
அத்தியாயம்-06
அதிகாலை வேளையில் தனதறை பால்கனி வழியே அந்த நவநாகரீக நகரத்தினை பார்த்துக் கொண்டிருந்த அகநகைக்கு ‘நம்ம இங்கிருந்து தப்பிக்க ஏதோ ஹின்ட் இருக்கு’ என்று ஜான் கூறியது தான் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
எத்தனை யோசித்தும் அவளுக்கு அது என்னவாக இருக்கும் என்ற நினைப்பே வரவில்லை. யோசனையோடு பயணித்துக் கொண்டிருந்தவளை அலைபேசி ஒலி அழைக்க, சென்று பார்த்தவள் அழைப்பை ஏற்று, “சொல்லு விஷ்” என்றாள்.
“என்ன அகா ஒரே ரிங்குல எடுத்துட்ட?” என்று அவன் கேட்க,
“தூக்கம் வரலைடா” என்றாள்.
“என்ன நீ இப்பலாம் தூக்கம் வரலை தூக்கம் வரலைனே சொல்ற? சம்திங் ராங். உன் தூக்கத்தை கலைத்த அந்த ஆள் யாரு?” என்று நமட்டு சிரிப்போடு விஷ் வினவ,
அவள் மனதில் அகர்ணனின் முகம் வந்து போனது.
அதில் திடுக்கிட்டுப் போனவள் அவனுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையே மறந்து நிற்க, அவளை நாலு முறை அழைத்திருந்தான் தோழனவன்.
பின்பே சுயம் பெற்றவள், “அ..ஆங்டா கேக்கலை. என்ன சொன்ன?” என்று வினவ,
“கோல்டன் வர்ட்ஸ் ஆர் செட் ஒன்ஸ் (அபூர்வ வார்த்தை ஒருமுறை தான் சொல்லப்படும்)” என்றான்.
பழைய அகாவாக இருந்தால் நிச்சயம் என்ன என்று கேட்டு அவனை நச்சிரித்திருப்பாள். ஆனால் தற்போதோ அதை மீண்டும் கேட்டு மனம் அதிர விரும்பாதவள், “சரி எதுக்குடா கூப்பிட்ட?” என்று வினவ,
“நம்ம கம்பெனில எதோ விசேஷம்னு ஜே சொல்லிச்சுல?” என்று கேட்டான்.
“ம்ம் ஆமா. புது பிரான்ச் ஒன்னு ஓபன் பண்ண போறோம். இப்ப அதுக்கு என்ன?” என்று அகா சளிப்பாக வினவ,
“நம்ம டீம் லீட்ஸ்கு நம்ம தானே புது டிரெஸ் எடுத்து கொடுப்போம்?” என்றான்.
“டேய் கடுப்படிக்காம என்னனு சொல்லுடா” என்று அகா பொறிய,
“ஏ எதுக்கு இப்ப கத்துற நீ?” என்றான்.
“பின்ன என்னனு சொல்லாம ஒரு ஒரு கேள்வியா கேட்டு கடுப்படிக்குற” என்று அவள் பதில் கூற,
“சரி சரி கூல். நம்ம என் ஆளுக்கிட்ட கேட்டு அவங்களுக்கு ட்ரெஸ் எடுப்போம். இதுல எனக்கு உடன்பாடே இல்லை ஆனா நீங்க அவங்க டிசைன்ஸ் தான் நல்லா இருக்கும்னு என்னை கம்பெல் பண்ணி அவள கூப்பிட்டிருக்கீங்க. இதுதான் ஸ்கிரிப்ட் ஓகேவா?” என்றான்.
“நாயரு.. ஃபோன்ல செருப்பால அடிக்க முடியாதுனு தைரியமோ?” என்று அகா வினவ,
“என் செல்லாகுட்டில, என் புஜ்ஜிகுட்டில.. நண்பன் உனக்கு குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தரேன் தங்கம்” என்றான்.
“அடேய்.. அதெல்லாம் நம்ம காலத்துலயே அழிவின் விளிம்புக்கு போயிடுச்சு. இப்பலாம் இல்லாமலே போயிருக்கும்டா” என்று அவள் கூற,
“சரி உனக்கு ரெண்டு ட்ரெஸ் எக்ஸ்டிரா எடுத்து தரேன்” என்றான்.
“அடேய்… அவ டாப் மோஸ்ட் கம்பெனியோட லீடிங் டிசைனர். அவள நீ ஏத்துக்காம சுத்த விடுறதே மகா கொடுமை. அவகிட்ட போய் நம்ம எல்லாருக்கும் துணி கேட்டா எம்புட்டு காசாகும் தெரியுமா?” என்று அவள் வினவ,
“காசு வெளியவா போகுது? எல்லாம் நம்ம குடும்பத்துக்குள்ளயே தான இருக்கு. பேங்குல அவ்வளவு காசு வச்சிருக்கல?” என்றான்.
“சரி ஏன் கான்ஃபரென்ஸ் போடாம எனக்கு மட்டும் கால் பண்ணி சொல்ற?” என்று அவள் வினவ,
“அதுஉ.. நம்ம பணியாரமிருக்குல?” என்று இழுத்தான்.
“ஜானா?” என்று அகா அடக்கப்பட்ட சிரிப்போடு வினவ,
“ம்ம்.. ம்ம்.. அவளேதான். ரொம்ப ஓட்டி சாவடிப்பா. நீயா இந்த ஐடியாவ சொல்ற மாதிரி இன்னிக்கு போட்டுவிட்டனா என் சந்ததியினருக்கு உன்னை தெய்வமா கும்பிட சொல்லுவேன்” என்று கெஞ்சினான்.
அதில் வாய்விட்டு சிரித்தவள், “சரி சரி.. பொழச்சுபோ. ஆனா ஜான் கண்டிப்பா கண்டுபிடிச்சுடுவா” என்ற அகா அழைப்பைத் துண்டிக்க,
“அப்ப நான் அவமானப்படப் போறது உறுதிதானா?” என்று கேட்டுக்கொண்டு “பரவால.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று தோள்களை உலுக்கிக் கொண்டான்.
அதேபோல் அங்கு மதியவேளையதில் அந்த அறையில், அகநகை , விஷ்வேஷ்வரன், துருவன், ஜான் மற்றும் அமிர்தப்ரியா இருந்தனர்.
“அகா வேற டைசனரே இல்லையா?” என்று முகத்தை சற்றே கடுகடுப்பாக வைத்துக் கொண்டு விஷ்வேஷ் முணுமுணுத்தது அமிர்தப்ரியாவுக்கு அச்சரம் பிசகாமல் கேட்டது.
அவள் முகம் சட்டென வாடிவிட, அதில் அவளைவிட ஆயிரம் முறை அவன் தான் துடித்துப் போனான்.
“விஷ் திஸ் இஸ் பிஸ்னெஸ். உன்னோட பர்சனல் பகையெல்லாம் வெளிய வச்சுக்கோ” என்று அகா கூற, தற்போது அவனுக்காக வருந்துவது அவள் முறையானது.
சிரிப்பை கடினப்பட்டு அடக்கிக் கொண்டு நிற்கவே துருவனும் ஜானும் சிரமப்பட்டதால், இருவரும் வாயே திறக்கவில்லை.
“மேம்..” என்று ப்ரியா தயங்க, “நீங்க அளவு எடுக்க ஸ்டார்ட் பண்ணுங்க ப்ரியா” என்று அகா கூறினாள். அவளும் அவளுடன் வந்த தோழியும் முதன்மை ஊழியர்களுக்கு முதலில் அளவெடுக்க, பின் தோழமைக்கூட்டம் நால்வருக்கும் எடுத்தனர். விதியின் வசத்தால் இல்லை, விஷ்வேஷின் வசத்தால் அவன் அமிர்தாவிடம் அளவெடுத்துக் கொள்ள நிற்க, சற்றே தயக்கத்துடன் அவனுக்கு அளவெடுத்தாள்.
கைகள் படபடக்கத் துவங்கிட, அவன் மார்பளவை எடுத்துக் கொண்டவளுக்கு மேலும் கைகள் நடுங்கியது. வெளியே முறைப்பாகவும் விறைப்பாகவும் இருந்தவன், உள்ளுக்குள் காதலியின் நெருக்கத்தில் உறுகிப் போக, ப்ரியா கையிலிருந்த அளவெடுக்கும் கருவியை கீழே தவறவிட்டிருந்தாள்.
அதில் ‘ப்ச்’ என்று அவன் சத்தமெழுப்ப, பதறிப் போனவள், “சா..சாரி சார்” என்றாள்.
“என்ன ரோப் வச்சா அளக்குறீங்க? ஜஸ்ட் அந்த மெஷின என்னை சுற்றிக் கொண்டு வந்தா அதாவே என் சைஸ அனலைஸ் பண்ணி ரெகார்ட் பண்ண போகுது. இதை செய்ய எதுக்கு இவ்வளவு தடுமாற்றம்” என்று அவன் கடுகடுக்க,
‘மெஷின் செஞ்சாலும்.. அதை இயக்குறது நான் தானே? என் மனசு தெரிஞ்சும் இப்படி பேசுறீங்களே’ என்ற கேள்விகளைக் கண்ணோடு தேக்கி வைத்தவள், “சாரி சார்” என்று மீண்டும் பணியைத் தொடர்ந்தாள்.
கண்களே கலங்குவது போல் உணர்ந்தவள், தன் முகத்தை துடைப்பது போல் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திரும்ப, அவள் பின்னே வெகு அருகில் நின்றவன் மீது மோதிக் கொண்டாள்.
தடுமாறி விழப்போனவள் இடை பற்றி நிறுத்தியவன் செயலில் திடுக்கிட்டு விழிகள் விரிய நின்றவள், செயலாற்ற மறந்து அசைவற்றுப் போனாள்.
தன்னவளின் நெருக்கம் கொடுத்த உவகையில் தன்னையும் மறந்து காதல் கசியும் விழிகளில் அவளை உள்வாங்கி நின்றவன், சுயம் பெற்ற நொடி அவளை தள்ளி நிறுத்த, “அ..அளவு எடுத்தாச்சு” என்றவள் விருட்டென்று அவ்வறையிலிருக்கும் கழிவறைக்குள் சென்றுவிட்டாள்.
அவளது நிலை வருஅத்தியபோதும் அவள் தனக்கான காதலை எண்ணி பரிதவிப்பதில் அத்தனை குளுகுளுவென்று தான் உணர்ந்தான் ஆடவன். ‘புடிச்ச கையோட ஒரு கிஸ் அடிச்சிருக்கலாமோ?’ என்று அவன் முனங்கவே, “அடிப்படா அடிப்ப” என்றபடி அவன் அருகே வந்த ஜான் அவன் முதுகில் ஒரு அடி போட்டாள்.
அதில் “ஆ..” என முதுகை தேய்த்துக் கொண்டவன், ஜான் பேச வாயெடுக்கும் முன் அவள் வாயை கப்பென பொத்தி, “அமி உள்ள தான் இருக்கா. ப்ளீஸ் சைலன்ட் ஜான்” என்க ‘பொழச்சு போ’ என்ற ரீதியில் அமைதியானாள்.
சில நிமிடங்களில் அழுந்தத் துடைத்த முகத்துடன் அமிர்தப்ரியா வெளியே வர, “தேங்ஸ்” என்ற அவள் முகம் பார்த்து கூறிவிட்டு விஷ் வெளியேறினான்.
‘எதுக்கு இந்த தேங்ஸ்?’ என்று புரியாது விழித்தவளிடம் வந்து ஜான் “டிரெஸஸ் எப்ப கிடைக்கும் ப்ரியா?” என்று வினவ,
“டூ டேஸ்ல கிடைச்சிடும் மேம்” என்றாள்.
“ஓகே டியர். தேங்ஸ்” என்று அவள் கூற,
தானும் புன்னகைத்தவள் உடன் வந்த மற்றைய பணியாளருக்கு காத்திருந்தாள். அங்கு அந்த கட்டிடத்தை சுற்றியுள்ள பூங்காவில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு துருவனும் அகாவும் சிரித்துக் கொண்டிருக்க,
“ச்ச.. ஆனாலும் அந்த பொண்ணு ரொம்ப பாவம். காதலிச்சவ கலங்கி நிக்குறதுல இவனுக்கு என்னதான் சுகமோ?” என்றபடி ஜான் அங்கு வந்தாள்.
“அதெல்லாம் உனக்கு புரியாது ஜான். நம்ம லவ்வரு நமக்காக ஏங்குறது ஒரு தனி குஜாலா இருக்கும்” என்று துருவன் அவள் தோள் தட்டி கூற,
அகாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவள், “ஃபீலிங்கா சொல்றியே.. எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிருக்கியோ?” என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டாள்.
ஒருநொடி அவள் கேள்வியில் தடுமாறியவன், “ஏ லூசு.. போடி” என்று கூற,
“ஹாய் காய்ஸ்” என்றபடி, ஆர்.ஏ குரூப்ஸின் ஓனர் ராஜும் அவனுடன் அவனது பி.ஏவான அகர்ணனும் வந்தனர்.
அகர்ணனை கண்டதும் அகநகை உள்ளுக்குள் ஏதோ தடுமாற்றத்தை உணர, முன்பே ஜே மூலம் இருவரையும் தெரிந்துக் கொண்டிருந்த மற்றையவர் இருவரும் அவர்களுடன் கைகுலுக்கி சகஜமாக பேசினர்.
பேசியபடி அவர்கள் மூவரும் முன்னே செல்ல அகாவும் அகர்ணனும் சற்றே பின்தங்கி வந்தனர்.
“என்ன அவி மேடம் ட்ரெஸ் டிஸைனிங்கு என் ஃப்ரண்ட கூப்பிட்டிருக்கீங்க போல?” என்று அகர்ணன் வினவ,
அவனை திரும்பிப் பார்த்து ‘ஆம்’ என்பதுபோல் தலையசைத்தாள்.
“ஹ்ம்.. எனக்கெல்லாம் ட்ரஸ் கிடையாதா?” என்று விளையாட்டாக அவன் கேட்க, என்ன நினைத்தாளோ, அவனை அழைத்துக் கொண்டு அமிர்தாவிடம் வந்து, “ப்ரியா இவருக்கும் ராஜுக்கும் சேர்த்து ட்ரஸ் டிசைன் பண்ணிடுங்க” என்றாள்.
ராஜும் சட்டென அவள் கூறியதில் அதிர்வு கலந்த புரியாத பாவத்துடன் விழிக்க, “அவி.. நான் சும்மாதான் கேட்டேன்” என்று அகர் அவள் காதை கடித்தான்.
“இல்லை நம்ம பார்ட்னர்ஸ்கும் ட்ரஸ் எடுத்துத் தரனும்னு நான் முதல்லயே யோசிச்சு இருந்தேன்” என்று அவள் கூற, அவர்களுக்கும் அமிர்தப்ரியா அளவெடுத்தாள்.
பின் பெண்ணவள் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு விஷ்வேஷை ஏக்கத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் புறப்பட, தோழி பின்னோடே ஓடிய அகர், “ப்ரீ.. இந்தா” என தனது கால்சாராய் பையிலிருந்து அவளுக்கு பிடித்தமான இனிப்புக்கட்டி ஒன்றை எடுத்துத் தந்தான்.
அகா சட்டென விஷ்வேஷை திரும்பிப் பார்க்க, அவளுள் எங்கே அவன் அகர்ணனின் நட்பை தவறாக எடுத்துவிடுவானோ என்ற ஐயம் எழுந்தது.
ஆனால் சன்னமான புன்னகையுடன் விஷ் அவர்களை ‘உங்கள் நட்பை நான் மதிக்கிறேன்’ என்பதைப்போல பார்க்க, இங்கு நிம்மதி பெருமூச்சு விட்டவள், தன் உணர்வுகள் போகும் போக்கை கண்டு, ‘நான் ஏன் அவருக்காக பயப்படுறேன்?’ என்று பதறிப்போனாள்.
அவளுக்கு யார் கூறுவது அவளே அறியாமல் அவனைத் தன் மனதில் அவள் வார்த்துக் கொண்டிருப்பதை? இது அறியாமல் அவள் மீது மையல் கொண்டிருக்கும் ஜீவன் இதை ஏற்பானா? இல்லை மறுப்பானா? கதையின் போக்கில் அறிவோம்!
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விஷ் அகாவ அவன் சந்ததியினருக்கு குலதெய்வாமா ஆக்கிடுவான் போல. 🤣🤣
காதலியை கண்களில் பருகிக்கொண்டிருந்தவன் இப்பொழுது அவள் காதலை விழிவழி பருகிக்கொண்டிருக்கின்றான்.
காதலிப்பதை விட காதலிக்கப்படுவது பேரின்பம் தான்.
நண்பர்களின் செல்ல சண்டைகள் அழகு.
நட்பின் கண்கொண்டு பார்த்ததால் அகாவிற்கும் விஷ்ஷிர்க்கும் அகர்ணன் அமிர்தாவின் நட்பை புரிந்துகொண்டனர்.