Loading

விடியும் முன்..!

 

அத்தியாயம் 18

 

நந்த கோபாலனுக்கு தூரத்தில் இருந்து வண்டி வருவது புரிந்தாலும் வண்டியில் இருப்பது யார் என்று அத்தனை தெளிவாய்த் தெரியவில்லை.வயதாகி விட்டதல்லவா..?

 

தன்னருகே நெருங்கவே அது வாசு என்பது புரிய மெது மெதுவாய் பயத்தின் ஆக்கிரமிப்பு.உடல் நடுக்க வியர்வைப் பூக்கள் பூத்துக் குலுங்கின.

 

வாசுவுக்கு அவரின் பயம் இன்னும் கர்வத்தை தர பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து புகை விட்டவனாய் நெருங்கி வந்தான்,அவர் அருகில்.

 

உள்ளுக்குள் பயந்தாலும் முகத்தில் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் விறைப்பாய் நிற்க முயன்றது தோல்வியில் தான் முடிந்தது.

 

“என்ன பெருசு..? எப்டி இருக்க..?” எள்ளல் மிகுந்த குரலில் கேட்டவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை,அவர்.

 

“அட பெருசு..என்ன இது பதில் சொல்ல மாட்டேங்குற..ஹான் இன்னுமே அந்த எபெக்ட்ல இருந்து வெளிய வர்ல மாதிரி இருக்கு..”

 

“………………”

 

“அட பெருசு பேசுய்யா..வாய்ல ஏதாச்சும் அடச்சுருக்கா என்ன..?அன்னிக்கி என் கிட்ட வாய் கிழிய பேசுனது நீ தானான்னு எனக்கு டவுட்டாவே இருக்கு..”

 

“…………..”

 

“சரி சரி..என்ன பண்ணாலும் நீ வாய தெறக்க மாட்டேங்குறது புரியுது..அப்டியே அடிச்சு உன்னோட பல்ல ஒடச்சா என்னன்னு தோணுது..பட் இப்போ நா என்னோட செல்லத்த பாக்கப் போறேன்..” என்க விழுக்கென நிமிர்ந்து பார்த்தவரின் விழிகளில் அப்பட்டமான பயம்.

 

“அட ஷாக் ஆகாத பெருசு..நெஜமா அவள தான் பாக்க வந்தேன்..அதான் அடிதடி வேணான்னு ஒதுங்கி போறேன்..உன் பையன் கிட்ட சொல்லி வை..பத்ரமா இருக்க சொல்லி..”

 

தானாகவே வந்து பேசி இறுதியில் எச்சரித்து விட்டு நகர்ந்திட நந்த கோபாலனுக்குத் தான் தலை சுற்றிப் போனது.

 

அவனின் வார்த்தைகள் இன்னுமே அவருக்குள் பயத்தை கிளப்பி விட்டிருந்தன.தன்னைப் பற்றி கவலையில்லை என்றாலும்,மற்றையவர்களின் நிலை..?

 

விடயத்தை மகனிடம் சொல்ல அழைப்பெடுக்க அழைப்பை ஏற்கப்படாதது எரிச்சலையும் பயத்தையும் ஒருசேரத் தந்திட சலித்துக் கொண்டவருக்கு தன் பிரச்சினையை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை.

 

தந்தை நந்த கோபாலனின் மனநிலை அறியாமல் அந்த மயானத்துல் முகம் வெளிற நின்று கொண்டிருந்தான்,அவரின் கடைசி மகன் இளஞ்செழியன்.

 

●●●●●●●●

 

“நா வர்ர வர பத்ரமா பாத்துக்கோங்க..நாம தான் தூக்குனோம்னு யாருக்கும் தெரியக் கூடாது..” கட்டளையாய் கூறிய படி அலைபேசியை அணைத்து விட்டு வண்டியை செலுத்திக் கொண்டு அந்தக் காட்டு பங்களாவுக்கு வந்தான்,சகாதேவன்.

 

அந்த வீட்டில் இருந்தால் சிக்னல் கிடைக்காது என்றறிந்திருந்தாலே ஆகாஷை ஏமாற்றி விட்டு இந்த நாடகம்.

 

அவனின் வண்டி சத்தம் கேட்டதும் உள்ளுக்குள் எரிமலையாய் கோபம் கனன்றாலும் அதை அடக்கிக் கொண்டு படுத்திருந்தான்.

 

தான் அவசரப்பட்டால் நிச்சயம் காரியம் கெட்டு விடும் என்று அவனுக்கு தெரிந்திருந்ததே.

 

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனை கூடத்தில் அமர்ந்திருந்த தென்றலும் மகிழினியும் மிரட்சியை மறைத்தவாறு பார்க்க அவர்களை பார்த்து புன்னகை செய்தவனுக்கு பதில் கொடுக்கக் கூட அவர்களுக்கு தயக்கமாய் இருந்தது.

 

தயக்கத்தை விட பயம் என்பதே பொருத்தம்.அவன் செய்த செயல் அறிந்ததில் இருந்து இயல்பாய் பழகிட முடியுமா என்ன..?

 

“என்ன கேர்ள்ஸ் சிரிக்காம இருக்கீங்க..? எனி ப்ராப்ளம்..?” நிச்சயம் தன் விடயம் தெரிந்து இருக்காது என்கின்ற அசையாத நம்பிக்கையும் கர்வமும் அவனுக்குள் அந்த சந்தேகத்தை கூட வரவிடவில்லை.

 

“தல வலி..”

 

“பசிக்கிது..”

 

இருவரும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல அவனின் புன்னகை மேலும் விரிய “கிச்சன்ல ப்ரிட்ஜ் இருக்கு அதுல சாப்ட ஏதாச்சும் இருக்கும்..டைனிங் டேபிள் கிட்ட இருக்குற ட்ராயர்ல தலவலி மாத்தர இருக்கும்..பாருங்க..நா ஆகாஷ பாத்துட்டு வர்ரேன்..” இயல்பாய் கூறி விட்டு சென்றவனின் பாவனையில் வியக்காமல் இருக்க முடியவில்லை,அவர்களால்.

 

தவறு செய்து விட்டு குற்றவுணர்ச்சி ஏதுமின்றி எப்படித்தான் இருக்க முடிகிறதோ என்கின்ற யோசனை மண்டையைக் குடைய அதற்குள் அறைக்குள் நுழைந்திருந்தான்,சகா.

 

அவன் வரும் அரவம் கேட்டு அப்போது தான் விழிப்புத் தட்டுவது போல் விழியுருட்டி பாதி கலக்கத்தில் இருப்பது போல் எழுந்தமர்ந்தான்,ஆகாஷ்.

 

அவன் செலுத்திய மருந்தின் வீரியம் குறையும் நேரம் என்பதால் சகாவுக்கும் சந்தேகம் வரவில்லை.

 

“எப்டி இருக்கு ஆகாஷ்..? பெட்டரா பீல் பண்றியா..?”

 

“ஆமாடா..ஆனா என்ன கொஞ்சம் பிட் இல்லாம இருக்கு..தூக்கம் வர்ர மாதிரி ஒரு பீல்..” வராத கொட்டாவியை மறைப்பது போல் பாவனை செய்து கொண்டு கூறியவனின் நடிப்பு நிச்சயம் பாராட்டத்தக்கது தான்.

 

“ஊசி போட்டேன்ல..அதான் அப்டி இருக்கும்..” பொய் சொன்னாலும் அது பொய்யென்று கண்டு பிடிக்க இயலாத படி அவனின் முகபாவம்.

 

“இரு இன்னொரு டாப்லட் தர்ரேன்..” என்ற படி கட்டிலின் அருகே இருந்த ட்ராயரில் ஏதோ தேடியவனை இதற்கு மேலும் விட்டு வைப்பானா அவன்..?

 

குனிந்திருந்தவனின் முதுகில் ஓங்கி ஒரு மிதி.கனன்று கொண்டிருந்த மொத்த கடுப்பையும் ஒரு உதையில் உணர்த்திட விட முனைந்திருப்பான் போலும்.

 

கீழ் முதுகில் கிடைத்த உதையில் சகாவுக்கு வலியில் உயிர் போனது.மிதித்த வேகத்தில் சகாவின் நெற்றி ட்ராயரின் விளிம்பில் மோத எதிர்பாரா தாக்குதலில் தலை கிறுகிறுத்தது,அவனுக்கு.

 

“ஆ..ஆகாஷ்..” அவன் பிதற்றும் முன்பே முதுக்குப்புறமாய் சட்டைக் காலரை பற்றித் தூக்கி கன்னத்தில் ஒரு அறை விட பொறி கலங்கிற்று,மருத்துவனுக்கு.

 

தொடராய் நான்கு அறைகள் அவனின் தடக்கைகளால்.அடியின் இடையில் கடைவாய் உதடு கிழிந்து இரத்தமும் கசிந்தது.குருதியை கண்டும் குளிரவில்லை,அவன் கோபம்.

 

நிதானமும் இருக்கவில்லை.நிதானத்தை கையாள வேண்டும் என்கின்ற நினைப்பும் இருக்கவில்லை.

 

புத்திக் கூர்மை அதிகமென்றாலும் ஆகாஷின் அடிகளை தாக்குப் பிடிக்கக் கூடிய உடல் வலிமை இல்லை,சகாவுக்கு.

 

மொத்தக் கோபத்தையும் ஒன்று திரட்டி அவன் முகத்தில் ஒரு குத்து வைக்க மூக்கில் இருந்து குருதி கசிந்தது.

 

வெறி கொண்டவனாய் ஆகாஷ் தாக்க அதை தாங்க முடியாமல் தொய்ந்து தளர்ந்து தரையில் விழுந்தான்,சகாதேவன்.

 

●●●●●●●●

 

தான் தங்க வேண்டிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வாசுவின் அலைபேசி ஒலிக்க திரையில் மிளிர்ந்த வீரய்யாவின் பெயரைக் கண்டதும் எரிச்சல் ஆனது.

 

“பேப்ஸ பாக்கப் போறேன்னு சொல்லிட்டுத் தான வந்தேன்..இவன் எதுக்கு இப்ப போன் பண்றான்..?” தனக்குள் முணுமுணுத்த படி அழைப்பை ஏற்க மறுமுனையில் நிசப்தம்.

 

“ஹலோ வீரய்யா என்ன போன் பண்ணிட்டு பேசாம இருக்க..விஷயத்த சொல்லு..” கடுகடுத்தவனுக்கு பதில் சொல்ல நா எழவில்லை,மறுமுனையில் இருந்த வீரய்யாவுக்கு.

 

“ப்ச்..வீரய்யா என்னன்னு சொல்லு..வண்டிய வேற ஓரமா நிறுத்திட்டு பேசறதால டைம் ஆகுது..நா பேப்ஸ பாக்கப் போகனும்..”

 

“சார்ர்ர்ர்ர்..”

 

“சார் தான்..என்ன விஷயம்னு நேரடியா சொல்லு..”

 

“சார் நாம நேத்து அடிச்சிப்போட்ட ஆள வேற யாரோ பாதி வழில கடத்திட்டுப் பொய்ட்டாங்களாம்..” ஒரே மூச்சாய் சொல்லி முடிக்க வண்டியை நிறுத்தி இறங்கியே விட்டிருந்தான்,வாசு.

 

வீரய்யா சொன்ன விடயத்தை கிரகித்து ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

“வீரய்யா..திரும்ப சொல்லு..”

 

“சார் யாரோ கடத்திட்டாங்க..” அவன் மீண்டும் சொல்ல முகம் முழுக்க செந்நிறமாகி வெறியாகியது,வாசுவுக்கு.

 

“இடியட்..என்ன ******* நீங்க..? உன்னெல்லாம்..எனக்கு வந்து வாச்சிருக்கானுங்க..***** வேல பண்ணி வச்சுருக்கீங்கடா..ச்சை..ஒரு மண்ணும் உருப்படியா பண்றதில்ல..” கெட்ட வார்த்தைகளுடனான அவனின் வசவை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த வீரய்யாவுக்கு கோபம் வராமல் இல்லை.வந்தாலும் காட்ட முடியுமா..? முதலாளி அல்லவா..?

 

“ஒரு வேல உருப்படியா பண்றீங்க..கெரகத்துக்கு வந்தவனுங்க..ப்ச்ச்..***** வேல பாத்துருக்கீடா..கிட்ட இருந்தா கொன்னு போட்ருப்பேன்…ச்சை..

******.. என்ன சொல்லனும் உன்னெல்லாம் வேலைல சேத்துகிட்டேன் பாரு *****…என்ன சொல்லனும்..” நெற்றியில் அறைந்து கொண்டே திட்டியவனுக்கு உச்ச கட்ட கோபத்தில் உடல் நடுக்கமெடுத்தது.

 

“என்ன பண்றீங்களோ ஏது பண்றீங்களோ..அவன் எனக்கு உயிரோட வேணும்..” கர்ஜித்த படி அழைப்பை துண்டித்தவனோ உள்ளங்கைளை மடக்கி வண்டியின் இருக்கையில் ஆக்ரோஷத்துடன் மீண்டும் மீண்டும் குத்த போவோர் வருவோர் எல்லாம் அவனை வித்தியாசமாய் தான் பார்த்தனர்.

 

அவனுக்கு அது கருத்தில் நிற்கவேயில்லை.அப்படி ஒரு வெறி.விழிகள் இரண்டும் செக்கச் செவேலென சிவந்திருக்க குத்திய கைகள் வீங்கி வலி எடுத்தாலும் அவனின் செயல் நின்றபாடில்லை.

 

ஒரு கட்டத்தில் அதீத வெறியுடன் வண்டியை உதைத்து நிலத்தில் தள்ளியவனுக்கு தன்னை கட்டுப்படுத்தும் வழி தெரியவில்லை.

 

வண்டிக்கு உதைத்தான்.

வலியெடுத்தது,பாதம்.

மீண்டும் உதைத்தான்.

 

மூளை மொத்தமும் மரத்துப் போய் மூர்க்கமாய் மாறியிருந்தான்.வேட்டையாடும் மிருகத்தின் வெறி அவன் விழிகளில்.

 

“ஆஆஆஆஆ..”

 

“ஆஆஆஆஆஆ..” மண்டியிட்டு அமர்ந்து அண்ணாந்து அடித் தொண்டையில் இருந்து கதறியவனின் குரல் அந்த இடம் முழுவதும் கர்ஜனையாய் எதிரொலித்தது.

 

வாசுவாய் இருக்கவில்லை.மொத்தமாய் மிருகமாய்ப் போயிருந்தான்,அந்த நொடி.

 

“ஆஆஆஆஆ..” கத்திய கத்தலில் தலை வலிக்க சிகையை அழுந்த நெறித்து தலையை பிடித்துக் கத்தியவனை அடக்க அங்கு யாரும் இல்லை.

 

●●●●●●●●●●

 

வினோத்தின் மனமோ அர்ஜுனை பற்றிய சந்தேகத்தை இன்னும் முற்றாய் களைந்து விடவில்லை.

 

நான்கு மணி நேரம் என்று எடுத்துக் கொண்ட வேலை இப்போது ஆறு மணி நேரத்திற்கு மேலாய் தொடர்கிறது.

அதை நினைத்து சந்தேகமாய் இருந்தாலும் அர்ஜுனை தோண்டித் துருவி அவனை கோபப்படுத்தவும் முடியாது.

 

வாசுவின் கையில் சிக்கிக் கொண்டால் சேதாரம் அவனுக்குத் தானே.

 

அர்ஜுனிடம் கேட்பதை விட ராமிடம் கேட்டால் ஏதாவது தெரிந்திருக்கும் என்று எண்ணிய படி ராமின் தோளில் கை போட்டு அவனை கண்ணாடித் தடுப்புக்கு வெளியே அழைத்து வந்து அர்ஜுனவனுக்கும் புரியாமல் இல்லை.

 

“ராம்ம்ம்ம்ம்..”

 

“சார்ர்ர்ர்ர்..”

 

“அர்ஜுன உனக்கு எத்தன நாளா தெர்யும்..?”

 

“இப்போ ஒரு ஆறு மாசத்துக்கு முன்ன இருந்து..”

 

“வாட்ட்ட்ட்ட்ட்..”

 

“என்னோட பிளாட்கு பக்கத்து பிளாட் தான் சார் அவன்..”

 

“ப்ளடி பூல்..ஆறு மாசமா தெரிஞ்சவன நம்பி தான் இவ்ளோ சீக்ரட்டான விஷயத்த கொடுத்தியா..சைக்கோ..”

 

“சார் அர்ஜுன் ரொம்ப நல்லவன்..அவன நம்புங்க..இந்த ப்ராப்ளத்த சால்வ் பண்ண அவன தவிர வேற யார் கிட்டவும் நம்மளால ஹெல்ப் கேக்க முடியாது..” நிலைமைய எடுத்து சொல்ல முற்பட்ட ராமுக்கு வினோத்தின் முறைப்பு தான் பதிலாய் இருந்தது.

 

வினோத்துக்கு இருந்த கோபத்துக்கு ராமின் கன்னம் வீங்கி இருக்கும்.ஏதோ தோன்ற கட்டுப்படுத்திக் கொண்டு அவனை நகரச் சொல்ல வினோத்தை திரும்பி திரும்பிப் பார்த்த படி நகர்ந்திருந்தான்,ராமும்.

 

விலகி நின்றாலும் அர்ஜுனை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது,அவன் பார்வை.சத்தியமாய் அவனை துளியும் நம்பத் தோன்றவில்லை.

 

யோசனையில் இருந்தவனின் அலைபேசி அலற ஏற்று காதில் வைத்தவனுக்கு சொல்லப்பட்ட செய்தியில் தூக்கி வாரிப் போட்டது.

 

தொண்டைக்குழி எறி இறங்க நெற்றியில் பூத்த வியர்வைத் துளிகளை துடைத்த படி முற்றாய் செவிமடுத்தவனின் இதயம் பன் மடங்கு வேகத்துடன் துடிக்க அத்தனை பயம்.

 

“ராம்ம்ம்ம்..” கத்திக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு வந்தவனுக்கு அர்ஜுன் இருப்பதெல்லாம் சிந்தையில் பதியவில்லை.

 

“ராம் ஆர்யா டெட்..”ஏறத்தாழ பயந்தொழிய முயன்ற இதயத்தை இறுகப் பிடித்த படி கத்தினான்,

அவன்.

 

“சார் என்ன சொல்றீங்க..?”

 

“ஆமா ராம்..இப்போ தான் ஹாஸ்பிடல்ல இருந்து போன் பண்ணது..காலைலயே டெட் பாடிய சகா கொண்டு பொய்ட்டானாம்..அவன் எதுவும் சொல்லல..ஷிட்..” என்றவனுக்கு திக்குத் தெரியா காட்டில் தனியாய் சிக்கிக் கொண்டவனின் மனநிலையே ஊடுருவியிருந்தது.

 

மூவரும் அதிர்ச்சியில் உறைந்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க தட்டச்சு செய்து கொண்டிருந்த அர்ஜுனின் விரல்கள் அதிர்ச்சியில் அந்தரத்தில் நின்றதை யாரும் கவனிக்கவில்லை.

 

“ரிஷிக்கு விஷயம் தெரிஞ்சா நாம செத்தோம்..லெட்ஸ் கோ..” மூவரையும் கிளப்பிக் கொண்டு அடுத்த பத்து நிமிடத்தில் அவனின் வீட்டுக்கு வந்திருந்தான்,வினோத்.

அவன் வாங்கிய முதல் வீடு அது.பதுங்கிய படி அவர்களின் வேலைகளை செய்ய உதவியாய் இருந்தது.

 

அலுவலக குழறுபடியை படியை விட தமது பாதுகாப்பே முக்கியமென கருதி இங்கு வந்த வினோத்துக்கு ஆபத்து தம்முடன் இருப்பதை தெளிவாய் கண்டு கொள்ள முடியவில்லை.

 

●●●●●●●●●

 

முறுக்கிக் கொண்டு சென்றவளை கணக்கில் கொள்ளாது இருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டு தான் இருந்தது,பையனுக்கு.

 

அவளைக் காதலிக்கிறானா என்றெல்லாம் அவன் ஆராய விரும்பவில்லை.

ஆனால்,அவளைக் காணும் நொடியெல்லாம் அவனுக்குள் ஏதோ தடம் புரள்வது புரிந்திருந்தது.

 

திருமணத்திற்கு பின் கொஞ்சமாவது அவர்களின் உறவில் சண்டைகள் குறைந்திருந்தாலும் கணவன் மனைவி என்று ஆகும் முன் இருவருக்கும் நன்றாகவே முட்டிக் கொள்ளும்.

 

தற்செயலாய் அவளை சந்தித்தால் பையனின் பார்வை ஒருமுறையேனும் அவளை தீண்டாமல் விட்டதில்லை.

 

ஏன் என்று தெரியாது.

தான் விழிகள் அவனின் பேச்சைக் கேளாததன் காரணமும் அவனுக்குப் புரியாது.அதனால் வரும் மொத்த கடுப்பும் அவள் மீதிறங்க பெண்ணவளின் நா மட்டும் சும்மா இருந்திடுமா என்ன..?

அதன் பின் நிலமை கலவரமாகி விடும்.

 

அப்போதெல்லாம்,

பையனின் பார்வை அவளை தழுவுவது அவனுக்கு பிடிக்காது.வேறு ஆடவரின் பார்வை அவளைத் தீண்டுவதும் அவனுக்குப் பிடிக்காது.

 

“நீயும் லவ் பண்ண மாட்ட..லவ் பண்ணவும் விட மாட்ட..” அடிக்கடி பையனின் தோழன் திட்டுவதை எல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.

 

சுருங்கச் சொல்லப் போனால் முரணான மனதுடன் அவளுக்கு அரணாய் நிற்பதை செவ்வனே செய்து வந்தான்,பையன்.

 

காரணம் நிச்சயம் காதல் தான்.வேறேது காரணமாய் இருந்திடப் போகிறது..?

கேட்டால் என்ன ஆணி அடித்தாற் போல் சொன்னாலும் காதல் என்று ஒப்புக் கொள்ள மாட்டான் என்பது வேறு விடயம்.

 

“இந்த பைத்தியத்த நா லவ் பண்ணுவேனா..?”

 

“இந்த கிறுக்குபயல லவ் எனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு?”

 

கேட்ட படி அவனும் அவளும் அடுத்தவர் முன்னிலையில் வாதாடி நின்றதை இருவருமே மறந்திருக்க வாய்ப்பில்லை.

 

அவர்களின் காதல் கொஞ்சம் வித்தியாசம் தான்.

 

அவளுக்குப் பிடிக்குமென்று பார்த்து பார்த்து தன்னை தயார் படுத்திக் கொண்டு வருபவனின் எண்ணத்தை பொய்யாக்காது அவளின் ஓரப்பார்வை அவனை உரசிடும் போதெல்லாம் இனம் புரியா குறுகுறுப்பு மனதினுள் உண்டாகினாலும் அதை காட்டிக்கொள்வதில்லை.

விறைப்பாய் முறுக்கிக் கொண்டு “என்ன பாக்கற..? சைட் அடிக்கிறியா..? கன்னம் வீங்கிரும்..” ஆட்காட்டி விரலை நீட்டி பற்களை நறநறத்த படி சொன்ன சந்த்ர்ப்பங்கள் ஏராளம்.

 

அவள் மட்டும் அவனுக்கு சளைத்தவளா என்ன..?

“உங்கள பாக்கறதுகு தான் நாங்க தவம் கெடக்குறோம்..போய்யா..உன்னெல்லாம் மனுஷன் பாப்பானா..?” இத்தனை நேரம் கள்ளப் பார்வையால் பையனை தீண்டியதை மறைத்து எகிறிய கோபத்துடன் பதில் சொல்வாள்,அவள்.

 

சில நேரம் புடவையில் வருபவளை அவளுக்குத் தெரியாமல் இரசித்தாலும் “சுடிதார்ல பரவால..நீல பொடவ கட்டி பூ வச்சி பேய் மாதிரி இருக்க..”அவளை வெறுப்பேற்ற புளுகுவான்,அவன்.

 

“நீங்க பாக்கறதுக்கு தான நாங்க பொடவ கட்றோம்..வந்துட்டாரு கருத்து சொல்ல..” அவனின் சட்டையின் நிறத்துக்கு தோதாய் புடவை தேடி கட்டிக் கொண்டு வந்ததை காட்டிக் கொள்ளாது முறுக்கிக் கொள்வாள்,அவளும்.

 

“எதுக்கு கால் பண்ணி டார்ச்சர் பண்ற..பஸ்ல வர வேண்டியது தான..” கடுகடுப்பை காட்டி சொல்பவன் தான் அவளை அழைத்துச் செல்ல பத்து நிமிடங்களுக்கு முன்னம் வந்து காத்திருப்பதே.

 

“பஸ் போனா நா என்ன பண்றது..தனியா ஆட்டோல வந்தாலும் திட்டுவீங்க..அதான் உங்களுக்கு போன் பண்ணேன்..இல்லன்னா நா எதுக்கு உங்க கூட வரப்போறேன்..” கோபத்துடன் திட்டிய படி வண்டிக்குள் ஏறுபவள் வேண்டுமென்றே பேரூந்தை தவற விட்டு அவனுக்கு அழைத்தது அவள் மட்டுமே அறிந்த இரகசியம்.

 

இயல்பிலேயே அவனுக்கு பிடிவாதம் அதிகம்.அவள் அப்படியல்ல.கொஞ்சம் விட்டுக் கொடுத்து நிற்பாள்.ஆனால்,அவன் முன் மட்டும் மொத்த பிடிவாதத்தையும் தளர்த்தி விடுவாள் என்றால் அது தான் இல்லை.இல்லாத பிடிவாதத்தையும் இழுத்துப் பிடித்துக் கொண்டு அவனுடன் ஏட்டிக்குப் போட்டியாய் நிற்பதில் அவளை அடித்துக் கொள்ள யாரும் இல்லை.

 

அவள் கொஞ்சம் பதட்டமானவள்.எதற்கெல்லாம் பதட்டப்படுவது என்று வரையறையில்லாமல் பதறுபவள்.அவன் அப்படியல்ல.அத்தனை நிதானம் பையனவனில்.ஆனால்,அவள் விடயத்தில் மட்டும் அவளை விட பதறித் தவிப்பது அவனாகத் தான் இருக்கும்.

 

தெளிவாய்ச் சொல்லப் போனால் அவள் காதலிப்பதை உணர்ந்திருக்க அதை காட்டிக் கொள்வதில்லை.ஆனாலும்,பையனுக்கு ஓரிரு தருணங்களில் சந்தேகம் வரத் தான் செய்கிறது.

 

அவன் காதலிப்பதை இன்னுமே உணராதிருக்க அதை வெளிப்படுத்த தெரியவில்லை.அவளாலும் அவன் தன்னைக் காதலிப்பதை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

 

உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்வது அத்தனை எளிதாக இருக்காது.தடுப்பாய் பெரும் காரணமொன்று நிற்கிறதே.

 

இது தான் அவர்களின் காதல்.நிச்சயம் புரியாத புதிர் தான்.

 

என்ன தான் சண்டை போட்டுக் கொண்டாலும் அவளைக் கொஞ்ச நேரம் காணாவிடினும் வெகுவாய் தவித்துப் போவான்,பையனவன்.

இப்போதும் அதே தான்.

 

“பட்டாசு..பைத்தியம் எங்க போச்சு..?” இதழ்கள் திட்டினாலும் விழிகள் பெரும் அலைப்புறுதலுடன் அவளைத் தேடின.

 

தொடரும்.

 

🖋️அதி..!

2024.03.30

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்