Loading

விடியும் முன்..!

 

அத்தியாயம் 19

 

வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்து நந்தகோபாலனின் முகமோ பயத்தில் வெளிறிக் கிடந்தது.

 

வாசுவைக் கண்டது அவரை மொத்தமாய் புரட்டிப் போட்டிருக்க வாங்க வேண்டியவற்றை கூட வாங்காமல் விடுவிடுவென வீட்டுக்கு வந்திருந்தார்.

 

வரும் வழியில் எப்படியோ இளஞ்செழியனை அழைத்து விடயத்தை சொல்லிட அவன் கவனமாய் இருப்பதாய் வாக்குத் தந்த பின்னரே அத்தனை நிம்மதி மனதில்.

 

முத்துவை பற்றி கவலையில்லை.அவன் சமாளிப்பான் என்பதை அடுத்தவருக்கு தான் அதனால் பிரச்சினை வரும் என்பது தான் பொருத்தம்.நாவை அடக்கும் பழக்கம் இல்லையே,அவனுக்கு.

 

இப்போது மனம் முழுக்க மூத்த மகனையே சுற்றி வந்தது.அவன் நிலை எப்படியோ என உள்ளுக்குள் பதபதைத்தது.

 

அவனுடன் பேசி சில வருடங்கள் கடந்திருந்தாலும் இந்த சமயத்தில் அது நினைவில் இருந்து அகன்றே போயிருந்தது.

 

அரவம் கேட்டு வெளியில் வந்த அவரின் மனைவிக்கு கணவனின் முகத்தில் இருந்த கலக்கம் தெள்ளத் தெளிவாய் புரியாவிடின் அவர்களின் இத்தனை கால வாழ்க்கைக்கு அர்த்தம் ஏது..?

 

“என்னாச்சுங்க..? என்ன மூஞ்செல்லாம் இப்டி இருக்கு..?” கனிவாய் கேட்டவரின் குரலில் நிமிர்ந்து பார்த்த நந்த கோபாலனுக்கு மனைவியிடம் சொல்வதா வேண்டாமா என்கின்ற குழப்பம்.

 

வாசு வந்திருப்பதை சொன்னால் அதிகம் கலங்குவார் என்று தெரியாதா அவருக்கு..?

 

“மூத்தவனுக்கு போன் பண்ணிப் பாரு..”

 

“ஏன் நீங்க போன் பண்ணினா தான் என்னவாம்..அப்பாவுக்கும் மகனுக்கும் ரொம்பத் தான் வீம்பு..” நொடித்துக் கொண்டாலும் கணவரின் பேச்சை மீறாது அழைப்பெடுக்கத் தான் செய்தன,அவர் விரல்கள்.

 

எடுத்த எடுப்பிலேயே அழைப்பு ஏற்கப்பட மகன் பதறியிருப்பான் என்று அறிந்த தாயின் இதழ்களில் புன்னகை ஓடியது.

 

அலைபேசியில் மிளிர்ந்த தாயின் எண்ணைக் கண்டதும் அவனின் சிந்தனை வேக எட்டுக்களுடன் வெவ்வேறு திசையில் பாய பதட்டத்துடன் தான் அழைப்பை எற்றிருந்தான்,மறுமுனையில் இருந்தவனும்.

 

“தம்பீஈஈஈஈ”

 

“என்னாச்சு மா..? ஏதாச்சும் ப்ரச்சனயா..? போன் பண்ணிருக்கீங்க..?அப்பா செழியன் எல்லாம் வீட்ல தான இருக்காங்க..”

 

“தம்பி..மெதுவா மெதுவா பேசுப்பா..எல்லாரும் வீட்ல தான் இருக்காங்க..பதட்டப்படாம பேசு..”

 

“எந்த ப்ரச்சனயும் இல்ல தான..”

 

“ஆமா தம்பி..எதுவும் இல்ல..நாங்க நல்லா தான் இருக்கோம்..நீ எப்டி தம்பி இருக்க..? நல்லா தான இருக்க..”

 

“ஆமாம்மா…நா நல்லா தான் இருக்கேன்..”

 

“சரி தம்பி..அம்மா சும்மா தான் எடுத்தேன்..நீ வேல முடிஞ்சப்றமா போன் பண்ணு..”

 

“சரிம்மா..” அழைப்பை துண்டித்தவனோ அலைபேசியை அணைத்து விட்டு நிறுத்திய வேலையை மீண்டும் துவங்க தாயின் அழைப்பு இருந்த மனநிலைக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது,என்னவோ உண்மை தான்.

 

“போன் எல்லாம் பேசி டைம் வேஸ்ப் பண்றது எனக்கு புடிக்காது..”சீறியவனை பொருட்டாகவே கொள்ளாது வேலைத் தொடர்தான்,அர்ஜுன்.

 

●●●●●●●●●

 

கை காலை கட்டி கதிரையில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து துளியும் மனம் இளகவில்லை,ஆகாஷுக்கு.

 

மனதில் தாண்டமாடிக் கொண்டிருந்த வெறியை விழிகள் முற்றாய் பிரதிபலிக்க பாதி விழி திறந்த நிலையில் அவனைப் பார்த்த சகாவின் முகத்தில் அடிக்கடி புன்னகை தோன்றி மறைந்து கொண்டிருந்தது.

 

“சொல்லு எதுக்குடா இப்டி பண்ண..? உன்னோட அண்ணன் பொரம்போக்கு சொன்னதுக்காகவா..”

 

“சகா வெறியேறுது எனக்கு..இப்டியே போனேன்னா உன்ன அடிச்சே கொன்னுருவேன்னு தோணுது..என்னோட கோபத்த ஏத்தாம சொல்லு சகா..” வெறி கொண்டவன் போல் உரும அதற்கும் அசரவில்லை,அவன்.

 

பாதி மயக்கத்தில் இருப்பவன் போல் கண்கள் சொருக இருப்பவனைக் கண்டதும் அவனுக்கு சந்தேகம் வர கோபம் வந்தவனாய் அவனின் சட்டைப் பாக்கெட்டை துழாவ அதில் இருந்தது,போதைப் பொருள் மாத்திரைகள்.

 

“ட்ரக்ஸ் யூஸ் பண்ணியா இப்போ..?” அதிர்வுடன் கேட்டவனுக்கு தான் துப்பாக்கியை எடுக்க திரும்பிய கணம் அவன் வாய்க்குள் போட்டுக் கொண்டது,தெரியாதே.

 

“அ..ஆமா..என்ன பண்..பண்ணுவ..?” குழறலாய் கேட்டவனின் உடலில் ஒரு தள்ளாட்டம்.

 

மெதுமெதுவாய் சுயம் இழக்கத் துவங்கி இருந்தவனோ கண் சொருக பின்னே சரிய கதிரையில் இருந்து விழாமல் பிடித்துக் கொண்டது என்னவோ ஆகாஷ் தான்.

 

இருந்தும் பின்னே இருந்த கதிரையின் மேல் விளிம்பு பட்டு சத்தத்தை கிளப்ப பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த பெண்கள் இருவருக்கும் ஆகாஷின் மனநிலை கலவரத்தை கிளப்பிற்று.

 

“சார் என்னாச்சு சார்..?” பதட்டமாய் தென்றல் கேட்க மகிழினியின் விழிகளிலும் அதே கேள்வியே தொக்கி நின்றது.

 

“ஹெவியா ட்ரக்ஸ் யூஸ் பண்ணிட்டான்..ஏதாச்சும் பண்ணுங்க..இவன் கிட்ட தான் உண்ம இருக்கு..?”?நெற்றியை தடவி யோசனை செய்த படி அவன் சொல்ல தென்றலின் முகம் பேயறைந்து இருந்தது.

 

“ஐயோ..இவருக்கு ஓவரா ட்ரக்ஸ் ஏதாச்சும் யூஸ் பண்ணி மயங்கிட்டார்னா எந்திரிக்க ரொம்ப நேரம் ஆகுமே..அவரா எந்திரிச்சா தான் உண்டு..என்ன பண்ணாலும் விழிச்சிக்க மாட்டாரு..செத்தவன் மாதிரி இருப்பாரே..”அவள் பாட்டுக்கு புலம்ப தலையில் கை வைத்து அப்படியே நிலத்தில் அமர்ந்து விட்டிருந்தான்,

ஆகாஷ்.

 

●●●●●●●●●

 

அந்த மயானத்தில் இருந்து சத்யாவை அழைத்து வந்து தேற்றுவதே பெரும்பாடாய் இருந்தது,கிருஷ்ணாவுக்கு.

 

இழுத்துக் கொண்டு அந்த மண் வீதிக்கு வந்து செழியனின் வீட்டுக்கு அழைத்து வரும் போது நாக்குத் தள்ளி விட்டது.

 

இடிந்து போய் அமர்ந்திருந்த தோழனுக்கு ஆறுதல் சொல்லவும் அவனுக்கு தெரியவில்லை.

 

அவ்வப்போது சத்யா அவனை என்னவென்று சொல்லத் தெரியாத ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்க செழியன் அதைக் கவனித்தாலும் கிருஷ்ணாவுக்கு சந்தேகம் வரவில்லை.

 

செழியனின் நடத்தையில் இருந்த மாறுதல் கிருஷ்ணாவுக்கு புரிய கண்களால் அமைதிப்படுத்த முயன்றாலும் அத்தனை எளிதில் அடங்க மறுத்தது,அவன் மனதில் உழன்று கொண்டிருந்த விடயம்.

 

கட்டிலில் சத்யா சாய்ந்து அமர்ந்திருக்க மேசையின் அருகே மார்புக்கு குறுக்கே கையை கட்டிய படி நின்றிருந்தான்,செழியன்.

 

மேசையில் வைக்கப்பட்டிருந்த காபி ஆறிக் கொண்டிருந்தது.

 

“சத்யா..டேய் சத்யா..செழியா என்னாச்சு இவனுக்கு..?”நிமிடங்களுக்கு மேலாய் நிலவிய அமைதியை அப்புறப்படுத்தும் நோக்கில் கிருஷ்ணா பேச எதிர்வினை ஆற்றவில்லை,சத்யரூபன்.

 

“சத்யா..”

 

“டேய் சத்யா..'” கத்திய கிருஷ்ணாவுக்கு ஆத்திரம் தலைக்கேறிற்று,தோழனின் பாராமுகத்தில்.

 

எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் மனநிலை இருந்தாலும் அந்த மனநிலையை சுமக்கும் மனதொன்று அவனுக்கும் இருக்கத் தானே செய்யும்.

 

அதன் பின் கிருஷ்ணா பேசவில்லை.எதையும் இலகுவாய் கடந்திடுபவனுக்கு அரிதாய் சில சமயங்களில் கோபம் எட்டிப் பார்ப்பதுண்டு.

 

அதன் பின் எதுவும் பேசாமல் ஒரு கணம் இருவரையும் ஆழ்ந்து பார்த்து விட்டு அறைக்கதவை திறந்து தான் தாமதம்,சத்யாவுக்கு கோபம் அணை கடந்தது.

 

“என் அத்த பொண்ண கொன்னவனோட தம்பியும் அவன் ப்ரெண்டும் நல்லா தான் நாடகமாடுறீங்க..” என்று உரத்து கத்த கிருஷ்ணாவின் நடை நின்றது,ஒரு நொடி தான்.

 

அடுத்த கணம் கதவை அறைந்து சாற்றி விட்டு அவன் வெளியேற அவன் பின்னூடு ஓடியிருந்தான்,செழியனும்.தோழனை இப்போது அவன் அல்லவா சமாதானப்படுத்த வேண்டும்..?

 

செழியனுக்கு சத்யாவின் மீது கோபம் வந்தாலும் அவன் இடத்தில் இருந்து யோசிக்கையில் அந்த கோபம் தவறாகத் தோன்றிடவில்லை.

 

தலையை கைகளால் தாங்கிய படி யோசித்தவனுக்கு ஒன்றுமே புரியாத நிலை.அதிலும் செழியனும் கிருஷ்ணாவும் அவனிடம் விடயத்தை மறைத்தது,அத்தனை கோபத்தை தந்தது.

 

வீட்டுக்கு வந்திடும் சமயம் அரசல் புரசலாக கேட்ட விடயத்தினால் துளிர்த்ததே,இந்தக் கோபம்.

 

மாமனின் மூத்த மகளின் இழப்புக்கு அவன் தானே காரணம்.எல்லோரும் அப்படித் தானே கதைத்துக் கொண்டார்கள்.

 

ஆயிரம் பேர் சொன்னாலும் பொய் உண்மையாகி விடாது என்பதை ஏனோ அந்த நொடி அவன் உணர மறந்திருந்தான்.

 

ஆராயாமல் எடுக்கப்படும் அனுமானங்களில் விளைவு வலிகள் தான்.

அந்த நிலை தான் இப்போது அவனுக்கும்.

 

●●●●●●●

 

எப்போதும் போல் கம்பீரமாய் படிகளில் இருந்து இறங்கி வந்தார்,தேவசகாயம்.

 

எழுபத்தைந்து வயதாகி இருக்க நடையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் தோற்றம் வயதை பெரிதாய் வெளிப்படுத்தி நிற்கவில்லை.

 

அவரைப் பார்த்து புன்னகைத்தாலும் வந்திருந்த திவ்யாவின் மனதில் சிறு சங்கடம்.

சரியாக உணவுண்ணும் நேரத்திற்கு அல்லவா வந்திருப்பது.

 

“வாம்மா திவ்யா..என்ன விஷயம்..?” பரிவாய் கேட்டவரிடம் எப்படி தன் முடிவை சொல்வதென்பது பெரும் கலக்கமாய் இருந்தது.

 

“தாத்தா..நீ..நீங்க கல்யாணம் பத்தி..”

 

“ஆமாம்மா நா தான் பேசி இருந்தேன்..உங்க அக்காக்கு வேற ஒரு எடத்துல மாப்ள பாத்து இருக்குறதா உங்க அம்மா சொன்னாங்க..அதான் உங்க ரெண்டு பேர்ல யாராச்சும் என் பேரன கல்யாணம் பண்ணி கிட்டா நல்லதுன்னு தோணுச்சு..அதான் உன்ன கேட்டேன்..” வெள்ளந்தியாய் சொன்னார்,அவர்.

 

திவ்யாவையும் தர்ஷினியையும் அவருக்கு முன்பில் இருந்தே தெரியும்.

பேரனுக்கு வரன் பார்க்கத் துவங்கியிருக்க அவருக்கு இவர்களில் யாரையாவது பேரனுக்கு கட்டி வைத்தால் நன்றாக இருக்கும் என்கின்ற எண்ணம் தான் மனம் முழுவதும்.

 

“என்னம்மா உனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லயா..?” அவளின் முகத்தை வைத்தே மன எண்ணத்தை உணர்ந்தவராய் அவர் கேட்க பதிலேதும் சொல்லாமல் பேசாமல் தான் இருந்தாள்,அவளும்.

 

பிடிக்கவில்லை என்று சொன்னால் அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்கின்ற எண்ணமே மனதில் பூதாகரமாய்.

 

இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியும் தாய் தந்தை மனமிறங்காதிருக்கவே தேவ சகாயத்தை தேடி வந்திருந்தாள்,ஒரு சிறு எதிர்ப்பார்ப்பை சுமந்த வண்ணம்.

 

அந்த சிறு எதிர்ப்பார்ப்பும் அவரின் முகத்தில் பூரிப்பை கண்டதும் தொலைந்து போவது போன்ற பிரம்மை.

 

“அம்மாடி என்னோட பேரன பத்தி சொல்றேன்..அப்றமா நீ முடிவ சொல்லு..”

 

“எனக்கு ரெண்டு பசங்க..ஒருத்தன் டுபாய்ல இருக்கான்..மத்தவன் இப்போ உயிரோடவே இல்ல..நாங்க அப்போ என்னோட சொந்த ஊர்ல இருந்தோம்..என் பையனுக்கு அங்கயே ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வச்சோம்..ஆனா அந்த வாழ்க்க ரொம்ப நாள் நீடிக்கல..”

 

“கொழந்த பொறந்த அப்றமா பையன் புள்ளய தூக்கிட்டு இங்க வந்துட்டான்..நானும் அவனும் தா கண்ணன..அது என் பேரன நா அப்டி தான் கூப்டுவேன்.”

 

“நானும் அவனும் தா வளத்தோம்..கண்ணனுக்கு ஆறு வயசு இருக்கும்..ஆக்சிடன்ட்ல பையன் எறந்துட்டான்..மூத்த பையன் ஒறவ முறிச்சிகிட்டு போனவன் தம்பியோட சாவுக்கும் வர்ல..வசதி வாய்ப்புன்னு இருந்ததால பையன எப்டியோ வளத்து எடுத்துட்டேன்..”

 

“நா பொய் சொல்லல..என்னோட பேரன் சொக்கத் தங்கம்..எந்த கெட்ட பழக்கமும் இல்ல..ரொம்ப நல்ல பையன்..உன்ன நல்லா பாத்துப்பான்..நீ மட்டும் புடிச்சு இருந்ததுன்னு சொன்னா அடுத்த முகூர்த்தத்துல கல்யணாம் பண்ணி வச்சுருவேன்..”

 

“தாத்தா..எனக்கு உங்க பேரனோட பேர் கூட தெரியாது..நா எப்டி கல்யாணத்துக்கு ஒத்துக்கறது..?” இழுத்த படி கேட்டவளின் செயலில் அவரின் இதழ்களில் மெல்லிய விரிவு.

 

“பையனோட பேர் ஆர்யதர்ஷன் மா..வயசு இருபத்தெட்டு..அவன் அப்பா பேரு சிவதர்ஷன்..அவன் ஆசப்பட்டு வச்ச பேரு..”

 

“ம்ம்”

 

“இங்க பாருமா..நா வயசானவன்..என்னோட மனசுல இருக்குறத அப்டியே பேசிட்டேன்..பையனோட போட்டோவ பாத்துட்டியா நீ..?”

 

“ம்ஹும்..”

 

“பையனோட போட்டோவ உங்கப்பாகிட்ட கொடுத்து விட்றேன்..நீ நல்லா தெளிவா யோசிச்சு ஒரு பதில சொல்லு..மனசுக்கு புடிச்சி இருந்தா மட்டும் சரின்னு சொல்லு..நீ என்ன பதில் சொன்னாலும் நா தப்பா எடுத்துக்க மாட்டேன்..”

 

“சரி தாத்தா..” புன்னகையுடன் கிளம்பியவளுக்கு சத்தியமாய் இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.

 

●●●●●●●●

 

“பைத்தியக்கார பட்டாசு எங்க போச்சோ.?” முணுமுணுத்த படி திட்டிய பையனவனின் முகத்தில் அப்பட்டமான பதட்டம்.

 

திட்டித் தீர்த்தாலும் அவனின் பார்வை வீச்சுக்குள் அவள் இல்லாது போய் விடின் இப்படி தான் பதறி துடிப்பான்,காரணம் கேட்டால் பதிலிருக்காது.

 

நீண்ட ரயிலின் இரண்டு பெட்டிகளை முழுசாக தேடி விட்டு மீண்டவனுக்கு இருந்த பதட்டம் கூடிக் கொண்டு போவது போல் தோன்ற நிலை கொள்ள முடியவில்லை,பையனால்.கண்கள் கலங்கி விடும் போல் இருந்தது.

 

“இல்ல..இல்ல இங்க தான் இருப்பா..” தனக்கே சொல்லிக் கொண்டு தேடினாலும் அவளைக் காணும் வரை அவனின் மனது அமைதியடைந்திடாது.

 

“ஸ்டே காம்..ஸ்டே டாம் ரிஷி..” திடப்படுத்திக் கொள்ள நினைத்தாலும் அவனின் மொத்த தைரியமும் அந்த நொடி அவன் வசமில்லை.கர்ஜிக்கும் சிங்கத்தின் ஒட்டு மொத்த தைரியமும் அவளென்று வந்திடும் தருணங்களில் தலைமறைவாகி விடுவது வாடிக்கை தான்.

 

அவனே உணராவிடினும் மனம் முழுக்க நிறைந்து மூச்சு முட்ட வைக்கும் காதல் தவிக்காது போயின் தான் அதிசயம்.

 

“இல்ல..இல்ல இந்த பட்டாசு இங்க தான் இருக்கும்..” மீண்டும் சொல்லிக் கொண்டு தேடியவனுக்குள் எழுந்திருக்கும் உணர்வலைகள் புதிது.

அவளுக்கென மட்டுமே ஜனித்திடும் அந்த உணர்வலைகள் ஒவ்வொரு முறையும் புதிதாய்த் தான் தோன்றும்.

 

“பைத்தியக்காரி எங்கடி இருக்க..?” அவளுக்கு கேட்காது என்று தெரிந்தும் அவளிடம் கேட்ட படி அலைந்தவனிடம் காதல் இல்லையென்றால் யார் தான் நம்புவார்கள்..?

 

முகம் வெளிற என்றும் காணா முடியா பயத்தின் சில துளிகளை விழிகளில் தேக்கிய படி பிதற்றலுடன் உள்ளுக்குள் வெகுவாய் பயந்து பதறி தேடிக் கொண்டிருந்தவனுக்கோ அவளைக் கண்டதும் இருந்த பதட்டமும் பயமும் மொத்தமாய் கோபமாய் உருமாற பற்களை நறநறத்தவனின் விழிகளில் அனல்.

 

கால்களை தூக்கி மேலே போட்டு இருக்கையில் சம்மணமிட்டு அமர்ந்தவளோ முன்பு போலவே காதில் வயர்லெஸ்ஸுடன் விழிகளை மூடி பாடலில் ஆழந்திருக்க இதழ்களோ அந்தப் பாடலை கொஞ்சம் சத்தமாகவே தமக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

 

“இட்ஸ்ஸ்ஸ்ஸ் பைன்ன்ன்ன்..”பற்கள் நறநறத்த படி மொழிந்து மூச்சு வாங்க அவளை முறைத்த பையனுக்கு கன்னத்தில் ஒரு அறை விடத் தான் தோன்றிற்று.

 

அவன் எத்தனை தூரம் பதறினான் என்பது அவனுக்கல்லவா தெரியும்.ஆனால்,இவள்..? நினைக்கும் போது அப்படி ஒரு ஆத்திரம்.

 

அவளின் கரம் பிடித்து இழுத்து கன்னத்தில் விட்டான் ஒரு அறை.

தொடுகையில் விழி திறந்தவள் சுதாரிக்கும் முன்னமே கன்னம் வீங்கியிருந்தது.

 

எதிர் பாரா அறையில் நன்றாகவே வலியெடுக்க கன்னத்தை பொத்திக் கொண்டவளின் கண்கள் கலங்கியே விட்டிருந்தன.இருந்தாலும் முறைத்து தான் பார்த்திருந்தாள்,அவனை.

 

“பைத்தியமா டி நீ..? பைத்தியக்காரி எங்க போய் தொலஞ்ச..அறிவுன்னு ஒன்னு இல்லயா உனக்கு..?” கேட்ட படி மீண்டும் அறைய முயல அவள் மட்டும் சும்மா இருந்திடுவாளா என்ன..?

 

நீண்ட கரத்தை இழுத்துப் பிடித்து விரல்களை கடித்திட சத்தியமாய் வலித்தது,பையனுக்கு.

 

“காட்டேரி விடுடி..” கத்திய படி மீண்டும் ஒரு அறையை விடவே கரத்தை விட்டிருந்தாள்,அவனின் மனைவி.

 

பலமான கடி தான்.

கன்றிச்சிவந்திருந்தது பற் தடம் பதிந்த இடங்கள்.

 

தன் கரத்தைப் பார்த்தவனுக்கு இன்னும் வந்ததே கோபம்.மீண்டும் அறையத் தோன்றிய கரத்தை ஏன் கட்டுப்படுத்தினான் என்றால் அவனுக்கே தெரியாது.ஆனால்,அவள் சும்மா இருக்க விட மாட்டாளே.

 

“யாரு பைத்தியம்..? நீ தான்டா பைத்தியம்..உன் மொகரைல முழிக்க கூடாதுன்னு இங்க வந்து செவனென்னு இருந்தா வந்து அறஞ்சிட்டு நீ கத்தற..?மனுஷனடா நீ..?” வீங்கியிருந்த கன்னத்தை தடவிய படி அழுகுரலில் கத்தியவளை தீர்க்கமாய் பார்த்திருந்தான்,பையன்.

 

“இட்ஸ் பைன்ன்ன்ன்..உன்னக் காணோம்னு தேடி வந்தேனே என்ன தான் செருப்பால அடிக்கனும்..”

 

“நானா அடிச்சிக்க வேணான்னேன்..கால்ல தான இருக்கு கழட்டி அடிங்க..”கடுப்புடன் சொன்னாள்,அவள்.

 

“உன்ன கல்யாணம் பண்ணேன் பாரு..எனக்கு தேவ தான்..”

 

“ஆமா உங்கள கட்டி கிட்ட நா தான் இத சொல்லனும்..”

 

“மித்ரா..சத்தியமா செம கடுப்புல இருக்கேன்..அற வாங்கி சாகாம போயிரு அவ்ளோ தான்..கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விட்றியா இம்ச புடிச்சவ” சட்டமாய் அமர்ந்திருந்தவனின் கைகள் அறையப் பரபரத்துக் கொண்டு தான் இருந்தது.

 

“போறேன் போறேன்..தோ போய் ஓட்ற இந்த ட்ரெயின்ல இருந்து பாஞ்சிர்ரேன்..நிம்மதியா இருங்க..” சளைக்காமல் பதில் சொல்லி விட்டு கடுப்புடன் நகர்ந்தவளோ சென்று நின்று கொண்டது என்னவோ வாயிலில் தான்.

 

கதவு திறந்திருக்க கம்பியை பிடித்துக் கொண்டு நின்றிருந்தவளின் கரங்கள் பயத்தில் நடுங்கிற்று.இதற்கு முன் இப்படி வந்து நின்றதில்லை.

தனியாய் நிற்பதால் கொஞ்சம் பயமாகவும் இருந்தாலும் முகத்தில் மோதிய எதிர்க்காற்று தந்த இதத்தை விட்டு விடும் எண்ணமும் இல்லை.

 

“கிறுக்கு எப்டி அடிச்சிருக்கு பாரு..” கன்னத்தை தடவிய படி அவனுக்குத் திட்டியவளோ வெளியே தலையை போட கொஞ்சம் உடல் தடுமாறியது.

 

கம்பியை பற்றி அவள் தன்னை சமநிலைப்படுத்தும் முன்னமே வலிய கரமொன்று இழுத்தெடுக்க மீண்டும் ஒரு அறைக்கு தயாராகி கண்களை மூடிக் கொண்டவளின் எண்ணம் பொய்க்கவில்லை.முன்பை விட பலமாய் இன்னொரு அறை.

 

“முடியல..” முணுமுணுத்த படி விழி திறவாது நின்றிருந்தவளை அடுத்த நொடி இழுத்து தன் தோளோடு சேர்த்தணைத்திருந்தான்,பையன்.

 

தொடரும்.

 

🖋️அதி..!

2024.04.02

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்