
ஒருவித தயக்கத்தோடு நிலா, சமையல் மேடையை சுத்தம் செய்து கொண்டிருந்த, தனது தாயை நோக்கி,
“அம்மா நா… நான்…”
“உன்கிட்ட இருந்து இனி எந்த விளக்கமும் எங்களுக்கு தேவையில்ல, என்ன எங்க கிட்ட இதை பத்தி, நீ ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்.
ம்ஹிம்… ஆனா அதுல எங்க தப்பும் இருக்கு, ஆதிரனைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு, சின்னதுல இருந்தே உனக்கு சொல்லி வைச்சதால, எங்ககிட்ட சொன்னா, உன் காதல் கைகூட வாய்பில்லைன்னு நினைச்சு கூட, நீ இப்படி பண்ணி இருக்கலாம். சரி நடந்தது நடந்து போச்சு, விஷ்வா மாதிரி ஒரு நல்ல பையன் உனக்கு வாழ்க்கைத் துணையா கிடைச்சதே, எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
அவ ரொம்ப நல்ல பையன், அவன் குடும்பத்துல சில சிக்கல் இருக்குன்னு முன்னயே, எங்க கிட்ட சொல்லி இருக்கான், அங்க பொறுமையை கையாண்டு பெத்தவங்களான, எங்க மரியாதையை நிலைநாட்டுவேன்னு நம்புறேன், நம்பலாமா? இல்ல அங்கயும் நீங்க சொன்னதுக்கு மாறா தான், நான் நடப்பேன்னு நடந்துக்க போறியா?”
நிலாவின் மனம் முழுவதும் அவ்வளவு கோபம், அது அத்தனையும் மொத்தமாக ஈஸ்வரின் பக்கமே திரும்பியது, இத்தனைக்கும் காரணம் அவன் தானே, தனது பெற்றோரை தனக்கு எதிராக பேச வைத்து விட்டானே.
“கவலைப்படாதீங்க உங்க மருமகன் மனசு நோகாமையும், அவங்க குடும்பத்தார் கண்ணு கலங்காமையும் நான் பார்த்துக்கிறேன்.”
என்றபடி கோபமாக தனது அறைக்குச் சென்றவள், அன்று ஆற்றங்கரையில் வைத்து அந்த பெண் கொடுத்த டாக்டர் ரிப்போர்ட்டை, தனது புத்தகங்களுக்கு இடையே தேடத் தொடங்கினாள்.
ஒரு வழியாக அது கிடைத்ததும், தனது பர்சுக்குள் பத்திரப்படுத்தியவள், வெளியே வந்து பார்த்த போது, ஈஸ்வர் அவளது தந்தையோடு பேசிக் கொண்டிருந்தான்.
“அம்மாவோட ட்ரீட்மென்ட் மட்டும் இல்லைனா, நானும் நிலாவும் கூட உங்களோட அடுத்த வாரம் வெளிநாட்டுக்கு வந்திடுவோம். ஒன்னும் பிரச்சனை இல்ல, கூடிய சீக்கிரம் அம்மா குணமானதும், கண்டிப்பா உங்க ஆப்பரேஷனுக்கு முன்ன, அவங்களையும் கூட்டிட்டு நாங்க அங்க வருவோம். என்னால முடியாட்டியும் கண்டிப்பா நிலாவை மட்டுமாவது, அங்கு அனுப்பி வைக்கறேன் அங்கிள்.
ஒன்னு மட்டும் நினைவுல வச்சுக்குங்க அங்கிள், நிலா என்னோட உயிர், அவளுக்கு எந்த கஷ்டமும் வர விட மாட்டேன், அதனால என் மனைவியை பத்தி கவலை படாம, நீங்க நிம்மதியா உங்க ட்ரீட்மென்ட்டை பாருங்க.”
ஆதிரனிடம் அந்த மருத்துவமனையை பற்றி விசாரித்தவன், அதில் தனக்குத் தெரிந்த டாக்டர்களுக்கு சுகுமாரனின் ரிப்போர்ட்டை அனுப்பி அவரது தற்போதைய நிலையை பற்றி எடுத்துக் கூறினான். அதோடு தனது மாமனாரை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு, அவர்கள் முன்பே தொலைபேசியில் பேசி இருந்தான். அத்துடன் அங்குள்ள தனது நண்பர்கள் சிலரது அட்ரெஸ் மற்றும் தகவல்களை ஆதிரனுக்கு அனுப்பி வைத்தவன், அவர்களோடு அவனை பேச வைத்து, எந்த நேரத்தில் உதவி தேவைப்பட்டாலும், அவர்களை அனுகச் சொல்லி இருந்தான்.
ஒருபுறம் விஷ்வாவின் மீது கோபம் வந்தாலும், மறுபுறம் அவனது செய்கைகள், நிலாவின் மனதை குளிரத் தான் செய்தது. ஒரு வழியாக விருந்து முடிந்து, அவர்கள் ஆசிர்வாதத்தோடு கொடுத்த புத்தாடைகளையும் பெற்றுக் கொண்டு, கடைசியாக தனது அன்னை தந்தையை கட்டி அணைத்தவள், ஆதிரனிடம் ஒரு தலை அசைப்போடு வண்டியில் ஏறினாள்.
அவளது கண்கள் முழுவதும் தன்னவனைத் தான் சுற்றிக் கொண்டு இருந்தது. அவளது மனக் காயத்திற்கு முழு முதல் காரணமான அவனே, அதற்கு மருந்திட்டுக் கொண்டிருக்கிறான். இவன் என் வாழ்வின் வரமா இல்லை சாபமா?
என்ன முயன்றும் அவனால் ஈர்க்கப்பட்டு கொண்டிருக்கும், அவள் மனதை அடக்க வழி தெரியாது துவண்டு தான் போனாள்.
பாண்டியன் இல்லம், ஏற்கனவே பல வருடங்கள் கழித்து நடக்கும் திருவிழாவிற்காக, உறவுகளின் வருகையால் நிறைந்திருந்த பாண்டியன் இல்லம், இன்று பல வருடங்கள் கழித்து வீடு திரும்பும், தங்களது குடும்ப வாரிசை வரவேற்க, பலமான ஏற்பாடுகளோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
ஆனால் அவர்கள் அறியவில்லை அவன் தன் துணையோடு வந்து, அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுக்கப் போகிறான் என்று.
ஈஸ்வர பாண்டியனுக்கு விஷ்வாவின் மீது, அந்த நேரத்தில் கோபம் இருந்தது என்னவோ உண்மை தான், ஆனால் அவன் அங்கிருந்து சென்ற பிறகு, தனது அவசர முடிவால் ஏற்பட்ட அவனது பிரிவை எண்ணி, தனக்குள்ளேயே வருந்தத் தொடங்கினார்.
வெளிப்படையாக அவர் கூறாவிட்டாலும் பல வருடங்கள் கழித்து வரும், தனது பேரனையும், இந்த வீட்டின் உயிர் நாடியான மூத்த மருமகளையும் காண, ஆவலாகவே இருந்தார். சூர்யாவோடு நலிந்த நிலையில் வந்திறங்கிய சிவகாமியின் நிலை கண்டும், அவரது உடல்நிலையை பற்றி சூர்யா எடுத்து கூறியதை கேட்டும், குடும்பத்தார் அனைவருமே கவலையுற்றனர்.
இந்த நிலையில் உள்ள மருமகளோடு, தான் தானே அன்று தனது பேரனை வெளியே அனுப்பினேன் என்று உணர்ந்த, ஈஸ்வர பாண்டியன் மிகவும் வருந்தினார்.
சிவகாமி அந்த வீட்டில் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை, முன்பே விஷ்வா செய்து வைத்திருந்ததால், அங்குள்ளோருக்கு எந்த ஒரு வேலையும் இல்லை. அவரை வீட்டில் இருந்தபடியே கவனித்துக் கொள்ள, செல்லம்மாவோடு ஒரு செவிலியரையும் விஷ்வா நியமித்திருந்தான். அதோடு தினமும் வந்து சிவகாமி அம்மாவை பரிசோதித்துச் செல்ல, அதே ஊரைச் சேர்ந்த ஒரு டாக்டரையும் ஏற்பாடு செய்திருந்தான்.
தங்களுக்கான உணவை தயாரிக்கவும், சில வேலையாட்களை நியமித்திருந்தான் விஷ்வா. அதில் இருந்தே அவனது ஒதுக்கத்தை கண்டு கொண்ட குடும்பத்தாருக்கு, சற்று வருத்தமாக இருந்தது. எப்படியோ சிவகாமிக்காக அவன் இங்கு வந்தாலும், வெகு நாட்களுக்கு பிறகு, அவனை காணப் போகும் சந்தோஷத்தில், அவனுக்கு பிடித்த உணவுகளை எல்லாம் ஆசையாக செய்து கொண்டிருந்தார் தேவகிப் பாட்டி.
அவரை சுற்றி நின்று கொண்டு, அகல்யாவும் மேனகாவும் அவரை கேலி செய்து கொண்டிருக்க, அவர்களுக்கு சற்று தள்ளி சிவகாமிக்காக ஊட்டச்சத்து பானத்தை தயார் செய்து கொண்டிருந்தார் ராஜலட்சுமி. அவர் அருகே அமர்ந்தபடி, தனது மகள் அகல்யாவின் முகத்தில், வெகு நாட்களுக்குப் பிறகு வந்த புன்னகையை , யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தார் விஜயலட்சுமி.
எப்போதும் கலகலப்பாக எதையாவது பேசியபடியே இருந்த அகல்யா, ஏனோ சில வருடங்களாகவே மௌனச்சிறையில் தன்னைப் பூட்டிக் கொண்டாள். அதோடு எப்போதும் பாண்டியன் இல்லத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பவள், சில மாதங்களாய் விஷேச தினங்களில் கூட இங்கு வருவதில்லை.
எதாவது வேலை இருப்பதாகக் கூறி இங்கு வருவதை தவிர்த்து விடுவாள். இப்போது கூட வெகு வருடங்கள் கழித்து வரும் திருவிழாவிற்காக, பாண்டியன் இல்லத்திற்கு செல்லலாம் என்று விஜயலட்சுமி அழைத்த போது, காலேஜில் ஸ்பெஷல் க்ளாஸ் இருப்பதாக சொன்னவள், சிவகாமியும் விஷ்வாவும் இன்று இங்கு வருவதை அறிந்து, அவர்களைக் காண ஆவலாக வந்திருந்தாள்.
“அண்ணி கவனிச்சீங்களா? நாம இங்க வரும் போதெல்லாம், ஆச்சி உடம்புக்கு முடியலைன்னு சொல்லி, கட்டிலை விட்டே எழுந்திரிக்கல, ஆனா இப்ப மாமா வர்றாங்கன்னு தெரிஞ்சதும், எப்படி விதவிதமா சமைச்சுகிட்டு இருக்காங்க பாருங்க.”
“அது மட்டுமா பத்து வயசு குறைஞ்சிட்ட மாதிரி, என்ன ஒரு சுறுசுறுப்பு பார்த்தியா? கால் ஒரு இடத்துல நிக்காம பம்பரமா இல்ல சுத்துது.”
அசோகாவை பதமாக கிண்டிக் கொண்டிருந்த தேவகிப் பாட்டி, பாத்திரத்தை பார்த்தபடியே,
“அட பக்குவத்துக்கு வந்திடுச்சான்னு தெரியலையே, யாராச்சும் கொஞ்சம் இதை சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க?”
என்று அவர் சொன்னது தான் தாமதம், மேனகாவும் அகல்யாவும் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னே வர, அவர்கள் இருவரின் கன்னத்திலும் தனது கைகளை கொண்டு இடித்தவர்,
“வெட்டியா பேசிட்டு இருக்காம, போய் தேங்காயை துருவுங்கடி, அப்ப தான் பால் கொழுக்கட்டை கிடைக்கும். இல்லாட்டி இரண்டு பேரும் இன்னைக்கு பட்டினி தான்.”
“தேவகி மாமா வர்றாங்கன்னு ஓவரா ஆடாத.”
அவர் இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அகல்யாவை முறைக்க,
“சரி சரி மாமாக்கு பால் கொழுக்கட்டை பிடிக்குமுங்கற ஒரே காரணத்துக்காக, அதுவும் அதுக்காக மட்டும் தான் போறேன். மொறைக்கிறதை விட்டுட்டு அசோகாவை கிண்டுங்க அடி பிடிச்சிடப் போகுது.”
மற்றவர்கள் வாய்விட்டு சிரிக்க, விஜயலட்சுமி தான் யோசனையாக பேசத் தொடங்கினார்.
“அம்மா நான் சொல்லறேன்னு தப்பா நினைச்சுக்காத, எந்த நம்பிக்கையில இதெல்லாம் செஞ்சிட்டு இருக்கீங்க? விஷ்வா நம்ம ஒட்டு உறவே வேண்டாமுன்னு தான், சமைக்கிற ஆட்கள் முதற்கொண்டு கூட்டிட்டு வந்திருக்கான். இதுலயே அவனுக்கு நம்ம மேல இருக்கற கோபம் பத்தி உங்களுக்கு தெரியலையா?”
என்று கூற அங்கு கணத்த அமைதி.
“விஷ்வாவோட கோபத்துலையும் ஒரு நியாயம் இருக்குது இல்லையா அண்ணி? அன்னைக்கு மாமா பேசும் போது நம்மள்ள யாராச்சும் ஒருத்தராவது, அதை தப்புன்னு சொல்லி அவனுக்கு ஆதரவா நின்னோமா? இல்லையே, பின்ன பிள்ளைக்கு நம்ம மேல கோபம் இல்லாமையா இருக்கும்?”
“சரி தான் அந்த நேரத்துல நானாவது, என் பேரனுக்கு ஆதரவா இருந்திருக்கனும்.”
“ஆமாம் அத்த அதோட சிவகாமி அக்காவுக்கு உடம்பு சரியில்லாத அந்த நேரத்துல, கல்யாண பேச்சை எடுத்தது தான் ரொம்ப பெரிய தப்பாகிப் போச்சு.”
“என்ன பேசற ராஜீ? அப்பாக்கு மட்டும் சிவகாமி அண்ணி மேல அக்கறை இல்லையா என்ன? அப்பா எந்த நிலைமையில அப்படி ஒரு முடிவு எடுத்தார்ன்னு உனக்கு புரியலையா? திடீர்னு கல்யாணம் நின்னு போச்சுன்னா, அது இந்த குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம், அதை காப்பாத்தத் தானே அப்பா அப்படி ஒரு ஏற்பாட்டை பண்ணாரு?”
“புரியுது அண்ணி, ஆனா விஷ்வாவோட மனசையும் நாம புரிஞ்சுக்க வேணாமா? ஏற்கனவே பொண்ணு வீட்டுக்காரங்க சுமத்தின பழி ஒரு பக்கம், அதனால அக்காவுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஒரு பக்கமுன்னு, மனசு நொந்து போய் இருந்த பிள்ள எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கும்?”
“யார் கண்ணு பட்டுச்சோ கல்யாணமாகி சந்தோஷமா இருக்க வேண்டிய என் பேரன், இத்தனை உறவையும் விட்டுட்டு, யாருமே இல்லாதது போல தனியா வாழற நிலைமை, ஆனா இப்போ அவன் அம்மாவுக்காகவாச்சும் இங்க வாரானே, எங்க அவனை பார்க்காமலே கண்ணை மூடிடுவேனோன்னு நினைச்சேன்?”
தேவகி முந்தானையில் கண்களை துடைத்தபடி கூற, மேனகாவும் அகல்யாவும் அவரை இருபக்கமும் நின்று அணைத்துக் கொண்டனர்.
“பாவம் எம் பேரன் தொழிலையும் பார்த்துக்கிட்டு, உடம்பு முடியாத தன் அம்மாவையும் பார்த்துக்கிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான். சரவணனுக்கு நிதிலா கிடைச்ச மாதிரியே அவனுக்கும் ஒரு நல்ல பொண்ணு வாழ்க்கை துணையா கிடைச்சு, சரவணன் கல்யாணத்தப்பவே விஷ்வாக்கும் கல்யாணம் முடிஞ்சா, அடுத்த வருஷம் அந்த காளியாத்தாளுக்கு விரதம் இருந்து பூ மிதிக்கறேன்னு வேண்டி இருக்கேன்.”
“ஏன் த்தே இது உங்களுக்கே ஓவரா தெரியல? திருவிழா முடிஞ்சு கல்யாணம் வச்சிருக்கோம், அதோட இத்தனை பிரச்சினைக்கு பிறகு, இப்ப தான் விஷ்வா தம்பி ஊருக்குள்ளையே வருது, இப்படி இருக்கும் போது நீங்க சொல்லறது எப்படி நடக்கும்?”
அவ்வளவு நேரம் சாதாரணமாக இருந்த அகல்யாவின் முகம் சட்டென்று வாடியது, அதை கண்டு பேச்சை மாற்ற எண்ணிய மேனகா,
“அம்மா யாரோட யார், எப்ப சேருவாங்கங்கறது கடவுள் போட்ட முடிச்சு, நான் கூடத் தான் அகல்யா மனம் போல மாங்கல்யம், இந்த வருஷமே அமையனும்னு வேண்டி இருக்கேன், ஆச்சியோட வேண்டுதல் பழிச்சா எல்லாருக்கும் சந்தோஷம் தானே, நாமளும் வேண்டிப்போம் நல்லதே நடக்கும்.”
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விஷ்வா பொண்டாட்டி கூட வந்து இறங்க போறான் .. இது தெரியாம இவங்க இருக்காங்க ..
ஆமாம் ஆமாம் 🙂