
காதலொன்று கண்டேன்!
தேடல் 20
(I)
“நீ எதுக்கு பேயடிச்ச மாதிரி இருக்க இன்னிக்கி..?”
“நீ சைட்டடிச்சதால வந்த எஃபெக்ட் பேயடிச்சா வர்ர எஃபெக்ட விட கம்மி தான்..”
“என்னடா பதில் சொல்லாம யோசிச்சிகிட்டு இருக்க..?”
“ஒன்னுல்லயே..”மழுப்பினான்,தோழன்.உண்மையைச் சொன்னால்,அதற்கும் அவன் தான் அடி வாங்க வேண்டும்.
“என்ன முழி முழிக்கிற..? ஒரு மார்க்கமா தான் இருக்க நீ..?”
“எதே?! நானா சர்தான்..” மெதுவாக முணகிட,பையனின் பார்வை அவனை ஆழம் பார்த்தது.
“என்னமோ கேக்கனும்னு தோணுது தான..?”
“ம்ம் கேட்டா நீ அடிப்ப..”
“அப்டிலாம் பண்ண மாட்டேன் சொல்லு..” பையன் நிதானமாய்ச் சொல்லவே,அவனுக்கும் கேட்டு விடும் எண்ணம் தான்.சந்தேகத்தை வைத்துக் கொண்டு,அவனால் இருந்திட முடியவில்லை.
“நீ லவ் பண்றியா..?” கேட்டது தான் தாமதம்,மேசையை அதிரும் வண்ணமே ஓங்கி அவன் அடித்த அடியில்,மேசையில் இருந்த தண்ணீர்க் குவளை கீழே சிதறிற்று.
“லவ்வா..? எனக்கா பைத்தியமா நீ..?” கெத்தை விடாது அவன் மொழிந்தாலும்,காதல் என்கின்ற வார்த்தையைக் கேட்டதும் யாழவளின் உருவமே,உணர்வுகளுடன் உறைந்து நின்றது.
தோழனுமே,அவனின் முகத்தில் படிந்திருந்த ஆக்ரோஷத்தை கண்டு,மிரண்டு விட்டான்.தன் விழிகளில் சிக்குண்டது பிழையோ என்கின்ற சந்தேகமே வந்து விட்டது,அவனுக்கு.
“என் கெத்தெல்லாம் விட்டுட்டு ஒருத்தி பின்னால திரிவேன்னு நெனக்கிறியா..? அதுவும் இல்லாம மிஸ்ஸஸ்…” என்றவன் சட்டென நிறுத்தினான்.
“அவங்க பண்ணுனது மறந்துருமா என்ன..?” நொடியில் அத்தனை ரௌத்திரம்,பையனின் விழிகளில்.
அவனை மீறி,அவனின் ஆழ்மனக் கொதிப்பு வெளிப்படுவது அரிதிலும் அரிது.பெரும்பாலும்,அவனைப் பெற்றவரின் எண்ணம் வருகையில் நடந்தேறும்.
இருந்த இதம் மறைந்து இறுக்கம் சூழ்ந்து கொள்ள,விடுவிடுவென நடந்து போன தோழனை இயலாமையுடன் பார்த்தான்,தோழன்.
பையனின் வலிகள் தெரிந்திருக்க,அவனை நன்கு புரிந்து வைத்திருப்பவனுக்கு சத்தியமாய் அவன் மீது கோபமெல்லாம் வரவில்லை.
தாயின் நினைவில் மனம் உலைக்களமாய் கொதித்திட,தாயுமானவரைத் தான் தேடிற்று,பையனின் மனம்.
கல்லூரி நேரமென்பதால்,அதற்கு வழியின்றிப் போக,பெருமூச்செறிந்தவனுக்கு அவ்வளவு எளிதாய் தன்னை சமப்படுத்திக் கொள்ள முடியவில்லை.அவ்வளவு ஆத்திரம் வரும் பழையதை நினைக்கையில்.
அடித்து நொறுக்கிடும் கோபம் எட்டிப் பார்த்தாலும்,சில சமயங்களில் அவனை மீறி மனம் வலிப்பதுண்டு.மனித மனங்கள்,அவை புரிந்து கொள்ள முடியாத புதிர்கள்.
புத்தகத்தில் ஆழ்ந்தால்,அவனின் மனம் சற்றே மட்டுப்படும் நினைத்து நூலகத்துக்குள் நுழைந்து புத்தகத்தில் ஆழ்ந்து போக முயன்றாலும்,அவன் மனம் முரண்டு பிடித்தது.
இமைகள் அழுத்தமாய் ஒட்டிக் கொள்ள,மேசையில் தலை வைத்து படுத்திருந்தவனின் இதழ்களில் வழமை போல்,பாடல்.
எங்கேனும்,அவனுக்கு வலிக்கத் துவங்கினால்,அவனை மீறி இந்த பாடலை இதழ்கள் ஒப்புவிப்பது வழக்கமாய் இருந்தது.
“காலங்களோடும் இது கதையாகிப் போகும்..என் கண்ணீர்த்துளியின் ஈரம் வாழும்..” இதழ்கள் வலியுடன் அசைந்து கொடுத்திட,மனம் மரத்துப் போக,அப்படியே இதழசைவும் தேய்ந்திருந்தது.
வலியின் வளர்பிறையில்,இதழ்கள் தேய்ந்து போய் சில நொடிகள் கடந்திருக்கும்.ஆழமாய் சுவாசித்தவாறு எழுந்தவனோ,புத்தகத்தை எடுத்த இடத்தில் வைத்திட,புத்தக அடுக்கை நெருங்கிய சமயம் அது.
“புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்..
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்..”அவள் கட்டைக் குரல்,அவன் செவியுரசிட,இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
அவன் தவிப்பு போதாதென்று,அவனை துடிக்க வைத்திடும் முனைப்போ என்னவோ,இதழ்கள் தொடர்ந்து அசைந்திட,அவ்வசைவின் நாதங்கள் அவன் உயிரில் மோதி,புது ஸ்வரம் மீட்டிக் கொண்டிருந்தன,அவனின் இசைவென்னவென்று கேளாமல்.
அவளோசையுடன் அவன் உயிரும் இயைந்து போயிற்று.
“நெஞ்சோடு கலந்திடு உறவாலே..
காலங்கள் மறந்திடு அன்பே..” அவள் தொடர,இயல்புகள் இடற,சிதறி நின்றான்,பையன்.
அவளின் கட்டைக்குரல் சொல்லிற்று,அது அவளென்று.ஏனோ ஒரு தடுமாற்றம்.அவளோ,நில்லாமல் பாடிட,அவனால் நிலை கொள்ள முடியவில்லை.
பட்டென்று தனக்கு நேரெ இருந்த புத்தகங்களை அவன் இழுத்தெடுத்திட,அவ்விடைவளியில் இடையூன்றி தெரிந்தது,அவள் முகம்.
மறுபுறம்,அவனுக்கு நேரேதிரே நின்று அதே அடுக்கில் புத்தகமொன்றை தேடிக் கொண்டு இருந்தாள் போலும்,இதழ்கள் பாடலை முணுமுணுத்திட.
பையனின் பார்வை,அவ்விடையின் ஊடு பரவி,அவள் விழிகளில் நிலைத்திட,அவன் இமைத்திடவில்லை.
அவனுக்கெனவே,அவள் பாடியது போன்ற எண்ணம் வலுப்பெற,தகிக்கும் அனலவன் தணிந்து அணைந்து நின்றான்,இயல்புகளை சிதைத்துக் கொன்று.
சத்தியமாய் என்னவோ ஆகிற்று,ஆரி அவனின் ஆன்மாவினுள்.
அத்தனையையும் ஆட்டுவித்து இத்தனை நேரம் இருந்த இறுக்கமும் கோபமும் எங்கு சென்றதென்று சத்தியமாய் தெரியவில்லை,அவனுக்கு.
திடுமென விழி நிமிர்த்தியவளுக்கு,அவனை அவ்விடத்தில் கண்டதும் நெஞ்சம் நின்று போக,இதழ்களும் ஒட்டிக் கொண்டது.
பேய் முழி முழித்து விட்டு,தலை தாழ்த்தியவாறே விடுவிடுவென நடந்து விட்டாள்,யாழவள்.
யாழவள்,அவனிதயத்தில் இசை மீட்ட,கேடியவனின் மீசைக்கடியில் அளவான புன்னகை தேங்கிட,மீசை நுனியைக் கடித்தவாறு மென்று தின்றான்,அவளில் பார்வை படிந்திருக்க.
நாட்கள் நகர்ந்த வேகம் தெரியவில்லை.அடிக்கடி அவளைக் காண நேர்கையில் அவனுக்குள் உதித்தெழும் உணர்வுகள் பையன் சோதித்துத் தள்ள,அதைப் பற்றி ஆராயாவிடினும்,ஏனோ அவனுக்கும் அவ்வுணர்வுகள் வெகுவாய் பிடித்துப் போயின.
அதை இரகசியமாய் வைத்துக் கொண்டாலும்,அடிக்டடி தோழனின் கேள்வி அவனை தொடும்.முதலில் எகிறிப் பாய்ந்தவனுக்கு,இப்பொழுதெல்லாம் அவனின் கேள்வியில் கோபம் வருவதில்லை.
“லவ்வா..? எனக்கா பைத்தியமா நீ..?” கடுகடுப்பாய் கூறி வைத்திடுவான்,எதையும் வெளிப்படுத்தாத முகபாவத்துடன்.
ஈர்ப்பின் ஈற்றைக் கடந்து,அவள் மீதான உணர்வு காதலெனும் புள்ளிக்கு வந்திருக்க,அது ஜீவனின் மோட்சம் ஆவது உறுதி.ஆனால்,இன்னும் துளிர்த்திருக்கும் காதலை பையனே உணர்ந்து தொலைத்திடவில்லை.
வெளியில் போடப்பட்டிருந்த கல் இருக்கையில் பையனும் தோழனும் எதிரெதிரே அமர்ந்து ஏதோ கதைத்துக் கொண்டிருந்தனர்.
ஆங்காங்கே,கல்லூரி வளாகத்தில் கல் இருக்கைகள் போடப்பட்டிருப்பதுண்டு.
அந்நேரத்தில்,தான் அவர்களை கடந்து சென்றாள்,யாழவள்.பையனின் பார்வை அவளை உரசி இயல்பு மீள,தோழன் அதை கண்டு கொள்ளவில்லை,தலை தாழ்த்தி இருந்ததால்.
“இவன் பாக்கறத பாத்தா டவுட் வரும்..கேட்டா இல்லவே இல்லன்னு தான் சொல்லுவான்..பேசாம இப்டியே இருப்போம்..” தனக்குத் தானே சபதம் எடுத்து அவனிருக்க முயன்றாலும்,மனம் கேட்கவில்லை.
“மச்சீ..”
“ம்ம்..”
“எனக்கு என்னமோ உனக்கு அந்த பொண்ணு மேல கொஞ்சம் ஃபீலிங்க்ஸ் இருக்குன்னு தோணுது..”
“செருப்பால அடிப்பேன்..இங்க எந்த கருமாந்திரம் புடிச்ச ஃபிலிங்க்ஸும் பியானோ வாசிக்கல..”
“நம்ப முடிலடா..”பையன் கையோங்காமல் பதில் சொல்வதே,அவனுக்குள் ஏகப்பட்ட சந்தேக விதைகளை தூவி விடுவது போல்.
“நம்பாட்டி இரு எனக்கென்ன..எனக்கு யார் மேலவும் எந்த ஃபீலிங்க்ஸும் இல்ல..”தன் பிடியில் நின்றான்,அந்த அழுத்தக்காரனும்.
“நம்பித் தொலயுறேன்..” ஆயாசமாய் உரைத்தவனோ,மீண்டும் பையனுடன் கதைத்திட,ஓரிரு நிமிடங்களில் பையனின் குரல் தேய்ந்தது,பின்னிருந்தவர்களின் உரையாடலை செவிமடுப்பதற்டு சான்றாய்.
சத்யாவுக்கு எதுவும் புரியாது போய் விட,கொஞ்சம் சத்தமாக பின்னிருந்த மாணவர்கள் பேசுகையிலேயே,அவர்களின் பேச்சில் யாழவளின் பெயர் அடிபடுவது கேட்டது,அவனுக்கு.
அதற்கெனத் தான் பையனின் அமைதி என்று புரிந்தவனின் விழிகள் விரிந்து போக,பையன் எங்கு அதையெல்லாம் கவனிப்பதாம்..?
யாழ் என்ற பெயருடன் அவனின் புலன்கள் அனைத்தும் பிணைந்து போய் நின்றனவே.
பாவையவளுடன் கற்கும் மாணவர்கள் அவர்கள்.அதில் ஒருவனுக்கு பாவையவளின் மீது சிறு பிடித்தம் இருக்க,”க்ரஷ்” என்று சொல்லிக் கொண்டு அவள் பின்னே திரிய,பலமுறை சங்கடப்பட்டு விட்டாள்,யாழவள்.
யாரிடம் சொல்லவவென்று தெரியாமல் அவளை அமைதி காத்திட,அவளையும் வைத்து தோழர்கள் கலாய்ப்பதுண்டு.அது தான் அங்கு நடந்தேறியது.
“என்ன தான் அவன் உன் க்ரஷ்னு சொல்ற..?” ஒருவன் வினவ,அவனோ இதழ் பிரித்து புன்னகைத்திட,இங்கு பையனுக்கோ அந்த சிரிப்பு சத்தம் எரிச்சலை கிளப்பி எரிய வைத்தது.
“ஆமா க்ரஷ் தான் என்ன இப்போ..?” அவன் கேட்க,பையனின் முகத்தில் அப்படியொரு கோபம்.பையனின் முகமாற்றங்களை ஆராய்ந்தவாறு இருந்த சத்யா தான்,அதிர்ந்து விட்டான் அவனின் நிதானமின்மை கண்டு.
“அப்போ லவ்வர் இல்லயா..?” ஒருவன் இழுத்திட,ஈர்ப்பு இருப்பவனோ,”லவ்வர் என்ன பொண்டாட்டி தான் போதுமா..?” அவர்களின் வாயை அடைத்திடச் சொல்லி வைத்து விட்டு நிமிர்கையில்,அவன் வாய் உடைந்து இருந்தது.
இமைகள் தழுவி பிரியும் சொற்ப நேரத்தினுள்,அவனின் சட்டைக் காலரை எட்டிப் பற்றி முகத்தில் ஒன்று குத்தியிருக்க,நாசியுடன் வாயும் பெயர்ந்து இருந்தது.போதாதற்கு பளாரென்று ஒரு அறை கன்னம் தெறிக்கும் வேகத்துடன்.உலகம் தலை கீழாய் சுழன்றது,அடி வாங்கியவனுக்கு.
யாருமே எதிர்ப்பார்த்திடவில்லை,மின்னல் வேகத்தில் அவன் வந்து கையை நீட்டுவான் என்று.பாதச்சங்களை செவி மோத,அதற்கு தோதாய் விழிகள் நிமிரும் முன்னம் கன்னம் பெயர்ந்திருக்க,அவன் கோபம் கிலி மூட்டியது.
“யாரு பொண்டாட்டி..?” விழிகளில் அனல் வீச,அவ்வளவு உஷ்ணம் வார்த்தைகளில்.
எதுவும் புரியாதவனோ,”யாழ்” என்று உளறி வைத்திட,மீளவும் சடசடவென்று அறைகள் பாரபட்சமின்றி கன்னத்தில் விழுந்தது.
சத்யா கத்தியது,விழலுக்கு இறைத்த நீரானது.யாரும் தடுக்கக் கூட முன் வரவில்லை.பையனின் ஆக்ரோஷம் தெரிந்ததே.
“யாழா..? கொன்னுருவேன்..” கர்ஜித்தவாறு,அவன் வாயில் சுள்ளென்று போட,வலியின் வீரியத்தில் அவனுக்கு கண்கள் குளம் கட்டியது.கடைவாய் உதடு கிழந்து உதிரம் கொட்ட,அதற்டு மேல் அடி வேறு.
“யாருக்கு யாரு பொண்டாட்டி..?” பையன் மறுபடியும் அடிக்கப் பாய எட்டிப் பிடித்த சத்யாவின் பிடியில் இருந்த திமிற முயன்றாலும்,”நீ எதுக்குடா அந்த பொண்ணுக்காக சண்ட போட போற..?” என்கின்ற வார்த்தை பையனை அப்படியே சிலையாக்கியது.
தோழனிடம் இருந்து சரியான கேள்வி தான் வந்திருந்தது.ஆனால்,பதிலில்லையே,அவனிடம்.
பட்டென சட்டைக் காலரை விடுவிடுத்தவனோ,தலை சரித்து பின்னங்கழுத்தை கோதிக் கொண்டான்.
பையனின் திமிறல் நின்று போக,அவர்களை கிளம்பிச் சொல்லி விட்டு பையனை வேறிடம் அழைத்து வந்தான்,தோழன்.
அவர்கள் கிளம்புகையில்,”சாரி”
என்று நெற்றியை நீவிக் கொண்டே,கூறியவனின் செயலில் தோழனுக்கு சிறு புன்னகையும் கூட.
பெருமரமொன்றின் தண்டில் அவன் சாய்ந்து நிற்க,சத்யாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தடுமாறினான்,சில நொடிகளுக்கு.
“உனக்கு ஏன் டா அந்த பொண்ண பொண்டாட்டின்னு சொன்னதும் கண்ணு மண்ணு தெரியாத அளவு கோவம் வரனும்..?”
“………………..”
“சொல்லுடா..”
“யாரோ ஒரு பொண்ண இவன் பாட்டுக்கு பொண்டாட்டின்னு சொல்லி கிட்டு திரிஞ்சா அந்த பொண்ணோட பேர் என்னாகுறது..? அதுல வந்த கோவம்..” மழுப்பினான்,தீயாய் தகிப்பவனும்.
அவனுக்கே,அவனின் வார்த்தைகளை ஒப்புக்கொள்ள முடியாது போயிருந்தாலும்,உண்மையை ஏற்கவும் அவன் மனம் விடவில்லை.
“நீ பொண்ணுங்களுக்கு பாவம் பாக்கற..சர் தான் சர்தான்..”
“சும்மா சும்மா நீயா ஒன்னும் கற்பன பண்ணிக்காத..இது வெறும் அட்ராக்ஷன் மட்டுந்தான்..”
“அப்போ அட்ராக்ஷன்னு ஒத்துக்கிறியா..?” வாயில் கை வைத்து அதிர்வுடன் கேட்டான்,தோழன்.பையன் ஈர்ப்பென்று ஒத்துக் கொள்வான் என அவன் நினைத்திருக்கவில்லை,சத்தியமாய்.
“எஸ்..அட்ராக்ஷன அது யார் மேல வேணும்னாலும் வர்லாம்..அது என்ன பெரிய விஷயமா..? அத போய் மறக்கிறதுகு..” அலட்டலின்றி உரைத்தாலும்,அவனுக்கே தன் பேச்சு உவப்பாயத் தோன்றவில்லை.
“சரி விடு..நான் எதுவும் கேக்கல..” விட்டுப் பிடிக்கவே விரும்பினான்,தோழனும்.
இருள் சூழத் துவங்கிய நேரம்.
பையன் தன்னறையில் குளித்துக் கொண்டிருக்க,நடந்த அனைத்தையும் வேல்முருகனிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தான்,தோழன்.அதைக் கேட்கக் கேட்க,அவருக்கு ஏகபோக குஷி.
“அப்பாடி எப்டியாச்சும் அந்த பொண்ணு மூலமா என் பையன மாத்திரு சாமி..” நொடி நேர வேண்டுதலுடன் மனம் பூரித்துப் போனது.
பையன் இரவுணவை அவருக்கு ஊட்டி விட,அவர்களிடையான பிணைப்பை நெகிழ்வுடன் பார்த்திருந்தான்,தோழன்.
அவ்வளவு பிடிக்கும் பையனின் மகனதிகாரத்தை.
●●●●●●●
“அந்த அதிதி பொண்ணு கிட்ட கை நீட்டாம பொறுமயா எடுத்து சொல்லு அப்பு..” பையனிடம் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்,மனிதர்.
நேற்றும் அதிதிக்கு பையன் கையை நீட்ட பார்த்திருக்க,அவள் வந்து ஏதோ ஒரு வேகத்தில் மனிதரிடம் அனைத்தையும் ஒப்புவித்து இருக்கவே,இந்த அறிவுரை மழை.
“அவ தான் பா வேணும்னே..”
“அப்பு அவ மேல தப்பு இருந்தாலும் மரியாதயா பேச பழகு..நாம எப்டி பொண்ணுங்கள நடத்துரோமோ அது மாதிரி தான் மத்தவங்களும் நம்ம வாழ்க்கைல இருக்குற பொண்ணுங்களயும் நடத்துவாங்க..” புரிய வைக்க முயன்றவருக்கு தலையசைப்பை பதிலாகக் கொடுத்து விட்டு,நகர்ந்து விட்டான்,பையன்.
அன்று கல்லூரி நேரம் முடிந்த பின்னும்,வழமையாய் பையன் அமரும் மரத்தடியில் அமர்ந்து இருக்க,அவனின் எண்ணவலைகளோ இன்று பாவையவள் கண்ணீருடன் கடந்து சென்றதில் நிலைத்துத் தொலைத்தது.
“அவனுங்க வேணும்னே டீஸ் பண்றானுங்க..” அவள் கூறிக் கொண்டு நகர்ந்தது,அவனுக்குப் புரிந்த போதிலும்,என்னவென்று கேட்க மனம் உந்திய போதிலும்,இனம் புரியா திரையொன்று அனைத்தையும் தடுத்து நிறுத்தது.
அதே யோசனையுடன் அமர்ந்திருக்க,முன்னே விழுந்த இருளில் தலை உயர்த்தியவனுக்கு,அங்கு வந்து நின்ற அதிதியைக் கண்டதும் அவ்வளவு கோபம்.
“அறிவில்ல உனக்கு..?எத்தன தடவ தான் சொல்றது..?எதுக்கு போய் சின்னப் புள்ள மாதிரி எங்கப்பா கிட்ட சொல்லிட்டு இருக்க..?” காட்டுக்கத்தல்,அவனிடம் இருந்து.
“நா உன்ன லவ் பண்றேன்..” அவள் தன் பிடியில் நிற்க இவனுக்கு எகிறியது.
“லவ்வும் இல்ல ஒன்னும் இல்ல..லவ்னு சொன்ன கன்னத்துல ஒன்னு போடுவேன் பாத்துக்க..” அடிக்கப் பாய்ந்தவனை பெருமூச்சுடன் பார்த்தான்,சத்யா.அவனும் இப்பொழுது தான் இவ்விடம் வந்தது.
கோபத்தில் கை நீட்டுவான் என்று தெரிந்தவளோ,ஓரடி பின்னே நகர்ந்திட,அவள் நினைத்தது போல் எதுவும் நடந்திடவில்லை.
“நாம மத்த பொண்ணுங்களுக்கு மரியாத தர்ரத வச்சு தான் நம்ம வாழ்க்கைல இருக்குற பொண்ணுங்களுக்கு மத்தவங்க மரியாத தருவாங்க..” தந்தையின் வார்த்தைகள் செவியில் அசரீரி ஒலித்திட,யாழவளின் விம்பம் சிந்தையில் மின்னலென அடித்து ஒளிர்ந்திட,அடிக்க ஓங்கிய கரம் அப்படியே அந்தரத்தில் நின்றது.
தான் இப்படி நடந்து கொள்வதால் தானோ,அவளும் மற்றையா ஆண்களால் காயப்படுகிறாள் என்கின்ற எண்ணம் சிறு பொறியாய் நெஞ்சை முட்டிப் போக,அவனைக் கேளாமலே,தாழ்ந்து போனது,அவன் கரங்கள்.
“என்ன யோசிச்சிகிட்டு அடிக்க வந்துட்டு அடிக்காம இருக்க..அதிசயமால இருக்கு..” குருட்டு தைரியத்தில்,வினவியவளின் மீது ஆத்திரமாய் வந்த போதிலும்,அவன் எதிர்வினையாற்றிடவில்லை.
அவள் கேள்வி,அவனை அசைய விடாமல் செய்தது.
முன்னிருந்தவளின் இடத்தில் அவளைக் கண்டானோ,அவன்!
அதை என்னவென்பதாம்..?
தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்தவனின் பாதங்கள் ஈரெட்டு தன்னாலே பின்னடைந்தன.
“என்ன கோபப்படுத்தாம போனா நல்லது..” அழுத்தமாய் உரைத்தவனோ,மரத்தை சுற்றி போடப்பட்டிருக்கும் கட்டுத் திண்டில் அமர்ந்து விரல்களால் முகத்தை தாங்கினான்,தலை தாழ்ந்து இருக்க.
“ஆர்யா..” அதிதி ஏதோ பேச வர,ஆழ மூச்சிழுத்து நிமிர்ந்தவன் பார்த்த பார்வையில் மறு பேச்சு பேசாமல் நகர்ந்து விட்டிருந்தாள்,அவள்.
ஆரி அவனின் ஆழத்தில் அவளால் உண்டாகிய ஆலோலம் அடங்க மறுத்திட,தன்னை புரிந்து ஏற்க முயலாமல் தடுமாறி நின்றான்,பையன்.
●●●●●●●
(II)
அவளை அவ்விடத்தில் கண்டதும் டாக்டரின் விழிகளில் அப்பட்டமாவ அதிர்வு தோன்றிட,நொடியில் தன்னை சுதாரித்துக் கொண்டான்,அவன்.
மனநிலை முழுவதும் தலைகீழாகிட,முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்திட,மனம் கோபத்தில் பற்றி எறிந்தது.
அவ்வளவு கோபம் அவள் மீது.யார் மீதும் அவன் இத்தனை கோபப்பட்டதாய் சரித்திரமே கிடையாது.
அவளுக்கும் டாக்டரை அங்கு கண்டதும் அதிர்வே.தன் முட்டாள்தனமான தீர்மனாங்கள் டாக்ரை எந்தளவு நோகடித்து இருக்கும் என்று அறிந்தவளின் மனம் கசந்து போக,இதழ்களின் ஓரம் கசப்பான புன்னகை படர்ந்தது.
மெல்ல அதை மென்று விழுங்கி,அவனைப் பார்த்திட,அவன் பார்வையில் மிதமிஞ்சிய அலட்சியமும் வெறுப்பும் மட்டுமே.
அவளை பார்வையால் எரித்து விட்டு,அவன் நகரப் பார்த்திட,”சித்தார்த்” என்றவளின் குரல் அவனை தடை செய்திட,ஒரு நொடி நின்றாலும் தன்னை மீட்டு விடுவிடுவென நகர்ந்து விட்டிருந்தான்,அங்கிருந்து.
அவனின் பாராமுகத்தில் அவளுக்கு விழிகளில் நீர் கோர்த்திட,அடக்க முயன்றும் அது கன்னம் தாண்டி வழிந்து விட்டது.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்கையில்,அவளை எரிக்கும் பார்வை பார்த்தவாறு நின்று இருந்தான்,அவன்.
அவளை திருமணம் செய்து கொள்ளப் போகின்றவன்.
“என்ன அஞ்சலி..? உன் எக்ஸ கண்டதும் ஃபீல் ஆயிட்டியா..?” அவனின் வார்த்தைகள் அவளை அதிகம் காயப்படுத்த,இல்லையென்று தலையசைத்தவளோ,பேசாமல் நடந்திருந்தாள்,அவனைப் பாராது.
அவளின் பாராமுகத்தில் அவனுக்கு அவ்வளவு கோபம்.அதை பொது இடத்தில் காட்ட முடியாது இருக்க,அவளை பின் தொடர்ந்தான்,கடின முகத்துடன்.
“என்ன சித்து ஒரு மாதிரி இருக்க..? ஆர் யூ ஆல் ரைட்..?” டாக்டரின் முகம் தெளிவில்லாது இருப்பதை உணர்ந்து வாசு வினவிட,எதுவும் இல்லையென்று தலையசைத்தவனின் முகத்தை கூர்ந்து பார்த்த தென்றலுக்கும் ஏதோ சரியில்லை என்றே தோன்றிற்று.
தோன்றினாலும் அவனிடம் கேட்டிட முடியாது இருக்க,அமைதியாக உண்டாள்,குழந்தைக்கு ஊட்டி விட்டவாறு.
ஸ்ரீயின் பார்வை தான் இருவரின் மீது யோசனையுடன் படிந்தது.தோழியின் மன எண்ணம் கணித்தவளுக்கு,டாக்டரின் விருப்பம் என்னவென்று அடிக்கடி யோசனை வருவதுண்டு.
“கெளம்பலாம்..” டாக்டர் எழுந்து கொள்ள,அகல்யாவும் ஸ்ரீயும் கை கழுவச் சென்றனர்.
மடியில் இருந்த வாண்டை தூக்கிக் கொண்டு,அவள் எழுந்து கொள்ள முயன்ற கணம்,நிலையின்றி தடுமாறி விழப் போக,எட்டிப் பிடிக்க நீண்ட டாக்டரின் கரத்தை நாசூக்காய் மறுத்து இருக்கையில் கைப்பிடியில் கையூன்றி எப்படியோ தன்னை நிலைப்படுத்தி நின்றாள்,அவள்.
டாக்டருக்கு அவள் செயலில் தவறு தோன்றாவிடினும்,இவர்களை கவனித்துக் கொண்டிருந்த அகல்யாவின் பார்வையில் அளவில்லா கூர்மை.
காதல் தேடும்.
2025.04.22
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சித்து உங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சா உனக்கு தான் முதல்ல அடி கிடைக்கும் .. ஆரி அம்மா பத்தின பிளாஷ்பேக் இன்னும் வரல .. அதனால லவ்வ மிஸ் பண்ணிடுவான் போல ..