்து தனது இதயத்தையும் அனுப்பி வைத்து கண்கள் மூடியிருந்தாள்.
இரவு வெகுநேரமாகிய பின்னர் தான் ஆர்விக்கின் நெஞ்சம் ததும்பும் நேசத்தை உள்வாங்கிய உணர்வோடு தூங்கியிருந்தாள். இப்போதும் மூடிய விழித்திரைக்குள் முகம் காட்டி புன்னகைத்தவனிடம் தொலைந்தவளாக மலர்ந்திட… அவனிடமிருந்து அழைப்பு வரவும் யாரெனப் பார்த்து ஏற்று கண்கள் மூடியபடி பேசியிருந்தாள்.
இரவு நேரத்தில் பேசுவதெல்லாம் அவர்களுக்குள் புதிதல்ல…
ஆனால், காதல் உணர்வோடு அவனின் குரல் கேட்பது ஜிவ்வென்று சிலிர்க்க வைத்தது.
அதிலும் ஆர்விக் கேட்ட வார்த்தைகள் தூக்கம் பறந்தோட அவளை துள்ளி அமர வைத்தது.
“ஆர்வி…”
“எஸ்…” என்றவன், “பார்க்கணும் அன்வி” என்றான்.
ஒரு வார்த்தையில் தவிப்புகளை உள்ளடக்கியிருந்தான்.
“உனக்கு தோணலையா?” செவி நிறைக்கும் ஆர்வியின் ஓசையே அவளை மனதால் தத்தளிக்கச் செய்தது.
“இப்போ எப்படி?” என்றவள், “வீடியோ கால் பண்ணவா?” என்றாள்.
“அன்வியை பார்க்கணும்” என வார்த்தைக்கு அத்தனை அழுத்தம் கொடுத்திருந்தான்.
“ஓகே… சன் வரட்டும்… வீட்டுக்கு வர்றேன்” என்றவள்,
“உன் ஹாஸ்டலுக்கு வெளிய ரோட்ல தான் நிக்கிறேன்” என ஆர்விக் சொல்லியதில் வேகமாக அறையின் விளக்கை ஒளிரச் செய்து, சன்னல் திரை நீக்கி சாலையில் எட்டிப்பார்த்தாள்.
விடுதிக்கு எதிர்பக்கம் சாலையின் ஓரம் மரத்திற்கு கீழே அவனது வண்டிக்கு அருகில் நடை மேடையில் நின்றபடி கையசைத்தான்.
கீழே காவலாளியை பார்த்தவள் வேகமாக கீழிறங்கி வந்தாள்.
அன்விதாவிடம் அதீத பதற்றம். நண்பனாக தாமதமான இரவு நேரங்களில் அவளை இங்கிருந்து அழைத்துச் சென்றிருக்கின்றான், வந்து விட்டுமிருக்கின்றான். இன்று ஏனோ பதற்றம், படபடப்பு, சில்லென்ற உணர்வு… எல்லாம் அவளிடத்தில்.
சத்தமின்றி கேட்டினைத் திறந்தவள், காவலாளியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவனை நோக்கி வந்தாள்.
கணுக்காலுக்கு மேலான தொளதொள பேண்ட்டும், அவளைவிட பெரிதான டி சர்ட்டும் அணிந்திருக்க உறக்கத்தில் கலைந்த குழலையும் சரி செய்யாது அப்படியே ஓடி வந்திருந்தாள்.
அன்விதா பக்கம் வர வைத்திட்ட ஒவ்வொரு அடிக்கும் ஆர்விக்கின் இதயம் அதிர்ந்து அசைந்து கொடுத்தது.
அவனது கண்களில் மின்னல் வெட்டி நின்றிருக்க… அவளிடம் முழுதாய் இதயத்தை பிடுங்கிக் கொடுத்திடும் உணர்வு.
‘எனக்கேத் தெரியாமல்
என் இதயம் தப்பிச் சென்றது
என்னிடமிருந்து…
நான் கொடுக்கும்
நேச தவிப்புகளை சுமக்க முடியாதென!
உன்னிடம் சிறைப்பட்ட நான் என்ன செய்வேனோ?’
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
63
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Thoorigai Premium Membership
கவிதை 😍💓. மாம்ஸ் மச்சான் பந்தம் 😍💓.