Loading

அத்தியாயம் 3

அந்த ஆடி கார் சென்னை சேலம் ஹைவேயில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

“சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே

விண்வெளி தாண்டியே துள்ளித்துள்ளிப் போகுதே

புதுவித அனுபவம் நொடியினில் பெருகிடும்

இருவரின் உயிரையும் அள்ளி அள்ளிப் பருகுதே

என்னைக் கொஞ்சம் மாற்றி

என் நெஞ்சில் உன்னை ஊற்றி”

என்று ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘காக்க காக்க’ திரைப்படப் பாடல் ம்யூசிக் ப்ளேயரில் பாடிக் கொண்டிருந்தது. அந்த பாடலைத் தவிர அந்த காரில் வேறெந்த சப்தமும் இல்லை.

ஸ்ரீ அந்த பாடலை கேட்டு கொலைவெறியானாள். ‘டேய் மங்கூஸ் மண்டையா !! என்னை இங்க நல்லா பொலம்ப விட்டுட்டு துரைக்கு situation song கேட்குதோ , சனியனே இப்போ நான் பாட வேண்டியது ” சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” சாங்க் டா. எப்படி கல்லு மாதிரி உக்காந்துட்டு வரான் பாரு தடிமாடு. இவனுக்குலாம் பீலிங்க்ஸே இருக்காதா ஜடம் ஜடம்!!!. என்னால பேசாம இருக்க முடியாதுனு தெரிஞ்சும் என்னை இப்படி தனியா பொலம்ப விட்டுட்டியே டா பாவி!!!! எனக்கும் ஒரு காலம் வரும் அன்னைக்கு உன்னை வச்சுக்குறேன். ஏழுமலையானே உன்னோட பக்தைக்கு ஏன் இந்த சோதனை’ என்று எப்போதும் போல் தன் மனதுக்குள் அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ. அவனை திட்டி திட்டி சோர்வானவள் சீட்டில் வாகாக கண்களை மூடி சாய்ந்து, நந்து விடை பெற்ற பின் நடந்த சம்பவங்களை மெதுவாக அசை போட ஆரம்பித்தாள்.

கல்லூரியில் நந்துவிடம் பல அறிவுரைகளை காது குளிரக் கேட்டு (நொந்து நூடில்ஸ் ஆகி) காரில் முன்பக்கம் ஏறி அமர்ந்தாள். அடுத்த வகுப்பிற்கு நேரம் ஆகியதால் அவள் ஏறியதும் நந்து இருவரிடமும் கையசைத்து விடைபெற்று விட்டு வகுப்பறை நோக்கி சென்றுவிட்டாள். அவள் சென்றதும் காரின் உள்ளே கனத்த மௌனம் நிலவியது. ‘ஐய்யோ இன்னும் எட்டு மணி நேரம் கிட்ட இவன் மூஞ்சியை மட்டும் பார்த்துக்கிட்டே எப்படி போறது’ என ஒரு மனம் சலித்துக்கொள்ள இன்னொரு மனமோ ‘ இவனுக்கு என்ன குறைச்சல், சும்மா ஜம்முனு சிங்ககுட்டி மாதிரி இருக்கான் , ஆர்ம்ஸ பாரு ஹைய்யோ சூர்யா என்னடி சூர்யா ஆறு பேக் (sixpack) வச்சிருந்தா பெரிய ஆளா என் செல்லத்துக்கு முன்னாடி எல்லா ஹீரோவும் ஜீரோ தான்(ஆல் ஹீரோ விசிறிகளே கட்டைய தூக்காதிங்க மன்னிச்சு), கண்ணை பார்த்தாலே ஷாக் அடிக்குதே ஷப்பா என்ன பார்வை டா, மூக்கு செம ஷார்ப்பா இருக்கே அப்படியே கடிச்சு வெக்கனும் போல இருக்கு’ என்று அவனை கண்ணெடுக்காமல் சைட் அடித்து கொண்டு மனதில் வர்ணித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக “க்கும் க்கும்” என செருமி அவளை நினைவுலகிற்கு கொண்டு வந்தான் ஹரி. அதில் தன் மனதோடு பேசுவதிற்கு முற்றுப்புள்ளி வைத்து நிஜத்திற்கு வந்தாள்.

ஹரி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது, ‘ஐய்யயோ ஸ்ரீ இப்படியா வெக்கமே இல்லாம வாயை பொலந்துட்டு சைட் அடிப்ப அவன் கேவலமா நினைச்சுருப்பான்’ என மீண்டும் தன் சிந்தனைக்குள் சென்றவளை கடுப்போடு பார்த்தவன் ‘ மறுபடியும் மனசுக்குள்ள பேச போய்ட்டாளே கடவுளே!! இவளோட ஊருக்கு போறதுக்குள்ள என் டங்குவாரு அந்துரும் போலயே’ என நொந்துகொண்டு அவள் முகத்திற்கு முன் சொடக்கு போட்டான்.

அவனை பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்த்தவள், அப்போது தன் கார் இன்னும் கல்லூரி வாயிலிலே நிற்பதை உணர்ந்தாள். அவனை பார்த்து “எதுக்கு இன்னும் கிளம்பாம இருக்க வேற யாராச்சும் வராங்களா??” என வினவினாள்.

அவனோ பதில் பேசாமல் அவளை பார்த்து சீட் பெல்ட் போடுமாறு செய்கையிலே சொன்னான்.

அவன் சொன்னதை செய்தவள் “ரொம்பத்தான் அக்கறை .சீட் பெல்ட் போடுனு வாயை திறந்து சொன்னா முத்து உதிர்ந்துருமாக்கும்” என அவனுக்கு கேட்குமாறு முணுமுணுத்தாள்.

அவள் சொன்னது கேட்டாலும் வெளியே எந்த உணர்ச்சியையும் காட்டாமலே காரை கிளப்பினான். ஆனால் மனதிற்குள்ளே சிரித்துக்கொண்டு ‘ராட்சஷி வாய் குறையுதானு பாரு. வச்ச கண்ணு வாங்காம என்ன சைட் அடிச்சுட்டு நான் பார்த்துடேன்னு தெரிஞ்சும் தைரியமா எப்படி பேசுறா பாரு. டேய் ஹரி உன் பாடு திண்டாட்டம் தான்’ என மகிழ்ச்சியோடு சலித்துக் கொண்டான்.

கார் சென்னை சாலை நெரிசலில் சென்று கொண்டிருந்ததால் அவனிடம் பேசாமல் வெளியே வேடிக்கை பார்ப்பதாக ஜன்னல் பக்கம் பார்த்துக் கொண்டு அவனைத் தான் ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தாள் ஶ்ரீ. அவனுக்கும் அது தெரிந்தாலும் ஒன்றும் சொல்லாமல் சாலையில் கவனத்தை திருப்பினான்.

கார் சென்னை பெருங்குளத்தூரை தாண்டிய பின் மெதுவாக ” ஹரி ” என்று அழைத்தாள். அவனுக்கு தெரியும் அவள் கண்டிப்பாக தன்னிடம் பேசுவாள் என்று ஏனென்றால் ஸ்ரீயால் ஐந்து நிமிடம் கூட பேசாமல் இருக்க முடியாது இவ்வளவு நேரம் பேசாமல் இருந்ததே அதிசயம் என நினைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் அவள் புறம் கண்ணை திருப்பி ‘என்ன’ என்று புருவத்தை ஏற்றி இறக்கினான்.

‘பெரிய இவன் வாயை திறந்து என்னனு கேட்டா என்னவாம்’ என மனதிற்குள் பேசியவள் சிரித்துக்கொண்டே “ஏன் ஹரி இப்போ எதுக்கு நம்ம ஊருக்கு போறோம்?? உனக்கு தெரியுமா ?? ” என மெல்ல வினவினாள்.

அவளை பார்த்து திரும்பியவன் ” உங்களை நான் கடத்திட்டு எங்கயும் போல .சோ வாய மூடிட்டு வந்தா எனக்கு நிம்மதியா இருக்கும். அப்படியே உங்களுக்கு எதுக்குனு தெரியனும்னா உங்க அம்மா கிட்ட கேட்டுக்கோங்க ” என வெடுக்கென்று கூறியவன் மீண்டும் சாலையில் தன் கவனத்தை பதித்தான். அவன் சொன்னது வலித்தாலும் தான் பேசியது தவறு , அதற்கு பதில் தான் இது என புரிந்து அமைதியாக இருந்தாள்.ஆனாலும் அவளால் ஐந்து நிமிடத்திற்கு மேல் அதை கடைபிடிக்க முடியவில்லை.

“ஏன் ஹரி, ஆது எப்படி இருக்கா அவளும் வராளா??” என வெட்கமே இல்லாமல் அடுத்த கேள்வியை தொடுத்தாள்.

அவள் பக்கம் திரும்பாமலே “ஓ!! ஆதி பேர்லாம் இன்னும் மறக்காம இருக்கிங்களா” என வெகுவாக ஆச்சிரியப் படுவது போல் நக்கல் அடித்தான்.

அது ஒன்றும் இல்லை ஆதிரா ஹரியின் உடன்பிறந்த அவனின் செல்லத்தங்கை. அவளும் ஸ்ரீயும் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம் மட்டுமே எனவே இருவரும் சொந்தம் என்பதை தாண்டி நல்ல நண்பர்களாக இருந்தார்கள் ஹரிக்கும் ஸ்ரீக்கும் அந்த பிரிவு வரும் வரை.

அதன் பின் ஸ்ரீ ஆதிராவுடன் பேசுவது இல்லை. ஆரம்பத்தில் ஆதியாக வந்து பேசிய போதும் ஸ்ரீ பேச மறுத்து விட்டதால், ஆதியும் அதன் பின் அவளை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் ஆதிக்கு மிகவும் வருத்தம் அவளுடைய மிக நெருங்கிய தோழி, தன்னை பற்றி அனைத்தும் தெரிந்த ஒரே ஜீவன் தன்னுடன் பேசவில்லை என்று பல நாட்கள் கண்ணீர் சிந்தினாள். நான்கு மாதம் முன்பு தான் ஆதிக்கு திருமணம் முடிந்தது. அதற்காவது கண்டிப்பாக ஸ்ரீ வருவாள் என ஆதி கடைசி நிமிடம் வரை வாசலை பார்த்து ஏமாந்தது ஹரிக்கு ஸ்ரீயின் மேல் இன்னும் கோபத்தை உண்டு பண்ணியிருந்தது.

தங்களுக்குள் நடந்த பிரச்சனையை தள்ளி வைத்துவிட்டு ஆதிரா திருமணத்திற்கு வருவாள் என அவனும் எதிர்பார்த்து ஏமாந்ததால் அந்த கோபமும் சேர்ந்து கொண்டு இன்றைக்கு அவள் கேட்டதும் இப்படி பதிலளித்து விட்டான்.

ஸ்ரீக்கும் அவனின் கோபம் புரிந்து தான் இருந்தது. ஆனாலும் அவன் வந்ததிலிருந்து இப்படித்தான் தன்னை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறான் என புரிந்ததால் அவளும் முறுக்கிக் கொண்டாள்.

எனவே எதுவும் பேசாமல் ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்க்க தொடங்கினாள். அது மழைக்காலம் என்பதால் லேசாக மழைக்காற்று முகத்தை தீண்டிச் சென்றது. இரவும் சரியாக உறங்காததால் அந்த சுகத்தில் தன்னையுமறியாமல் கண்களை மூடி துயில் கொள்ள ஆரம்பித்தாள்.

அவள் தூங்கியதை உறுதி செய்தவன் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை பார்த்தான். காற்றில் கலைந்த கேசம் அவள் முன் நெற்றியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தது. மென்மையாக அதை காதின் பின்புறம் ஒதுக்கி விட்ட ஹரி, குழந்தை போல் உறங்கும் அவளை ஆசையாக ரசித்துக் கொண்டிருந்தான். பளிங்கு சிலை போல உள்ள அவளது மாசு மறுவற்ற முகம் அவனுள் இரசாயன மாற்றத்தை நிகழ்த்தியது. முகத்தில் சின்னதாக ஒரு பொட்டு அதை தவிற வேறெந்த முகப்பூச்சும் இல்லாமலே அவனுக்கு அவள் பேரழகியாக தோன்றினாள். செர்ரி பழம் போன்று உள்ள உதடுகள் அவனை முத்தமிட தூண்டியது. முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன்.’இன்னும் இவளை பார்த்துட்டு இருந்தா இவ நினைச்ச மாதிரியே இவளை எங்கயாச்சும் கடத்திட்டு போய்ருவோம் போல ஹரி இது சரி இல்லை முதல கிளம்பு ‘என மூளை கட்டளையிட ஒரு பெருமூச்சோடு காரை கிளப்பினான்.

அவன் காரை நிறுத்தியதுமே லேசாக தூக்கத்தில் இருந்து கலைந்த ஸ்ரீ, அவன் தன் முடியை சரி செய்ததில் மொத்தமாக கலந்தாள். இருந்தும் அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக தூங்குவது போலவே நடித்தவள்.அவன் தன்னை ரசித்து பார்த்ததும் பின் தன்னை சரி செய்து கொண்டு வண்டியை கிளப்பியதிள் ஸ்ரீக்கு சந்தோஷத்தில் குத்தாட்டம் போட வேண்டும் போல் இருந்தது. ‘ஆக அவனுக்கு நம் மேல் இன்னும் இதயத்தின் ஓரமாக எங்கேயோ கொஞ்சம் காதல் உள்ளது” இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேண்டும் நீ போதுமே” ‘என நினைத்து வானத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

அப்போது தான் கண் விழிப்பது போல முழித்த ஸ்ரீ அவனை பார்த்து, “எங்க வந்துருக்கோம்??”என வினவினாள்.அவன் பதிலேதும் கூறாமல் சாலையிலே தன் கவனத்தை பதித்திருந்தான்.

இருந்தும் தன்னை அவன் ஆசையாக பார்த்ததில் தைரியம் வரப்பெற்ற ஸ்ரீ அவனை நோக்கி “மாமா” என ஒரு வார்த்தை தான் கூறினாள்.

அவ்வளவு தான் ஹரிக்கு எங்கிருந்து அப்படி ஒரு கோபம் வந்ததோ சடாரென ப்ரேக் போட்டவன் அவளை கழுத்தை பிடித்து “ஏய்ய்ய்ய்!!!! என்னடி கொழுப்பா நானும் பொறுமையா போன ஓவரா தான் பண்ற யாருடி உனக்கு மாமா அதான் அன்னைக்கே நீ எங்க குடும்பத்துக்கு பண்ணிய காரியத்துக்கு நீயும் வேணாம் உன் உறவும் வேணாம்னு தூக்கிப் போட்டாச்சுல்ல அப்பறம் என்ன மாமா மச்சான்னு உறவு கொண்டாடிக்கிட்டு இருக்க!!! .அத்தை சொன்னங்கன்னு ஒரே காரணத்துக்காக தான் உனக்கு இப்போ டிரைவர் வேலை பார்த்துட்டு இருக்கேன்.இன்னொரு தடவை இப்படி கூப்பிட்ட உன்னை இங்கயே இறக்கி விட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன் ஜாக்கிரதை !!!” என ஆள்காட்டி விரலை அவளை நீட்டி எச்சரித்து விட்டு வண்டியை கிளப்பினான்.

அவளுக்கு புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. ‘ஷப்பா ஒரு வார்த்தை சொன்னதுக்கு இப்படி ருத்ரதாண்டவம் ஆடிட்டான். இனிமேல் நாம வாயை திறக்கவே கூடாது.திமிரு பிடிச்சவன். ஏழுமலையானே இந்த ஆபத்தான ஜந்து கிட்ட இருந்து என்னை எந்த ஒரு சேதாரமும் இல்லாம வீடு கொண்டு போய் சேர்த்துட்டனா என் பக்கத்துல உக்கந்துருக்கானே அவனுக்கு மொட்டை போடுறேன் பா’என மனதாற வேண்டிக்கொண்டாள்.

அவனோ உள்ளுக்குள் இன்னும் கொதித்துக் கொண்டிருந்தான். “மாமா” என்ற ஒற்றைச் சொல் அனைத்து பழைய நிகழ்வுகளையும் அவன் கண்முன் கொண்டு வந்தது. அவள் செய்து விட்டுப்போன அந்த கொடுரமான கருப்பு நாளின் தாக்கம் அவனில் வந்து போக முயன்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டு காரை ஓட்டுவதில் கவனத்தை பதித்தான்.

பக்கத்தில் சென்ற காரின் ஹாரன் ஒலியில் நிகழ்காலத்திற்கு வந்த ஸ்ரீ, அப்போது தான் மணியை பார்த்தாள்.மதியம் 3.30 காலையிலும் சாப்பிடாமல் கேன்டீனில் டீ குடிக்க சென்ற போது இவன் வந்ததால் அதுவும் அருந்தாமல் வந்துவிட்டதில் வயிற்றில் இருந்து பானை உருட்டும் சப்தம் எல்லாம் கேட்க ஆரம்பித்திருந்தது. அவனிடம் இவ்வளவு வாங்கிக்கட்டிய பிறகு பசிக்கிறது என்று சொல்ல தன்மானம் தடுக்க என்ன செய்வது என தெரியாமல் வயிற்றில் தன்னுடைய கைப்பையை அழுத்தி பிடித்துக் கொண்டு உட்காந்திருந்தாள்.

அப்போது தான் அவளை பார்த்த ஹரிக்கு தாங்கள் இன்னும் சாப்பிடவில்லை என புரிந்தது. கோபத்தில் தான் சாப்பிடாமல் இருந்தால் சரி அவளையும் இப்படி கஷ்ட படுத்தி விட்டோமே என தன்னையே நொந்து கொண்டான். அவளின் பசியை கண்டதும் அவனுடைய கோபம் எல்லாம் சூரியனை கண்ட பனித்துளி போல் விலகியது.”என் செல்ல சக்கரைக்கட்டி’ என அவளை மனதில் கொஞ்சிக்கொண்டு அருகில் இருந்த மோட்டலில் வண்டியை நிறுத்தினான்.

திரும்பி அவளை பார்த்து “பசிக்கிதுனா வாயை திறந்து சொல்ல மாட்டியா உன் மூஞ்சிய பார்த்தே உன் மனசுல இருக்கதுலாம் எனக்கு கண்டுபிடிக்க தெரியாது ஒழுங்கா வாயை திறந்து சொல்லு, இப்போ இறங்கி வா சாப்பிட” என கடுகடுத்தான்.

அதில் மேலும் கடுப்பான ஸ்ரீ “எனக்கு ஒன்னும் பசிக்கலை நீயே போய் நல்லா கொட்டிக்கோ என்ன ஆளை விடு” என சிடு சிடுத்தாள். அவனோ ஒன்றும் பேசாமல் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவள் திமிறுவதை பொருட்படுத்தாமல் மோட்டலில் நுழைந்தான்.

இவளை பார்த்துக் கொண்டு போனதில் எதிரில் வந்த நபரை கவனியாமல் அவன் மீது மோதிவிட்ட ஹரி. “சாரி சாரி ” எனக் கூறிக்கொண்டே நிமிர்ந்தவன் எதிரில் இருந்தவனை பார்த்து அதிர்ச்சியில் கண்கள் விரிய ” நீயாஆஆஆஅ!!!!!!” என தன்னை மீறி கத்தியிருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்