Loading

KKEN-2

  அதைத் தவிரவும் காயத்ரி கணவனின் கடையில் துணி வாங்குபவர்களுக்கு இவளே ரவிக்கையும் சுடிதாரும் தைத்து கொடுக்க ஆரம்பித்தாள். பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்தார்கள். இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்தவர்களுக்கு இதோ அதோ என்று வருடங்கள் ஓடியது. முதலில் எங்க வீட்டுல கல்யாணம் சீமந்தம் என்று இவளுக்கு அழைப்புக் கொடுத்தவர்கள் பின்னாளில் இவளை விசேஷங்களுக்கு அழைப்பதைக் குறைத்துக் கொண்டார்கள். யாருக்கும் இங்க நல்ல மனம் படித்தவர்கள் என்பதெல்லாம் முக்கியம் இல்லை. அவரவர் மூட நம்பிக்கைகளும் பொய்யான சாஸ்திரங்களும் தான் தேவை.

சிலர்,

“எங்க பொண்ணுக்கு சீமந்தம். கொழந்தை பொறக்காதவங்க வந்து உக்காந்தா சீக்கிரம் குழந்தை பொறக்கும். உக்கார வரியா?” என்று என்று அழைப்பு கொடுத்தார்கள்.

  இதோ திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகி ஐந்தாம் வருடம் துவக்க நாள். இப்போதும் இருவர் வீட்டிலும் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. காயத்ரியின் அன்னை மட்டும் இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார்.

“என்  பொண்ண பாக்கறதுக்கு நான் யாரு கிட்டையும் பெர்மிஷன் வாங்க வேணாம்” சொல்லி விட்டு வந்து விடுவார்.

ஏனோ அந்தத் தைரியம் விஜயனின் அன்னைக்கு இல்லை.

“சீக்கிரமா புள்ளைய பெத்துக்கற வழிய பாருங்க. இன்னும் வாழ்க்கைல செட்டில் ஆகல செட்டில் ஆகலன்னு  எத்தனை  வருஷம் தள்ளிப் போடுவீங்க? ரோடு பெருக்கறவன் கூட நாலு புள்ள பெத்துக்கறான். அவங்கள்லாம் புள்ளைய பெத்து சோறு போடலியா? மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான். நீ மட்டும் குழந்தையோட வந்து நில்லு. உங்கப்பாவை எப்படி நான் வழிக்குக் கொண்டு வரேன் பாரு.”

அன்னை சொல்வதும் சரியாகத் தான் இருந்தது. காயத்ரிக்கு ஏற்கனவே மனதில் குழந்தைக்கான ஆசை இருந்ததுதான். ஆனால்  அதுவே இப்போது ஏக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது.

கணவனின் தோள்  வளைவில் சாய்ந்து அவனின் நெஞ்சு முடிகளில் விளையாடிக்  கொண்டே அன்னை சொன்ன வார்த்தைகளைச் சொன்னாள்.

கணவனின் பதிலுக்காக ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தால்  அவன் இருந்த அசதியில் எப்போது தூங்கினானோ? அடுத்து வந்த நாட்களும் அப்படித்தான்.

“டாக்டர் கிட்ட போனீயே என்ன சொன்னாங்க ? “அன்னை கேட்டபோது தவறாகத் தெரியவில்லை. அதுவே வீட்டுக்காரம்மா வந்து, “என்ன காயூ இந்த மாசம் தலைக்குத் தண்ணி ஊத்திகிட்ட போல?” என்றுக் கேட்கும்போதும்,

“ஏம்மா காயத்ரி! தம்பி ராத்திரி லேட்டாதான் வருது போல ? அப்புறம் எப்படி குழந்தை பொறக்கும்?” இது பக்கத்துக்கு வீட்டு அக்கா.

அவர்கள் பேசுவதும், சொற்களால் சுருக்கென்று குத்துவதும் நான் சொன்னது சாம்பிள் தான்.

“காயத்ரி! இந்த கோவிலுக்கு போனா குழந்தை பொறக்குமாம். இந்த வேண்டுதல், அந்த விரதம் எல்லாம் காதில் வந்து விழுந்தன.

“காயத்ரி! ஏதோ ஒன்னு வாங்கிட்டு வந்து வீட்டுலையே நாம் உண்டாகி இருக்கோமான்னு தெரிஞ்சுக்க முடியுமாமே ? நீ பார்த்துருக்கியா?”

“ஏண்டி அவ எல்லாம் நம்மளை மாதிரியா? அவன் எல்லாம் நல்ல படிச்சவங்கடி. அவளுக்குத் தெரியாததா ?

“என்னத்தை படிச்சு என்ன? நம்மள மாதிரி கல்யாணம் ஆன உடனே புள்ளை பெத்துக்க தெரியலையே ?”

“அதுக்கு முதல்ல புருஷனை கைக் குள்ள போட்டுக்கணும். அவரு என்ன எந்நேரமும் கடையிலேயே தான் கிடக்கறாரு. இது மூஞ்சிய கூட நிமிர்ந்து பாக்கறதில்லை.”

“அதுக்கெல்லாம் காட்ட வேண்டியதை காட்டி கொடுக்க வேண்டியதை கொடுத்து “இத்யாதி இத்யாதி … அடுத்த வீட்டுப் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டே இவளுக்கு கேட்டு விட வேண்டும் என்றே பேசிக் கொண்டே போனார்கள்.

தண்ணீர் நிறைந்த குடத்தை எடுத்துக் கொண்டு இவள் வர, குடத்தில் வழிந்த நீர் இவள் இடுப்பை நனைத்தது. கண்களில் வழிந்த கண்ணீர் முகத்தை நிறைக்க துடைக்கத் தோன்றவில்லை.

“ஏண்டி கோகிலா! பிள்ளையை அங்க கொடுக்காதன்னு எத்தனை தடவை சொல்லறது ?”சொல்லிக் கொண்டே எதிர் வீட்டு கோகிலாவின் அன்னை மடியில் இருந்த பிள்ளையை வெடுக்கென்று தூக்கிக் கொண்டு போவதும்.

“அவகிட்ட கொடுத்தா புள்ளை விளங்குமா?” என்று காதுப் பட பேசுவதும் எல்லாமே நரகம்தான்.

முதலில் எல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளாதவளுக்கு , நிச்சயம் அவளை குத்தி கிழித்து விட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அருகில் இருப்பவர்கள் பேசும்போதும் பெண்ணின் மனம் எப்படித் தான் தாங்கி கொள்ள முடியும்?

கண்ணீர் முட்டியது.

“இவருக்கு என்ன புடிக்கலியா? தவறான ஆளை  தேர்ந்தெடுத்து விட்டோமா? இல்ல இவருக்கு நான் அழுத்துப் போய்ட்டேனா? அவருக்கு என்ன தேவை? பணம்.சொந்த தொழில். அது தான் அவருக்கு தேவையானது கிடைச்சுருச்சே இனி நான் எதுக்கு?”

இரவெல்லாம் குளியறைக்குச்  சென்று அழும்  பழக்கம்  ஆரம்பித்தது.

அருகில் இருப்பவர்கள் எல்லாம் இவளை  மலடி என்று பேசிக் கொள்வதும் நல்ல விஷயங்களுக்கு இவளை அழைக்காமல் தவிர்ப்பதும் ஆண்களுக்கு எங்கே புரியும்?

எதற்கும் இருக்கட்டும் என்று மருத்துவரிடம் சென்றிருந்தாள் . உங்களுக்கு பி சி ஓ ஸ் இருக்கு. அதுவே இதுவே என்று லிஸ்ட் போட்டார்கள். ஏனோ யாருமே சரியான வழிமுறையை  சொல்லவில்லை. இவளுக்கு இன்னும் மன அழுத்தம் கூடியதே தவிர குறையவில்லை. இதில் அவர்கள் சொல்லும் நாளுக்கெல்லாம் கணவன் ஒத்துழைப்பானா? ஏதோ இருவரும் முகம் பார்த்து பேசிக் கொள்வார்கள். அதில் நிச்சயம் சிரிப்பு இருக்காது. எந்நேரமும் விஜயன் தொழிலை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தான். இவளும் வேலைக்கு செல்வாள். வீட்டு வேலைகள் செய்வாள். வரும் துணிகளை தைத்து கொடுப்பாள். இப்படித்தான் நாட்கள் சென்று கொண்டிருந்தது. இப்போதெல்லாம்  வாடி இருக்கும் மனைவியின் முகம் கூட முழுவதாக பார்ப்பதில்லை விஜயன். எந்திரமாக வாழும் காயத்ரி விடுமுறை எடுத்து கொண்டு அழும்  அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்தாள் .

காலை கணவன் கிளம்பும்போது எப்போதும் மகிழ்வுடன் வந்து கை காட்டி விட்டு தானும் கிளம்புவாள். ஏனோ இன்று அவள் முகம் சரி இல்லை. உடம்பு சரி இல்லையா?

மனம்  கேட்கவில்லை. ஏனோ  விஜயனுக்கு கவலையில் இருந்த மனைவியின் முகமே கண் முன் வந்து போனது. வேலையை கவனிக்க முடியவில்லை. உடம்பு சரியில்லையா? மாதாந்திர நாட்களாக இருக்குமா? யோசித்தவனுக்கு அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. கடையில்  இருந்த பையனிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்தான்.

வீட்டில் எந்த வேலையும் செய்யவில்லை. ஏதோ சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தாள் மனைவி. ‘நாந்தான்  பெரிய தப்பு பண்ணிட்டேன்.’ ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

கணவன் வந்து, என்னவென்றுக் கேட்டான். எப்போதோ கேட்டிருக்க வேண்டியதை சில வருடங்கள் கழித்து வந்து கேட்டால்? இருவருக்கும் வாக்குவாதத்தில் ஆரம்பித்து பெரிய சண்டையாகி போனது. திருமண நாள் கூட நினைவில் இல்லை விஜயனுக்கு. காயத்ரி தன்னைத் தானே தலையில் அடித்துக் கொண்டாள்

“உங்களுக்கு  என்ன வேணும்? பிசினஸ் பண்ணனும். ஆரம்பிச்சாச்சு. பணம் பண்ணனும். நல்லாதான் தான் போகுது. முதல்ல கஷ்டப்பட்டீங்க. இனிமே என்ன? கடைய பெரிசாக்கணும். அடுத்த பிரான்ச் திறக்கணும். அப்புறம்? அடுத்து, அடுத்து…இதுல நான் எங்க இருக்கேன்? இல்ல நம்ம குழந்தைங்க? சொத்து சேர்த்து சேர்த்து யாருக்கு கொட்ட போறீங்க? பாருங்க என்னோட மூஞ்சிய பாருங்க. இதுவா என் மூஞ்சி? கல்யாணத்தின் போது இப்படியா இருந்தேன்?” அவனின் காலரை உலுக்கி அழுதாள்.

“என்னிக்காவது உனக்கு என்ன வேணுன்னு கேட்டுருக்கீங்களா? ஒரே ஒரு முழம் பூ? முடியல . என்னால முடியல. காலைல  எழுந்து வீட்டு வேலை செஞ்சி, வேலைக்கு போய் , மறுபடியும் வீட்டு வேலை செஞ்சு, துணிய தைச்சு . இப்டியே இருந்தா எனக்கு நிச்சயம் பைத்தியம் புடிச்சிடும். நான் எங்கையாவது போய்க்கறேன்.”

  “எங்கடி போவ?” பரிதாபமாக கேட்டான். அவனுக்கு கடை, தொழில், மனைவி தவிர ஒன்றும் தெரியாது.

 “எங்கையோ போறேன். அப்பா வீட்டுக்கு போறேன்.  எங்கையாவது ஹாஸ்டலுக்கு போறேன். இல்ல செத்து  போறேன்”

கடைசி வார்த்தை அவனை நொறுக்கி விட்டது.

மனைவியை இழுத்து அணைத்தான். எத்தனை  ஆசையாய்  தன்னை  திருமணம் செய்தாள்? முதலில் அவனை, அவனின் அணைப்பை எதிர்த்தவள் அடுத்த சில நொடிகளில் அவன் நெஞ்சத்திலேயே தஞ்சம் புகுந்தாள் .

இந்த ஒற்றை அணைப்புக்காகத்தான் இருவருமே ஏங்கி இருந்தார்களோ? அவளின் முகம் துடைத்து முகமெங்கும் முத்தமிட்டான். உதட்டோடு உதடு பொறுத்தி அவளுக்குத் தன்னை உணர்த்தினான். அவளின் கழுத்து வளைவில் அவன் தன்னை மூடிக் கொண்டான். அவன் தோளில்  சாய்ந்து முதுகில் கையை படர விட்டாள் அவள். அவர்களுக்குள் இருந்த ஊடல், அழகான கூடலில்  முடிந்தது.  ஆழந்த உறவு, நீண்ட நேரம்.,

“உனக்காக நான், எனக்காகவே நீ” அவனின் ஆசையை தவிப்பை இளமையின் ஏக்கங்களை, காதலின் பரிதவிப்பு எல்லாம் அவன் காட்டினான்.

அதற்கு எல்லாம் பதிலாக அவள் தன்னையே கொடுத்தாள். இத்தனை நாட்களாக கடையில் உழைப்பை கொடுத்த அவனுடையவளுக்காக , இன்று கட்டிலில் தன் உழைப்பை காட்டினான் அவன் .

இத்தனை நாள் வேலை வேலை என்று டென்ஷனில் சுற்றிக் கொண்டிருந்தவன் இப்போது தான் வாழ்க்கையை ஆரம்பித்தான். மருத்துவர்கள் சொன்னது போன்ற வழி முறைகள் இல்லை. அவர்கள் குறித்து கொடுத்த நாட்கள் இல்லை. தாம்பத்யம். அழகான உறவு . ஆனந்தமான கூடல். இன்பமான வாழ்க்கை. அப்போது மட்டும் இல்லை, அடுத்து வந்த நாட்களிலும் தான். அதில் உதித்தவள் தான் வித்யா. வெளியில் வந்ததும் குவா.. என்ற சத்தம் காதை பிளந்தது. காயத்ரியின் மலடி என்ற பெயர் அம்மாவாக மாறியது. ஒரே ஒரு குவா சத்தம்தான். அடுத்து மொத்த  கையையும் சேர்த்து வாய்க்குள் புதைத்திருந்தாள் வித்யா.

மருத்துவரும் நர்ஸுகளும் அவளை பார்த்து சிரிக்க அரை மயக்கத்தில் இருந்த காயத்ரி சிரித்துக் கொண்டே முழு மயக்கத்திற்கு சென்றிருந்தாள் .

“வானத்து மலரே வையத்து நிலவே வாழ்க்கையின் பொருளே வா ! மலடியின் மகளே மகள் என்னும் கனவே நீ வா!” என்றுதான் காயத்ரி வித்யாவை வளர்த்தார். அவள் உலகம் முழுக்க முழுக்க மகள் என்றே மாறி விட்டது. பிள்ளை வந்த பிறகு யார் கணவனை தேடப் போகிறார்கள்? இத்தகைய அதீத பாசம் நல்லதா கெட்டதா?

விதி தீர்மானிக்கட்டும் ……

காலம் முடிவெடுக்கட்டும் ………

  அடுத்த நாளும் வண்டி புக் செய்துவிட்டுக்  காத்திருந்தாள் வித்யா. அப்போதும் அதே வண்டி வந்தது. மூன்றாம் நாளும் அதே வண்டி வந்தது. அந்த ட்ரைவரை தோழிகள் ரசித்தார்கள்.

அப்படி என்னதான் அவனிடம் இருக்கிறது

 காதல் வரும் ..

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நல்ல அருமையான காதல் கதை … யார் அந்த டிரைவர் …