
அகம்-21

அந்தப் பெரிய ஆலமரத்தின் வேர்ப்பகுதி தடிமனாய் திண்டு போல், பூமியைப் பிளந்துக் கொண்டு மேலே வந்திருந்தது. அந்த தடித்த வேரின் மீது ஒய்யாரமாய் அமர்ந்துக் கொண்டு, கையிலிருந்த குச்சியால் மண்ணில் கோலம் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள் கருவிழி.
காய்ச்சலின் உபயத்தால், உடல் முகமும் சேர்ந்திருக்க கண்கள் சிவந்துப் போயிருந்தது.
காலையில் ரோஹன் செய்த அலப்பறையில் அழகர் கொடுத்தனுப்பிய மாத்திரை எங்கோ விழுந்திருக்க, அதீத காய்ச்சலின் உபயத்தில் உடல் அனலாய்க் கொதித்தது. ஆனால் உடல் சோர்வையும் மீறி, அவள் மனதிற்கு ஆயிரமாயிரம் எண்ணங்கள் முடிவில்லா தொடர்வண்டியாய் நீண்டுக் கொண்டே இருந்தது.
‘நான் தான் ரோஹனை அப்படி பேசினேனா? அவனை அடிக்கும் அளவிற்கு தைரியம் எனக்கு எங்கே இருந்து வந்தது? தகுதி, தராதரம் பற்றிப் பேசிய நானே, அவன் அழகைப் பார்த்து தானே மயங்கினேன்? அப்போ காதல் அழகைப் பார்த்து வராதா.? ரோஹன் மீது எனக்கு வந்த உணர்வுக்கு பெயர் என்ன? அழகரில்லாது எதையுமே என்னால் யோசிக்க முடியவில்லை என்றால், அழகரின் மீது எனக்கிருப்பது என்ன? வெறும் மாமன் மகன் என்ற பாசம் மட்டும் தானா? அழகரின் அருகில் இன்னொரு பெண்ணை என்னால் ஏன் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை? என் மனம் எதை நோக்கிச் செல்கிறது?’ குழப்பமாய் யோசித்தபடி அமர்ந்திருந்தவள், கரத்திலிருந்த குச்சியால் அவளின் பெயரையும், அழகரின் பெயரையும் தன்னை அறியாமலே மணலில் கிறுக்கினாள்.
மனதில் எழுந்த எல்லா கேள்விகளுக்குமே விடை ஒன்று தான். அது அழகர் மீதான காதல் என்பது அந்தப் பேதைப் பெண்ணுக்குத்தான் புரியவில்லை.
அவனில்லாமல் அவளில்லை என்பதை அவள் உணரவும் இல்லை. தனக்குள் யோசித்துக் கொண்டு அமர்ந்தவள், மிக அருகில் கேட்ட வாகன ஒலிப்பானின் சத்தத்தில், முகம் மலர நிமிர்ந்தாள்.
அவளின் வறண்ட இதழ்கள், புன்னகையைக் கடன் வாங்கி இதழ்விரித்து சிரித்தது. வாடி வதங்கிய வதனத்தில் திடீரென தேஜஸ் வந்ததைப் போல் அவள் முகம் பிராகசித்தது.
“எவ்வளவு நேரமா ஹாரன் அடிக்கிறேன்? காது கேட்கலையா டி?” எனக் கடிந்துக் கொண்டவன் தன் இருசக்கர வாகனத்தை ஓரமாய் நிறுத்திவிட்டு அவளை நோக்கி வந்தான். இளஞ்சிவப்பு நிற அரைக்கை சட்டையும், அடர் நீல நிற கால்சராயும் அணிந்து, முன் நெற்றி கேசம் கோதியபடி அவன் தன்னை நோக்கி நடந்து வருவதை இரசனையுடன் பார்த்திருந்தாள் கருவிழி.
“என்னடி பித்துப்பிடிச்ச மாதிரி நிக்கிறே? ரொம்ப முடியலையா டி?” அக்கறையுடன் கேட்டவன், அவளின் பிறை நெற்றி தொட்டு உடல் வெப்பத்தைப் பரிசோதிக்க, உடல் கூசிச் சிலிர்த்தது கருவிழிக்கு.
முதன்முறையாய் அழகரின் தொடுகையில் ஒருவித சிலிர்ப்பை உணர்ந்தாள் கருவிழி. ரோஹனிடம் கிட்டதட்ட ஆறுமாதம் பழகி இருக்கிறாள் தான். அந்தத் தருணங்களில் அவள் ரோஹனை தன்னைத் தொட அனுமதித்ததே இல்லை. அப்படியே தப்பித்தவறி எதேச்சைசையாய் அவன் கரம் தீண்டிய பொழுதுகளில் எரிச்சலையும், பிடித்தமின்மையும் தவிர அவள் வேறெதையும் உணர்ந்ததே இல்லை.
“மாமா!” அவள் இதழ்கள் மென்மையாய் உச்சரிக்க, கண்களில் நீர் நிறைந்தது அவளுக்கு.
“என்னடி குளிருதா? ரொம்ப முடியலையா? டெஸ்ட் முடிஞ்சதும் ஃபோன் போட்டிருந்தா வந்திருப்பேனே டி. அனலாய்க் கொதிக்கிற காய்ச்சலோட நாள் முழுக்க அல்லாடியிருக்க? கிறுக்காடி பிடிச்சிருக்கு உனக்கு? என்னடி பித்துப் பிடிச்ச மாதிரி நிக்கிற? மாத்திரை கொடுத்து விட்டேனே போட்டியா இல்லையா?” அக்கறையும் கோபமும் கலந்து வந்த அவன் குரலில் அவளுக்கு அழுகை வந்தது.
‘உண்மையான நேசத்தையும் அன்பையும் இத்தனை நாள் உதாசீனம் செய்திருக்கிறோமே?’ என்ற உணர்வே அவளுக்குக் குற்றவுணர்வைக் கொடுத்தது.
‘ஒருவேளை அழகருக்கு என்மேல் நேசம் இல்லாமல் இருந்திருந்தால்..? இது வெறும் பாசமாய் இருந்தால்? நான் நிஜமாவே அழகருக்கு தகுதியானவள் தானா?’ கேள்விகள் மனதைக் குடைய குழப்பம் சூழ் வதனத்துடன், அவனை அண்ணாந்து பார்த்தபடி நின்றாள் கருவிழி.
“என்னடி? என்னத்துக்கு புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறே?”
“எனக்கு இப்போ நீ புதுசா தான் தெரியுற அழகரு. ரொம்பப் புதுசா.. நான் இதுவரை பார்க்காத அழகரை பார்க்கிறேன்.” கண்களில் ததும்பி தளும்பி நின்ற கண்ணீருடன் அவள் சொல்ல,
“காய்ச்சல் கூடிப்போய் அனத்திக்கிட்டு கிடக்கிறியாடி? முதலில் வண்டியில் ஏறு, ஆஸ்பத்திரி போயிருவோம்.!”எனச் சொன்னவன், அவள் பின்னால் ஏறியமர்ந்ததும் வாகனத்தைக் கிளப்பினான்.
“சொன்ன பேச்சே கேட்க மாட்டியா டி? அத்தை தான் காலையிலேயே லீவ் போட சொன்னாக தானே? வீம்புக்குன்னு சாப்பிடாமல், கொள்ளாமல் காலேஜ் கிளம்பி வந்திருக்க? மாத்திரையாவது போட்டிருக்கலாம். அதையும் செய்ய மாட்டே! என்னதான்டி நினைச்சுட்டு இருக்கே? மனுசனுக்கு கிறுக்குப் பிடிக்க வைக்கிற!” புலம்பிக் கொண்டே வாகனத்தை செலுத்தியவனைப் புன்னகையுடன் பார்த்தாள் அவள்.
“சாதாரண காய்ச்சல் தானே அழகரு! அதுக்கு ஏன் வையுற? மாத்திரை போட்டு தூங்கி எந்திரிச்சா சரியாப் போவும்! ஆஸ்பத்திரியெல்லாம் வேணாம் அழகரு, வீட்டுக்குப் போகலாம்!”
“பிச்சுப்புடுவேன்டி உன்னை! காய்ச்சலோட வேற எதையாவது இழுத்து வச்சிக்கலாம்ன்னு நினைக்கிறியா? ஒழுங்கா நான் சொல்றதைக் கேளு!” அழுத்தமானக் குரலில் அவன் சொல்லிவிட, இதற்கு மேல் அவனுடன் வாதாடும் தெம்பு இல்லாது, கண்கள் மூடி அவன் முதுகில் சாய்ந்துக் கொண்டாள் கருவிழி.
அவன் தோளில் சாய்ந்த அந்த நொடியில் அவள் இதுவரை, எந்த ஆண்மகனிடமும் உணராத, நம்பிக்கையையும் பாதுகாப்பையும் உணர்ந்தாள் கருவிழி.
லேசாய் தலையை உயர்த்தி பக்கவாட்டுக் கண்ணாடியில் பிரதிபலித்த அவன் முகத்தைப் பார்த்தாள் அவள். மீசை தாடியுடன் கம்பீரமாய், நிரம்புவும் அழகனாய்த் தெரிந்தான் துடிவேல் அழகர்.
“நீ இம்புட்டு அழகா மாமா? அது ஏன் எனக்குத் தெரியவே இல்லை?” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
“என்னடி சொன்னே? ஒண்ணுமே கேட்கலை!”
“ஒண்ணும் இல்லை மாமா சீக்கிரம் போன்னு சொன்னேன்!”
“நான் என்னடி ஃபிளைட்டா ஓட்டறேன்? உனக்கு வேற உடம்பு சரியில்லை. வேகமா போனால் ரொம்ப குளிரும். அமைதியாய் உட்காரு.! ரொம்ப முடியலைன்னா எம் மேலே சாய்ஞ்சுக்கடி கரு கரு. நான் ஒரு பைத்தியக்காரன், காரை எடுத்துட்டு வராமல், பைக்கை எடுத்துட்டு வந்துட்டேன்.!”
நிஜமான வருத்ததுடன் அவன் சொல்ல, அவனின் அக்றையில் உடல் சூட்டையும் மீறி அவள் மனம் குளிர்ந்து தான் போனது.
“அழகரு! ஹாஸ்பிட்டல் போக வேணாமே.. ஊசி போடுவாங்க! எனக்கு பயமா இருக்கு.! மாத்திரை மட்டும் வாங்கி கொடு மாமா.. ப்ளீஸ்..!” அவள் கெஞ்சல் மனதைக் கரைத்தாலும், அவள் உடல் நலம் பெற வேண்டும், என்கிற ஒரே காரணத்திற்காக அவன் சொன்னதை காதிலேயே வாங்காதது போல் வாகனத்தைச் செலுத்தினான் துடிவேல் அழகர்.
“மாமா! பதில் சொல்லவே மாட்டேங்கிற? ம்ப்ச் அழகரு!”
“கிறுக்கச்சி! நொய் நொய்ன்னு சொல்லாமல் சும்மா இருடி! உன் உடம்பு சரியாகணும் அதனால் போய்த்தான் ஆகணும். இந்த விஷயத்தில் நீ என்ன சொன்னாலும் நான் கேட்கவே மாட்டேன்.” உறுதியாய்ச் சொன்னவன், வாகனத்தை செலுத்து, முகத்தைத் தூக்கி வைத்தபடியே பின்னால் அமர்ந்திருந்தாள் கருவிழி.
******
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சையளித்துவிட்டு திரும்பவும் வீட்டிற்கு வரும் போது பொழுது சாய்ந்திருந்தது.
“மாமா! ஊசி வேணாம்ன்னு சொன்னேன் தானே? வலிக்குது போ!” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கையைத் தேய்த்தபடியே நடந்தாள் அவள்.
“ஒத்தடம் கொடுத்துக்கலாம் கரு கரு..! பேசாமல் சாப்பிட்டு, மாத்திரையைப் போட்டுட்டு தூங்கு. உடம்பு நல்லா சரியான பிறகு காலேஜுக்கு போகலாம்! சொல்றது புரியுதா? பொழுதன்னைக்கும் கழுதை பொதி சுமக்கிற மாதிரி இதையும் சுமந்துக்கிட்டே திரி.!” என்றபடி அவள் தோள்பையை தன் கரத்தில் வாங்கினான் அழகர்.
“என்னடி இந்தக் கனம் கனக்குது? அப்படி என்ன புதையலை உள்ளுக்குள்ளே பதுக்கி வச்சிருக்க?” எனக் கேட்டபடியே அவளை உள்ளே அழைத்து வந்து மெத்திருக்கையில் அமர வைத்தான்.
“புக்கு தான் அழகரு!” கால் நீட்டி சோர்வாய் சாய்ந்து அமர்ந்து விழிகளை மூடிக் கொண்டாள் அவள்.
“ஏய்! தூங்கிராத டி..! சாப்பிட்டு மாத்திரை போடணும்.!”
“தூங்க மாட்டேன் அழகரு! ரொம்ப டயர்டா இருக்கு! சும்மா கண்ணை மூடி படுத்துக்கிறேன்.!” மெல்லிய முனகல் குரலில் அவள் சொல்ல,
“சரி இருடி! நான் சாப்பாடு கொண்டு வரச் சொல்றேன்.!” என்றவன் அடுக்களை, வீடு, தோட்டம் என அலசியும் ஒருவரையும் வீட்டில் காணாமல் திகைத்து நின்றான் அழகர்.
“ஹே… ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு…
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு…
வருதே அலையாட்டம்…
வாக்கிங் வரும் சாக்லேட் சிலையாட்டம்..!” பாடிக்கொண்டே படிகளில் இறங்கி வந்தான் வீரபத்ரன்.
“டேய் பத்ரா!”
“ஆத்தீ! பயந்துட்டேன். என்னத்துக்கு இந்தக் கத்து கத்துறண்ணே?!” அழகர் தீடீரென விளித்ததில் திடுக்கிட்டு அவசரமாய் பதிலளித்தான் வீரபத்ரன்.
“வீட்டில் என்னடா ஒருத்தரையும் காணோம்.? சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனாங்க?”
“அப்பத்தாவும், தாத்தாவும் கோயிலுக்கு.. அம்மாவும் பெரியம்மாவும் மது வீட்டுக்கு.. நெடுமாறன் அவன் ஆளை ரூட்டு விடுறதுக்கும் போயிருக்காங்க. அப்பாவும் பெரியப்பாவும் இன்னும் வீட்டுக்கே வரலை. மைடப்பியை பெத்த மகராசி எங்கேன்னு எனக்கு தெரியாது.! ஹலோ ப்ரோ.. எனி எமெர்ஜென்ஸி..?”
“இவளுக்கு மேலுக்கு முடியலை டா. சாப்பாடு கொடுக்கணும். வீட்டில் வந்து பார்த்தால் ஒருத்தரையும் காணோம்.!” காய்ச்சலோடு கிடப்பவளை எவ்வளவு நேரத்திற்கு இப்படியே அமர வைத்திருக்க முடியும்? என்ற ஆற்றாமை அவன் குரலில் தெரிந்தது.
“நெசமாவா மைடப்பி? உனக்கு காய்ச்சலா? இது என்ன காய்ச்சலுக்கு வந்த கஷ்டகாலம்? நியாயமா உன்னைப் பார்த்து காய்ச்சல் பயந்து ஓடியிருக்கணுமே? உனக்கு காய்ச்சல்ன்னா வாட் எ மெடிக்கல் மிராக்கிள்?”
“டேய் டென் ரூப்பீஸ்.. நீதானே காலையில் வந்து மாத்திரையைக் கொடுத்த? உடம்பு மட்டும் சரியாகட்டும் உன்னை மண்டையிலேயே கொட்டுறேன்.!” பற்களை நறநறத்தாள் கருவிழி.
“காய்ச்சல் வந்தாலும் வாய் அடங்குதா.?யானைக்கு ஒரு காலம் வந்தால் என்னை மாதிரி குட்டிப் பூனைக்கும் ஒரு காலம் வரும் மைடப்பி! நீ வாயை மூடிட்டு அமைதியாய் இருந்தாலே காய்ச்சல் காணாமல் போயிருமாம். பேசாமல் நீ ஒரு பத்து நாளைக்கு மௌன விரதம் இரேன்.. வீட்டுக்கும் நாட்டுக்கும் ஊருக்கும் நல்லது!”
“டேய் பத்து பத்து பதிற்றுப்பத்து போடா! அழகரு இவனைப் பாரு அழகரு.. என்கிட்டேயே ஒரண்டை இழுக்குறான். டேய் கிழிச்சு போன பத்து ரூபாய் நோட்டு.. உன்னைக் கொன்னுடுவேன்டா!” அவள் கத்திக் கொண்டிருக்க,
“நீ தான் அஞ்சு பைசா மைடப்பி..!” அவள் எழுந்து துரத்திக் கொண்டு வருவதைப் பார்த்ததும் அவள் கரத்தினில் சிக்காமல் தப்பி ஓடியிருந்தான் வீரபத்ரன்.
“ஏய்.. ஏன்டா இப்படி வந்து இடிச்சுட்டு கிடக்க?” விரபத்ரனின் மீது இடித்துக் கொண்டே வீட்டினுள் வந்தான் காத்தவராயன்.
“இந்தப் புள்ளை ஏன் சொங்கி மாதிரி உட்கார்ந்திருக்கு? வீட்டில் ஒருத்தரையும் காணோம்.!”
“அழகு..! அழகு..! எங்கே இருக்கே? நீ சொன்னதெல்லாம் முடிஞ்சுது. பட்டன் காளான் பேக் பண்ணுற வேலை மட்டும் நடந்துட்டு இருக்கு..!” சொன்னபடியே அவன் கண்கள் அழகரைத் தேடியது.
“எம்மா தங்கச்சி, அழகு எங்கே?”
“என்னைப் பார்த்தால் அழகா தெரியலையாண்ணே உனக்கு? அழகு எங்கேன்னு கேட்கிறே?” கண்ணை மூடிக் கொண்டே அவள் பதில் சொல்ல,
“என்ன ஆச்சு இந்தப் புள்ளைக்கு? பைத்தியம் எதுவும் பிடிச்சுக்கிச்சா? லூசு மாதிரி உளறிட்டு கிடக்கு?” எனச் சத்தமாய் புலம்பியவன்,
“எம்மா தாயே, உன் மாமன் மயன் அழகரு எங்கே?!” இழுத்துப் பிடித்த பொறுமையுடன் கேட்டான் காத்தவராயன்.
“எங்க அம்மாச்சி தான் சுருக்குப் பைக்குள்ளே அழகரை ஒளிச்சு வச்சிருக்கும். போய் கேட்டுக்கண்ணே..!” கண் மூடியிருந்த போதும், அவன் காத்தவராயன் முகம் எப்படியிருக்கும்? எனக் கற்பனை செய்தவளின் இதழில் மலர்ந்தது குறுஞ்சிரிப்பு.
“சரியான பைத்தியக்கார குடும்பத்துக்கிட்டே வந்து மாட்டிக்கிட்டேன். விட்டால் நம்மளையே தலையைப் பிச்சுக்கிட்டு அலைய விட்டுடுவாய்ங்க! சூதானமா இருக்கணும்டா சாமி!” தனக்குள் புலம்பிக் கொண்டான் காத்தவராயன்.
“நானே உடம்பு சரியில்லாமல் உட்கார்ந்து கிடக்கேன். என்னத்துக்கு என்னை வந்து இம்சை பண்றண்ணே? உன் கண்ணு என்ன நொள்ளையா போச்சா? போய் தேடிக்கோ! இங்கணதான் நின்னுச்சு அழகரு.. எங்கே போச்சுன்னு தெரியலை!”
“ம்க்கும்! உடம்பு சரியில்லைன்னு நெத்தியில் எழுதி ஒட்டிக்கோ தங்கச்சி! நீ சொன்னால் தான் உடம்பு சரியில்லைன்னு தெரியுது. அழகரு தான் பாவம்.. உன்னை வச்சிக்கிட்டு என்ன பாடுபடப் போறானோ? ஆமா தங்கச்சி, அந்த ரோசம் கெட்டவன் கதை என்னாச்சு? திரும்ப எதுவும் வம்பு பண்ணினானா?” ஏதேச்சையாய் தான் கேட்டான் காத்தவராயன்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லையே.. நா.. நான் தான் அவனை ஃப்ரெண்டுன்னு சொல்லிட்டேனே?” இத்தனை நேரமாய் கண்ணை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தவள், விலுக்கென நிமிர்ந்து கண்களைத் திறந்து பதிலளிக்கவும், அவள் முகத்திலேயே கூர்மையாய் பார்வையைப் பதித்திருந்த காத்தவராயனின் புருவங்கள் யோசனையாய் இடுங்கியது.
“நெசமா பிரச்சனை ஒண்ணும் இல்லைதானே தங்கச்சி?”
“ஏற்கனவே காலேஜில் எல்லாருக்கும் தெரிஞ்சதால், இப்போ என் பக்கம் வர்ரதில்லைண்ணே! எனக்கு டயர்டா இருக்குண்ணே..! நீ அங்கிட்டு போய் அழகரைத் தேடிக்கோ!” பட்டென விழிகளை மூடி பின்னுக்கு சாய்ந்துக் கொண்டாள் கருவிழி.
“அழகு! அடேய் எங்கே இருக்கே? திருமாலிருஞ்சோலை கள்ளழகரைக் கூட கண்ணால் பார்த்திடலாம் போல, உன்னைக் காண முடியலையே அழகு!”
“இங்கண தான் இருக்கேன் காக்கா விரட்டி!” என்ற குரல் அடுக்களைக்குள்ளிருந்து கேட்கவும் அவசரமாய் அடுக்களையை நோக்கிப் போனான் அவன்.
“என்ன அழகு, நீ இதையெல்லாம் செஞ்சிட்டு கிடக்குற? இதெல்லாம் பொம்பிள்ளைங்க வேலை!”
“சாப்பிடறது எல்லாரும் தானே சாப்பிடுறோம். அப்பறம் இது மட்டும் என்ன பொம்பளைங்க வேலை? நான் ஒண்ணும் அதிசயமா எதுவும் செய்யலை. உன் தொங்கச்சிக்கு கொஞ்சம் கஞ்சி வைக்கலாமேன்னு வந்தேன். வீட்டில் யாரும் இல்லை. அவசரத்துக்காவது ஆம்பிள்ளை சமைக்கலாம் தப்பில்லை!” புன்னகையுடன் சொன்னான் அழகர்.
“சும்மாவே தங்கச்சிக்கு ஒண்ணும் செய்யத் தெரியாது! உன் தலையில் ஏறி உட்கார்ந்து நல்லா மிளகாய் அரைக்கப் போவுது பார்!” என காத்தவராயன் சொல்ல, வசீகரப் புன்னகையை பதிலாய் தந்தான் அழகர்.
“என்ன காதலோ.. எது சொன்னாலும் ஈஈஈன்னு இளிக்கிறீங்க! ஒரு மண்ணும் விளங்க மாட்டேங்குதுடா சாமி..! நல்லவேளை இந்தக் காதல் கண்ணராவியெல்லாம் நமக்கு வரலை! நாம இப்படியே கடைசி வரை சிங்கிள் சிங்கமாவே இருப்போம்..!”
“கொரோனா வந்தப்போ.. நமக்கு வந்துடக் கூடாது.. வந்துடக் கூடாதுன்னு நினைச்சே நிறைய பேருக்கு வந்துச்சாம். அதே மாதிரி நீ வேணாம்ன்னு நினைக்கிற ஒரு விஷயம் கண்டிப்பா உன்னைத் தேடி வரும் காக்கா விரட்டி..! காதலெனும் நதி உன்னையும் இழுத்துட்டுப் போகப் போகுது.!”
“ஆத்தி! அதெல்லாம் நமக்கு வேணாஞ்சாமி.! நதியும் வேணாம்.. கடலும் வேணாம். எனக்கே நீச்சல் தெரியாது. நான் எதிலேயும் குதிக்க தயாராவும் இல்லை!” என காத்தவராயன் சொல்ல, அவன் சொன்ன தோரணையில் கலகலவென சிரித்தான் துடிவேல் அழகர்.
“நான் கருகருகிட்டேயும், நெடுமாறன் மதுகிட்டேயும் மாட்டிக்கிட்டு முழிக்கிற மாதிரி, நீயும் மாட்டிக்கிட்டு முழிக்க வேணாமா காக்காவிரட்டி?” என அழகர் விளையாட்டாய் கேட்க,
“நானே கேட்கணும்ன்னு நினைச்சேன்.. இந்த மதுவை நெடுமாறன் லவ்வுற சங்கதி உங்க வீட்டுக்கு எப்படித் தெரியும்?” அதிமுக்கியமான சந்தேகத்தைக் கேட்டான் காத்தவராயன்.
“இப்போ உன்னை இடிச்சுப்புட்டு ஓடுனானே.. அந்தப் பக்கிதேன், இதுங்களை மாட்டி விட்டுருக்கு. மதுவும் நெடுமாறனும், எங்குட்டோ சுத்திக்கிட்டு திரிஞ்சத்தைப் பார்த்துட்டு வந்து அம்மாகிட்டேயும், பெரியம்மாகிட்டேயும் போட்டு விட்டுட்டான்.!” என அழகர் சிரித்துக் கொண்டே சொல்ல,
“அடேய்.. வீரபத்ரா! நீதேன் காரணமா? இவன்கிட்டே சூதானமாகத்தேன் இருக்கணும் போல” என காத்தவராயன் முணுமுத்துக் கொண்டிருந்த அதே நேரம், வாசலில் யாரோ விளிக்கும் சத்தம் கேட்டது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அழகன் செம
நன்றி கலைமா ❤
அடடா கருகரு க்கு கஞ்சி வைக்கிறாரா அழகர் … சூப்பர் … ஆமா காத்தவராயா இந்த காதல் வந்தா என்னெல்லாம் பண்றாங்க பாரு … சட்டு புட்டுன்னு எங்க காத்தவராயனுக்கும் ஒரு ஜோடியை போடுங்க … ஜாலியா இருக்கும் …
ஜோடியைப் போட்டுருவோம் டா 😍 தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💛💜
மணலில் பெயர்களை எழுதும் அளவுக்கு யோசனைக்குள் மூழ்கிட்டியா கரு கரு?
அழகர் மேல் ரசனை பார்வையெல்லாம் வீசுகிறாலே விழி! 😍
அவனது அருகினில் உண்மையான நேசம், நம்பிக்கை, பாதுகாப்பு என எல்லாம் கிடைக்க பெற்றவளாக உணர்கிறாள்.
இத்தனை நாட்கள் அதனை அனுபவித்தாலும் அதற்குண்டான மதிப்பை அளிக்கவில்லை என்ற குற்றஉணர்வு வாட்டுகிறது.
Don’t worry கரு கரு. உன் அன்ப வாரி வழங்கி ஈடு செஞ்சிடு.
வீரபத்ரன் என் fav ஆகிட்டான். 😍
அவன கலாய்க்க வெளிய இருந்து ஆள் வர வேணாம் அவனே போதும். குட்டி பூனையாம் 🤣
காக்காவிரட்டிய காதல் நதியில் தள்ளி விட போறீங்களா? பாவம் அவன் சிங்கிளா சந்தோஷமா பறந்திட்டு போகட்டும்.
😂😂 ஆமாடா.. வீரபத்ரன் Unique pirce தான். யாரும் தள்ளி விட வேணாம். அவனோ தொபுக்கடீர்ன்னு குதிச்சுருவான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💜💚