Loading

நினைவுகள் -6

அன்று…

சண்முகம் கூறியதைக் கேட்டு முகம் மலர்ந்த ராதிகா, அவரது கேள்விக்கு பதிலளித்தாள்.

” இன்னும் நாளிருக்கு பா. ஜனவரியிலிருந்து தான் காலேஜ் ஸ்டார்ட் ஆகும். அப்புறம் லோன் எல்லாம் வாங்க வேண்டாம் பா. எனக்காகன்னு நகை சேர்த்து வச்சிருக்கீங்கள்ல அதை வித்துடுவோம்.” என்றாள்.

“ஒன்றா, இரண்டா… ஐம்பது பவுன் நகை. அதை வாங்குவதற்கு எவ்வளவு கஷ்டப் பட்டிருப்போம். இப்படி ஈஸியா விக்க சொல்றீயே.” என்றாள் சுந்தரி.

இதே சுந்தரி தான், இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த நகையெல்லாம் வேண்டாம். வித்துடலாம் என்று கதறி இருந்தாள். அது யாரும் நினைவு படுத்தாமலே அவருக்கு நியாபகம் வந்தது.

அப்போதும் மகளின் உயிரைக் காப்பாற்றவதற்காகத் தான் விற்கலாம் என்று முடிவுக்கு வந்திருந்தாள்.

இப்போதும், மருத்துவம் படிக்க வைக்கவில்லை எனில், மகள் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறியது நினைவுக்கு வரவும் சுந்தரி, ” சரி ராது பா… நகையெல்லாம் வித்துடுங்க…” என்று விட்டு, கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டாள்.

ராதிகாவின் முகமும் ரத்த பசையின்றி வெளுத்திருந்தது. அவளைப் பார்த்த சண்முகம், அப்போது தான் அவளும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார்.

மகளது மனதை மாற்றும் பொருட்டு,”சரி மா… சொல்லு… உனக்கு பிலிப்பைன்ஸல படிக்க ஐடியா கொடுத்தது யாரு. அந்த சோடா புட்டி கண்ணாடி போட்டிருந்த மிஸ் தானே.”

அவர் நினைத்தது போல சண்டைக்கு வந்திருந்தாள் ராதிகா.” ப்பா… அவங்க எனக்கு டீச் பண்றவங்க. அவங்களை இப்படித் தான் கிண்டல் பண்ணுறதா?”

“அவங்க உனக்கு தான் டீச்சர். எனக்கில்லையே. பெரிசா எனக்குத் தெரியாமல் ரகசியம் பேசுறதா நினைச்சிட்டு, தனியா அழைச்சிட்டு போனாங்களே அப்பவே சந்தேகம்.” என்று கூறியிருந்தவர், மானசீகமாக மகளின் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

” அப்பா… உங்களை வர்ற சண்டே அன்னைக்கு அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வரச் சொன்னாங்க. அவங்க ரொம்ப நல்லவங்கப்பா.” என தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டு சலுகையாகக் கூற.

“அது தான் எனக்குத் தெரியுமே மா.”

” சரி சாப்பிட வாங்க பா… அம்மாவும் இன்னும் சாப்பிடலை. ” என்றவள் இருவரையும் டைனிங் டேபிளிற்கு அழைத்துச் சென்று பரிமாறினாள்.

முகமெல்லாம் சந்தோஷத்துடன் இருவருக்கும் உணவு பரிமாறுபவளை, சற்று ஆச்சரியத்துடனே சண்முகமும், சுந்தரியும் பார்த்தனர்.

 கடந்த இரண்டு வருடத்தில் இந்த அளவுக்கு மகிழ்ச்சியோடு அவளை பார்த்ததே இல்லை.

மகளது சந்தோஷத்தைப் பார்த்து, அவர்களுக்கு மன நிறைவு தான். ஆனாலும் அவர்களால் உணவை உண்ண முடியவில்லை‌.

 மகள் வருந்துவாளே என்று எண்ணி இருவரும் மருந்தென உணவை விழுங்கினர்‌.

 ‘ராதிகா இல்லாமல் தாங்கள் எப்படி இருப்பது.’ என அவர்கள் கவலை கொள்ள…

 ராதிகாவோ, வெளிநாட்டிற்குச் சென்று படிப்பதற்கு வாய்ப்பு இருக்கு என்று ஆசிரியர் கூறியதிலிருந்து, தனது பெற்றோரை எப்படி தனியாக விட்டுச் செல்வது என்ற யோசனையிலேயே இருந்து அதற்குள் ஒரு தீர்வையும் கண்டிருந்தாள்‌.

***********

இன்று…

விடாமல் இசைத்த ஐஃபோனை எடுத்து கட் செய்தவன், ” உனக்கு என்ன இந்த ரிங்டோனை வச்சிருக்கிறது தானே ப்ராப்ளம். இப்பவே நான் சேன்ஞ்ச் பண்ணிடுறேன் ஓகே வா.” என்று விஸ்வரூபன், அதை மாற்ற முயற்சி செய்ய…

 அவன் கையில் இருந்து ஃபோனை வாங்கி மெத்தையில் வீசிய அனன்யா, ” மாமா… நான் என்ன சொல்ல வர்றேன் என்று உங்களுக்கு புரியுது. ஆனால் புரியாத மாதிரி நடிக்கிறீங்க.”

” இந்த பொய்யான வாழ்க்கை எவ்வளவு நாள் வாழுறது. நான் ஒருத்தி செஞ்ச தப்புக்கு, நீங்க இரண்டு பேரும் சிலுவை சுமக்குறீங்க. அவளைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. ” என அனன்யா கண்ணீர் சிந்த…

” இங்க பாரு அனு… நீயும், நானும் கணவன்-மனைவி இது உண்மை. இதை மாத்தணும் நினைக்காதே. உன்னாலே முடியாது. நாம சாகுற வரைக்கும் மாறாது இந்த பந்தம்.” என்றவன், அவளை சட்டை செய்யவில்லை.

இன்டர்காமை எடுத்து ரூமை வெகேட் பண்ணுவதாக சொல்லியவன், க்ளாஸ் உடைந்ததைக் கூறி அதற்கான பேமண்டையும் பில்லில் சேர்க்க சொல்லியிருந்தான்.

ரூம் பாய் வரவும், லக்கேஜை எடுத்து வரச் சொல்லி விட்டு, அனன்யாவை கைப்பிடியாக இழுத்துச் சென்றான்.

அனன்யாவோ, இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. விஸ்வரூபன் கூறிய வார்த்தை கேட்டதும், மனதிற்குள் அந்த வார்த்தை ஒன்றே ஓடிக் கொண்டிருந்தது.

அதற்குப் பிறகு காரில் செல்லும் போதும், வயிற்றில் இருக்கும் குழந்தை மேல் கை வைத்துக் கொண்டு, ‘ இந்த பொய்யான வாழ்க்கை வாழக்கூடாது. ஆனால் குழந்தை இருக்கிறதே… சாவதற்கு கூட கடவுள் கருணை காட்டவில்லையே…’ என தனக்குள் மருகிக் கொண்டிருந்தாள். நல்ல படியாக குழந்தையை பெற்றெடுத்து விட்டு, என்னவனை தேடி செல்ல வேண்டும் என்று அந்த நொடியிலிருந்து தீவிரமாக எண்ணத் தொடங்கினாள் அனன்யா.

ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்த ராதிகாவோ, உற்சாகத்தில் மிதந்தாள். வரும் வழியில் பாம்பே ஸ்வீட்ஸில் சந்திரகலா ஸ்வீட்ஸ் இரண்டு பாக்ஸ் வாங்கிக் கொண்டாள்.

” அம்மா… அப்பா… ” என்று கத்தியபடியே வீட்டிற்குள் நுழைந்த ராதிகா, சுந்தரியுடன் பேசிக் கொண்டிருக்கும் ஸ்வேதாவை பார்த்து, ” ஹாய் அண்ணி… நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா. டூ மினிட்ஸ் ப்ரெஷ்ஷப் ஆகிட்டு வந்துடுறேன்” என்றவள் தான் வாங்கி வந்தவற்றை டீபாய் மேல் வைத்து விட்டு தனதறைக்கு ஓடினாள்.

இரண்டு நிமிடம் என்றவள், வழக்கம் போல ஒரு குளியல் போட்டு விட்டுத் தான் வந்தாள்.

” என்ன ராது… திடீர்னு ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்க…” ஸ்வேதா வினவ.

“ஒரு சந்தோஷமான விஷயம். அதான் ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன். ஆமாம் என்னோட ஸ்வீட்டி எங்கே?”

“அவ அங்கிளோட கடைக்கு போயிட்டா… என்ன விஷயம் அதை மொதல்ல சொல்லு.

“அது… இன்னைக்கு எங்க டாக் ஃபோன் பண்ணுனார். பீஜி நீட் ரிசல்ட் வரவும் காஞ்சிபுரத்தில அவரோட ஃப்ரெண்ட் காலேஜ்ல சேர சொல்லிட்டார். அங்கே எனக்கு ஃப்ரீ கோட்டால சீட் அலாட் பண்ணியிருக்காங்க.” என தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டாள் ராதிகா.

ஆனால் அதன் எதிரொலி அங்கு ஒலிக்கவில்லை.

  சுந்தரியும், ஸ்வேதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்.

“என்ன மா… நான் எவ்வளவு ஹாப்பியான நியூஸ் சொல்லிட்டு இருகக்கேன். நீங்க ஒன்னும் சொல்லாமல் இருக்கீங்க.”

” சந்தோஷம் தான்டா… உனக்கு இருக்குற திறமைக்கு சீட் கிடைக்கும் டா.” என்றாள் சுந்தரி.

” திறமை இருக்குறவங்களுக்கு சீட் கிடைக்கும். பட் எங்க டாக் முயற்சியால் செலவில்லாமல் சீட் கிடைச்சிருக்கு. ஆனால் நீங்க என்னமோ யோசனையில் இருக்க மாதிரி தெரியுதே.” என்று ஆராய்ச்சியாக சுந்தரியைப் பார்க்க…

சுந்தரி என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க. ஸ்வேதா தான் பதிலளித்தாள். ” ராது… அங்கிளுக்கும், ஆன்டிக்கும் தஞ்சாவூரை விட்டுட்டு வர மனசில்லை.”

” மா… கடை வித்துட்டு என்னோட சென்னைக்கு வரதாதானே ப்ளான்.” என்று குழப்பத்துடன் ராதிகா வினவ.

சரியாக அந்த நேரத்திற்கு சண்முகம், விகர்தனாவுடன் நுழைந்தார்.

விகர்தனா விக்ரம், ஸ்வேதாவின் மகள். நான்கு வயது சுட்டி. ராதிகாவிற்கு ஸ்வீட்டி. அவளுக்கு ராதிகா ஸ்வீட்டி.

“ஸ்வீட்டி …” என்று ஓடிவந்த விகர்தனாவைக் கூட கண்டுகாமல் அதிர்ந்து நின்றாள்.

“ராது… குட்டிமா கூப்பிடுறா பாரு… உனக்கு எது கேட்கணும்னாலும் அப்பா கிட்ட கேளு… நான் உங்களுக்கு காஃபி போடுறேன்.” என்று விட்டு கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டார்.

ஸ்வேதாவோ, ” நான் அப்புறமா வரேன்.” என்றுக் கூறி விட்டு மகளையும் அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்.

 ” என்னடா ராது‌… முகம் வாடிப் போய் இருக்க? உங்க அம்மா ஏதும் வம்பிழுத்தாளா?”

“அப்பா… சென்னைக்கு என் கூட வரமாட்டீங்களா…” என்று ஏக்கமாக வினவ.

” இதுக்குத் தான் இப்படி முகம் வாடிப் போய் இருக்கீயா? பதினெட்டு வயசுல தைரியமா வெளிநாட்டில் படிக்கிறதுக்கு முடிவெடுத்து, அதற்கான முயற்சி எல்லாம் செஞ்ச என்னுடைய ராதுவா என்று யோசனையா இருக்கு.

 இப்ப நீ ஒரு டாக்டர். மெச்சூர்டு கேர்ள். இருபத்து ஐந்து வயசாகப் போகுது. தைரியமா போய் படிக்கிறத விட்டுட்டு, எங்களை இந்த வயசான காலத்துல அங்கே கூப்புடுற.

இத்தனை வருஷம் இருந்த இடத்திலிருந்து, புது இடத்திற்கு மாறனும்னா எங்களுக்கு கஷ்டமா இருக்குது டா.

 அங்க நல்ல ஹாஸ்டல்ல போய் சேர்க்கிறேன் டா. வாராவாரம் சனி ஞாயிறு இங்கே வா.”

” அப்பா… அண்ணாக் கிட்ட கடையை கொடுக்கிறேன் என்று சொல்லிருந்தீங்க. இவ்வளவு நாள் நமக்காக உழைச்ச விக்கியண்ணாக்கு, நம்பிக்கை கொடுத்துட்டு இல்லைன்னு ஏமாத்தப் போறீங்களா.”

” என்னடா இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுற. விக்ரம நம்ம கடை மேனேஜரா மட்டும் நான் பார்க்கலை. இந்த வீட்டில ஒருத்தனா தான் பார்க்குறேன்.

லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு, வீட்டுல ஒத்துக்கலை என்று திருச்சியை விட்டு இங்கே வந்த அன்னையிலிருந்து, நான் அவனுக்கு ஆதரவாக தான் இருக்கேன்.

அம்மாவால இந்த ஊரை விட்டு வர மனசில்லை என்று சொன்னா… அதான் இங்கேயே இருக்கோம் என்று சொன்னேன். நான் விற்கிறேன் என்று சொன்னபோதே, விக்ரம் பார்ட்னர்ஷிப் போட்டுப்போம் அங்கிள் என்று சொன்னான்.

இப்பவும் அதே தான், விக்ரம் இந்த கடையோட ஒன் ஆஃப்த பார்ட்னர்.”

காஃபி எடுத்துக் கொண்டு வந்த சுந்தரி மகளிடம் நீட்டியவாறே, “உங்க அப்பா என்ன மட்டும் மாட்டிவிட்டாரு. அவர் சொன்னதை மட்டும் உன் கிட்ட இருந்து மறைக்கிறாரு. அங்கு வந்து வேலை இல்லாமல் வீட்டில் அவரால அடைஞ்சுக் கிடக்க முடியாதாம். இத்தனை வயசுக்கு மேல அடுத்தவங்க கிட்ட வேலைக்குப் போகுறதுக்கும் செட்டாகாதாம்.” என்று சண்முகத்திற்கும் சென்னைக்கு வருவதில் விருப்பமில்லை என்பதை போட்டுக் கொடுத்தாள்.

 இருவரையும் பார்த்து முறைத்த ராதிகா, “என்னை விட்டுட்டு இருவரும் தனிக்குடித்தனமா இருக்க பிளான் பண்றீங்க… அப்படித்தானே…” என.

” மூணு வருஷம் தானே… கண்ண மூடித் திறக்கதுக்குள்ளே ஓடிப் போய்விடும். அதுக்குள்ள உனக்கு நல்ல வரன் அமைஞ்சா கல்யாணம் பண்ணிடுவோம். அப்புறம் என்ன எங்களையா தேடப் போற…” என்று சண்முகம் கூற.

 முகம் மாறாமல் சமாளித்தவள், “நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன். ஸ்வீட்டை சாப்பிடுங்க. மாடியில அண்ணிக்கிட்ட ஒரு ஸ்வீட் பாக்ஸைக் குடுத்துடுங்க.” என்றவள் தனது அறைக்கு ஓட…

“கல்யாணப் பேச்சை எடுக்கவும், என் பொண்ணுக்கு வெட்கத்தைப் பாரு.” என்று தனது மனைவியிடம் கூறி சிரித்தார் சண்முகம்.

 உள்ளே சென்ற ராதிகாவோ, தனது கையிலிருந்த மோதிரத்தை வருடிக் கொண்டிருந்தாள். அவளது கண்களிலிருந்து இரு சொட்டு கண்ணீர் வழிந்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்