Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 18

 

(I)

 

“என் வாழ்க்கை நீ இங்கு தந்தது..

அடி உன் நாட்கள் தானே,இங்கு

வாழ்வது..” அவனிதழ்கள் இரகசியமாய் அசைந்து கொடுத்திட,விழிகளோ கூர்மையாய் மேடையில் இருந்த அலங்காரங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தன.

 

அவர்களின் கல்லூரியில் இருக்கும் பெரிய அரங்கம் அது.ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.நாளை விழாவென்று இருக்க,மும்முரமாய் வேலையில் மாணாக்கர்.

 

முதலாம் ஆண்டு மாணவர்களின் மீதே,விழாவுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டிருக்க,அரங்கம் முழுவதும் அவர்கள் தான்.

 

வேலையின் களைப்பு தெரியாது இருந்திட,அரங்கம் முழுவதும் உரத்த ஓசையில் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.

 

பையனைப் போல் ஒரு சில சிரேஷ்ட மாணவர்கள்,மேற்பார்வை செய்ய வந்தும் இருந்தனர்,வழமையான நடைமுறை என்பதால்.

 

“ஸ்டேஜ் டெகரேஷன் நல்லா இருக்குல..” ஆராய்ந்தவாறு இருந்த பையனின் காதில் கிசுகிசுத்தான்,தோழன்.

 

“ம்ம்..” என்றவனின் விழிகளில் சிறு தவறு தென்பட,அருகே இருந்த மாணவனை அழைத்து சுட்டிக் காட்டிட,அவனும் சரி செய்வதாய் ஒப்புக் கொண்டான்,சிறு புன்னகையுடன்.

 

பையன் இருப்பது தெரிந்து,அதிதி தன் தோழர்களும் அழைத்துக் கொண்டு அங்கு வர,எரிச்சலை காண்பித்த விழிகளில் அனல்.அதிதியுடன் சேர்ந்து இன்னும் பத்துப் பேர் போல் வந்து இருந்தனர்.

 

சலிப்பாக திரும்பியவனின் விழிகள் என்னவோ வந்தவுடன் சுழலத் தான் செய்தது,யாழவளின் விம்பத்தை தேடி.அது பொதிந்திடாமல் சதி செய்திட,அது வேறு அவனை திணறடித்தது.

 

ஏன் அவளைத் தேடி தான் விழிகளை சுழற்றிட வேண்டும் என்று அடக்க முயன்றாலும்,அவளுக்கு பயந்து ஏன் இயல்பான பார்வை வீச்சை தவிர்த்திட வேண்டும் என மனம் முரண்டு பிடிக்க பையனின் விழிகளும் சுழன்றன.

 

அவனின் காரணம் அவனியல்பை தொலைத்திடக் கூடாது என்பது தான்.நம்பித் தான் ஆக வேண்டும்,உண்மை தெரிந்தும்.

 

அவனோ,அங்கிருக்க கையில் தும்புத் தடியுடன் அவ்விடம் வந்தாள்,யாழவள்.

 

அலங்கார வேலைகளில் மேடையெங்கும் காகிதங்கள் குவிந்து கிடக்க,அதை அப்புறப்படுத்தச் சொல்லி அவளுக்கு கூறப்பட்டிருக்க அதற்காகத் தான் வந்தாள்,தோழியுடன்.

 

இருவரின் பின்னே,அலைபேசியில் கதைத்தவாறு உடன் கற்கும் ஒருத்தியும் வந்திருந்தாள்.

 

“எப்பவும் பொறுக்கிங்க மாதிரி குப்ப கூட்றதும் அள்றதுமே நம்ம வேலயா போச்சு..” மித்ரா நொந்து கொள்ள,பாவையவளுக்குமே அதே எண்ணம் தான்.

 

தலைவிதி எண்ண குமைந்த படி,மேடையை சுத்தம் செய்யத் துவங்க முன்,கறுப்பு நிற கர்சீஃபால் விழிகள் மட்டும் தெரியும் விதமாய் முகத்தை சுற்றிக் கொண்டாள்.அவளுக்கு தூசு ஒத்துக் கொள்வதில்லை.

 

பையனைக் கண்டு அதிர்ந்து பயந்தாலும்,அவ்விடத்த விட்டுப் போக வழியில்லாது இருக்கவே,மௌனமாய் சுத்தம் செய்யத் துவங்கியவளை முதலில் கவனித்திடவில்லை,பையன்.

 

தோழனுடன் கதையொன்றில் லயித்து இருந்தவனோ,அதிதியின் தொல்லையில் கோபம் கொண்டிருந்தது,உண்மை.

 

அடிக்கடி பின்னிருந்து, அவனின் தோளைத் தட்டுவதும் சைகை கொடுப்பதுமாய் அவள் இருக்க,கடுப்பை மறைத்தவாறு அங்கு தரித்திருந்தான்,பாதியில் செல்வது உசிதமாகத் தோன்றாது இருக்கவே.

 

மீளவும் அவனின் தோற்பட்டையில் ஏதோ உரசிட,”இடியட் அறிவில்ல..” அழுத்தமாக பற்களிடையே வார்த்தைகளை கடித்துத் துப்பியவாறு திரும்பியவன் கனிந்து தணிந்து சிதைந்து போனான்,அவளைக் கண்டதும்.

 

அங்கிருந்த ஒருவன் பையனிடம் காட்டி வரச் சொல்லி அவளிடம் காகிதமொன்றை நீட்டிட,அதற்குத் தான் பின்னிருந்து அவனை அழைத்ததே.

 

அதிரும் வண்ணம் ஒலித்துக் கொண்டிருந்த பாடலுடன் பையன் கதையின் மும்முரத்தில் இருந்ததும் அவள் பேசுவதை அவன் கவனத்தில் கொண்டு வந்து சேர்ப்பிக்க தவறிட,ஏதோ ஒரு தைரியத்தில் கையில் இருந்த புத்தகத்தின் நுனியால் அவனின் தோளைத் தட்டிட,அதற்கு இப்படி ஒரு பிரதிபலிப்பை சத்தியமாய் அவள் எதிர்ப்பார்த்திடவில்லை.

 

விழிகள் மட்டுமே வெளியே தெரிய,அவ்விழிகள் ஏகத்துக்கும் அதிர்ந்து விரிய,இமை சிமிட்டத் தவறிப் போய் அவள் நின்றிருந்த தோற்றம்,அவன் ஜீவனுக்குள் மின்னல் கீற்றை தெறிக்க விட,பையனின் சுவாசம் அழுந்தியது.

 

உயிருள் ஒரு மின்னல் கீற்று.ஆசுவாசம் கேட்டது,சுவாசக் காற்று.

 

“என்ன..?” கொஞ்சம் அதட்டலாய்த் தான் கேட்டான்,பையன்.அவன் அதட்டலில் இத்தனை நேரம் தாழ்ந்திருந்த அவள் விழிகள் நிமிர்ந்தன.

 

ஒரு நொடி விழி நிமிர்த்தி பார்த்தாள்.அதுவும் அவனுக்கு பதில் சொல்லத் தான்.

 

நான்கு விழிகளும் நேர் கோட்டில் சந்தித்துக் கொள்ள அவன் விழிகளில் பயமும் தடுமாற்றமும் நிறைந்திருக்க அவன் விழிகளில் வெற்றுப் பாவம்.

 

அப்படித்தான் காட்டிக் கொண்டான்,அகத்தில் எக்கசக்கமாய் நிறங்கள் வெடித்துச் சிதறின.

 

வெட்டிக் கொண்டு கத்திமுனைப் பார்வையை அவள் விழிகளுக்குள் பாய்ச்சி நின்றவனோ,முழுதாய் விரிந்து நின்ற அவளின் காந்த விழிகளுக்குள் அந்த ஒரு நொடி சிறைப்பட்டது உண்மை தான்.

 

திரை தப்பிய விழிகள்,அவனை சிறையழைத்திட,ஆயுள் தீரும் வரை அதற்குள் தொலைந்து போகவே மனம் தவித்தது.

 

அந்த ஒரு கணத்தில் பயத்துடன் உருண்ட அவளின் கருமணிகளும் அழுத்தமாய் ஒட்டி மெதுவாய் மீண்ட அவள் இமைகளும் பையனின் கவனத்தை சிந்தாமல் சிதறாமல் களவாடியிருந்தது;இசகாமல் பிசகாமல் இழுத்துக் கொண்டது.

 

தன்னைக் கேளாமலே அவனின் கருமணிளும் அசைந்து அவளின் விழிகளை ஆராய்ந்தது;இசைந்து தொலைந்து வேரோய்ந்தது.

 

சுற்றம் முற்றும் அவன் சிந்தையில் இல்லை.அவனைப் பற்றிய நினைப்பும் காணாமல் போயிருந்தது.அந்த நொடி அவனின் மனம் முழுவதும் அவள்..ம்ஹும் அவள் விழிகள் மட்டுமே.

 

மலங்க மலங்க விழித்தவளின், விழிகளை இதற்கு முன் சந்தித்து பொழுது இல்லாத ஒரு உணர்வு,அவனுக்குள்;அவன் உயிருக்குள்.

 

இதயக் கூட்டை பார்வை துளைத்து நின்றாலும்,அவன் இயல்பாய் இருந்திருக்கக் கூடும்.இது உயிரின் ஆழம் தொட்டுரசினால் எவ்வளவு தான் பையனும் இழுத்துப் பிடிக்க..?

 

விழிகளின் செயலாக்கங்கள்,அவன் உறுதிகளை நிர்மூலமாக்க,உள்ளுக்குள் புயலடித்தாலும் அதை காட்டிடாமல் கெத்தாய் தான் நின்றிருந்தான்,

அவனும்.

 

அவனறிந்து முதன் முதலாய் அவனில் உருவாகும் தடுமாற்றம் இல்லை அது.அவனையே ஏற்க வைத்திட்ட மெல்லிய உருமாற்றம்,உணர்வுகளின் தாளத்தில்;உயிரின் ஆழத்தில்;நிகழின் நீளத்தில்;நினைவின் ஓலத்தில்.

 

இதுவரை இப்படி பெண்கள் யாரும் அவனை நேருக்கு நேர் பார்த்தது இல்லை.அதுவும் அவள் பார்வையில் இருக்கும் ஏதோ ஒன்று அவனையே ஆட்டம் காண வைத்தது.

 

முகத்தில் இருந்த பயமும்,கண்களில் மின்னிய மிரட்சியும் அவனை நன்றாகவே புரட்டிப் போட ஏனென்று சத்தியமாய் புரியவில்லை.

 

முற்றாய் அவள் விழிகளுக்குள் தொலைந்து போக மனம் முடிவெடுத்ததோ, என்னவோ இமை முடிகளோ முட்டிக் கொள்ள மறந்து நின்றிருக்க அவளுக்குத் தான் இன்னும் பயமெடுத்தது.

 

“சீனியர்..” அவள் இதழசைத்திட,அதில் சட்டென தெளிந்து அவள் நீட்டியிருந்த காகிதத்தை வாங்கிட,திரும்பப் பார்த்தவளை தடுத்தான்,பையன்.

 

“கொள்ளக்காரியா நீ..?”

 

“………………..”

 

“கொள்ளக் கூட்டத்துல வர்ர மாதிரி எதுக்கு கர்சீஃப கட்டிட்டு இருக்க..கொள்ளயடிக்க போறியா என்ன..?” அவன் தன் திணறலை மறைத்து வினவ,மறுப்பாய் தலையசைத்தவனின் விழிகளில் கட்டியிருந்த கர்சீஃபின் முடிச்சுக்களை அவிழ்த்துப் விட்டன.

 

பரபரவென்ற அவள் செயலில் அவனுக்கு மெல்லிய புன்னகையும் கூட.

 

முடிச்சவிழ்த்த கர்சீஃப் கழுத்தடியில் இருக்க,தன் ஒப்புதலுக்காக விழி பார்த்தவளின் விழிகளை ஏறிடாமல் காகிதத்தில் கவனம் பதித்து,போ என்று கரங்களால் சைகை செய்திட,ஆசுவாசத்துடன் நகர்ந்தாள்,அவள்.

 

சட்டென நிமிர்ந்து அவள் விம்பம் உரசி விழிகள் பணிந்திட,தலை சரித்து கழுத்தை வருடியவனின் செயலை புருவம் சுருக்கிப் பார்த்தான்,சத்யா.

 

பையனைத் தான் அடிக்கடி வட்டமிட்டுக் கொண்டிருந்தது,தோழனின் பார்வை.

 

“இவன் கிட்ட ஏதோ டிஃபரன்ட் தெரியுது..? அது என்னன்னு தான் தெரில..சம்திங் ராங்..” என்றவனுக்குள் வேல்முருகனின் வார்த்தைகள் வேறு நினைவில் வந்து,இன்னும் குழம்பிடச் செய்தது.

 

அப்படியே அரை மணி நேரம் கடந்திருக்கும்.

 

மேடை முழுவதையும் கூட்டிப் பெருக்கி விட்டு அவள் நிமிர,முதுகு வலி பின்னியெடுத்தது.

 

“வீட்ல கூட இவ்ளோ வேல செஞ்சி இருக்க மாட்டேன்டா சாமி..”கடுப்படித்தவளுக்கு,அத்தனை ஆயாசமும்.

 

இதில் தும்மல் வேறு.பையனின் கொள்ளைக் காரப் பட்டத்திற்கு பயந்து கர்சீஃபை தாழ்த்தியிருக்க,தூசு ஒத்துக் கொள்ளாததால் தும்மல் வேறு.

 

சரியென்று கிளம்பப் பார்த்தவளோ திரும்பிட,அங்கு உடன் வந்த மற்றைய தோழியை காணவில்லை.அவளருகே நின்ற மித்ராவும் மற்றையவளைத் தேட,கொஞ்சம் தள்ளி நின்றிருந்தாள்.

 

அவளின் பெயரை சொல்லி அழைத்துப் பார்த்திட,நிறைந்திருந்த சத்தத்தில் யாழவளின் அழைப்பு அவளுக்கு கேட்கவில்லை போலும்.

 

இருமுறை மீண்டும் கத்தி அழைத்துப் பார்த்திட,அப்பொழுதும் அவள் திரும்பாது போக,பொறுமை பறந்தது.

 

“ஆரி..” சத்தமாக அவள் அழைத்திட,அந்நேரம் பார்த்து இசையும் அடங்கி அவ்விடமே அவளின் கத்தலில் நிசப்தமாகி விட,இங்கு பையனுக்குத் தான் செவியில் நுழைந்த அழைப்பு உயிரில் கலந்து இம்சையைத் தர,அகத்துடன் தேகமும் மொத்தமாய் சிலிர்த்தடங்கியது.

 

சட்டென திரும்பியவனின் விழிகள் அவளை உரசிட,அவளுக்கு ஏன் எல்லோரும் தம்மைப் பார்க்கிறார்கள் என்று புரியவில்லை.

 

சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு மார்புக்கு குறுக்கே கரத்தை கட்டியவாறு இருந்த பையனக் கண்டதுமே,தன் செயல் உரைத்திட,அனைவரின் பார்வைக்குமான அர்த்தம் புரிந்தது.

 

“ஐயையோ..” உள்ளுக்குள்ளால் அலறியவளோ,அசடு வழிய பையனைப் பார்த்து வைத்திட,அவனோ அவளைப் பாராமல், விழிகளை அலைபாய விட்டான்,ஒரு கணம்.

 

பையனை அனைவருக்கும் கண்ணைக் காட்டிட,அவரவர் தம் வேலையில் மூழ்கி விடத் துவங்கினாலும் அவள் மட்டும் அவ்விடம்.

 

“ஆரி கிட்ட போய் சாரி கேக்க போறியா..?” மித்ரா நக்கலாய் கேட்க உறுத்து விழித்தவளுக்கு,பயம் ஒரு புறம் என்றாலும் சிறு தவிப்பும்.

 

பையனுக்கு அது புரிந்தது போலும்.மெல்ல இமைகளுடன் விழிகளை உயர்த்தி அவளைப் பார்த்திட,அவளின் இதழ்களில் ஆசுவாசப் புன்னகை.

 

முன்னே நின்றிருந்த தோழியைக் விழிகளால் சுட்டி,இதழசைப்பில்”ஆரிணி” என்க,அவனுக்கும் அது புரிந்தது.

 

தவிப்பும் பதட்டமுமாய் தன்னையே பார்த்து இருப்பவளின் விழிகளில் பார்வையை வீசி,மெல்லிய தலையசைப்புடன் சரியென்பதாய் விழி மூடித் திறந்து,வாயிலைக் காட்டிட விழிகளை திருப்பிட்டவனின் இதழ்களில் துளிப் புன்னகை கசிந்தாலும்,யாரும் கண்டிடவில்லை.

 

என்னவாயினும்,அவனிதழோரம் புன்னகையை மட்டும் நெளிய விடுகிறாள்,பாவிமகள்.

 

அவளுக்கும் அவனின் விழிமொழியும் தலையசைப்பும் நிம்மதியைத் தந்திட,ஓடியிருந்தாள் அவ்விடத்தில் இருந்து.

 

துளிப்புன்னகையுடன் காதலும் துளியென துளிர்த்து விட்டதோ என்னவோ..?

 

●●●●●●●●

 

“எனக்குன்னா உங்க புள்ள மேல ரொம்ப சந்தேகமா இருக்குப்பா..எதுக்கும் அவன கண்டிச்சு வைங்க..”

 

“மெதுவா பேசுடா..குளிச்சிட்டு வந்து உன்ன கும்மிரப் போறான்..”

 

“கும்முனாலும் பரவால..நா உண்மயத் தான் பேசுவேன்..இன்னிக்கி இந்த ஆரியோட நடவடிக்கயே சரியில்ல..அதுவும் அந்த பொண்ணு கிட்ட கண்ணால பேசறான்..சம்திங் ராங்..”

 

“சம்திங் ராங் இல்லடா வெண்ண..இப்போ தான் எவ்ரிதிங் ரைட்டு..”

 

“உன் பையனுக்கு ஏதோ ஒன்னு இருக்குன்னு சொல்றேன்..அதுல போய் சந்தோசப் பட்றியே டாடி..நா இத வன்மயா கண்டிக்கிறேன்..”

 

“என்ன வேணா பண்ணிக்கோ..ஆனா என் புள்ள லவ் பண்றதுக்கு புல்டோசர் மாதிரி குறுக்க மட்டும் நிக்காத..அவ்ளோ தான்..”

 

“ம்ம்க்கும்..”

 

“ஆமா அந்த பொண்ணு பேரேன்ன..?”

 

“எந்த பொண்ணு..?”

 

“அதான் இவனுக்கு ஒரு இஷ்கு வந்திருக்கே அந்த பொண்ணு..”

 

“இஷ்குன்னு எல்லாம் சொல்லாதப்பா..இன்னும் இவன் ப்யார் ப்யார் ஹோதாஹே லெவல்கு எல்லாம் போகல..ஜஸ்டு பைஃட்டிங்..லைட்டா சைட்டிங் அப்டி தான் இருக்கு..ஆனாலும் டிஃபரண்டா பண்றான் அந்த பைய..பட் ஐ லைக் இட் யாஹ்”

 

“என்னமோ போ..எனக்கு என்னமோ என் பய லவ்வுல விழுந்துருவான்னு தான் தோணுது..” புன்னகையுடன் சொன்னார்,அவர்.

 

“ஒத்த ரோசா புள்ளய நல்லா வளத்து வச்சிருக்கு..” அவரை நக்கலடித்தவனுக்கு,அவரின் பேச்சில் பெரிதாய் நம்பிக்கை இல்லை.

 

“ஆனாலும் புள்ள லவ் பண்ணனும்னு வேண்டிகிர்ர டேடிய நா இன்னிக்கி தான் பாக்கறேன்..நானும் வேண்டி இருந்தா எனக்கும் உன்ன மாதிரி டேடி வந்துருப்பாரு போல..”

 

“சும்மா கத அளக்காம அந்த பொண்ணு பேரு என்னன்னு சொல்லுடா..?”

 

“எதுக்கு ஃப்ளேம்ஸ் போட்டு பாத்து என்ன வருதுன்னு பாக்கவா..? சும்மா இருப்பா..தப்பித் தவறி ஆம்பியுலன்ஸ் பொறந்தவன் மாதிரி நீங்க அவசரத்துல ஒளறி வச்சா உங்க பையன் என்ன வச்சி கொளுத்திருவான்..”

 

“டேய் டேய் சொல்லுடா..”

 

“யாழ்னு ஏதோ வரும்..” அவன் மெதுவாய் உரைத்திட,ஏதேதோ கணக்குப் போட்டார்,அவர்.

 

“ஆர்யா யாழ்..ரெண்டு பேரயும் சேத்து எழுதலாம்ல..” அவர் சிலாகிப்பாய் சொல்ல,அது கேட்டும் கேளாதது போல் உள் நுழைந்த பையனக் கண்டதும் இருவரும் திக்கென்றது.

 

●●●●●●●

 

(II)

 

“இல்ல மாப்ள..” ஏதோ கூறி மறுக்க வந்த மருதநாயகத்தின் வாயடக்கி, சமாளித்தான் டாக்டர்.

 

அவனுமே இத்தனை எதிர்ப்புக்கள் கிளம்பிடும் என்று எண்ணியிருக்கவில்லை.அன்பரசன் மட்டும் ஏதோ புரிந்தது போல் சரியென்றார்.

 

ஒருவாறு அனைவரையும் ஏற்க வைத்து,அவன் சம்மதம் பெற,முடிவில் தென்றலின் பார்வை நன்றியுடன் அவனைத் தீண்டியது.

 

மென் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டவனுக்கு,இந்நிமிடம் அவள் மீது தனிப்பட்ட பிடிப்பென்று எதுவும் இல்லை.அதனால் தான்,அவள் காதல் தேடிடக் கேட்டும் அவனால் இயல்பாக இருக்க முடிந்தது.

 

அவனுக்குள்ளும் ஈர்ப்பும் பிடிப்பும் உருப்பெறின் டாக்டர் எப்படிக் கையாள்வானோ..?

அவள் மீதான பிடித்தத்தை விட,அவள் காதல் மீது விருப்பம் வந்தால்..?!

 

“நாளக்கி காலைல கெளம்பலாம்..” என்று அவளிடம் கூறி விட்டவனோ,வாசுவையும் அழைத்திருந்தான்.

 

வாசு,அவனின் பெரியப்பாவின் மகன்.தென்றலின் தோழி ஸ்ரீயைத் தான் அவன் கட்டியிருப்பது.

 

இரவு நேரம்.மெல்லிய பனி தூறிக் கொண்டிருக்க,மொட்டை மாடியில் நின்று இருந்தவளின் விழிகளில் மெல்லிய நீரேற்றம்.

 

உணர்வுகளின் பேரலை அவளை அடித்துச் செல்ல,விரும்பியே அதில் தத்தளித்தாள்,தென்றல்.

 

அவனைக் காணப் போகிறோம் என்பதே,அவளுக்கு போதும்.இந்த ஒற்றை எதிர்ப்பார்ப்பே,அவளின் ஆயுள் ரேகை தீரும் வரை அவளை இழுத்து வைத்திட தாராளமாய் போதும்.

 

நெஞ்சம் விம்மி வெடித்திட,சத்தமாக அவ்விடம் நிறைந்திடும் வண்ணம் கூச்சலிட வேண்டும் போல இருந்தது.அவ்வளவு ஏக்கமும் தவிப்பும் மனதில்.

 

ஒரு கட்டத்தில் விழிகள் கலங்கி,கண்ணீர் வழியப் பார்த்திட,இமை சிமிட்டி அடக்கிக் கொண்டவளுக்கு,அவனுக்கான உணர்வலைகள் இத்தனை தூரம் தன்னை ஆட்டுவிக்கும் என்று நினைத்ததே இல்லை.

 

மெல்ல தன்னை ஆசுவாசப் படுத்தியாவாறு அவ்விடத்தில் தரித்திருக்க,மனம் முழுவதின் அவன் நினைவுகளில் தூறல்.

 

இங்கோ,

 

கட்டிலில் படுத்தவாறு விட்டத்தை வெறித்திருந்தான்,டாக்டர்.மூன்று நாட்கள் விடுப்பு எடுத்தவனுக்கு நாளை காலை மட்டும் மருத்துவமனை சென்று வர வேண்டியிருந்தது.

 

அவனுக்கோ,தான் எடுத்திருக்கும் தீர்மானம் சரியா என்கின்ற குழப்பம்,இந்தச் சமயம்.

தென்றலை மணக்க சம்மதம் சொல்லி வீட்டினருக்கு எதிர்ப்பார்ப்பை தந்து விட்டு,அவனே அவள் காதலைத் தேடி,அவளைக் கூட்டிச் செல்வது மனதை நெருடியது.

 

ஒருவேளை அவளின் நம்பிக்கை பொய்யாகாமல்,அவளின் அவன் திருமணம் செய்யாது இருந்தால்,அதற்கடுத்த என்னவென்று யோசித்திடும் போதே தலை வலித்தது.

 

அவளின் அவன் திருமணம் செய்திருந்தால்,அவர்கள் இருவரினும் திருமணம் தங்கு தடையின்றி நடந்திடும்.அதில் மாற்றுக் கருத்து இல்லை.அவன் திருமணம் செய்து இருக்காவிடின்..?

 

அவளைத் தான் கட்ட வேண்டும் என்றெல்லாம் கிடையாது.அவளைக் கட்டினால் தன்னை புரிந்து கொள்வாள் என்று நினைத்திருக்க,அதனால் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்திட வேண்டி வந்தாலும்,அவனுக்குள் பெரிய ஏமாற்றம் இருந்திடாது என்பது தான்,அவனின் எண்ணம்.

 

ஆனால்,வீட்டினர்..?!

அவர்களை நினைக்கையிலே பாவமாக இருந்தது,டாக்டருக்கு.அன்பரசனை சமாளிப்பதை யோசித்துப் பார்த்திடக் கூட முடியவில்லை,அவனால்.

 

எப்படியாவது சமாளிப்போம் என்கின்ற எண்ணத்துடன் தூங்கிப் போனான்,வெகு நேரம் கழித்து.

 

மறுநாள்,

 

டாக்டரின் அறைக்கு வெளியே தென்றல் நின்றிருக்க,உள்ளிருந்த மருத்துவரிடம் அவன் பேசுவது இவளின் செவியில் விழுந்தாலும்,சிந்தையை எட்டவில்லை.

 

“டாக்டர் இந்த கேன்ஸர் வர ஜெனடிக்ஸும் ரீசனா இருக்கலாம்..இது டிவியேட்டான கேஸ்..மோஸ்ட் ப்ராபப்லி அப்பாவுக்கோ அம்மாவுக்கோ இருந்தா புள்ளங்களுக்கு வர சான்ஸ் இருக்கு..ஆனா நீங்க கேக்கற மாதிரி க்யூர் பண்ணலாம்னா சொல்லத் தெரில..மோஸ்ட்லி இந்த கேன்ஸர் இருக்குறவங்களோட லைஃப் டைம் கம்மி தான்..பட் ட்ரீட்மண்ட் மூலமா ஒரு ஆரேழு வருஷம் இழுத்து பிடிக்கலாம்..” என்க,கையில் கோப்புடன் அமர்ந்து இருந்தவனின் முகம் வெளிறியது.

 

டாக்டரின் விழிகளும் மருத்துவரின் விழிகளும் ஒருமிக்க,அவனில் படிய கலங்கிய விழிகளை மெல்ல சிமிட்டிக் கொண்டான்,அந்த வாலிபன்.

 

“அதுவும் இவருக்கு கேன்ஸர்னு சீக்ரமா டையக்னோஸ் பண்ணி இருக்குறதுனால தான்..ட்ரீட்மண்ட் மூலமா ஒரு ஏழெட்டு வருஷம் இழுத்துக்கலாம்..பப் வன் திங்..எல்லாம் நம்ம கைல இல்ல..” என்கவும்,அந்த வாலிபனின் விழிகளில் மெல்லிய நம்பிக்கை கீற்று.

 

“இப்டி ஒரு பேஷண்ட் முன்னவும் என் கிட்ட வந்தாங்க..அவங்களுக்கு எந்த ட்ரீட்மண்டும் வர்க் ஆகல..த ஸ்டேஜ் பிஃபோர் லாஸ்ட் ஸ்டேஜ்..”

 

“நாங்க கூட முடியாது எதுவும் பண்ண முடியாதுன்னு தான் சொன்னோம்..பட் அவங்க ஃபாரின்ல போய் ட்ரீட்மண்ட் எடுத்து கிட்டாங்க..எங்க எடம்னு தெரியல..அவங்களுக்கு கடவுள் நம்பிக்கயும் ஜாஸ்தி..ஒன்னர வருஷம் ட்ரீட்மண்ட்..நவ் ஷீ ஈஸ் கம்ப்ளீட்லி ஃபைன்..” என்கவும் தான்,அவனின் முகத்தில் உயிர்ப்பே வந்தது.

 

“டாக்டர்ஸ் நாங்களும் மனுஷங்க தான்..எங்களால முடிஞ்சத பண்ணுவோம்..பட் எல்லாத்தயும் தாண்டி கடவுள்னு ஒருத்தர் இருக்காரு..டோன்ட் லோஸ் யுவர் ஹோப்..போகப் போக பாக்கலாம்..” அவனுக்கு நம்பிக்கை அளித்திடவே,சிறு ஆசுவாசத்துடன் கிளம்பினர்,அந்த வாலிபனும் அவருடன் வந்த மருத்துவரும்.

 

அவர்கள் கடந்து சென்றது கூட உரைத்திடாமல்,அலைபேசியில் கவனம் பதித்து இருந்தான்,தென்றல்.டாக்டர் வெளியே வந்ததைக் கூட அவன் கவனித்திடவில்லை.

 

“தென்றல்..” அழுத்தி அழைத்திடவே சுயம் தெளிந்தாள்.

 

அவள் விழிகளில் தெரிந்த எதிப்பார்ப்பும் உயிரப்பும் டாக்டருக்கு சிரிப்பைத் தந்திட்டன.”ஓவர் லவ்ஸு” என நக்கலாக நினைத்திடவும் செய்தான்.

 

“எல்லாரும் வந்தாச்சு தான..? அகல் எங்க..?”

 

“அகல் அக்கா வெளில நிக்கறாங்க..ஸ்ரீ வந்துட்டா..வாசு அண்ணா வர பத்து நிமிஷம் ஆகும்னு சொன்னாரு..”

 

“ம்ம்ம்ம் வா..” என்றவனின் பின்னூடு அவள் நடந்தாள்.

 

“எல்லாம் ஓகே தான..” என்று கேட்டவாறு வண்டியைக் கிளப்பினான்,டாக்டர்.அவனுக்கு பக்கத்தில் வாசு அமர்ந்திருக்க,பின்னிருக்கையில் பெண்கள் மூவரும்.

 

நடுவில் அமர்ந்திருந்த அக்லயாவின் பாடு தான் திண்டாட்டமாகியது.அவளின் மகனோ சட்டமாய் தென்றலின் மடியில் அமர்ந்து இருந்தான்.

 

“கெளம்பலாம்..” என்று வாசு சொல்ல,வண்டி கிளம்பியது,புதிதாய் ஒரு பயணத்துக்கு.

 

சில பாதைகளால் பயணம் மாறலாம்!

சில பயணங்களே பாதையெனவும் ஆகலாம்!

 

காதல் தேடும்.

 

2025.04.20

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இந்த பயணம் எங்க போய் முடியுமோ … சஸ்பென்ஸா இருக்கு …