
சபதம்-2
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
-குறள் 861
பொருள்:
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
மதுரையில் இருந்து சென்னை செல்லும் இரவு ரயிலில் தன்னைக் கடந்து போகும் மரங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம். அவரின் மடியில் தலை வைத்து அயர்ந்து உறங்கிப் போயிருந்தாள் மீனாள்.
சுந்தரத்தின் மனைவி ராதா, இரண்டு நாட்களாக அழுது அழுது கலைத்துப் போய், ரயிலின் தாளத்தில் தன் கவலை மறந்து தூங்கிப் போயிருந்தார்.
சுந்தரத்தின் நினைவு முழுதும் மகளின் உடல்நிலையிலே சிக்கித் தவித்தது. அதுவும் இரண்டு மாதங்கள் முன்பிருந்து தான் அவளின் நடவடிக்கையில் மாற்றம் உண்டானது.
அன்று கடையில் வேலை முடித்து, காட்டு வேலைக்கும் சென்று உடல் களைத்துப் போய் வீடு வந்த சுந்தரத்தை, எப்போதும் சிரிப்புடன் ஓடி வரும் மகளின் குரல் வரவேற்கவில்லை.
மாறாக தண்ணீர் குவளையுடன் மனைவி வர, அவருக்குப் பின் மகளைத் தான் கண்கள் தேடி அலைந்தது.
மகனின் செயலால் நொந்து போன உள்ளத்திற்கு மகளின் அன்பும், சிரிப்பும் அருமருந்தாகி போனது. வேலைப் பளுவில் உடல் தோய்ந்து போகும் போது, ஒவ்வொரு நொடியும் மகளின் அணைப்பு சொல்லும், ‘எனக்காக ஓடு’ என்று.
தள்ளாடி இனி ஓட முடியாது என்று கால்கள் துவளும் போது எல்லாம், அந்த சொல் மீண்டும் ஓடும் உத்வேகத்தை தூண்டிவிடும் மீனாளின் தந்தைக்கு.
அன்றும் அதை எதிர் பார்திருந்தவருக்கு ஏமாற்றமாய், கணவனின் தேடலை உணர்ந்த ராதா, “மீனு சீக்கிரமே தூங்கிட்டா..” என்றவர் கணவனுக்கு இரவு உணவை எடுத்து வைக்க சமையல்கட்டிற்கு சென்று விட, சுந்தரம் மகளைக் காண தங்கள் அறைக்குள் நுழைந்தார்.
ஆழந்த உறக்கத்தில் இருக்கும் மீனாளின் தலைமுடியைக் கோதிவிட்டவர், அறையை விட்டு வெளியேற முயலும் நேரம், மகளிடம் இருந்து முனகலாய் சில வார்த்தைகள் வர, திரும்பி மகளைப் பார்த்தவர், மகளின் நிலை கண்டு பதறிப் போய் மகள் அருகில் விரைந்தார்.
மீனாவை நெருங்கி அவள் தோளில் கைவைத்தவரின் கைகளை ஒரு முறை உறுத்துப் பார்த்தவள், அந்த கைகளை மின்னல் வேகத்தில் தட்டி விட்டவளின் செய்கையில் அதிர்ந்து நின்றார் சுந்தரம். அடுத்த நொடியே கட்டிலில் இருந்து பாய முயன்றவளை தன் அதிர்ச்சியையும் மீறி, பதட்டத்துடன் கைகளில் இறுக்கிக் கொண்டார் சுந்தரம்.
தன்னை இறுக்கிய கைகளில் இருந்து விடுபட போராடியள், “ஆக்..ஆக் ..இஸ்கி தக்லீஃப்.. பராயி கரம் மேரே மதத் கரே(இந்த சுமை பிறர் மீது விழாமல் நான் ஏற்று கொள்கிறேன்)” என்று ஏதோ புரியாத பாஷையில் கத்தியவளின் கருவிழிகள் அசையாமல் ஒரே இடத்தை வெறித்துப் பார்க்க, உடல் மொத்தமும் தூக்கிப் போட வாயில் இருந்து வினோதமான சத்தத்துடன் தன் கைகளில் துடித்துக் கொண்டிருந்த மகளைப் பார்த்துத் துடிதுடித்துப் போனார் சுந்தரம்.
மகளை அப்படி பார்க்க முடியாத சுந்தரத்தின் கைகள் நடுங்க, இந்த சத்தத்தில் சமையல் அறையில் இருந்து ஓடி வந்த ராதா மகளின் நிலையையும், கணவனின் பதட்டத்தையும் கண்டு நிலைமையைத் தன் கையில் எடுத்துக் கொண்டார்.
நிலைக்குத்திப் போய் இருந்த மகளின் கண்களைப் பார்த்த ராதாவிற்கு நெஞ்சுக்குள் குளிர் எடுத்தாலும், தன்னை திடப்படுத்தியவாறு மீனாவின் கன்னதில் சுளீர் என்று ஒரு அரை விட, அதில் கண்கள் சொருகி மயங்கி சுந்தரத்தின் கைகளில் தோய்ந்து விழுந்தாள் சின்னவள்.
மகளின் வினோத செயலே தந்தையின் மூளைக்குள் மீண்டும் மீண்டும் ஓட, மனைவி மகளை அடித்ததோ, மகள் தன் கைகளில் சுருண்டு விழுந்ததோ, எதுவுமே அவருக்கு கருத்தில் படவில்லை.
மகளைக் கைகளில் ஏந்தியவாறு எதிரே இருக்கும் சுவரை அதிர்ந்து பார்த்திருந்த கணவரை, நிகழ்வுக்கு கொண்டு வரும் வழி அறியாது முழித்த ராதா, மகளை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினார்.
படுக்கைக்கு அருகே உள்ள மேஜையில் இருந்த தண்ணீர்க் குவளையை எடுத்து, மகளின் முகத்தில் சுள் என்று அடித்தவர், தன் கைகளால் மீனாவின் கன்னத்தைத் தட்டி எழுப்ப, அதில் சற்று சுயம் தெளிந்தவள் தூக்க கலக்கத்தில், “ம்மா.. பாத்ரூம் போனும்..” என்றவாறு தந்தையின் கைகளில் இருந்து எழுந்து குளியலறை புகுந்துக் கொண்டாள்.
மகள் அசைந்ததும் நடப்புக்கு வந்த சுந்தரம், மகள் சென்ற வழியை பார்த்தவாறு மனைவியிடம், “என்.. பாப்பா.. என்ன ராதா நடக்குது?” என்று வார்த்தை வராமல் தேடியவரின், இறுதி வார்த்தைத் தன்னையும் அறியாமல் சத்தமாக வெளிவந்துவிட்டது.
அதேநேரம் குளியலறைக் கதவுத் திறந்து மீனா வெளியே வந்து, “ப்பா எப்போ வந்தீங்க?” என்றவள், கட்டிலின் மீது ஏறி தந்தையின் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.
மகளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்த கணவரிடம் இருந்து மகளைத் திசை திருப்ப முயன்ற ராதா, “இப்ப தான் வந்தாரு, வந்ததும் உன்னைய பார்க்க வந்துட்டாரு..” என்றவர் கணவரின் தோளைத் தொட்டுக் கண்களால் சைகை செய்து,அதை மகளிடம் இருந்து மறைக்க, “அதான் மகள பாத்தாச்சுல? வாங்க சாப்பிடலாம்..” என்று வெளியே அழைத்துச் சென்று விட்டார்.
அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் மீனாவின் செய்கை அவருக்குப் பயத்தைக் கொடுத்தது, அதிலும் இரவு தூங்கிய பின் கனவில் எதையோ கண்டு பயந்து விழிப்பவள், “தீ.. எரியுது ப்பா.. எரியுது..” என்று கைகால்களை உதறிக் கொண்டு அலறுபவள், அடுத்த சில நொடிகளில் மயங்கிச் சரிந்து விடுவாள்.
இதில் சுந்தரமும் ராதாவும் புரிந்து கொண்டது, இரவில் நடக்கும் எதுவும் மீனாவுக்கு காலையில் ஞாபகம் இருப்பதில்லை.
அடுத்த இடியாக, மூன்று நாட்கள் முன்பு பள்ளிக்கூடம் சென்ற மகள், பள்ளிக்கு அருகில் இருக்கும் மசூதிக்குள் நுழைந்து, அங்கு பெண்கள் தொழுகை செய்யும் இடத்தில் மண்டியிட்டு, “அல்லாஹு அக்பர்..” என்று கூறி இருகைகளையும் புஜங்களுக்கு நேராக உயர்த்தி, வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொண்டு தன் துஆவை ஓத தொடங்கினாள்.
“ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக்க வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக்க வலா இலாஹ கைருக்க”
பொருள்:அல்லாஹ்வே! நீ தூய்மையானவன் உனது புகழைக் கொண்டு தொழுகையை ஆரம்பிக்கிறேன். உனது பெயர் மகிமை வாய்ந்தது மற்றும் உன்னதமானது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.
மீனா தன் தொழுகையை மிகவும் பழக்கப்பட்டது போல் செய்ததை அங்கிருந்த யாராலும் நம்பமுடியவில்லை.
திருச்சுனை கிராமமும் அல்லாது நகரமும் அல்லாது இடைப்பட்ட சிறிய ஊர். இங்கு இருக்கும் பிரபல மளிகை கடைகள் இரண்டில் ஒன்று சுந்தரத்தின் கடை.
சுந்தரத்தின் குடும்பத்தை அறியாதவர் அங்கு யாரும் இல்லை. முக்கியமாக துருதுருவென்று அவர்கள் கடையில் சுற்றி வரும் மீனாவைத் தெரியாதவர் அங்கு யாரும் இல்லை.
அப்படி இருக்க மீனாவின் மசூதி வருகையும், அங்கு அவள் தொழுகை செய்துவிட்டு சென்றதும் ஊர் முழுதும் பேசு பொருளாகி விட, விஷயம் அறிந்து மசூதிக்கு விரைந்த சுந்தரத்தின் கண்முன் மகள் மசூதி வாசலில் நின்றிருந்தாள்.
மீனாவை நெருங்கிய சுந்தரம், “பாப்பா..” என்று அழைக்க அவரை திரும்பி பார்த்தவளின் பார்வையில் இருந்த அந்நிய தன்மையில் மனிதர் இரண்டடி பின் நகர்ந்து நின்றுவிட்டார்.
அங்கு இருந்த அனைவரையும் சுற்றிமுற்றிப் பார்த்த மீனா, சுந்தரத்தை நெருங்கி “யே கவுன்சி ஜகா ஹேய்?”(இது எந்த இடம்?”) என்றவளின் பேச்சு புரியாமல் தந்தையவரோ “ஹான் என்ன பாப்பா?” என்றவரின் கண்கள் மகளின் நடத்தையில் கலங்கிவிட்டது.
அவரின் கலங்கிய கண்களை பார்த்தவள், “ரோனா மத்”(அழுகாதீர்கள்) என்றவளின் கவனம், தனக்குப் பின்னே கேட்ட பெயரில் திரும்பி பார்க்க, அங்கு நின்ற பெரியவரிடம், “ஆப்னே கியா காஹா ? மெஹ்ரு..நிஷா..” என்றவள் வார்த்தை முடியும் முன் மயங்கி சரிய , அவளைப் எப்போதும் போல் தன் கைகளில் தாங்கிக் கொண்டார் சுந்தரம்.
அதன் பின் திருச்சுனை முழுவதும் ஒரே பேச்சு தான். அது மீனாவின் நடவடிக்கை பற்றியதாக மாறி போனது. குறிப்பாக,
“சுந்தரம் மக மசூதி போனாலாம்ல?” “சுந்தரம் மகளுக்கு பேய் புடிச்சுருக்காம்”
“அந்த புள்ளைக்கு பைத்தியம்னு சொல்றாங்க?”
என்பது போல் பல வதந்திகள் ஊர் முழுவதும் பரவத் தொடங்கியது, இது மீனாவின் காதுக்குள் எட்டுவதற்கு முன் அவளை சென்னையில் பெரிய மருத்துவமனையில் காட்டச் சொல்லி மதுரை மருத்துவர் கூற, அதற்காகவே இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர் சுந்தரம் குடும்பத்தினர்.
இது தான் பிரச்சனை என்று சொல்லிவிட்டால் அதற்கு சிகிச்சை மேற்கொள்ளலாம். என்னவென்றே தெரியாமல் எதற்கு சிகிச்சை எடுப்பது?
அதைவிட முக்கியம் மகளின் குழந்தைத்தனம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது. இன்று வரை தனக்கு நடப்பது மீனாலுக்கு தெரியாது, அதுவரை தன் குலதெய்வ அருள் தன் குடும்பத்துக்கு இருப்பதாகவே பட்டது அவர்களுக்கு.
இவர்கள் மீனாவை பற்றி அறிந்துக் கொள்ள சென்னை நோக்கிச் செல்லும் அதே நேரத்தில், கடல் கடந்து சில நிகழ்வுகள் நடக்க தொடங்கின.
லண்டன் மாநகரம்..
மாலை நேரம் மிதமான வெயிலில் இங்கிலாந்தின் முக்கியஸ்தர்கள் பொழுது போக்க விளையாடும் கோல்ஃப் கிளப் புல்வெளியில் வெள்ளை நிற சட்டையும், கால்சராயும் அணிந்து பலர் தங்கள் கைகளில், நுனியில் வளைந்த கோல்ஃப் மட்டை மற்றும் அதன் சம்பந்தம் உள்ள அனைத்தையும் சிறிய வகை வண்டியில் (கோல்ஃப் கார்ட்) விளையாடுபவர்கள் பின் ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தது.
அந்த சமவெளிப் பகுதியில் வெயிலில் இருந்து கண்களை பாதுகாக்க அணியும் தொப்பியால் தன் கண்களை மற்றவரிடம் இருந்து மறைத்து, கவனத்தை அந்த சின்ன வெள்ளை பந்தில் பதித்திருந்தவன் உயரம் ஆறடிக்கும் மேல் இருக்க, அவனிடம் இருந்த நிமிர்வு பார்ப்பவரை சற்று தள்ளியே நிற்க வைத்தது.
அது மட்டுமே அவனைத் தனித்து காட்டிவிடவில்லை, அவனைச் சுற்றி இருக்கும் கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு வளையம், வெள்ளை உடை அணிந்த மனிதர்களின் நடுவில் கருப்பு உடை அணிந்த மாமிச மலைகள் நான்கு புறமும் அவனைச் சுற்றி அரண் அமைத்திருந்தது.
அவன் கரண் பிரதாப் சிங், ராஜஸ்தானிய அரச குடும்பத்தின் அடுத்த பட்டத்து இளவரசன். மஹாராஜா சமர் சிங் மற்றும் ராணி மீரா பாய் பரிகர்க்கும் பிறந்த மூத்த மகன். இவனுக்கு ஒரு தங்கை ரஷ்மி சிங் டோடியா , டோடியா குடும்பத்தின் மருமகள்.
ராஜஸ்தானிய அரச குடும்பத்தின் கடைக்குட்டி உதய் பிரதாப் சிங், பள்ளிப்படிப்பை முடிக்கப் போகும் இளம்கன்று.
கரணின் கண்கள் அந்த சின்ன பந்தில் குறி வைத்திருக்கும் நேரத்தில், எங்கிருந்தோ சீறி வந்த துப்பாக்கிக் குண்டு அவன் தோள்பட்டையை உரசி விட்டுச் செல்ல, அந்த திடீர் தாக்குதலில் வலியில் முகம் சுருக்கியவன், கண்களுக்குள் வந்து நின்றான் அவன் கலில் ஹாசிம். கரண் பகை கொள்ளும் தனக்கு சமமான பகைவன்.
ரணசூரன் வருவான்..
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது … இன்ட்ரெஸ்டிங்
Nanri sago 🙏🙏