
யான் நீயே 21
“எனக்கு வீரா மாமாவைத்தேன் கட்டிக்கிடணும்” என்று கண்களை இறுக மூடி விரல்களை உள்ளங்கையில் குவித்து… மீனாள் கத்தி சொல்லிய கணம் வசந்தி அவளை அறைந்திட கையை உயர்த்திட, கூடத்தில் தள்ளி நின்றிருந்த வீரன் எத்தனை வேகத்தில் அவரின் அருகில் வந்தானோ… வசந்தியின் உயர்ந்த கை அவனது பிடியில் இருந்தது.
“அடிக்கிற உரிமை யார் கொடுத்தது?” எனக் கேட்டவன், வசந்திக்கு பின்னால் நின்றிருந்த மருதனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான்.
“தங்கச்சி பாசம் இருக்க வேண்டியதுதேன். அதுக்கு… பெத்த பிள்ளையை அடிச்சிக்கோன்னு அப்படியே நிப்பீங்களோ? அன்னைக்கு பிரேமுக்குன்னதும் அப்படி சலம்பிக்கிட்டு வந்தீய்ங்க?” என்று கேட்டு அவருக்கு வார்த்தையால் கொட்டு வைத்தான்.
மருதன் தன்னுடைய மகளை வசந்தி அடிக்க கை ஓங்கியதை உணரவே இல்லை. அவர் மீனாள் வீரனை கல்யாணம் செய்துக்க விருப்பமென்று சொன்னதிலேயே உறைந்து நின்றிருந்தார்.
இப்படி பெற்ற மகளின் ஆசை தெரியாது இருந்துவிட்டோமே என்று.
வீரன் வசந்தியை தடுப்பதற்காக அருகில் வந்த வேகத்தில் தான் அவர் சுயம் மீண்டிருந்தார்.
“அதிர்ச்சியில கவனிக்கல அமிழ்தா” என்ற மருதன், “உனக்கு அமிழ்தன் மேல விருப்பமின்னாக்கா முன்னவே சொல்ல வேண்டியதுதானேத்தா” என்றார் மகளிடம்.
மகா அபியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டார். முகம் கொள்ளா புன்னகையுடன். மீனாள் வந்து நின்ற தோற்றம்… அவள் இதில் தனக்கு சம்மதில்லை என சொல்வாளென்று தான் நினைத்தார். ஆனால், அவள் வீரனையே மணக்க விரும்புகிறேன் என்று சொல்லியதில் மகாவுக்கு அத்தனை சந்தோஷம். அபியும் மகாவுடன் சேர்ந்து உவகை கொண்டார்.
‘மீனாட்சி…’ என்று மேல் நோக்கி கரம் குவித்த அப்பத்தா… வசந்தி ஆடவிருக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்க… அவரின் எண்ணத்துக்கு மாறாக, நல்லான் வாய் திறந்தார்.
“என்ன மருதா இது. கூப்பிட்டுவச்சு அசிங்கப்படுத்துறியா?” எனக்கேட்டு முன் வந்தவர், “பொங்கல் அப்பவே பேசி வச்சதுதானே… அப்போவே உம் பொண்ணுக்கு விடயம் தெரியாதாக்கும். இப்போ இங்குட்டு வரை வந்து எங்க மூக்கு அறுக்குறா(ள்) நீயும் பார்த்துகிட்டு நிக்கிற?” என்றார்.
மருதன் அமைதியாக நிற்க,
“என்னண்ணே ரோசிக்கிற? என்னைய கை விடலாமின்னு எண்ணுறியோ?” என்று வராத கண்ணீரை சேலை தலைப்பால் ஒற்றியபடி… “என்னைய ஏமாத்திப்புடாதேண்ணே” என்றவரின் குரலில் மிதமிஞ்சிய கோபமே தெரிந்தது.
“இப்போ புடிக்கலன்னா கல்யாணத்துக்கு பொறவு புடிச்சிக்கிடும். நாம நடக்க வேண்டியதை பார்ப்போம்” என்று சொல்லிய வசந்தி… “நீங்க நிச்சய ஓலை எழுதுங்க” என்று ஐயரிடம் கூறினார்.
“வசந்தி கொஞ்சம் பொறுமையா இரும்மா” என்று மருதன் மகளின் மனம் அறிந்த பின்னர், தற்போதைய ஏற்பாட்டை நடத்த உடன்பாடில்லாது நிறுத்தவே நினைத்தார்.
“என்னண்ணே! அவென் மேல ஆசைன்னதும் உனக்கும் எம் புள்ள வேத்தாளாகிட்டானோ?” என்ற வசந்தி, “ஐயரே சொன்னதை செய்யுங்க” என்றார். கட்டளையாக.
“அய்யோ அத்தை உங்களுக்கு புரியலயா? நான் சொல்றது. எனக்கு வீரா மாமா தான் இஷ்டம். கல்யாணம் பண்ணிக்கிட்டாக்கா அவரை மட்டுந்தேன் பண்ணிப்பேன். நான் கௌதமை கட்டிக்க விருப்பமில்லன்னு சொன்னதுக்கு காரணம் எம் மனசு முழுக்க எம் மாமா தான் நெறஞ்சிருக்காரு. கல்யாணம் ஆகிப்புட்டால் சரியாயிடும் கதையெல்லாம் எனக்கு ஒத்து வராது. எப்பவும் எனக்கு வீரா மாமாதேன்” என்று படபடவென அதே சமயம் அழுத்தமாக நேர்கொண்டு தன் மனதை வெளிப்படுத்தியவள்… “என் கழுத்துல தாலின்னு ஒன்னு கட்டிக்கிட்டா அது எம் வீரா மாமா கையாலதேன்” என்றாள்.
வீரன் எதிர்பார்த்தது இதைத்தானே! மீனாளை அணைக்கத் துடித்த கரங்களை அடக்கிட பெரும்பாடு பட்டான்.
“எனக்கு விசில் அடிக்கணும் போலிருக்கு நாச்சியா. அடிக்கட்டுமா? மீனாக்குட்டி என்னம்மா பேசுது.” லிங்கம் சிலாகித்திட…
“கொஞ்சம் சத்தமா அடிண்ணே… வசந்தி மாரியாத்தா உம் பக்கட்டும் கொஞ்சம் ஏறட்டும்” என்ற நாச்சி லிங்கத்தின் பார்வையில் சிரித்திட, “அழகு…” என்று கண்காட்டி அவளை அமைதிப்படுத்தினான் பிரேம்.
கௌசிக்குடன் நின்றிருந்த அங்கை நாச்சியின் அருகில் வந்து… “நான் ராத்திரி சொன்னேல மதினி. பாருங்க அப்பவே அப்பாருகிட்ட நாம சொல்லியிருக்கலாம். இப்போ இந்த சலம்பல் இல்லாம மாமாக்கும் அக்காக்கும் கல்யாணம் ஆகியிருக்கும்” என்றாள்.
“இப்படிலாம் நடந்தாதேன் கல்யாணம் கலைகட்டும் சின்னக்குட்டி. நாம கல்யாண கலாட்டவை என்ஜாய் பண்ணுவோம்” என்று நாச்சி சொல்ல, பிரேம் மற்றும் லிங்கத்திடமும் அதே பாவனை.
தனக்கு அருகில் நின்று தான் பேசுவதை இமைக்க மறந்து கண்களில் பொங்கும் காதலோடு தன்னையே பார்த்திருக்கும் வீரனின் கையை பற்றியவளாக மீனாள் சொல்லியதில் வசந்திக்கு உள்ளுக்குள் கனன்றது.
“இம்புட்டு விருப்பமிருக்க நீயி நேத்து ராத்திரி உன்கிட்ட சொல்லும்போதே இப்படின்னு சொல்லியிருந்தாக்கா… இப்போ இந்த ஏற்பாடில்லாம வசந்திகிட்ட நாசூக்கா பேசியிருப்பனேத்தா?” என்ற மருதனிடம்… மீனாள் எதையும் மறைக்க விரும்பாது சொல்ல வேண்டியவற்றை மட்டும் கூறினாள்.
“எனக்கு மாமா மேல சின்ன மனஸ்தாபம். அதைவுட்டு இறங்கி வர முடியல. அவரே நிறுத்திப்புடுவாருன்னு நெனச்சேன். மாமாக்கு நானே வரணும் எண்ணமாட்டிக்கு. கம்மின்னு இருந்து என்னையவே சொல்ல வச்சிட்டாருங்க ஐயா. மாமாவே நிறுத்திப்புடுவாறு நெனச்சுதேன் ராத்திரி உங்கக்கிட்ட சொல்லல” என்றாள்.
“மீனாளுக்கு இம்புட்டு தைரியம் இருக்குமின்னு இன்னைக்குத்தேன் மதினி தெரியுது.” அபிராமி மகாவிடம் சொல்லிட… “வீரனை விட்டுட முடியாதுங்கிற பயம் அவளுக்கு இந்த திடத்தை கொடுத்திருக்கு அபி” என்றார் மகா.
“அதேன் அவளே ரெண்டேருக்கும் மனஸ்தாபம் சொல்லிட்டாளே. பொறவு என்ன… நீங்க தேதி குறிச்சு எழுதுங்க.” வசந்தி தன் பிடியில் நிலையாக நின்றார்.
“ஏட்டி வசந்தி… புள்ளைங்க மனசு புரியாம, ஏன் இந்த ஆட்டம் ஆடுற?” மீனாட்சி அதட்டிட, “அம்மத்தா இருங்க” என்ற மீனாள், “அத்தை தான் சொல்றாங்களே எழுதட்டும்” என்றதோடு ஐயரிடம் திரும்பி… “பொண்ணு பேரு தங்க மீனாள், மாப்பிள்ளை பேரு வீர அமிழ்திறைவன்” என்றாள். அழுத்தத்திலும் அடர்த்தியாக.
“என்னங்க ஐயா சரிதானே?” மருதனிடமும் மீனாள் கேட்டிட… அவரின் தலை தன்னைப்போல் ஆடி ஒப்புதல் அளித்தது.
மீனாள் வீரனின் பெயரை மென்மையிலும் மென்மையாய் மொழிந்திருக்க… அவனுள் சில்லென்ற உணர்வு இதமாகத் தாக்கியது.
அவளே அனைத்தும் பேசிட… அவன் அனைவரின் முன்பும் திடமாக அவள் காட்டும் காதலை சொட்டு சொட்டாக இதயத்தில் பத்திரப்படுத்தினான்.
“பொம்பளை புள்ளையே தைரியமா அவளோட காதலை சொல்லிட்டு இருக்காள். நீயின்னும் வாப்பெட்டியை மூடிக்கிட்டு கம்மின்னு நிக்கிற?” லிங்கம் கௌதமை சீண்டினான்.
அப்போதும் கௌதம் அமைதியாக இருந்திட… லிங்கம் பிரேமிடம் ஜாடை செய்து நெற்றியில் தட்டிக்கொண்டான்.
“உன் அண்ணேக்கு கொஞ்சம் தைரியம் சொல்லிக்கொடுடே கௌசிக்” என்று வேறு கூறினான்.
லிங்கம் எதை குறிப்பிட்டு கௌதமை சாடுகிறான் என்று நாச்சி, அங்கைக்கு புரியவில்லை.
“என்ன மருதா குடும்பமா சேர்ந்து எங்க கழுத்தை அறுக்கணுமின்னு எத்தனை நாளா திட்டம் போட்டிய்ங்க?” என்ற நல்லான் “அன்னைக்கு கேட்டதுக்கு சரின்னுட்டு, இன்னைக்கு பொண்ணு இல்லைன்னு சொன்னாக்கா, நடக்கிறதே வேற. தெரிஞ்சவங்கக்கிட்டலாம் மச்சான் வூட்டுல பொண்ணு எடுக்கிறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். இப்போ இல்லைன்னா… என் கௌரவம் என்னாவுறது?” என்று எகிறினார்.
“நம்ம கௌரவுத்துக்கு புள்ளைங்கள பலிகெடா ஆக்குவதா மாமா?”
“நல்லாயிருக்குண்ணே உம் பேச்சு. இனி உனக்கும் எனக்கும் ஒட்டு உறவே கிடையாது. வாக்கு கொடுத்து ஏமாத்திபுட்டல நீயி” என்றார் வசந்தி.
“அன்னைக்கே புள்ளைங்களுக்கு விருப்பம் இருந்தா(ல்)ன்னுதேன் சொன்னேன் வசந்தி. திடிருன்னு முடிவெடுத்ததுல எம் மவளோட விருப்பத்தை அறிஞ்சிக்காம விட்டுப்போட்டேன். அதுக்காக வேணுமின்னா உன்கிட்ட நான் மாப்பு கேட்டுகிடுறேன். புள்ளைங்க விருப்பம் தெரிஞ்சும் என்னால அதுங்களை பிரிச்சு வைக்க முடியாது” என்று தீர்க்கமாக தன் முடிவை மருதன் சொல்லிட… நல்லான் மருதனின் சட்டையை பிடிக்க முயன்றிட…
வீரன் இருவருக்கும் குறுக்கே வந்து நின்றான்.
“பேச்சு பேச்சா இருக்கும்போது… இந்த சலம்பிக்கிட்டு பவுசு காட்டுற வேலையெல்லாம் கூடாது” என்று வேட்டியை மடித்துக் கட்டியவன், “மொத நீங்க பண்ண நெனக்கிற கல்யாணத்துல உங்க மவனுக்கு விருப்பம் இருக்காட்டு கேட்டீங்களா?” என்றான். அர்த்தமாக.
அவன் கேட்ட விதமே ஏதோ இருக்கு என்றிட, நல்லானும் வசந்தியும் ஒருசேர கௌதமை பார்த்தனர்.
“இதுதேன் சரியான நேரம். இப்பவும் சொல்லலைன்னா…” என்று வீரன் நிறுத்திட,
முன் வந்த கௌதம்,
“எனக்கும் இந்த கல்யாணத்தில் சம்மதமில்லைப்பா. என்னால் உங்கக்கிட்ட சொல்ல முடியல. திட்டுவீங்களோ, கட்டாயப்படுத்துவீங்களோன்னு பயம். நிச்சயம் முடிஞ்சதும் மருதன் மாமாகிட்ட பேசி நிறுத்திப்புடலான்னு தான் அமைதியா இருந்தேன்” என்று சொல்லிட…
“நீயும் சேர்ந்து மானத்தை வாங்குறியேடே” என்று நல்லான் அவனை அடித்திட முயல… கௌதமை தன் பக்கம் இழுத்துக்கொண்டான் வீரன்.
“புருஷன், பொண்டாட்டி ரெண்டேருக்கும் கை நீட்டாமா பேசவே தெரியாதா?” எனக் கேட்டான்.
“என்னை கேள்வி கேட்க நீயாருல?” என்ற நல்லான், “நீயி பெத்ததும் சேர்ந்து நம்ம மூக்கை அறுத்துருச்சு. பொறவு எதுக்கு இன்னும் இங்குட்டு நின்னுகிட்டு வாடி” என்று வெளியில் செல்ல நகர்ந்திட…
“எனக்கு பொறந்தவூடே இல்லைன்னு ஆக்கிட்டலண்ணே நீயி. இனி இந்த மனுசன் எந்த ஜென்மத்துக்கு இங்கன என்னைய விடப்போறாரு” என்று வசந்தி போலியாக கண்ணை கசக்கினார்.
மருதனுக்கு தங்கை உறவு வேண்டுமே! அவர் அழவும் மனதில் ஒரு முடிவு எடுத்தவராக அவர் தன் இளைய மகளையும், கௌதமையும் மாற்றி மாற்றி பார்க்க…
‘அய்யோ இவரு எனக்கு ஆப்பு வச்சிடுவாறு போலவே’ என்று தன்னைப்போல் மனதிற்குள் அலறிய லிங்கம் அக்கணம் அங்கை மீதான தன்னுடைய நேசத்தை முழுதாய் உணர்ந்தான்.
லிங்கம் அங்கையை அதிர்வு கலந்த காதலோடு நோக்க… அவளோ மருதனின் பார்வை புரியாது குழப்பாமாக நின்றிருந்தாள்.
‘இவளுக்கு புரிஞ்சு நோ சொல்லிடுவாளா? இல்லை எம்மேல இருக்க கோவத்துல எஸ் சொல்லிடுவாளா?’ என்று முதல் முறை அச்ச உணர்வை அறிந்தான் லிங்கம். அவனின் இதயம் தாறுமாறாக துடித்தது.
‘வெரட்டி வெரட்டியே உள்ள ஸ்ட்ராங்கா உட்கார்ந்துட்டா(ள்) போலயே.’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டவனுக்கு, கௌதம் பேசிய பின்னர் தான் இதயத்தின் துடிப்பு சீரானது.
“மாமா அவசரப்படாதீய்ங்க!” மருதனின் சிந்தை அறிந்து வீரன் அவரின் கையை பிடித்திட…
இதற்கு மேல் மறைத்தால் பல பேருக்கு கஷ்டமென நினைத்த கௌதம்,
“நான் ஒரு பொண்ணை விரும்புறேன் மாமா. உங்க தங்கச்சிக்கின்னு பார்த்து, தப்பு தப்பா முடிவெடுத்துடாதீங்க” என்றான்.
இப்போது நாச்சிக்கு புரிந்தது. லிங்கம் கௌதமிடம் எதை குறிப்பிட்டானென்று.
“கௌதம் என்னடே இது? யாருடா அந்த பொண்ணு?” வசந்தி அதிர்ச்சியாகக் கேட்டிட… “இன்னைக்கு இதுவரை நடந்த அதிர்ச்சியே போதும்மா. நேரம் வரட்டும் சொல்றேன்” என்ற கௌதம், “மாமா மேல உனக்கு கோவம் வேண்டாம்மா. மீனாள் நிறுத்தாம இருந்திருந்தால் நானே நிறுத்தியிருப்பேன். அப்போ மாமா… உங்களை மாதிரி குறை சொல்லிட்டு உறவே வேணாமின்னு சொல்லியிருக்கமாட்டாரு. என் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்” என்றான்.
கௌதம் சொல்வது உண்மை தானே! வசந்தி சிந்திக்க… கௌதம் பேச்சினை வாயிலுக்கு சென்றிருந்த நல்லான் கேட்டதோடு மனதில் வேறு கணக்கு போட்டவராக, மருதனின் அருகில் வந்து…
“நடக்க வேண்டியதை பார்ப்போம். கௌதம் சொன்ன அப்புறம் தான் எனக்கும் விளங்குது. இதே மீனாள் செய்ததை அவனும் செய்யத்தானே இருந்திருக்கியான். இதுல யாரை குத்தம் சொல்ல… கோவத்துல பேசியதை மனசுல ஏத்துக்க வேண்டாமாட்டிக்கு. இதுங்க விருப்பத்துக்கு என்ன பண்ணனுமோ பண்ணி வைப்போம்” என்றார்.
கௌதம் மட்டுமே அங்கு தன்னுடைய தந்தையின் திடீர் மாற்றம் எதற்கென்று அறிந்து முகம் சுளித்தான்.
*****************
ஏற்பாடு செய்த நல்ல காரியம் தொடங்கும் முன்பே முடிந்ததே என்று மீனாட்சிக்கு வருத்தமாக இருந்தது.
அதுவும் பெண்ணின் திருமண விடயம் ஆரம்பித்த வேகத்தில் மணமேடையில் முடிந்தால் மட்டுமே மனதிற்கு நிம்மதியாக இருக்கும்.
ஏற்பாடு செய்த நிச்சயம் பேச்சோடு நின்றுபோனதென்று தெரிந்தால்? அதுவும் உறவுகளுக்குள்ளே ஒத்துப்போகாது தடைப்பட்டுவிட்டது என்றால்? மீனாள் மற்றவரின் வாய்க்கு அவலாகிப்போவாளே! மீனாட்சி யோசனைக்குள் சிக்கியிருந்தார்.
நல்லானும், வசந்தியும் இனி இவர்கள் என்ன செய்தால் நமக்கென்ன என்று நடப்பதை வேடிக்கை பார்க்கும் எண்ணத்தோடு தள்ளி அமர்ந்து கொண்டனர்.
மகாவும், அபியும்… பாண்டியன் மற்றும் மருதனின் முகத்தையே மாற்றி மாற்றி பார்திருந்தனர். மீனாளுக்கு திருமணம் என்று ஆரம்பித்ததை நிறுத்திட வேண்டாமென்று இருவருக்குமே எண்ணம்.
மீனாள் தன் மனதை, விருப்பத்தை தைரியமாக சொல்லிவிட்டாள். ஆனால் அனைவரும் தங்களுக்குள் யோசித்தபடி அமைதியாக இருக்க… அடுத்து என்னவோ என்று பயந்து பார்த்தபடி நின்றிருந்தாள்.
வீரன் இனி என்னவாக இருந்தாலும்… மீனாள் தன்னை பிடித்திருக்கிறதென்று அனைவரிடமும் சொல்லிய பின்னர் ஒரு கை பார்த்துவிடலாமென்ற எண்ணத்தோடு திடமாக தன்னவளை ரசித்தபடி இருந்தான்.
“அப்போ நான் கெளம்பட்டுங்களா?” யாரும் ஒன்றும் சொல்லாது இருக்கவே, இனி தனக்கு இங்கு வேலை இல்லையென ஐயர் கேட்டிட…
“செத்த இருங்கய்யா!” என்று அவரை நிறுத்தினார் மீனாட்சி.
“இன்னும் என்ன மருதா ரோசனை?” என்று மருதனிடம் கேட்டவர், “நீயென்ன பாண்டியா சொல்ற?” என அவரிடமும் கேட்டதோடு… “பொம்பளை புள்ளை கல்யாணப்பேச்சு சுருக்க முடிக்கணும் சொல்லுவாய்ங்க. இல்லாட்டி ஊர் பேசும்படி ஆகிப்புடும். குருமூர்த்தி சொன்னதை செஞ்சிப்புடுவியான்னு ஆரம்பிச்ச மீனாளோட கல்யாணத்தை சூட்டோடவே முடிக்கிறது நல்லதுன்னு படுது எனக்கு” என்றார்.
“ஆமாம்… அந்த குருமூர்த்தி வெளியில் வந்துபுட்டான். சட்டம் தப்பு செய்றவனுளுக்குத்தேன் சாதகமாக இருக்கு” என்றான் லிங்கம்.
எங்கு இவர்கள் மீண்டும் சுத்தலில் நிறுத்திவிடுவார்களோ என லிங்கம் பேசினான்.
“உனக்கு சம்மதமா அமிழ்தா?” மருதன் வீரனிடம் கேட்டார்.
“அவனுக்கு பயந்துகிட்டு இப்புடி அவசரமா செய்யணுமா மாமா?” என்று பதிலுக்கு கேட்டிருந்தான்.
“பொம்பளை பிள்ளையை பெத்து வச்சிருக்கனே! சிலதுக்கு அஞ்சித்தானே ஆவணும்” என்றவர் மீண்டும் அவனின் சம்மதம் கேட்டார்.
“இன்னும் படிப்பு ஒரு வருசம் இருக்கே மாமா?” இன்று மீனாள் தன்மீதான விருப்பத்தை சொல்லியிருந்தாலும், அவளுக்குள் இருக்கும் தன்மீதான வருத்தம் அவளிடம் முற்றிலும் விலாகாது திருமணம் எப்படி? இருவருக்கும் வலியாகிப்போகும் என்று அவளே சொல்லியிருக்க… வீரன் திருமணம் என்பதில் கொஞ்சம் தயங்கினான். இருவருக்குள்ளும் மன வருத்தம் இருந்திடக்கூடாதென நினைத்தான்.
“உனக்கு மீனாளை கட்டிக்கிட விருப்பமா இல்லையா?அதை மட்டும் சொல்லப்பு?” என்றார் மீனாட்சி.
வீரன் மீனாளை பார்த்தான். அவள் இவனைத்தான் அழுத்தமாக பார்த்திருந்தாள்.
‘நான் வேணான்னு சுத்த விட்டதுக்கு என்னை மொத்தமா வெறுத்துட்டியா மாமா?’ வீரனின் தயக்கத்தில் கண்டதையும் நினைத்து மனதில் சுருண்டாள் மீனாள்.
“அதெல்லாம் அவனுக்கு விருப்பந்தேன். மீனாளுக்கு படிப்புன்னா அம்புட்டு இஷ்டமாச்சே! அதேன் படிப்புக்காக பாக்குறான்” என்று இடைப்புகுந்த பாண்டியன், “பெத்தவக மனசு இந்த விடயத்தில் நினைச்சது நடந்தாத்தேன் நிம்மதியாவும் அமிழ்தா” என்றார் இறுதியாக மகனிடம்.
மீனாளின் பரிதவிப்பை அலைப்புறும் அவளின் கருவிழிகளில் கண்டவன்,
“சம்மதம்” என்றிருந்தான்.
“அப்போ ஒரே முகூர்த்தத்தில் ரெண்டு கல்யாணத்தையும் வச்சிப்போம்” என்ற மீனாட்சி, “கல்யாணம் மொத நா சாயங்காலம், நிச்சயம் வச்சு பொண்ணழைப்பு வச்சிக்கிடலாம்” என்றார்.
“நீங்க அதுக்கு தோதா எல்லாம் பார்த்துகிடுங்க ஐயரே” என்று பாண்டியன் சொல்ல அவரும் தலையசைத்து விடைபெற்றார்.
அடுத்த கணம் மகா ஓடிவந்து தன் மகளை அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்திட…
“எங்க ஆசையெல்லாம் நிறைவேத்திப்புட்ட கண்ணு” என்று அபிராமி கன்னம் வழித்து கொஞ்சினார்.
நாச்சியும், அங்கையும் ஓடிச்சென்று மீனாளை கட்டிக்கொண்டு ஆர்ப்பரித்தனர்.
இத்தனைக்கு நடுவிலும் மீனாளின் பார்வை வீரனிடமிருந்து நகரவே இல்லை.
மருதன் வீரனின் கரம் பற்றி…
“ஒத்த வார்த்தை சொல்லியிருக்கலாமேப்பு. உங்க சந்தோஷத்துக்கு நானே குழி தோண்டியிருப்பேனே” என்றிட… பாண்டியன் அவர்கள் அருகில் வந்து, அன்று தான் வீரனிடம் கேட்டுக்கொண்டதை சொல்லிட, மருதன் பாண்டியனை முறைத்தார்.
“எதெதுல வுட்டுக்குடுத்து தள்ளியிருக்கணும் விவஸ்தை இல்லையா பாண்டியா?” என்று மருதன் சற்று காட்டமாகக் கேட்டிட…
“மாமா ஐயா சொன்னாருங்கிறதுக்காக இல்லை… எனக்கு” என்றவன், “உங்ககிட்ட இதையெப்படி சொல்ல” என்று நெற்றியை தேய்க்க…
“அண்ணேக்கு…” என்று அருகில் வந்து லிங்கம் இழுக்க, வீரனின் முகத்தில் வெட்கம்.
பெரியவர்கள் இருவரும் அவனின் மனம் அறிந்து…
“நடக்க வேண்டியது நல்லபடியா நடந்தாக்கா சரிதேன்” என்று அடுத்தடுத்து நடக்க வேண்டியவற்றை கவனிக்கத் தொடங்கினர்.
லிங்கம் வீரனை தோளோடு சேர்ந்து அணைக்க… பிரேம், கௌதம், கௌசிக் இருவரையும் சுற்றி வந்து தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினர்.
“நாளு இன்னைக்கு நல்லாயிருக்கே, மீனாளுக்கு நகை ஏதும் எடுக்கணுமின்னா எடுத்துக்கிட்டு, முகூர்த்த புடவை எடுத்துக்கிட்டு வந்திடலாமே” என்று மகா கேட்க…
“இதை நாங்கதானே மதினி எடுக்கணும்… நீங்க ஆக வேண்டிய மத்த சோலியை பாருங்க. மூத்தவனை கூட்டிட்டுப்போயி நான் வாங்கிட்டு வந்துப்புடுறேன்” என்ற அபிராமி அப்போதே வீரனை இழுத்துக்கொண்டு தங்கள் இல்லம் வந்திருந்தார்.
“வெரசா கெளம்பி வா அப்பு. மருதைக்கு போயிட்டு வந்துப்புடலாம்” என்றவர், அவரது அறைக்குள் நுழைந்து தயாராகி வர, தனதறை சென்று வந்த வீரன் தன் கையிலிருந்த பெட்டியை அபியிடம் கொடுத்தான்.
“என்னது அப்பு இது?”
“தங்கத்துக்கு தங்கம்” என்றவன் அவர் முன் அமர்ந்தான்.
பெட்டியை திறந்து பார்த்த அபி விழி விரித்தார். காசு மாலை, மாங்காய் மாலை, லட்சுமி ஆரம், அட்டிகை, காதணி, வளையல் என அனைத்தும் பல்வேறு வடிவங்களில் வகைகளில் பளிச்சென மின்னின.
அதீத லாபம் வரும்போது வீட்டு பெண்கள் அனைவருக்கும் வீரன் நகை வாங்கிக்கொடுப்பான். அப்போதெல்லாம் மீனாளுக்கும் வாங்கி வைத்திருக்கிறான் என்பது அவன் சொல்லாமலே அபிக்கு தெரிந்தது. உடன், மீனாள் மீது அவன் கொண்டுள்ள நேசமும்.
“இம்புட்டு அன்பை வச்சிக்கிட்டா அப்பு ஒத்த மறுப்பு சொல்லாம, கௌதமுக்கு கட்டிக்கொடுக்க நாங்க எடுத்த முடிவுக்கு மௌனமா நின்ன?” என தழுதழுப்போடு வினவினார். இவ்வளவு ஆசை வைத்திருக்கும் மகன், மீனாளுக்கு கௌதமுடன் மட்டும் திருமணம் ஆகியிருந்தால்… என்ன நிலையில் துடித்திருப்பான் என்ற எண்ணமே அவரை கலங்கச் செய்தது.
“என்னையவிட எம்மேல அவ உசுரையே வச்சிருக்கா(ள்)ம்மா. அந்த நம்பிக்கையிலதேன் கம்மின்னு இருந்தேன். அவளா என்கிட்ட வருவான்னு தெரியும்” என்று வீரன் சொல்லும்போது, உள்ளே வந்தனர் லிங்கம், நாச்சி, மீனாட்சி.
“ம்க்கும்… அண்ணே அமைதியில எனக்குதேன் உள்ளுக்குள்ள மத்தள இடியாப்போச்சு” என்று லிங்கம் சொல்ல,
“நகைங்க மீனாளுக்காம்மா. ரொம்ப நல்லாயிருக்கு” என்ற நாச்சி, “என்னதுவிட கம்மியா இருக்குமாட்டிக்கு. இன்னும் கொஞ்சம் வாங்கலாம்” என்று சிறு பொறாமையும் இன்றி சொல்ல, அபி அவளின் தாடை பற்றி ஆட்டினார்.
“இதே எண்ணம் காலத்துக்கும் இருக்கணும் நாச்சியா” என்றார் மீனாட்சி.
நாச்சி ஆமோதித்தாளே தவிர மறுத்தோ எதிர்த்தோ, நானென்ன மாறக்கூடிய ஆளா என்றோ எதுவும் சொல்லவில்லை. அவர்களுக்குள் அன்பும் புரிதலும் மட்டுமே நிறைந்து காணப்பட்டது.
“நகைங்க இதுவே போதும்மா. புடவை நானே வாங்கியாந்திடுறேன். மருதை போற சோலியிருக்கு” என்றவன் தான் மட்டுமே தன்னவளுக்கு தேர்வு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் சொல்லிட… மகனின் மனம் அறிந்த அபியும் சரியென்றார்.
“தாலியாவது நாங்க வாங்குறோம் அப்பு” என்று மீனாட்சி சொல்ல, அந்த பெட்டியிலிருந்து சிறு பெட்டியை எடுத்து அப்பத்தாவின் கையில் கொடுத்தவன் தன் முகத்தின் ஒளியை காட்ட மறுத்தவனாக வேகமாக சென்றுவிட்டான்.
“கொள்ளை ஆசையை வச்சிக்கிட்டு கம்மின்னு இருந்திருக்கிறானே!” மீனாட்சி வாயில் கை வைத்து அங்கலாய்ப்பாகக் கூறிட,
“அதை மட்டும் கேட்டுப்புடாத அப்பத்தா… தானா வரும், அன்பு, நம்பிக்கைன்னு அண்ணே கொடுக்குற விளக்கத்துல தலை சுத்திப்போவுது” என்று தலையை வேகமாக உதறினான் லிங்கம்.
அடுத்தடுத்து யாவும் துரித கதியில் நடைப்பெற்றது. ஆளுக்கு ஒரு வேலையாக பார்த்திட… மூன்று நாட்களில் திருமணத்திற்கு அனைத்தும் சாத்தியமானது.
பெண் அழைப்புக்கான நாளன்று நண்பகல் தான், சுபாவும், சுந்தரேசனும் வந்தனர்.
அங்கையின் மூலமாக நடந்ததை அறிந்த சுபாவுக்கு, வீரனுக்கும், மீனாளுக்கும் திருமணம் நடைபெறுவதில் மகிழ்வு என்றாலும்… இந்த நிமிடம் வரை கௌதம் தன்னிடம் இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தாள்.
‘மீனாள் நிறுத்தாது விட்டிருந்தால்… கௌதம் அவனின் பெற்றோரின் விருப்பத்திற்கு நடந்து கொண்டிருப்பானோ? அப்போது நான்… என்னுடைய காதல்?’ என்று தவறாக நினைத்தவள் அறிந்திருக்கவில்லை… கௌதம் தான் ஒரு பெண்ணை விரும்புவதாக சொல்லியதை. அங்கையும் சொல்லாது விட்டிருந்தாள்.
மனம் வலி கொடுக்க… தருவிக்கப்பட்ட புன்னகையுடன் நாச்சியுடனே இருந்துகொண்டாள்.
“என்னாச்சு சுபா?”
“கௌதம்…” என்று அவள் சொல்லிட,
“ஹேய்…” என்று கூவிய நாச்சி, “அப்போ கௌதம் லவ் பண்றன்னு சொன்னது” என்று உற்சாகமாகக் கூறிட முயல அதனை சுபா சரியாக உள்வாங்கும் முன்பு அபி அங்கு வந்தார்.
“நிச்சயத்துக்கு நாங்க அங்குட்டு மதினி வூட்டுக்கு போறோம் நாச்சி. பத்திரமா இரு. நிச்சயம் முடிஞ்சதும் பொண்ணழைப்பு. நீயி அங்க போயி வூட்டு சாமி கும்பிடனும். மீனாள் இங்க கும்பிடுவாள்” என்று அவர் சொல்ல…
“அண்ணே நிச்சயத்துக்கு நான் இருக்க வேண்டாமாட்டிக்கு ம்மா?” எனக் கேட்டாள். மெல்லிய வருத்தத்தோடு.
“முடியாதே நாச்சியா. உன்னைய கூட்டிப்போனாக்கா… வசந்தியே ஒரண்டைய ஆரம்பிச்சு வச்சிடுவாங்க. பொண்ணழைப்புக்கு முன்ன நீயி அங்குட்டு வரது சரியிருக்காது கண்ணு” என்று அவளின் கன்னம் வழித்தார்.
“நீயி ஏன் சுபா ஒரு மாதிரி இருக்க?”
“தலைவலியா இருக்குது அத்தை. நானு மதினிக்கு துணையா இங்கனவே இருந்துகட்டுமா?” என்று சுபா கேட்க, அபியும் சரியென்று சென்றுவிட்டார்.
செல்வதற்கு முன்பு, “நிச்சயம் முடிஞ்சு நாங்க வரதுக்குள்ள கெளம்பி இரு நாச்சியா” என்று சொல்லியிருந்தார்.
ஏற்கனவே நாச்சி ஓரளவிற்கு தயாராகி இருக்க… ஆபரணங்கள் மட்டுமே அணிய வேண்டும். பொறுமையாக செய்துகொள்ளலாம் என்று பிரேமுக்கு அழைத்தவள்…
“எனக்கு வீடியோ காலில் அம்புட்டும் காட்டு” என்று சொல்லி வைத்திட்டாள்.
அனைவரும் தயாராகி முற்றத்தில் நிற்க…
“பொண்ணு கழுத்தில் போடவேண்டிய மாலையை எடுத்து தனி தட்டில் வைத்தா” என்று அபியிடம் சொல்லிய மீனாட்சி…
“அமிழ்தன் கெளம்பிட்டானாடே?” என்று லிங்கத்திடம் கேட்டார்.
“மீனாளுக்கு என்ன நகை அத்தை இப்போ போடட்டும்?” என்று அபி வினவ,
“லட்சுமி மாலையை தனியா எடுத்து வைய்யீ அபி… வீரன் அதை போட்டுவுடட்டும். மத்ததை பொட்டியோட அப்படியே எடுத்துக்கோ” என்றார்.
“அம்புட்டும் என்னத்துக்கு ஆத்தா?” என்று பாண்டியன் கேட்டபோதும், “நான் சொன்னாக்கா அர்த்தமிருக்கும்” என்று சொன்னாரேத் தவிர காரணம் சொல்லவில்லை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
45
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


I jolly veranuku marriage…. super super
Apo Gowtham appa yena kanaku potu iruparu🤔🤔🤔🤔🤔
Meena kutty super super
என்னா எல்லாம் ஸ்மூத்தா போகுதே … சரியில்லையே … என்ன நடக்கும் அடுத்து … அங்கைக்கு ஆப்பு பார்சல் … இனி அழ போறது லிங்கமா 😉
வீரன் வாவ்
வசந்தி அடிக்கும் முன்னர் பாய்ந்து வந்து விட்டானே மீனாளின் வீரன்.
மகள், மருமகன் மனதை அறியாமல் போய்விட்டோமே என்ற வருத்தத்தில் மருதன்.
வீரனை விட முடியாது என்று திடமாய் உரைத்துவிட்டாள்.
அமைதியாகவே இருந்து மீனாளின் காதலை ரசிக்கின்றான் வீரன்.
சொல்லியதை போலவே வசந்தி வீட்டு அம்பு அங்கையை நோக்கி வந்துவிட்டது. 🤣🤣
தாலி முதற்கொண்டு அனைத்தும் தயாராக வைத்துக்கொண்டு காத்திருந்திருக்கின்றான் அவளின் கண் அசைவிற்காக.
தங்கப்பொண்ணுக்கு இவ்ளோ தங்கம்….
புல்லரிக்குது அவனின் நேசம்…