

KKEN-5
“அப்பா! ப்ளீஸ் பா! அக்காவுக்கு இப்ப கல்யாணம் வேணாம்பா. அக்கா இப்பதான் ஸ்கூல் முடிச்சுருக்கு. அக்கா கொஞ்ச நாள் நம்ம கூட இருக்கட்டும்பா” காலை பிடித்து கெஞ்சும் மகனின் முகத்தை பார்த்தவருக்கு துளியும் இறக்கமில்லை .
“எனக்கு இந்த கல்யாணம் வேணாம். எனக்கு மாப்பிளையை புடிக்கல. தம்பி ப்ளஸ் டூ முடிக்கட்டும் அப்புறமா நான் கல்யாணம் பண்ணிக்கறேனே” சொல்வதற்கு துளியும் தைரியம் இல்லாதவள் மலர். பேசித் தீர்க்க வேண்டியதை கூட தீர்த்துவிட்டு பேசும் தந்தையிடம் சிறு பெண் எப்படி தைரியமாக பேச முடியும். அவள் மட்டும் அல்ல. வெற்றியும் அப்படிதான். வயதிற்கு வந்ததன் பின்னும் வாய் திறக்கப் பயப்படும் அதிசய பிறவிகள். அப்படி என்றால் வெற்றியின் தங்கை மட்டும் எப்படி? அவள் மட்டுமே விதி விலக்கு . அவள் பிறந்த போது அவள் அன்னை நன்றாகத்தான் இருந்தாள் . ஆனாலும் வயிற்றில் வலி. அரசு மருத்துவமனை. நர்ஸுகளிடம் சொன்ன போது,
“அப்ப வலி இல்லை. சுகமா இருந்தது. இப்ப வலிக்குதோ?மூணு பெத்துக்கிட்ட?” அசிங்கமாய் பேசினார்கள். மழை நேரம். மருத்துவர்கள் வரவே இல்லை. மருத்துவர்கள் வந்து பார்த்த நேரம் எல்லாம் கை மீறிப் போனது.
வயிற்றில் மாட்டிக் கொண்டிருந்த நஞ்சுக் கொடியை அகற்றாமல் விட்டதன் விளைவு வெற்றியின் அன்னை இறந்து போனாள் . அதே நேரம் மந்திரி வந்து பார்த்ததால் வெளியில் விஷயம் கசியாமல் இருக்க நஷ்ட ஈடு கொடுத்து சரி கட்டினார்கள்.
குழந்தையை வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வந்தபோது,
“ஒனக்கு காச அள்ளி கொட்டி இருக்கா மகராசி! தாயில்லா புள்ள! வுட்டுறாத ராசா” ஆரத்தி எடுத்துவிட்டு ஏதோ ஒரு கிழவி சொல்லி விட்டு போனார்.
“நீதான் தாயி இனி தம்பி தங்கச்சிக்கு அம்மாவா இருந்து பார்த்துக்கணும்” தங்கைக்கு நல்லது செய்தவர் கூடவே அக்காவுக்கு ஆப்பு அடித்துவிட்டார்.
வெற்றியின் தந்தை அது வரை வாடகை ஆட்டோ ஒட்டிக் கொண்டிருந்தவர் புது ஆட்டோ சொந்தமாக வாங்கி கொண்டார். கடைசி மகள்தான் தன்னுடைய உலகம் என்று புவனா என்று பெயர் சூட்டினார். சீராட்டி பாராட்டி வளர்த்தார். மற்ற குழந்தைகளுக்கு சமைத்துப் போட மூத்தவள் படிப்பை பத்தாம் வகுப்புடன் நிறுத்தினார் . வெற்றி தான் அழுது அடம் பிடித்து எப்படியோ பன்னிரண்டாம் வகுப்பு வரை அவளை படிக்க வைத்து விட்டான். அக்காவின் படிப்புக்காக தானும் வீட்டு வேலைகளைக் கற்றுக் கொண்டான். அவன் எத்தனையோ கஷ்டப்பட்டும் நிறுத்த முடியாதது இந்த திருமணம்தான். அக்காவுக்கு சோப்பு அலர்ஜி உண்டு. அவளுக்காகத்தான் இந்த வாஷிங் மெஷின் வாங்கிப் போட்டான். ஆனால் இன்று கையெல்லாம் காய்த்து, தோல் உரிந்து புண்ணாகி இருந்த அக்காவின் கைகளை பார்த்தவனுக்கு தாங்கத் தான் முடியவில்லை.
“அக்கா எதுக்குக்கா இன்னும் இங்க இருக்க?வாக்கா! இனிமே இங்க இருக்க வேணாம். நான் பாத்துக்கறேன்கா”
“விடுடா கைய! அங்க வந்து எவண்டா நம்ப அப்பாகிட்ட பேச்சு வாங்க முடியும் ?இவராவது ஒரு நேரம் அடிப்பாரு . ஒரு நேரம் கொஞ்சுவாரு . அங்க? வார்த்தையால இருக்கறது பத்தாதுன்னு பெல்டல வேற அடிச்சு விளாசுவாரு. எப்படியாவது என்ன தள்ளி விட்டுடணுன்னுதானடா இங்க தள்ளி விட்டாரு. மறுபடியும் எப்பிடிடா அங்க வர முடியும்?”
அவளே ,
“சரி! நீ என்ன தனியா கூட்டிகிட்டு போய்ட்டா? நமக்கு எவன் வீடு குடுப்பான்?வாழாவெட்டி . புருஷன சந்தோஷப்படுத்த தெரியாதவ. புழு பூச்சி இல்ல அதான் புருஷன்காரன் வெறட்டிட்டான் இன்னும் என்ன பேசுவாங்கண்ணே தெரியாது. அது மட்டுமா? அவன் போனா என்ன ஒனக்கு இன்னிக்கு நான் புருஷனா இருக்கேன்னு வந்து நாலு பேரு நிப்பாங்க.”
“எதுக்குக்கா எதை எதையோ நினச்சு பயப்படற. அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா. நான் பார்த்துக்கறேன்கா. அப்பா கிட்ட நான் பேசறேன்கா. தங்கச்சி அங்க இருக்கற மாதிரி நீயும் வாக்கா. இந்த நரகத்துலேர்ந்து வெளில வாக்கா. எதுக்கும் பயப்படாதக்கா. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் நீ வாக்கா “
“என்ன சொன்ன? எதுக்கும் பயப்படாதவா? ஒரு புழுக்கு இருக்கற தைரியம் கூட எனக்கு இல்லையடா. அது இருந்தா என்னிக்கோ நான் செத்துருப்பேனே.”
எத்தனை சொல்லியும் அவள் கேட்கவே இல்லை.
“அடியே மகாராணி! போதும் உன் தம்பிகிட்ட கொஞ்சினது. குளிக்கற புருசனுக்கு போய் டவல் குடு.”
“நீ கிளம்பு வெற்றி” கண்ணீரை துடைத்துக் கொண்டு ஓடிப் போகும் தமக்கையை பார்த்தவனுக்கு மனம் ஏற்கவில்லை. அவளின் மன பாரத்தை அவள் கண்ணீர்தான் இன்று கரைத்துக் கொண்டிருக்கிறது. கையாலாகாதனத்தை எண்ணி கோபம் வந்தது. அக்காவுக்கு என்றாவது ஒரு நாள் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்றால் அதற்காக அவன் எதையும் செய்வான். அப்போது அவன் யாருக்கும் எதற்கும் பயப்படப் போவதில்லை.
வீட்டில் நடந்த பிரச்சனையில் தன் பாரா முகம் வித்யாவின் மனதை புண்படுத்தி இருக்கும் என்று அவனுக்கு தோன்றவே இல்லை. முதல் நாள், அடுத்த நாள் மூன்றாவது நாள் அவள் வாயை திறக்கவே இல்லை. முதல் ஒரு நாள் அமைதியாக வந்தவனுக்கு இரண்டாம் நாள் வாயை மூடிக் கொண்டு வர முடியவில்லை.
“குட் மார்னிங் மேடம்”
“குட் மார்னிங்” முகம் பார்க்கவில்லை. முகத்தை திருப்பிக் கொண்டாள் . ஏறி அமர்ந்ததும் காதில் ஹியர் போனை வைத்துக் கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்து விட்டாள் .அவனிடம் பேச துடிக்கும் நாவை பாட்டில் கவனம் செலுத்தி மாற்றிக் கொண்டாள் .
“நாம ஏதாவது கேக்க போய் இவன் எதையாவது சொல்லுவான். எதுக்கு வம்பு” மனதில் கறுவினாள் .
அடுத்த நாளும் அதையே செய்தாள் .
பாப்பாவின் பள்ளி விழா வந்ததில் வீட்டினர் அனைவருமே ஓரளவு சமாதானமாகி இருந்தனர். தேவதையாக வந்த தங்கை மகளை விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டான். அதேப் போன்ற உடையில் வந்து நின்ற வித்யாவின் முகம் எப்படி கண்ணில் வராமல் இருக்கும். அப்போதுதான் அவள் கடந்த இரு தினங்களாக தன்னிடம் பேசாமல் வருவது உறைத்தது .
“அசோ! மேடம் என் மேல கோபத்துல இருப்பாங்களோ? உடனே போன் பண்ணி சாரி கேட்டுடுவோம். “
மணியை பார்த்தான். இரவு எட்டு மணி. இப்போது அழைக்கலாமா வேண்டாமா ? யோசனையுடன் அழைத்து விட்டான்.
“ஹலோ!” எப்பவும் போன் பண்ண மாட்டானே? நாளைக்கு வர முடியாதுன்னு சொல்ல கால் பண்ணி இருப்பானோ? வித்யாவின் மனதில் நொடிக்குள் மனதில் ஆயிரம் சந்தேகங்கள்.
“மேடம்!” குரல் குழைந்தது .
“ம்! சொல்லுங்க. என்ன விஷயம்?”
அவள் மிரட்டலில் பயந்துவிட்டான் .
“ஒண்ணுமில்ல சும்மாதான்”
“என்ன சும்மா? காசு கொடுத்துன்னு”
“சாரி மேடம்!” போனை வைத்து விட்டான். வாயால் மூச்சை விட்டு தன்னை சரியாக்கிக் கொண்டான். குழந்தையின் புகைப்படங்களை அவளுக்கு அனுப்பி வைத்தான். தம்பஸ் அப் சிம்பல் வந்தது.
முதல் நாள் இரவில் சொல்ல முடியாததை அடுத்த நாள் காலையில் சொன்னான்.
“நேத்து எதுக்கு கால் பண்ணீங்க?” அவள் முகம் கோபமாகத்தான் இருந்தது. காரணம் தெரியாதிருந்தால் பயந்திருப்பான். இப்போதுதான் காரணம் புரிந்து விட்டதே. இப்போது சிரிப்பு வந்தது காமெடி போலீசை பார்த்து.
“இல்ல! அன்னிக்கு அந்த புது ட்ரஸ்ல ரொம்ப அழகா இருந்தீங்க.”
அவள் இறங்கி பணம் கொடுத்த போது சொன்னான்.
“ஓ ! அப்ப இப்ப அசிங்கமா இருக்கேனா?”
“மேடம் நீங்கல்லாம் சாமி சிலை மேடம். எப்படி இருந்தாலும் அழகு தான் மேடம்” அசால்ட்டாக சொல்லிக் கொண்டே அடுத்த சவாரிக்குப் போனான்.
“மனதில் ஏன் இந்த சந்தோஷம்?” வித்யாவுக்கு புரியவில்லை.
அவனுக்கும்தான் புரியவில்லை, அவளின் ஒற்றைப் புன்னகையில் நாள் அழகாக மாறுமா? நாள் மட்டுமல்ல. வாழ்க்கையும் மாறும் என்பதை புரிய வைப்பாள் அவன் தேவதை.
——————————————————-
காவல் நிலையம் பரபரப்பாக இருந்தது. மதுவும் அவளுடன் வேலைப் பார்ப்பவர்களும் இதோ அவசரமாக கிளம்பி விட்டார்கள். பெரியதாக எல்லாம் ஒன்றும் இல்லை. மந்திரிக்கு பந்தோபஸ்து.
எந்த மந்திரி?
தொழில் துறை மந்திரி.
தொழில் துறை மந்திரி எங்கே போகிறார்?
புது கார் தொழிற்சாலையை திறந்து வைக்க.
தொழிற்சாலை யாருடையது?
இதெல்லாம் ஒரு கேள்வியா?
தொழில் துறை மந்திரியின் மகனுடையது.
“டேய் உன் பையனோட கம்பனியை தொறக்க நீ போற. எதுக்கு டா எங்களை வெய்யிலில் நிக்க வைக்கற? இயற்கை உபாதைக்கு போக கூட வழி இல்லாமல் நின்றிருந்த பெண் காவலர்கள் தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். மனதிற்குள்.
” இவன் வந்தது கடைய தொறந்ததுக்கு அப்புறமாத்தான் நமக்கு வண்டி வரும்”
சில பெண் காவலர்கள் மனதிற்குள் புலம்பி இருந்த நேரம் மது வந்தாள்.
“மேடம் ப்ளீஸ் மேடம்! எங்கையாவது போயே ஆகணும் மேடம். தாங்க முடியாது.”
அடக்க முடியாத அவஸ்தையை வெளிப்படையாகவே சொன்னாள் அந்த பெண் காவலாளி.
குற்றவாளிகளுக்குத்தான் அவள் கடுமையானவள். உடன் வேலை செய்பவர்களுக்கு நல்ல தோழியாகவும், உடன் பிறந்தவளாகவும் தான் இருப்பாள். அதே சமயம் வேலைன்னா வேற மாதிரிதான்.
“டேட்ஸா? “
“எஸ் மேடம்.”
“ஓகே! ஒடனே வண்டிய வர சொல்லறேன்.”
“காவலர்களுக்கான நடமாடும் கழிப்பிட வண்டி வந்தது. அப்போதுதான் பாவம் அந்த பெண்களுக்கும் மூச்சு வந்தது.
“முடியலைன்னா எங்கையாவது போய் உக்காரு. யாரவது கேட்டா மயக்கம் வந்துடுச்சுன்னு சொல்லு. நான் பார்த்துக்கறேன்.”
“எஸ் மேடம்” மனதார நன்றி உரைத்தாள் .
மந்திரியின் மகன் முன்பே வந்து விட்டார்.
“டேய் யாருடா நீ! என்ன கலருடா ? நான் தெரியறேனா? கூலர்ஸுக்குள் இருந்த கண்கள் கேட்டன. நீ மனசுல நினைச்சாலும் எனக்கு கேக்கும். காதுகள் சொல்லியது. இவனுக்கு நாந்தான் ஜோடி . கழுத்தின் செயின் சொன்னது. எனக்கென்ன குறைச்சல்? அரைக்கை வெள்ளை சட்டைக்குள் இருந்த ஏறி இறங்கிய புஜங்கள் கேட்டது. நா இல்லன்ன நீங்கல்லாம் ஒண்ணுமே இல்ல அவனின் உயரம் சொன்னது. உங்களுக்கும் சேர்த்து நான்தான் அப்பாடக்கரு. அவனின் குரல் சொன்னது.அங்கங்கே சில வெள்ளை முடி வந்திருந்தது. அதுவும் இத்தனை அழகாக இருக்குமா. மொத்தத்தில் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நிமிடமாவது நின்று பார்த்து விட்டுத் தான் திரும்புவார்கள். அதிலும் பெண்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.”
காதல் வரும்..
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது”
அவனை கதாநாயகனாகி, தானே நாயகி ஆகி டூயட் பாட ஆரம்பித்து விடுவார்கள்.
“மினிஸ்ட்டர் கிட்ட வந்துட்டாரு. எல்லாம் ரெடியா? என்ன போலீஸ் மேடம்? பந்தோபஸ்து எல்லாம் சரியா இருக்கா ?
“எஸ் சார். எல்லாமே சரியாத தான் இருக்கு”
“உங்க பேரு ?”
அவள் சொல்வதற்கு.ள் கூலர்ஸை விலக்கி அவள் காக்கி சட்டையில் எழுதி இருந்த பெயரை படித்துக் கொண்டான் கை தொட்டு. அத்தனைபேர் முன்பும் அவளுக்கு அவமானமாக இருந்தது. அவன் கை பட்ட இடம் உடல் எரிந்தது. ஒன்றும் செய்ய முடியாது. உதட்டை கடித்துக் கொண்டாள் . அவள் கடித்த இடத்தில் லேசாக ரத்தம் வந்தது . அதை பார்த்தவன் தன்னை அடக்கிக் கொண்டான். வேறு இடமாக இருந்திருந்தால் அதிபனே துடைத்திருப்பான்.
அதிபன்?
காதல் வரும்………

