Loading

நினைவுகள் -5

முதலில் மகள் வெளிநாட்டிற்கு செல்வதாக கூறவும், அதை மட்டுமே தடுக்க முயன்ற சுந்தரிக்கு, பிறகு தான் மகளின் டாக்டர் கனவு முழுவதுமாக விளங்கியது.

“ஏதாவது பேசுடா… டாக்டர் படிப்பே வேண்டாம் டா. எல்லாருமே பண பேய்ங்க. நாமளே நேரடியா பாதிக்கப்பட்டிருக்கோமே. அப்படி இருந்தும் டாக்கருக்கு படிக்கணும்னு சொல்லிட்டு இருக்கியே.”

” எல்லாரும் அப்படியே இருக்க மாட்டாங்க. உயிரைக் கொடுத்து வைத்தியம் செய்றவங்களும் இருக்காங்க. டாக்டர்ஸெல்லாம் கடவுள் மாதிரி. அவங்களை எல்லாம் அப்படி பேசாதீங்க. ஐ டோண்ட் லைக் தட். நான் டாக்டரா தான் ஆவேன். ” என்று உறுதியாக ராதிகா நிற்க.

“சரி… உனக்கு என்ன டாக்டருக்கு தானே படிக்கணும். அப்பா கிட்ட சொல்லி எப்படியாவது உன்னை நான் இங்கேயே சேர்க்க சொல்லுறேன். இந்த வீடு வித்தாவது நாங்க உன்னை படிக்க வைக்கிறோம்.” என்று இறங்கி வந்தவர், சண்முகத்திடம் திரும்பி, ” என்னங்க… ஒன்னும் சொல்லாமல் நிக்குறீங்க.” என அவரிடம் பாய்ந்தார்…

‘ இவ்வளவு வெள்ளந்தியா இருக்காளே…’ என அவளை பரிதாபமாக பார்த்தார் சண்முகம்.

 “அம்மா புரியாம பேசாதீங்க. வீட்டை வித்தா எவ்வளவு வரும் என்று நினைச்சிட்டு இருக்கீங்க. கோடிக்கணக்குல வருமா? அப்புறம் வீட்டை வித்துட்டு எங்கே போய் இருக்கிறது. கடைக்கு வாடகை கொடுக்கணும், அப்புறம் வீட்டுக்கு வாடகைக் குடுக்கணும், ஸ்டாப்ஸுக்கு சேலரிக் கொடுக்கணும். அதுக்கெல்லாம் கடை வருமானம் போதாதுமா. இதுவே வெளிநாட்டுல படிச்சா, நம்மால சமாளிக்க முடியும்.” என்று கூறி விட்டு தாயைப் பார்த்தாள் ராதிகா.

” அதெல்லாம் எனக்கு தெரியாது டா தங்கம். உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது. ப்ளீஸ்மா… இங்கே இரு ராது மா.”

” அம்மா! என்னோட இலட்சியமே டாக்டராவது தான். நான் இங்கே இருந்தா என்னோட லட்சியத்தை அடைய முடியாது. அங்கே போனால் என்னுடைய லட்சியம் நிறைவேற ஒரு வாய்ப்பு இருக்கு. ப்ளீஸ் மா. அதை தடுக்காதீங்க.” என அழ.

 பிறந்ததிலிருந்து எல்லோரும் அவளை தாங்கு தாங்கென்று தாங்கியது என்ன? இன்றைக்கு இவ்வளவு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாளே… அவளது கண்ணீரை நிறுத்த முடியாத தங்களோட நிலைமையை எண்ணி, கலங்கியவர், கணவரைப் பார்த்தார்.

  அவரோ, மகளுக்கு ஆதரவாக இருப்பதா? இல்லை மனைவிக்கு பார்ப்பதா? என தெரியாமல் மாட்டிக் கொண்டு தவித்தார்.

தன் கணவர் இப்போதைக்கு வாயைத் திறக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துக் கொண்ட சுந்தரி, என்ன சொல்வதென்று தெரியாமல் சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். ” உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது. உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது.” என்று புலம்ப.

சுந்தரி புலம்புவதைக் கேட்ட ராதிகா, காதை இறுகப் பொத்திக் கொண்டாள்.

கடந்த இரண்டு வருடமாக அவள், தன் சுயத்தை விட்டுக் கொடுத்திருந்தாள். ‘இதே நிலை தொடர்ந்தால், மூச்சு முட்டி கொஞ்ச நாளில் பைத்தியமாகி விடுவோம். ‘ என்று எண்ணியவள் வாயை விட்டிருந்தாள்.

” ஐயோ! அம்மா… நிறுத்துங்க… இங்கேயே இருந்தேன்னா, பைத்தியம் பிடிச்சு செத்துடுவேன் போல…” என்று கத்தினாள் ராதிகா.

எள் விழுந்தால் கூட கேட்கும் போல அவ்வளவு நிசப்தம் அங்கே…

தான் சொல்லிய வார்த்தை, தன் காதிலே விழுந்த பிறகே தான் செய்த தவறை உணர்ந்து தலையை தட்டிக் கொண்டவளுக்கு, “ஐயோ! ” என்று ஆனது.

 தனது தந்தையையும், தாயையும் பார்க்க… அவர்களோ அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றனர்.

” அம்மா…” என்று ராதிகா சமாதானம் செய்ய முயல.

” ராது… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.” என்றவர், வேற எதுவும் பேசாமல் கீழே கிடந்தவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

” அப்பா! சாரிப்பா.” என.

” உன் கிட்ட இதை எதிர்பார்க்கலை மா.” என்றவர் சட்டையை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பி விட்டார்.

‘ப்ச்! ‘இருந்தாலும் அந்த வார்த்தையை நான் சொல்லி இருக்க கூடாது.’ என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தாள் அவள்.

 ” சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமான். சொல்லிய வார்த்தை நமக்கு எஜமான்.” என்பதன் பொருளை இப்பொழுது தான் நன்றாக புரிந்து கொண்டிருந்தாள்.

தனித்து விடப்பட்ட ராதிகா, அங்கிருந்து வெளியேறி அவளது அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 அப்பாவும், அம்மாவும் பேசாமல் போனதை நினைத்து அப்படி ஒன்றும் கவலைப் படவில்லை ராதிகா. ஏனென்றால் அவளிடம் பேசாமல் கொஞ்சம் நேரம் கூட அவர்களால் இருக்க முடியாது. அவர்களே சற்று நேரத்தில் வந்து பேசிவிடுவார்கள். ஆனால் அவர்களது முகம் பயத்தால் வெளுத்ததைக் கண்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது

 வெளியே வந்த சுந்தரியோ, சாமி மாடத்திற்கு முன்பு சென்று,” தன் மகளுக்கு எந்த ஆபத்தும் வராமல் நீதான் அவளுக்கு துணையாக இருக்கணும் கடவுளே!” என்று மனமுருக வேண்டியவள் மஞ்சத்துணியில் குலதெய்வத்துக்கு காசு முடிந்து வைத்து விட்டு சமையலறைக்குச் சென்று மகளுக்கு பிடித்த காளான் பிரியாணியை செய்தார்.

இது தான் சுந்தரி. கோபமோ, தாபமோ எதுவாக இருந்தாலும் ஐந்து நிமிடம் தான். அதற்கு மேல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டார். அவர் மட்டுமல்ல நாட்டில் தொண்ணூறு சதவீதம் அம்மாக்கள் அப்படித் தான்.

ராதிகாவோ பசி தாங்க மாட்டாள். ‘ காலையில் ரிசல்ட் பரபரப்பில் ஒழுங்காக சாப்பிடவில்லையே.’ என பரிதவித்தவர், தட்டில் சூடான காளான் பிரியாணி, ரைத்தாவை எடுத்து வைத்தவரின் கால்கள், மகளது அறைக்கு விரைந்தது.

“ராது மா…” என்று கூப்பிட்டுக் கொண்டே விரைந்தாள்.

ராதிகாவோ அழுதழுது தூங்கி விட்டிருந்தாள்.

கட்டிலில் உட்கார்ந்த சுந்தரி, மகளை எழுப்பினார்.

தூக்கக் கலக்கத்தில் கண்விழித்த ராதிகா, ” அம்மா! சாரிமா… நான்… இல்லை… தெரியாமல் வாயில வந்துடுச்சு மா.” என்று உளற‌.

மகளின் தலையை கோதிவிட்ட சுந்தரியோ, ” தெரியாமல் கூட அப்படி சொல்லாதடா‌. அந்த வார்த்தையை கேட்டாலே நான் செத்து போயிடுவேன்.” என்றார் சுந்தரி.

” சாரி மா‌…” என்று மறுபடியும் மன்னிப்பு கேட்டாள் ராதிகா.

” சரி டா! எழுந்திரு. அம்மா ஊட்டி விடுறேன்.” என்றவர், மேஜை மேலிருந்த தட்டை எடுத்து ஊட்ட…

” ஆ”வென வாயைத் திறந்து ஒரு வாய் வாங்கியவள், ” நீங்க சாப்பிட்டிங்களா? அப்பா வந்துட்டாங்களா?” என ராதிகா வினவினாள்.

” சாப்பிடும் போது பேசாதே அம்மு. அப்பா இன்னும் வரலை. வந்ததும் நாங்க சாப்பிடுறோம்.” என்றவர்

அடுத்த கவளத்தை வாயில் வைத்தார்.

” சரி மா. நான் அப்பாவுக்கு ஃபோன் போடுறேன்.”

” இப்போ தான் நான் ஃபோன் போட்டேன். வந்துட்டுருக்கறாம்.” என்றவள் மகளுக்கு ஊட்டுவதிலே கவனமாக இருந்தார்.

சற்று நேரத்தில் வீட்டுக்குத் திரும்பியிருந்த சண்முகம், கை, கால் கழுவி விட்டு, மனைவி, மகளைத் தேடி கிச்சனுக்குள் நுழைந்தார்.

அங்கு அவர்கள் இல்லை எனவும், மகளது அறைக்கு வந்தார்.

 அங்கே அம்மா, மகளது பாசத்தைப் பார்த்தவருக்கு, சுந்தரியை நினைத்து கொஞ்சம் கவலையாக தான் இருந்தது.

‘சுந்தரிக்கு இந்த வீடு தான் உலகம். இங்கே உள்ள ஒவ்வொருவரின் நலம் தான் அவளுக்கு முக்கியம். அவள் எப்படி ராதிகா இல்லாமல், ஐந்தரை வருடத்தை சமாளிக்கப் போகிறாளோ தெரியவில்லை.’ என் வருந்தியவர் ” அம்மு சாப்பிட்டு முடிச்சதும் வெளியே வா.” என்றுக் கூறி விட்டு, ஹாலிற்கு வந்தவர், அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டார்.

அவரது மனதிலோ பலவித எண்ணங்கள் ஓடியது. தனது அருகில் மகள் உட்காரும் அரவத்தில் கண் திறந்தவர், மகளைப் பார்க்க.

 அவரது கைகளைப் பிடித்து,” சாரி பா.” என்றாள்.

” சரி பரவால்ல விடு மா. இனி தெரியாமல் கூட அந்த வார்த்தைகளை நீ உச்சரிக்காத. அப்படி செய்யணும்னு நெனைச்சாலே, அதுக்கு முன்னாடி எங்க ரெண்டு பேரோட உயிரும் போய்டும். அதை மட்டும் மனசுல வச்சுக்க. நான் போய் நம்ம விக்ரமைப் போய் பார்த்தேன். வீட்டுப் பத்திரத்தை வச்சு பேங்க்ல லோன் வாங்கலாம் என்று சொன்னான்.

நீ எப்போ பிலிப்பைன்ஸ் போகணும்? அதுக்கு என்ன ப்ரொசிஜர் என்று விசாரி.” என்று தன் சம்மதத்தை மறைமுகமாக கூறியிருந்தார்.

சண்முகம் கூறியதைக் கேட்ட ராதிகாவின் முகம் மலர்ந்தது..

             ****************************

இன்று

கோவிலிருந்து வந்த ராதிகாவின் முகம் வாடி இருக்க…

” ஏன் டா தங்கம் முகம் வாடி இருக்கு?” என பதறி சுந்தரி கேட்க…

அம்மாவின் பதட்டத்தைக் கண்டதும், கலங்கும் கண்களை சமாளித்துக் கொண்டு, “வெளியில போயிட்டு வந்தது கொஞ்சம் டயர்டா இருக்கு மா. காஃபி போடுங்க. இதோ வந்துடுறேன்.” என்றவள், அவளது அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டாள்.

அப்படியே மடங்கி அமர்ந்தவளின் கண் முன்னே மேடிட்ட வயிறுடன் இருந்த அனன்யாவும், அவளை அணைத்து நின்ற விஸ்வரூபனும் தான் வந்து போயினர்.

கண்ணீரோ நிற்காமல் வழிந்தோடியது. எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை.

அதே நிலையில் அமர்ந்து இருக்க… அவளது தவத்தை களைக்க, சுந்தரி வந்து கதவை தட்டினாள்.

” ராது மா… காஃபி ரெடி… சீக்கிரம் வந்து குடி. அப்புறம் டிபன் எப்போ சாப்பிடுவ?”

” டூமினிட்ஸ் மா.” என்றவள், கண்ணாடி முன்பு நின்று, அவசரமாக முகத்தை துடைத்து லேசாக மேக்கப் செய்துக் கொண்டு வெளியே வந்தாள்.

இது தான் கடந்த ஏழு எட்டு மாதமாக அவளுடைய வழக்கம். மனதில் உள்ளதை மறைத்து, பொய்யான முகமூடியை போட்டுக் கொண்டு, தன் தாயையும், தந்தையையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்.

இன்றும் காலை உணவு நேரத்தில் கலகலத்து விட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பி சென்றாள்.

அங்கோ அவளது சோர்ந்த மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி வந்தது.

ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தவுடன் வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், சிரித்த முகமாக எதிர்பட்ட ஊழியர்களிடம் தலையசைத்தவள், தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்.

இன்னும் பேஷண்ட்ஸ் வருவதற்கு நேரம் இருந்தது. அதற்குள் ரவுண்ட்ஸ் போக வேண்டும். பெரிய டாக்டருடன் இவர்களும் சென்று நோட்ஸ் எடுக்க வேண்டும். இன்டர்காம் ஒலிக்க…. அவளது நாள் ஆரம்பித்தது.

ரவுண்ட்ஸ் முடிந்து, கன்ஸல்டிங் ஹவரும் முடிந்து ப்ரேக்கில் கேண்டீனில் இருந்தாள். அவள் முன் ஆவி பறக்கும் காஃபி வீற்றிருந்தது. கெடுதல் என்று தெரிந்தாலும் அவளால் விட முடியாத பழக்கம்.

ரசித்துக் குடித்துக் கொண்டிருக்க அவளது செல்போன் இசைத்தது.

 வெளிநாட்டிலிருந்து போன் கால் வந்திருக்க… உற்சாகத்துடன் பேசினாள்.

( ஆங்கிலத்தில் உரையாடிய உரையாடல் தமிழில்…)

” ஹலோ டாக்… வாட் ஏ ப்ளசன்ட் சர்ப்ரைஸ். ஹவ் ஆர் யூ.” ராதிகாவின் உற்சாக குரல் ஒலித்தது.

” ஐயம் ஃபைன் டியர். நான் உனக்கு ஒரு சந்தோஷமான நியூஸ் சொல்ல தான் கால் பண்ணேன்.” என்றார் டாக்டர் சேலவர்.

அவர் தான் ராதிகா எம்.பி.பி.எஸ் பண்ணும் போது டீச் பண்ண டாக்டர். வெரி ஃப்ரெண்ட்லி டைப்.

“சொல்லுங்க டாக்.”என்று எதிர்ப்பார்ப்பும், ஆர்வமுமாக ராதிகா காத்திருக்க.

” யெஸ் டியர். உன்னோட கனவு நிறைவேறப் போகுது. நீ ஆசைப்பட்ட மாதிரியே கார்டியாலஜிஸ்ட் ஆகலாம். பீஜி என்ட்ரென்ஸ் எக்ஸாமோட ரிசல்ட் வந்ததும், சென்னையில் இருக்கிற என்னோட ஃப்ரெண்ட் கிருஷ்ணனை போய் பாரு… அவரோட காலேஜ்ல சீட் அலாட் பண்ணியிருக்கார். பணம் ஏதும் கட்ட வேண்டாம். அவரோட அறக்கட்டளை மூலமா படிக்க வைக்கிறேன் என்று சொல்லிட்டார். உனக்கு ஓகே தானே.”

” யா டாக்…”

” நான் சொன்னதை கேட்டதும், உற்சாகத்துல துள்ளிக்குதிப்பே என்று நினைத்தேன். நீ என்ன ரொம்ப அமைதியா இருக்க ராதி டியர். எனி ப்ராப்ளம்?”

” நத்திங் டாக்… அப்போ காஞ்சிபுரத்துல தானே உங்க ப்ரெண்டோட காலேஜ் இருக்கு என்று சொன்னீங்க… இப்போ சென்னை என்று சொல்றீங்க? “

“ஓ… அதுவா… அவங்க காலேஜ் அன்ட் ஓன் ஆஃப் த ஹாஸ்பிடல் காஞ்சிபுரத்துல இருக்கு. அவங்க இருக்கிறது சென்னை. அந்த நியாபகத்துல சொல்லிட்டேன். இது ஒரு பிரச்சினையா? சரி மத்த டீடெயில்ஸ் மெயில்ல அனுப்புறேன். காலேஜ்ல ஜாயின் ஆனதும் எனக்கு மெசேஜ் பண்ணு. பை டியர்.” என்று வைத்து விட.

‘ அப்பாடா… கொஞ்ச நேரத்துல கதிகலங்க வச்சுட்டாரே…’ என்று எண்ணியவள் ஓய்வு அறைக்கு சென்றாள். இனி மாலை தான் அவுட் பேஷண்ட்ஸ் வருவார்கள். அது வரை அவளுக்கு ஓய்வு தான்.

அவளது ஓய்வு நேரத்தை, லைப்ரேரியிலிருந்து எடுத்து வரும் மருந்துவ சம்பந்தமான புத்தகங்களை படிப்பதில் செலவிடுவாள்.

இன்றோ எதிலும் மனம் லயிக்கவில்லை. காலையில் சந்தித்த இருவரின் முகமே கண்ணில் வந்து போனது. மறக்க நினைத்தாலும் அவளால் முடியவில்லை.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்