
யான் நீயே 22
மருதனின் இல்லம் செல்ல பாண்டியனின் வீட்டார் கிளம்பி தயாராக நிற்க…
அப்போதுதான் வீரன் மீசையை முறுக்கிவிட்டபடி மேலிருந்து கீழ் படியில் இறங்கி வந்து கொண்டிருந்தான்.
“மாமா முகத்துல இன்னைக்கு வேறென்னவோ எக்ஸ்ட்ராவா தெரியுது” என்று அங்கை தனக்குத்தானே சொல்லிக்கொள்ள… அருகில் நின்றிருந்த லிங்கம் அப்போதுதான் அவளை கவனித்தவனாக…
“நீயி இங்குட்டு என்ன பண்ற? அங்க உன் அக்காளோட இல்லையா?” எனக் கேட்டான்.
“ம்க்கும்” என்று உதடு சுளித்த அங்கை அவனுக்கு பதில் சொல்லாது வீரனிடம் ஓடி அவனின் கையை பற்றிக்கொண்டு… “செமயா இருக்க மாமா. அக்கா கவுந்திடப்போறாள்” என்று துள்ளி குதித்தாள்.
“அல்ரெடி கவுந்ததாலதேன் இப்போ கல்யாணமே நடக்க இருக்காட்டி” என்று வந்த லிங்கம், “என்னண்ணே தட்டுல வச்சிருக்க சேலை நிறமும், உன் சட்டை நிறமும் ஒன்னுப்போல இருக்கு” என்று வீரனின் காதில் கிசுகிசுப்பாக வினவ, வீரன் பதிலின்றி தன் இதழ்களை நீண்டு விரித்தான்.
அப்போது கவனித்தவனாக, “பாருடா மீசை எக்ஸ்ட்ரா ஷார்ப் ஆகிருக்கு” என்று கிண்டல் செய்ய…
“லிங்கு இதுக்குமேல முடியாதுடே. வெட்கம் வராப்போல இருக்கு. எல்லார் முன்னுக்கவும் அசடு வழிய வச்சிப்புடாதடே” என்று வீரன் முனங்கிட… “சரி… சரி” என லிங்கம் அமைதியாகினான்.
“உன்னை இப்படி பார்க்க நல்லாயிருக்கு மாமா” என்ற அங்கை, “போட்டோ எடுத்துக்கலாம்” என்று சுயமி எடுக்க… “ம்க்கும் வேண்டாதவங்களாம் ஸ்கீரினில் வராங்க. தள்ளி நிக்க சொல்லு மாமா” என்று லிங்குவை முறைத்தவள் வேண்டுமென்றே லிங்குவை விட்டு புகைப்படம் எடுத்தாள்.
‘வெறுப்பேத்த பன்றாளா? இல்லை உண்மையாவே என்னைய ஓரங்கட்டிட்டாளா?’ என நினைத்த லிங்கம், பாண்டியன் அழைத்ததால் வீரன் நகர்ந்திட… “ஓவரா போற, கொஞ்சம் அடங்குடி” என்றிருந்தான்.
அவனின் டி’யில் அவனது மனதை கண்டுகொண்ட அங்கை… உள்ளே பூரிப்போடு, வெளியில் முறைப்போடு அவனை பார்த்து வைத்தாள். முதல் முறை டி போட்டிருக்கிறான். அவனறியாத உரிமையில். அவளுள் அதீத சுவையாக.
‘நான் நெருங்கினப்போ தெரியாதது தள்ளி நிக்கும்போது தெரியுதாக்கும்.’ தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
“என்ன அப்படி பாக்குற?” எனக் கேட்டவன், அவளின் தலையில் கொட்டிவிட்டு வீரனிடம் சென்றான்.
“போவோம் வாங்க” என்று மீனாட்சி சொல்லிட, மேளதாளம் முழங்க வாத்திய வாசிப்புக்களோடு மருதனின் வீடு வந்து சேர்ந்தனர்.
“எல்லாரும் வந்துட்டாய்ங்க மீனா” என்ற பிரேம்… அவளின் வாடிய முகம் கண்டு என்ன பேசுவதென்று தெரியாது தங்கையின் அருகில் அமர்ந்து அவளின் கையினை ஆதரவாக பற்றினான்.
“அண்ணே…”
“ச்சூ… அழக்கூடாது. உன் வெசனம் என்னன்னு தெரியல. எதுவாயிருந்தாலும் வீரா மாமா சரி செஞ்சிப்புடும். நீயி ஆசைப்பட்டது. சந்தோஷமா இருக்கு வேண்டிய நேரம்” என்றவன் தங்கையின் முகத்தை துடைத்துவிட்டு, “வந்திருக்கவங்களை கவனிக்கிறேன்” என்று கீழ் செல்ல “அக்கா” என்ற கூவலோடு அங்கை வந்தாள்.
“என்னக்கா நீயி இப்படி இருக்க?” என்ற அங்கை, “மாமா பளிச்சுன்னு வந்திருக்கு. இப்படியே நீயி போயி மாமா பக்கட்டு உட்கார்ந்தன்னு வைய்யீ, மாமா ஸ்கோர் பண்ணிப்புடும். கண்ணுக்கு மை வைய்யீ. பூ இன்னும் கொஞ்சம் வைய்யீ. வளையல் ரெண்டு சேர்த்து போடு” என சொல்லியவாறே செய்தும் முடித்தாள்.
மீனாள் அன்று அனைவரின் முன்பும் தைரியமாக சொல்லிவிட்டாள். அந்த திடம் இப்போதிருக்கிறதா என்றால் அவளிடம் இல்லை. அதன் பின்பு வீரனிடமிருந்து சாதாரண பார்வை, இயல்பான பேச்சென்று அவள் எதிர்பார்த்திருக்க… அவனோ அவள் முன்கூட வராது நான்கு நாட்களாக அவளுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறான்.
‘தள்ளியிரு… இருவருக்கும் நல்லது… கல்யாணத்துக்கு பொறவு வலியாகும் வாழ்க்கைக்கு ஒதுங்கி இருப்பதுதான் சரி வரும்’ என்று அவள் சொல்லிய யாவும் வசதியாக மறந்துவிட்டாள் போலும்.
அவனுடைய வார்த்தை பல வருடம் சென்றும் மனதில் முள்ளாய் தைத்திடும் போதும்… அவளுடைய வார்த்தைகள் அவனை வதைக்கும் என்பதை அறியவில்லையோ அவள்?
தன்மீது உயிரே வைத்திருப்பவன் தான், என்ன செய்தாலும் போ என்றால் போய்விடுவான். வா என்றால் அனைத்தும் மறந்து பக்கம் வந்து இயல்பாய் ஏற்றுக்கொள்வான் என்று நினைத்துவிட்டாளோ?
அத்தோடு நேரங்காலமின்றி வீரன் இப்போது அவசரமாக திருமணம் வேண்டாமென்று சொல்லியதுவேறு அவளை வருத்தியது. ‘விருப்பமில்லாம ஒப்புக்கிட்டாரா?’ என்கிற தேவையில்லா கேள்வி வேறு அவளுள் உலா சென்றது.
மீனாளுக்கு அத்தனை வருத்தமாக இருந்தது. ‘தான் அவனைப்பற்றி எல்லாம் உணர்ந்து வருகையில் அவன் விலகிச் செல்கிறானோ?’ என்ற அவளின் எண்ணமே அவளை இப்போது குடைந்து கொண்டிருக்கிறது.
“அக்கா என்ன ரோசிச்சிட்டு இருக்க. மாமா எப்புடி சிரிச்ச முகமா வந்து உட்கார்ந்திருக்கு தெரியுமா? நீயென்னனா என்னத்தையோ உருட்டிட்டு, உம்முன்னு இருக்க” என்ற அங்கை… தானும் வீரனும் எடுத்துக்கொண்ட சுயமி படத்தை மீனாளிடம் காண்பித்தாள்.
அங்கை சொல்வதைவிடவே வீரன் அவளது கண்களுக்கு அத்தனை ஒளியுடன் தெரிந்தான். அவனின் முகத்தில் தெரிந்த மகிழ்வு தற்போதைக்கு மீனாளின் குழப்பத்தை ஒதுக்கி வைத்து அவளை மலரச் செய்தது.
“தங்கப்பொண்ணு ரெடியாகியாச்சுப் போலவே” என்று உள்ளே வந்த லிங்கம், அங்கையை பார்த்து உதடு சுளித்தவனாக மீனாளின் அருகில் அமர்ந்தான்.
லிங்கத்தின் கையை கோர்த்து கொண்ட மீனாள் விரிந்த புன்னகையோடு அவனை ஏறிட…
“மீனாக்குட்டி கண்ணுல மட்டும் ஏதோ குறையுதே!” என்றான்.
“படபடப்பா இருக்கு மாமா!” என்றவள், “மாமா என்கிட்ட பேசவேமாட்டிக்கு” என்றாள்.
லிங்கம் சத்தமாக சிரித்துவிட்டான்.
“எதுக்கு மாமா சிரிக்குற?” அவனின் தொடையிலே அடித்தாள் மீனாள்.
அப்போதும் லிங்கம் சிரித்திட…
“அக்கா வெசனப்படுது. உங்களுக்கென்ன சிரிப்பு. பல்லு சுளுக்கப்போவுது” என்று கைகளைக் கட்டிக்கொண்டு சிறு முறைப்போடு அங்கை சொல்ல…
“உன்கிட்ட பேசினா தாலி கட்டுற வரைக்கும் கம்மின்னு இருக்க முடியாதுன்னு… உன்னை பார்த்தாலே அண்ணே ஓடிட்டு இருக்கு. நீயி அண்ணே பேசலன்னு கவலைப்படுற?” என்று கேலியாக பதில் கொடுத்த லிங்கத்திற்கும் வீரனின் இந்த திடீர் பாராமுகம் ஏனென்று தெரியாதபோதும் மீனாளை இயல்பாக்குவதற்காக அவ்வாறு கூறினான்.
“நீயி முறுக்கிட்டு திரிஞ்சப்பவே உன் கண் பார்த்து அம்புட்டு செஞ்சுது. இப்போவா உன்னை ஒதுக்கி நிறுத்தும்?” எனக் கேட்டான்.
லிங்கம் கேட்பதும் சரிதானே?
‘தேவையில்லாம குழம்புறோம்’ என நினைத்தவள்,
“மாமாவை கட்டிக்கப்போறதுல அம்புட்டு சந்தோஷம். அதே அளவுக்கு உதறலாவும் இருக்கு மாமா” என்ற மீனாளின் சில்லிட்டு போயிருந்த உள்ளங்கையை துடைத்துவிட்ட லிங்கம், “அண்ணே உன்னை நேசிக்கிதுன்னு தெரியும். ஆனா எம்புட்டுன்னு இந்த மூணு நாளுல தெரிஞ்சுது. கல்யாணமின்னதும்தேன் அண்ணேவோட மனசு எல்லாருக்கும் வெளிப்பாடா தெரியுது. இந்த மூணு நாளா அண்ணே மொவத்துல தெரியுற சந்தோஷம் அம்புட்டும் உன்னாலதேன். அதோட நேசம் நீயி கூடால வாழும் போதுதேன் தெரியும்” என்று பனித்து விட்ட விழிகளோடு மொழிந்தவன் மீனாளை தோளோடு அணைத்து விடுவித்து சென்றுவிட்டான்.
வீரன் எதையும் மற்றவர்களுக்கு பார்த்து பார்த்து செய்துதான் லிங்கம் அறிந்திருக்கிறான். அவனுக்காக என்று அதீத ஆசையோடு எதிர்பார்த்தது மீனாளை மட்டும் தான். சில நாட்களாக வாடிப்போயிருந்த வீரனின் முகம் இன்று ஒளிர்வதற்கு காரணமே மீனாள் அவன் கை சேரப்போகிராள் என்பதுதானே? ஆனால் இவளோ இன்னமும் பழையதை உருட்டிக்கொண்டு இருக்கிறாளே என்று தேற்றியவனுக்கு வீரனின் ஆசை என்பது தான் நெக்குறுக வைத்தது.
“என்னட்டி லிங்கு மாமா போறதையே பார்த்திட்டு இருக்க? என்கிட்டவே பொறாமையா?” லிங்கத்தின் பேச்சு மீனாவை சாதரணமாக்கியிருந்தது.
“மாமாவ கஷ்டப்படுத்திப்புடாதக்கா. அம்புட்டு மகிழ்வா உட்கார்ந்திருக்கு. மாமா பேசுன வார்த்தை இன்னமும் உனக்கு உறுத்தலா இருந்துச்சுன்னா… நீயே கல்யாணத்தை நிறுத்திப்போடு. வாழுற வாழ்கை மனசுக்கு புடிச்சி சந்தோஷமா இருக்கணும். இல்லாட்டி அது உங்க ரெண்டேரோட முடிஞ்சிப்போவுரது இல்லை. நம்ம மொத்த குடும்பத்துக்கும் ஆணிவேர் வீரா மாமா தான்” என்றாள்.
“பெரிய பேச்செல்லாம் பேசுற சின்னக்குட்டி” என்ற மீனாள், “உம் மாமாவை பத்திரமா சந்தோஷமா பார்த்துகிடுறேன் போதுமா?” என்று உள்ளார்ந்த புன்னகையோடு அங்கையின் இரு கன்னத்தையும் பிடித்து ஆட்டினாள்.
அறைக்கு வெளியில் நின்றபடி இவர்களின் பேச்சினை செவி மடுத்திருந்த லிங்கம்… மீனாளின் முகத்தில் இயல்பான சிரிப்பை கண்ட பின்னரே நிம்மதியாக கீழிறங்கினான்.
‘பேசுறதெல்லாம் பெரிய மனிஷிதான். என்ன எம் பக்கட்டு குட்டியா தெரிவாளோ? இன்னும் கொஞ்சம் வளர்ந்தாக்கா தேவலாம்.’ மனதில் காதல் வந்த பின்னர் இருவருக்குமான எண்ணம் தான் லிங்கத்திடம்.
லிங்கம் வீரன் அருகில் சென்று உட்கார…
“எங்கடே போயிட்ட… பிரேமாவது பக்கட்டு வந்து உட்காருவியான் பார்த்தாக்கா, அவென் மாமா கூடவே இருக்கியான்” என்றான் வீரன்.
“மீனாக்குட்டியை பார்க்க போயிருந்தேன்” என்ற லிங்கம், “பேசாமாயிருந்து அவகிட்ட விளையாடி பாக்குறன்னு தெரியுது. அது புரியாம சுருங்கி உட்கார்ந்திருக்கு” என்றான்.
வீரன் பதிலேதும் சொல்லவில்லை.
‘ரெண்டேருக்கும் வலியாகிப்போவும்’ என்றவளின் குரல் காதுகளில் எதிரொலிக்க… தலையை உலுக்கிக் கொண்டான்.
மீனாளால் தன்னைத்தவிர யாரையும் அருகில் கூட நிறுத்திப் பார்க்கத் தோணாது என்று வீரனுக்குத் தெரியும். கோகுல் செய்து வைத்த செயல், அதனால் சட்டென்று உண்டான கௌதமுடனான திருமண ஏற்பாடு… இவற்றின் அழுத்தம் அவளை தன்மீதான விருப்பத்தை வெளிப்படையாக சொல்ல வைத்திருக்கிறது என்று யூகித்தவனுக்கு அவளின் மனமாற்றம் இன்னும் தெரிந்திருக்கவில்லை.
‘நீயி சொன்ன வார்த்தை காலத்துக்கும் வருத்தும் மாமா. ஒன்னுமண்ணா இருக்கும் போது நெனப்பு வந்துட்டால்?’ என்றவளின் அந்தப்பேச்சு மாற்றம் பெற்று… அவளுக்கு தெளிவு வந்தாகிவிட்டது என்று தெரியாது அவளை வருத்திவிடக் கூடாதென இன்னமும் தள்ளி இருக்கிறான்.
இதனை லிங்கத்திடம் சொல்லிட முடியாதே!
என்னயிருந்தாலும் தன்னுடைய தங்கப்பொண்ணுடனான தன்னுடைய திருமணத்தை மனம் நிறைந்த மகிழ்வோடு வரவேற்றான்.
நிச்சய ஓலை வாசிக்கப்படுவதற்கு முன்பு, மீனாளை அழைத்து வந்து வீரனுக்கு நேரெதிர் அமர வைத்தனர்.
வீரனின் பார்வை முழுக்க ரசனையாக அவனவள் மீதுதான். படியிறங்கி வரும்போது இமை சிமிட்டாது வீரனை மொத்தமாக உள்வாங்கியிருந்தாள். உயிருக்குள் இனிய உணர்வொன்று மின்னலாய் வெட்டிச் செல்வதை இருவருமே ஒருசேர உணர்ந்தனர்.
அக்கணம் இருவரது விழிகளும் நொடிக்கும் குறைவாக கவிபாடி விலகியது.
அதன் பின்னர் குனிந்த தலையை மீனாள் நிமர்த்தவே இல்லை. இருந்தபோதும் தன்னவனின் தன்மீதான துளைக்கும் பார்வையை உணர்ந்தே இருந்தாள்.
எப்போதும் கனிவை மட்டுமே காட்டும் வீரனின் விழிகளில் அப்பட்டமான காதலை முதல்முறை உணர்பவளுக்கு, இதயத்தில் இனிமையான படபடப்பு. அதனை கை விரல்களை கோர்த்து, பிரித்து என தடுமாற்றத்தில் அவனுக்கு காட்டிக் கொடுத்திட வீரனிடம் மெல்லிய முறுவல்.
கை மறைவில் இரு விரல் கொண்டு மீசையை முறுக்கிக்கொண்டான்.
இருவரின் இதயங்கள் அவர்கள் அறியாமலே தங்களின் அன்பை பரிமாறிய தருணம் அது.
மாமன் முறையுள்ள பாண்டியன் மீனாளுக்கும், மருதன் வீரனுக்கும் மாலை அணிவித்து பொட்டு வைத்துவிட… பாண்டியனும், அபியும் நிச்சய சீர் அடங்கிய தட்டினை மீனாளிடம் கொடுக்க…
மீனாள் ஒரு பார்வை பார்த்தாள். அவனும். அவனது இமைகள் மூடி திறந்ததுவோ! தட்டினை வாங்கிக்கொண்டாள்.
இருவரையும் கவனித்த லிங்கம்…
“அண்ணே இங்கன இப்போ என்ன நடந்துச்சு?” எனக் கேட்க, அவனின் விலாவிலே இடித்தான் வீரன்.
மீனாளின் கன்னம் வழித்து முத்தம் வைத்த அபிராமி, “தட்டிலிருக்கும் சேலையை மாத்திக்கிட்டு வா கண்ணு” என்று அனுப்பி வைத்தார்.
“அங்கை போட்டி… போயி ஒத்தாசை பண்ணு” என்று மகா அங்கையை மீனாளுடன் அனுப்பி வைத்தார்.
அனைவரின் முகத்திலும் சந்தோஷம் விரவி கிடந்தது.
வசந்தி நல்லானை தவிர்த்து.
வசந்தி கடுகடுவென்று இருக்க… “செத்த மொவத்த சாதாரணமா வச்சிக்கட்டி… நமக்கு காரியம் பெருசு” என்று நல்லான் பிறர் கவனம் ஈர்க்காது மனைவியை அதட்டினார்.
கௌதமின் கவனம் முழுக்க தன் பெற்றோரின் மீதுதான். காலை அவன், தான் ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்று சொல்லியது முதல் இருவரும் அவனை கண்டுகொள்ளவே இல்லை.
அவர்களின் மொத்த திட்டத்தையும் வீணடித்துவிட்டான் என்கிற ஆத்திரம் அவர்களுக்கு.
இதற்கே பெற்ற பிள்ளையிடம் பாராமுகம் காட்டுபவர்கள், அப்பெண் சுபா என்று அறிந்தால் என்ன செய்வார்களோ?
சுபா வந்துவிட்டாள் என்று தெரிந்தது முதல் அவளுக்கு கௌதம் அலைப்பேசியில் முயன்று கொண்டிருக்கின்றான். சுபா ஏற்பதாக இல்லை. அவளுக்கு இங்கு நடந்தது தெரிந்திருக்கும், நேரில் சமாதானம் செய்து கொள்ளளாமென அடுத்து அழைக்காது விட்டுவிட்டான்.
“காலையில் நீயி என்னவோ சொன்ன? இங்கென்னவோ நடக்குது? என்னயிருந்தாலும் மீனாளுக்கு அமிழ்தந்தேன் பொருத்தம்” என்று தன்னை காலையில் வைய்த பெரியாத்தா வேண்டுமென்றே வசந்தியிடம் வம்பு பேசினார்.
வசந்தி அவரை பார்வையாலே எரித்தார்.
“நடக்கணும் இருக்கிறதுதேன் நடக்கும். நினைக்கிறதெல்லாமா நடக்கும்” என்று அவர் தன் பக்கத்திலிருந்த பெண்மணியிடன் ஜாடை பேசிட…
“எம்மவனை கட்டிக்கிட அவளுக்கு கொடுத்து வைக்கல. கிராமத்தான கட்டிக்கிட்டு சின்னப்படனுமின்னு அவ தலையில எழுதியிருக்கு. அதை யாரு மாத்த முடியும்?” என்ற வசந்தியின் பேச்சில் மருதனுக்கே கோபம் வந்துவிட்டது.
வீரன் கண்காட்டிட அவரின் பேச்சினை கண்டுகொண்டதுபோல் யாரும் காட்டிக்கொள்ளவில்லை.
மீனாட்சிக்கு பொடுபொடுவென வந்தாலும், வசந்தியின் குணம் தெரிந்தவர் என்பதாலும், தன்னுடைய பேரனின் பார்வைக்கு கட்டுப்பட்டவராகவும் அப்பேச்சு தன் காதிலே விழவில்லை என்று இருந்துகொண்டார்.
அபியும், மகாவும் தான் வசந்தியை பேச முடியாது முறைத்து வைத்தனர். அவர்களுக்கு நடக்கும் நிகழ்வு எவ்வித சலம்பலும் இல்லாது நடைபெற வேண்டுமென்கிற எண்ணம்.
மருதனுக்கு இந்த நான்கு நாட்களில் தங்கையின் குணம் வெறுப்பை கொடுத்துவிட்டது.
“நாலு பேரு ஒன்னு கூடினாக்கா… பேச்சும் நாலு விதமாத்தேன் இருக்கும் மாமா. நாம புள்ளைங்களுக்கு நடக்க வேண்டியதை குறையில்லாமல் செய்வோம்” என்று பாண்டியன் தான் மருதனின் கவனத்தை மாற்றினார்.
“நீயும் இன்னும் கொஞ்ச நாளுல இங்கனத்தேன் வரப்போறன்னு செய்தி அம்புட்டுச்சு” என்று வேறொரு பெண் சொல்லிட…
“கிராமத்துல பொறந்து வளந்தவளுக்கு… கிராமத்து ஆக்களை பார்த்தாக்கா இளப்பமா இருக்குமாட்டிக்கு” என்ற பெரியாத்தா, “ஆலையிலையும், பண்ணையிலும், நம்மவூரு சனத்துக்கே சோலி கொடுத்து வாழ வைக்கிற புள்ளையை குறை சொன்னின்னாக்கா…” என்றவர் வீரனின் “பெரியாத்தா” என்ற விளிப்பில் வாயினை மூடிக்கொண்டார்.
“பவுசு இருந்து என்ன பிரயோசனம்? பரிசம் போட வெறும் பதினோரு பவுனை தூக்கிட்டு வந்திருக்காய்ங்க” என்று அங்கு தட்டில் வைக்கப்பட்டிருந்த மாலையை மட்டும் பார்த்து வசந்தி சொல்லிட அங்கு அவருக்கு பதில் கொடுக்க யாருமில்லை.
செயலில் பதில் கொடுக்க வேண்டுமென மீனாட்சியும் அப்போதைக்கு அமைதியாக இருந்தார்.
‘இவ வாயை யாராலும் அடைக்க முடியாது போலிருக்கே!’ என்று பெரியாத்தாவிடம் ஒரு பெண்மணி கிசுகிசுக்க… அவரோ அமைதியாக இருக்கும்படி கண் காட்டினார்.
அடுத்து அங்கு அமைதி நிலவிட…
மீனாள் புடவை மாற்றி வந்து சபையில் அமர்ந்தாள்.
பிரேம் தன்னுடைய அலைப்பேசியில் காணொளி அழைப்பின் மூலம் நாச்சிக்கு அழைத்து அவளுக்கு நிகழ்வை நேரலை செய்தான்.
“அமிழ்தன் பக்கட்டு உட்காருத்தா. நிச்சய ஓலை வாசிக்கட்டும்” என்று அப்பத்தா சொல்லிட… மெல்ல தலையசைத்த மீனாள் ஒருவித இனிய படபடப்புடன் வீரனின் அருகில் சென்று சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
அங்கை மீனாளை இடித்துக்கொண்டு அமர, வீரனுக்கும் மீனாளுக்கும் இடையே இருந்த இடைவெளி காணாமல் போனது.
சட்டென்று வீரனின் தோளோடு இடிபட்ட தன்னுடைய தோள் வழியாக மின்சாரத்தை உணர்ந்தவள், அவனை விழி விரித்து தலை உயர்த்தி பார்த்திட…
“நேரா பாரு தங்கம்” என்று மெல்ல வாய் அசைத்தவனின் பார்வை ஐயர் மீது நிலைத்திருந்தது.
‘என்கிட்ட பேச வருதே!’ தன் மனதை வெளிப்படையாக சொல்லிய பின்னரும், நான்கு நாட்களாக அவன் பேசாத சடைப்பு அவளிடம்.
மீனாளுக்கு அவனருகே உரசிக்கொண்டு அமர்ந்திருப்பது இனிய அவஸ்தையாய் இருக்க, நெற்றியில் துளி துளியாய் வியர்வை பூத்தது. நடுங்கும் விரல்களை ஒன்றோடொன்று பின்னிக்கொண்டாள்.
அவளின் படபடப்பு அவன் உணர்வதாய்.
சம்மணமிட்டு நெருங்கி அமர்ந்திருந்ததில் இருவரின் கால் விரல்கள் தொட்டுக்கொண்டிருக்க… தன் பாத விரல்களால், மீனாளின் பாத விரல்களை கோர்த்து அழுத்தம் கொடுத்த வீரன், அவளின் அதிர்ந்த பார்வையில் கண் மூடி திறந்தான். அழுத்தமாக.
அவன் ஆயிரம் வார்த்தையால் கொடுக்கும் ஆறுதல் அவனின் சிறு செயலில் அவளுக்கு கிட்டியது.
“அண்ணே… மத்தவங்க கண்ணுக்கு அம்புடாதது எல்லாம் வீடியோ கவரேஜில் பதிஞ்சிடும்ல?” என லிங்கம் கேட்க… வீரன் தன் திருட்டு புன்னகையை வாய்க்குள் பதுக்கிக்கொண்டான்.
“நீயி என்னத்துக்குல எல்லாத்தையும் கவனிக்கிற?” என்ற வீரன், ஐயரின் குரலுக்கு அவர் பக்கம் திரும்பினான்.
நிச்சய ஓலை வாசித்து முடித்து…
“பொண்ணுக்கு பையன் வீட்டார் என்ன நகை போடுறீங்களோ போடுங்க” என்றார் ஐயர்.
“அப்பத்தா நீயி போடு.” வீரன் சொல்ல…
“நீதேன் அப்பு போடணும்… மொத நீயி போடு” என்றவர் அபிராமிக்கு கண் காட்டினார்.
தட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க மாலையை ஐயர் எடுத்து வீரனின் கையில் கொடுக்க…
வீரன் மீனாளை ஆழ்ந்து நோக்கினான். அவளது விழிகளோடு கொக்கிட்டு கேள்வியாய் ஏறிட்டான்.
‘அவன் தன்னிடம் இந்நேரத்திலும் தன்னுடைய விருப்பத்தை கேட்கிறான் என்றால்? தான் அன்று அத்தனை பேரின் முன்பும் சொல்லிய என்னுடைய வார்த்தையில் நம்பிக்கை இல்லையா?’
மனம் கேள்வி எழுப்பிய தருணத்திலும்,
மீனாள் சம்மதமென மெல்ல தலையசைக்க… தங்க மாலையை அவளின் கழுத்தில் அணிவித்தான்.
“நீங்க மோதிரம் மாத்திப்பீங்கன்னா போட்டுக்கோங்க” என்று ஐயர் சொல்ல, “எங்க வழக்கத்தில் அது இல்லைங்க” என்ற மீனாட்சி, அபிராமி கொடுத்த பெட்டியை மீனாளின் கையில் கொடுத்தார்.
“அம்புட்டும் உனக்குதேன். உம் மாமன் உனக்குன்னு வாங்கினது” என்று பெட்டியை சபையோர் முன் திறந்து காட்டிட… அனைவரும் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியம் கொள்ள, வசந்தியின் முகம் மட்டும் கருத்து சிறுத்தது.
இதற்காகத்தானே வசந்தி நக்கல் செய்தபோது ஏதும் பதில் கொடுக்காது மீனாட்சி அமைதி காத்தார்.
தம்மை கீழாக எண்ணுபவர்களுக்கு வார்த்தையால் கொடுக்கும் பதிலைவிட, செயலால் கொடுக்கும் பதில் வலிமை வாய்ந்தது.
அதைத்தான் மீனாட்சி இப்போது செய்தார்.
கௌதம் வசந்தியை… ‘இது தேவையா?’ என்பதைப்போல் பார்த்திட… வேறொருவராக இருந்திருந்தால் அவமானமாக கருதியிருப்பர். இவர் வசந்தியாயிற்றே தூசிபோல் தட்டிவிட்டிருந்தார்.
வசந்தியின் எண்ணம் அறிந்துதான் மீனாட்சி பெட்டியோடு கொண்டுவர சொன்னார் என்பது அபிக்கு இப்போது புரிந்தது.
“இப்போ மொவத்த எங்க வச்சிப்பாய்ங்களாம்?” மகா உதடு சுளிக்க…
“அவங்களுக்கு இதெல்லாம் உரைக்காது மதினி” என்றார் அபி.
அதன் பின்னர் போட்டோகிராபர் வீரனையும் மீனாளையும் ஒன்றாக நிற்க வைத்து பலகோணங்களில் புகைப்படம் எடுக்க… அவர் சொல்லிய பல போஸ்களை வீரன் பிடிவாதமாக மறுத்தான்.
பிரேம், கௌதம் கூட ஆல்பத்தில் நல்லாயிருக்கும் என்று சொல்ல… முடியவே முடியாதென்று நிலையாக நின்றவன், இயல்பான நிலையில் மட்டுமே மீனாளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டான்.
அதில் மீனாளுக்கு மேலும் அவளது குழப்பம் அதிகரித்து, சற்று முன்னர் தனக்கு ஆறுதலாக அவன் செய்த அந்த நிகழ்வையும் எண்ணி தவித்தாள்.
வீரனையே மீனாள் பார்த்திருக்க…
“அக்கா இங்க பாரு” என்ற அங்கையின் குரலில் கலைந்து புகைப்படம் எடுக்க ஏதுவாக முகம் காட்டினாள்.
அதன் பின்னர் கௌதம், பிரேம், லிங்கம், அங்கை, கௌசிக் என அனைவரும் அவர்களுடன் புகைப்படம் எடுக்கிறோம் என்று இடத்தை அதகளம் செய்திட…
“பொண்ணழைப்பு தாமதமாவுது” என்று மருதன் தான் அனைவரையும் விரட்டியிருந்தார்.
“கையோட மீனாளை அங்கு கொண்டு வந்து வுட்டுப்போட்டு… அப்படியே நாச்சியை கூட்டியாந்திடலாம்ல ஆத்தா. ஒத்த நடையாப் போவும்” என்று மகா மீனாட்சியிடம் கேட்க, அவர் சரியென்றதும்…
மீனாளை உடன் அழைத்துச் சென்று,
பாண்டியன் வீட்டில் வீரன் மற்றும் மீனாளை சாமி கும்பிட வைத்து, இருவரையும் ஒன்றாக அமர வைத்து உணவை முடிக்க அடுத்து நாச்சியின் பெண்ணழைப்பு ஆரம்பமாகியது.
நாச்சியுடன் வீரனும் சென்று, அங்கு பிரேம், நாச்சி சாமி கும்பிட்டு உணவு முடித்த பின்னரே லிங்கத்துடன் திரும்பி வந்தான்.
“அப்பு நாச்சியா அறையில மீனாள் இருக்கு. அங்கையை அவளுக்கு துணையா இருன்னு சொன்னேன், அவ நாச்சிக்கு அங்கு யாருமில்லையேன்னு சுபாவையும் இழுத்துக்கிட்டு ஓடிட்டாள். நீயி செத்த நேரம் அவளோட இரு. நானும் அப்பாத்தாவும் முகூர்த்தத்துக்கு எல்லாத்தையும் தயார் பண்ணிட்டு வந்துபுடுறோம்” என்று வீரனுடன் உள்ளே வந்த லிங்கத்திடம் கூறினார்.
“இது அவ ஓடியாடி திரிஞ்ச வூடுதானே ம்மா… பொறவு என்னத்துக்கு துணைக்கு ஆளு?” என்றான் லிங்கம்.
“என்னதான் பழகுன இடமின்னாலும், இந்நேர படபடப்பு வேறடே… மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்திருக்க தோணும். நீயி போனாக்கா பேச்சுத்துணையா இருக்கும். போடே” என்று அனுப்பி வைத்தார்.
“ம்ம்ம்” என்று லிங்கம் செல்ல,
“இனிமேட்டுக்கு மீனாளை அவ இவன்னு சொல்லாதடே! உனக்கு அவ மதினியாக்கும். சொல்லி பழகு” என்ற அப்பாத்தவின் குரலில் ஜெர்க்காகி நின்று திரும்பினான்.
“அண்ணே என்னண்ணே இது?” என்று பாவமாக வினவினான்.
“பெரியவங்க சொன்னாக்கா அர்த்தமிருக்கும் லிங்கு. மதிச்சு நட” என்று தம்பியை அதிர வைத்த வீரன் சிரித்தவனாக மேலேறிச்செல்ல லிங்கம் காலினை தரையில் உதைத்தவனாக மீனாள் இருந்த அறைக்குள் கதவினை தட்டிவிட்டுச் சென்றான்.
மீனாள் ததும்பிய மனநிலையில் இருக்க… வீரன் அறைக்குள் சென்றதும் நிறைந்த மனதுடன் படுத்ததும் உறங்கிப்போனான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
36
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வீரன் கலக்கிட்டான்.
மீனாள் எப்பவும் உணர்ச்சி கலவையில சுத்திக்கிட்டு இருக்கிறது … காதல் அப்படிதான … கொஞ்சம் பயமும் பதட்டமும் இருக்கும் … கல்யாணம் முடிஞ்சதும் என்ன பண்ணுவாங்க ரெண்டு பேரும் … மனசுல இருக்கிறதை வெளிப்படையா பேசிடுவாங்களா …
Veeran super
Yen meena kandataium.potu yosikira ah free ah vidu
Nadakurathu nadakum
Unaku unga manasu purium…
மீனாள் “வலி கொடுக்கும்” என்று தான் கூறியதை மறந்துவிட்டால். அவனுக்கு அது வலி கொடுத்திருக்கும் என்பதையும் மறந்துவிட்டால்.
மீனாளின் மன சஞ்சலங்கள் மறைந்து இயல்பாய் திருமணத்திற்கு சம்மதித்து இருக்கின்றாள் என்றறியாமல் அவளுக்கு மன வருத்தம் வேண்டாம் என்றெண்ணி இன்னமும் சிறிது விலகியே நிற்கின்றான் வீரன்.
பக்கத்துல நின்னாக குட்டியா தெரிவானு கவலை வேற லிங்கத்துக்கு. 🤣🤣 இதுக்கு மேல எங்க போய் அவ வளர.
பாவம் அவ வெறுப்பேத்த வேணும்னேக்கு செய்ராலா இல்ல உண்மையாக்குமே ஒதுக்கிவைக்கிறாலானுட்டு தைரியமா குழம்பி போய் திரியுறான்.
வார்த்தைகளால் பதிலளிப்பதை காட்டிலும் செயல்களால் பதிலடி கொடுப்பது சிறந்தது. 👏🏼❤️
அழகான நிகழ்வுகள்…. அன்பான உறவுகள்…