
சபதம் 6
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
தமிழ் பொருள்:
காட்டில் ஓடும் முயலை அடித்த அம்பை எடுப்பதற்குப் பதிலாக, யானையைத் தவறவிட்ட வேலை எடுத்துச் செல்வதே வீரத்திற்குச் சிறப்பு.
இரண்டு தினங்களுக்கு முன்
சென்னை எழும்பூர் ரயில் நிலையம்,பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்த மக்களை ஆச்சரியத்தோடு பார்த்திருந்தாள் மீனாட்சி. அதிகாலை வேளையில் பம்பரமாய் ஓடும் மக்களை ஒரு வித பயத்தோடு பார்த்திருந்தாள். அவள் வளர்ந்த ஊரில் பரபரப்புக்கு வேலையே இல்லை. மதுரையில் எங்கும் ஒருவித நிதானம் இருக்கும். வேலையோடு வேலையாக, அக்கம் பக்கத்தினரைக் குசலம் விசாரித்து, பேசி சிரித்தபடி பளு தெரியாமல் வேலை செய்யும் ஊர். இங்கு பம்பரமாய் ஓடும் மக்களை பார்த்ததும், இரு கண் விழிகளும் ஆளுக்கு ஒரு புறமாய் அலைபாய்ந்து நின்றது.
மகளின் நிலைதான் பெற்றோருக்கும், ஆனால் நின்று ரசிக்க தான் மனம் இல்லை. மகளின் நிலை அவர்களை முன்னேற தூண்டியது. நடந்து கொண்டிருந்த கணவனின் கைகளை பற்றிய ராதா, ” கோவிலுக்கு போயிட்டு போலாமுங்க” என்றவரின் வார்த்தை முடியும் போது நடுங்கியதை உணர்ந்து கொண்ட சுந்தரம் ஒரு தலையசைப்புடன் ஆண்டவனை நாடி சென்றார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் பாதத்தில் தன் செல்ல மகளின் நிலையை சொல்லி கோரிக்கை வைத்த சுந்தரம் தம்பதியினர், மீனாட்சியை அழைத்து கொண்டு அந்த பரந்தாமனின் ஆலயத்தை சுற்றி வந்தனர்.
மகளை மட்டும் மனதில் கொண்டு சுற்றி வந்தவர்களை, தடுத்து நிறுத்தியது அந்த குரல், “சுந்தரா!” என்றதும் தன்னை மறந்து திரும்பியவர் முன், ஜடா முடியும் மெலிந்த தோலுடன் காவி வஸ்திரம் அணிந்து வேதவல்லி தாயார் சன்னதியில் கண்கள் மூடி சம்மணமிட்டு தியானத்தில் அமர்ந்திருந்த பெரியவரை கண்டதும் தன்னை மறந்து கண்ணில் நீருடன் அவரது கால்களில் விழுந்திருந்தார் சுந்தரம்.
சுந்தரத்தின் கண்ணீர் அடிகளின் பாதங்களை தொட்டதும் கண்களை திறந்த பெரியவரின் பார்வை தன் தந்தையை குழப்பத்துடன் பார்த்திருந்த மீனாட்சியின் மேல் பதிந்தது. அவளை அருகே அழைத்தவர் பெண்ணவளின் சிரசில் கை வைத்து, “பிறந்த நோக்கம் நிறைவேறும் காலம், மாயை கலைந்து உண்மை உணரும் நேரம், அன்னை காத்திருக்கிறாள் விரைந்து செல்” என்றவர் மீனாட்சியின் வலது கையில் எதையோ கொடுத்துவிட்டு, தன் பாதத்தில் சரணடைந்த சுந்தரத்தின் தலையை வருடியபடி, ” மடையா! ஆத்தா அங்கயற்கண்ணி வம்சம் டா நீ! கடல்லயே சிக்குனாலும் கரைசேர்க்க மாட்டாளா என்ன?” என்றவர் மீனாட்சியை பார்த்தபடி, ” பொன் மக பிறப்பு உன் குல சாபம் போக்குறதுக்கு மட்டும் இல்ல, அவள் பூர்வ ஜென்ம குலத்தை மீட்க வந்த வரம்” என்றவர் மஞ்சளை எடுத்து சுந்தரத்திற்கு பூசியபடி, “துலுக்க நாச்சியை பனி அணைக்கும் வட எல்லைக்கு அழைத்து செல்; அன்னை காத்திருக்கிறாள், அவளே செயல்” என்றபடி மீண்டும் த்யானத்தில் மூழ்கினார்.
சுவாமியின் சொற்களை ஆராய்ந்த சுந்தரம், மகளை பார்த்த நொடி பெரியவரை மறந்து மீனாட்சியின் தோளைத் தொட, அவளின் பார்வையோ சித்தர் கொடுத்து சென்ற உள்ளங்கை அளவில் இருந்த வெள்ளி தாயத்தின் மேல் இருந்தது.
அந்த தாயத்தின் நடுவில் போர் வீரன், வால் ஏந்தியபடி நிற்கும் பெண்ணின் முன் மண்டியிட்டு இருப்பது போல் இருக்க, அதனை பார்த்து கொண்டிருந்த மீனாட்சியின் மன கண்ணில் பனிப்பிரதேசமும், அங்கு வெள்ளை அங்கவஸ்திரத்தோடு தலையில் முண்டாசு அணிந்த மனிதர் தொழுது கொண்டிந்ததை கண்டவள் பெற்றோருடன் பாரத நாட்டின் வட எல்லை நோக்கி பயணத்தை தொடங்கினாள்.
காஷ்மீர் மாநிலம், அசாத் கானின் பூர்வீக ஹவேலி, அமைதியும் இயற்கையும் இணைந்து, பனியால் மூடப்பட்டிருந்த முற்றத்தில் காற்றில் தூபத்தின் மணமும் தேவதாரு மரத்தின் வாசனையும் நிறைந்திருந்தது. அதிகாலை பொழுதில் மீனாட்சி, தன் பெற்றோருடன் உள்ளே நுழைந்தவளின் கண்கள் அமைதியை பிரதிபலித்தது.
பணியாள் சென்று ஆசாத் கானிடம் விருந்தாளி வந்திருப்பதாக தெரிவிக்க, ஒருவித குழப்பத்தில் இருந்தவர், தன் ஹவேலியின் உள் முற்றத்தில் நின்றிருந்த மீனாட்சியை பார்த்ததும் “யா அல்லாஹ்” என்றபடி வெள்ளை காஷ்மீரி துணியால் நெய்யப்பட்ட அங்கவஸ்திரம் தவறி கீழே விழுந்ததை கூட உணராமல், தன் வயதை மறந்து ஓடிவந்தவருக்கு சற்று முன் இருந்த குழப்பம் தீர்ந்து உள்ளத்தில் ஒருவித அமைதி நிலவியதை உணர்ந்து கொண்டார் . ஆசாத் கான், பெண்ணவள் முன் நின்று, தன் குரலைத் தழைத்து பக்தியுடன், “தாயே நீ யார் என்று என்னால் உணர முடியவில்லை, ஆனால் இந்த ஹவேலி உன்னை உணர்ந்து கொண்டது, இயற்கை உன்னை வரவேற்கிறது, அதைவிட முக்கியம் ஹூன் வம்சத்தின் உண்மை வாரிசுகளுக்கு மட்டும் அடங்கும் சுல்பிகர், நீ வந்த நொடியில் இருந்து எனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது” என்றார்.
(அரச குடும்பத்தில் பட்டத்து இளவரசனுக்கு வழங்கப்படும் சில புனித பொருட்கள் உள்ளன அவை தற்போதைய அரசர் உயிருடன் இருக்கும் வரை கட்டுப்படாது; அவர் உயிரிழந்த பின் மட்டுமே அவை செயல்படும்.)
ஹூன் வம்சத்தினரால் பாதுகாக்கப்பட்டு வழி வழியாய் தனது வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட ஒரு புனிதமான வளைந்த வாள், சுல்பிகர். சுல்பிகர் பிறை நிலவின் ஒளியில் வடிவமைக்கப்பட்டு,அதில் குர்ஆன் வசனங்களும் ராஜபுத்திர அரச முத்திரையும் பொறிக்கப்பட்டிருக்கும். தற்போதைய அரசர் உயிருடன் இருக்கும் வரை அது யாராலும் உரையிலிருந்து எடுக்க முடியாது. அரசர் உயிரிழந்த பின் உரிமை பெற்ற வாரிசு அதை எடுக்கும் போது அந்த வாளில் இருந்து மெல்லிய நிலவின் ஒளி வெளிப்படுத்தி அல்லாஹ் தவிர வேறு தெய்வமில்லை எனும் சகாதாவை மெல்லிசையாக அந்த வாரிசின் காதுகளில் ஒலிக்கும்.
அத்தகைய சுல்பிகர், மீனாட்சி உள்ளே நுழைந்த பின் அவரின் கட்டுப்பாட்டில் இல்லை. அதில் குழப்பமடைந்த ஆசாத் தன் ஹவேலியில் நடக்கும் மாற்றங்களை உள்ளுற உணர்ந்துகொண்டிருந்தார். அந்த நேரம் தனது பணியாள் வந்து விருந்தினர் வந்திருப்பதாகக் கூற, அந்தக் குழப்பத்துடனே வரவேற்பறைக்கு வந்தவர் மீனாட்சியைக் கண்டதும் தன் குழப்பங்களுக்கு விடை அவளிடம் இருப்பதாக நம்பினார்.
அதைக் கேட்ட மீனாட்சி அவரை அமைதியாகப் பார்த்து நின்றாள். எதுவும் பேசவில்லை. ஆனால் அவளது விரல்கள் தன்னிச்சையாக கழுத்தில் தொங்கியிருந்த வெள்ளி தாயத்தை தொட்டு, ” இழந்த வம்ச ஆட்சியை பறிக்க வரவில்லை ஆசாத், ஹூன் வம்சத்தின் சத்தியத்தை நிறைவேற்ற வந்தேன்” என்றவள் கண்களில் கருணையோடு, “ஹூன் வம்சம் உன் உரிமை, சுல்பிகர் உன் சொத்து, அது உன் கட்டுப்பாட்டை இழக்கவில்லை, இந்த ஹவேலியின் இளவரசி மெஹருன்னிஷா ஜாபர் கானை வரவேற்கிறது” என்றவள் ஆசாத் கான் இடுப்பில் சொருகி இருந்த அந்த குறுவாளை கண் இமைக்கும் நொடியில் கைப்பற்றியவள், “மௌனத்தின் சுல்பிகர்க்கு ஹூன் வம்ச மகளின் வணக்கங்கள்” என்றவள் அந்த குறுவாளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது நெற்றியில் ஒற்றி எடுத்தாள்.
ஒரு சின்ன சிரிப்புடன், ஆசாத் கானை பார்த்தவள் அந்த வாளின் உரையை ஒரு முறை தொட்டு உணர்ந்தபடி, ” நான் தடாதகை பிரட்டி, அன்னை மீனாட்சியின் அருளால் மெஹருன்னிஷாவின் நினைவுகளோடு பிறந்தவள். இந்த ஜென்மத்தில் நான் இதற்கு உரிமைப்பட்டவள் இல்லை” என்றபடி சுந்தரத்தையும் ராதாவையும் கைகாட்டி ” மெஹருன்னிஷா சத்தியம் நிறைவேறியதும் மீனாட்சியாய் இந்த சுந்தர பாண்டியரின் மகளாய் என் ஜென்மத்தை பூர்த்தி செய்வேன்”.
அவளின் மொழி சுந்தரத்திற்கும் ராதாவுக்கும் புரியவில்லை என்றாலும் மகள் தங்களை பற்றி பேசுகிறாள் என்று உணர்ந்து கொண்டனர்.
அதைக் கேட்ட ஆசாத் ஒரு வித இயலாமையுடன் ” ஆனால் தாயே என்னோடு இந்த ஹூன் வம்சம் முடிந்து விட கூடாதே, என் மகன்… என் மகன்” என்றவர்க்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.
அதைக் கேட்டு உரக்க சிரித்த மீனாட்சி, “அல்லாஹ் உன் வாரிசை தகுந்த காலம் வரும் போது உன்னிடம் சேர்ப்பார், ஹூன் வம்சம் வறண்டு போகாத ஜீவ நதி, இது நீ வணங்கும் இறையின் சித்தம்” என்ற மீனாட்சியின் வார்த்தையில் ஆசாத்தின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவர் அவள்முன் மண்டியிட்டு, நெற்றியை நிலத்தில் வைத்தவர் “எங்களை மன்னித்துவிடு, மெஹருன்னிசா. ஒருமுறை வீரர் குலம் தவறிவிட்டோம். ஆனால் இம்முறை… தவறமாட்டோம்”.
அதை கேட்ட மீனாட்சி தன் முன் மண்டியிட்ட ஆசாத் கான் தலையில் கை வைத்து பேச தொடங்கியவளின் குரல் அவளுடையது அல்ல—நூற்றாண்டுக்கு முன் பிடுங்கி எறியப்பட்ட வீரர் குல பெண்ணின் அமானுஷ்ய குரலாக ஒலித்தது.
“போர்வீரன் வீழ்ந்தான்.
ரணசூரன் வஞ்சிக்கப்பட்டான்.
உண்மை சிதைந்தது.
தேவி காத்திருக்கிறாள்…
அக்னி பரவட்டும்
சூரியனும் சந்திரனும் உதிக்கட்டும்
தெற்கில் காவலன் எழுவான்
கர்னி மாத “சூளின்(சபதம்) நிழல்”
மீண்டும் உயிர்ப்பிக்கட்டும்”
என்ற வார்த்தையின் வீரியம் தாங்காது காற்று சுழற்றி அடிக்க, தொலைவில் எங்கோ கோயில் மணி ஒலிக்க அதே நேரம் தர்காவில் ஓதும் சத்தம் அவர்கள் காதை எட்டியது.
கடவுளின் ஆணையாக ஒலித்த சத்தங்களை ஏற்ற ஆசாத் மீனாட்சியை நிமிர்ந்து பார்த்தபடி குரல் நடுங்க, ” நேரம் வந்துவிட்டது பேட்டி. தீயோடு எரியும் ஆதித்தனை கொண்டே ரணசூரனை குளிர்விக்க முடியும். அதையும் நீ… நீயே அவர்களை உண்மைக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்றதும் மீனாட்சி தலையசைத்தாள்.
மீனாட்சி தன் கண்கள் ஒளிர,”கர்னி மாதா என்னுள் இருந்து வழி காட்டட்டும்” என்றவளின் கழுத்து தாயத்து ஒருமுறை ஒளிர்ந்து அடங்கியது.
மீனாட்சியின் பெற்றோர் இதனை அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.
உதய்ப்பூர் மாநகரம்
பளிங்குக்கற்களை இழைத்து கட்டிய புது அரண்மனை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. அது ராஜஸ்தான் சுற்றுலாத்துறை அமைச்சர் ப்ரித்வேந்தர சவுஹான் இல்லம். பின் முப்பதுகளில் இருக்கும் ப்ரித்வி உதய்பூர் மக்களின் செல்லபிள்ளை. வேண்டி வந்தவர்களை வெறுங்கையில் அனுப்பியதில்லை.
ஆம், அவர்கள் வேண்டி வருவது ஒன்று, இவன் கொடுத்து அனுப்புவது ஒன்றாக இருக்கும். ஆனால் அதை அவர்கள் உணராத அளவுக்கு தன் வாய்ஜாலத்தில் அனைவரையும் மயக்கி விடுவான். பேச்சு திறமை இருப்பதால் தான் அரசியலில் இறங்கி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமைச்சராக இருக்கிறான்.
தற்போது அவன் ராஜஸ்தானிய கட்டிட முறைகொண்டு, அரண்மனை போன்ற ரிசார்ட் உதய்ப்பூர் மண்ணில் கட்ட இடம் தேடி கொண்டிருந்தான். அதற்கான கட்டிடக்கட்டுமான நிறுவனத்தை ஆராய்ந்தவன் காதுகளில் தெற்கு இந்தியாவில் தமிழ் நாட்டில் “ராயல் கான்ஸ்டருக்ஷன்ஸ்” நிறுவனத்தை தேர்ந்தெடுத்திருந்தான்.
அது சம்மந்தமாக ராயல் கான்ஸ்டருக்ஷனின் தற்போதைய இயக்குனர் தீவன் இளம்பரிதியை சந்திக்க, தன் அலுவலகத்துக்கு கிளம்பி கொண்டிருந்தவன் மனதில் தான் கட்டவேண்டிய ரிசார்ட்டிற்கான இடத்தை முடிவெடுத்து விட்டிருந்தான்.
“என்ன இந்த உதய்பூர் ராஜபுத்திர குடும்பத்தை சமாளிக்க வேண்டி இருக்கும், பாப்போம் நாம பார்க்காத சவாலா?” என்றபடி தனது அரசு வாகனத்தில் ஏறி அலுவலகத்தை நோக்கி விரைந்தவனுக்கு தெரியவில்லை, வருபவன் காவலன் அவனை தாண்டி தான் ராஜபுத்திர குடும்பத்து சொத்தை தொட முடியும் என்பது.
இரணசூரன் வருவான்….

