Loading

காலை நேரம்..

யோகமித்ரன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க அறைக்கதவை தட்டி விட்டு, “தம்பி இட்லி ரெடி” என்றாள் சாதனா.

“டூ‌ மினிட்ஸ் அண்ணி” என்று தலை வார ஆரம்பிக்க, “லன்ச் தக்காளி சோறு தம்பி. தொட்டுக்க அப்பளம் போதுமா இல்ல முட்டை வைக்கவானு அத்த கேட்டாங்க. சீக்கிரம் போய் சொல்லுங்க” என்று விட்டு நகர்ந்தாள்.

தயாராகி வெளியே வந்தவன், மேசையில் இருந்த இட்லியை எடுத்து தட்டில் வைத்து விட்டு சட்னியை தேடினான்.

“இந்தாடா” என்று யோகமித்ரன் அன்னை நர்மதா வந்தார்.

“தாங்க்ஸ் மா” என்று வாங்கி ஊற்றி சாப்பிட ஆரம்பித்தான்.

“அப்பளம் பொறிக்கவா? முட்டையில ஆம்ளேட் போடவா?”

“ரெண்டும் வேணாம்மா. நான் கேண்டீன்ல வடை வாங்கிக்கிறேன்.”

“அப்ப சரி”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே யோகமித்ரனின் அண்ணன் புவனன் வந்து விட்டான். சாதனாவும் பின்னாலே வந்தாள்.

“உனக்கு என்ன வேணும்?” என்று பெரிய மகனிடம் நர்மதா கேட்க, “எனக்கு மட்டும் என்ன தனியா? நானும் கேண்டின்ல பார்த்துக்கிறேன்” என்று அவனே எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

“அத்த நாமலும் சாப்பிடுவோம். கோவிலுக்கு போகனும்ல?”

சாதனா தட்டை எடுத்து வர, இருவரும் அமர்ந்து விட்டனர்‌.

“எதுக்குமா கோவில்?” – மித்ரன்

“உனக்கு பொண்ணு பார்க்க ஜாதகம் கொடுத்துருந்தேன்ல? ஜோசியர் கோவிலுக்கு வர சொல்லி இருக்காரு. போய் பார்த்துட்டு வர்ரேன்”

“சரி தான். ஜோசியர வீட்டுக்கு கூப்பிட்டு பேச வேண்டியது தான?”

“அவருக்கு எதோ வேலையாம். அங்க பார்த்துட்டு அப்படியே கிளம்பிடுவாராம்”

யோகமித்ரன் தலையாட்டி விட்டு தட்டை தூக்கிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

“ம்மா.. பொண்ணு பார்க்குறது பிரச்சனை இல்ல. ஆனா ஒரு தடவ பண்ண மாதிரி இன்னொரு தடவ அதே தப்ப பண்ணிடாதீங்க. பொண்ணுக்கு வாய் கம்மியானு விசாரிக்குறதுக்கு பதில கை கம்மியா நீளுமானு கேளுங்க. பாவம் என் தம்பி”

புவனன் கண்ணில் குறும்போடு பாவமாக கூறினான்.

நர்மதா சட்டென சிரித்து விட, சாதனா கணவனை முறைத்தாள்.

“இல்லடா தங்கம்.. சின்ன பையன் பாரு”

“அப்போ நான் உங்கள அடிக்கிறேன்?”

“நான் எப்போடா அப்படி சொன்னேன்? நான் இவ என்னை அடிக்கிறத பத்தி எதாவது சொன்னேன்?”

நர்மதா சிரிப்போடு, “ச்சே ச்சே.. நீ அம்மா காப்பாத்துங்கனு கத்துறது எனக்கு கேட்டதே இல்ல” என்றார்.

“அத்த.. அவரோட சேர்ந்துட்டு ஓட்டாதீங்க”

“இல்லமா.. ஒரு இன்ஃபர்மேஷன்…”

“ஒன்னும் வேணாம் ” என்று முகத்தை சுருக்கியவள், கணவனை முறைத்து வைத்தாள்.

“எதுக்கும் உன்னை ஈவ்னிங் ஹாஸ்பிடல்ல பார்க்குறேன்டா அண்ணா. உயிர முடிஞ்ச வரை காப்பாத்திக்க.. அண்ணி விடாதீங்க. என் சப்போர்ட் உங்களுக்கு தான்” என்று முஷ்டியை காட்டி விட்டு, சிரித்தபடி கிளம்பி விட்டான் மித்ரன்.

“உங்க ரெண்டு பேரு கூடவும் டூ. மித்ரன் தம்பி தான் எனக்கு சப்போர்ட்”

“அட லூசே.. அவனும் நீ அடிப்பனு தான் சொல்லிட்டுப்போறான். நல்லா யோசி” என்று புவனன் எழுந்து விட்டான்.

சாதனா தலையை தட்டி யோசிக்க, “சாப்பிடு. அவனுங்க இப்படித்தான். கோவிலுக்கு லேட் ஆகிடும்” என்று நர்மதா கூறவும், வேகமாக உணவு உள்ளே போனது.

யோகமித்ரனின் குடும்பம் மிகவும் அன்பான சாதாரண குடும்பம். யோகமித்ரனின் தந்தை மிகமிக சாது. அதனால் அவர் பட்ட துன்பங்கள் ஏராளம். அவரை மணமுடித்த நர்மதா பட்ட கஷ்டங்கள் வார்த்தையில் அடங்காது.

மகன்கள் வளர்ந்து பேச ஆரம்பித்த பிறகு தான், ஓரளவு அந்த குடும்பத்தின் துன்பங்கள் விடை பெற்றது. எட்டு வருடங்களுக்கு முன்பு யோகமித்ரன் கல்லூரியில் கடைசி வருட பரிட்சை எழுதி விட்டு வரும் போது, தந்தை இறந்து போன செய்தி கிடைத்தது.

அதன் பிறகு புவனனின் தலையில் வந்தது குடும்ப பொறுப்பு. ஆனால் தாயை இரு மகன்களும் தாங்கினர். சிறு வயதிலிருந்து பெற்றோரின் பிரச்சனைகளை துன்பங்களை பார்த்து வளர்ந்ததால், இருவருமே அன்பை தவிர வேறு எதையும் அன்னையிடம் காட்டுவது இல்லை.

அவருக்கு அனுசரனையாகவே நடந்து, எப்போதும் அவரது முகத்தில் மலர்ச்சியை கொண்டு வருவார்கள்.

புவனன் ஒரு நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்கிறான். யோகமித்ரன் ஒரு நிறுவனத்தில் குழுதலைவராக இருக்கிறான்.

கை நிறைய சம்பளம். எந்த கடனும் இல்லை. ஒரு வருடம் முன்பு தான் புவனனின் திருமணம் நடந்து முடிந்தது. இப்போது யோகமித்ரனுக்கு பெண் பார்க்கும் வேலை ஆரம்பித்து இருந்தது.

இருவருமே காதல் என்று பருவ வயதில் சுற்றவில்லை. குடும்பநிலை, வேறு யோசிக்க விட்டது இல்லை. அதனால் தங்களது திருமண பொறுப்பை அன்னையிடம் கொடுத்து விட்டு வேலையை பார்த்தனர்.

யோகமித்ரன் அலுவலகத்தை நெருங்கும் போது செந்திலிடமிருந்து அழைப்பு வந்தது.

•••

அதிகாலையில் எழும் போதே சம்பூர்ணாவிற்கு தலை வலித்தது.

தலையை பிடித்துக் கொண்டு மணியை பார்த்தாள். எப்போதும் எழும் நேரம் தான். எழுந்து சென்று முகம் கழுவி விட்டு வந்தவள், பால்கனி கதவை திறந்தாள்.

மிக அமைதியாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தூர தூரமாக வீடுகள். ஆள் நடமாட்டம் அற்ற சாலைகள்.

ட்ரெட் மில்லில் ஏறி நடக்க ஆரம்பித்து விட்டாள். பத்து நிமிடம் கடந்து இருக்கும் கதவு தட்டப்பட்டது.

“கம் இன்” என்றதும், ஒரு பெண் கண்ணாடி குவளை நிறைய பழரசத்தோடு வந்து சேர்ந்தாள்.

சம்பூர்ணா எடுத்துக் கொண்டதும், நாளிதழ்களை அங்கே வைத்து விட்டு திரும்பிச் சென்று விட்டாள்.

நடந்து முடிந்து பழச்சாறை எடுத்துக் கொண்டு அமர்ந்தவள், வியர்வை உலரும் வரை நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தாள். செய்திகளை பார்த்து முடித்து பழச்சாறும் தீர்ந்த பின்பே குளிக்கக் கிளம்பினாள். குளித்து முடித்து தலையை உலர்த்தி மின்சார கம்பி மூலம் முடியை நேராக்கி, குதிரைவாலை போட்டுக் கொண்டு வெளியேறினாள்.

அவ்வளவு தான் அவளது மேக் அப். முகத்திருத்தம் மாதம் ஒரு முறை செய்வது. அதை தினமும் வீட்டில் செய்ய மாட்டாள். வராது. நேரமில்லை.

கீழே வந்தவளை பார்த்து விட்டு, “வந்துட்டா அத்த.. பேசுங்க” என்று ரகசிய குரலில் கூறினார் சம்பூர்ணாவின் அன்னை அபர்ணா.

“இரு வரட்டும்.. பூர்ணாமா இங்க வாடா” என்று அழைத்தார் பாட்டி சுதாராணி.

“சொல்லுங்க பாட்டி” என்று கைபேசியை பார்த்துக் கொண்டே வந்தவள், பாட்டியின் பக்கம் வந்து நின்றாள்.

“உட்காரு” என்று அமர வைத்ததும், “உங்கம்மா எதோ சொல்லனும்னு சொன்னா” என்று மருமகள் பக்கம் கை காட்டினார்.

“நானா?” என்று அபர்ணா அதிர்ந்து போக, ‘பேசு’ என்று சைகை காட்டினார்.

அபர்ணா பாவமாக தலையாட்ட, ‘பேசு.. உன் மக தான?’ என்று கண்ணால் ஜாடை காட்டினார்.

அபர்ணாவிற்கு மகளிடம் சொல்லவே பயமாக இருந்தது. அவர் மாமியாரை பாவமாக பார்க்க, “இப்ப ஏன் நீங்க கண்ணால பேசிட்டு இருக்கீங்க? விசயத்த சொல்ல தான சொன்னாங்க? சிங்கத்தோட குகைக்குள்ள போற மாதிரி இவ்வளவு பயப்படுறீங்க? விசயத்தை சொல்லுங்கமா” சம்பூர்ணா சிரித்துக் கொண்டே கேட்டாள்.

‘சொன்னப்புறம் நீ சிங்கம் மாதிரி வேட்டையாட கிளம்பாம இருந்தா சரி’ என்று மனதுக்குள் நினைத்து மாமியாரை பார்த்தார்.

அவர் மருமகளை முறைக்க, மகள் பக்கம் கண்ணை திருப்பினார்.

“உன்னை அந்த சங்கீதாவோட அண்ணன் மகனுக்கு பொண்ணு கேட்டாங்க” என்று கண்ணை மூடிக் கொண்டு வேகமாக சொல்லி விட்டார்.

எதாவது உடையப்போகிறது என்று எதிர் பார்க்க ஒன்றும் நடக்கவில்லை. மெல்ல கண்ணைத்திறக்க, சம்பூர்ணாவின் முகம் இறுகிப்போயிருந்தது. கோபம் எதுவும் இல்லை. ஆனால் இலகுத்தன்மை மறைந்து இருந்தது.

அந்த அமைதியில் சற்று பதட்டம் தனிய, மாமியாரை கண் காட்டினார்.

“நீ என்னமா சொல்லுற?” என்று மருமகளை முறைத்து விட்டு, சுதாராணி பேத்தியை பார்த்தார்.

தலைசாய்த்து பாட்டியை பார்த்தவள், “நான் என்ன சொல்லனும்?” என்று கேட்டு வைத்தாள்.

‘ஆத்தி…’ என்று மனதில் பதறி விட்டனர் இருவரும்.

“இல்ல பூர்ணா.. அவங்க என்ன செய்வாங்க? யாரோ பண்ணதுக்கு…”

“யாரோ பண்ணதுனா?”

பாட்டியின் பேச்சை அவள் இடை வெட்ட, ‘கிழிஞ்சது’ என்று அபர்ணா எழுந்து விட்டார்.

“நான் போய் சமையல பார்க்குறேன். நீங்க பேசிட்டு வாங்க” என்று ஓடி விட்டார்.

மருமகளை பார்த்து பாட்டி தலையிலடித்துக் கொண்டார்.

“இவள மாத்தவே முடியாது”

“அம்மா அப்படித்தான்” என்று சம்பூர்ணா புன்னகைத்தாள்.

“ம்க்கும்.. நாம தான் மெச்சிக்கனும். இவள வளர்த்தவங்கள சொல்லனும். உலகம் தெரியாம வளர்த்து விட்டுட்டு போயிட்டாங்க. நாமலும் எவ்வளவு தான் சொல்லுறது?”

“விடுங்க. சாப்பிடுவோம் வாங்க”

“சாப்பிடலாம். முதல்ல பேசுன விசயத்துக்கு பதில் சொல்லு”

“என்ன பாட்டி சொல்லனும்? என் பதில் உங்களுக்கு தெரியாதா?”

“இல்லமா.. கொஞ்சம் யோசிக்கலாம்ல? இப்படியே கல்யாணம் வேணாம்னு சொல்லுவியா?”

“எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்ல பாட்டி.”

“என்ன பெரிய நம்பிக்கை? ஊருல நல்லவனுங்களும் இருக்காங்க”

“இருந்துட்டு போகட்டும். எனக்கு வேணாம்”

“ப்ச்ச்.. இப்படியே பேசிட்டு இருக்க? வயசு இருபத்தி ஏழ தாண்டிருச்சு”

“சோ வாட் பாட்டி?”

“அந்த செந்தில் பையனையாச்சும் கல்யாணம் பண்ணிக்குவனு பார்த்தா பிரிச்சு விட்டுட்ட”

வேகமாக சொல்லி விட்டு நாக்கை கடித்துக் கொண்டார். பாட்டியை தலை சாய்த்துப் பார்த்தாள் சம்பூர்ணா.

“அப்போ அவனுக்கு பொண்ணு பார்த்தது நீங்க தானா?”

“ஹி ஹி.. அது..”

“அதுவும் நல்லது தான். அவன் வாழ்க்கைய பார்த்துட்டு போகட்டும். இப்ப நம்ம வேலையை பார்ப்போம்”

“இப்படியே ஓடாத பூர்ணா. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு. ஒரு வேளை இந்த பையன் பிடிக்கலனா வேற பையன பார்க்கலாம். ஓகேவா?”

“எனக்கு கல்யாணம் வேணாம் பாட்டி”

“பூர்ணா”

“உங்க மகன மாதிரி ஒரு அயோக்கியன பார்த்தப்புறம் கூட எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனுமா?”

“என் மகன்னு சொல்லாதனு சொல்லிருக்கேன்ல?”

சுதா முகத்தை எரிச்சலாக சுருக்க, “அந்தாளு உங்க மகன் தான?” என்று கேட்டு முறைப்பை வாங்கிக் கொண்டாள்.

“எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க ஆசையும் இல்ல. அவசியமும் இல்ல. தோனுச்சுனா சொல்லுறேன். பண்ணி வைங்க. இப்ப எனக்கு வேலை இருக்கு. சாப்பிடலாம் வாங்க”

வேகமாக மேசை பக்கம் நடந்தாள். அபர்ணா மாமியாரை பார்த்தார். சுதா சலிப்பாக தலையசைக்க, அபர்ணாவின் முகமும் சுருங்கி விட்டது.

வேகமாக சாப்பிட்டு விட்டு சம்பூர்ணா கிளம்பி விட்டாள்.

கார் ஓட்டுனரிடம், “ஆஃபிஸ் வேணாம். வேற இடத்துக்கு போ” என்று ஒரு முகவரியை கொடுத்தாள்.

அங்கு சென்றதும் காரை விட்டு இறங்கியவள், அந்த அடுக்குமாடி குடியிருப்பை நிமிர்ந்து பார்த்தாள்.

“எந்த ஃப்ளாட்?” என்று தன் பிஏவை அழைத்து கேட்டு விட்டு, விறுவிறுவென லிஃப்ட்டை நோக்கி நடந்தாள்.

“மேடம் யார் நீங்க?” என்று அந்த கட்டிடத்தின் பாதுகாவலர் வர, அவரை கார் ஓட்டுனர் பிடித்து பதில் சொல்ல ஆரம்பித்தார்.

சம்பூர்ணா வேகமாக அவள் செல்ல வேண்டிய தளத்தின் எண்ணை அழுத்த, “ஒரு நிமிஷம் வெயிட்” என்று குரல் கேட்டது.

லிஃப்ட்டை நிறுத்தி விட, ஒருவன் ஓடி வந்து உள்ளே நுழைந்தான்.

“தாங்க்ஸ்” என்றவன் திரும்பிப் பார்க்க, சம்பூர்ணா புருவம் உயர்த்தினாள்.

“பரவாயில்லயே உன் ஃப்ரண்டுக்கு ஒன்னுனா ஓடி வர்ர?”

அவளை முறைத்துத் தள்ளிய யோகமித்ரன், “அவனோட நிலைமைக்கே நீ தான் காரணம்.” என்றான்.

சம்பூர்ணா தோளை மட்டுமே குலுக்கினாள். இருவரும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் நேராக அந்த வீட்டை நோக்கி நடந்தனர்.

கதவை தட்டி விட்டு சம்பூர்ணா உள்ளே நுழைய, யோகமித்ரன் பின்னால் வந்தான்.

செந்தில் நடு வீட்டில் இறுகிப்போய் அமர்ந்து இருந்தான்.

“அந்த ஃப்ளாட் காலி பண்ணிட்டியா? கீ?” என்று சம்பூர்ணா கேட்டுக் கொண்டே முன்னால் வந்து நிற்க, அவளை செந்தில் எதிர்பார்க்கவில்லை.

“நீ இங்க?”

“கீ தராம வந்துட்ட.” என்று கை நீட்டினாள்.

தலையை தொங்க போட்டபடி சாவியை எடுத்துக் கொடுத்தான்.

“ஓகே குட் பை” என்று விட்டு சம்பூர்ணா நடக்க, “ஒரு நிமிஷம். உன் கிட்ட பேசனும்” என்றான்.

திரும்பி கேள்வியாக பார்த்தாள்.

“நான் ரெசிக்னேஷன் லெட்டர் அனுப்பிட்டேன்”

இதைக்கேட்டதும் யோகமித்ரனுக்கு நிம்மதி வந்து விட்டது.

“ஓகே. தென்?”

“நான் கல்யாணத்துக்கு சரினு சொல்லிட்டேன். ஊருக்கு போறேன்”

“பெஸ்ட் ஆஃப் லக்”

அவளது வாழ்த்தை கேட்டு ஒரு நொடி வெறித்த செந்தில், “அவ்வளவு தான் ” என்றான்.

அவளும் திரும்பிச் சென்று விட, யோகமித்ரன் நண்பனை கட்டிக் கொண்டான்.

“இப்ப தான் தெளிவா இருக்க. எப்ப ஊருக்கு கிளம்புற?”

“இப்பவே”

“இப்பவா?”

“என் திங்ஸ் எல்லாம் இங்க கொண்டு வந்துட்டேன். சாவி உன் கிட்ட இருக்கட்டும். இன்னும் மூணு மணி நேரத்துல ஃப்ளைட். நான் போகனும்”

சாவியை மித்ரன் கையில் திணிக்க, அவன் புரியாமல் பார்த்தான்.

“திரும்ப இங்க வர மாட்டேன்டா. இங்க இருக்கத அவசரமா ஷிஃப்ட் பண்ண முடியாது. நான் அங்க போயிட்டு எதாவது கம்பெனி மூலமா ஏற்பாடு பண்ணுறேன். அதுக்கு கூடவே இருந்து ஹெல்ப் பண்ணுறியா?”

“பார்த்துக்கலாம். வா உன்னை ஏர்போர்ட்ல விட்டுட்டு வர்ரேன்”

“வேணாம்டா. நீ உன் வேலைக்கு கிளம்பு”

“ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டு தான் வந்தேன்”

“எனக்கு தனியா இருக்கனும் போல இருக்கு மித்ரன். நான் போயிக்கிறேன். வா”

வெளியேறி கதவை பூட்டி விட்டனர்.

சொந்திலின் முகம் அளவுக்கு அதிகமாக வாடி இருந்தது. இரவெல்லாம் அவன் தூங்கவே இல்லை. எல்லோரும் கிளம்பியதுமே தன்னுடைய பொருட்களை எல்லாம் அள்ளிக் கொண்டு, காரிலேயே கொண்டு வந்து சேர்த்து விட்டான்.

இனி அவனுக்கும் சம்பூர்ணாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இருக்கவும் வேண்டாம். காலையிலேயே வீட்டிற்கு அழைத்து, திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டான். அதோடு வேலையையும் விட்டு விட்டான்.

வெளியே நின்றிருந்த தன்னுடைய கார் சாவியையும் மித்ரனிடம் கொடுத்து விட்டு, “டாக்சி‌ வந்துடும். நீ கிளம்பு மச்சி” என்றான்.

“பத்திரமா போயிடுவல?”

“ம்ம்”

“சரி. ஊருக்கு போயிட்டு கால் பண்ணு’

செந்தில் தலையாட்டியதும் மித்ரன் பைக்கை நோக்கி நடந்தான். செந்தில் புக் செய்த டாக்சியும் வந்து விட்டது. இருவரும் கிளம்பி வெவ்வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர்.

கடந்த காலங்களின் சுவாரஸ்யம் அதை திருப்பிப் பார்ப்பதில் தான் உண்டு. ஆனால் சில கடந்தகால நினைவுகள் காயங்களை மட்டுமே வைத்திருந்தால், அதை அங்கேயே விட்டு விட்டு கடந்து விடுவதே புத்திசாலிதனம்.

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. சம்பூர்ணா மித்ரனுக்கு ஜோடி சேர வாய்ப்பு இருக்கோ

    1. Author

      ஆமா அவங்க தான் சேருவாங்க

  2. அடுத்து என்ன நடக்கும் .. இன்ட்ரெஸ்டிங்