Loading

யான் நீயே 24

அபிராமி நிறைந்த மனதுடன், முகம் கொள்ளா மலர்ச்சியுடன் தன்னுடைய மூத்த மகனுக்கும், மருமகளுக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க, நிலைப்படியை கடந்திட மீனாள் வலது பாதத்தை உயர்த்திய நொடிப்பொழுதில் தன்னுடைய சுண்டு விரலை அவளின் சுண்டு விரலோடு கோர்த்திருந்தான்வீரன்.

மீனாளின் விழிகள் மிதக்கும் காதலோடு தன்னவனை ஏறிட…

இருவரின் பாதமும் ஒருசேர வீட்டிற்குள் நுழைந்தது.

“லவ்வுல சும்மா தெறிக்க விடுறண்ணே! எங்க கத்துக்கிட்ட?” வீரனின் காதில் மெல்ல கிசுகிசுத்து வேகமாக அவன் கண்ணிலிருந்து மறைந்திருந்தான் லிங்கம்.

“இந்தப்பய கண்ணுல ஒன்னும் தப்பமாட்டேங்குது. கேலியா பண்ணி அசடு வழிய வைக்கிறான்.” வீரன் முணுமுணுக்க…

“ஹான்… என்ன மாமா?” என அவன் முகம் பார்த்துக் கேட்டிருந்தாள் மீனாள்.

“உன்னைய இப்போவே இங்கட்டே கட்டிக்கணும் போலிருக்குடி!” என்று அவன் சொல்ல… மீனாள் திறந்த வாய் மூடாது அவன் சொல்லியதில் அரண்டு பார்த்தாள்.

“என்னட்டி இப்புடி பாக்குற… கட்டிக்கிறேன்னுதேன் சொன்னேன். அதுக்கே இந்த ரியாக்ஷனா?” என்றவன், “அப்போ மத்ததுக்குலாம்?” எனக் கேட்க… மீனாளுக்கு அதிர்வுகள் கூடிக்கொண்டே போனது.

இந்த வீரன் அவளுக்கு முற்றிலும் புதிது. இவன் தனக்கான வீரன்… இவனின் இந்த முகம் தனக்கு மட்டுமே காட்டும் முகமென்று மீனாளுக்கு புரிந்தது.

புரிந்தது வீரனின் காதலின் ஆழத்தை அவளுக்கு பறைசாற்றியது.

“லவ் யூ மாமா.” மனம் முழுக்க வீரனின் காதல் மலையளவு கூடி நிற்க, சுற்றம் மறந்து தன்னைப்போல் அவன் முகம் பார்த்து கூறியிருந்தாள்.

மீனாள் முதல் முறை தன் நேசத்திற்கு வார்த்தை வடிவம் கொடுத்திருக்க… வீரனுள் சுகமான ராகம் இசைத்தது.

வீரன் திரும்ப சொல்ல வேண்டுமென்று மீனாள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் மொழிந்ததற்கு பிரதிபலிப்பை அவனது கண்கள் காட்டிக்கொடுத்தது.

“முற்றத்துல உட்கார்ந்திருக்கோம் தங்கம்!” பார்வையை சுழலவிட்டான். அப்பத்தா பூஜை அறையில் இருக்க… அபிராமி அடுக்கலைக்குள் தேநீர் போட்டுக் கொண்டிருந்தார். லிங்கம் மாடிப்படிகளில் அமர்ந்து அலைப்பேசி பார்த்துக்கொண்டிருக்க, பாண்டியனும் சுந்தரேசனும் சற்று தள்ளி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“இருக்கட்டும் மாமா. எம் மாமா நான் செல்லுறேன்” என்றாள். அசராது.

“இம்புட்டு நாளா இந்த தங்கம் எங்க ஒளிஞ்சிருந்தாங்களாம்?”

“உங்க சட்டை பைக்கு பின்னாடி” என்றவள், மீனாட்சியின் வருகையில் வாய் மூடிக்கொண்டாள்.

வீரன் அவள் சொன்னதன் அர்த்தம் விளங்கி… தன் இதயத்தை நீவிக்கொண்டான். அதீத சந்தோஷத்துடன்.

“விளக்கேத்திபுட்டு… செத்த நேரம் செண்டு குளிச்சிட்டு வேற துணி மாத்திக்கத்தா” என்றார் மீனாட்சி.

“சரிங்க அம்மத்தா” என்று சத்தமே இல்லாது மொழிந்துவிட்டு மீனாள் பூஜை அறை செல்ல… “நீயும் போ அப்பு” என்றார் மீனாட்சி.

மீனாட்சி அம்மனின் முழு உயர படத்திற்கு முன் விளக்கேற்றிய மீனாள் கண்கள் மூடி முணுமுணுக்க, உள்ளே அவள் பக்கம் சென்று நின்ற வீரனின் பார்வை விரிந்து குவியும் அவளின் வதனத்தின் மீதே!

அங்கு நிலவிய நிசப்தத்தில் மீனாளின் மெல்லிய முணுமுணுப்பும் வீரனுக்கு கேட்டது.

“நான் கேட்டன்னு எம் மாமாவை எனக்கே எனக்குன்னு கொடுத்துபுட்ட… ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமாட்டிக்குத்தா. என் மாமாவை நான் எப்பவும் கஷ்டப்படுத்திடக்கூடாது. என்னால மாமா வெசனப்பட்டு நின்னுச்சுன்னாக்கா… உனக்கும் எனக்கும் சடவாகிப்போவும் ஆமாம்” என்றவள் மேற்கொண்டு அம்மனிடம் என்ன பேசியிருப்பாளோ,

அவள் பக்கட்டு சாய்ந்த வீரன்,

“போதும் தங்கம், ஆத்தா பாவம். நீ மிரட்டுறதுல பயந்துடப்போறாங்க” என்று சிரியாது சொல்ல…

“மாமா” என்று அவனின் விலாவில் இடித்து, “நீங்க வரலன்னு நெனச்சேன்” என்று சொல்லிய பின்னரே தன் செயல் உணர்ந்தாள்.

வேகமாக தலை கவிழ்ந்துக்கொள்ள…

“உனக்கு உரிமை ஜாஸ்த்தியாவே இருக்கு” என்றான்.

“என்னண்ணே ஆத்தா முன்னுக்கவே ரொமான்ஸா?” என்று லிங்கம் வர,

“நீயி அடங்கமாட்டியாடே?” எனக்கேட்டு வெளியேர முயன்ற வீரனின் மார்புச்சட்டையை பிடித்து இழுத்தவளாக அவனது நெற்றியில் குங்குமம் வைத்து, சட்டையை விட்டாள்.

கசங்கிய தன் மார்புச்சட்டையை இமை தாழ்த்தி பார்த்தவன், நீவி விடத் தோன்றாது மேல் கண்களால் தன்னவளை பார்த்து… மின்னல் வேகத்தில் அவளின் நெற்றி முட்டி விலகியிருந்தான்.

விலகிய வேகத்தில் லிங்கத்தை இழுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்திருந்தான்.

“அண்ணே!” என்று லிங்கம் ஏதோ சொல்லவர, அவனின் வாயிலே கையை வைத்து மூடினான் வீரன்.

“நீயென்ன கேட்கப்போறன்னு தெரியுது. ஏம்டே என்னையவே கவனிச்சு பாக்குற? அதேன் உனக்கும் சின்னக்குட்டி மேல விருப்பம் வந்துடுச்சுல. பொறவு என்னைய ஏன் ஒரண்டை இழுக்குற?” எனக் கேட்டான்.

“அண்ணே!”

“என்னடே?”

“எனக்கே இன்னுமாட்டி சரியா விளங்குல. நீயி எப்படி?” வெளிப்படையாக தெரியுமளவிற்கு காட்டிக்கொண்டிருக்கிறோமா என்று வினவினான்.

மீனாள் வீரனை நான்கு வருடங்களாக விரும்புகிறாள். அவள் அதனை முதலில் சொல்லியது லிங்கத்திடம் தான். அதன் பின்னர் அவள் உண்மையிலேயே வீரனை விரும்புகிறேன் என்று சொல்லியது உண்மை தானா என லிங்கத்திற்க்கே பலமுறை சந்தேகம் வருமளவிற்குத்தான் மீனாள் நடந்து கொண்டிருக்கிறாள். ஒரு நொடி கூட வீரனின் மீதான பிடித்தத்தை பட்டவர்த்தனமாகக் காட்டியதில்லை.

வீரன் மீனாளை நேசிக்கிறான் என்பதே நாச்சி சொல்லிய பின்னர் தான் லிங்கத்திற்கு தெரியும். அப்போதும் வீரன் தான் கேட்டதற்கு மறுக்காமல் இருக்கவே உண்மையென புரிந்துகொண்டான். கடந்த மூன்று நாட்களாகத்தான் வீரனும் தன் காதலை அப்பட்டமாக பிறர் பார்வை அறிய காட்டுகிறான்.

அவர்களாக வெளிக்காட்டிடாது மற்றவர்களுக்கு தெரியவே இல்லை. வேண்டுமென நிலையாக இருந்தவர்களின் மனமே தெரியாமலிருந்திட, வேண்டாமென்று மறுத்து நின்று… தன் மனதையே இரு நாட்களாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிகிறான். அப்படியிருக்க வீரன் இப்படிக் கேட்டால்?

“எப்புட்ரா?” என்று தானிருந்தது லிங்கத்தின் பாவனை.

“நீயி எம் தம்பிடே… நான் கவனிக்க அது ஒன்னு போதும்” என்ற வீரனின் பாசம் லிங்கத்தை நெகிழ்த்தியது.

“இனி அப்படியிருக்க முடியாதே” என்ற லிங்கம், “இதுக்கு பொறவு எங்க அண்ணே ஃபோகஸ் முழுக்க எம் மதினி மேலத்தானாக்கும்” என்று வார்த்தைக்கு வார்த்தை வீரனின் கன்னம் இடித்து சொல்லிட…

“அடேய் வலிக்குதுடே” என்று கன்னத்தை கை வைத்து மறைத்தான் வீரன்.

“அவன்கிட்ட என்னடே வம்பு பண்ணிட்டு இருக்க?” என்ற பாண்டியன், “அபிராமி” என்றழைக்க… கணவரின் குரலுக்கு வேகமாக வந்தவர், “சாப்புட்டு போய் படு ராசா” என்றார் லிங்கத்திடம்.

“நேரம் ஏழு தானுங்களே ஆவுது” என்ற லிங்கம், வீரனின் புறம் திரும்பிட…

“கல்யாண வயசு வந்தும் வெவரம் போதாம இன்னும் உடன் பிறந்தவன் வேட்டியவே புடிச்சிக்கிட்டு சுத்து” என்று துண்டினை எடுத்து உதறியவராக, “வாங்க மச்சான் சாப்பிடுவோம்” என்று சுந்தரேசனை அழைத்துக்கொண்டு உணவு கூடம் சென்றார் பாண்டியன்.

“என்னத்துக்கு சடைச்சிட்டு போறாய்ங்க?” லிங்கம் வீரனிடம் கேட்க…

“நீயி அதுக்குலாம் சரிப்பட்டு வரமாட்ட ராசா” என்றார் அப்பத்தா.

பாண்டியன் சொல்லியதிலேயே கட்டுப்படுத்தி வைத்திருந்த சிரிப்பினை அப்பத்தாவின் கூற்றில் வெடித்து சிதறவிட்டான் வீரன்.

“என்ன சொல்லுது அப்பத்தா? நீயி என்னத்துக்கு இப்புடி சிரிக்கிறண்ணே?”

லிங்கம் மீண்டும் மீண்டும் என்னவென்று தெரிந்துகொள்ள கேட்க, வீரனின் சிரிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

வீரன் அப்படி ஆர்பாட்டமாக சிரிப்பதை அவனது குடும்பமே ஒருவித ஆச்சரிய நிறைவுடன் பார்த்திருந்தனர்.

வீரன் இப்படி வெளிப்படையாக உணர்வுகளை என்றுமே காட்டியதில்லை. புன்னகை கூட அளந்து தானிருக்கும். அவனின் இந்த மகிழ்விற்கான காரணம் மீனாள் என்பதே உண்மை. அதனை அனைவராலும் உணர முடிந்தது.

உணவு கூடம் நோக்கிச் சென்ற பாண்டியன், சுந்தரேசன் கூட நின்று திரும்பிப் பார்த்தனர்.

அனைவரின் பார்வையும் தன்மீதே நிலைத்திருப்பதை கண்ட வீரன், “அது…” என்று வாழ்விலே முதல் முறை தடுமாறியவனாக எல்லோர் முன்பும் நிற்க முடியாது மாடியேறிட…

“அங்குட்டு உம்ம ரூமுல மீனாள் இருக்காய்யா. நீயி செத்த நேரம் இங்கன இருக்கும் ரூமுக்குள்ள ஓய்வெடு” என்றார் அபி.

அப்பத்தாவின் அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்த வீரன்… தனக்குள் சிரித்தவனாக நெற்றியில் தட்டிக்கொண்டான்.

“வீரா கொஞ்சம் அடக்கி வாசிடா!” சொல்லிக்கொண்டவன் ஓய்வாக படுக்க, சட்டைப்பையில் வைத்திருந்த அவனது அலைப்பேசி ஒலித்தது.

திரையில் ஒளிர்ந்த தங்கப்பொண்ணு என்னும் எழுத்துக்களை கண்களில் கனிவோடு பார்த்தவன், அழைப்பு ஏற்று காதில் வைத்தான்.

“எங்க இருக்கீய்ங்க மாமா? ரூமுக்கு வரல?” அவளின் வார்த்தைகளில் தெரிந்த அவனுக்கான தேடலில் நெஞ்சம் குளிர்ந்தான்.

“கீழதேன் இருக்கேன். இப்போ அங்குட்டு வர முடியாதுத்தா” என்றான்.

“ஏன்?” என்று கேட்டவளின் குரலிலிருந்த ஏமாற்றத்தை வீரனால் புரிந்துகொள்ள முடிந்தது.

“அடியேய்… இப்போ என்னைய உன்னோட அங்குட்டு இருக்க விடமாட்டாய்ங்க” என்றான்.

“உங்களைத்தானே விடமாட்டாய்ங்க… நான் அங்குட்டு வரேன்” என்றவளிடம்,

“ஏன் சொல்றாய்ங்கன்னு விளங்குதா இல்லையா தங்கம்? செத்த நேரந்தேன்” என்றான்.

“மாமா…”

“டெம்ப்ட் பண்ணாதடி” என்று வைத்துவிட்டான்.

அவன் இறுதியாக சொன்னதில் தான் அவளுக்கு எல்லாம் விளங்கிற்று.

“அச்சோ” என்று இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டவளுக்கு அப்படியொரு வெட்கம்.

மீனாளுக்கு அபி உணவினை அறைக்கே கொண்டு சென்று கொடுத்துவிட்டு, “குளிச்சிட்டு லேசு சேலையா உடுத்திக்கத்தா. சாப்பிட்டு இங்கவே இரு. அத்தை கூப்பிடுவாய்ங்க, அப்போ கீழ வா” என்று சொல்லிச் சென்றார்.

அபி சொல்லியதற்கு எல்லாம் தலையாட்டிவளுக்கு அவர் சென்ற பின்பே தன்னுடைய துணிகள் அடங்கிய பெட்டி கீழே இருப்பது நினைவு வந்தது.

அபி இப்போ கீழ வரக்கூடாதென்று சொல்லிச்சென்றதால்… மீண்டும் வீரனுக்கு அழைத்தாள்.

“கொன்னுடுவா போல!” என்று சுகமாக அலுத்துக்கொண்டவன்,

“தங்க பொண்டாட்டி… இப்போ நான் அங்குட்டு வந்தாக்கா, அப்பத்தா அது வச்சிருக்க தடியாலே சாத்திப்போடும்” என்றான்.

வீரன் சொல்லிய தங்க பொண்டாட்டி அவளின் இதயத்தில் தித்திப்பாய் இறங்கிட… “நல்லாயிருக்கு மாமா” என்றாள்.

“எது நான் அடி வாங்குறதா?”

“அச்சோ மாமா… எம் பெட்டி கீழயிருக்கு. குளிக்கணும். கொண்டு வாங்க. அத்தை இப்போதேன் வந்துட்டு போனாங்க. கீழ கூப்பிடும் போது வான்னாங்க. பெட்டி வெயிட்டா இருக்கும். அவங்கனாள தூக்கிட்டு படியேற முடியாது” என்றாள்.

“இப்போ அங்க வர முடியாது தங்கம். அப்பத்தா நல்ல நேரம் அது இதுன்னும். வாட்ரோபில் ரைட் சைட் செக்கெண்ட் டோர் ஓப்பன் பன்னு… முன்னுக்கவே ஒரு பிளாக் பாக்ஸ் இருக்கும். மத்ததும் அங்கவே பக்கட்டு இருக்கும்” என்றவன் வைத்துவிட்டான்.

“என்ன வச்சிட்டாய்ங்க” என்று அலைப்பேசியை பார்த்தவள் அவன் சொல்லியதுபோல் வாட்ரோப் வலது பக்க கதவினை திறந்தாள்.

அவனது ஆடைகளுக்கு மேல் அவன் சொல்லிய கரு நிற அட்டை பெட்டி இருந்தது.

பார்த்ததும் புடவையென தெரிந்தது.

‘எனக்காக வாங்கி வச்சிருக்காங்களா?’ தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள், அருகில் கவர் ஒன்று இருக்க என்னவென்று பார்த்தவள் வேகமாக கைக்குள் அடக்கிக்கொண்டாள்.

‘மத்ததுன்னு இதைத்தேன் சொன்னாங்களா’ என்றவளுக்கு நாணம் வெட்டியது.

“உங்களை ரொம்ப நல்லவங்கன்னு நெனைச்சிட்டேன்” என்று வீரனுக்கு மெசேஜ் செய்தவள், அவன் அதற்கு அனுப்பிய கண்ணடிக்கும் பொம்மையினை குத்தியவளாக குளிக்கச் சென்றாள்.

சில நிமிடங்களில் குளித்து தயாராகி அபி கொடுத்துச் சென்ற உணவை முடித்து அமர்ந்தவளுக்கு அதன் பின்னர் தான் அன்றைய இரவுக்கான பதற்றமே ஆரம்பமாகியது.

**********************

அறையின் வெளிச்சமும் வாசமும் படபடப்பைக் கூட்டியிருந்தது அவளுக்கு.

தன்னவனின் வருகைக்காக காத்திருந்தவளுக்கு தன் காதல் கரை சேர்ந்திட்ட நிம்மதி.

அன்றைய சண்டைக்கு பின்னர் அதுவும் வீரன் பிரேமை அத்தனை அடித்து, உறவுகளுக்கிடையே மனத்தாங்கல் ஏற்பட்டிருக்க… தன் காதல் திருமணத்தில் சேர சாத்தியமே இல்லையென்று நினைத்திருக்க… இன்று அனைத்தும் எளிதாக முடிந்து, தான் தன்னுடைய நெஞ்சம் நிறைந்தவனின் அறையில், உரிமையாய்.

நினைக்கையிலே நெஞ்சில் சுவை கூடியதுபோல் தோன்றியது.

இன்னும் சில நொடிகளில் தான் தன்னவனின் கரங்களில் சிறைப்பட இருப்பதை காட்சியாய் நினைத்த நாச்சிக்கு இதயத்தின் துடிப்பு அதிகமானது.

மாலை பிரேமின் வீட்டிற்கு மணமக்கள் வந்து சேர, செய்ய வேண்டியவை முறையாக செய்து தங்கள் பிரத்யேக தனிமைக்குள் வந்துவிட்டனர்.

நாச்சி அறைக்குள் வரும்போது பிரேம் அலைப்பேசியில் யாருடனே உரையாடிக் கொண்டிருக்க… துண்டித்துவிட்டான்.

“இல்லை நீயி பேசிட்டு வா மாமா!” என்றவளுக்கு தன்னுடைய படபடப்பை போக்குவதற்கு சில கணங்கள் தேவைப்பட்டது. அதற்காகவே பதற்றமாகக் கூறியிருந்தாள்.

ஆனால் அவள் இறுதியில் சொல்லிய வார்த்தையில் பிரேம் ஏங்கிய ஏக்கம் கண்களில் துளியாய் எட்டிப்பார்த்திட, அவளுக்கு காட்ட மறுத்தவனாக…

“பெங்களூரிலிருந்து கால் அழகு. முக்கியமான வேலை. அது இவ்ளோ இழுத்துருச்சி. குளிச்சிட்டு வந்துடுறேன்” என்றவன் வேகமாக குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.

சிறு வயதிலிருந்து உறவுகளை சொல்லி அழைக்கும் பழக்கத்தைத்தான் பெரியவர்கள் சிறியவர்களிடம் பழக்கியிருந்தனர்.

அதனாலே இயல்பாய் சிறு வயதிலேயே நாச்சி பிரேமையும், அங்கை, மீனாள்… வீரனையும், லிங்கத்தையும் மாமா என்று தான் அழைப்பர்.

ஆனால், நாச்சி அன்றைய நிகழ்வுக்கு பின் பிரேமை அவ்வாறு அழைப்பதை நிறுத்தியிருந்தாள். அப்படி சொல்லிட முடியாது. அவனோடு பேச்சினையே நிறுத்தியிருக்க மாமா என்றழைக்க வாய்ப்பில்லாது போனது. மீண்டும் சேர்ந்திட… விழுந்த இடைவெளி அவ்வார்த்தையை இயல்பாய் அனுமதிக்கவில்லை. பிரேம் எதிர்பார்த்து ஏமாந்த போதும் அவளாக மனம் நிறைந்து அழைக்க வேண்டுமென அவளிடம் தன் விருப்பத்தை சொல்லவும் இல்லை. இக்கணம் அவளாக சொல்லியிருக்க அவனுள் ஆனந்தம் குமிழியது.

அங்கு இருளில் அமைதியே…

“என்னவாம்… மேடம் ரொம்ப அமைதியா இருக்கீங்க?” எனக் கேட்டபடி குளித்து முடித்து வந்த பிரேம் நாச்சியின் அருகில் உரிமையாய் உரசி அமர்ந்தான்.

பிரேமின் வெற்று தோள் தீண்டலில் சில்லென்று ஈரம் உணர்ந்தவள் கூசி சிலிர்த்தவளாக தள்ளி அமர அவன் இன்னும் அவளை நெருங்கினான்.

“சட்டை போடு மாமா.”

“போடனுமா… கழட்டத்தானே வேணும்?” என்றவனின் இரு பொருள் பேச்சில் அமைதி அடைந்திருந்த அவளின் உணர்வுகள் தாறுமாறாக எகிறியது. மீண்டும் தள்ளி அமர்ந்தாள்.

“ரொம்ப பண்றடி. அதான் பனியன் போட்டு இருக்கேனே!” என்றவன் அவளை அள்ளி தன் மடியில் அமர்த்தினான்.

அவள் தேக நடுக்கம் அவனுள் பரவி விரவியது.

“என்னட்டி இம்புட்டுக்கு நடுங்குற. என்னைய பார்த்தாக்கா அச்சமாவா இருக்கு?” எனக் கேட்டவனின் இதழ் அவளின் பின்னங்கழுத்தில் ஊர்ந்திட…

“மாமா” என்று காற்றுக்கும் கேட்குமோ என்று காற்றாய் மொழிந்தவள், அவனின் தோள் வளைவில் தன் முகம் புதைத்தாள்.

இருவருக்குள்ளுமே வெளிப்படையான அன்பு பல வருடங்களாக இருந்திட… அதனின் புரிதலும் ஏராளம். அதனால் சாதரணமாகவே இருவரின் செயலும் துவங்கியிருந்தது.

நாச்சியின் வயிற்றோடு கையிட்டு இறுக்கியவன், அவளின் கூந்தல் ஒதுக்கி, வெற்றுத்தொளில் முத்தம் வைத்தவனாக,

“இன்னொருவாட்டி சொல்லுடி” என்றான்.

பிரேமின் குரலே அவளை வசமிழக்க செய்தது.

“மாமா…”

“இதை சொல்ல இம்புட்டு நாளா உனக்கு?” என்றவன் அவளின் கன்னத்தில் பற்கள் அழுந்தாது கடித்து வைத்திட… அச்செயல் அவளை எங்கோ இட்டுச் சென்றது. அவனது கரங்களில் தொய்ந்தாள்.

“என்னட்டி இதுக்கே கிறங்கிற?” என்ற பிரேம், அவளின் காதில் ஏதோ கூற, “அச்சோ மாமா” என்று அவனை மார்பில் கை வைத்து தள்ளியவள் அவனோடு படுக்கையில் சரிந்திருந்தாள்.

பிரேமின் தவிப்புகள் யாவும் அவனது அழகியிடம் மொத்தமாக சேர்பித்த பின்னரே விலகி படுத்தான். ஆனால் அவளை விலக விடாது தன் கை வளைவிற்குள் வைத்தவனாக…

“அழகுக்கு ஓகேவா?” என்று அவளின் காது மடலில் முத்தமிட்டு வினவினான்.

நாச்சி அவனை கட்டிக்கொண்ட வேகத்தில் அவளின் மனம் உணர்ந்தவன் பேருவகை கொண்டான்.

தன் இணையை கொண்டாடத் தெரிந்தவனுக்கு மட்டுமே கிட்டும் அந்த உவகை.

“அழகு…”

“ம்ம்ம்..”

“ஏட்டி அழகு!” தன் மார்பில் கண்ணயர்ந்திருப்பவளை சீண்டினான்.

“என்ன மாமா!” சிணுங்கலாக ஒலித்தது அவளின் குரல்.

“பேருக்கு ஏத்த மாதிரி கொள்ளை அழகையும் உனக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கடி” என்றவன் அவளை மீண்டும் தனக்குள் புகுத்திடத் துவங்கினான்.

********

“இந்தாப்பு மாத்து துணி. அப்பத்தா சாமி கும்பிட கூப்பிட்டாங்க” என்று அபிராமி சொல்லிச்செல்ல… குளித்து ஆடை மாற்றி வந்தவன் வெளியில் வர, உணவு மேசை இருக்கையில் மீனாளை அமர்த்தி, மீனாட்சி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். மீனாளின் முகம் அதீத கவனத்துடன் இருக்க… அவளின் தலை அவர் சொல்லுவதற்கெல்லாம் சரியெனும் விதமாக ஆடிக்கொண்டிருந்தது.

“க்கும்…”

வீரனின் செருமலில் திரும்பிய மீனாட்சி,

“ரெண்டேறும் சாமி கும்பிடுங்கப்பு” என்று அபிராமிக்கு கண்காட்டிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார்.

வீடே ஆழ்ந்த அமைதியில் இருந்தது.

“எல்லாரும் உறங்கியாச்சா ம்மா?”

“ஆச்சுப்பா” என்று வீரனுக்கு பதில் சொல்லிய அபி, “வாங்க” என்று இருவரையும் சாமி அறைக்கு அழைத்துச் சென்று வணங்க வைத்து மீனாட்சி அம்மாளின் குங்குமத்தை வைத்து விட்டு…

“வாழுற வாழ்க்கை நெதம் சந்தோஷமா இருக்கணும்” என்று ஆசீர்வதித்தார்.

“நீ மேல போய்யா…” என்று வீரனை அனுப்பி வைத்தார்.

மீனாளின் பெட்டியை எடுத்துக்கொண்டே மேல் சென்றான்.

அதுவரையிலுமே மீனாள் வீரனின் முகம் பார்க்கவில்லை. அந்த இரவுக்கான அர்த்தம் விளங்கிட… நேரமாக ஆக ஒருவித தடுமாற்றம் அவளிடம். அதனாலே வீரனை நிமிர்ந்து பார்த்திட முடியாத தயக்கம்.

“அத்தை சொன்னதுலாம் கேட்டு பயந்துகிடாத கண்ணு. வயசானவுங்க அவங்க காலத்து முறையை எதிர்பார்ப்பாய்ங்க. சரிசரின்னுக்க. விருப்பமான கல்யாணமாவே இருந்தாலும்… இது சடுதியில் நடந்தது. கொஞ்சம் பதறித்தேன் இருக்கும். நீயும் அமிழ்தனும் சந்தோஷமாட்டிக்கு வாழ்ந்தாக்கா அது போதும்த்தா” என்று கையில் பாலுடன் அனுப்பினார்.

“அத்தை… அங்குட்டு மேல படி வரைக்கும் வறீய்ங்களா?”

மீனாள் அப்படி கேட்டதும் அபி வந்த சிரிப்பை அவளின் முகவாட்டம் கண்டு மறைத்துக் கொண்டார்.

“அதுக்கு அப்புறம்” என்று அவளின் அருகில் வந்தவர், “உம் மாமன் தானே! என்னத்துக்கு பயம்?” என்றார்.

“பயமில்லை அத்தை… ஒரு மாதிரி… என்னவோ… எப்படி சொல்லத் தெரியலத்தை” என்றாள். அவளின் பாவனையில் கன்னம் கிள்ளி கொஞ்சியவர், “எல்லாம் அமிழ்தனுக்கு தெரியும். பார்த்துப்பியான். போ கண்ணு” என்றார்.

மேலேறிச்செல்ல செல்ல ஒவ்வொரு படிக்கும் அவளின் கையில் நடுக்கம் கூடியது. பால் அடங்கிய சொம்பு தலும்பிட… இறுக்கி பிடித்தாள்.

வீரனிடம் அவள் இயல்பாகிவிட்டாள். திருமணத்திற்கு பின் தங்களது மனதில் சஞ்சலம் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த வீரன் அவளையும் தெளிவாக்கியிருந்தான். அதனாலேயே அவனுடனான வாழ்க்கையில் பொருந்தி நிற்கிறாள்.

இருப்பினும் இன்றைய நாளின் அடுத்து என்பதில் தான் அவளுக்கு தயக்கம்.

திருமணத்தை ஒருவித எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருந்திருந்தால் இந்த தயக்கம் வந்திருக்காதோ?

எதிர்பார்ப்புகளற்று வீரனை இழந்துவிடுவோமோ என்கிற எண்ணத்தில் முடிவானது தானே! மணத்திற்கு அடுத்து என்பதை சிந்தையில் யோசித்திடவே இல்லை.

வீரனுடன் பேசும்போது இருக்கின்ற திடம் அவனருகில் தனிமையில் எனும்போது அவளுக்கு சுத்தமாக இல்லை என்பதே உண்மை.

இன்னும் ஐந்தாறு படிகள் இருக்க… அப்படியே நின்றுவிட்டாள். மேலுதட்டிற்கு மேல் வியர்வைத் துளிகள் அரும்பியிருக்க புறம் கை கொண்டு துடைத்தவள்…

“ஏன் நின்னுட்ட?” என்ற குரலில் பயந்து உடல் தூக்கிப்போட பின்னால் விழ, அவளையும் அவள் கையிலிருந்த சொம்பும் விழாது தாங்கி பிடித்திருந்தான்.

“நீ…ந்… நீங்க… மேல…”

பின்பக்கமாக அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் அருகில் காணும் அவனின் முகத்தில் திணற…

“மேல வந்து பெட்டியை வச்சிட்டு கரியனுக்கு வைக்க போட போனேன்” என்று சொல்லியவன் அவளோடு அறைக்குள் நுழைந்திருந்தான்.

“அப்போ…?”

மீனாள் தன் விழிகளை அகல விரித்தாள்.

“என்ன அப்போ?”

“அத்தை பேசுனது…” அவள் நா தந்தியடித்தது.

“ஹ்ம்ம் கேட்டுச்சு” என்றவன், “அப்பத்தா, அம்மான்னு அட்வைஸ் பலமோ?” எனக் கேட்டு அவளை கீழே விட்டான்.

தரையில் கால் பதிந்ததும் தான் வீரன் தூக்கி வந்ததையே உணர்ந்தாள்.

“அச்சோ” என்று கையில் பிடித்திருந்த சொம்பில் முட்டிக்கொள்ள…

“பால் மேல சிந்தணுமா?” எனக்கேட்டு அவனே வாங்கி மேசை மீது வைத்தான்.

“எப்போ தூக்குனீங்க?” என்றவளின் இடையில் வீரனின் கை வெம்மை இன்னும் மிச்சமிருந்தது.

“என்ன பண்ணுது?”

“ஹான்…” அவன் கேட்டதில் அவளுக்கு எண்ணம் வேறெங்கோ தாவியது.

“தூக்குனதுல இப்போ என்னாச்சுன்னு கேட்டேன்” என்றவன், “மேடம் சின்னதுல என் தோளில் எல்லாம் சவாரி செஞ்சிருக்கீங்க. நெனவு இருக்குதா?” எனக் கேட்டவாறு கட்டிலில் அமர அவளுக்கோ நெஞ்சுக்கூடு காலியானது. அடப்பாவி என்றது அவளின் மனம்.

சின்ன வயதில் அவனது கை பற்றி சுற்றியதும்… இப்போதும் ஒன்றா?

வீரனின் மண்டையிலே கொட்டு வைக்கணும் போல் எழுந்த கையை முயன்று அடக்கினாள்.

கட்டிலையும் வீரனையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

“எம்புட்டு நேரமா நின்னுட்டே இருப்ப? இங்குட்டு என் பக்கட்டு வந்து உட்காரு தங்கம்” என்று வீரன் தனக்கருகில் தட்டி காண்பிக்க, எப்போது நடந்தாலும் இது தவிர்க்க முடியாத நிகழ்வாயிற்றே. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தன் படபடப்பை ஒதுக்கி வைத்தவள் மெல்ல அவனருகில் வந்து அமர்ந்தாள்.

வீரன் தன்னவளையே விழி மூடாது பார்த்திருக்க…

அவளுக்கு மறைத்து வைத்த படபடப்பு வெளிவந்தது.

அவன் அவளுக்காக எடுத்து வைத்திருந்த பருத்தி புடவை. அவனது நண்பன் தறி கடை ஆரம்பத்திற்கு சென்றபோது பார்த்ததும் பிடித்திருந்ததால் அவனின் தங்கத்திற்கு ஆசையாக வாங்கி வந்திருந்தான். கொடுக்கும் சந்தர்ப்பம் அமையாது போனதும் நல்லதுதான் போல். இன்று அவளிடம் அவர்களுக்கான நாளில் சேர்ந்துவிட்டதே!

“என்னவாம் தங்கப்பொண்ணுக்கு?”

கேட்டவனுக்கு அந்த கணம் அத்தனை பிடித்தது. அவனது அறை. இனி அவனவளுடையதும். இருவருக்குமானது. அவனுக்கு மிக நெருக்கத்தில் அவனின் தங்கம். வாழ் முழுமைக்கும் அவளை இப்படி கண்களில் நிரப்பிக்கொண்டே இருந்திடலாம் என்று நெஞ்சம் மகிழ்ந்தான்.

“படபடப்பா… ஷிவரிங்கா இருக்கு மாமா. உன் கை பிடிச்சிக்கவா?” எனக் கேட்டவளின் இரு தளிர் கரத்தையும் தன் நரம்போடியா முரட்டு கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்.

காரணம் யாரோ அவனிடமே தன்னை ஆற்றுப்படுத்தினாள்.

வீரனின் கை சூடு அவளுக்கு இதம் அளித்து. ஆனால் அவனுக்கு நேர்மாறாக மீனாளின் உள்ளங்கை அவனுள் அத்தனை சில்லிட்டது.

“தங்கம்… என்னட்டி இம்புட்டு சில்லுன்னு இருக்க?” என்றவன், அவளின் கையை தேய்த்துவிட்டவனாக…

“இப்போ இங்குட்டு ஒன்னும் நடக்கப்போறதில்லை. நீயி மொத நார்மல் ஆகு” என்றான்.

“சன்னல் திண்டுக்கு போவமா?” அவன் கேட்கவும் அவளின் தலை ஆடியது.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
44
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

5 Comments

  1. பிரேம் செம. வீரன் அழகு.

  2. காதல் அன்புன்னு எல்லாத்துலயும் குடும்பத்துல எல்லாருமே ஸ்கோர் பண்றாங்க பா ..

  3. பல நாள் காத்திருப்பும் தவிப்புகளும் இன்று வீடு சேர…

  4. மீனாளுக்கு மட்டுமே உரித்தான வீரனின் ஆசை இழையோடும் முகம் அழகு. 😍

    வார்த்தைகள் அவசியமில்லை என்றாலும், மனம் உணர்ந்த ஒன்றை செவிதனில் கேட்கும் சமயம் மனம் இன்னுமே குதூகலிக்கும்.

    வேண்டும் என்ற எண்ணம் கொண்டு விலகி இருந்தவர்களது மனமே தனக்கு தெளிவாக தெரியவில்லை, வேண்டாம் என்று மறுத்து நின்ற தனது மனம் வீரனுக்கு எவ்வாறு தெரிந்தது என்ற குழப்பத்தில் லிங்கம்.

    காத்திருந்து கைப்பற்றிய காதல் கல்யாணத்தில் கைகூடிவிட்டது ப்ரேம் மற்றும் நாச்சிக்கு.

    படபடப்புக்கு காரணமான வீரனையே கரம்பிடித்துக்கொண்டாள் மீனாள்.

    பெரியவர்கள் சொன்னாலும் தன்னவளுக்கு அவளுக்கான நேரத்தை அளிக்கின்றான் வீரன்.