
சம்பூர்ணா பார்கிங் நோக்கி நடந்து கொண்டிருக்க, அவளது கைபேசி அதிர ஆரம்பித்தது.
“என்னமா?”
“வீட்டுக்கு வர்ரியாமா?” என்று அபர்ணா கேட்க, “என்னமா விசயம்?” என்று விசாரித்தாள்.
“நீ வா. அப்புறம் சொல்லுறேன்” என்று கூற, “ஓகே” என்று வைத்து விட்டாள்.
காரின் அருகே சென்று பார்க்க, கார் முன்னால் பைக் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
“ப்ச்ச்..” என்றவள் செக்யூரிட்டியை தேடி அதை எடுத்து வைக்க சொல்ல, அவரும் ஓடி வந்து அந்த பைக்கை ஓரம் கட்டினார்.
“என்ன? என் பைக் அது” என்று வேகமாக கேட்ட குரலில், திரும்பிப் பார்த்தாள் சம்பூர்ணா.
யோகமித்ரன் தான் வந்து கொண்டிருந்தான்.
“சார்.. கார எடுக்கனும்னு சொன்னாங்க. அதான் தள்ளி நிறுத்தினேன்” என்று செக்யூரிட்டி கூற, மித்ரன் உடனே யார் அது? திரும்பி பார்த்தான்.
அங்கு சம்பூர்ணா அவனை கிண்டலாக பார்த்தபடி நின்று இருந்தாள். அவளை பார்த்ததுமே அவன் முகத்தில் கோபம் ஜொலிக்க ஆரம்பித்து விட்டது.
“யோ..க மித்ரன்.. எப்படி இருக்கீங்க?” என்ற அவளது நக்கலான கேள்வியில், அவளை முறைத்து பார்த்தான். ஆனால் ஒன்றும் பேசவில்லை.
“நான் எடுத்துக்கிறேன். நீங்க போங்க” என்று மித்ரன் கூறி விட, செக்யூரிட்டி அகன்றார்.
மீண்டும் அவளை பார்த்தான். சம்பூர்ணா அப்போதும் நக்கலாக பார்த்தபடி நிற்க, “ஆளையும் மூஞ்சியையும் பாரு” என்று தனக்குள் முணுமுணுத்தான்.
“எதையும் வெளிப்படையா பேசுங்க மித்ரன். முதுகுக்கு பின்னாடி பேசுறது.. முணுமுணுக்குறது தான் உங்க வேலையா?” என்று சம்பூர்ணா கடுப்பாக கேட்டு விட, பொங்கி விட்டான் மித்ரன்.
“ஏய்.. யார பார்த்து முதுகுக்கு பின்னாடி பேசுறவன்னு சொல்லுற?”
“நீ தான்”
“அப்படி யார பத்தி பேசுனத பார்த்த?”
“என்னை பத்தி.. உன் ஃப்ரண்ட் கிட்ட அளந்துட்டு இருந்தியே..”
“அது எல்லாம் உண்மை. அத உன் முதுகுக்கு பின்னாடி பேசனும்னு இல்ல. நேரா மூஞ்சிக்கு நேராவே பேசுவேன்”
“அப்படியா?”
“ஆமா. உன்னால ரெண்டு பேர் நாசமா போயிட்டானுங்க. இன்னும் எத்தனை பேர் வாழ்க்கைய கெடுக்க போறியோ?”
“அந்த ரெண்டு பேருமே என்னால தான் கெட்டுப்போனாங்கனு சொல்ல உன் கிட்ட எதாவது ஆதாரம் இருக்கா?”
“இதுக்கு ஆதாரம்? கண்ணால பார்த்தாலே தெரியுதே”
“கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்னு படிச்சது இல்லையா நீ? நீ மாறவே மாட்ட யோ..க மித்ரன். எதுக்கு பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு? பைக்க எடு. நான் கிளம்பனும்”
அவனை குறை சொல்லி விட்டு சம்பூர்ணா கார் கதவை திறக்க, “நீ மட்டும் எங்கடி மாறி இருக்க?” என்று கேட்டு விட்டான்.
இலகுவாக பெண்களிடம் பேசாதவன். டி போடுவது எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால் சம்பூர்ணாவை இதோடு இரண்டாம் முறையாக டி போட்டு பேசி விட்டான்.
அதற்கு கோபமெதுவும் படாமல், “நீ மாறும் போது நானும் மாறுறத பத்தி யோசிக்கிறேன்டா” என்று கண்ணடித்து விட்டு காருக்குள் அமர்ந்து விட்டாள்.
மித்ரனுக்கு கோபம் கோபமாக வந்தது. ஆனால் காட்ட முடியவில்லை. பல்லைக்கடித்தபடி பைக்கில் ஏறி கிளம்பி விட, சம்பூர்ணாவும் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
மித்ரன் வீடு வந்து சேர, புவனன் சாதனா நர்மதா மூவரும் ஹாலில் அமர்ந்து இருந்தனர்.
“புவா சீக்கிரமே வந்துட்ட போல?” என்று கேட்டுக் கொண்டே அருகே அமர்ந்தவன், “அம்மா.. டீ ப்ளீஸ்” என்று கேட்டான்.
“இருக்குடா. எடுத்துட்டு வர்ரேன்” என்று எழுந்து சென்றார்.
“என்னடா? என்னாச்சு ஆஃபிஸ்ல?” என்று அண்ணன் தோளை தட்டி கேட்க, நடந்ததை சொன்னான் புவனன்.
“இவ்வளவு தான? பிரச்சனை நல்லபடியா தான முடிஞ்சூருக்கு?”
“ம்ம். மேடம் கொஞ்சம் நியாயவாதி”
“மேடமா? உங்க சிஇஓ லேடியா?”
புவனன் தலையாட்ட, “எப்படியோ நியாயமா நடந்துருக்காங்க. அதுனால குறை சொல்ல முடியாது. பணம் தொலைஞ்சது உங்க மிஸ்டேக் தான? சரி எடுத்தவன் கிட்ட இருந்து பணத்த மீட்டாங்களா?” என்று கேட்டான்.
“ம்ம்.. ஈவ்னிங் தான் அவன் வீட்டுல இருந்து எடுத்தாங்களாம். முதல்ல திருடவே இல்லனு சொன்னவன் அடி தாங்காம ஒத்துக்கிட்டு பணத்த கொடுத்துட்டான்.” என்று பெருமூச்சு விட்டான்.
“நீங்க ஏன் அண்ணி இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?”
“இவரு ஒரு வார்த்தை கூட சொல்லல என் கிட்ட. இப்ப எல்லாம் முடிஞ்சதும் சொல்லுறாரு”
“அவன் வேலைய அவனே சரி பண்ணிப்பான் அண்ணி. சொல்லியிருந்தா அவனோட சேர்ந்து நீங்களும் பயந்துருப்பீங்க” என்று கூறியபடி நர்மதா கொடுத்த தேநீரை வாங்கிக் கொண்டான்.
“இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கனும்.” என்ற நர்மதா, “சரி போய் வாசல பெருக்கி கோலம் போடு. முடிஞ்சு போனத பேசி என்ன பண்ண?” என்று மருமகளை விரட்டினார்.
“இனி நீயும் கவனமா இரு.” என்று மூத்த மகனை எச்சரித்து விட்டு, “போய் முகத்த கழுவுடா” என்று இளைய மகனையும் விரட்டினார் தாய்.
•••
வீட்டில் காரை நிறுத்தி விட்டு சாவியை தூக்கிப்போட்டு பிடித்த சம்பூர்ணா, எதோ உறுத்த நிமிர்ந்து மேலே பார்த்தாள்.
மாடியில் பால்கனியில் நின்று ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘புதுசா இருக்கானே?’ என்று சந்தேகம் கிளம்ப, சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள்.
புதிதாக இரண்டு கார் நின்று இருந்தது.
‘யாராவது வந்துருக்காங்களா?’ என்று யோசித்தபடி வீட்டுக்குள் சென்றாள்.
“அத்த.. வந்துட்டா..” என்று அபர்ணா சுதாராணியை இடிக்க, அவர் பேத்தியை பார்த்தார்.
“பூர்ணா இங்க வாடா” என்றதும் அவரை நோக்கி நடந்தாலும் அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேரின் மீதும் அவள் பார்வை விழுந்தது.
ஒருவர் சங்கீதா. அவளுக்கு வேண்டாத ஒருவரின் அத்தை மகள். சம்பூர்ணாவிற்கு சித்தி முறை. அருகே சங்கீதாவின் உடன் பிறந்த அண்ணனும். அவருடைய மனைவியும் இருந்தனர்.
எல்லோருக்கும் பொதுவாக தலையசைத்து விட்டு, பாட்டியின் அருகே அமர்ந்து கொண்டாள் அவள்.
“இவ தான் என் பேத்தி. இவங்கள தெரியுதா பூர்ணா?” என்று பரஸ்பரம் அறிமுகப்படுத்தினார்.
“தெரியுமே. சித்திய மறந்துருப்பனா?” என்று புன்னகையோடு கேட்டவள், “என்ன திடீர்னு?” என்று கேட்டாள்.
“உன்னை பொண்ணு கேட்டு வந்துருக்கோம் சம்பூர்ணா” என்று சங்கீதா விசயத்தை போட்டு உடைக்க, அவள் ஆச்சரியமாக பாட்டியை திரும்பிப் பார்த்தாள்.
அவர் சமாளிப்பாக புன்னகைக்க, “மாப்பிள்ளை யாரு?” என்று சித்தியிடம் கேட்டாள்.
“எங்க பையன் தான். மித்ரன்” என்று கூறி முடிக்க படிகளில் இறங்கி வந்தான் அவன்.
“மித்ரன்” என்ற பெயர் சம்பூர்ணாவை அவளை மீறி புன்னகைக்க வைத்தது.
அவன் இறங்கி வந்து, “ஹாய்” சொல்லி கை நீட்ட வித்தியாசம் பார்க்காமல் எழுந்து கை குலுக்கினாள்.
“ஹலோ மித்ரன். நான் சம்பூர்ணா”
“தெரியும்”
“உட்காருங்க.” என்று சோபாவை காட்டி விட்டு அவளும் அமர்ந்தாள்.
“எனக்கு உங்கள பிடிச்சுருக்கு சம்பூர்ணா” என்று மித்ரன் முதலில் பேச, “நானும் நேரடியா விசயத்துக்கு வர்ரேன். எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல” என்றாள்.
பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு உள்ளே புகுந்து பேசும் முன் ,”ஏன்?” என்று மித்ரன் கேட்க, “சங்கீதா சித்திக்கு தெரியுமே. சொல்லலயா?” என்று திருப்பிக் கேட்டாள்.
“என்னமா இது? ஒருத்தர் பண்ண தப்புக்கு..”
“எனக்கு வேணாம்னா வேணாம் சித்தி. ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சா சந்தோசமா வாழ்ந்துடுவேன்னு நினைப்பா?”
சம்பூர்ணா கடுமையை மறைக்காமல் பேச, “உங்க ஃபேமிலி மேட்டர் எனக்கு வேணாம். என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல உங்களுக்கு பிரச்சனை இருந்தா சொல்லுங்க” என்று மித்ரன் கேட்டான்.
“இருக்கு. என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது”
“பிரச்சனைய சொல்லுங்க தீர்க்க முடிஞ்சா தீர்க்கலாமே?” என்று மித்ரன் விடாமல் கேட்டான்.
“காலேஜ்ல ஒரு பையன லவ் பண்ணேன். அவன இன்னும் நான் மறக்கல. அதான் ரீசன். தீர்த்து வைங்க பார்ப்போம்” என்று சம்பூர்ணா சவாலாக கேட்க, பாட்டி தலையில் கை வைத்துக் கொண்டார்.
“அவரும் உங்கள லவ் பண்ணுறாரா?”
“தெரியல”
“இப்ப எங்க?”
“அதுவும் தெரியல”
“இது பொய் காரணம் தான?”
“இருக்கலாம்”
“அப்போ காலம் முழுசும் இப்படியே இருப்பீங்களா?”
“இருக்க கூடாதா?”
“சரி சரி.. கேள்வியா கேட்டுட்டு.. பொறுமையா பேசலாம்” என்று சங்கீதா இடையில் பேச, “இப்பவும் பொறுமையா தான் சித்தி பேசுறேன். இந்த கல்யாண பேச்ச விட்டுருங்க. என்னை ஃபோர்ஸ் பண்ணலாம்னு நினைக்காதீங்க. நடக்காது.” என்றவள் எழுந்து சென்று விட்டாள்.
மற்றவர்கள் என்ன பேசுவதென்று புரியாமல் சில நொடிகள் திணறிப்போய் அமர்ந்திருந்தனர்.
சுதாராணி முதலில் சுதாரித்து சகஜமாக பேசி நிலையை சரிபடுத்தினார்.
அறைக்குள் வந்துவிட்ட சம்பூர்ணாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. திருமணமும் வாழ்க்கையையும் நினைத்தாலே பற்றிக் கொண்டு வந்தது.
“ஆம்பளைங்கள்ள நல்லவன் இருக்கான்னா நல்ல பொண்ணா பார்த்து கட்டி சந்தோசமா இருக்கட்டும். எனக்கு வேணாம்” என்று தீர்மானத்தை எடுத்துக் கொண்டு வாழ்கிறாள்.
அவளிடம் காதலைச்சொன்னால் மறுப்பு தான். சேர்ந்து வாழலாம் பிடிக்கவில்லை என்றால் பிரிந்து போகலாம் என்று செந்தில் சொன்னதால் தான் ஓரளவு ஒப்புக் கொண்டாள். ஆனால் அதுவும் அவனது திருமண ஆசையில் முடிந்து போனது. இல்லை. முடித்து வைத்து விட்டாள்.
இனி வாழ்வில் எவனும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவளிடம் திருமணம் பற்றி பேசினால்? அதுவும் அவளுக்கு வேண்டாத குடும்பத்திடமிருந்து வந்தால்?
இவ்வளவு நேரமும் பல்லைக்கடித்தபடி பொறுமையாக பேசி விட்டு வந்து விட்டாள். இன்னும் கொஞ்சம் போயிருந்தால் எதாவது அங்கே உடைந்து இருக்கும். ஒன்று பொருள். அல்லது உறவு. உடைக்க விரும்பாமல் எழுந்து வந்து விட்டாள்.
அறையின் மூலையில் ஓரு படம் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் மீது ஒரு வெள்ளைத்துணி போட்டு மூடி வைத்திருந்தாள். அதை விளக்கினாள்.
பல கத்திகள் அந்த படத்தை கிழித்து இருந்தது. நெற்றியில் ஒரு கத்தி இன்னும் சொருகிக் கொண்டிருந்தது. அந்த படத்தை வெறித்து பார்த்தவள் அருகே மேசையிலிருந்த கத்தியை எடுத்து குறி பார்த்து எறிந்தாள். அது சென்று நெஞ்சுப்பகுதியில் பாய்ந்தது. அடுத்ததை எடுத்து எறிந்தாள். அது கழுத்தில் சென்று பாய்ந்தது.
‘நேர்ல பார்க்குற அன்னைக்கு இருக்கு உனக்கு’ என்று கறுவிக் கொண்டு விருட்டென நகர்ந்தாள்.
ஆசையும் விருப்பமும் அவரவருக்கு தானே சொந்தம்? மற்றவர்கள் அடுத்தவர்களின் வாழ்வை முடிவு செய்ய நினைக்கின்றனர்?
வாசம் வீசும்.

