Loading

அத்தியாயம் 59

     “லீலா நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன். பார்த்துப் பத்திரமா இருங்க. தேவையில்லாம வெளியே போகாதீங்க.” சற்றே அழுத்தமாகச் சொன்னான்.

     தன்னை விட்டுத் தொலைவில் இருந்தாலும், மனைவியின் பாதுகாப்பைப் பற்றி செல்வா யோசிக்காத நாளே இல்லை. கடந்த ஒரு மாதமும் கூட அவள் வீட்டுப் பக்கம் அவளுக்குத் தெரியாமலே பாதுகாப்பிற்கு ஆள் ஏற்பாடு செய்திருந்தான்.

     அதற்கு உதவி செய்த பாஸ்கர் கூட, இத்தனை செய்வதற்கு ஆபத்து எனக்கல்ல உனக்குத் தான் என மனைவிடம் சொல்லிவிடலாமே என்று கேட்கத்தான் செய்தான். என்னவோ மனைவியின் முகத்தில் பயத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை செல்வாவிற்கு.

     கேரளா சென்ற முதல் இரண்டு நாள் அறையை விட்டு வெளியே வருவதற்கு கூடத் தயங்கிய பெண்ணின் பயத்தை, இன்னொரு முறை காணவே கூடாது என நினைத்தான். தானே இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய நினைத்தான். அது அவ்வளவு எளிதில் சாத்தியப்படும் விஷயம் இல்லை என்பது அவனுக்குப் புரியவில்லை பாவம்.

     பல நினைப்புடன் வேலைக்காகக் கிளம்பிய கணவன் கரம் பிடித்துத் தடுத்த லீலா, “அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தது யாரு என்னன்னு ஏதாவது விஷயம் தெரிஞ்சதா? அது யாருன்னு தெரியாம உங்களை வெளியே அனுப்புறதுக்கு எனக்குப் பயமா இருக்கு.” என்றாள்.

     மனைவியின் அக்கறையில் கோபம் வர, “உங்க தங்கச்சிங்க தான் முக்கியம் னு இத்தனை நாளா உங்க வீட்டில போய் இருந்தீங்களே. அப்ப இந்த ஞாபகம் வரலையா?” சற்றே கடுப்பாகக் கேட்டான்.

     “ஏன் இப்படிப் பேசுறீங்க. நான் அங்க இருந்தாலும் என்னோட மனசெல்லாம் உங்களைச் சுத்தி தான் இருந்தது. உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு தினமும் சாமிகிட்ட வேண்டிக்கிட்டு தான், என்னோட நாளையே நான் ஆரம்பிச்சிக்கிட்டு இருந்தேன்.” என்றாள் தலைகுனிந்தபடி.

     “எனக்கு ஒன்னும் ஆகாது லீலா. அன்னைக்கு வந்தது யாரு என்னன்னு இப்ப வரைக்கும் ஒன்னும் தெரியல. இருந்தாலும் கொஞ்ச நாளைக்கு நீங்களும் பத்திரமா இருந்துக்கோங்க.” என்றான்.

     “இங்க, இந்த வீட்டில் நான் இருக்கும் போது என்னைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். உங்களோட முழுக் கவனமும் உங்க மேலே இருக்கட்டும். பத்திரமாப் போயிட்டு வாங்க.” வரவிருக்கும் ஆபத்தை உணராமல், கணவனைப் பத்திரமாக அனுப்பி வைத்தாள் லீலா.

     “ருக்கு நான் அவசரமா வெளிய கிளம்புறேன். சாப்பாடு வெளியிலே பார்த்துக்கிறேன்.” தெய்வா கிளம்பவும், அவன் முகத்தையே பார்த்தபடி, “ஏங்க வெளியூர் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்களே.” கதவின் பின் மறைந்திருந்தபடிக் கேட்டாள்.

     முதலில் அதைக் கவனிக்காதவன், “முக்கியமான கேஸ் ஒன்னு வந்திருக்கு ருக்கு. ஒரு பொண்ணை அவளோட மாமியார் வீட்டில் பயங்கரமா கொடுமைப்படுத்தி இருக்காங்க. அது என்ன ஏதுன்னு விசாரிக்கப் போகணும்.” என்றவன் அதன் பிறகே மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்து அவள் கேள்விக்கான அர்த்தத்தை சரியான முறையில் கிரகித்துக்கொண்டான்.

     சின்னதாய் வெட்கப் பூ பூக்க, “இந்த கேஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் கண்டிப்பா லீவ் அப்ளை பண்றேன்.” கண்சிமிட்டி சொல்ல, புன்னகையுடன் தலையசைத்தாள் அவன் மனைவி.

     அடுத்த சில மணி நேரத்தில், நாகாவைத் தேடி அவன் நண்பன் சரண் வீட்டிற்கு வந்திருந்தான். “வாடா நல்லவனே பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. சொல்லாமக் கொள்ளாம வந்து இருக்கியே, ஏதும் விஷேசமா.” நண்பனை வரவேற்றான் நாகா.

     “எனக்கு என்னடா விஷேஷம். உனக்குத் தான் பெரிய விஷேஷம் நடந்து இருக்கு போல. வாட்ஸப் ஸ்டேட்டஸ் எல்லாம் பலமா இருக்கு. தடுக்கி விழுந்தத்தைக் கூட சொல்லிக்கிட்டு இருந்த நீ, இதை என்கிட்ட சொல்லவே இல்ல. ட்ரீட் ஏதாவது கேட்டுடுவேனோன்னு பயந்துட்டியா என்ன.” என்க, முறைத்தான் நாகா.

     அதையெல்லாம் பொருட்படுத்தாமல், “அப்பாவாகப் போற வாழ்த்துக்கள் மச்சான். அதுசரி, நீ பேசின பேச்சுக்கு இந்த மாதிரி நல்ல விஷயம் எல்லாம் பத்து வருஷம் ஆனாலும் நடக்காதுன்னு நினைச்சேன். பரவாயில்லை சீக்கிரம் நிகழ்த்திக் காட்டிட்ட, கெட்டிக்காரன் தான்.

     சண்டை சண்டையா இருந்தாலும் காரியத்திலும் கண்ணா இருந்திருக்கீங்க புருஷனும், பொண்டாட்டியும். சரி இப்பவாச்சும் உன் பொண்டாட்டி மேல இருந்த சந்தேகம் முழுசா போயிடுச்சா, இல்ல கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் வைச்சிருக்கியா?” வந்தவன் தான் ஒரு வக்கீல் என்பதைக் காட்ட திறந்த வாயை மூடாமல் பேசிக்கொண்டு இருந்தான்.

     “டேய் அவ வரா கொஞ்சம் அடக்கி வாசி.” என்றான் நாகா. பொண்டாட்டிக்கு ரொம்பத் தான் பயப்படுற எனச் சிரித்தபடி சரண் திரும்ப, “வாங்க” என்று சம்பிரதாயமாய் அழைத்தாள் ஊர்மி.

     “நாகா உன் பொண்டாட்டிகிட்ட என்னை இன்ட்ரோ கொடுக்க மாட்டியா?” இன்று வாங்காமல் போவது இல்லை என்னும் முடிவோடு வந்தவன் போல் கேட்டு வைத்தான் சரண்.

     “நான் சொன்னேன் இல்ல, என்னோட ப்ரண்டு சரண். அது இவன் தான்.” தலையைக் குனிந்தபடி சொன்னான் நாகா.

     “ஓகோ இந்த விளக்குமாறு கூட சேர்ந்த செறுப்பு நீதானா.” மனதில் நினைத்தபடி, “நீங்க தானா அது, உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்காரு காபி எடுத்துக்கோங்க.” என்றாள் ஊர்மி.

     “என்னடா உன் பொண்டாட்டி பார்வையே சரி இல்லை. என்னைப் பத்தி என்னடா சொல்லி வைச்ச.” சரண் கேட்கவும், “காபியை குடிச்சிட்டு அப்படியே போயிட்டன்னா உன்னோட மானம், மரியாதை காப்பாத்தப்படும். இல்லைன்னா நடக்கிற சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்ல.” கோபத்தில் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க நின்று கொண்டிருந்த மனைவியைப் பார்த்தபடி சொன்னான் நாகா.

     அது ஒரு எச்சரிக்கை போல் இருக்க, அது சரணிடம் வேலையும் செய்தது. “மறந்தே போயிட்டேன் நாகா, எனக்கு ரொம்ப முக்கியமான ஒரு வேலை இருக்கு. நான் கிளம்புறேன்.” என்றுவிட்டு மரியாதை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தான் சரண்.

     மருத்துவமனையில் வழக்கமான செக்கப் வரும் ஒருவரின் ரிப்போர்ட்டை பார்வையிட்டுக்கொண்டிருந்த செல்வாவை நோக்கி வந்த பாஸ்கர், “செல்வா ஒரு சீரியஸ் கேஸ், சீக்கிரம் வா.” என்க, இருக்கையை விட்டு எழுந்து சென்றான் செல்வா.

     “யாரோ ஒரு பொண்ணு தற்கொலை முயற்சி பண்ணி மாடியில் இருந்து குதிச்சிருக்காங்க. கை, கால், தலையில் பயங்கர அடி. நீதான் இராசிக்காரன் ஆச்சே. நீ கை வைச்சு அந்தப் பொண்ணு பிழைச்சிக்கிட்டா, ரொம்ப சந்தோஷம்.”  பேசிக்கொண்டே செல்வாவுடன் நடந்தான் பாஸ்கர்.

     “போலீஸ் கு சொல்லியாச்சா?” செல்வா கேட்க, “அட்மிட் பண்ணதே போலீஸ் தான். வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்துக் குதிச்சிருக்கும் போல. அசையாமக் கிடக்கவும் பக்கத்து வீட்டு ஆட்கள் இறந்துட்டதா நினைச்சு போலீஸ் கு போன் பண்ண, அவங்க பார்த்து உயிர் இருக்கவும் இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க.” என்றான் பாஸ்கர்.

     வேகவேகமாக அறை உள்ளே சென்ற செல்வா, பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்து அதிர்ந்து போனான். லேகா என்று அவனையும் அறியாமல் உதடுகள் பெயர் உச்சரித்தது. கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.

     “டேய் செல்வா, இது நம்ம லேகா டா.” என்ற பாஸ்கர் திரும்பி சிலையென நின்றிருந்த செல்வாவை உலுக்கி சுயநினைவுக்கு கொண்டு வந்தான்.

     செல்வாவும், பாஸ்கரனும் காயத்தை ஆராய ஆரம்பிக்க, ஏகப்பட்ட எலும்புகள் உடைந்திருக்கும் போலத் தோன்றியது அவர்களுக்கு.

     “பாவம் எவ்வளவு வலிக்கும்.” உள்ளுக்குள் பதறினான் செல்வா. தெரிந்த பெண், பல நாள்கள் பழகியவர்கள் என்கிற பாசம் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருந்தது.

     தலையில் கட்டு போட்டிருப்பதையும் தாண்டி அவளுடைய தலையில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்க, இது எதையும் பார்க்க மனம் இல்லாமல் வெளியே வந்தான் செல்வா.

     “எல்லா கேஸிலும் ரொம்பப் பொறுப்பா இருக்கிற நம்ம தெய்வராஜ் சார் எப்படி இந்தப் பொண்ணு விஷயத்தில் மட்டும் இவ்வளவு அஜாக்கிரதையா இருந்தாருன்னு தெரியல.

     இந்தப் பொண்ணு அவளோட மாமியார் மேல கம்ப்ளைண்ட் கொடுக்க இரண்டு, மூணு தடவை நம்ம ஸ்டேஷனுக்கு வந்துச்சு. ஆனா என்ன நினைச்சாரோ சார் அந்த கம்ப்ளைண்ட்டை எடுத்துக்கவே இல்ல.

     ஒருவேளை அந்தக் கம்ப்ளைண்ட்டை எடுத்து இந்தப் பொண்ணோட மாமியாரை சார் கண்டிச்சு இருந்திருந்தா, இதெல்லாம் நடந்திருக்காது. பாவம் இந்தப் பொண்ணு பக்கத்து வீட்டுக்காரங்க எப்ப பார்த்தாங்களோ எவ்வளவு நேரம் இப்படியே இருந்துச்சோ தெரியலையே.” என்றான் லேகாவை மருத்துவமனையில் அனுமதித்த காவலர்களில் ஒருவன்.

     “செல்வாவிற்கு, தெய்வாவின் மேல் கோபம் கோபமாக வந்தது. அந்தக் கோபத்திற்கு மேலும் எண்ணெய் ஊற்றும் விதமாக பாஸ்கர் வந்து ஸீ இஸ் டெட் டா.” என்றான் கரகரத்த குரலில்.

     செல்வாவால் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வானம்பாடியாய் உலகைச் சுற்றித் திரிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். இத்தனை சீக்கிரத்தில் வானிடமே சென்றுவிட்டாளே என்று உள்ளம் வருந்தினான். லேகாவின் மரணத்திற்கு தெய்வாவே பொறுப்பு என்பதாய் அவன் மனம் கூச்சலிட வேகவேகமாக அங்கிருந்து கிளம்பினான்.

     விபத்தை ஏற்படுத்தாமல் அவன் வீடு வந்து சேர்ந்தது அதிசயம் தான். “தெய்வா, டேய் தெய்வா எங்கடா இருக்க.” வீட்டிற்குள் கால் எடுத்து வைக்கும் போதே கத்திக்கொண்டே தான் வந்தான்.

     லேகாவின் செய்கையால் ஏற்கனவே நல்ல தலைவலியில் வீடு வந்து சேர்ந்திருந்த தெய்வா, தலைவலிக்கு இதமாக மனைவியின் கரத்தால் போடப்பட்ட தேநீரை வரவேற்பறையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான்.

     அவசரக் கோலத்தில் வீட்டினுள் வந்த செல்வா, தம்பியின் சட்டைக் காலரைப் பிடித்து எழுப்பி நிற்க வைத்து, “ஏன்டா இப்படிப் பண்ண. உன்னால இன்னைக்கு ஒரு உயிர் போயிடுச்சு. அதைப் பத்தி எந்தக் கவலையும் இல்லாம நீ இங்க நிம்மதியா உட்கார்ந்துட்டு இருக்க இல்ல.” என்றான்.

     “ப்ச் செல்வா உனக்கு எப்ப எப்படி நடந்துக்கணும் னு கொஞ்சம் கூட அறிவே கிடையாதா. கெஸ்ட் முன்னாடி என்ன பண்ணிட்டு இருக்க.” கோபத்தை மறைத்து மென்மையாகச் சொன்னான் தம்பிக்காரன்.

     “யாரு வந்தா எனக்கென்ன, லேகாவே போயிட்டா.” செல்வா கண்களில் கண்ணீருடன் சொல்ல, “லேகாவா என்ன புதுக் கதை சொல்ற.” விசித்திரமாகப் பார்த்தான் தெய்வா.

     “நான் காதலிச்ச பொண்ணு லேகா. அவ என்னை விட்டுட்டு இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்காணாத தூரத்தில் இருந்தாலும், சந்தோஷமா இருக்கான்னு இவ்வளவு நாளா நிறைவா இருந்தேன் டா. இன்னைக்கு உன்னோட அஜாக்கிரதையால அவளோட உயிர் போயிடுச்சு.

     நீ ஏன்டா இப்படிப் பண்ண. மாமியார் கொடுமைப் படுத்துறாங்கன்னு உன்னோட ஸ்டேஷனுக்கு இரண்டு, மூணு தடவை கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்கா. நீ மட்டும்  ஒழுங்கான முறையில் விசாரணை பண்ணியிருந்தா இந்நேரத்துக்கு லேகா உயிரோடு இருந்திருப்பா. அவ செத்ததுக்கு நீதான் காரணம், நீ மட்டும் தான் காரணம்.” ஆக்ரோஷமாய் சொன்னான் செல்வா.

     “செல்வா, எல்லாம் தெரிஞ்ச மாதிரிப் பேசாத. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு. உனக்கு அப்புறமா நான் எல்லாத்தையும் விவரமா சொல்றேன்.” வழக்கத்திற்கு மாறாக பொறுமையாகப் பேசினான் தெய்வா.

     “இனி நீ எனக்கு விவரமா எடுத்துச் சொல்லி என்ன பிரயோஜனம். போன உயிர் திரும்ப வருமா டா. எனக்குப் புரிஞ்சு போச்சு, நீ எதுக்கு அவ கம்ப்ளைன்ட் எடுக்கலன்னு. என்ன அவ மாமியார் கிட்ட இருந்து நீ பணம் வாங்கினியா?

      நம்ம அப்பாகிட்ட இல்லாத பணமா. அப்புறம் ஏன்டா இப்படி. உன் தன்மானத்தை விட்டு நீ வாங்கின லஞ்சத்தால இன்னைக்கு ஒரு உயிரே போயிடுச்சு.” என்ன பேசுகிறோம், எதிரில் இருக்கும் தன் உடன் பிறந்தவன் நிஜத்தில் அப்படிச் செய்யக்கூடியவன் தானா என் எந்த யோசனையும் இல்லாமல் கண்டபடி பேசினான் செல்வா.

     “செல்வா வாய்க்கு வந்ததை உளராத. கொஞ்ச நேரம் அமைதியாய் இருன்னு சொல்றேன்ல. லீலா உங்க புருஷனை கூட்டிட்டு கொஞ்சம் உள்ள போறீங்களா.” அண்ணன் தம்பி சண்டைக்கு நடுவில் போவதா வேண்டாமா என்கிற குழப்பத்துடன் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த அண்ணன் மனைவியிடம் கத்தினான் தெய்வா.

     “நான் ஏன் உள்ள போகணும். நான் போக மாட்டேன். உன்னோட கெஸ்ட் முன்னாடி உன் மானம் போயிடும் னு பயமா இருக்கா. லேகாவுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும். அவ மாமியாரால் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிருந்தா போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்திருப்பா.

     நீ ஏதாவது பண்ணுவன்னு உன்னை நம்பி உன் கிட்ட வந்த அவளை அநியாயமாக் கொன்னுட்டியே டா. வாழும் போது தான் ஒழுங்கா வாழல. சாவு கூட அவளுக்கு நல்ல சாவு இல்லடா. அத்தனை எலும்பு உடைஞ்சு துடிதுடிச்சி செத்துப் போயிட்டா.” கண்ணீருடன் சொன்னான் செல்வா.

     ருக்கு, ஊர்மி, தேவகி மூவருக்கும் செல்வாவின் பேச்சில் பெரிய அதிருப்தி. அக்காள் கணவனுடைய காதல் வேப்பங்காயை விட மோசமாகக் கசந்தது அவர்களுக்கு.

     கோபம் கொள்ள வேண்டியவளோ கணவனைச் சமாதானப் படத்த நினைத்து, “என்னங்க, வாங்க நம்ம ரூமுக்குப் போகலாம். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.” என்றாள்.

     அவன் அசைந்து கொடுக்காமல் தெய்வாவிடம் சண்டைக்கு நிற்பது போல் நின்று கொண்டிருக்க, தன் பலத்தை ஒன்று திரட்டி கணவனை தங்கள் அறையை நோக்கி இழுத்தாள். அதில் கடுப்பான செல்வா அவளை எதிர்பக்கம் தள்ளிவிட்டான். கீழே விழுந்தவளை வேகமாக வந்து தூக்கிவிட்டாள் ருக்கு.

     “மிஸ்டர் தெய்வராஜ் என்ன இதெல்லாம். உங்க அண்ணன் என்னென்னமோ சொல்றாரு, அதெல்லாம் உண்மையா. இது மட்டும் உண்மையா இருந்தா நீங்க ரொம்பப் பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.” இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தெய்வாவின் விருந்தாளி வாயைத் திறந்தார்.

     அதற்குப் பிறகே வந்திருப்பவர் தெய்வாவின் மேலதிகாரி என்று உணர்ந்து கொண்டான் செல்வா. தனக்குப் பிரியமானவளாக இருந்த ஒரு நல்ல பெண்ணைக் கொன்றவனுக்கு குறைந்த பட்ச தண்டனையாவது நிச்சயம் வாங்கிக் கொடுத்தாக வேண்டும் என்கிற தீர்மானத்தில், “நீ எனக்கு வேற எதுவும் பண்ண வேண்டாம். எதுக்கு லேகா கொடுத்த கம்ப்ளைன்ட்டை நீ எடுத்துக்கல, அதுக்கு மட்டும்  பதில் சொல்லிட்டுப் போ.” என்றான். தெய்வா பதில் சொல்லாமல் அமைதி காத்தான்.

     அந்த அமைதியே செல்வா சாற்றிய குற்றம் அனைத்தும் உண்மை என்பது போல் காட்ட, “மிஸ்டர் தெய்வா நான் இதை உங்க கிட்ட இருந்து கொஞ்சம் கூட எதிர் பார்க்கல.

     பல கொள்ளை சில கொலைகளில் சம்பந்தப்பட்ட ஒரு கொள்ளைக்காரனை சேஸ் பண்ணி போய் ஒத்த ஆளா பிடிச்சிட்டு வந்தீங்கன்னு உங்க வீரத்தைப் பாராட்டி இத்தனை நாளா ஹோல்டில் இருந்த உங்களோட ப்ரமோஷன் ஆடரை நானே குடுக்கலாம் னு வீடு தேடி வந்தேன்.

     ஆனா இங்க வந்து பார்த்தா விஷயம் வேற மாதிரி இருக்கு. உங்களோட ப்ரமோஷனை நான் மறுபடியும் ஹோல்ட் பண்றேன். இந்தச் சம்பவத்துக்கான சரியான பதிலைச் சொல்லிட்டு உங்களுக்கான ஆர்டரை வாங்கிக்கோங்க.

     இதே மாதிரி இன்னொரு முறை நடந்தா உங்களோட சஸ்பென்ஷன் ஆர்டர் உங்களைத் தேடி வரும். அதுக்கு நீங்களே வழிவகுத்துக்காதீங்க, நான் வரேன்.” என்றுவிட்டு அவர் சென்றுவிட, நின்ற இடத்தில் இருந்து பூமியை உடைத்துக்கொண்டு வெளியே வரும் கொதிநீர் ஊற்றைப் போல சீற்றத்துடன் நின்று கொண்டிருந்தான் தெய்வா. அவனுக்கு நிகரான கோபத்துடன் உனக்கு இந்த தண்டனை பத்தாது என்பது போல் நின்றிருந்தான் செல்வா.

     வடிவேலு, அரசு, தர்மா, நாகா என அனைவரும் வெளியே சென்றிருக்க இவர்கள் இருவரும் இருக்கும் நிலையைப் பார்த்தாலே ஏதோ பெரிய விவகாரம் நடக்கப் போகிறது என்று மட்டும் புரிந்தது பெண்களுக்கு. அதனால் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தனர்.

     “ஊர்மி உன் ரூமுக்கு போ.” கர்ப்பிணித் தங்கையை கலவரம் நடக்க இருக்கும் இடத்தை விட்டு அப்புறப்படுத்தப் படுத்தப் பார்த்தாள் லீலா.

     “அக்கா நீங்க தனியா எப்படிச் சமாளிப்பீங்க.” ஊர்மி வெகுவாகத் தயங்கினாள்.

     “தேவகி, ஊர்மியைக் கூட்டிக்கிட்டு ரூமுக்குள்ள போய், கதவைச் சாத்து. வடிவேல் மாமாவுக்கு போன் பண்ணி உடனடியா வீட்டுக்கு வரச் சொல்லு.” லீலா அடுத்தடுத்து செய்ய வேண்டியதைப் பட்டியலிட்டாள். பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த தேவகியும், வேறு எதுவும் பேசாமல் ஊர்மியை அழைத்துக் கொண்டு சென்றாள்.

     அண்ணன், தம்பி இருவருக்கும் நடுவில் இருந்த பேச்சுவார்த்தை கைகலப்பாக மாற, தெய்வா தன் கோவம் அனைத்தையும் ஒன்று திரட்டி செல்வாவின் கன்னத்தில் அறைந்தான்.

     தெய்வாவிற்கு அவன் மேலதிகாரியிடம் கிடைத்த கண்டிப்பில் சற்றே மட்டுப்பட்டிருந்த செல்வாவின் கோவம் மீண்டும் தூண்டப்பட, தானும் பதிலுக்குத் தம்பியைத் தாக்கினான். ஒன்று ஒன்றாக ஆரம்பித்த தாக்குதல் நொடிக்கு நான்கு குத்துகளாக வேகம் பிடிக்க பயம் வந்தது லீலாவிற்கு.

     சண்டை பிடிக்காத அண்ணன், தம்பிகள் இருக்க முடியாது தான். ஆனால் வயது என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? சின்ன வயதில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் குழந்தைகள் சில மணி நேரத்தில் கோபத்தை மறந்து சேர்ந்து விடுவார்கள். காரணம் அவர்களின் கள்ளம் இல்லாத வயது.

     இப்போது இருப்பதோ கள்ளம் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்திருக்கும் வயது என்பதால், எங்கே வடிவேலு என்னும் மெல்லிய இழையில் கட்டப்பட்டிருக்கும் பட்டங்கள் நான்கும், இந்தச் சண்டையைச் சாக்காக வைத்து நான்கு திசையாகப் பறந்துவிடுமோ எனப் பயந்தாள்.

     உடன்பிறந்த இரட்டையர் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்க, அவர்களைக் கட்டுப்படுத்தா விட்டால், தங்கள் வீட்டிலும் ஒரு மரணம் நிகழ்வது உறுதி என்ற நிலை வர தன் கணவனைக் கட்டுப்படுத்த நினைத்து நடுவில் சென்றாள் லீலா.

     போர் என்று வந்துவிட்டால் ராஜாக்களை விட இராணிகளுக்குத் தான் இழப்பு அதிகம். அந்த வகையில் சண்டையிடும் குடும்ப ஆண்களுக்கு நடுவில் சென்ற லீலாவிற்கும் தெய்வாவின் கையால் ஒரு அடி கிடைத்தது. போலீஸ்காரன் அடி இடியென விழ பாவம் அவள் சுருண்டு விழுந்தாள்.

     செல்வாவிற்கு இன்னமும் தான் கோபம் வந்தது. “ஒருத்தியைக் கொன்னது பத்தாதுன்னு இப்ப லீலாவையும் கொல்லப் பார்க்கிறயா?” என மீண்டும் தம்பியின் சட்டைக் காலரைப் பிடித்தான்.

     “அவளை யார் குறுக்க வரச் சொன்னது. உன் நல்ல நேரம் ஒவ்வொரு முறையும் உனக்கு வர பிரச்சினையில் இருந்து அவ உன்னைக் காப்பாத்திக்கிட்டே இருக்கா. அந்த அடி மட்டும் உன் மேல விழுந்து இருந்துச்சு, அதே இடத்தில் நீ சுருண்டு விழுந்து செத்து இருப்ப.” என்றான் தெய்வா.

     “இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் நீ கொஞ்சம் கூட மாறவே இல்லல்ல. உனக்குக் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியாவே இல்லையா? நீ எல்லாம் என்ன தான் மனுஷனோ, நீ உயிரோட இருக்கிறதுக்குப் பதிலா செத்திடு. நாங்களாவது நிம்மதியா இருப்போம்.” சாகக்கிடக்கும் ஒவ்வொருவரையும் காப்பாற்றும் உயரிய பொறுப்பில் இருக்கும் மருத்துவன் செல்வா, இன்று தன் மதி இழந்து நல்லபடியாக இருக்கும் ஒரு ஜீவன் இறந்தால் நன்றாக இருக்கும் என்று வார்த்தைகளை விட்டான்.

     “நான் எதுக்குடா சாகணும், நீ சாவு. இன்னொருத்தன் பொண்டாட்டியை என் லேகான்னு வாய் கூசாமச் சொல்றியே, அவ கூடவே போய் சேர்ந்திடு.” சொல்லிக்கொண்டே பலமாகத் தாக்கினான் தெய்வா. செல்வாவின் உதட்டோரம் இரத்தம் வடிந்தது.

     “என்னைப் பத்தியோ லேகாவைப் பத்தியோ பேசுற தகுதி உனக்குக் கிடையாது. உனக்கு ஞாபகம் இருக்கா, ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு காலேஜ் பொண்ணைக் கூட்டிட்டு அபார்ஷனுக்காக வந்திருந்தியே. அன்னைக்கு அந்த ஹாஸ்பிடலில் நானும் இருந்தேன். அப்பவே நான் உன்னைப் பத்தி அப்பாகிட்ட சொல்லி இருந்தா, இவ்வளவு நாள் நீ மரியாதையோடு இந்த வீட்டுக்குள்ள சுத்திகிட்டு இருந்திருக்க மாட்ட.” கோபத்தில் இதுநாள் வரை சொல்ல வேண்டாம் என மனதோடு வைத்திருந்த விஷயத்தை தேங்காய் உடைப்பது போல் போட்டு உடைத்திருந்தான் செல்வா.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. உங்களுக்கு இந்த ரவுடிங்க எல்லாம் எவ்வளவோ தேவலை … என்ன இப்படி அடிச்சிக்கிறீங்க … படிச்சிருக்கீங்க தான … என்ன பிரச்சனை யார் தப்பு ஏதும் கேட்காம செல்வா பண்ணது தப்பு தான் … கோபத்துல யார் பக்கத்தில இருந்தாலும் அடிப்பாங்க போல அண்ணனும் தம்பியும் …

  2. இந்த அத்தியாயம் நீங்க சீரிஸ் ல சேர்க்க ல போல … செக் பண்ணுங்க சகி