
அழகியே 24
அன்பரசன் வீல் சேரில் இருந்து ஸ்டிக் வைத்து நடக்க பழகி கொண்டு இருந்தார் இத்தனை நாட்கள். மகன்களின் துணையுடன் ஏனோதானோ என்று நடந்து கொண்டிருந்தவர் மகளை பற்றிய செய்தி தெரிந்ததில் இருந்து மிகவும் உற்சாகமாக இருந்தார்.மகள் இருக்கும் இடம் தெரிந்து விட்டதிலும் அவளின் நிறைவான வாழ்வை பற்றி அறிந்ததும் அவருக்கு இரட்டிப்பு சக்தி வந்ததாக உணர்ந்தவர் அனைத்து வலிகளையும் பொறுத்து கொண்டு நடக்க பழகினார்.
அதிரன் அன்று விடுமுறை எடுத்து இருந்தான். ஆதியும் வீட்டில் தான் இருந்தான். தாமரை மூவருக்கும் டீயை எடுத்து வந்து கொடுத்தவர், “அதிரா செழியனுக்கு இப்போ எப்படி இருக்கு சரியாகிடுச்சா?நம்ம எல்லாரும் போய் ஒரு தடவை பாத்துட்டு வந்துடலாமா?” என்று கேட்க அவனோ, “ஆமாம்மா நானும் தேவ்கிட்ட கேட்டுதான் தெரிஞ்சுகிட்டேன். நல்லாவே காயம் ஆறிடுச்சுனு சொன்னான்” என்று கூறினான்.
ஆதியோ, “அதி நம்ம போய் அவனை பார்த்துட்டு வரலாம்ல. அவனும் நம்ம மாமா பையன்தான. நாம போய் பார்க்கலைனா தப்பாயிடும் இல்லை” என்று கூறியதும் அதிரன் புருவம் உயர்த்தி தம்பியை பார்த்தான்.
அவனோ, “அப்படியே அவனை பார்க்கிற சாக்குல நம்ம மித்துக் குட்டிய பார்க்கலாம்ல. அவ இல்லனு நினச்ச வரைக்கும் ஓகே. இப்போ அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சும் எப்படிடா அமைதியா இருக்கறது. எனக்கு இப்போவே அவளை பார்க்கணும் போல இருக்கு” என்று கூறினான்.
அதிரனோ, “இதுக்கு தான் எலி ட்ரெஸ் இல்லாம ஓடுச்சு போல” என்று கூற ஆதியோ, “அவனை எல்லாம் போய் பார்க்கணும்னு ஒன்னும் இல்லை. நான் மித்துவ பார்க்க தான் அப்படி சொன்னேன். இப்போ என்ன?” என்று கேட்டான்.
அதிரனோ, “ஸ்டாப் இட் ஆதி. இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். அவன் நம்மள விட சின்ன பையனாவே இருந்தாலும் இப்போ அவன் நம்ம தங்கச்சி ஹஸ்பண்ட். அப்புறம் இப்போ ஒரு நல்ல ஸ்டேட்டஸ்ல இருக்க ASP ஆஃபீஸர். மரியாதையா பேசணும்” என்று கண்டிக்க அவனோ, “என்னங்கடா ஆளாளுக்கு மரியாதை குடு. மண்ணாங்கட்டி குடுன்னு மிரட்டுறீங்க. அவனை எனக்கு பிடிக்கல. அவனாலதான் மித்து நம்மளோட இல்லை. அவளை நம்ம கிட்ட இருந்து பிரிச்சு, பொறந்து வளர்ந்த இடத்தை முதற்கொண்டு எல்லாத்தையும் விட்டு இப்படி ஏதோ ஒரு ஊர்ல வாழறதுக்கு காரணமே அவன் தான். அவன் எவனா வேணா இருக்கட்டும்.” என்று கூறி கத்தினான்.
அதிரனோ, “அவன் இல்லனா இப்போ நம்ம மித்து உயிரோடவே இருந்திருக்க மாட்டா” என்றவன் அக்சிடென்ட் நடந்ததில் இருந்து அவன் பேசியது, அவன் வேலை, கஷ்டம் என அனைத்தையும் தேவ்வின் மூலம் அறிந்து கொண்டான். தேவ் அவனிடம் மறைத்தது வேதாவுக்கு முழு நினைவு வந்ததை தான். அதை மறைக்க நினைக்க வில்லை. தற்போது தேவையில்லை என்று விட்டு விட்டான்.
அதிரன் கூறியதை கேட்ட ஆதிக்கு செழியனின் மீதான தவறான புரிதல் விலகினாலும் அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது தேவ்வின் பெற்றோர்கள் பத்திரிக்கை வைப்பதற்காக வீட்டிற்கு வர, தாமரைதான் முதலில், “வாங்க அண்ணா, வாங்க அண்ணி நல்லாருக்கீங்களா? உட்காருங்க” என்று அமர வைத்தவர் நீர் எடுத்து வந்து தர, சில நாட்களுக்கு முன்பே அறிவழகனின் வீட்டில் வைத்து அறிமுகமாகி இருந்ததால் அன்பரசனும் தயக்கம் இல்லாமல் பேசினார்.
தட்டில் பூ, பழம், பத்திரிகை வைத்து முறையாய் அனைவரையும் திருமணத்துக்கு அழைத்தனர். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அறிவழகனின் குடும்பத்தினர் அனைவரும் வந்து சேர, தாமரை சென்று அனைவர்க்கும் டீ எடுத்து வந்து கொடுத்தார்.
அறிவழகன் அதிரனிடம், “இன்னிக்கு லீவா மாப்பிள்ளை?” என்று கேட்க அவனோ, “ஆமாம் மாமா, ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை. அப்புறம் அப்பாக்கு இன்னிக்கு செக் அப் இருக்கு ஈவினிங் மூணு மணிக்கு. நானும் ஆதியும் செங்கல்பட்டு வரைக்கும் அழைச்சிட்டு போகணும் அதான்” என்று கூற, அகரன்தான், “இங்கயே நல்ல ஹாஸ்பிடல்ஸ் நிறைய இருக்கே அதிரா, அவ்ளோ தூரம் போகணுமா என்ன” என்று கேட்டான்.
“ஒரே ஹாஸ்பிட்டல பார்த்துக்கலாம்னுதான், கார்லதானே ஒன்னும் சிரமம் இல்லை” என்று கூற, தேவ்வின் அன்னையோ, “அப்போ சரியான நேரத்துக்குதான் வந்துருக்கோம். எல்லாருமே வீட்டுல இருக்கீங்க, அங்க போய் ஜவுளி எடுத்துட்டு வந்துருவோம்” என்று கூற,
தாமரையோ, “நாங்க எதுக்கு அண்ணி, நீங்க போய் எடுத்துட்டு வாங்க” என்று கூற, தேவின் தந்தையோ, “அப்போ நான் உன் அண்ணன் இல்லையாமா? அண்ணன் பையன் கல்யாணத்துக்கு தங்கச்சி நீ துணி எடுக்க வர மாட்டியா?” என்று கேட்டார்.
தாமரை, “அப்படியெல்லாம் இல்லை அண்ணா. நாங்க நாலு பேருமே வரோம், நான் என்னிக்குமே உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு பார்த்ததில்லை” என்று கூற, அதிரன், “அது கல்யாண மாப்பிள்ளை எங்க? அவன் இல்லாம எப்படி” என்று கேட்க,
அரவிந்தன், “அவன் செழியனையும் வேதாவையும் கூப்பிட போயிருக்கான். ரெண்டு பேரும் ஏதோ வேலை இருக்கு வரலன்னு சொன்னாங்க போல. இவன் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வர போயிருக்கான்” என்று கூற, ஆதி, “அவங்களும் வாராங்களா” என்று கேட்க, லாவண்யா “தேவ்வுக்கு அனன்யா (தேவ்வின் காதலி) இல்லாட்டியும் கூட செழியன் இருந்தா போதும்” என்று கூற அனைவரும் சிரித்தனர்.
தாமரை, “அன்னிக்கு ஹாஸ்பிட்டலையே பார்த்தேனே உங்க ரெண்டு பேர மாதிரிதான் அவங்களும்” என்று அண்ணன்களை பார்த்து கூற, அவர்களோ, “நாங்களுச்சும் பரவால்ல. அவனுங்க எங்களுக்கும் மேல. ஒருத்தருக்கு ஏதாச்சுன்னா இன்னொருத்தன் துடிச்சு போயிருவானுங்க” என்று கூறினர் பெருமையாக.
அறிவழகனோ, “நாங்க செழியன கைவிட்ட நேரத்துல அவனுக்கு ஆறுதலா இருந்து எல்லாம் பண்ணது தேவ்தான்” என்று மேலும் அவர்களின் நட்பின் பெருமையை எடுத்துரைத்தனர்.
மீனாட்சி, “நல்ல நேரமெல்லாம் பார்த்தாச்சா துணி எடுக்க” என்று கேட்க தேவ்வின் தாயோ, “பொண்ணு, மாப்பிள்ளைக்கு வேதாகுட்டி ட்ரெஸ் டிசைன் பண்ணி குடுத்துருவா. இப்போ நாம போறது நம்ம எல்லாருக்கும் ட்ரெஸ் எடுக்க தான். அதுக்கு எதுக்கு நல்ல நேரம்” என்று கேட்டார்.
மீனாட்சியோ, “உனக்கு வேற ஆளே கிடைக்கலையா அம்பிகா. போயும் போயும் அவகிட்டவா புள்ளைங்களுக்கு துணி எடுத்திருக்க. அவ யாரு, அவ ஜாதி என்ன, அவளை பெத்தவங்க யாரு எதுவும் தெரியல. அவ கையால துணி வாங்கி கட்டி நாளபின்ன புள்ளைங்களுக்கு ஏதாச்சுன்னா என்ன செய்றது.தேவையில்லாத வேலை செய்ய வேண்டாம் அம்பிகா?” என்று அவர் பாட்டுக்கு பேசி கொண்டே இருந்தார்.
அவர் பேச்சில் அனைவரும் அதிர்ந்து போக, தாமரை வாய் திறக்கும் முன்பே அம்பிகா, “மீனாட்சி நாக்கை அடக்கி பேசி பழகு. உனக்கு பிடிக்கலைன்னா இப்படிதான் ஒரு பொண்ண பத்தி அசிங்கமா பேசுவியா நீ. அதென்ன பேசற அவளுக்கு யாரும் இல்லைன்னு. அவளுக்கு அம்மா நான் இருக்கேன். அப்பாவா என்ன புருஷன் இருக்கார். இத்தனைக்கும் கூட பிறந்தவனுக்கு மேல அவமேல பாசம் வச்சு பாத்துக்க என் மகன் இருக்கான். நல்லவேளை இப்போ பேசுனா. இதேது இங்க தேவா இருக்கும் போது பேசிருந்தீனா அப்போ தெரிஞ்சுருக்கும் உனக்கு” என்று பேச, அன்பரசணும் தாமரையும் நெகிழ்ந்து போயினர்.
அறிவழகன் மனைவியை அதட்டியவர் அனைவரையும் கடைக்கு கிளம்புமாறு கிளப்ப, தாமரைக்கு புரிந்துபோனது அண்ணிக்கு தன் மகளை அறவே பிடிக்கவில்லை என்று. மனதில் உறுத்தல் இருந்தாலும் வேதாவை பார்க்க போகிறோம் என்று மகிழ்வாய் கிளம்பிசென்றனர் அதிரன் குடும்பத்தினர் அனைவரும்.
அனைவரும் ஜவுளிக்கடைக்கு வந்திருக்க உள்ளே செல்லாமல் கடைக்கு வெளியேயே காத்திருந்தனர். அன்பரசன் அவர்களின் காரின் அருகிலே நின்றிருக்க, பக்கத்தில் ஆதி இருந்தான். மற்றவர்கள் எல்லாரும் கடையின் முன் நின்றிருக்க தேவ் கார் வந்ததும் முதலில் தேவும் செழியனும் இறங்க, பின் வேதா காரை விட்டு இறங்க, அனைவரையும் பார்த்துவிட்டனர் இருவரும்.
செழியன் வேதாவின் கைகளை பிடித்து கொண்டு சாலையை தாண்ட நின்றிருக்க, அன்பரசன் பார்த்துவிட்டார் மகளை. எல்லையில்லா மகிழ்ச்சியில் கண்ணீர் வழிந்தது.
வேதா சட்டென்று தலையில் கைவைத்தவள், “அச்சோ போன் கார்ல இருக்கு. எடுத்துட்டு வந்துறேன் நீங்க போங்க மாமா. எல்லாரும் வெளியவே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்று கூற,
செழியனோ, “தேவ் நீ போடா. நானும் அவகூட வரேன்” என்று கூற வேதாவோ, “வேணாம் மாமா நான் வரேன் போங்க” என்று கூறி அனுப்பியவள் காரின் அருகே செல்ல, அதற்குள் செழியன் தேவ் இருவரும் மற்றவர்களிடம் வந்திருக்க, அதேநேரம் வேதாவின் போனை எடுத்தவள் காரின் அருகிலேயே நின்று பேசிக்கொண்டு இருக்க,
அனன்யாவோ வேகமாக வந்தவள், “ஹாய் செழியா எப்படி இருக்க, எங்க என் செல்லகுட்டி. ரெண்டு பேரும் வரீங்கன்னு இவன் சொன்னான்” என்று தேவ்வை காட்டி கேட்க, தேவ்வோ, “அதோ நிக்குது பாரு உன் உருளைக்கிழங்கு செல்லக்குட்டி” என்று வேதாவை காட்ட, செழியன் சிரிக்க அனைவருமே சிரித்தனர்.
அவளோ, “அவ ஒன்னும் உருளைக்கிழங்கு மாதிரி இல்லை. அவ என் கியூட்டி. அவளை ஏன்டா அங்கேயே விட்டுட்டு வந்தீங்க” என்று கேட்க செழியன், “மொபைல் கார்ல வச்சுட்டா எடுத்துட்டு வரேன் சொன்னா” என்று கூறினான்.
மீனாட்சியோ, “விளங்கிடும் ஏற்கனவே இதுங்க எல்லாம் அவளை தலைல தூக்கி வச்சுட்டு ஆடுதுங்க. இதுல இவளுக்கு அவ செல்லமாம். அப்படி இந்த தரித்திரத்துகிட்ட என்ன இருக்குன்னு தெரியல.எல்லாம் எனக்குன்னே வந்து வாய்க்குது” என்று நொடித்துக் கொள்ள அது அனைவரின் காதிலும் தெளிவாய் கேட்க, செழியன் பார்த்த பார்வை மீனாட்சி அரண்டு தான் போனார்.
அதிரன், ஆதி, அன்பரசன் அனைவருமே கோவமாகதான் பார்த்துக் கொண்டிருந்தனர் மீனாட்சியை. வேதா போன் பேசி முடித்தவள் தன் எதிரே ஸ்டிக்கை வைத்து கொண்டு நிற்கும் தந்தையை கண்டுவிட்டவள் எதையும் கவனிக்காமல், கண்ணீர் மல்க”அப்பா” என்று கத்த, அன்பரசன் மகளின் குரலில் திரும்பியவர், “மித்து” என்றவர் வேகமாய் அவளை நோக்கி செல்ல, அனைவருமே வேதாவின் அழைப்பில் அதிர்ந்துதான் போயினர்.
வேதா சாலையில் எதையும் பார்க்காமல் ஓடிவர, அவளை குறி வைத்தே வந்த நான்கு சக்கர வாகனம் அவளை அடித்து தூக்கி வீசி விட்டு செல்ல, ஒரேநொடிதான் கண்ணிமைக்கும் நொடியில் நிகழ்ந்து விட்டது.அடித்த வேகத்தில் அவள் தூக்கி வீசப்பட செழியனுக்கு உலகமே ஸ்தம்பித்து போனது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அச்சோ இதென்ன இப்படி ஆகிடுச்சு .. இனி என்ன நடக்குமோ .. செழியன் தான் பாவம்