Loading

யான் நீயே 20

பிரேம் அன்று தான் பெங்களூரிலிருந்து வருகிறான். நாச்சிக்கு நலங்கு முடியும் நேரம், பெரியவர் ஒருவர் பேசிய விளையாட்டுப் பேச்சுக்கு வசந்தி தன் முகத்தை காட்டிச் சென்றிருக்க… அந்த சூழலில் யார் யாருக்கென பார்ப்பதென்று தெரியாது ஒருவர் முகம் ஒருவர் பார்த்தபடி இருக்க…

மதுரை வந்துவிட்டதாக பிரேமிடமிருந்து வீரனுக்கு அழைப்பு வர, லிங்கத்தை அழுத்தமாக பார்த்துவிட்டு வீரன் மதுரை கிளம்பிவிட்டான்.

“நாச்சியை உள்ளார கூட்டிட்டுப்போ மீனாள்.” அபிராமி சொல்லிட அழுத விழிகளை துடைத்தபடி நாச்சியை மீனாள் அழைத்துச் சென்றிட, என்ன செய்வதென்று தெரியாது செல்லும் மீனாளையே பார்த்தவாறு நின்றிருந்த லிங்கத்தின் தோளில் இடித்த அங்கை…

அவனின் தோள் மீது கையை வைத்து நின்றவளாக, மற்றொரு கையால் பொடி கற்கண்டை வாயில் போட்டவாறு,

“மாமாக்கும் அக்காக்கும் வூடால ஏதும் சம்த்திங் சம்த்திங் இருக்குமாட்டியே மாமா!” என்றாள்.

தன்னை இடித்தவாறு கற்கண்டில் கண்ணாக நிற்பவளை மேலும் கீழும் பார்த்தவன், தன்னுடைய உயரத்தை சற்றே குறைத்து நகர, அவனின் தோள் மீது கை வைத்திருந்தவள் தடுமாறி நிலைபெற்றாள்.

“மாமா” என்று அங்கை காலினை தரையில் உதைக்க…

“ரொம்ப ஓவரா போயிட்டிருக்க நீயி. சின்னப்புள்ள மாறி நடந்துக்க, பேசு” என்றான். பற்களை கடித்து.

“சும்மா சின்னபுள்ளைன்னு சொல்லாத மாமா… எல்லாம் உன்னை கட்டிக்கிடுற வயசுதேன்” என்றிட, அடிக்க கையை ஓங்கியிருந்தான். அவள் மிரண்டு பார்க்க, தன் நெற்றியில் தட்டியவனாக சுற்றி யார் இருக்கிறார்கள் என்று பார்வையை சுழற்றினான். இடமே காலியாக இருந்தது. உறவினர்கள் அனைவரும் சென்றிருக்க, அபிராமியும் மீனாட்சியும் கூட மகாவுடன் மீனாளின் நிச்சய வேலையை கவனிப்பதற்காக மருதனின் இல்லம் அப்பவே சென்றிருந்தனர்.

“லவ்வு லவ்வுன்னு பின்னாடியே சுத்தி வெறுக்க வச்சிப்புடாத அங்கை” என்று அழுத்தமாகக் கூறியவன், வேட்டியை மடித்துகட்டியபடி சென்றுவிட்டான்.

எப்போதும் சின்னக்குட்டி என்று அவனது கைக்குள்ளே வைத்துக்கொண்டு சுற்றுபவன் இன்று அடிக்க வந்ததை அங்கையால் ஏற்கமுடியவில்லை என்பதைவிட நம்ப முடியவில்லை.

லிங்கம் கை ஓங்கியதிலேயே மரித்து உறைந்திருந்தாள்.

“அவனுக்கு டைம் கொடு சின்னக்குட்டி! நீயும் படிப்பை மட்டும் பாரு” வீரன் சொல்லியது காதில் ஒலித்தது.

‘மாமா சொன்னமாறி அவசரப்படாம ஸ்பேஸ் கொடுத்திருக்கணுமாட்டி’ என்று நினைத்தவளுக்கு, எப்போது சீண்டினாலும் பொறுமையாக எடுத்து சொல்பவன், இன்று அடிக்கவே கை நீட்டியிருக்கிறான் என்றால் அவனால் எப்போதும் தன்னுடைய நேசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதானே உண்மை என தனக்குத்தானே நினைத்து மருகியவள், நாச்சியும் மீனாளும் இணைந்துவர முகத்தை சீர் செய்து அவர்களுடன் சென்றாள்.

சிறு பிள்ளை என்பது அவளின் தவறான கணிப்பே எடுத்துக்காட்டுகிறது. இதனை நாம் சொன்னால் ஏற்கும் ஆளா அங்கை.

‘மீனாள் மற்றும் வீரனின் காதலில் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே! தன் கண் முன்னே தன்னுடைய உடன் பிறந்தவனின் சந்தோஷம் காணமல் போகவிருக்கிறதே!’ என்று முதல் நாள் இரவிலிருந்து ஒருநிலையில்லாது உழன்று கொண்டிருந்த லிங்கத்திற்கு, அன்றைய நிகழ்வின் முடிவில் நடைபெற்ற பேச்சினை ஏற்றுக்கொள்ள முடியாது, இருவரையும் சேர்த்திட ஏதும் வழிகிடைக்காதா என மண்டையை உருட்டிக்கொண்டிருந்தவனிடம் வந்து அவனின் மனம் அறியாது அங்கை விளையாடியிருக்க… தன்னுடைய ஆற்றாமையை அவளிடம் காட்டிவிட்டிருந்தான் லிங்கம்.

சொல்லப்போனால் அவனின் மனமும் அங்கையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

அன்று தென்னந்தோப்பில் வைத்து லிங்கம் இது சரிவராது என்று சொல்லியபோது அவள் அழுகையோடு பேசிய வர்த்தைகளிலேயே அவன் அவள் பக்கம் சரிந்திருந்தான். ஆனால் ஏனோ இந்த காதல் என்ற வார்த்தையில் அவனிடம் ஈடுபாடில்லை.

அங்கையை நிரம்பவே பிடிக்கும். வீட்டில் அவள் தான் உனக்கானவள் என்று திருமணம் ஏற்பாடு செய்தால் மறுத்திடாது மணந்து கொள்வான். அவள் காதலென்று பிதற்றுவத்துதான் அவனுக்கு கடுப்பாக இருக்கிறது.

அன்று அங்கை பள்ளியில் வைத்து சொல்லிய வார்த்தையில் மொத்தமாக அவளிடம் தன்னை தொலைத்திட்டான். ஆனால், காதலென்ற வரையறைக்குள் அதனை நிறுத்திட மறுக்கிறான்.

அங்கை கௌசிக்குடன் இயல்பாய் பேசுவதும் அவனுள் உரிமை உணர்வைத் தோற்றுவிக்கிறது. காரணம் புரிகிறது. இருப்பினும் காதலென்று கூவிடும் மனதை தட்டி வைக்கின்றான்.

அங்கையை அடிக்க சென்றதை நினைத்து வருந்தியபடி, அவள் பக்கம் இழுக்கப்படும் தன் இதயத்தில் அவளின் காதல் சுவடுகளை அலசியபடி தென்னந்தோப்பினை கடந்து மருதனின் வீட்டிற்கு வந்து சேர்ந்த லிங்கம்,

‘மனசுல கெடந்து சலம்பாம மொத படிச்சு முடிடி சின்னகுட்டி. பொறவு வந்து சொல்லு… சந்தோஷமா ஏத்துகிடுறேன்’ என்று மனதோடு அவளிடம் உரையாடிவன் தன் காதலை ஒதுக்கி வைத்துவிட்டு, தன்னுடைய அண்ணனின் நேசத்தை சேர்த்து வைப்பதற்காக மருதனை தேடினான்.

மீனாள், கௌதம் நிச்சயம் இரு வீட்டு ஆட்களுடன் என்று மட்டும் முடிவு செய்து… மருதனின் வீட்டில் அதற்குண்டான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்க… மருதனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்கு பின்பக்கம் சென்றான் லிங்கம்.

என்னவென்று கேட்டபடி அவனின் இழுப்பிற்கு சென்ற மருதன்,

“என்னன்னு அங்கனவே சொல்ல வேண்டியதுதாம்டே! பொறத்தால எதுக்கு இழுத்துகிட்டு வர?” எனக் கேட்டார்.

“இந்த நிச்சயத்தை மொத நிறுத்து மாமா!” அவனின் குரல் அதிகாரமாக ஒலித்ததோ?

“என்னடே உன் அயித்த சொல்லி கேக்கலன்னுட்டு உன்னைய பேச சொன்னாளாக்கும்?” என்றார் சிரிப்போடு.

“அச்சோ மாமா” என்ற லிங்கம், “அண்ணேக்கு” என்று ஆரம்பிக்க…

“மாமா” என்று சத்தமாக கூப்பிட்டபடி வீரன் அருகில் வந்திருந்தான்.

“பிரேம் வந்துட்டியான். போய் பாருங்க” என்று மருதனிடம் தன் தம்பியை முறைத்துக்கொண்டே வீரன் சொல்ல…

“அவனை அந்த வேலையும் வேணாம், ஒன்னும் வேணாமின்னு இங்கனவே வர சொல்லணும். அவென் கல்யாணடத்துக்குக்கூட நாலு நாள் முன்ன வரான் பாரு” என்று பிரேமை திட்டிக்கொண்டே லிங்கத்தை மறந்தவராக உள்ளே சென்றுவிட்டார்.

“என்ன பண்ண நெனக்கிற நீயி?” வீரன் காட்டமாகத்தான் வினவினான். என்றும் தன் தம்பியிடம் அதிர்ந்துகூட பேசிடாதவன் அத்தனை கோபமாகக் கேட்டிருந்தான்.

“என்ன பண்ண சொல்றண்ணே! உனக்காக நீயும் எதுவும் கேட்டுக்கமாட்ட… மீனாளும் மனசு முழுக்க உன்னைய வச்சிக்கிட்டு அழ செய்றாளே தவிர எதுவும் பண்ணுவும்… வெரசா ஒரு முடிவெடுப்போன்னு எடுக்குறாளா? கண்ணுல அருவியை மட்டும் திறந்து விட்டுக்கிறா” என்று பொரிந்த லிங்கம், “அவ தான் ஏதோ வருத்தத்துல கம்மின்னு இருக்காள். நீயி ஏண்ணே இப்படி மௌனமா இருக்குற? நாளைக்கு உக்கி உக்கார போறது நீங்க ரெண்டேறும் தான்” என்றான்.

“எனக்காகன்னு என்னைய பேச சொல்றியே! நான் பேசி உன் மீனாக்குட்டி என்கிட்ட சொன்ன மாதிரி வேணாமின்னு சொல்லிட்டாக்கா? ரெண்டு குடும்பத்துக்கும் மனவலியாகிப்போவுமே!” என்றான் வீரன்.

“அதுக்கு?”

“எனக்கு வேணுமின்னு நான் அழுத்தமா சொல்லிப்புட்டேன். அவளுக்கு நான் வேணுமின்னா அவ தான் பேசணும்” என்றான் எங்கோ பார்த்தபடி.

“அண்ணே! வீம்பு புடிக்க இதுவா நேரம்?”

“எனக்கு என் தங்கப்பொண்ணு எம்மேல வச்சிருக்க அன்புல நம்பிக்கை இருக்கு லிங்கு. என்னையத்தவிர வேற யாரையும் அவ பக்கட்டுக்கூட நிக்க விடமாட்டாள். அவளுக்கு நான் என்னைக்கோ ஆத்திரத்தில் சொன்ன வார்த்தை தான் பெருசுன்னாக்கா அவ விருப்பப்படி என்னவும் பண்ணிக்கட்டும். நான் இல்லாட்டியும் அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குமாட்டில… அதை நான் கெடுக்க நெனக்கல, அதைவிட நான் முக்கியமின்னா என்னைய அவ ஏமாத்திப்புடமாட்டாள்” என்றான். வீரனிடம் அத்தனை எதிர்பார்ப்பு. கடைசி நொடியிலாவது நடப்பதையெல்லாம் நிறுத்திவிடுவாளென்று.

வீரனின் நினைப்பை மீனாள் உண்மையாக்கிடுவாளா?

“எனக்கு நம்பிகையே இல்லை. ஆக மொத்தத்துல ரெண்டேறும் சந்தோஷமா இருக்காம… குடும்பத்தையும் பதற வைக்கப்போறீய்ங்க” என்றபடி லிங்கம் சென்றிட…

நேற்று மாலை இயல்பாய் தன்னிடம் ஆறுதலையும் அரவணைப்பபையும் தேடிய மீனாளின் நெருக்கம் அகவிழித் தோன்றி வீரனின் நம்பிக்கையை அதிகரித்தது.

மகா வேண்டா வெறுப்பாக அனைத்தையும் செய்து கொண்டிருக்க, வசந்தி படு உற்சாகமாக நிச்சயத்துக்கு வேண்டியவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

அங்கை லிங்கத்தின் செயலால் உம்மென்று அமைதியாக இருக்க… கௌசிக் காரணம் கேட்டபடி அவளின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தான்.

கௌதம் இதற்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லையென்று தேமேவென நல்லானின் அருகில் அமர்ந்திருந்தான்.

வந்ததும் மருதனிடம் பேசுவதற்கு அவன் பார்க்க… அவரோ நாச்சியின் நலங்கிற்கு சென்றுவிட்டார். அங்கு சென்று என்ன செய்வதென்று கௌசிக்குடன் இங்கேயே இருந்த கௌதமிற்கு இந்நொடி வரை மருதனிடம் பேசிட வாய்ப்புக்கிட்டவில்லை.

மீனாளுக்கு தன் காதல் தெரிந்திருக்க அவளேதும் செய்துவிடுவாள் என்கிற கடைசி நம்பிக்கையுடன் நடப்பதை எதிர்கொள்ளும் துணிவுடன் இருக்கிறான்.

தன்னைமீறி ஏதும் இன்றைய நிகழ்வு நடந்துவிட்டாலும், மருதனிடம் இன்றே பேசிட வேண்டுமென்ற முடிவில் உறுதியாக இருக்கிறான். கௌதமால் அவனுடைய தாய், தந்தையாரிடம் தானே பேசிடமுடியாது. மருதன் புரிந்துகொள்வார் என்கிற எண்ணம்.

லிங்கம் மீனாளின் அறையில் கண்ணாடி முன்பு அமர்ந்திருந்த அவளை முறைத்துக்கொண்டிருந்தான்.

“என்ன முடிவு பண்ணியிருக்க நீயி?”

“மாமா!” மலுக்கென கீழே சொட்டிய விழி நீருடன் அவனை ஏறிட்டாள்.

“கண்ணுல தண்ணி வைக்கிற வேலையெல்லாம் வச்சிகிட்டன்னா செவுலிலே சாத்திப்புடுவேன் சாத்தி. ரெண்டேறும் மனுசனை பாடப்படுத்துறீய்ங்க” என்றவன் மெத்தையில் ஓங்கி குத்தினான்.

“நீயி ஒத்த வார்த்தை சொல்லிப்புட்டின்னா அண்ணே சொடக்குப்போடுற நேரத்துல இந்த ஏற்பாட்டையெல்லாம் நிறுத்திப்புடும்” என்றான்.

“கௌதம் எப்படியும் நிறுத்திப்புடுவியான் மாமா. அவென் சுபா அக்காவை விரும்புறியான்” என்றாள். விசும்பலோடு.

“யாரு? கௌதமா? வசந்தி பெரிம்மா வார்த்தையை மீறி அவென் சுபாவை நேசிக்கிறேன்னு சொல்லிப்புடுவானா? நல்லான் பெரிப்பா பார்வைக்கே அஞ்சி நடுங்குற பய அவென். மொத ஆளா கூடத்துல உட்கார்ந்திருக்கியான்” என்றான். கடுப்புடன்.

“நான் என்ன பண்ணட்டும் மாமா?”

“என்கிட்ட கேட்டாக்கா எனக்கு என்ன தெரியுமாட்டிக்கு?” என்ற லிங்கம், “அண்ணே வெளிய காட்டிக்கிடலானாலும்… உள்ளுக்குள்ள மருகி நிக்குதுடே! நீயி எப்படியும் இதை நிறுத்திப்புடுவேன்னு அம்புட்டு நம்பிக்கையா இருக்குது. நீயா அண்ணே வேணுமின்னு வரணுமாட்டிக்கு நெனக்குது. அண்ணே உசுரை உருவிப்புடாதத்தா” என்ற லிங்கத்திற்கு கண்களே கலங்கிவிட்டன. லாவகமாக உள்ளிழுத்துக் கொண்டான்.

“நீயி இங்கன என்னடே பண்ணுற?” என்று கேட்டவாறு வசந்தி தட்டோடு அங்கு வர, லிங்கம் ஏதும் பேசாது எழுந்து வெளியில் சென்றுவிட்டான்.

“என் ராசாத்தி.” மீனாளின் கன்னம் வழித்த வசந்தி… “ஏத்தா தாவணியோடவே இருக்க… இந்த தட்டுல இருக்குற துணி, நகையெல்லாம் போட்டுக்கிடு மீனாளு” என்றார்.

எவ்வித பிரதிபலிப்புமின்றி மீனாள் இருக்க…

“நான் வேணுமின்னாக்கா ஒத்தாசை செய்யட்டுமா?” எனக் கேட்டார்.

வேண்டாமென்று வேகமாக மறுத்தவள்,

“நானே தயாராகிடுறேன். நேரத்துக்கு கூப்பிடுங்க” என்றாள்.

சரியென வசந்தி சென்றதும் எழுந்து சென்று அறையின் கதவை உள்பக்கமாகத் தாழிட்டுக்கொண்டாள்.

லிங்கம் நடைபெறும் நிகழ்வை ஏற்க முடியாது வீரனின் அருகில் கடுப்புடன் அமர்ந்திருந்தான்.

மனதில் தன்னுடைய உடன்பிறப்பை நிந்தித்துக் கொண்டிருந்தான்.

‘சாகுற நேரம் தெரிஞ்சாக்கூட இப்படி சிரிச்சிகிட்டே இருப்பாங்கப்போல’ என நினைத்தவன், தனக்கு மற்றைய பக்கம் உட்கார்ந்திருந்த கௌதமின் தொடையில் வலிக்க கிள்ளியிருந்தான்.

கௌதம் திடீரென ஏற்பட்ட வலியில் ஆவென்று கத்திட… அனைவரும் அவனை என்னவென்று ஏறிட்டனர்.

“என்னாச்சுடே?” என்று நல்லான் கேட்க…

“சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் பெரிப்பா” என்று பற்களை கடித்தபடி உதட்டை இழுத்து வைத்து கௌதமின் தொடையில் அடித்தவனாக லிங்கம் கூறிட… அவர்களுக்குள் ஏதோ விளையாடிக் கொள்கிறார்களென்று அனைவரும் வேலையை கவனித்தனர்.

“எதுக்குடே இப்படி படுத்துற?” தொடையை தேய்த்துக்கொண்டே கௌதம் கேட்க,

“நீயி மீனாளை கட்டிக்கிட சம்மதிச்சு நிச்சயம் பண்ண உட்கார்ந்திருக்கன்னு சுபாவுக்கு தெரியுமா?” என வினவிய லிங்கத்தின் பார்வையில் அத்தனை சூடு.

“தெரியாது. இன்னும் சொல்லல!” என்றான் கௌதம்.

“அப்போ சுபாவை ஏமாத்த ரெடியாகிப்புட்ட… அப்படித்தானே?”

“ம்ப்ச்” என்ற கௌதம், ‘ஏற்கனவே தானிருக்கும் கடுப்பு தெரியாது இவன் வேற’ என நினைத்தவனாக “உனக்கு எப்படி தோணுதோ அப்படியே வச்சிக்கடே. செத்த என்ன நிம்மதியா வுடு” என்றான்.

லிங்கத்திற்கு அவனை தூக்கிப்போட்டு மிதிக்க வேண்டும் போலிருக்க…

“செத்த வாப்பெட்டியை சாத்திக்கிட்டு கம்மின்னு இருடே” என்ற வீரனின் அதட்டலில் கப்சிப் ஆகியவன், கௌதமை முறைத்துக்கொண்டே எழுந்து சென்று கௌசிக்கின் அருகில் அமர்ந்து கொண்டான்.

அங்கை எழுந்து செல்வதை கவனித்த பின்னரே, கௌசிக்கும் அங்கைக்கும் நடுவில் வந்து அமர்ந்தோமென்பதே லிங்கத்துக்கு உணர்ந்தது.

“ம்க்கும் ரொம்பத்தேன். எம் பக்கட்டு உட்கார மாட்டாய்ங்களோ?” என்று அங்கயை முறைத்தவனுக்கு சில மணி நேரங்களுக்கு முன் அவளிடம் தான் நடந்துகொண்ட செயல் நினைவுக்குவர, ‘கோவமா இருக்கா போல’ என நினைத்துக்கொண்டான்.

“தேதி குறிச்சுட்டு சரியான நேரத்துக்கு வரேன் சொன்ன ஐயரை இன்னும் காணுமேட்டு அமிழ்தா. செத்த என்னான்னு போனை போட்டு கேளு அப்பு” என்று மருதன் சொல்லிட, வீரன் அலைப்பேசியில் ஐயருக்கு அழைப்பு விடுத்தவனாக எழுந்து வெளியில் சென்றான்.

அவர் வந்து கொண்டிருப்பதாக சொல்லிட, அலைப்பேசியை அணைத்து சட்டை பையில் போட்டவனாக வீரன் திரும்பிட பாண்டியன் நின்றிருந்தார்.

“ஐயா!”

பாண்டியனின் முகம் சுருங்கியிருந்தது.

“உனக்கு ஒன்னும் வெசனம் இல்லையே சாமி?” என்று மகனின் கரம் பற்றி வினவினார். பிள்ளையின் ஆசை தெரிந்தும், தானே வேண்டாமென்று சொல்லிவிட்டோமே என்கிற வருத்தம் அவரிடம். அதோடு அவன் முதன் முதலில் விருப்பமென்று நினைத்தது மீனாளாகத்தான் இருக்கும். அதற்கு தடையாக தானே நின்றுவிட்டோமே என்கிற வாட்டம். எங்கே மகன் உள்ளுக்குள் மருகிக் கொண்டிருக்கின்றானோ என்கிற அலைப்புறுதல் வீரனிடம் அவ்வாறு கேட்க வைத்தது.

மனதில் வலி பரவிக் கொண்டிருந்தாலும், லிங்கத்திடம் சொல்லியது போல் வீரனிடம் இந்நிகழ்வு நடைபெறாது எனும் ஏதோவொரு நம்பிக்கை. அந்த திடத்தில் அவனால் இயல்பாகவே இருந்திட முடிந்தது.

“ஐயா நான் நல்லாதேன் இருக்கேன். நான் வெசனப்படுறனோன்னு நீங்க வருந்திக்காதீங்க” என்றவன், “எனக்குன்னா என் கைக்கு தானா வருமாட்டி” என்றான்.

இறுதியில் வீரன் சொல்லியது அவருக்கு புரியாதபோதும், மகன் எப்போதும்போல சாதரணமாக இருக்கின்றான். அதுவே போதுமென்று நினைத்த பாண்டியன்…

“உனக்கு ஒரு குறையும் வராது அப்பு” என்று வீரனின் தாடையை வருடியவராக பாண்டியன் உள்ளே செல்ல, லிங்கம் வீரனின் அருகில் வந்தான்.

“அடேய்… இப்போ நீயா? என்ன கேட்கணும்?” தன்னையே சுற்றிவரும் லிங்கத்திடம் ஆயாசமாகக் கேட்டிருந்தான் வீரன்.

“ஐயாக்கு தெரியுமாட்டிக்கு?”

“அப்போ நாங்க பேசுறதை ஒட்டு கேட்டிருக்க நீயி… ஆங்!” என்றான் வீரன். குரலில் மட்டுமே கோபம் இருந்தது.

“ஐயாவுக்கு தெரிஞ்சுமா கம்மின்னு இருக்காரு?”

“அவருக்கு மாமாவோட நிம்மதி முக்கியம்.”

“நீயி ஆசைப்படுறன்னு தெரிஞ்சாக்கா. மாமாவைவிட அதிகம் சந்தோஷப்படுற ஆளு வேற யாரு இருக்கா?” என்றான் லிங்கம்.

“அதேன் செத்த முன்னுக்க அவருக்கிட்ட சொல்ல பார்த்தியாக்கும். வசந்தி பெரிம்மா என்ன நெனச்சு காய் நகர்த்துறாய்ங்க தெரியாது. ஆனால் மாமாவுக்கு என்னால ஒரு சங்கட்டம் வந்துடக்கூடாது” என்ற வீரன் வேகமாக உள்ளே சென்றுவிட்டான்.

லிங்கம் தனக்கு பக்கவாட்டில் இருந்த மர தூணினை அழுத்தமாக பார்த்தான்.

‘முட்டிக்கணும் தோணுதா?’ அவனின் மனம் கேட்டிட, முட்டுவதற்கு முன்பே நெற்றியை தேய்த்தவனாக…

“என் மண்டை பாவம்” என்று உள்ளே நுழைந்தான்.

பிரேம் நாச்சியிடம் பார்வையாலே கெஞ்சிக்கொண்டிருந்தான்.

நாச்சி அவன் பக்கம் கூட திரும்பாது மகா மற்றும் அபிக்கு உதவியவளாக சுற்றிக் கொண்டிருந்தவள் வேலையெல்லாம் முடிந்ததும் மீனாட்சியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பே விடுமுறை எடுத்து வரசொல்லி நாச்சி கேட்டிருக்க… அவனோ நான்கு நாட்களுக்கு முன்பு வந்தது அவளுக்கு அவன்மீது சடைப்பை உண்டு செய்திருந்தது.

“காதலிக்க சமயமே கிடைக்கல கல்யாணத்துக்கு முன்னுக்கவாவது கொஞ்சம் லவ் பண்ணிப்போமே. சீக்கிரம் வாப்பா ப்ளீஸ்” என்று நாச்சி கேட்டபோதெல்லாம் பிரேம் தன் வேலையை காரணமாகக் காட்டிட, அவளுக்கு உள்ளுக்குள் குமைந்தது. நாள் நெருங்க நெருங்க பிரேம் வரமாலிருக்க அவனுடன் போனில் பேசுவதை நிறுத்தியிருந்தாள். நாச்சிக்கு பிரேமின் சூழல் புரிந்தாலும், காதல் கொண்ட மனதால் அதனை ஏற்கத்தான் முடியவில்லை. அவன் வந்து அவனை கண்டதும் கோபம் மறைந்திருந்தாலும் தன் பின்னேயே அவன் சுற்றுவது அவளுக்கு உள்ளுக்குள் ஒருவித குளிர்வை உண்டாக்க அதனை நீட்டித்துக் கொண்டிருக்கிறாள்.

“கட்டிக்கப்போறவன் பின்னுக்கு சுத்தி சுத்தியே வாரதுல சுகம் இருக்கத்தேன் செய்யும். அதுக்குன்னு ரொம்ப சுத்த வுட்டுடக் கூடாதுத்தா” என்று மீனாட்சி நாச்சியை பாராது கூறிட, நாணமாக அவர் தோளிலேயே சாய்ந்தவள், “அப்பத்தா” என்று சிணுங்கிட…

“எம் பார்வையில் எல்லாம் அம்புட்டுக்கும்” என்று பேத்தியின் கன்னம் தட்டினார்.

நாச்சி அவரையே பார்த்திருக்க…

“என்னட்டி பார்வை?” என்று வினவினார்.

“எல்லாமே அம்புட்டுக்குமின்னா… வீராண்ணே மீனாளை நேசிக்குதுங்கிறதும் அம்புட்டிருக்கும்ல அப்பத்தா?” என்று கேட்டிட அவருக்கு நெஞ்சுக்குள் அத்தனை அதிர்வாக இருந்தது.

“நாச்சியா…” ‘தன்னுடைய அனுமானம் உண்மையா இருந்து தனது பேரனுக்கு வலியை கொடுத்திடாதே’ என்று காலையில் தான் வீட்டிலிருக்கும் ஆளுயர மீனாட்சி அம்மனின் புகைப்படம் முன்னின்று அத்தனை வேண்டியிருந்தார். ஆனால் நடக்க வேண்டியது நடந்துதானே ஆகும்.

‘மகா இரவு சொல்லியதை கேட்டிருக்க வேண்டுமோ? வீரன் சம்மதம் சொல்லித்தான் இது நடக்குதுன்னு மெத்தனமா இருந்தது தவறோ?’ என்று இப்போது வருந்துவது பலனில்லை எனத் தெரிந்தும் வருந்தினார்.

“இதை நிறுதிப்புடலாமே அப்பத்தா. நீயி சொன்னாக்கா மாமாரு கேப்பாரு” என்றாள்.

“இப்போ எப்படிட்டி? ராத்திரி மருதன் வசந்திக்கு அழைக்கும்போது நீயும் இங்குட்டுதானே படுத்திருந்த. அப்போவே சொல்லியிருக்கலாமே? மருதன் மறுத்திருக்க மாட்டியான். அப்போவே எதாவது ரோசிச்சிருக்கலாம். இப்போ வசந்தி ஆடாத ஆட்டம் ஆடிப்புடுவாளே!” என்று நெஞ்சில் கை வைத்தார்.

“நான் முழிச்சிருந்தாக்கா கண்டிப்பா சொல்லியிருப்பேன்” என்றவள், “காலத்துக்கும் உம் பேரன் உக்கி நிக்குறதை பாரு” என்று கோபமாக சொல்லிவிட்டு உம்மென்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

மீனாட்சி ஒன்றும் செய்ய முடியாது தன்னுடைய மூத்த செல்ல பேரனின் முகத்தையே நொடிக்கு ஒருமுறை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் ஐயர் வந்துவிட, அடுத்தடுத்து நடக்க வேண்டியவை நடந்து கொண்டிருக்க…

“மாப்பிள்ளையை சபையில கூப்பிட்டு உட்கார வையுங்கோ” என்றார்.

“பிரேம் கௌதமை கூட்டியாந்து இங்க உட்கார வைய்யீ” என்று அனைவருக்கும் முந்தி வசந்தி சொல்லிட…

“ம்க்கும்… ரெண்டடி இடத்துல நீயா போயி உட்கார முடியாதாடே. உன்னைய ஒரு ஆளு கூட்டிட்டு போவனுமாட்டிக்கு” என்று லிங்கம் முணங்கிட…

“சுபாவை என்னைக்கும் நான் ஏமாத்திடமாட்டேன். சும்மா என்கிட்ட மூஞ்சியை காட்டிட்டு இருக்காதடே” என்று லிங்கத்திற்கு மட்டும் கேட்கும் விதமாக சொல்லிவிட்டு கௌதம் ஐயருக்கு முன்பு அவர் காட்டிய இடத்தில் அமர்ந்தான்.

“உங்க வழக்கத்துல நிச்சயத்துல பொண்ணு பையன் மாலை மாத்திப்பாய்ங்களா?” என்று ஐயர் கேட்டிட, மீனாட்சி அதெல்லாம் இல்லையென்று சொல்லவர, ஆமாமென்று வேகமாகவும் சத்தமாகவும் சொல்லியிருந்தார் வசந்தி.

மருதன் ஏதோ சொல்லவர, நல்லான் அவரின் கையை பிடித்து தடுத்துவிட்டார்.

“அவளுக்கு மாலை மாத்திக்கிறதை பார்க்க ஆசையாட்டுக்கு. இப்போ இதெல்லாம் சகஜம் தானே! மறுக்க வேண்டாம் வுடு மருதா” என்று நல்லான் சொல்ல, அவரை எதிர்க்கும் துணிவு மருதனுக்கு என்றும் இருந்தது இல்லையே! மௌனமாகிவிட்டார்.

“அப்போ பொண்ணையும் கூட்டியாந்து பையன் பக்கட்டு உட்கார வையுங்கோ” என்று ஐயர் சொல்லியதும், “நானே போயி எம் மருமவள கூட்டியாறேன்” என்று திரும்பிய வசந்தி மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிர்வை வெளிப்படுத்தினர்.

அந்த அதிர்வு வீரனுக்கு மட்டுமில்லை போலும். எதிர்பார்த்தேன் என்பதைப்போல் முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாது பார்த்தான்.

லிங்கத்தின் மகிழ்வுக்கு அளவே இல்லை. அத்தனை பிரகாசமாக, யாரும் பார்க்கும் முன் தன் நீண்ட இதழ் விரிப்பை மறைத்துக்கொண்டான்.

எவ்வித அலங்காரமும் செய்து கொள்ளாது. காலை நாச்சி நலங்கிற்காக கட்டிச்சென்ற சாதாரண தாவணி பாவடையிலேயே படியிறங்கி வந்து நின்றாள் மீனாள்.

“என்னத்தா இப்படி வந்து நிக்குற? அதுவும் நீயா வந்துபுட்ட? நான் குடுத்த சீலையை உடுத்தலையா நீயி?” என்று வசந்தி அவசரமாகக் கேட்டிட…

“நான் கொஞ்சம் பேசணும் அத்தை” என்றாள் மீனாள். அனைவரையும் பார்த்து.

“என்ன பேசணும் நீயி?” என்ற வசந்தி மீனாளின் புஜத்தை அழுத்தமாக பிடித்து ஆத்திரமாக வினவினார்.

மீனாள் வந்து நின்ற தோற்றமே மகளுக்கு இதில் விருப்பமில்லை என்பதை உணர்த்திட, மகா அபிராமியின் கையை பற்றி…

“இப்போதேன் நிம்மதியா இருக்கு அபி” என்று மெல்லொலியில் மொழிந்திட, “வசந்தி விட்டுடுவாளாக்கும்” என்றார் அபி.

“மீனாளு வாயிலிருந்து வேண்டாமின்னு மட்டும் வரட்டும். இதையே சாக்கா வச்சு அந்த வசந்தியை ஆஞ்சிப்புடுறேன்” என்ற மகாவின் பேச்சில் வந்த சிரிப்பை அபி கட்டுப்படுத்திக்கொண்டார்.

“அவுச்… அத்தை கையை விடுங்க” என்று மீனாள் முகம் சுருக்க…

“வசந்தி” என்று மருதன் முன்வர,

“சின்னப்புள்ளை… பார்த்து பதுவிசா நடந்துக்குங்க மதினி” என்றிருந்தார் மகா.

“கல்யாணம் கட்டிக்கொடுக்க ரெடியாகியாச்சு. இவள் சின்னப் புள்ளையா?” என்ற வசந்தி,

“மொத நிச்சயம் நடக்கட்டும் பொறவு நீயி பேச வேண்டியதைப் பேசு” என்று மீனாளை இழுத்து கௌதமின் அருகில் உட்கார வைக்க முயன்றார்.

வசந்தியின் முன்பு மருதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒன்றென்றால் வசந்தி நூறாக திரித்திடுவாரே. உறவே வேண்டாமென்று சென்றிடுவாள் என்கிற பயம் அவருக்கு.

“அய்யோ அத்தை வுடுங்க” என்று வசந்தியின் கையை வேகமாக உதறி…

“எனக்கு வீரா மாமாவைத்தேன் கட்டிக்கிடணும்” என்று வீடே அதிர கத்தியிருந்தாள் மீனாள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 45

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
44
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. அடேங்கப்பா இந்த வார்த்தைக்காக தான் வீரா காத்துகிட்டு இருந்தான் … அப்புறம் என்ன … இனி எல்லாம் அதுவா நடக்கும் … அடுத்து வீரா மீனாள் நிச்சயமா ?? இல்ல எதும் பஞ்சாயத்தா?? கனவுன்னு சொல்லிடாதீங்க … எங்களுக்கும் வலியாகிடும் …

  2. தன் மீனுக்குட்டியையும், அண்ணனையும் நினைத்து மனம் வெதும்பிகொண்டிருந்தவன் அங்கையிடம் இதுவரை காட்டாத தனது கோபமுகத்தை காட்டிவிட்டான்.

    இவளும் சிறுபிள்ளைத்தனமாக அவன் எப்பொழுதும் தன் நேசத்தை புரிந்து கொள்ளபோவதில்லை என்று எண்ணிவிட்டாள்.

    இருக்குற கடுப்புக்கு வசந்தி அத்தை வீட்டுக்கு மருமகளா போறேன்னு சொல்லிடுவாளோ அங்கை. 🤣🤣🤣🤣

    நான் பெருசுனு நினைச்சா என்ன ஏமாத்தாம அவளே அவ மனச சபைல சொல்லுவா. இல்லை நான் கோபத்துல சொன்ன சொல்லுதான் பெருசுனு நினைச்சு வேற வாழ்க்கை வாழ முடிவெடுத்தா அத நா தடுக்கவும் மாட்டேன்.

    லிங்கம் பாவம் தூண் தூணா போய் முட்டிக்கிட வேண்டிது தான்.

    வேறொருவன் பக்கத்தில் சபையில் நிற்க கூட விரும்பாமல் மனதை உரக்க கூறிவிட்டாலே மீனாள்.

  3. ஹப்பா – கடைசியில வாய திறந்துட்டா அவனோட தங்கப்பொண்ணு !