
முதலும் முடிவும் இன்றி நிற்கும் இந்த சிக்கலுக்கு தீர்வு காண, முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றாள் நிலா.
அதோடு இதை யார் செய்தார்கள் என்று எப்படி கண்டு பிடிப்பது? அன்றே தெரிந்திருந்தால் கூட, ஏதாவது ஒரு சில தடயங்கள் கிடைத்திருக்கும், இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு, எங்கிருந்து இதை ஆரம்பிப்பது? என்று தெரியாமல் குழம்பித் தவித்தாள்.
அதை விட, தனது பக்கம் இருக்கும் நியாயத்தை அவனிடம் எப்படிச் சொல்லி புரிய வைப்பது, என்று நிலாவிற்கு தெரியவில்லை. அவனும் ஆபீஸில் அதே நிலையில் தான் இருந்தான். தலையை பிடித்தபடி நாற்காலையில், கண் மூடி அமர்ந்திருந்தவனின் நினைவுகள், பின்னோக்கி சென்று கொண்டிருந்தது.
முதல் முதலாக அவளைப் பார்த்த போதே, நிலாவின் முகம் அவன் மனதிற்குள் பதிந்து விட்டது. இன்னொரு பெண்ணோடு நாளை திருமணத்தை வைத்துக் கொண்டு, இப்படி ஒரு உணர்வு தனக்கு தோன்றுவது நல்லதல்ல என்று எண்ணியவன், அவளது நினைவுகளை தன் மனதிற்குள்ளேயே புதைக்க முயற்சித்தான்.
ஆனால் அடுத்தடுத்த நடந்த நிகழ்வுகள், அவனது திருமணத்தை மட்டுமல்ல அவன் வாழ்வையே மாற்றி அமைக்க, தேற்றுவதற்கு தன் அன்னையும் அருகில் இன்றி தவித்தவனுக்கு, இனிமையான அவளது நினைவுகள் மட்டுமே, மனதிற்கு இதமான பசுமையான சாரலாக இருந்தது.
தினம் தினம் தொழிலில் பல போராட்டங்களையும், தனது அன்னையின் நிலையையும் கண்டு வாடியவன், தூக்கமின்றி தவித்த போது, வரமாக வரும் அவளது நினைவுகள் மட்டுமே, அவனுக்கு நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்தது.
ஆனால் தான் யாரை பழி வாங்க வேண்டும் என்ற, ஒரே நோக்கத்தோடு தேடிக் கொண்டிருக்கிறோமோ, அவள் தான் தன் மனம் கவர்ந்தவள் என்று அவனுக்கு தெரிந்த பிறகு, அவளது நினைவுகளே அவனுக்கு சாபமாக மாறி விட்டது.
அதுவும் கூடிய விரைவில் அவளுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தெரிய வர, தனது திருமணத்தில் தவறு எதையுமே செய்யாமல், தான் அவமானப் பட்டு நின்றது போல், அவளும் தன் குடும்ப உறவுகள் தோழமை என்று அனைவரின் முன்பும், தலை குனிந்து நிற்க வேண்டும் என்று எண்ணினான்.
இவளைப் பற்றி தெரிந்த பிறகு, தனது தூக்கத்தை மொத்தமாக தொலைத்தவன், அவளை பழி வாங்க வேண்டும் என்ற நினைவிலேயே, எப்போதும் இருந்தான்.
முதலில் தனது திருமணத்தை அவள் என்ன திட்டம் போட்டு, எப்படி நிறுத்தினாளோ, அதே போல அவளது திருமணத்தையும் நிறுத்த வேண்டும், என்ற ஒரு எண்ணம் மட்டுமே, அவனுக்கு இருந்தது. ஆனால் அவனது மனதுக்குள் இருந்த அவளது நினைவுகளும், அவள் மீது அவன் மனம் கொண்ட நேசமும் தான், அவளை திருமணம் செய்ய வைத்ததோ என்று அவனுக்குள்ளேயே ஒரு கேள்வி, அவனை போட்டு குடைந்து கொண்டிருந்தது.
ஆபீஸில் அவளது நினைவுகளோடு போராடியவன், அதில் இருந்து வெளி வர, தன் அன்னையை தேடி வீட்டுக்கு வந்தான்.
அவன் வீடு திரும்பிய போது இரவாகி இருந்தது, நிலா தோட்டத்தில் தீவிர சிந்தனையோடு நடந்து கொண்டிருந்தாள். வெகு நேர யோசனையில் அவளது மூளைக்குள், ஒரு யோசனை தோன்றிட, அதை எவ்வாறு நடைமுறை படுத்துவது என்ற சிந்தனையில் தான், அவன் வந்தது கூட தெரியாமல் நடந்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் அவளை பார்த்துக் கொண்டிருந்தவனின் மனம், அவள்புறம் செல்வதை உணர்ந்து, தன்னை தானே திட்டியபடி, தலையை உலுக்கி விட்டு தனது அன்னையை காணச் சென்றான்.
செல்லம்மா சிவகாமி அம்மாவின் கால்களுக்கான, உடற்பயிற்சியை செய்து கொண்டிருக்க, அன்னையின் அருகே அமர்ந்தவனோ, அவரது கால்களை தனது மடியில் தாங்கிக் கொண்டு, அவனே அவருக்கு உடற்பயிற்சி செய்யத் தொடங்கினான்.
அதே நேரம் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த சூர்யா,
“விஷ்வா உனக்கு என்ன பைத்தியமா? என்ன வேலை பார்த்து வச்சிருக்க? முதல்ல நீ போட்ட பிளான் என்ன? இப்ப நீ செஞ்சு வச்சிருக்க காரியம் என்ன டா?”
செல்லம்மா நாகரீகம் கருதி அங்கிருந்து வெளியே சென்று விட, தனது அன்னையின் கால்களை அசைத்துக் கொண்டிருந்தவனோ,
“அப்படி நான் என்ன செஞ்சுட்டேன்?”
“என்ன செஞ்சிட்டியா? அந்த பொண்ணால தான் உன் கல்யாணம் நின்னு, நம்ம குடும்பத்தோட பேர் கேட்டு போயி, நீ இங்க தனியா வந்திருக்க. அப்படிப்பட்டவளை எதுக்காக நீ கல்யாணம் பண்ணி இருக்க? அவளோட கல்யாணத்த நிறுத்தி, அவங்க அப்பா அம்மா முன்னாடி, அவ முகத்திரையை கிழிக்கிறது தானே உன்னோட பிளானா இருந்தது, அப்பறம் எதுக்காக அவள கல்யாணம் பண்ணி இருக்க?”
“அம்மாவுக்கு இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டு வருது, அவங்களுக்காக தான், நான் இனி மிதிக்கவே கூடாதுன்னு நினைச்ச பாண்டியன் இல்லத்துல கால் வைக்கப் போறேன்.
ஆனா உன் தாத்தா தான், இவளோட தான், இனி நான் வீட்டுக்குள்ள வரணும்னு சொல்லி, என்னை வெளிய தொரத்திட்டாரே? அப்பறம் அவ இல்லாம நான் மட்டும் எப்படி அந்த ஊருக்குள்ள நுழைய முடியும்?”
“எது? டேய் மாப்ள அன்னைக்கு அவர் ஏதோ கோபத்துல, தெரியாம வாயில வந்ததை பேசிட்டாரு? அதுக்காகவா நீ அந்த ப்ராடை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்க? உன்னோட வாழ்க்கை என்னடா ஆகறது?”
“அது மட்டும் காரணம் இல்ல சூர்யா, அம்மாவுக்கு ஒருவேளை சுயநினைவு வந்தா, அவங்ககிட்ட நடந்த உண்மைகளை சொல்லணும், அதுக்கு இவ வேணும். இப்ப விட்டா அவ அவளோட அத்தை பையனை கல்யாணம் செஞ்சிகிட்டு, வெளிநாட்டுக்கு போய் செட்டில் ஆகிடுவா.
அதனால தான் அவளை கல்யாணம் பண்ணி என்னோடவே வச்சிருக்கேன், அம்மாவுக்கு மட்டும் நினைவு திரும்பட்டும், அப்புறம் இருக்கு அவளுக்கு.”
“நம்ம குடும்பத்தையே சிதைச்சு, இப்படி உன் வாழ்க்கையை பாழாக்குனவள, எனக்கு சப்பு சப்புன்னு அறையத் தோணுதுடா.”
தனது தாயின் காலுக்கான பயிற்சியை முடித்தவன், அவரை நன்றாக படுக்க வைத்து விட்டு, புருவத்தை உயர்த்திய படியே சூர்யாவை திரும்பி பார்த்தவன்,
“அப்படியா? அதோ தெரியுது பாரு, அந்த கார்டன்ல தான், நடைப் பயிற்சி பண்ணிட்டு இருக்கா, தைரியமா போய் சொன்னதை செய் பார்ப்போம்.”
“ஏன் எனக்கென்ன பயம்? இப்பவே அவ காதோட ஒன்னு விட்டு, எதுக்காக இப்படி செஞ்சான்னு, நியாயம் கேட்டுட்டு வரேன் இரு.”
கோபமாக ஜன்னல் கண்ணாடி வழியாக, நடந்து கொண்டிருந்த நிலாவை பார்த்தவன், அப்படியே நெஞ்சில் கை வைத்த படி, பின்னால் இருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்து விட்டான்.
“டேய் என்னடா இது? இது அந்த பொம்பள புரூஸ்லி தானே?”
“கொஞ்ச நேரத்துக்கு முன்ன, ஏதோ வீர வசனம் பேசுன? போய் ஏன் இப்படி பண்ணுணேன்னு நல்லா செவுல்லயே ரெண்டு வைச்சு கேட்டு வா மச்சான்…”
“எது? அவ மேல நான் கை வைக்கிறதா? மாப்ள அன்னைக்கு அவ ஞானத்து மேல கை வச்சதை பாத்தே, ரெண்டு நாள் எனக்கு குளிர் காய்ச்சல் வந்துடுச்சுடா, ஆனாலும் அந்த சம்பவத்தை நேருல பார்த்ததுக்கு அப்பறமும், இந்த பொண்ணு கழுத்துல தாலியை கட்டி, தைரியமா உன் மனைவியாக்கி இருக்க பாத்தியா, உன் தைரியம் யாருக்கு வரும்?
சரி அவள கல்யாணம் பண்ணது ஓகே, எந்த நம்பிக்கைல ஊருக்கு கூட்டிட்டு வர? ஏற்கனவே அந்த பொண்ணு பண்ண வேலையாள தான், நீ வீட்டை விட்டே வெளிய வந்த, அதோட இப்போ நீ அவள ஏமாத்தி கல்யாணமும் பண்ணி இருக்க, அங்க ஊர்ல நம்ம குடும்பத்துக்கு முன்னாடி, இந்த பொண்ணு எப்படி உனக்கு ஒரு நல்ல மனைவியா இருக்க ஒத்துக்கும்.”
“அதுக்கான வேலையை நான் எப்பவோ பாத்துட்டேன், இன்னும் பத்து நிமிஷத்துல, அவளே வந்து உங்க இஷ்டப்படி எல்லாம் நடந்துக்கறேன்னு, சொல்லுவா பாரு?”
அதே நேரம் கேட்டுக்கு வெளியே ரிதன்யாவின் குரல் கேட்டது. நடந்து கொண்டிருந்த நிலா, வேகமாக கேட்டை நோக்கிச் செல்ல நினைக்க, அவளது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்ட விஷ்வா, காவலாளியிடம் வெளியே நிற்கும் ரிதன்யாவை உள்ளே விடுமாறு கூறினான்.
நிலாவைக் கண்ட ரிதன்யா கண்களில் நீரோடு அவளை நோக்கி கை கூப்ப, விஷ்வாவிடம் இருந்த தனது கைகளை உதறிக் கொண்டு, அவளை நோக்கி ஓடிய நிலா, அவளது கூப்பிய கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
“சாரி நிலா, எந்த ப்ரெண்ட்டும் செய்யாத, செய்யக் கூடாத துரோகத்தை நான் உனக்கு செஞ்சுட்டேன். ஒரு நல்ல நட்புக்கு உதாரணமா நீ இருந்த, ஆனா நான்… ஒரு துரோகத்துக்கு உதாரணமா இருக்கேன், ஐ எம் சாரி நிலா ரியலி சாரி.”
“வேண்டாம் தன்யா இப்படி எல்லாம் பேசாத, இது நீயா விரும்பி செஞ்ச வேலை கிடையாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும், அதோட இதை செய்யும் போது உன் மனசு எவ்வளவு வேதனைபட்டிருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.”
இவ்வளவு நடந்த பிறகும் தனக்காக பேசும் தனது தோழியை, அழுது கொண்டே அணைத்துக் கொண்டாள் ரிதன்யா.
அவளது தோளில் சாய்ந்தபடியே அவசரமாக தனது செய்தியை, மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறிய நிலா, விஷ்வா அருகில் வருவது தெரிந்து அமைதியாகி விட்டாள்.
“ஹலோ லேடீஸ் ம்ம்ம்… இல்ல இல்ல போர் டுவென்டிஸ், உங்க டிராமாவை நிறுத்தறீங்களா? அண்ட் யூ, உன்னோட வேலை தான் முடிஞ்சுடுச்சே, அதோட உன்னோட அம்மாவும் பாட்டியும் இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பாங்களே, அப்பறம் எதுக்காக உன் பாஸை பார்க்க இங்க வந்திருக்க? புதுசா எதுவும் ப்ளேன் போடவா?”
“சார்… அது… என்னோட அப்பா இன்னும் வீட்டுக்கு வரல சார், ஜெயில்ல தான் இருக்காரு.”
“மத்தவங்க பணத்தை ஏமாத்திட்டுப் போனா, ஜெயில்ல வைச்சிருக்காம வீட்டுக்கா அனுப்பு வாங்க.”
“நீங்க… நீங்க அவரை காப்பாத்தறதா சொன்னீங்களே, அதோட அவர் எந்த தப்பும் பண்ணல. வகையா யாரோ சிக்க வச்சிருக்காங்க, நாளைக்கு அவரோட கேஸ் ஹியரிங்க்கு வர்றதா, வக்கீல் சொன்னாரு. எனக்கு விருப்பம் இல்லாட்டியும், நான் தான் நீங்க சொன்னபடி எல்லாம் கேட்டேனே, ப்ளீஸ் என் அப்பாவை காப்பாத்துங்க.”
“ நீ அனுபவிக்கிறது எல்லாமே, நீ செஞ்ச பாவத்துக்கான பலன், அதை நீ தான் தாங்கி ஆகனும். இதுக்கு மேல உன்கிட்ட பேச எனக்கு விருப்பம் இல்ல, செக்யூரிட்டி…”
என்றபடி அவன் நிலாவின் கையை பிடித்துக் கொண்டு உள்ளே செல்ல, செக்யூரிட்டி ரிதன்யாவை அங்கிருந்து வெளியேற்றி இருந்தான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அதான ரிதன்யா நீ செஞ்சதுக்கு தான் அனுபவிக்கிற … விஷ்வா லவ் வா … சூப்பர் பா … நிலாவுக்கு வரமாய் வந்த சாபம் விஷ்வா அப்படின்னு நினைச்சேன் … விஷ்வா வுக்கு வரமாய் வந்த சாபம் நிலா வா … விஷ்வா யூ ஆர் சோ ஸ்வீட் … இந்த நிலாவுக்கு உன் காதல் புரிஞ்சுட்டாலும் …
நன்றி சிஸ் 🙂