Loading

 

 

KKEN – 1

அழகான காலைப் பொழுது. புதியதாய் பூத்த  மலர் இதோ ராபிடோவில் ஆட்டோ புக் செய்து காத்திருக்கிறது. அவள் வேறு யாருமல்ல. நம் நாயகி வித்யாதான். பெயருக்கு ஏற்றபடி கை  வைக்கும் அனைத்து வித்தைகளிலும் வித்யா தான். இதோ எம்பி  ஏ  படித்துக் கொண்டிருக்கிறாள்.

அவளைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்… இதோ ஆட்டோ வந்து விட்டது. நாமும் அவளுடன் ஏறிப் பிரயாணிப்போம்.  இதுவரை ஆட்டோக்காரன் முகம் பார்க்கவில்லை. இறங்கும்போது QR  கோடில்  பணம் செலுத்தி விட்டாள்.

இவளை இறக்கி விடுவதற்கு முன்பே அடுத்த புக்கிங் வந்திருந்தது. கஸ்டமரிடம் பேசிக் கொண்டே அடுத்த இடம் விரைந்தது ஆட்டோ.

“ஹாய் டீ ”

வழக்கம்போல அவளது தோழிகள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“என்னடி ஆட்டோல வந்து இறங்கற? அப்பா எங்க?”

“அவரு பாரின் போய் இருக்காரு. இன்னும் பத்து  நாளைக்கு ஆட்டோதான். ஜாலி”

“அப்ப டெயிலி இதே ஆட்டோல வாடி. ஆட்டோ மேன் சூப்பரா இருக்கான்”

“அப்டியா  நான் பாக்கலியே ”

“ஏய்! வெளில வந்தா கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதாவது இருக்கான்னு  ரோட்டை பாக்கணும். அப்பவும் உக்காந்து போனையே நோண்டிகிட்டு இருந்தா போரடிக்கும். பேசிக் கொண்டே வகுப்புக்குள் நுழைந்தார்கள். என்னதான் பேச்சு பேசினாலும் நால்வருமே நன்றாகப் படிப்பவர்கள் தான். அதனால் எந்தக் கவலையும் இல்லை. பேச்சும் உண்டு. வம்பும் உண்டு.

அமைதியாக யாராவது அமர்ந்திருந்தால்,

“இதோ பாருடி தெரேசா அம்மா அவதாரம் எடுத்திருக்காங்க” என்பார்கள். அதுவே ஆண்களாக இருந்தால் “வந்துட்டாருடா வெள்ளை சட்டை  விவேகானந்தரு”  என்பார்கள்.

யாருக்காவது பிரச்சனை வந்தால் நடு நாயகமாக நின்றுப் பேசினால் வந்துட்டர்பா கோட் சூட் இல்லாத கோபிநாத் என்று கலாய்த்து விடுவார்கள். ஆண்களும் சரி பெண்களும் ஒருவருக்கொருவர் கவுண்டர் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று எல்லாம் கூறி விட முடியாது. பதில் பேச முடியாத நிலை வரும்போது பப்ளிக் பப்ளிக் என்று அடக்கி வாசிப்பார்கள். ஆண்களும் தான் என்ன, பெண்களைப் பார்த்தல் வித விதமாகப் பாடல்கள் பாட ஆரம்பித்து விடுவார்கள்.

பெரும்பாலும் அதில் கல்லூரிச் சாலை பாடலில் வரும்,

“காலை முதல் மாலைவரை காஷ்மீர் ரோஜா பூக்கள்” வரிகளும்,

“கண்முன்னே எத்தனை நிலவு சாலையிலே” வரிகளும் தான் அதிகம். (ஏனோ இந்தப் பாடல்கள் எல்லாம் எல்லா காலத்து கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தி விடுகிறது தானே!)

அதிலும் வித்யாவைப் பார்த்தால் போதும் “டேய்! பேர் அண்ட் க்ளோ போடாத வெண்ணிலா வந்துருச்சுடா” என்றுக் கூறி பின்னாலேயே வர ஆரம்பித்து விடுவார்கள் அவளுக்காகவே காத்திருக்கும் மொத்த கூட்டமும்.

அவளோ யாரிடமும் கடுமையாக எல்லாம் பேசி விட மாட்டாள். தன்னுடைய சொல்லால் கூட யாரையும் காய படுத்தி விட கூடாது என்று நினைப்பவள். இவளே தான் தன்னையுடையவனை பிற்காலத்தில் அவனே நினைத்துப் பார்க்க கூட முடியாத படி காயப்படுத்துவாள் .

 

மீறி தன்னை விரும்ப வேண்டும் என்று யாராவது அடம்பிடித்தால்,

“வீட்டுல அப்பாகிட்ட வந்து பேசுங்க” என்று விடுவாள். இளங்கலை படிக்கும்போது நிறைய பாடு பட்டாள். முதுகலை என்று வரும்போது பெரும்பாலும் எல்லாரும் படிப்பில் தான் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்கள். இனி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டிய கட்டாயம். வேலைக்குப் போக வேண்டும். சம்பாதிக்க வேண்டும். பல விதமான கஷ்டங்கள், கட்டாயங்கள் .

 

சரி விடுங்கள். வீட்டுக்கு வீடு வாசப் படி. மற்றவர்கள் விஷயத்திற்கு நாம் போக வேண்டாம். இதை நோட் செய்துக் கொள்ளுங்கள். ரொம்ப முக்கியம்.

 

அதுவே இவர்களை யாராவது இவர்களிடம் வம்பு பண்ணினால் அழுவது போல நடித்தே ஏமாற்றிவிடுவார்கள்.

“நீ ஆட்டோல வர்றதுக்கு உன்னோட அம்மா எப்டி டீ ஒத்துக்கிட்டாங்க?”

“மம்மியை ஏமாத்தறதெல்லாம் ஒரு  மேட்டரா?” அலட்சியமாக சொன்னாள் ஒருத்தி. அவர்கள் பேசுவதையே பார்த்துக் கொண்டு தோழியின் தக்காளி சாதத்தை இன்னொருத்தியின் உருளை வருவலோடு சேர்த்து ரசித்து ருசிக்க ஆரம்பித்திருந்தாள் வித்யா.

“இவ., அன்னையே! அன்னையேன்னு சொல்லி அம்மாவோட கண்ணையே பார்த்து மயக்கி இருப்பா. அவங்களும் பொண்ணோட அழகுல மயங்கி ஓகே சொல்லி இருப்பாங்க. இது தெரியாதா?”

இப்படியே அரட்டை அடித்துக் கொண்டே மதிய உணவை காலி செய்திருந்தார்கள்.

மீண்டும் அடுத்த நாள் அன்னையிடம் வந்து,

“அம்மா! ப்ளீஸ் மா! நான் யாரு மேலையும் இடிக்க மாட்டேன் ப்ளீஸ்! ப்ளீஸ்! ஒரே ஒரு நாள் கார்ல போறேன் மா ” என்னதான் கண்ணை சுருக்கி உதடு குவித்து கெஞ்சினாலும் காயத்ரி  இன்று மசிய போவதில்லை.

“ஏதாவது பிரச்சனை ஆனா உங்க அப்பாகிட்ட என்னால பதில் சொல்ல முடியாது. சீரியஸ் இஸ்யூன்னா  என்னால தனியா ஹாண்டில் பண்ணவும் முடியாது.

திருப்பி திருப்பி அதையே மகள் கேட்டுக் கொண்டிருக்க அன்னையும்தான் எத்தனை முறை தான் அதே பதிலையே சொல்லிக் கொண்டிருப்பாள்? அன்னைக்கு பொறுமை பறப்பதை கண்டு மகள் ரூட்டை மாற்றினாள்.

“ அப்ப டூ வீலர் ?” இரு கண்களையும் விரித்துக் கேட்டாள் .

“அதற்கும் நோ தான். எத்தனைமுறை எப்படி விதவிதமாக கேட்டாலும் அதேதான். ஒன்னு பஸ்ல போ. இல்ல! ஆட்டோல போ” கண்டிப்புடன் முடித்துக் கொண்டாள்  அன்னை.

மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு போகும் மகளை பார்த்து சிரிப்புதான் வந்தது. ஏதோ சில கிலோ மீட்டர் தூரம் என்றால் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டாள் தான். ஆனால்  இவள் படிக்கும் கல்லூரிக்கும் இவர்கள் வீட்டிற்கும் பன்னிரண்டு கிலோ மீட்டர். இருக்கும் ட்ராபிக்கை பார்த்தால் பயமாகத் தான் இருக்கிறது. இதற்கும் வித்யாவின் அன்னை காயத்ரி அப்படி எல்லாம் பட்டிக்காடு இல்லை. பெரிய பெரிய ஸ்போர்ட்ஸ் காரையும் அசால்டாக ஓட்டுபவர்தான். ஏனோ தனக்கு என்றால் இருக்கும் தைரியம் அத்தனையும் மகளின் விஷயத்தில் காணாமல் போய்  விடுகிறது. ஒரே மகள் என்பதால் கூட இருக்கலாம். காயத்ரியும் விஜயகுமாரும் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்தவர்கள். எனக்கு அடுத்தவர் கீழ் கை கட்டி நின்று வேலை பார்க்க வேண்டாம். சுயதொழில் செய்யப் போகிறேன் என்று அவர் கூறியதும் விஜயன் வீட்டில் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிஸ்னஸ் கை  கூடினால் சரி. இல்லை என்றால்? வெளியில் வேலை பார்க்கும் வசதி வேறு எங்கும் கிடையாது. மாதம் 30ம் தேதியே சம்பளம் வந்து விடும். ஆயிரம் காரணங்கள் சொன்னார்கள். அவர்கள் சொல்லும் காரணங்கள் அனைத்துமே சரிதான். இருப்பினும் ஒரே ஒரு முயற்சி செய்தால் தான் என்ன? இளங்கன்று பயம் அறியவில்லை.

“ஏம்பா! வேலைய விடக் கூடாதுன்னு இத்தனை காரணம் சொல்லறீங்களே? ஒரே ஒரு வார்த்தை நீ முயற்சி பண்ணி பாருடா. நீ சாதிப்ப! கூட நாங்க நிக்கறோன்னு  ஒரு வார்த்தை சொன்னா என்னப்பா?” கண்ணை பார்த்து நியாயம் கேக்கும் மகனுக்கு பதில் சொல்ல முடியவில்லை. யோசித்தார். மீண்டும் மீண்டும் பல முறை யோசித்தார். நடுத்தர வர்கத்திற்கே இருக்கும் பயம் அவரை சரி சொல்ல விடவில்லை. இன்று நான் சரி என்று சொல்லி விட்டு நாளையே அவன் தோல்வி அடைந்து விட்டு நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே என்றுக் கேட்டால்? அப்போது அவனை கை தூக்கி விட என்னால் முடியுமா?’ இதே தான் அவரின் பயம். அதுவும் இல்லாது,

“நாந்தான் இவ்ளோ சொல்லறேன்., வயசுல பெரியவன் நாங்க பாக்காதது இவனுக்கு என்னத்த தெரியும்? நானும் சொல்லறேன் பெரியவனும் சொல்லறான். சொல்லறதை கேட்காம என்ன? என்று கோபம் ஆத்திரம் எல்லாம் சேர்ந்துக் கொண்டது. அவரே அமைதியாக இருந்தாலும் பெரிய அண்ணி வந்து வந்து அன்னையிடமும் தந்தையிடமும் கலைத்து விட்டது வேறு கதை. அவருக்கும் இதற்கும் என்ன தொடர்பு. பின்னால் பிரச்சனை என்று வந்து விட்டால் பிரிக்கப் போகும் சொத்தில் ஏதாவது தனக்கு பங்கு குறைந்து விடுமோ என்ற பயம் காரனமாக இருக்கலாம் . அல்லது நம் நண்டு கதையாகவும் இருக்கலாம்.

எனக்கு என்னத் தெரியும்? அவரவர் எண்ணங்கள் அவரவர் மனதில் இல்லையா?

குடும்பத்தில் விஜயனின் அண்ணண்  உட்பட ஒருவருமே அவரை ஊக்கப்படுத்தவில்லை. நாட்கள் செல்ல செல்ல வீண் வாக்குவாதங்களும் , சண்டைகளுமே  அதிகரித்தன. அவர் மனம் தளர்ந்த நேரத்தில் உனக்காக நான் இருக்கிறேன் என்று வந்தவள் தான் காயத்ரி.

“வேற ஜாதி பயலா இருந்தாலும் பரவால்ல.,வேலை இல்லாம இருக்கற வெட்டி பயலுக்கு என் பொண்ண குடுக்க மாட்டேன்.”

இது காயத்ரியின் அப்பா.

“ஏண்டி! ஒரே ஆபிசுன்னு சொல்லற. வேலைன்னு ஒன்னு இல்லாம திடீர்னு இப்படி தொழில் தொடங்கப் போறேன்னு வந்து நிக்கறாரு. அவங்க வீட்டுலையும் ஆதரவு இல்ல. உன்னோட வாழ்க்கையை எப்படி டீ எங்களால் அப்படியே விட முடியும்? ஒன்னாம் தேதி ஆன ஒடனே பால் , வாடகை, மளிகைன்னு செலவுகள் வரிசை கட்டி நிக்கும். பிள்ளை பொறந்தா கேக்கவே வேணாம். சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்க கூடாது. உன்னோட ஒத்த சம்பளம் எத்தனை நாளைக்கு சமாளிக்க முடியும்? “அம்மாவின் பயம் புரியவில்லை.

வயது வா வா என்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது. விஜயன் மீது இருந்த காதல் செய்யும் மாயம் .

பெண்ணாக இருக்கும்போது புரியாத பல விஷயங்கள் காயத்ரிக்கு தான் அம்மாவாகும் போது புரியும். அதுவும் இந்தக் காலத்தில் ஒரு பெண்ணை பெற்று வளர்ப்பது என்பது அத்தனை சுலபமான விஷயமா? தினம் தினம் செய்தி தாள்களில் வராத நிர்பயாக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு அந்த காலம் போல குழந்தை பிறந்ததுமே கொன்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த மாதிரி விஷயங்கள் கேள்விப் படும்போது ஜீரணிக்க முடியாமல் நாமும் முழுங்கி கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

அப்பாக்கள் ஏனோ ,

“உனக்கும் இந்த வீட்டுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை”, என்று சொல்லி அனுப்பினாலும் அம்மாக்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஏதோ ஒரு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறத்தான்  வேண்டும் என்ற சூழலில் இருவரும் இணைந்தார்கள். லோன் போட்டு சிறியதாக ஒரு துணி கடையை ஆரம்பித்தார். மாதாந்திர செலவுக்கு  என்று பெரியதாக வருமானம் எதுவும் இல்லை. இருந்தாலும் காயத்ரியின் வருமானம் கை  கொடுத்தது. அதைத் தவிரவும் கணவனின் கடையில் துணி வாங்குபவர்களுக்கு இவளே ரவிக்கையும் சுடிதாரும் தைத்து கொடுக்க ஆரம்பித்தாள்.

காதல் வரும் ..

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. அடடா இந்த காதல் கதை வித்தியாசமா இருக்கே … ஹீரோயின் அப்பா அம்மா காதல் கதை

    1. Author

      மிக்க நன்றி . இரண்டாம் பாகம் படிங்க. உங்களுக்கு பிடிக்கும்