Loading

அகம்-24

மடிக்கணிணியில் திரை பகிரல் மூலம் தொடர்பில் இருந்த நண்பர்களின் குரல் மட்டுமே ரோஹனின் செவிக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

 

“மச்சி! க்ளீயராய் தெரியலைடா!”

“யா! இட்ஸ் நாட் க்ளியர்!”

“ஒழுங்கா ஸ்க்ரீன் ஷேர் பண்ணுடா!”

“மச்சி! இப்படி கண்ணு மூக்கு வாய்ன்னு தனித்தனியா பார்த்தது போதும். முழு உருவத்தையும் காட்டுடா! ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறடா! அவ்ளோ ஒர்த்தா டா?” வைபவின் குரல் கொஞ்சம் அதிகமாகவே கேட்டது.

“முழுசா பார்த்துட்டு சொல்லு மச்சி! ஒர்த்தா இல்லையான்னு.. நம்ம வழக்கமா பார்க்கிற மாதிரி பீஸ் இல்லைடா! இது ரொம்பவே ஸ்பெஷல் தான். வலையில் மாட்டும்ன்னு நினைச்சேன் கிளி தப்பிச்சுடுச்சு!” எனச் சொன்னபடியே கணிணி திரையில் முழு உருவத்தையும் பெரிதாக்கிக் காட்டினான் ரோஹன். அவனோடு கணிணியில் தொடர்பில் இருந்த மற்ற மூவரின் திரையிலும் இதழ் விரித்துச் சிரித்துக் கொண்டிருந்தாள் கருவிழி.

“ஹேய்.. செம்மையா இருக்காளே டா! ரொம்பவே ஒர்த் பீஸ் தான்டா..! மெய்ன் பிக்ச்சர் எப்போடா காட்டுவே? வெறும் ஃபோட்டோவிலே வெறியேத்துறாளே இந்தப் பொண்ணு! பேர் என்னடா?”

“கருவிழி..! நான் படிக்கிற காலேஜ் தான். யூ.ஜி தான் படிக்கறா! கொஞ்சம் விட்டுப் பிடிக்கணும். பட் பிடிச்சிடுவேன். நம்ம வலையில் சிக்காத மீன் இருக்கா என்ன? நான் அப்படி சும்மா விட்டுடவும் மாட்டேன்!” என்ற ரோஹனின் இடக்கை கன்னத்தைத் தடவ கண்கள் பழிவெறியில் மின்னியது.

 

ரோஹனோடு டெல்லியில் ஒரு பெரிய கல்லூரியில் படித்தவர்கள் தான், வைபவ், முகேஷ் மற்றும் ராகவ். மூவருமே ரோஹனைப் போல் பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள். தங்களோடு பழகும் பெண்களை அழகைக் காட்டி காதல் வலையில் வீழ்த்தி, அவர்களுடனான அந்தரங்க தருணங்களை காணொளி காட்சியாய் பதிவு செய்து மற்ற நண்பர்களுக்கும் ஒளிபரப்புவது தான் இவர்களின் பொழுதுபோக்கு.

 

அவர்களைப் போன்ற பெரிய இடத்துப் பிள்ளைகளின் ட்ரெண்டும் கூட. இந்தத் ட்ரெண்டில் இப்போதுவரை முன்னணியில் இருப்பவன் ரோஹன் தான். அவனின் அழகிற்கும் தோரணைக்கும் மயங்காத, அவனின் வலையில் மாட்டாத பெண்களே இதுவரையில் யாரும் இல்லை.

மத்திய அமைச்சரின் வாரிசு, பெரிய இடம் என்ற காரணங்கள், அவன் எந்தப் பெண்ணையும் நெருங்க, போதுமானதாக இருந்தது. அவன் தன்னை ஏமாற்றி விட்டான் எனத் தெரிந்தும் கூட, வெளியே சொல்லவோ, புகார் செய்யவோ முடியாத காரணத்தால், எந்தப் பெண்ணும் இதுவரை அவனுக்கு எதிராய் வாயைத் திறந்ததே இல்லை. பணமும், அதிகார பலமும் எதையும் விலைக்கு வாங்கும் தைரியத்தையும் அவனுக்கு தாரளமாய் அள்ளி வழங்கியிருந்தது.

“மச்சி, நாங்க தான் பொண்ணுங்களை கரெக்ட் பண்ண லேட் ஆகும்! நீ மாசம் ஒரு படம் காட்டுவியே.. இப்போ ஆறு மாசமா எந்தப் படமும் போடலையேன்னு நினைச்சிட்டே இருந்தேன். ஆனால் தரமான படத்துக்கு வெய்ட் பண்ணலாம் தப்பில்லை மச்சி. ஆனால் இந்தப் பொண்ணு ரொம்ப டெம்ப்ட் பண்ணுறாடா! சீக்கிரம் படத்தை அப்லோட் பண்ணுடா!” என முகேஷ் சொல்ல,

 

மற்றவர்களின் குரலும் அதை ஆமோதித்தது.

“ஏற்கனவே டெல்லியில் பண்ணின சம்பவத்தால் தான் இங்கே மதுரையில் வந்து கிடக்கிறேன். இனிமே பண்ணுறதை யாருக்கும் சந்தேகம் வராமல், ஆதாரமே இல்லாமல் பண்ணணும்! ஏதோ என்னைப் பெத்த அந்த ஆளு, மினிஸ்டர்ங்கிறதால் ஜெயிலுக்குப் போகாமல் வெளியில் சுத்திட்டு இருக்கேன். ஜெயிலுக்குப் போறதைப் பத்தி எதுவும் கவலை இல்லைடா! ஏசி ரூமில் சகல வசதிகளோட ஜெயிலில் போய் இருக்கலாம். ஆனால் இப்படி நாம நினைச்ச பொண்ணை நினைச்ச நேரத்தில், நினைச்ச மாதிரி அனுபவிக்க முடியுமா? எனக்கெல்லாம் நிறைய சாய்ஸ் வேணும் மச்சி..!”

 

“நீ ரசிகன்டா..! கலா ரசிகன்! உன்கிட்டே மாட்டுறதெல்லாம் நச்சுன்னு இருக்குடா!”

 

“இதெல்லாம் சிம்ப்பிள் டா! நாம உண்மையாய் தான் லவ் பண்ணுறோம்னு நம்ப வச்சிட்டா போதும்! கண்ணை மூடிட்டு கட்டிலில் வந்து விழுவாளுங்க! நம்ம ஆசை தீரும் வரை யூஸ் பண்ணிட்டு தூக்கிப் போட்டுட வேண்டியது தான். துடைச்சிட்டு தூக்கிப் போடுற டிஷ்யூ மாதிரி. ஜஸ்ட் லைக் தட் தூக்கிப் போட்டுட வேண்டியது தான்.! ஆமா ஹாஸ்பிட்டலில் அந்த **** உயிரோட தான் இருக்காளா?” ஆத்திரத்தில் கண்கள் சிவக்க வினவினான் ரோஹன்.

 

“மச்சி! கோவப்படாதே டா! அவ செத்துப் போய்ட்டால் நீ உள்ளே போய்டுவடா! அவ கோமாவில் இருக்கிறதே நல்லதுன்னு நினைச்சுக்கோ! அவ செத்துட்டா பெய்ல் கூட கிடைக்காதுடா! கொலை கேஸா மாறிடும். மீடியா முழுசும் இந்தக் கேஸில் தான் கவனமா இருக்கு. நீ ரொம்ப கேர்ஃபுல்லாய் இரு மச்சி!”

 

“ம்ப்ச்! அதெல்லாம் பார்த்துக்கலாம் டா! எல்லாத்துக்கும் ஆதாரம் வேணும். அவளோட தற்கொலை முயற்சிக்கு நான் தான் காரணம்ன்னு இந்தப் போலீஸ்காரனுங்களால் நிரூபிக்க முடியலை. பணம் இருந்தால் சட்டமும் சட்டைப்பைக்குள்ளே! இந்த மினிஸ்டர் தான் பயந்துக்கிட்டு, என்னை மதுரைக்கு கடத்தி வச்சிருக்காரு. ஒரு ஆயிரம் பேருக்கு காசு கொடுத்து, நமக்கு ஆதரவா ஹேஷ்டேக்கும், போஸ்ட்டும் போடச் சொன்னால் போதும். ஷோஷியல் மீடியாவில் இருக்கிற முட்டாள்கள் நமக்கு ஆதரவா காசே கொடுக்காமல் சப்போர்ட் பண்ணுவானுங்க! எதிர்க்கட்சியோட சதி, பணம் பறிக்க தற்கொலை முயற்சின்னு கேஸை அசால்ட்டா திருப்பிடலாம். இன்னும் ஒரே மாசம், எல்லாத்தில் இருந்தும் ஈஸியா வெளியே வர்ரேனா இல்லையான்னு பாரு!” அகந்தையும் திமிரும் தெரிந்தது அவன் பேச்சில்.

 

“உன்னைப் பத்தி தெரியாதாடா! நீ எல்லாத்தையும் ஈஸியா ஹேண்டில் பண்ணிடுவியே! இதெல்லாம் உனக்கு மேட்டாரே இல்லைன்னு தெரியும். இருந்தாலும், அந்தப் பொண்ணு ஷோஷியல் மீடியாவில் நீதான் காரணம்ன்னு போஸ்ட் போட்டுட்டு தற்கொலை முயற்சி பண்ணியிருக்கு. கிட்டத்தட்ட சூஸைட் நோட் மாதிரி. என்னதான் உனக்கு ஆதரவா உங்க டாட் இருந்தாலும், உனக்கு எதிராவும் சிலர் இருக்கலாம். கவனமாய் இரு!” என வைபவ் சொல்ல, அதை மற்ற நாண்பர்களும் ஆமோதிக்க, நண்பர்களுக்கு சம்மதமாய் தலையசைத்தபடியே இணைப்பைத் துண்டித்தான் ரோஹன்.

 

அவன் மனம் முழுதும், அந்த நொடியில் கருவிழியைத் தான் நினைத்துக் கொண்டிருந்தது. தன்னைக் கை நீட்டி அடித்தவளை பழிவாங்கியே தீரவேண்டும் என்ற வெறி அவன் மனம் முழுதும் வியாபித்திருந்தது. தன் வலையில் அவளை விழ வைப்பதற்கான திட்டத்தை அவன் மனம் போடத் துவங்கியிருந்தது.

*******

அதே நேரம், ஆழ்ந்த உறக்கத்தின் பிடியிலிருந்த கருவிழியின் கண்களுக்குள் மீண்டும் அதே கனவு. அவளின் சந்தண நிற வதனத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்.

 

கண்களுக்குள் கருமணிகள் உருண்டுக் கொண்டிருக்க, அவளின் மென்கரங்கள் போர்த்தியிருந்த போர்வையை அழுத்தமாய்ப் பற்றியது. பாதி உறக்கத்திலும் கண்களிலிருந்து கண்ணீர் வழிய, பயத்திலும் பதற்றத்திலும் இதயம் அதிவேகமாய் துடித்தது. அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தவளின் வதனத்தில் இருந்ததெல்லாம் பயம், பயம் மட்டுமே..!

“மாமா!” பதற்றத்தில் முனகியவளின் விரல்களில் ஒட்டியிருந்தக் கண்ணீர்த் துளிகள், அன்று போலவே இன்றும் உதிரத்தின் பிசுபிசுப்பைச் சுமந்திருந்தது. கனவின் கனம் தாங்க முடியாது, மூச்சு விடவே சிரமமாய் இருந்தது அவளுக்கு.

 

திரும்பத் திரும்ப அதே கனவு வருவது, சொல்லவே முடியாத ஓர் உணர்வை ஏற்படுத்தியிருந்தது.
மெல்லமாய் கட்டிலில் இருந்து கீழே இறங்கியவளின், இதயம் ஆயிரம் இரயில்களின் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது. கண்களில் அவளை அறியாமலே தாரை தாரையாய் கண்ணீர் கொட்டியது. கரம் நடுங்க, குவளையிலிருந்த தண்ணீரை எடுப்பதே பிரம்ம பிராயத்தனமாய் இருந்தது.

 

முயன்று கண்ணாடி தம்ளரில் நீரை நிரப்பி, நடுங்கும் இரு கரங்களாலும் பற்றிக் கொண்டாள். தண்ணீரை மெதுவாய் அருந்தியவளுக்கு, தொண்டை அடைத்து தண்ணீர் உள்ளே செல்ல மறுத்தது.
வெகு சிரமங்களுக்குப் பின், இரண்டு மிடறு நீரை விழுங்கிவிட்டு, கட்டிலில் தொய்ந்து அமர்ந்தாள்.

 

கண்களுக்குள் மீண்டும் மீண்டும் அந்தக் கனவு வந்து வந்து போனது. தலைவிரி கோலமாய் அவள் அமர்ந்திருக்க, அவள் மடியில் அழகர் இரத்தவெள்ளத்தில் கிடக்கும் காட்சி கண்முன் வந்து வந்து போனது. ஆனால் இந்த முறைக் கனவில் அவள் கழுத்தில் பொன்தாலி பளிச்சிட்டதும் நினைவில் வந்தது. இப்போதே அழகரைச் சென்று இறுகக் கட்டிக் கொள்ள வேண்டுமென்று மனமும் உடலும் பரபரத்தது.

 

தனக்கான ஆறுதலும், தைரியமும் அவனிடம் மட்டுமே கிடைக்குமென உள்ளம் அடித்துச் சொன்னது.

“அழகரு! உனக்கு எதுவும் ஆகக் கூடாது. எனக்கு பயமா இருக்கு அழகரு!” என்றவள் இல்லாத தைரியத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு, கதவைத் திறந்து அழகர் அறையை நோக்கிப் போனாள். சத்தமே எழுப்பாமல் அவன் அறையைத் திறந்து பார்க்க, நிச்சலனமான முகத்துடன், அவன் உறங்கிக் கொண்டிருக்கவும், சில நொடிகள் நின்று, அவனின் மூச்சு சீராக வருகிறதா? என அவதானித்தவள், அவன் முகத்தையே வெறித்தபடி நின்றாள். சில நொடிகளின் பின், அவனின் உறக்கத்தைக் கலைக்க விரும்பாமல், அமைதியாய் வெளியேறியிருந்தாள்.

 

அறையிலிருந்து வெளியே வந்தவளுக்கு, படபடப்பு அடங்க மறுத்தது.

‘ஏன் இந்தக் கனவு வருகிறது? இந்தக் கனவின் காரணம் தான் என்ன? அழகருக்கு எதாவது நேர்ந்துவிடுமா? கனவில் என் கழுத்தில் தாலி தொங்கியதே.. நான் யாரைத் திருமணம் செய்திருப்பேன்? அழகரையா? ஆனால் இது கனவு போலவே இல்லையே.? நம் அடிமனதின் எண்ணங்கள் தான் கனவாய் வருமாம்? ஒருவேளை என்னையறியாமலே எனக்குள் அழகரைப் பற்றிய பயம் இருக்கிறதா?” கேள்விகள் நீண்டுகொண்டே சென்றதே ஒழிய எதற்குமே பதில் தெரியவில்லை.

மெதுவாய் நடந்து அந்தகாரம் சூழ்ந்திருந்த அந்த இருளில் பூஜையறையை நோக்கிப் போனாள். விநாயகர், முருகன் போன்ற தெய்வப்படங்களின் மத்தியில் மீனாட்சியம்மன் நின்றகோலத்திலிருக்கும் படமும் மாட்டப்பட்டிருக்க, கண்கள் அவளை அறியாமலே மீனாட்சியம்மையைத்தான் நோக்கியது.

“நல்லா சிரிச்ச மேனிக்கே பார்த்துட்டே நில்லு! எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இந்தக் கனவு, என் உசிரையே உருவின மாதிரி வலிக்கிது. கண்ணு முழிச்சதும் கனவுன்னு தெரிஞ்சாலும், இன்னும் என் அழகரோட இரத்தம் என் கையில் ஒட்டியிருக்கிற மாதிரி தோணுது. என் அழகருக்கு மட்டும் எதாச்சும் ஆச்சு, நானும் உசிரோட இருக்க மாட்டேன். நீ தான் என்னையும் அழகரையும் சேர்த்து வைக்கணும் சொல்லிப்புட்டேன்.!” தன் தாயிடம் பேசுவது போல், அந்த மதுரையை ஆளும், மீனாட்சியிடம், அந்த சொக்கநாதர் இடப்புறம் சுமந்த சக்தியிடம் வேண்டியவள், மீனாட்சியம்மன் கோவிலில் வழங்கப்படும் தாழம்பூ குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டாள்.

மனதில் உள்ளதை அம்மையிடம் கொட்டியதாலோ என்னவோ மனம் சிறிது ஆசுவாசப்பட்டது. சத்தமே எழுப்பாது தன் அறைக்கு வந்து, மீண்டும் உறங்குவதற்கு முயற்சி செய்தாள். கட்டிலில் படுத்து அவள் கண்களை மூடிய தருணம், பக்கவாட்டிலிருந்து ஏதோ கீழே விழ, திடுக்கிட்டு திரும்பியவள், மின்னி மின்னி அணைந்த அந்தப் பொருளைக் கண்டு அதிர்ந்து எழுந்தமர்ந்த அதே நேரம், விதியும் தன் விளையாட்டைத் துவக்கியிருந்தது.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
19
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. ரோஹன் பயங்கரமான வில்லனா இருக்கான் .. இவன் கிட்ட இருந்து எப்படி விழியை காப்பாத்த போறான் அழகர் ..

    1. Author

      காப்பாத்திடுவான் டியர். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💜💙

  2. ரோஹன் கொஞ்சம் மோசமானவன் என்று பார்த்தால் இவன் மிக மிக மோசமானவனாக இருக்கின்றான்.

    இவனிடம் போய் கருவிழி தானாகவே அகப்படத்துணிந்தாலே.

    மீண்டும் மீண்டும் வந்து செல்லும் கனவு. ரொம்பவும் பயந்துவிட்டால் பாவம்.

    ரோஹன் என்ன பிரச்சினைகளை உருவாக்கி வைத்திருக்கின்றானோ.

    1. Author

      உண்மை தான் டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💜