
ஆழ்வார்திருநகரி
‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு.
வயல் வெளியும் திருத்தலங்களும் உடன் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் தூத்துக்குடியில் இயற்கை எழிலோடு ஐக்கியமாகிய ஊர், ஆழ்வார்திருநகரி.
உலகப் பிரசித்தி பெற்ற தளமாகவும் நவதிருப்தியாகவும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, ஸ்ரீ ஆதிநாதர் ஆழ்வார் துணைவியார் ஸ்ரீ ஆதிநாதவல்லி திருக்கோவில் அமைந்திருக்கும் இடம் இது.
திருக்குருகூர் என்று முன்னர் அழைக்கப்பட்டு இப்போது ஆழ்வார்திருநகரி என்று மாறியிருக்கும் இவ்வூர் தான் சிவனேஷ் வீரபத்திரனின் பூர்வீகம்.
விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விவசாயி நம்மாழ்வார் – உண்ணாமலை தம்பதியரின் இரண்டாவது மகன், சிவனேஷ் வீரபத்திரன்.
மூத்தவள், மகள் பாரதி, அடுத்து புகழேந்திரன் இறுதியாய் சிவனேஷ் வீரபத்திரன்.
தூத்துக்குடியைத் தாண்டாத நம்மாழ்வாரின் படிப்பு பள்ளி இறுதி மட்டும். ஆனால் பிள்ளைகள் மூவரையும் வெளி மாவட்டத்திற்கு அனுப்பி தரமான கல்வியைக் கொடுத்திருந்தார்.
கல்வி மட்டும் ஒருவரைக் கரை சேர்த்துக் காக்கும் என்ற அதீத நம்பிக்கை கொண்ட மனிதர்.
ஊரும் மக்களும் மண்ணும் விவசாயமும் என்றிருந்தவரின் நிலை மக்களின் வளர்ச்சியை நினைத்து தன் விவசாயம் மட்டும் போதுமானது அல்ல என்று யூகித்தவர் தூத்துக்குடியில் சிறிய அளவு மளிகைக்கடையைத் துவங்கினார்.
அதன் தொட்டான வளர்ச்சி இப்போது ஒரு நடுத்தர அளவு ‘ஆதி நம்மாழ்வார் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்’ராக உள்ளது.
இப்போது, கடையை மருமகன் பார்க்க ஊரோடு விவசாயமும் பண்ணையும் என்று இருக்கிறார் மனிதர். அவருடன் என்றும் இருக்கும் பயந்த சுபாவி(?) மனைவி, உண்ணாமலை.
கணவர் சொல் மிக்க மந்திரம் இல்லை என்று எண்ணும் பெண்மணி. மாமியார், கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று சுழலும் வெளி உலகு தெரிந்தும் தெரியாதது போல் காட்டிக்கொள்ளும் பாசமிகு தாயார்.
மகள் பாரதி, தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியை. சொந்தத்தில் எடுத்த படித்த மாப்பிள்ளை வெளியே வேலைக்குச் செல்ல விரும்பாது நம்மாழ்வாரின் கடையை இப்போது பார்க்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஆதினி மற்றும் அஞ்சலி.
மகன்கள் இருவரும் அவர்களின் விருப்பமாய் தேர்ந்தெடுத்த பணியைச் செய்ய, அவர்களின் போக்கிலேயே விட்டுவிட்டார் நம்மாழ்வார்.
அடுத்து, இப்போது ஷக்தியும் சிவாவும் அறக்கப்பறக்க ஓடி வருவதற்குக் காரணமான நம்மாழ்வாரின் தாயார், தேனாட்ச்சி அம்மையார்.
அவரின் கணவர் வீரபத்திரன், சிவனேஷ் உண்ணாமலையின் கருவில் இருக்கும் சமயம் மாடு முட்டி இறந்திருக்க, அவரின் நினைவாகச் சிவாவின் பின்னோடு சேர்ந்தது அவரின் பெயர்.
ஊரில் பெயர்ச் சொல்லும் குடும்பம் தான். தலைமுறையாக விவசாய நிலமும் பண்ணையும் இருக்க, மக்களிடமும் சொந்தத்திடமும் அவர்களின் பண்பால் நல்ல மரியாதை மிக்கோர்.
ஓரளவிற்குச் சற்று பெரிய தோட்டத்துடன் கூடிய வீடு தான் அவர்களது. அந்த காலத்தில் திண்ணை வைத்துக் காட்டியிருந்த வீடு அத்தனைக் கண்ணை பறித்தது.
கீழே இருபுறமும் நீண்ட திண்ணை. அடுத்து, ஆத்தங்குடி கற்கள் பதித்த கூடம். பக்கவாட்டில் நெல், அரிசி மூட்டைகள் அடுக்க ஏதுவான ஒரு பெரிய அறை.
அடுத்து, ஐந்திற்குப் பத்து அளவில் ஒரு பெரிய பூஜை அறை, அதன் பக்கவாட்டில் சாப்பாட்டுக் கூடமும் சமையல் அறையும்.
பின்னே செல்லச் செல்ல மூன்று அறைகள் அடுத்து அடுத்து இருக்க, அதில் இரண்டு அறைகளுக்கு நடுவே ஒதுக்குப்புறமாய் மாடி ஏற மரப் படிகள்.
மேலே, நல்ல விஸ்தாரமான கூடமும் இரண்டு மூலைகளில் இரு அறைகள். நடுவே அடுத்த மாடிக்குச் செல்லும் வழியும் மேல் கூரையாக மெட்ராஸ் தார்ஸ் போடப்பட்டிருந்தது.
அந்த காலத்து வீடுகளின் கலைநயம் இப்போது இருக்கும் நவீன வீடுகளில் காண்பது சற்று அறிது தான். என்ன தான் காசை கொட்டி இளைத்தாலும் அப்போது இருந்த வடிவமைப்பும் கட்டிடக்கலையும் தனிதானே!
கீழே இருந்த ஒரு அறையில் தான் இப்போது இருந்தார், தேனாட்ச்சி.
தோட்டத்தில் கால் சருக்கி அவர் கீழே விழுந்திருக்க, வலது காலில் எலும்பு முறிவு. அந்த காலத்து உணவு உண்டவரின் உடல் வலிமைக்கு அந்த முறிவு சிறிது தான். பெரிய அளவில் இல்லை என்றாலும் எண்பதைக் கடந்தவருக்கு அதனால் சில நோவுகள்.
அவரைப் பார்க்க வந்த சொந்த பந்தம் மொத்தமும் வீட்டில் கூடிவிட, சலசலத்த மக்களின் பேச்சுகள் சென்று சேர்ந்த இடம், ஷக்தி ஆராதனா!
அதுவும் புகழேந்திரனின் புது மனைவியின் முன்னிலையில் வீட்டின் இரண்டாம் மருமகளை(?) தூற்றி பேசும் பேச்சைப் பொறுக்காது குரலை உயர்த்தினார், தேனாட்ச்சி.
“வாப்பெட்டிய மூடுங்கடி சிறுக்கிங்களா” என்றவர் குரல் வெங்கலமாக இருந்தது.
“ஆமா அவ பெரிய இவ, இவனில்லேன்னா அவனுன்னு இருக்கறவள தான் கோபுர உச்சில வைக்கும் இந்த கெழவி” என்று சடைந்தார், பாரதி.
பாரதியின் பேச்சில் ஊசி விழுந்தால் கூட சப்தமாகக் கேட்கும் அளவிற்கு அப்படி ஒரு நிசப்தம். புயலுக்கு முன்பிருந்த அமைதி அங்கு.
இனி புயலும் கன்னி வெடியும் ஒன்றோடு ஒன்று மோதும் தருணம் பல நிகழும் என்று தெரியாது பேசிக் கொண்டே இருந்தார் பேராசிரியை..
★
அவர்களின் முதல் நீண்ட தூரப் பேருந்து பயணம். கழுத்தில் சில மணி நேரங்களுக்கு முன்னர் அவன் கட்டிய தாலி, மஞ்சள் மணத்துடன் ஈரம் காயாது இருக்க, அந்த நறுமணம் கொடுத்த ஒருவித புது உணர்வோடு ஷக்தியின் தோளுரசி அமர்ந்திருந்தான், சிவனேஷ் வீரபத்திரன்.
“உங்க பாட்டிக்கு என்னவாமா?” என்று மெல்லப் பேச்சை ஆரம்பித்திருந்தாள் ஷக்தி.
“கீழ விழுந்துருக்காங்க போல, லெக் ப்ராக்சர்” என்றான் பெருமூச்சுடன்.
“வயசானவங்கள சரியா பார்த்துக்க மாட்டாங்களா?”
“அவங்க சொன்னாலும் கேட்பாங்களா என்ன?”
“ம்ம்ப்ச், என்னமோ” என்றவள் கண்மூடி சீட்டில் சாய்ந்து கொள்ள, அவள் இடது கரத்தைப் பற்றியிருந்தான் சிவா.
புதிதாய் முளைத்த தயக்கம் இருந்தாலும் ‘தன் மனைவி’ என்ற எண்ணம் கொடுத்தது ஷக்தியின் பேச்சு.
மெல்ல மெல்லத் தான் அவளிடம் செல்ல வேண்டும் என்றில்லை. இதுபோல் சில சட்டென்று தோன்றும் செயல்களும் இனி செய்யலாம் என்றொரு எண்ணம் அவன் மனதில் உதயமாகி இருந்தது.
அவளும் தன் நிலையிலிருந்து, அவளின் மனநிலையை மாற்ற வேண்டும் என்ற நினைக்கும் போது, தான் அதைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்று அவனுக்குள்ளேயே சொல்லிக்கொண்டான், சிவா.
“என்ன” என்றாள் வெளியே சன்னல் புறம் பார்வையைத் திரும்பிய படி.
“என்ன, என்ன?” என்றான் அவளைப் போல்.
“கையெல்லாம் பிடிச்..” என்றவள் வார்த்தை முற்றுப் பெறுவதற்குள் மென்மையாய் அவள் விரலை நீவிவிட்டபடி சொடுக்கெடுத்தான் ஆணவன்.
அது அவளுக்கு நிச்சயம் கூசியிருக்கும். இப்படி உரிமையாய் இதற்கு முன்பு கூட அவள் விரல் பிடித்து சொடுக்கெடுத்திருக்கிறான் தான். அது நண்பனாக. இதுவோ கணவனாக, கணவனுக்கே இருக்கும் உரிமையோடும் சற்று காதலோடும்.
அதன் பிடித்தங்களில் மாறுபடு கூட பெண்ணவளால் நன்கு உணரும்படியாகவே இருந்தது.
அவன் ஒவ்வொரு செயலையும் அவள் மூளை தன்னில் ஆழப் பதிப்பிக்கப் பார்த்தது. அவன் பேச்சு, நடை, மொழி, பார்வை இப்போது இருக்கும் நெருக்கம், இருவருக்கும் இடையே ஏற்படும் சிலிர்ப்பு, அவள் உடலில் ஏற்படும் குறுகுறுப்புடனான எதிர்பார்ப்பு என்று எல்லாம் எல்லாம் அவள் மூளை பதிவு செய்தது அவளிற்காக. அவள் வாழ்க்கையின் மேன்மைக்காக.
“வலிக்கிதா?”
திரும்பி அவனை முறைத்தபடியே, “போலீஸ் அடிங்க ஸர், வலிக்காது?” என்றவள் முகபாவமே கொடூரமாய் மாறியிருந்தது.
“மெதுவா தான் அடிசேன். ரொம்பப் பேசாத” என்றவன்,
“அதுக்கே இப்படி சிவந்துடுச்சு பாரு”
“ம்ம்.. உங்களுக்கு கைதான் ஓங்கத் தெரியும். இனி என்கிட்டையும் வாங்கிப் பாருங்க, அப்போ புரியும் மெல்லாமா அடிச்சாலும் வலிக்கும்னு”
“ரைட் விடு” என்றவன் பழையபடி கண்மூடி படுத்தக் கொண்டு, “ஸாரிலாம் கேட்கமாட்டேன்” என்றான்.
“ஐ டோண்ட் நீட் இட், பட் வில் கிவ் யூ பேக்” என்றாள்.
நிமிடங்கள் மௌனமாய் கடக்க,
“எத்தன நாள் லீவ்ல இருக்கீங்க டெஃப்டி கலெக்டர் மேடம்” என்றான் கண்கள் மூடியபடி அவள் கையை மெல்லப் பிடித்தபடி.
பக்கவாட்டில் அவன் முகம் பார்த்து, “என் புருஷனோட சஸ்பென்ஷன் முடியற வர” என்றாள் மெல்லிய குரலில்.
அதில் அவன் முகம் இறுக்கத்தைக் காட்ட, “மெடிக்கல் லீவ் தான். மைண்ட் கொஞ்சம் சேஞ் பண்ணனும்னு எடுத்தேன்” என்றாள் உடனே.
“ம்ம்” என்றபடி அவன் அமைதியாகிவிட்டான்.
அவனின் சஸ்பென்ஷனை அவனே எதிர்பார்க்காத ஒன்று. அதுவும் அவனின் தன்நிலை விளக்கங்கள் எல்லாம் காது கொடுத்துக்கூடக் கேட்காது தன்னிச்சை முடிவாக எடுக்கப்பட்டது. அதில் அவன் மனதும் பெரியதாய் அடிவாங்கியிருந்தது.
“ஷிவ்”
“ம்ம்”
“ஃபீல் பண்ணுறையா என்ன?”
கடுப்பாகிவிட்டான் அவன்.
“நீ லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா?” என்று கேட்டேவிட்டான்.
நமட்டுச் சிரிப்புடன், “லூசு தான். ஆனா முழுசா ஆகாம இருக்கத் தான் முயற்சி பண்ணுறேன்” என்றாள் கண்சிமிட்டி.
“சத்தியமா நீலாம் பொண்ணே இல்லத் தெரியுமா”
அவளின் அந்த குறுகுறுப் பார்வை அவனை இம்சித்தது. சட்டென்று ஏதோ தோன்ற, “என்னை என்ன சொல்லிச் சொன்ன?”
“யோசிச்சுச்கோங்க இன்ஸ்”
“ம்ம்ப்ச்.. போடி” என்றவன் மனநிலை சற்று சமனான நிலையிலிருந்தது. பேருந்து மெல்ல நகர ஆரம்பிக்கவும், அலைச்சலில் அவன் கண்கள் தூக்கத்திற்குச் சென்றது.
நேற்று மருத்துவரைச் சந்தித்தது, ஷக்தியிடம் காதலைச் சொல்லியது, அமுதா உடனான பேச்சு, காலை ஷக்தி தன்னை அணைத்தது, அக்காவின் அழைப்பு, அவன் ஷக்தியை அரைந்தது அதன் பின்னான ஷக்தியின் பேச்சு, நடவடிக்கைகள் என்று ஒன்றன் பின் ஒன்றாக அவன் ஆழ் மனதில் அவன் நிலைப்படுத்திக் கொண்டு வர, விழுக்கென்று எழுந்தான்.
முகத்தில் அப்பட்ட அதிர்வு. ஒரு கோர்வையாய் புள்ளிகளை இணைத்துப் பார்க்க எல்லாம் சொன்னது என்னவோ ஷக்தியின் மாற்றத்தை!
அவளே அவனை நெருங்கும் முயற்சியைச் செய்துள்ளாள் என்பது அவனுக்குப் புரிய, அத்தனை அதிர்வோடு உண்டான சந்தோஷச் சாரல் உடலில்.
சன்னல் வழிச் சாலையில் கண் பதித்திருந்தவளின் அழகு அவன் கண்ணை நிறைத்தது. அவளைப் பார்த்தபடி இருந்தவனது மனதில் தோன்றியது எல்லாம், “என் ஷக்தி, என்கிட்ட வரா” என்பது மட்டும்.
அதில் தோன்றிய மலர்ச்சி அவன் அகத்தையும் புறத்தையும் நிறைத்திருந்தது முழுமைக்கும்.
ஸ்போடிஃபையில் (Spotify) அவனின் பிரத்தியேக பிளேலிஸ்ட் இருந்த பாடலை மெல்லிய சப்தத்துடன் இசைக்கவிட்டான் அவள் செய்கையில் விளைந்த முகபாவனையைப் பார்க்க.
மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்..
விழுக்கென்று, “ஷிவ், ஓப்பன் மியூசிக் இங்க வந்து கேட்கற” என்றபடி திரும்பினாள் ஷக்தி.
“சவுண்ட் கம்மியாதான் வெச்சிருக்கேன். கேளு” என்றான்.
“இல்ல இரு. மத்தவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகும்” என்றவள் அவனின் ஏர்போட்ஸ் (Airpods) எடுத்து ஒன்றைச் சுத்தம் செய்து தன் காதில் மாட்டியவள், மற்றொன்றை அவனிடம் நீட்டினாள்.
“வெவரம் தான்” என்றான் அவள் செயலில்.
“நீ யூஸ் பண்ணுறது இல்ல? உங்காதுல இருக்க அழுக்கு எல்லாம் என்கிட்ட ஒட்டவா” என்றவள் முகம் சுழித்துச் சொல்ல,
அதில் ஒரு விரிந்த சிரிப்புடன், “இதையே கேட்க வேண்டிய நேரத்துல வேற மாதிரி கேட்பேன்.. அப்போ என்ன சொல்லுறேன்னு பார்க்கறேன்” எனறவன் முகத்தில் மத்தாப்பு பூக்கள் மந்தகாசமாய் பூத்திருந்தது.
அவன் விஷமம் புரியாதவளோ, “நீ எப்போ கேட்டாலும் இதத்தான் சொல்லுவேன். அன் ஹைஜீனிக் ஃபெலோ (Unhygienic fellow)” என்றவள் பாட்டை இசைத்துக் கேட்க, அவன் புன்னகை மாறாது அவள் முகத்தை மட்டும் பார்த்திருந்தான்.
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்..
பாடலோடு அவள் ஒன்றியிருந்த சமயம், அடுத்து வந்த வரிகளைக் கேட்டு அவள் கண்கள் விரிந்து சிவாவைப் பார்த்தாள் அத்தனை உள்ளத்து அதிர்வோடு.
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ!
அவன் கண்டுகொண்டான் என்று புரிந்ததுவிட்டது. அவள் அதை எதிர்பார்க்கவில்லை. சட்டென்று முகத்தில் ஏதோ சுறுசுறுக்கும் உணர்வுடன் ஜிவுஜிவுப்பாக இருந்தது. அவனைப் பார்க்க முடியவில்லை. அவன் கண்களில் இருக்கும் அந்த சிரிப்பும் குறும்பும் அவளைத் தன்னிலை இழக்க வைக்க போதுமானதாக இருந்தது. இப்போது அது ஏன் என்றும் புரிந்திருந்தது!
ஒரு புதிய உணர்வு, பெயரிடத் தெரியாது அவள் தவிக்க அவள் கையோடு அவன் கைகோர்ப்பதை உணர்ந்தால்!
கூச்சம் மேலிட்டது. கண்களை இறுக மூடிக்கொண்டாள், ஷக்தி.
எத்தனை ஆயிரம் முறையோ அவள் கைகளை அவன் பற்றியிருக்கிறான் தான். ஆனால் இது, இப்போது.. அம்மா உடல் மொத்தமும் அவள் வசம் இல்லாத ஒரு தவிப்பு, பெரும் தவிப்பு.
அதை உணர்ந்தவன் போல அவள் கையினை விட்டுவிட்டான். இதழ் மடித்து அதை அடக்கப் பார்த்தவளின் தோளோடு உரசியபடி அவளைப் பக்கமாக அணைத்தவன், “சீக்கிரம் பக்கத்துல வந்துடுடா குலாப்.. மெல்ல வரது எல்லாம் என்னால தாங்க முடியாது” மீசை முடி குத்த அவன் கிட்டத்தட்ட அவளை முத்தமிடுவது போல் அதீத நெருக்கத்துடன் பேசி
னான்.
அவள் காதோடு சேர்த்து அங்கிருக்கும் பூனை முடிகள் கூட சிலிர்த்தது, கூச்சத்தோடு அவள் கழுத்தைச் சாய்க்க, மேலும் தன்னை நோக்கி அணைத்தான்!
முரசு கொட்டும் அதிர்வு இருவரின் மார்பிலும்.
•••
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
8
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆழ்வார் திருநகரி பற்றியும் சிவாவின் வீடு பற்றியுமான குறிப்புகள் அருமை.
விவசாயி நம்மாழ்வார் 😍
அனைவரது பெயர் தேர்வும் அழகு. ✨ ✨
கோபத்தை ஒதுக்கி வைத்து நிதானமாக இருக்கும் நேரம் தான் நமது உணர்வுகளையும் மற்றவர்களின் உணர்வுகளையும் படிக்க இயலும்.
அவள் நெருங்கி வருகையில் நாமும் அதற்கு இசைந்து கொடுக்க எண்ணிவிட்டான்.
பாடல் மூலமாக அவள் மனதை புரிந்துகொண்டதை அவளுக்கு கடத்தியது அருமை. ❤️
மிக்க நன்றி ❤️😍