Loading

சபதம்-4

         இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

பொருள்:

துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத்துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

ஸ்கொட்லன்ட் நாட்டின் முக்கிய நகரமான கிளாஸ்கோ, அந்த இருளில் வண்ண விளக்குகளால் மின்னிக் கொண்டு இருந்தது. அதன் கண்கவரும் அழகை ரசிக்கவே சுற்றுலா பயணிகள் அந்த நடு இரவிலும் ஊரை சுற்றி வட்டமிட்டு கொண்டிருந்தனர்.

அதிலும் தி க்லைட் ஆர்க் எனபடும் அரை வட்ட வடிவத்தில் க்லைட் நதியின் மேல்பரப்பில் கட்டப்பட்டிருந்த பாலத்தை ஜொலிக்க செய்து கொண்டிருந்தது.

மற்றவருக்கு அந்த நதியின் அழகும் நளினமும் கவர்ந்து இழுக்க, அதில் உள்ள ஆபத்து மிக சிலருக்கே தெரியும். அதிலும் அவன் க்லைட் நதியின் கரையோரம் மற்றவர் கண்ணுக்கு புலப்படாத அந்த காட்டுக்குள் தனது விலை உயர்ந்த 911 டர்போ காப்ரியோலேட் மாடல் போர்ஷ் வகை வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவன், கண்கள் கூர்மையாய் தன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கொண்டன.

நடு இரவில் அந்த காட்டிற்குள் வழி தெரிவது அரிது, அதை பற்றி கிஞ்சிதமும் கவலை இல்லாமல் தன் நடையில் அதிக நிதானத்தை கொண்டு நடந்தவனின் உடலை போல உள்ளமும் திடகாத்திரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

காட்டின் மைய பகுதியை அடைந்த அவன் கண்களின் பளபளப்பு, பார்க்கும் எவருக்கும் ஜன்னி காண வைக்கும். அதிலும் அவன் முகத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த அந்த புன்னகை, வேட்டை ஆட காத்திருக்கும் சிங்கத்தின் பார்வை தன் முன் விளையாட்டு காட்டும் சிறு நரியை கேலியாக பார்ப்பது போல் இருந்தது.

அவன் நின்ற இடத்தில் இருந்து பத்தடி தூரத்தில் மஞ்சள் நிற கயிறு கட்டப்பட்டு, ஸ்காட் அரசால் தடை செய்யபட்ட பகுதி என்று அதில் அச்சிடப்பட்டு இருந்தது. அதனை மீறுகிறவர்கள் நிச்சயமாக தண்டனைக்கு ஆட்படுத்தப் படுவார்கள்.

அதை எல்லாம் கணக்கில் கொள்ளாத அவன் தன் ஆறடி உயரத்தை சுருக்கி, இடைவரை குனிந்து அந்த தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து சென்றான்.

உள்ளே செல்ல செல்ல இருட்டு அவனை விழுங்கி கொண்டே சென்றது. பலவகை மிருகங்களின் சத்தம் அந்த இடத்தின் அமானுஷ்யத்தை மனிதர்களுக்கு கொடுக்கவல்லது.

ஆனால் அவன், கலில் ஹாசிம் இருட்டுக்கு பழக்கப்பட்டவன், இருள் அவன் வாழ்வின் முக்கிய அங்கம். பிறந்தது முதல் இழப்பையே கண்டவன், உயிர் பிழைத்து நிற்பதும் இதே இருட்டால் தான்.

நிலவின் ஒலி கூட உள்ளே வராத அந்த காட்டு பாதையின் முடிவில் க்லைட் நதியின் ஒரு பிரிவு அவன் கண்முன் விரிந்து இருந்தது.

அந்த நதியை ஒட்டி இருந்த உடைந்த கட்டிடத்தின் உள்ளே சென்றவன், இருளில் அந்த இடத்தை சுற்றி தன் பார்வையால் வலம் வந்தான்.

அந்த அறையில் இருக்கும் ஓவியத்திற்கு அர்த்தம் அவனுக்கு தெரியாது, மனம் உந்த உந்த அதை வடித்தவன் அவன் தான். அந்த ஓவியத்தை பார்க்கும் போதெல்லாம் அவன் மனம் இறுக்கம் கொள்ளும். அதில் இருக்கும் சந்தோஷத்தையும் துயரத்தையும் இவனால் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் அது ஏன் என்றோ? யார் என்பதோ இதுவரை அவனுக்கு புரியவில்லை.

அவனின் வாழ்க்கை இப்போது போர் பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறது, அது எப்போது எந்த இடத்தில் முடியும் என்பது அவனுக்கே தெரியாது.

அவன் வாழ்க்கை மர்மம் நிறைந்தது, அதன் காரணங்களை தேடி ஓடிk கொண்டிருந்தவனின் கைகளில் ஒரு பொறுப்பை ஒப்படைத்த அவன் வாப்பாவிற்கு கடமைப்பட்டிருக்கிறான்.

அடுத்து அதிரா அவள் கலில் ஹாசிமின் வாழ்வில் வந்த புரியாத புதிர், அவளை அவனால் புரிந்து கொள்ளவே முடியாது எனும் நிலைக்கு இப்போது வந்துவிட்டான்.

இது அத்தனையும் அவன் மனதில் ஓடும் வேலையில் அவன் சட்டைப் பையில் இருந்த தொலைபேசி அலறி அடங்கியது. அந்த சத்தத்தில் தன்னைப் மீட்டவன், சுவரில் இருந்த ஓவியத்திற்கு முதுகு காட்டி நின்றபடி, ” சொல்லு.. ம்ம் இன்னும் 10 நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்றபடி அழைப்பை துண்டித்தான்.

ஒரு தரம் இருளை வெறித்தபடி ஆழந்த மூச்சை இழுத்து விட்டவன் , மீண்டும் தான் வரைந்த ஓவியங்களை பார்த்தான்.

அதில் தெரிந்த அந்த உருவம் அவனை பார்த்து சிரிப்பது போல் இருக்க, அதனை நெருங்க முடியாமல் ஏதோ தடை அவனுக்குள் எழுந்து அவன் இதயத்தை இறுக்கிப் பிடிப்பது போல் மூச்சுக்கு தவித்து போனான் கலில். 

அந்த நிமிடம் அவன் கண்களுக்குள் நெருப்பில் கருகிய உருவம் முன் வந்து நின்று எதையோ அவனுக்கு உணர்த்தும் வகையில் கைகளை அசைத்து காட்ட, அந்த கோரத்தை தாங்க முடியாமல் ஒருமுறை கண்களை மூடி திறந்தவன் “யா அல்லாஹ்” என்று முணுமுணுத்து கொண்டான்.

மீண்டும் கண்களை திறக்க அந்த உருவம் மறைந்து அவனது ஓவியங்கள் மீண்டும் அவன் முன் தெரிய, அதில் ஒரு உருவம் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் முன் விரிவடைவது போல் பிரம்மை தோன்றியது.

அந்த ஓவியத்தில் இருந்து தன்னை மீட்டவன், திரும்பியும் பாராமல் அந்த கட்டிடத்தை விட்டு வெளியேற, அவனை பின் தொடர்ந்தது அந்த குரல்,”ஹமாறே கபீலே கோ பஜாயே.. ரஃபிக் பஜாயே(நம் குலத்தை காப்பாற்று.. ரஃபிக் காப்பாற்று” என்றவாறு அவனை பின் தொடர்ந்தது.

அந்த குரல் அவன் இதயத்தை கசக்கிப் பிழிந்தது போன்ற உணர்வு, அதில் இருந்து தப்பி விட வேண்டும் என்ற முனைப்புடன் திரும்பிப் பாராமல் ஓட, கால் எதிலோ சிக்கி கீழே விழுந்தவன் முன் அன்று காட்டு பாதையில் ஆனந்த தாண்டவம் ஆடிய அந்த கரிய உருவம் தோன்றி, அதன் கோர பற்களை காட்டியபடி, “ஆவ்.. மேரே சாத் ஆவ்.. கர்ணி மாத தும்ஹாரா  இந்தசார் கர் ரஹா ஹே.. வோ தும்ஹாரா இந்தசார் கர் ரஹா ஹே” என்றபடி வான் நோக்கி அந்த காடு அதிரும்படி சிரிக்க தொடங்கியது.

அதை பார்த்த கலில் முகம் எல்லாம் வேர்த்து அந்த உருவத்தை தள்ளிவிட்டபடி திரும்பி பாராமல் ஓடி வந்தவன் தன் காரை அதி வேகத்துடன் அங்கிருந்து ஓட்டி சென்றான்.

 கலில் கிளம்பிய சிறிது நேரத்தில் க்ளைட் நதியின் பாலத்தில் அதி பயங்கர சத்தத்துடன் விபத்து ஏற்பட, அந்த சத்தத்தில் காடே ஒருமுறை அதிர்ந்து அடங்கியது.

லண்டன் மாநகரம்,

தன் இரவு பணியை முடித்துவிட்டு காரை எடுத்த அதிராவின் எண்ணம் எல்லாம் இன்று மதியம் அவளுக்கு வந்த குறுந்தகவலில் இருக்க, தன் வாகனத்தை பின் தொடர்ந்து வரும் கருப்பு நிற ஸ்கார்பியோ காரை கவனிக்க தவறினாள்.

கலில் ஹாசிம் கொல்லப்பட்டதாக வந்த தகவல் உண்மையா என்பது அவளுக்கு தெரிய வேண்டும். வாப்பாவை மருத்துவமனையில் இருந்து தொடர்பு கொள்வது அவர்கள் அனைவருக்கும் ஆபத்தில் முடியும்.

கலில் சிறந்த போராளி, அவனை நெருங்குவது அவ்வளவு எளிதில்லை. அப்படியும் ஒருவன் கலீலை நெருங்கி இருந்தால் அவன் சிறந்த வீரனாக இருக்க வேண்டும். அப்படி ஒருவன் ஹாசிம் மெச்சும் வீரன் அவன் மட்டுமே என்ற எண்ணம் தோன்றியதும் அதிரா உடல் நடுங்க சாலையில் வண்டியை நிறுத்திவிட்டாள்.

கடந்து சென்ற வண்டிகள் அவளை திட்டுவதும், முறைப்பதுமாக கடந்து செல்ல, அவளை பின் தொடர்ந்த கருப்பு நிற ஸ்கார்பியோ முக்கிய சாலையில் இருந்து பிரிந்து இருட்டுக்குள் மறைந்தது.

தன் தலையை வண்டியின் ஸ்டேயாரிங் வீலில் சாய்த்தபடி  “கரண்” என்ற பெயரை உச்சரித்தாள்.

கரண் மட்டுமே ஹாசிமின் அறிவுக்கும், வேகத்துக்கும் நிகரானவன். ஒரு தராசில் கலிலும் கரணும் நிறுத்தி வைக்கப்பட்டால், அந்த குறி இந்த பக்கம் அந்த பக்கம் அசையாது நிற்கும்.

அர்ஜுனன் கர்ணன் போல இருவருக்கும் குறி மட்டுமே இலக்கு, கலில் கரணிடம் சிக்கியிருந்தால், அதற்கு முழு காரணம் தானாக தான் இருப்போம் என்பது போல் பல எண்ணங்கள் அவளை செயலிழக்கச் செய்திருந்தது.

அனைத்தையும் அலசியவள், ஒரு முடிவுக்கு வந்தவளாக வண்டியை தன் இருப்பிடம் நோக்கி செலுத்தினாள்.

தன் இருப்பிடத்தை அடைந்து தான் யோசித்த வேலைகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தினாள். தன் அலைபேசியில் பல வருடங்களாய் அழைக்கப்படாத அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

தனது அறையில், கையில் மதுக் கிண்ணத்துடன் எதிரில் இருந்த அந்த ஓவியத்தை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்த கரண் பிரதாப் சிங், கைகள் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது, அவன் காதில் கேட்ட அந்த அலைபேசி பாடலை கேட்டதும் “ஆயே ஹோ மேரி ஜிந்தகி மே தும் பகாரு பன்கே..”

அந்த பாடல் அவன் அலைபேசியில் கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது, இன்று அதே பாடலை கேட்கும் போது பரவசம் வரவில்லை மாறாக இதயத்தை யாரோ இருக்கிப் பிடிப்பது போல் உணர்ந்தான்.

அவள்  அழைப்பாள் என்று அவனுக்கு தெரியும், அவள் அழைப்பை எதிர்பார்த்தும் இருந்தான், ஆனால் அது நடக்கும் போது வலித்தது.

தன்னில் இருந்து மீண்டவன், அலைப்பேசியை எடுத்து காதுக்கு கொடுத்த நொடி, ” கரண் பிரதாப் சிங், மே ஆவூங்கா.. ஜய்சா அப்நே கஹா, மே ஆப்கே பாஸ் ஆவுங்கா”(கரண் பிரதாப் சிங், நீ சொன்னது போல நானே உன்னைத் தேடி வரேன்) என்றவள் குரலில் தெரிந்த தைரியம் அவனை அவள் புறம் ஈர்த்து கொண்டே இருந்தது.

அதில் தெளிந்தவன், கண்கள் மின்ன,இதழில் ஒட்டிய சிரிப்புடன்,” ஆயே ஹோ மேரி ஜிந்தகி மே தும் பாகர் பன்கே… மேரே தில் மே யூன் ஹி ரெஹனா..” என்று ஆழந்த குரலில் பாடியவன் தன் அழைப்பை துண்டித்திருந்தான்.

(நீ என் வாழ்க்கையில் ஆசீர்வாதமாக வந்தாய்… என் இதயத்தில் என்றும் தங்கிவிடு)

அவன் குரலில் அந்த பாடலையும் அதன் அர்தத்தையும் உணர்ந்தவள் தன் தைரியம் மொத்தமும் இழந்து தொய்ந்து அமர்ந்தவள் அந்த இருட்டு அறைக்குள் கதறி அழுதாள் , தனக்காக, தன்னை விட்டு சென்ற பெற்றவர்களுக்காக, தன் வாப்பாவிற்காக இன்னும் தான் இழந்த காதலுக்காக.

இருள் நிறைந்த அரண்மனை,ஒரே ஒரு மின்விளக்கு மேலிருந்து மெதுவாக ஊசலாடியது.

அறை முழுவதும் துருப்பிடித்த இரும்பின் நாற்றம், பழைய தூசி, உலர்ந்த இரத்தத்தின் கசப்பான வாசம் நிறைந்திருந்தது.

அவன் அசையாமல் நின்றான். அவனுடைய நெற்றியில் வியர்வைத் துளிகள் ஒன்றோடொன்று சேர்ந்து வழிந்தன.அவன் இதயம் வேகமாகவும் அதேநேரம் எச்சரிக்கையுடனும் துடித்து கொண்டிருந்தது.

அவனின் பின்னால் ஒரு நிழல் அசைந்தது. அந்த நிழலின் முகம் இருளில் மறைந்திருந்தது.
ஆனால் அந்த குரல் எலும்பின் உள்ளே ஊடுருவும் அளவு குளிர்ச்சியுடன் வெளிவந்தது.

“சொன்ன வேலை முடிந்ததா?”என்ற கேள்விக்கு மற்றவனின் தொண்டை இறுகியது.

தன் கண்களைத் தாழ்த்தியவன்,”மாலிக் …ஒன்று வெற்றி பெற்றது…ஆனால் மற்ற இரண்டு” என்றவன் உயிர் அவன் சொல்ல போகும் பதிலில் தொங்கிக் கொண்டிருந்தது.

மாலிக் என்று மற்றவனால் அழைக்கப்பட்டவன் விரல்கள் மெதுவாகச் சுருங்கின. அந்த சுருக்கத்தில் கூட ஒரு மரணத்தின் தீர்ப்பு இருப்பது போல் எதிரில் இருப்பவன் உணர்ந்தான்.

“அது ?” என்ற கேள்விக்கு எதிரில் இருப்பவன் ஒரு நொடி தயங்கியபடி,”அரண்மனை…அந்த தீ…
அது ஒன்று மட்டும்..”என்ற வார்த்தை முடியுமுன் அவனின் மாலிக் சற்றே தலைசாய்த்து, அவன் உதட்டில் கொடூரமான, நஞ்சு சொட்டும் சிரிப்புடன்,” தீ பற்றட்டும்..” என்றபடி இன்னும் ஒரு படி அருகே வந்தவன்,”அப்போ… இளவரசன்?” என்றதும் எதிரில் இருப்பவன் நெஞ்சு இறுகியது.

அதில் மாலிக்கின் சிரிப்பு மறைய,”மற்றவன்?”என்றதும் எதிரில் இருப்பவன் குரல் உடைந்தபடி,”கலீல்…அவன் உடல் கிடைக்கவில்லை” என்றதும் அறை முழுவதும் ஒரு மரண அமைதி.

“அப்படியானால் நீ எனக்கு இரண்டு முறை தோல்வியை பரிசாக கொடுத்திருக்கிறாய் என்று சொல்” என்ற மாலிக்கின் வார்த்தையை கேட்டதும் எதிரில் இருப்பவன் மண்டியிட்டு, குரல் நடுங்கியபடி,”மாலிக் முஜே மாப் கீஜியே” என்று மன்னிப்பு கேட்க அதை கண்டுகொள்ளாத மாலிக் நகர்ந்த வேகம் மண்டியிட்டு இருந்தவன் கண்களுக்கு கூட புலப்படவில்லை.

தட்!

இரத்தம் தூசி படிந்த தரையில் சிதறியது. அவன் கீழே விழுந்து, இருமி துடித்தான். அவன் அருகே குனிந்த மாலிக்,”ஒரு வெற்றி…இரண்டு தோல்வி…”என்றவன் அந்த அரை அதிரும் வண்ணம் ‘ஆ’ என்று ஆங்காரமாக கத்தினான்.

ரணசூரன் வருவான்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்