
வானம் நட்சத்திரங்கள் அற்று தெளிவாகக் காட்சி தந்தது. அடர் நீலமும் கருப்பும் சரி விகிதத்தில் சேர்ந்து குழைத்த கரு மையின் நிறத்தில் இருந்தாலும் தூரத்தே தெரிந்த பிறையின் வெண் வண்ண ஒளி அந்த ஏகாந்த இரவிற்கு, ஷக்தியின் வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை ஒளியாக இருந்தது.
வெண்ணிலாவின் ஒளியின் பயனால் ஷக்தியின் முகத்தையே சிவா பார்த்து நிற்க, அவள் கண்களில் தோன்றிய அந்த பாவத்திற்கு பெயரறியாது தடுமாறினான் காவலன்.
அவனுக்கு இப்போதே அவன் உரைத்ததற்குப் பதில் வேண்டும் என்ற ஒரு எண்ணமும், அவளிற்கான யோசிக்கும் இடைவேளையும் தரவேண்டும் என்ற மற்றொரு எண்ணமும் மாறி மாறி தோன்றி அவனை நிலை குலைய வைத்துக்கொண்டிருந்தது அவன் காதல் கொண்ட மனது.
ஓரளவிற்குச் சிவாவிடம் இருந்து இதை அவள் எதிர்பார்த்தால் தான். ஆனால் இத்தனை விரைவில், நிச்சயம் அவள் எண்ணி இருக்கவில்லை!
வியப்பும் தவிப்பும் சரிசமமாக வெளிப்படுத்திய அவள் கண்கள் அவனுக்கான அன்பையும் சிந்தியது. ஆனால் நிச்சயம் அதில் துளி காதல் இல்லை.
உள் கன்னத்துச் சதையைக் கடித்தபடி தன் உணர்வுகளை ஆணவன் அடக்கப் போராட, ஒரு கட்டத்தில் முடியாது கை முஷ்டியை தன் தொடையில் மெல்ல அடித்துக்கொண்டுக் காரை நோக்கிச் சென்றுவிட்டான்.
தன்னைப் போல் ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது அவனை. அதேசமயம் ஷக்தியின் கண்கள் காட்டிய பாவம் அவனை ஏதோ படுத்தியது.
இருவருக்கும் இருவரையும் நன்குத் தெரியும். ஏன் தன்னைப் பற்றி என்பதைவிட தன் துணையைப் பற்றி மிகத்துள்ளியமாய் தெரியும். என்ன இந்த திடீர் கல்யாணமும் அத்தொடு பூத்த உள்மன காதலும் அவர்களின் இயல்பைத் தொலைக்க வைத்திருந்தது.
நிதானிக்க முடியாது இருவரும் தவிக்கின்றனர். சீக்கிரம் ஒரு கலங்கரை விளக்கம் அவள் கண்ணில் சிக்கினால் இந்த நடுக்கடல் தத்தளிப்புக்கு ஒரு விடை கிடைக்கும் என்ற எண்ணம் சிவாவிற்கு.
அவனுடனேயே அவளும் வந்துவிட, வாகனம் புறப்பட்டது ஷக்தியின் இல்லம் நோக்கி.
அத்தனை அழுத்தம், ஒற்றை வார்த்தை உதிர்க்கவில்லை பெண்ணவள்.
அப்படி என்ன இவளுக்கு ஒரு வீம்பு? வாழ்க்கை இனி இப்படி தான் என்று ஆன பின்னர், முன்னர் நடந்ததை நினைத்துப் பார்த்து.. ம்ம்ப்ச் என்று அவன் நினைப்பு முடிவதற்குள் சற்று மேடான பகுதியில் அமைந்திருந்த அந்த இரண்டடுக்கு வீட்டினுள் நுழைந்தது சிவனேஷின் கார்.
கேட்’டை திறந்து கார் உள்ளே வரும்வரை பொறுமையாக இருந்தவள், கார் நின்றதும் எகிறிக் குதித்து வீட்டினுள் ஓடினாள்.
“வழுக்க போகுது ஆரா. கழுத வயசாச்சு இன்னும் ஒன்னொன்னும் ஒனக்கு சொல்லனுமா?” என்று அன்போடு அவளை வரவேற்றார் ஷக்தியின் அன்னை, லாவண்யா.
அங்கு கேட்டின் அருகே இவர்கள் முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்த ஆராவமுதன், சிவனேஷ் இறங்கும் வரை கூட பொறுக்காது,
“என்னடா? முகமே சரியில்ல. டாக்டர் என்ன சொன்னாங்க” என்று அவன் அருகே வந்தபடி கேட்டான்.
அவனைப் பார்க்காது, “அமுதா” என்றான் என்றும் இல்லாத ஒருவித பரிதவித்த குரலில்.
அது ஆராவமுதனைத் துணுக்குற செய்தது. “இரு, அப்புறம் பேசலாம். அம்மா ஸ்மெல் பண்ணிடுவாங்க இத்தன நேரம் நாம வெளிய நின்னா” என்றபடி சிவாவுடன் வீட்டினுள் சென்றான்.
ஈசன் ஆராவமுதன், ஷக்தியின் சகோதரன். கோவையிலும் குன்னூரிலும் ஜவுளி மற்றும் தேயிலை தொழில் நடத்தி வருகிறான்.
அதுபோக, சிவனேஷ் அவனின் ஆருயிர் நண்பன், மதிப்பிற்குரிய மச்சான்!
சற்றே தன்னை நிதானித்தவன்,
“மேகா எப்படி இருக்கா அமுதா. குட்டி பையன் என்ன சொல்லுறான்” என்று அவன் சோபாவில் அமர,
”வாங்க தம்பி” என்று சிவனேஷ் வந்தவுடன் சூடான பருத்திப்பாலுடன் வரவேற்றார், லாவண்யா.
சிவாவிற்கு அந்த பருத்திப்பால் அவ்வளவு பிடிக்கும். பச்சரிசி மாவு, பருத்தி விதை, வெல்லம், ஏலம், சுக்கு, துளி மிளகு, சற்று அதிகம் தேங்காய்த் துருவல் என்று எல்லாம் சேர்த்துச் செய்யும் பருத்திப் பாலை அவனுக்குப் பிடித்தபடி செய்து தருவார் அவன் ஒவ்வொருமுறை வரும் போதும்.
அதுவும் லாவண்யா செய்யும் விதமும் அதில் வரும் மணமும் அப்படி இருக்கும்.
“அம்மா” என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே சிவாவிடமிருந்து வந்தது. அவர் முகம் பார்த்துச் சிரித்தான், அவ்வளவே.
இன்னும் அவன் மனதில் இருந்த குற்றவுணர்வு முற்றும் தீரவில்லை. அவரைப் பார்க்க ஏதோ உள்ளூர ஒரு வேகத் தடை தன்னால் எழும்பியது.
வெளியே மழை நன்கு அடித்து வாங்கியிருக்க ஏற்கெனவே குளிரான ஊர் இப்போது உடலை நடுக்கம் கொள்ளும் வண்ணம் ப்ரோசன் ஐஸ்ஸாக வாட்டியது.
வீட்டு முழுவதும் ஹீட்டர் அமைப்பு இருந்ததால் சற்று கதகதப்பாக தோன்றியது. இருந்தும் குளிரைச் சற்றேனும் உணரும் படியாகவும் இருந்தது.
உள்ளேயிருந்து, “என்னங்க” என்ற சப்தமான ஷக்தியின் அழைப்பு. ஒரு சிறு லஜ்ஜை உணர்வு கூடத் தோன்றியது சிவாவிற்கு.
சிறு புன்னகையுடன் பாலை பருகியவன், ஆராவமுதனிடம் தலையசைத்தபடி ஷக்தியின் அறைக்குள் சென்றுவிட்டான்.
லாவண்யா, “ஈசா, என்ன ரெண்டு பேர் முகமும் சரியில்லை. என்னாவது சொன்னாரா தம்பி?”
“நானும் உங்க கூடத் தான இருக்கேன். சொல்லுவான், இப்போ தானே வந்திருக்காங்க. பார்த்துக்களாம் ம்மா” என்றவன் தளர்வாய் அமர,
“எனக்குத் தான் கெடந்து அடிச்சுக்குது. இவ ஏன் தான் இப்படி இருக்காளோ. இவளா சரியானாக் கூட, கூட இருக்கற ஜென்மங்களும் இவள உசுப்பற மாதிரியே இருக்குதுங்க” என்றவர் தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.
பதிலில்லை அவனிடம். ஏன் அவர் ஷக்தி – சிவாவைப் பற்றி ஒரு அளவிற்கு மேல் பேசினால் அவனிடம் பதில் மொழியே இருக்காது. அது உதாசீனம் அல்ல அவர்கள் இருவரின் மீதான அக்கறை.
ஒரு பேச்சு வெல்லும்; மற்றொன்று கொல்லும் என்பார்கள்.
ஷக்தியைப் பொருத்தவரை அவளைச் சூழ்ந்தோர் வார்த்தை என்ற சாட்டை கொண்டு இப்போது வரை அவளைக் கொல்கின்றனர்.
வீட்டில் அவளை யாரும் ஏதும் சொல்லவில்லை என்றாலும் மனதால் அவள் படும் அவஸ்தையைப் பார்ப்பவர்கள் தான்.
ஒரு நாளைப் போல் எல்லா நாளும் இருக்காதே, என்றாவது அவளுக்கு இணைவான வீட்டினர் கூட அவளின் இயல்பை, பிரச்சனையைப் புரியாது பேசிவிட்டால்? அந்த வார்த்தைக் கொடுக்கும் தாக்கத்தைத் தாங்குவாளா பெண்?
இதை நினைத்து நினைத்தே தான் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவரப் பிரயத்தனம் செய்கிறான், ஆராவமுதன்.
நிச்சயம் அவன் ஷக்தியிடம் வெடிப்பான் தான். ஆனால் இப்போது அந்த வெடி வெடித்தால் அவனுடன் சேர்ந்து சிவாவும் வெடிப்பான், அவனுக்கு எதிராய்!
நண்பனைப் பகைக்கவும் தங்கையைக் காய்ச்சவும் இப்போது அவன் தயாராய் இல்லை.
“கார்லையே டிராவல் பேக் வெட்டுச்சுட்டேன் ஷிவ். எடுத்துட்டு வாவேன்” என்று கேட்ட ஷக்தியிடம் தலையசைத்து வெளியே வந்தவன் அவர்கள் பேச்சைக் கேட்டிருக்க, ஒரு பெருமூச்சு அவனிடம்.
“அமுதா” என்றழைத்தபடி அவன் முன்னறை வந்தான்.
“வாடா, சாப்படறிங்களா?”
“இப்போ வேண்டாம். கொஞ்சம் பேசனும், வா” என்றவன் பார்வைத் துளி கூட லாவண்யா புறம் செல்லவில்லை.
அவனை ஒரு அழுத்தப் பார்வைப் பார்த்தவர் மகளின் அறை நோக்கிச் சென்றார்.
“வந்ததும் அவருக்கு என்ன வேணும் வேண்டாம் ஒன்னும் பார்க்கறது இல்லை. தேமேன்னு வந்து உன் பாட்டுக்கு உள்ள வந்து உட்காந்துடுவியா” என்று வழக்கமாய் அவர் ஆரம்பித்திருக்க,
கதவைத் தட்டியபடி உள்ளே வந்தான் சிவா.
முடியை அவிழ்த்து விட்டு ஒரு மெல்லிய காஃப்டன் (Kaftan) நைட் மேக்ஸியில் இருந்தவள் முகம் சற்று தெளிவாக இருந்தது. அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி நின்றவன்,
“பேக்” என்று அதைத் தரையில் வைத்துவிட்டு,
“என் தேவை என்னனு என்னைவிட ஷக்திக்கு நல்லா தெரியும் அம்மா” என்றுவிட்டுச் சென்றவன் பேச்சால் சிறு புன்னகை கீற்று அவன் மனையாளின் முகத்தில்.
அந்த நிமிடம் அவனை அத்தனை பிடித்தது ஷக்திக்கு.
அதே புன்னகையுடன் அவள் லாவண்யாவைப் பார்க்க, “இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை” என்றபடி அவர் வெளியேறினாலும், அவர் மனதில் தன்போல் ஒரு இதம் வராமல் இல்லை.
அங்கு ஆராவமுதனின் அறை பால்கனியில் இருந்தனர் சிவாவும் ஆராவமுதனும்.
“சீக்கிரம் சாப்பிடு மேகா. அப்புறம் சிம்பா நடுவுல எழுந்தா உனக்குத் தூக்கம் கெடும் இல்ல” என்ற ஆராவமுதனின் பேச்சைக் கேட்டபடி நின்றிருந்தவன் முகத்தில் சன்ன புன்னகை.
அணிந்திருந்த ஸ்வெட்டரில் இரு கைகளையும் நுழைத்தபடி அவன் ஆராவமுதனையே சிரித்தபடி பார்த்திருக்க, “பேசறியாடா மேகாகிட்ட” என்று கேட்டான்.
கை நீட்டினான் மொபைலை வாங்க. “அசால்ட் அய்யனாரே” என்றொரு ஆனந்த ஆர்ப்பரிப்பு. முகங்கொல்லா புன்னகையுடன் தொலைப்பேசி திரையில் தெரிந்தால் மேகவர்ஷினி. ஆராவமுதனின் தவ வர்ஷினி!
“என்ன சொல்லுறா என் நாத்தனார்? ரேஸ் குதிரைய அடக்குனியா நீ?” என்று சிரித்தபடி குறுகுறுப்புடன் அவள் கேட்க, அவன் முகத்தில் சிறு வெட்கத்தின் சாரல்.
“ம்ம்ப்ச்” என்று இதழை மடித்துச் சிரித்தவன், தலை திருப்பி முடியைக் கோதிக்கொண்டான்.
“அட அட அட, அமுது உன் மொத பொண்டாட்டி வெட்கப்படுறான்” என்று ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள் மேகவர்ஷினி.
“ச்சூ.. சும்மா இரு மேகா. குட்டி தம்பி எங்க?” என்று ஆராவமுதனின் நான்கு மாத மகனை அவன் கேட்க, “தூங்கறான்” என்றால் சிரிப்பு மாறாது.
“சொல்லுங்க அய்யனாரே, என் நாத்தனா சிக்குனாலா? இல்ல உனக்கு சிக்க வைக்க தெரியலையா? என்ன ஸ்டர்டிங் ப்ராப்ளம் வந்தாலும் உன் அமுதாவ கேளு, தெளி…வா விளக்குவான்” என்றாள் நமுட்டு சிரிப்புடன்.
“மேகா” என்றொரு அழுத்தக் குரல் கேட்க, “நாங்க தூங்கிட்டோம்” என்று போனைப் வைத்துவிட்டாள் அவள்.
அத்தனை மகிழ்ச்சி பூக்கள் பூத்துவிடும் மேகாவிடம் பேசினால். இதோ சிவாவிற்குமே அவளின் அந்த சந்தோஷ சிரிப்பும் மகிழ்ச்சி தூரலும் முகத்தில் வியாபித்திருந்தது.
நிறைந்த முகத்துடன் இருந்தவன் முகத்தைப் பார்த்த ஆராவமுதன், “டாக்டர் என்ன சொன்னாங்க” என்றவன்.
அவன் முகத்தை ஒரு விநாடிப் பார்த்தவன் பின்பு,
“நான் ஷக்திகிட்ட என் லவ்’வ சொல்லிட்டேன் மச்சான்” என்றான் உள்ளடங்கிய குரலில்.
“வாட்ட்” என்று அந்த அறையே அதிரக் கத்திய ஆராவமுதன் முகத்தில் அத்தனை திகைப்பும் அதிர்வும்.
பின் சப்தமாகச் சிரித்துவிட்டான் சிவனேஷின் முகபாவத்தைப் பார்த்து.
“டேய்” என்று முகத்தை சிவா திருப்ப,
“என் அய்யனாருக்கு லவ் வந்துடுச்சு டோய்” என்று அத்தனை கலாட்டா செய்துவிட்டான் அவன்.
“என்னெல்லாம் சொல்லி என்னையும் மேகாவையும் ஓட்டுவ நீ? இப்போ..” என்றவன் சொல்லிக்கொண்டே,
“இதுல ஆராகிட்ட சொல்லியிருக்க பாரேன். வெல் டன் டா மாப்பிள்ள” என்றவன் பரிகாசம் அத்தனை வெட்கத்தைக் கொடுத்தது அவனுக்கு அந்த நிமிடம்.
“சும்மா இரேன்டா.. நானே இப்படி சொதப்பிட்டேன்னு நிக்கறேன்” என்றவன் டாக்டர் சொல்லியது துவங்கி இங்கு வரும் வரை நடந்த நிகழ்வுகளைக் கூறியவன்,
“ஆனா ஆரு மனசுல இன்னும் அந்த டைலமா இருக்கு அமுதா. எனக்கு அது மட்டும் ஆணித்தனமா தெரியும். அதுல இருந்து அவள வெளிய கொண்டு வரது முதல்ல ஈசின்னு தான் நான் நினச்சேன். பட்…” என்ற இழுத்தபடி ஆராவமுதனின் முகத்தைப் பார்த்தவன்,
“மனசளவில அவ ரொம்ப ஆழமா லவ் பண்ணி இருந்துருக்கா மச்சான்” என்று சொல்லும் போது அவன் மனதும் குரலும் உடைந்தே விட்டது.
என்ன முயன்றும் தொண்டை அடைத்து, கண்கள் மெல்லக் கலங்கிவிட்டது அவனுக்கு.
“ஷிட்” என்று சொல்லியபடி நாசுக்காய் அதை அவன் துடைக்க,
“அழுக வந்தா அழுதுடு நாயே, அடக்கி வெச்சுச் சாகாத” என்று அத்தனை கோபத்துடன் கத்தினான் ஆராவமுதன்.
அவனால் தாங்க முடியவில்லை. அதுதான் அவனிற்கு ஷக்தியின் மேல் கோபம் வரக் காரணமே. ‘என்ன செய்து வைத்திருக்கிறாள் இந்த பெண்?’ என்று அத்தனை ஆற்றாமை ஆராவமுதனுக்கு.
அதுவரை அவர்களிடமிருந்த இயல்பும் சூழலும் முற்றாக மாறியிருந்தது. அந்த கணமான நிமிடங்கள், அது போட்டு அப்படி அழுத்தியது இருவரையும்.
ஷக்தி. அவளின் நிலை, அவளின் எண்ணம், அவளின் நினைப்பு இப்படி அவளைப் பற்றி மட்டுமே அவ்விரு ஆடவர்களின் எண்ணமும் சுழன்றது.
“இவள மொத வெலுக்கனும். எவன்கிட்ட எப்படி பழகனும்னு கூடவா தெரியாது? இல்ல என்ன..” என்றவன் பேச்சு அப்படியே தடைப்பட்டது.
மனதில் தன்னையே நொந்தவனாக சிவாவைப் பார்க்க, அவன் பார்வை தூரத்தே தெரிந்த நிலவை வெறித்தது.
“சிவா”
“எல்லாரும் எல்லார் கிட்டயும் தன்னை வெளிப்படுத்தத் தயாரா இருக்க மாட்டாங்க அமுதா. அப்படி வெளிபடுத்தினா, ஒன்னு அவங்க வாழ்க்கை முழுசும் கூட வரவங்களா இருப்பாங்க
இல்ல தோள் கொடுக்கும் தோழனா இருப்பங்க.” என்றவன்,
“என் ஆரு அவன முழுசா நம்பினா. அதான் காரணம் என்ன ஏத்துக்க முடியாம அவ திணறுரதுக்கு” என்றவன் முகத்தில் ஒரு கசந்த முறுவல்.
•••
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சிவா அமுதன் மேகா எல்லாரும் சூப்பர் … என்ன தான் சக்தியை எல்லாரும் புரிஞ்சுகிட்டாலும் … சக்தியும் மத்தவங்க உணர்வுகளை புரிஞ்சு தான் ஆகணும் … அவ காதலுக்காக ஏங்குற கணவன் … அதை நினைச்சு வருத்தப்படுற சகோதரன் … அவங்க உணர்வுகளுக்கும் மதிப்பு இருக்கு தானே …
மிக்க நன்றி ❤️
இருவரும் ஒருவர் இன்னொருவரை பற்றி அவர்களை விடவும் நன்றாய் புரிந்து கொண்டுள்ளனர்.
சூழ்நிலையின் காரணம் நடந்த திருமணம் இருவரது இயல்பையும் தொலைக்க வைத்திருக்கின்றது.
சக்திக்கான நேரம் வழங்க எண்ணியிருந்தாலும் அதனினும் தனது தவிப்பு மேலோங்க காதலை உரைத்துவிட்டான்.
ஆராவமுதன் மேகவர்ஷினி combo அழகு 😍
ஆராவின் முதல் பொண்டாட்டியா அசால்ட் அய்யனார்! 🤣🤣
வாழ்க்கை முழுவதும் உடன் வரவிருக்கும் நபரிடம் மட்டுமே ஆழ்மன உணர்வுகளை கூட பகிர்ந்து கொள்ள முடியும்.