
விடியும் முன்..!
அத்தியாயம் 16
கன்னத்தில் கை வைத்து உக்கிரமாக முறைத்த பையனோ மறுநொடியே அவளின் கன்னத்தை பதம் பார்க்க வாங்கிய அறையில் பொறி கலங்கினாலும் கன்னத்தை ஒற்றைக் கரத்தால் பொத்திய அதே கோபத்தோடு தான் பார்த்திருந்தாள்,பையனை.
அவளின் நிமிர்வான பார்வையில் இவனுக்கு இன்னும் கோபம் பற்றி எறிந்தது.தந்தை கூட கை நீட்டி அடித்ததில்லை.ஆனால்,இவள் அடிக்கடி அவனுக்கு அடி மட்டுமல்லாது அறையுமல்லவா கொடுக்கிறாள்.அந்த கோபமோ என்னவோ..?
சிங்கமென கர்ஜிப்பவனை சில்லறைத் தனமாய் கணக்கெடுப்பவளை சமாளிக்கும் வழி சத்தியமாய் அவனுக்கு தெரியவில்லை.
“என்னடி திமிரா..? இன்னொன்னு வச்சேன்னு வை பல்லு ஒடஞ்சு கைல வந்துரும்..வாய மூடிட்டு இரு..”
“யோவ் என்னய்யா அதட்ற..நீதான் தப்பு பண்ண என் பர்மிஷன் இல்லாம என் டயரிய உனக்கு யாரு எடுக்க சொன்னா..? மேனர்ஸ் இல்லாத பக்கி..”
“இட்ஸ் பைன்ன்ன்ன்..வார்த்தய பாத்து பேசு மித்ரஸ்ரீ..”பற்களுக்கிடையில் வார்த்தைகளை கடித்து துப்பியவனின் முகம் கோபத்தில் சிவந்திருக்க வேறு யாரேனும் பார்த்திருந்தால் சத்தியமாய் நடுக்கம் பிறந்து விடும்.ஆனால்,தாலி வாங்கிக் கொண்டவளுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது தான் அவர்கள் வாழ்வின் நிதர்சனம்.
“தப்ப நீ பண்ணிட்டு நா பாத்து பேசனுமாடா..கிறுக்கு பய..உன்ன்ன்ன்ன்ன்ன்ன்னெல்லாம்ம்ம்ம்ம்ம்..” ஏதோ சொல்ல வாயெடுத்தவளுக்கு கோபத்தில் மூச்சு வாங்கியது.
“என்னடி..? என்னடி..? உன்ன கட்டிகிட்டது தான் நா பண்ண பெரிய தப்பு..அன்னிக்கு புடிச்ச தர்த்ரம்..இன்னி வர இருக்கு..ச்சை”
“பேசுவீங்க பேசுவீங்க..நீங்க வந்ததால என் வாழ்க்கைல நொழஞ்சது சனி..உங்கள கட்டிகிட்டேன் பாருங்க எனக்கு நானே செருப்பால அடிக்கனும்..இல்ல செருப்பால அடிச்சாலும் பத்தாது..இவனெல்லாம் எதுக்கு தான் கல்யாணம் பண்ணி வச்சாங்களோ..பைத்தியக்கார குடும்பம்..” சந்தடி சாக்கில் குடும்பத்துக்கும் திட்டு விழுந்தது.
“வாய மூடிட்டு போய்த் தொல..மூஞ்சி முன்னாடி நின்னுகிட்டு எரிச்சல் பண்ணிட்டு இருக்காம..” கோபத்துடன் மொழிந்து விட்டு அவன் அமர்ந்து கொள்ள ஏன் சண்டையைத் துவங்கினோம் என்கின்ற காரணம் பெண்ணவளுக்கு மறந்து தான் போயிருந்தது.
“உன் முன்னாடி இளிச்சிகிட்டு நிக்கனும்னு எனக்கு என்ன வேண்டுதலா..? நீ தான் டா என் கூட ட்ரெயின்ல வந்த கிறுக்கு..” இருந்த பையை தூக்கி எடுத்தவளை உறுத்து விழித்தான்,பையன்.
“என்ன மொறப்பு வேண்டிக் கெடக்கு..நீங்க மொறச்சா நாங்க பயந்துருவோமா..சில்லி ஃபெலோ..” உதட்டை சுளித்து சொல்ல இந்த வாய் அடங்காதா என்றிருந்தது,அவனுக்குள்.பின்னே,அவனுக்கும் ஆயாசமாய் இருக்கிறதே.
“வாய்லே ஒன்னு போட்டுரப் போறோன்..மூடிட்டு போய்ரு..” கோபமாய் மொழிந்தவனை அலட்சியமாய் பார்த்த அவள் விழிகளை ஒரு கணம் ரசிக்கவே விழைந்தது,பையனின் காதல் மனம்.
என்ன தான் அவளிடம் இயல்பாய் காட்டிக் கொண்டாலும் அவளிடம் வீழ்ந்து கிடப்பது அவன் உணர்ந்திராத உண்மை அல்லவா..?
“கண்ண உருட்டாம போடி..”
“என்ன கண்ணு என்ன உருட்டுக் கட்டயா உருட்டிட்டு இருக்க..சும்மா தான் பாத்தேன்..உங்கள பாத்து ஒன்னும் கண்ண உருட்டல..” சிலுப்பிக் கொண்டு கடந்து செல்ல அத்தனை கடுப்பிலும் தனை மீறி மெலிதான புன்னகையை தேக்கிக் கொண்டன,அவனிதழ்கள்.
“பொண்ண கட்டி வைங்கன்னா பேய கட்டி வச்சிருக்குங்க..”
“மாப்ள பாக்க சொன்னா மான்ஸ்டர் பாத்து கல்யாணம் பண்ணி வச்சிருக்குங்க பைத்தியக்காரங்க..”என இருவரின் இதழ்களும் உச்சரித்துக் கொண்டன,ஒரே நேரத்தில்.
சலித்துக் கொண்டாலும் சரிக்கு சமமாய் சண்டை போட்டாலும் விட்டுப் பிரிய இருவரும் ஒரு போதும் நினைத்தது இல்லை.அது தான் அவர்களின் காதல்.
சற்று வித்தியாசம் தான்.எல்லா காதலும் ஒன்று போலா இருந்திடப் போகிறது..?
●●●●●●●●●
நேரம் மணி ஒன்று முப்பது.
புழுதியைக் கிளப்பிக் கொண்டு அந்த பெரிய வீட்டின் முன்னே வந்து நின்ற வண்டியில் இருந்து கம்பீரமாய் இறங்கினார்,மனிதர்.
ஊருக்கே உரிய பாரம்பரிய அம்சங்களுடன் கட்டபப்ட்ட வீடது.கூட்டுக் குடும்பமாய் அவர்கள் வசிக்கவே மொத்த உழைப்பையும் போட்டு விசாலமாய் கட்டியிருந்தார்,அவரின் தந்தை.
ஏதேதோ காரணங்களால் அவரும் அவரின் குடும்பமும் வெளியூரில் வசித்தாலும் சொந்த பந்தங்கள் இந்த ஊரில் தான் இருந்ததே.
இப்போதும் ஊருக்கு வந்திருப்பது எத்தனையோ வருடங்களுக்கு பிறகு தான்.ஓரிரு முறை வந்து சென்றாலும் பிள்ளைகளை இதற்கு முன் தேவைக்கென்றாலும் வர விட்டதில்லை.
கண்டிப்பானவர் இல்லையென்றாலும் அவரின் பிள்ளைகளின் பாதுகாப்பு முக்கியம்.
வேட்டியை தூக்கிப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவரின் செவிகளை அடைந்த சிரிப்பு சத்தம் அத்தனை நிறைவைத் தந்ததிட இத்தனை நாள் இதை தொலைத்து விட்டோம் என்கின்ற ஏக்கமும் இல்லாமல் இல்லை.
இருந்தாலும் என்ன செய்ய..? விதியை குற்றம் சொல்ல முடியாதே.
கை கால்களை கழுவிக்கொண்டு சமயலறைக்குள் நுழைய அங்கே பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார்,அவரின் மனைவியான ஆரவள்ளி.
“என்னம்மா நீ மட்டும் இருக்க..? மத்தவங்க எங்க..?”
“இப்போ தான் பொய்ட்டு வர்ரேன்னு போனாங்க..சமயல அவங்க தான் பாத்தாங்க..நா பாத்தரம் தான் தேச்சுகிட்டு இருக்கேன்..”
“ம்ம்..அப்டியா..? சரி விடு நா கழுவறேன்..”
“எதுக்கு வேலய ரெண்டாக்கி வச்சவா..?”
“ஒரு வேல பண்ணித் தர விட மாட்டியே..” சலிப்புடன் சொன்னவரை திரும்பிப் பார்த்து முறைத்தாலும் இதழ்களில் மெல்லிய முறுவல்.
“ஆமா..பெரியவன் எப்போ வர்ரானாம்..?”
“அன்னிக்கி சொன்னானேங்க..இன்னிக்கு தான் வர்ரதா..சீக்கிரம் வர பாக்கறேன்னு சொன்னான்..ஆனா வேலயா இருந்தான் போல..”
“சரிம்மா..நா கொஞ்சம் தூங்கறேன்..ரெண்ட்ர மணிக்கு எழுப்பி விடு..” என்றவாறு அறைக்குள் நுழைந்தார்,ரவிவர்மன்.
மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்தவரின் செவிகளை நிறைத்த கொலுசு சத்தத்தை கேட்டதும் திக்கென்றது.
உள்ளுக்குள் உளறிக் கொட்டி விடக் கூடாது என்கின்ற கலவரம் எழுந்திட கொஞ்சமாய் அதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது,அவர் முகம்.
“அத்த..”
“என்னம்மா..?”
“அத்தான் எப்போ வருவாரு..?” துள்ளலான குரலில் வெட்கமும் இழையோட அவள் கேட்க ஆரவள்ளி விழி பிதுங்கிற்று.
“இ..இன்னிக்கு வந்துருவேன்னு சொன்னான் மா..” திணறிய படி சொன்னவருக்கு அவன் வந்தால் நடைபெறும் கலவரத்தை நினைத்தால் இப்போதே பயம் தான்.
“யெஸ்ஸ்ஸ்ஸ்..அப்போ ரிஷி அத்தான் இன்னிக்கி வந்துருவார்ல..” துள்ளிக்குதித்த படி ஓடியவளை பாவமாய் பார்த்திருந்தார்,ரிஷிவர்மனின் தாயானவர்.
●●●●●●●
சம்பவ இடத்தில் காவல் துறையினர் வந்து சேர ஆங்காங்கே நடந்திருந்த கொலைகளை விசாரித்தே அவர்களுக்கும் அலுத்துப் போயிருக்கும் என்பது உறுதி.
செழியன் மறவாது மெக்கானிக்கை அழைத்து வந்திருக்க பேரூந்தை சரி செய்து உடன் வந்தவர்களை பாலாவின் பொறுப்பில் அனுப்பி விட்டிருக்க யன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தர்ஷினிக்கு அலுப்பாய் இருந்தது.
இடையிடையே சத்யாவின் வதங்கிய தோற்றம் மனதில் எழுந்து மறைய ஏதோ கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.
அந்த சூழ்நிலையிலும் உடன் வந்த தம்மை பாதுகாப்பாக ஊருக்குள் அனுப்பி வைத்தவனின் செயலை மெச்சாமல் இருக்க முடியவில்லை,அவளால்.
நடநத் களேபரத்தில் அனைவரும் ஒரு வித சங்கடத்தில் தத்தளித்துக் கொண்டிருக்க ஒரு வித கனத்த அமைதி பேரூந்தில் அமர்ந்தவர்களிடையே.
தர்ஷினியின் அருகில் யாரும் இல்லாதிருக்க முன்னே அமர்ந்து தமக்குள் சலசலத்துக் கொண்டிருந்த தோழியருடன் இணையவும் மனம் வரவில்லை.
வெளியில் பார்வையை அலைய விட்டவளுக்கு பாதையின் இரு புறமும் வரண்டு கிடந்த தரை அத்தனை உவப்பானதாய் இல்லை.கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆங்காங்கே சில பெரிய நிறங்கள் பச்சை நிறமாய் நின்றிருக்க அதிகமாய் அவ்விடத்தை ஆக்கிரமித்திருந்தது என்னவோ முட்புதர்கள் தான்.
நேரத்தை பார்க்க தாம் தங்க வேண்டிய இடத்தை அடைய இன்னும் அரை மணி நேரமாவது எடுக்கும் அலுப்புடன் மூச்சொன்றை இழுத்து விட்டவளுக்கு அலைபேசியில் நோண்டவும் எண்ணமில்லை.
கையில் காய்கறிக் கூடையுடன் பெண்ணொருவர் பேரூந்தை நிறுத்துமாறு பாலாவின் சம்மதத்துடன் பேரூந்தை நிறுத்தி இருந்தார்,சாரதி.
அந்தப் பாதையில் வேறெந்த பேரூந்தும் வருவதற்கு சாத்தியம் இல்லை எனத் தெரிந்த பாலாவுக்கு உதவி கேட்டவரை புறக்கணிக்கவும் மனம் வரவில்லை.
கூடையுடன் ஏறிய பெண்மணியோ சாரதிக்கு நன்றி கூறி விட்டு தர்ஷினியின் அருகே வந்தமர அவரைப் பார்த்து மென்மையாய் விரிந்தன,அவளிதழ்கள்.சட்டென அனைவரிடமும் பழகிவிடும் ரகம் அவள்.
“எங்ம்மா போறீங்க..? எங்க ஊருக்கா..? இல்லன்னா இந்த ரோடு வழியா வேற ஊருக்கா..?”
“ரணதீர புரம் அங்க தான் கா..”
“அது நம்ம ஊரு தா மா..அங்க எதுக்கு போறீங்க..?”
“அங்க ஒரு கோயில் இருக்காமே..அத கோயில்ல ஆராய்ச்சி ஒன்னு இருக்கு படிப்பு சம்பந்தமா..”
“என்னது அந்த கோயிலுக்கா..?” என்றவரின் குரலும் விழிகளும் ஒருசேர பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தின.
“எதுக்குகா அதுக்கு இவ்ளோ ஷாக் ஆகறீங்க..”
” உசுரு காவு வாங்குன கோயில்மா அது..”
“என்னக்கா சொல்றீங்க..?”
“ஆமாம்மா..”
●●●●●●●●
“பைத்தியமா நீ..? என்ன காரணம் பண்ண பாத்துருக்க..?” கை முஷ்டி இறுக கத்திக் கொண்டிருந்த அருளை பார்க்க பயமாய் இருந்தாலும் உதடு கடித்து தன் அழுகையை அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள்,சாகித்யா.
அவன் அறைந்த இடம் கன்றிச் சிவந்திருக்க கன்னத்தில் கண்ணீர் வழிந்த கறையும் இருந்தது.
“அருள்..அமைதியா இருடா..கொஞ்சம் நிதானமா பேசிக்கலாம்..” தோழனின் கோபம் புரிந்தவனாய் அதை தணிக்க முயன்று கொண்டிருந்தான்,அன்பரசன்.
ஆனாலும்,அருளுக்கு கோபம் அடங்குவேனா என்றிருந்தது.அவள் செய்யத் துணிந்த காரியம் அவனை அசைத்துப் பார்த்தாலும் அதற்கு மேலாய் கோபம் அல்லவா வந்து நின்றது..?
அண்ணனுடன் பேசச் சென்றவனுக்கு அழைப்பு வர சொல்லப்பட்ட செய்தியில் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தவனின் மனநிலையை துல்லியமாக புரிந்து கொள்ள அவனைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.
அவனின் பதட்டம், கோபம்,ஆற்றாமை மொத்தமும் அவள் மீது அறையாய் இறங்கியதென்பதில் சந்தேகமில்லை.
கொலையை பார்த்து மிரண்டு போயிருந்தவனுக்கு சாகித்யா செய்யத் துணிந்திருந்த காரியம் கொலை பற்றிய மொத்த நினைப்பையும் விரட்டி விட்டிருந்ததே.
“பைத்தியமா உனக்கு..? அந்த நர்ஸ் மட்டும் பாத்துருக்கலனா உன்னோட நெலம என்ன ஆகறது..? மனிஷனுக்கு ஆயிரம் டென்ஷன் இருக்கும்..நீ போன் பண்ண டைம் ரொம்ப டென்ஷன்ல இருந்தேன்..அதான் காட்டுக் கத்து கத்துனேன்..அதுக்குன்னு இப்டி பண்ணுவியா..? பைத்தியம் புடிச்சிருக்கா உனக்கு..?”
“……………..”
“இத எங்க இருந்து எடுத்த..? மெடிகல் ஸ்டூடன்ட் தான நீ..? கொஞ்சமாச்சும் அறிவில்ல..அப்டியே இன்னும் நாலு அற விடனும்னு தோணுது..” என்றவனுக்கு கோபத்தை அத்தனை எளிதாய் அடக்கிக் கொள்ள முடியாது போக குறுக்கும் நெடுக்கும் நடக்கத்துவங்கின,அவன் பாதங்கள்.
“உன்னத் தான் கேக்கறேன்..எங்க இருந்து இத எடுத்த..?” என்றவனோ கையில் இருந்த சிறு குப்பியை வீசி அடிக்க அது சுவற்றில் பட்டு உடைந்து சிதறியது.
“உன்னத் தான் கேக்கறேன்..சொல்லு..”மீண்டுமாய் அவன் கர்ஜிக்க தோழனுமே ஒரு கணம் அதிர்ந்து விட்டான்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது அவன் விடயத்தில் நூறு வீதம் ஒத்துப்போனது.
“எ..எங்க டா..டாக்டர் சகாவோட ரூம்ல இருந்து.. தான் எடு..” சொல்லி முடிக்கும் மீண்டும் ஒரு அறை பளாரென அவள் கன்னத்தில்.
அன்புக்கும் அருள் கை நீட்டுவது தவறாய்த் தோன்றினாலும் அவன் தரப்பில் இருந்து யோசிக்கையில் அது நியாயமாகவே இருந்தது.
அவனுக்காக அவளின் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தவளின் மீது ஆத்திரம் வராமல் இருந்தால் தான் அதிசயம் என்கின்ற எண்ணம்.
கண்ணீருடன் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தவளை பார்க்க ஆடவனின் மனம் நெருடினாலும் ஏதும் பேசாமலே கிளம்பிச் சென்றான்,அருள் வேலவன்.
●●●●●●●●●
அறைக்குள் நுழைந்த சங்கீதாவுக்கு வந்து சென்ற ஆத்ரேயனின் பெற்றோரைக் கண்டதும் கேளாமல் அவனின் நினைவுகள் மனதில் துளிர்க்கத் தான் செய்தது.
கட்டிலின் அடியில் வந்தமர்ந்தவளுக்கு தன் மனதை திசை திருப்ப வேண்டியிருக்க தினக்குறிப்பின் பக்கத்தை புரட்டினாலும் முன்னர் இருந்த துள்ளல் இப்போது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆனாலும்,வாசிக்கத் துவங்கியவளோ அதில் மூழ்க ஆரம்பித்திருந்தாள்.
*”ப்ச்ச்ச்..அஷோக் வேற இது தான் அந்தப் பொண்ணுன்னு காட்டித் தர்ரப்போ அவ மறஞ்சு பொய்ட்டாளே..ரோடுன்னும் பாக்காம ஓடிப் போனாலும் ஐ மிஸ்ட் ஹர்..அவ யாருன்னு பாக்க முடியல..ஆனாலும்,பாத்துருக்கலாம்னு தோணுது..தோணுதுங்குறத விட மனசு கேக்குது..ம்ஹும் அத விட ஏங்குதுன்னு சொல்லலாம்..யெஸ்ஸ்ஸ்ஸ்..இட்ஸ் ட்ரூ அவள பாக்கனும்னு மனசுல சின்னதா..சின்னதே சின்னதா ஒரு ஏக்கம்..பட் இந்த ஏக்கம் லவ் கெடயாது..*
*”ஆனா பொண்ணே நீ எப்டி இருப்ப..? அவ எப்டிருந்தா எனக்கென்ன..? நா எதுக்கு அவ எப்டி இருப்பான்னு யோசிச்சுகிட்டு இருக்கனும்..ஆனா…”* என்பதோடு நிறுத்தியிருக்க அந்தப்பக்கத்தில் வேறேதும் இல்லை.
அடுத்த பக்கத்தை புரட்ட அதில் வேறு நிற பேனா மை.சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் எழுதத் துவங்கினானோ..? இல்லையென்றால் வேலையேதாவது வந்ததால் நிறுத்தி விட்டு சென்று வந்து தொடக்கினானோ என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை.
*”ம்ம்ம்ம்..ஆனா அவ எப்டி இருப்பான்னு பாக்கனும்னு தோணுது..லைட்டா தான் மனசுல அந்த எண்ணம்..ஆனா அவ இன்சைட்ல ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ப அழகா இருப்பான்னு தோணுது..இல்லன்னா அவள பத்தி யோசிக்காம என்ன வந்து காப்பாத்தி இருக்க மாட்டாளே.. சரி தான பொண்ணே..?”*
*”அட பொண்ணே டெய்லியும் தான் எழுதுறேன் உன்ன பத்தி..நீ என்ன என்னமோ பண்ற போ..”*
தொடரும்.
🖋️அதி..!
2024.03.26

