
“ப்ளீஸ் கேசவன் அங்கிளை காப்பாத்துங்க, அது தான் உங்க விருப்பப்படி என்னை என் குடும்பத்துகிட்டையும், ப்ரெண்ட்ஸ்கிட்டையும் இருந்து பிரிச்சு, கல்யாணம் பண்ணி, எனக்கு தண்டனையும் கொடுத்துட்டீங்களே?
சொல்லப் போனா உங்களுக்கு வெச்ச ட்ரேப்ல தான், அன்னைக்கு நாங்க மாட்டிகிட்டோம்.”
முன்னாள் நடந்து கொண்டிருந்தவன் திரும்பி அவளது கைகளை விட்டுவிட்டு, கண்களை கூர்மையாக்கி அவளை பார்க்க, அன்று நடந்த அத்தனை நிகழ்வுகளையும், ஒன்றன் பின் ஒன்றாக அவள் கூறி முடித்தாள். கைகளைக் கட்டிக் கொண்டு அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவன், உற்றுப் பார்த்தபடியே அவள் அருகே வந்து,
“ஓஓஓ…இவ்வளவு நேரமா இந்த கதையை தான் யோசிச்சிட்டு இருந்தியா? பரவால்ல நல்லாவே கிரியேட் பண்ணி இருக்க.”
“எனக்கு தெரியும் கண்டிப்பா நீங்க இதை நம்ப மாட்டீங்கன்னு, ஆனா நடந்தது இது தான், எங்களுக்கு என்ன அவசியம், இந்த கல்யாணத்தை நிறுத்துனும்னு.
தன்யாவோட அப்பா எவ்வளவு செலவு பண்ணி, தன் பொண்ணுக்கு கிராண்டா இந்த கல்யாணத்தை நடத்த நினைச்சார் தெரியுமா? அதோட மணவறை வரை வந்து கல்யாணம் நின்னு போனா, அது ஒரு பொண்ணுக்கு எவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா? அப்படி இருக்கும் போது என்ன காரணத்துக்காக, நாங்க இதை நிறுத்த போறோம்?”
“காரணம் தான இருக்கே நல்லா ஸ்ட்ராங்காவே இருக்கு, உன் ப்ரெண்ட் ரொம்ப வருஷமா தன் பேரன்ட்ஸ்கிட்ட, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தா, அது ஏன்னு உனக்கு தெரியுமா? லவ்…”
நிலா புரியாது விழிக்க விஷ்வாவே மீண்டும் தொடர்ந்தான்,
“உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை தான், ஏன்னா உன் உயிர் தோழி சின்ன வயசுல இருந்து, லவ் பண்றதே உன் அத்தானை தானே. நீ தான் அவனை கட்டிக்க போறேன்னு தெரிஞ்சதும், தன் காதலனை ப்ரெண்ட்டோட புருஷனா பார்க்க முடியாம, ஊரை விட்டே போயிட்டா.”
நிலாவுடைய மனதின் அதிர்ச்சி அவளது முகத்திலேயே அப்பட்டமாக தெரிந்தது. ரிதன்யாவிற்கு தனது அத்தான் ஆதிரன் மீது காதலா? எப்படி இதை கவனிக்காமல் போனேன். அவள் மனதிற்குள் போராடிக் கொண்டிருக்க, விஷ்வா மீண்டும் தொடர்ந்தான்.
“உன் அத்தானை மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு, இன்னொருத்தனுக்கு கழுத்து நீட்ட அவ விரும்பல, அதனால தான் அவ அப்பா அம்மாகிட்ட வருஷக் கணக்கா கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு வந்தா, அவங்க இவ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா, சூசைட் பண்ணிக்குவேன்னு மிரட்டினதால தான், இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கா.
ஆனா உன்னைப் பார்த்ததும் உன் அத்தான் நினைவு வந்திருச்சு போல, அதனால தான் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு அவ சொல்லி இருக்கா, உடனே நீயும் கொள்ளைக் கூட்டத் தலைவி மாதிரி பிளான் போட்டு, எல்லாத்தையும் சிறப்பா செஞ்சு முடிச்சிட்ட.”
“சரி நீங்க சொல்றபடியே ப்ளேன் பண்ணி, உங்க அம்மா கிட்ட இப்படி எல்லாம் தப்பு தப்பா சொன்னது நான் தானே, அப்ப என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க, தயவு செஞ்சு என் ப்ரெண்டை விட்டுடுங்க.
நான் செஞ்ச காரியத்தால தன்யாவோட பேமிலி, இதுக்கு மேலயும் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டாம்.”
சோபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தவன், ரூமினுள் நின்றபடி இங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவை அர்த்தத்துடன் பார்த்து புன்னகைத்தான்.
ஏற்கனவே நிலா கூறிய விஷயங்களை கேட்டு அதிர்ந்து போய் நின்றிருந்தவன், விஷ்வாவின் இந்த திடீர் மாறுதலை கண்டு மிரண்டு தான் போனான்.
தொழிலில் விஷ்வாவின் திறமையையும், எதிரிகளை வேரோடு சாய்க்கும் வேகத்தையும் அவன் அறிவான், ஆனால் நிலாவிடம் அவனது அணுகுமுறையே வேறாக அல்லவா உள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு நிலா கூறியதை அவனால் நம்பவும் இயலவில்லை, அதை பொய் தான் என்று நினைத்து ஒதுக்கித் தள்ளவும் இயலவில்லை. ஏதோ ஒரு உண்மை அதில் ஒளிந்திருப்பதாகவே அவனுக்கு தோன்றியது.
“உங்களுக்கு இப்ப என்ன வேணும்னு எனக்கு நல்லாவே புரியுது மிஸ்டர் ஈஸ்வர். உங்க அம்மாக்காக நீங்க மறுபடியும் பாண்டியன் இல்லத்துல, விருப்பமே இல்லாட்டியும் கால் வைக்கப் போறீங்க அதுவும் என்னோட, அங்க என்னால எதுவும் பிரச்சனை வர கூடாதுன்னு தான், இப்படி ரிதன்யாவோட அப்பாவை வச்சு என்னை கார்னர் பண்ணி இருக்கீங்க கரெக்டா?”
மெச்சுதலான பார்வை ஒன்றை அவள் மீது வீசியவன்,
“பரவாயில்லையே வந்த அரை நாள்லயே எல்லாத்தையும் கேதர் பண்ணிட்ட போல, ப்ச்சு மறந்துட்டேன் பார்த்தியா உன்னோட ரகசிய தொழிலே அது தானே, ஆனா உனக்கு பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் கஸ்டமர், நானா தான் இருப்பேன்னு நீ எதிர்பார்த்திருக்க மாட்டல்ல.”
“ஹூம் எனக்கு தெரியும் நீங்க என்னை நம்பறது கஷ்டம் தான், ஆனா என் தரப்பு நியாயத்தை நிரூபிக்கவாச்சும், நான் உங்க கூட அங்க வருவேன். என் மேல எந்த தப்பும் இல்லைன்னு கண்டிப்பா உங்களுக்கு நான் நிரூபிப்பேன். அதனால என்னை சுத்தி இருப்பவங்களை வச்சு, என்னை கார்னர் பண்ற வேலையை விட்டுட்டு, ஊருக்கு கிளம்பற வேலையை பாருங்க.”
என்றபடி அவள் விருந்தினர் அறைக்குச் செல்ல, போகும் அவளையே முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த விஷ்வாவின் முன்பு, சிரிப்பை அடக்க முடியாமல் வாயை பொத்திக் கொண்டு வந்து நின்றான் சூர்யா.
“நீ எதுக்குடா இப்போ பல்ல காட்டிகிட்டு இருக்க, நாளைக்கு அம்மாவையும் செல்லம்மாவையும், நீ தான் ஊருக்கு கூட்டிட்டு போகணும்.
எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு, அதை முடிச்சுட்டு அவளோட நான் நாளைக்கு நைட் அங்க வந்துடுவேன். வீட்ல எங்க ரூம் எல்லாம் தயாரா தானே இருக்கு? இல்ல நாங்க வரவே மாட்டோம்னு நினைச்சு உங்க தாத்தா பழைய பொருளை எல்லாம், போட்டு வைக்கிற ஸ்டோர் ரூம் ஆக்கிட்டாரா?”
“அது எப்படி மாப்ள உனக்கு கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாம இருக்கு, சரி முறைக்காத எப்படியோ ஜாடிக்கேத்த மூடி மாதிரி, உனக்கு கடவுள் அமைச்சு குடுக்காட்டியும் நீயாவே அமைச்சுகிட்ட, அதெல்லாம் ரூம்ஸ் தயாராக தான் இருக்கு. அதோட உன்ன வரவேற்க நம்ம தாத்தாவும்…எப்படி நம்ம தாத்தாவும் தயாரா தான் இருக்கறாரு.”
“சரி சரி இந்தா இது அவளோட மொபைல், அவ கிட்ட கொடுத்திடு. அவங்க அத்தை மகன், ஆல்ரெடி நாலு டைம் கூப்பிட்டான், அவள பேசச் சொல்லு.
கைல மொபைல் இருக்குன்னு வேற எதுவும் திட்டம் போட போறா, என்னை தாண்டி மூச்சு காத்து கூட வெளியே போகாதுன்னு சொல்லி வை அவ கிட்ட, என்னடா மறுபடியும் பல்ல காட்டிட்டு இருக்க, இதை கொடுத்துட்டு போய் படுக்கற வழிய பாரு. கீழ அவ இருக்கா அதனால நீ மேல என் பெட்ரூம்க்கு வந்துடு, அதுக்குள்ள நான் ஒரு போன் பேசிட்டு வந்துடறேன்.”
“இந்த வார்த்தையை அந்த பொண்ணு கிட்ட சொன்னா, இன்னும் ரெண்டு பன்னு சேர்த்து கொடுக்கும், அதுக்கு பயந்துட்டு தான் என்கிட்ட கொடுத்து விடுறான். அந்த லேடி ப்ரூஸ்லி என்ன மூட்ல இருக்குன்னு வேற தெரியலையே.”
தனக்குத் தானே பேசிக் கொண்டபடி அறை கதவை தட்டி விட்டு, உள்ளே நுழைந்தான் சூர்யா.
புதிதாக ஒருவன் அறைக்குள் நுழைய சட்டென்று பெட்டில் இருந்து எழுந்தவள், கேள்வியாக அவனைப் பார்க்க,
“நான் விஷ்வாவோட ப்ரெண்ட் சூர்யா, அதோட நான் அவ அத்தை பையன்.”
“ப்ரெண்டு மட்டும் போதும்ண்ணா, ஆல்ரெடி அவரோட அத்தை பொண்ணுன்னு சொல்லிட்டு வந்த, ஒரு பொண்ணு ஆரம்பிச்ச கதைனால தான், நான் இந்த நிலைமையில இருக்கேன்.”
தனது மொபைலில் அகல்யாவின் போட்டோவை தேடி எடுத்தவன் நிலாவின் முன்பு அதை நீட்டி,
“நீ சொல்றது இந்த பொண்ணாம்மா? ஏன்னா விஷ்வாவுக்கு இருக்க ஒரே அத்தை பொண்ணு இவ தான், என்னோட தங்கை அகல்யா.”
அவனை நோக்கி சிநேகமாக புன்னகைத்தவள் இல்லை என்று தலையாட்டிவிட்டு, தேங்க்ஸ் என்று கூற, அவனோ அவளை இது எதற்கு என்ற ரீதியில் பார்த்தான்.
“நான் சொல்றது உண்மையா இருக்குமோன்னு, ஒரு சின்ன சந்தேகமாவது உங்களுக்கு வந்துச்சே, பட் எனக்கு அப்பவே புரிஞ்சிடுச்சு அவரைப் பத்தி கிடைச்ச நியூஸ் பொய்யா இருக்கும் போது, எங்கள வந்து பார்த்த அந்த பொண்ணு மட்டும், எப்படி உண்மையான அத்தை பொண்ணா இருக்க முடியும்? ஆனா ஒன்னு மட்டும் கன்ஃபார்மா எனக்கு தெரியும், இது எல்லாத்துக்கும் மூல காரணம், உங்க வீட்ல இருக்க யாரோ ஒருத்தர் தான். அவங்க இவரோட கல்யாணத்தை நிறுத்தணும்னு நினைச்சிருக்காங்க. அதுக்கான உண்மையான காரணம் தான் என்னன்னு என்னால கெஸ் பண்ண முடியல.”
“புரியல ம்மா எதை வச்சு எங்க வீட்ல இருக்க யாரோ தான், இதை பண்ணி இருப்பாங்கன்னு சொல்ற?”
“உங்க ப்ரெண்டோட அந்த பரம்பரை சங்கிலி…அவர் சொல்றபடி ரிதன்யாவுக்காக, நானே இந்த, கல்யாணத்தை நிறுத்தி இருந்தாலும், அந்த செயின் எப்படி என் கைக்கு வந்ததன்னு, அவர் ஏன் யோசிக்கல? அந்த செயினை எனக்கு கொடுத்தது அந்த பொண்ணு தான், அந்த பொண்ணுக்கு அதை கொடுத்தது உங்க குடும்பத்துல இருக்க யாரோ ஒருத்தராகத் தான் இருக்க முடியும்.
அது என்ன சாதாரண செயினா? பரம்பரை சங்கிலின்னு சொல்றீங்க, அதை எப்படியும் அந்த வீட்டைச் சேர்ந்தவங்க தானே எடுத்து கொடுத்திருப்பாங்க.”
“இந்த பிரச்சனை நடந்தப்போ எங்க சந்தேகமும் அந்த இடத்துல தான் இருந்தது ம்மா, ஆனா செயினை சரி பண்ணி வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்த ஆசாரிக்கு அடுத்த நாளே ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சு, அதுக்கு முன்னாடியே அவர் எனக்கு பாண்டின் இல்லத்துல இருந்த பொண்ணுகிட்ட, அதை கொடுத்திட்டதா மெசேஜ் பண்ணி இருக்காரு.
ஒருவேளை அவர் வந்த நேரம் நீயும் வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கலாம், அவர் கொடுத்த செயினை வைச்சு, இப்படி ஒரு டிராமாவை நீ நடத்தி இருக்கலாம்னு தான், நாங்க ரெண்டு பேரும் நினைச்சோம்.”
“அது எப்படி அண்ணா அவ்வளவு பவுன் தங்க சங்கிலியை, அதுவும் பரம்பரச் செயினை உங்களுக்கு தெரிந்த ஆசாரி, யாரோ ஒரு பொண்ணு கையில கொடுப்பாரு? சரி அப்படியே என் கையில அதை கொடுத்திருந்தாலும், இந்த செயினை பத்தின உண்மைகள், அன்னைக்குத் தான் ஊருக்குள்ளயே நுழைஞ்ச எனக்கு எப்படி தெரியும்?”
சூர்யாவிடம் அதற்கான பதில் இல்லை அவனது முகத்திலும் தற்போது கேள்வி தொக்கி நின்றது.
“இதுக்கான விடை பாண்டியன் இல்லத்துல தான் இருக்கு, அதை தேடி தான், நான் உங்க பிரண்டோட அங்க காலடி எடுத்து வைக்கப் போறேன்.”
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நிலாவுக்கு அறிவு வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு … தன்னை போல எல்லாரையும் நல்லவங்களா நினைக்கிறா நிலா … இப்போ ஆதவன் கிட்ட ரிதன்யா வோட காதலை சொல்லி சேர்த்து வைப்பா போல …
சூர்யா நீ சூப்பர் பா … நல்லா பேசுற …
கொள்ளைக்கூட்ட தலைவி மாதிரி … 😜😜😜😜😜 விஷ்வா
நன்றி சிஸ் 🙂