Loading

காலை கனவு 40

விடியல் அப்படியொரு அழகானதாக இருந்தது புதுமணத் தம்பதியருக்கு.

சக்தி இன்னும் உறக்கத்திலிருக்க, எழுந்து அமர்ந்திருந்த நிதாஞ்சனி மடியில் கை ஊன்றி கன்னம் தாங்கியவளாக அவனை ரசித்திருந்தாள்.

இரவின் ரசனையும், தவிப்புகளும் அவளின் விழிகளில் இன்னமும் எஞ்சி நின்றன. அவளது காதலின் ஆயுள் அதிகம். ஆழம் அதிகம். அவளுக்கு சற்றும் குறைவில்லாதது தன்னுடைய நேசமுமென ஒற்றை இரவில் காட்டியிருந்தான் அவளவன்.

தன்னவளை தன்னுள் நிரப்பி, அகம் நிறைத்து, தனக்குள் சுவீகரித்து, அவளில் தன்னை தொலைத்து, தேடலை நீட்டித்து, அவன் காட்டிய காதலெல்லாம் பாகின் தித்திப்பாய் அவளுள் கரைந்து சுவை கூட்டியது.

“இவ்ளோ தேடுற அளவுக்கு என்னை பிடிக்குமா?” என கை நீட்டி உறங்கிக் கொண்டிருந்தவனின் மீசை நுனி பிடித்து இழுத்து, தன் உதட்டில் ஒற்றிக்கொண்டவளின் அழுத்தமான முத்தம் அவனின் நெஞ்சில் பதிந்திருந்தது.

அவளின் குளிர் பார்வையிலே தூக்கம் கலைந்திருந்தவன், அவள் மீசையை பிடித்திழுக்கவும், அவளை வேகமாக இழுத்து தன்மீது சாய்த்திருந்தான்.

நொடியில் என்னவென்று உணரும் முன்பே, அவளின் முகம் அவனது இதயத்தில் பதிய, அவளின் இதழ் அவனின் மார்பில் ஆழப் புதைந்திருந்தது.

“அச்சோ என்னங்க இது” என்று சிணுங்கியவளை அவன் எழ அனுமதித்த போது சூரிய கதிர்கள் அறையில் ஊடுருவியிருந்தன.

“ரொம்ப நேரமாச்சு. அத்தை என்ன நினைச்சாங்களோ” என்று நிதாஞ்சனி படுக்கையிலிருந்து இறங்க…

“என்ன நினைப்பாங்க?” என்ற சக்தி, “நடக்க வேண்டியது நடந்திருக்கும் நினைப்பாங்க” என்றான்.

“அவ்வா” என்று நிதாஞ்சனி வாயில் கை வைத்திட…

“இதுதான் நடக்குமுன்னு எல்லாருக்கும் தெரியுமே! அப்புறமென்ன ஷாக்” என்றவன், கீழிறங்கி நின்றவளின் கரம் பற்றி இழுக்க…

அவளோ லாவகமாக பின்னால் சென்றிருந்தாள்.

“உஷாரு…”

“அப்புறம் கீழப்போக இன்னும் லேட்டாகும்.”

“விவரம் தான்!”

“உண்மையாவே நீங்கதானா?”

“திரும்ப காட்டட்டுமா?” என்று சக்தி ஒற்றை கண்ணடிக்க…

“நீங்க இப்படிலாம் பேசுறீங்கன்னா யாரும் நம்பமாட்டாங்க” என்றவள், “விறைப்பா சுத்துற சக்தியைவிட இந்த சக்தி க்யூட் தான்” என்றாள்.

“அப்படியா…” என்ற சக்தி, “இந்த சக்தி உனக்கு மட்டும் தான்” என்றான்.

அதில் அவன் வெளிப்படையாய் அவளிடம் பகிர்ந்துக்கொள்ளாத காதல் நிரம்பிக் கிடந்தது.

“பிடிச்சிருக்கு?” அவள் மலர்ந்த முகமாகக் கூறிட…

“மேடம் சொல்லவே வேண்டாம். எனக்கேத் தெரியும்” என்றான்.

“தெரிஞ்சா சரிதான்.”

“அதென்ன டோன் மாறுது!”

“தெரிஞ்சும் வேணாம்னு ஒதுங்கி நின்னீங்கதான…”

“ஹேய்… கல்யாணமாகி நான் மொத்தமா கவிழ்ந்த பிறகும் இதை சொல்லணுமா?” என்றவனிடத்தில் சிரிப்பின் ஆதிக்கம்.

“காலத்துக்கும் சொல்வேன். நம்ம பசங்கக்கிட்டவும் சொல்லுவேன்” என்றவள், “தோணும்போதெல்லாம் சொல்லுவேன்” என்றாள்.

“இதெல்லாம் ரொம்பவே அநியாயம்.”

“அப்போ நீங்க பண்ணது என்னவாம்?”

“என்ன பண்ணாங்கலாம்?” என்றவனின் பார்வை விஷமமாய் அவளில் படிய…

“நான் இல்லை” என்று வேகமாக குளியலறைக்குள் சென்று மறைந்திருந்தாள். அவனின் சிரிப்பின் ஓசை நீருக்கடியில் நின்றவளின் வதனத்தை சிவக்க வைத்தது.

மற்றொரு அறையில் குளித்து தயாராகி சக்தி கீழிறங்கி வர, ஆர்விக் உடன் மற்றவர்களும் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

“குட்மார்னிங் மாம்ஸ்.” ஆர்விக் குட்மார்னிங் வார்த்தைக்கு கொடுத்த அழுத்தத்தில் அங்கிருந்த இளமை பட்டாளம் சத்தமின்றி சிரித்திருந்தனர்.

“நைட்டு பயந்துகிட்டே ரூமுக்கு போன மாதிரி தெரிஞ்சுது” என்று ஆர்விக் சத்தமின்றி மென் ஓசையில் சக்தியிடம் கேட்டிட,

“ரிசப்ஷன்ல பண்ண அலப்பறைய ரூம்லையும் காட்டிடுவியோங்கிற பயம் தான்” என்று ஆர்விக்கின் அருகில் அமர்ந்த சக்தி மெல்ல கிசுகிசுத்தான்.

அதில் வாய்விட்டு சிரித்த ஆர்விக்,

“அந்த பிளான் இருந்துச்சு மாம்ஸ்… பட் பழம் சாப்பிட்டு நேரம் ஓடிடுச்சுன்னா… என்னை மொத்தி எடுத்திடமாட்டிங்க. அதான் நல்ல பிள்ளையா இருந்துட்டேன்” என்றான். குறும்பாய்.

“சேட்டை கூடிப்போச்சுடா உனக்கு” என்று உடன் சிரித்தான் சக்தி.

“ரிலேஷன்ஷிப் ஸ்ட்ராங் ஆகியிருக்கே மாம்ஸ்… சோ, இதெல்லாம் பழகிக்கோங்க” என்ற ஆர்விக்கின் விரிந்த புன்னகையில்,

“உன்னை மாதிரி இருக்கிறது ரொம்பவே கஷ்டம்டா” என்றான் சக்தி.

“எப்படி?”

“சாஃப்ட் அண்ட் ஸ்வீட்டா” என்று சக்தி சொல்ல…

“ஆஹான்…” என்ற ஆர்விக், சக்தியின் தோள் பக்கம் மெல்ல சரிந்து, “அப்போ உங்க தங்கச்சியை இந்த சாஃப்ட் அண்ட் ஸ்வீட் பெர்சனுக்கு கட்டி வைங்களேன்” எனக்கூறி தன்னை நோக்கி பார்வையை பதித்தவனைப் பார்த்து கண்கள் சிமிட்டினான்.

“ஆர்வி…”

“எஸ் மாம்ஸ்… ஆம் சீரியஸ்” என்ற ஆர்விக், “ஐ லவ் ஹெர்” என்றான்.

சக்தி பார்வையை மாற்றாதிருக்க…

“உங்களுக்கு என்ன தோணுதோ சொல்லலாம்” என்றான் ஆர்விக்.

“அன்வி?”

“அவளுக்கும் என்னை பிடிக்கும். மேரேஜ் பண்ணிக்கிற அளவான்னு அவதான் சொல்லணும்” என்ற ஆர்விக், “முன்ன எப்படியோ… ஆனால் இப்போ அவகிட்ட சொல்றதுக்கு முன்ன உங்ககிட்ட சொல்லணும் தோணுச்சு” என்றான்.

சக்தி அமைதியாகவே இருக்க…

“நோ சொல்லணும்னாலும் சொல்லலாம். ஆர்வி ஏத்துப்பேன்” என்றான் அதே புன்னகையோடு.

“நோ சொல்லுவேன் தோணுதா?”, சக்தி கேட்க…

“தேங்க்ஸ் மாம்ஸ்” என்று சக்தியை தோளோடு இரு கைகளாலும் கட்டிக்கொண்டு சாய்ந்தாடிய ஆர்விக்,

“நோ சொல்லமாட்டிங்க தெரியும்” என்று இதழ் விரித்து முறுவல் கொண்டான்.

இருவரின் நிலையில் அவர்களுக்குள்ளான பேச்சு என்னவென்று தெரியாத போதும், அனைவரின் பார்வையும் மகிழ்வாய் அவர்களில் படிந்தது.

“மாமனும் மச்சானும் ரொம்பதான் க்ளோஸ் ஆகிட்டீங்க” என யாஷ் சொல்ல,

“அதுல் உனக்கென்னடா வருத்தம்?” என்றான் பூபேஷ்.

“எல்லாம் பொஸசிவ் தான்டா. ஆர்வி பொண்ணா இருந்திருந்தா யாருக்கும் விட்டுக் கொடுத்திருக்கமாட்டான்” என்று தான்யா சொல்ல, “அப்படியா?” என்று விழிகளில் மிரட்டலை காண்பித்தாள் வெண்மதி.

அதில் யாஷ் பதில் சொல்ல முடியாது திருதிருக்க…

“எனக்குத் தெரியாம இன்னொரு ட்ராக் போகுது போலயே” என்றான் சக்தி.

“ஆமா ஆமா…” என்று ஆர்விக், அன்விதா, தான்யா, பூபேஷ் ஒருசேர ஆர்ப்பரிக்க…

“நான் உங்ககிட்ட சொல்லணும் இருந்தேன் மாமா” என வெண்மதி தடுமாறினாள்.

வெண்மதியின் அருகில் வந்த சக்தி, “ஆர்வி உன்கிட்ட பேசின அன்னைக்கே என்கிட்ட சொல்லிட்டான். யாஷ் ஓகேதான். பட் இதுல முடிவெடுக்க வேண்டியது நான் இல்லை” என்று அவளின் தலையில் கை வைத்து அழுத்தம் கொடுத்தான்.

“ம்ம்… புரியுது மாமா” என்ற வெண்மதி, “நீங்க என்ன சொல்லுவீங்க தெரியும். இப்போதைக்கு படிப்பு. அப்புறம் நீங்களே அம்மா, அப்பாகிட்ட பேசுவீங்க. அதுவரை குட் கேர்ளா இருக்கணும்… சரியா?” என்றாள்.

“வாலு” என்று சிரித்த சக்தி, “வெயிட் பண்ணுவீங்கதான யாஷ்?” என்றான் அவனிடம் திரும்பி.

“ம்ம்” என உதட்டில் உறைந்து கண்கள் மின்னிய நேச உணர்வோடு யாஷ் தலையை மேலும் கீழும் அசைத்திட…

“அடுத்த ஜோடியும் சேர்ந்தாச்சுடா!” என்று ஆர்விக்கிடம் மெல்லிய குரலில் கூறிய பூபேஷ், “இப்போ நீ கண்ணை காட்டினாலும் அம்மா பொண்ணு கேட்டிடுவாங்க” என்றான்.

பூபேஷ் சொல்லியதைப்போன்று அனிதாவும் பெரும் எதிர்பார்ப்போடு மகனை பார்த்திட, ஆர்விக் அன்விதாவை நோக்கினான்.

அவளோ என்னவென்று பார்வையால் கேட்டிட… ஒன்றுமில்லையென இமைகள் தட்டினான் ஆர்விக்.

“இப்படி பார்வையாலே பேசிக்கிட்டா என்னடா அர்த்தம்?” என்ற தான்யா, “அவளும் இப்போலாம் உன்னை வேற மாதிரி பாக்குறான்னு தான் நினைக்கிறேன்” என்றாள்.

“ஹோ…” என்ற ஆர்விக்… “கிளம்பலாமா?” என எழுந்து நின்றான்.

“இப்போவேவா?” என்று வந்தாள் நிதாஞ்சனி.

“அப்புறம் இங்கவேவா இருக்க முடியும். உன்னை மட்டும் தான் கட்டிக்கொடுத்திருக்கு. இலவச இணைப்பா நாங்க வந்தா யார் சமாளிக்கிறது” என்றான் ஆர்விக்.

“அதுக்கு இன்னைக்கே கிளம்புவீங்களா?” என நிதாஞ்சனி கேட்க,

“வீடே கலகலன்னு இருந்துச்சு. இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்கன்னு சொன்னாலும் கிளம்பி நிக்கிறாங்க” என்றார் தெய்வானை.

“வேலையிருக்கே ஆண்ட்டி” என்ற ஆர்விக், “இனி அடிக்கடி வர்றோம்” என்றான்.

“ம்ம்… வந்தாலும் அங்க சுகவனம் வீட்டுலதான தங்குவீங்க” என்று கதிர்வேலன் வர,

“இனி வந்தா இங்கதான் தங்கி ஆகணும் ப்பா” என்றிருந்தான் சக்தி. ஆர்விக்கைப் பார்த்து புருவம் உயர்த்தியவனாக.

“நானும் கிளம்புறேன் ப்பா” என்று அன்விதா கூற,

“இன்னைக்கே ஏன்?” என்றான் சக்தி.

“அப்புறம் போனால் தனியா போகணும். இப்போ இவங்களோட ஒண்ணா போயிடலாம்” என்ற அன்விதா, சக்தியை நேர்கொண்டு பார்த்து சொல்லத் தயங்கிட… சக்தி அழுத்தமாக தங்கையை பார்த்திருந்தான்.

இப்போதெல்லாம் ஆர்விக்கின் அருகிலே இருந்திட அவளின் மனம் விரும்புவதை எப்படி சொல்வதென்ற தயக்கம் அவளிடம்.

தங்கையின் தடுமாற்றமும், சற்று முன்னர் ஆர்விக் சொல்லியதும் ஒருவித கணிப்பை சக்திக்கு கொடுத்திட… அவள் செல்வதற்கு சம்மதம் வழங்கினான்.

முன்பென்றால் இந்த காதல் பக்கங்கள் எல்லாம் சக்திக்கு புரிந்திருக்காது. தற்போது அவனும் காதலில் நுண்ணிய உணர்வுகளில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றானே! தங்கையின் தடுமாற்றமும், தயக்கமும் எதற்காகவென்று அவதானிக்க முடிந்தது.

அனைவரும் சொல்லிக்கொண்டு வெளியில் செல்ல,

“உன் லவ் ஸ்டோரி என்னன்னு முழுசா தெரியல. ஆனா அன்விக்கு உன்கிட்ட ஒரு தடுமாற்றம் இருக்குன்னு தெரியுது” என்று ஆர்விக்கின் முதுகில் கை வைத்தவனாகக் கூறி வெளியேறினான் சக்தி.

“என்னடா உங்க ரெண்டு பேருக்குள்ள?”

ஆர்விக்குடன் பின் தங்கி, இருவரையும் கவனித்தவளாக நிதாஞ்சனி ஆர்விக்கிடம் வினவ,

“அது சஸ்பென்ஸ்” என்றான் ஆர்விக்.

“என்கிட்ட சொல்லிதான் ஆகணும்” என்று அளவம் காண்பித்த நிதாஞ்சனி, “நீ எப்படிடா இப்படி இருக்க. கொஞ்சம்கூட உன் வலியை காட்டிக்காம எல்லாரையும் சிரிக்க வைச்சு, அவங்க சந்தோஷம் என்னன்னு பார்த்து பார்த்து செய்யுற” என்றாள்.

அவள் எந்த அர்த்தத்தில் கேட்கிறாள் என்பது புரிய, “தேங்க்ஸ் எதுவும் சொல்லிடாத. கொன்னுடுவேன்” என்று அவளின் தோளில் கையிட்டு பக்கவாட்டில் அணைத்தான்.

“உன்னோட லவ் சக்சஸ் ஆனாதான் இந்த கதை கம்ப்ளீட் ஆகும் ஆர்வி” என்ற நிதாஞ்சனி, “நான் பேசட்டுமாடா?” என்றாள்.

“யார்கிட்ட பேசுவீங்களாம்?”

“என் புருஷன்கிட்ட…”

“பாருடா!” என்று அவளின் கன்னம் பிடித்திழுத்த ஆர்விக்,

“இது ஆர்வீக்கோட லவ்… அப்போ அவன்தான பேசணும்… அவன்தான போராடனும்” என்றான்.

“அப்போ என் லவ்வுக்கு நீ எதுக்குடா பேசின?” என்று அவனின் வயிற்றிலே குத்தினாள் நிதாஞ்சனி.

“நான் தான் பேசணும்… நான் மாம்ஸ்கிட்ட உன்னை லவ் பண்ணுங்கன்னு சொல்லலையே! என் அக்காவை கட்டிக்கிறீங்களான்னு தான் கேட்டேன்” என்ற ஆர்விக், “நீ ஹேப்பியா இரு. அப்போதான் அக்காவா, அண்ணியா என் கல்யாணத்துல ஓடி ஓடி வேலை பார்க்க முடியும்” என்று அவளிடம் பேசிக்கொண்டே வெளியில் வந்தான்.

தான் சொன்னதில் புரியாது குழம்பியவளின் தலையில் தட்டியவன்,

“ஹனிமூன் பேக்கேஜ்… கேரளா, தேக்கடி” என்று அவளிடம் சிறு உரையை அளித்ததோடு, “என்னை யோசிக்காம நியூ லைஃப் என்ஜாய் பண்ணு” என்றான்.

இவர்களை வழியனுப்பி வைப்பதற்காக சக்தியின் குடும்பத்தோடு சுகவனம், கார்த்திகாவும் நின்றிருக்க… சென்னை செல்ல வேண்டியவர்கள் புறப்பட்டிருந்தனர்.

*********************************

சக்தி, நிதாஞ்சனி திருமணம் முடிந்து ஆர்விக் சென்னை வந்து நான்கு நாட்கள் ஓடியிருந்தது.

கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு மேல் அலுவலகத்தில் அவனில்லை. மற்றவர்களும் கடந்த ஒரு வாரமாக இல்லாதிருக்க, இந்த நான்கு நாட்களும் தினேஷின் பொறுப்பிலிருந்த அலுவலகத்தின் நிலை என்னவென்று அறிந்து தங்கள் பணிக்கு திரும்பிடவே சரியாக இருந்தது.

அன்று ஆர்விக்கும், அன்விதாவும் தான் புதிய இவன்ட் ஒன்றிற்கு தீம் என்னவென்று கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர்.

“ஆல்ரெடி பண்ணது எதுவும் மிக்ஸ் பண்ணி புதுசா ஒன்னை கிரியேட் பண்ணுவோம்” என்று அன்விதா சொல்ல…

“குட் ஐடியா? பட் அவங்க நியூ கான்செப்ட் கேட்டு இருக்காங்களே” என்று இருவரும் அதில் மூழ்கியிருக்க… யாஷ் வெண்மதியுடன் குறுந்தகவலில் ஆழ்ந்திருந்தான்.

“இவன் லவ் பண்ணாலும் பண்ணான்… எந்நேரமும் மொபைலும் கையுமாவே இருக்காண்டா” என்று வந்த பூபேஷ், யாஷின் தலையில் கொட்டியவனாக, “அவளை படிக்க விடுடா” என்றான்.

“டேய்… அவளே எப்போவாவதுதான் மெசேஜ் பண்றாள். கால்… சுத்தம். லவ் பண்ணா இப்படித்தான் இருக்குமான்னு தெரியாமலே லவ் பண்ணிட்டு இருக்கேண்டா. எப்பவும் அவ நினைப்புதான்” என்ற யாஷ், “இவன் எப்படித்தான் நிறைய லவ் பண்ணிட்டு அந்த பொண்ணுகிட்ட கூட சொல்லாம இருந்தான்… இருக்கான் தெரியல” என்று ஆர்விக்கைப் பார்த்தான்.

வேண்டுமென்றே யாஷ் அவனை சீண்டினான்.

“நானே சொல்றேன்” என்றவன், இன்னமும் சொல்லாதிருக்க… அவனிடம் சிறு கடுப்பு. அன்று தங்களின் முடிவை தடுப்பதற்காக அவ்வாறு கூறினானா என்கிற சந்தேகம் வேறு. அதற்காகவே தற்போது அவனை வம்பிழுத்தான்.

ஆனால் ஆர்விக் யாஷின் பேச்சு காதில் விழுந்தபோதும் கருத்தில் கொள்ளாதவனாக வேலையில் கண்ணாக இருந்தான்.

“அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்” என்று பூபேஷ் சிரித்திட,

“நான் எப்போடா ஆட்டோ ஓட்டினேன்” என்று அவனின் தோளிலே இடித்த யாஷ், அன்விதா தன்னை முறைப்பதை புரியாது பார்த்தான்.

“அன்வி என்னை முறைக்கிற மாதிரி தெரியுதுடா!”

“நிஜமாவே முறைக்கிறாள்” என பூபேஷ் கூற

“அன்வி” என்று யாஷ் அழைத்தான்.

“நீ இங்கிருந்து போகலன்னா மூஞ்சிலே ரெண்டு குத்து குத்தினாலும் குத்துவேன்” என்று அன்விதா சொல்லியதில்… இருவரும் தெறித்து ஓடியிருந்தனர்.

“என்ன கடுப்பு உனக்கு?” என்று ஆர்விக் அன்விதாவிடம் வினவ,

“ஒண்ணுமில்ல வேலையப்பாரு” என கணினி திரையை காண்பித்தவள்,

“இல்லன்னு ஆகிப்போன அந்தப் பொண்ணை பற்றி என்ன பேச்சு” என்று வாய்க்குள்ளே முனகினாள்.

யாஷ் தான் காதலிக்கும் பெண்ணைப் பற்றி பேசியதில் கோபம் கொண்டிருக்கிறாள் என்பது அவளின் முனகலில் கண்டுகொண்ட ஆர்விக், முகம் கசிந்த சிவப்பை இதழ்கள் மடித்து மீசை நுனியில் பதுக்கினான்.

சில நாட்களாக அவள் தன்னை பார்க்கும் பார்வையின் பொருள் விளங்குகிறது அவனுக்கு. இருப்பினும் தன்னுடைய எண்ணம் சரிதானா எனும் தெளிவு அவனுக்கு வேண்டுமாக இருக்க, அவளை கவனித்தவனாக, தான் காதல் சொல்லும் கணத்தை தள்ளி வைத்திட்டான்.

“என்ன அன்வி?”

“ஹான்…”

“எதோ சொன்னியே!”

“நான் ஒன்னு கேட்கவா?”

“அன்வி பெர்மிஷன் எல்லாம் கேட்கிறாங்களே!”

“நீ… நீ…” என்று திணறியவள், “நீ இன்னும் அந்தப் பொண்ணை லவ் பண்றியா?” எனக் கேட்டாள்.

திரையிலிருந்து விழிகளை விலக்கி, படபடக்கும் கண்களோடு கருவிழி அலைபாய, கீழ் உதட்டை கடித்தபடி தன்னை பார்த்தவளை இருக்கையோடு நெருங்கியவன்… அவளது இருக்கையில் இருபுறமும் கரங்கள் பதித்து…

“அவள் என்னோட மொத்தம்” என்று கால்கள் ஊன்றி இருக்கையை பின் நகர்த்தியிருந்தான்.

“ஹோ…”

“அப்போ இன்னொரு லவ்… வாய்ப்பில்லையா?” அவளது குரலே அவளின் மனநிலையை அவனுக்கு விளங்க வைத்தது.

“லைஃப்ல லவ் எத்தனை முறை வந்தாலும் அவள் மேல மட்டும்தான்னு புரிஞ்சிக்கிட்டேன்… தெரிஞ்சுக்கிட்டேன்” என்றான்.

“அன்னைக்கு சொன்னியே! மேம்க்காக…” என்று இழுத்து நிறுத்திட…

“அம்மாவுக்கு என்னோட சந்தோஷம் தான்” என்ற ஆர்விக், “நான் என்ன சொல்லணும் அன்வி?” எனக் கேட்டான்.

“நான்தான் உன்கிட்ட சொல்லணும்… சரியா? தப்பா? தெரியல. நிறைய சொல்லணும்… எனக்கே ஒரு கிளாரிட்டி இல்லைடா” என்றாள்.

அன்விதாவின் குரல் உடைந்து நொறுங்கி வெளிவந்தது. கண்கள் கலங்கியிருக்க… அவளது உணர்வின் அல்லாடல் கீழ் உதட்டில் பதிந்த பற்களின் அழுத்தத்தில் அவன் அறிவதாய்.

“என்கிட்ட என்ன தயக்கம் உனக்கு?”

“உன்கிட்ட தயக்கம் இல்லை” என்று அவனது முகத்திலிருந்து விழிகளை தாழ்த்தியவள், “ஆர்விக்கிட்டதான் தயக்கம்” என்றாள்.

நித்தமும் கனவிலும், மனதிலும் அவளோடு வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு அவளின் மென் உணர்வுகள் புரிந்திடாதா என்ன?

மனம் சிந்தும் குறுநகையில் அவளின் காதல் உணரும் தடத்தை தனக்குள் பதுக்கினான்.

இதயத்தின் அடி தொடங்கி விருட்சம் கொண்டிருக்கும் அவனது வறண்ட காதல் வேரின் ஒவ்வொரு முடிச்சுக்களும், அவளின் தயக்கத்தில், அவள் சொல்லத் துடிக்கும் வார்த்தைகளின் தடுமாற்றத்தில் மென் ஈரம் உணர்ந்தது.

“இரண்டாவது லவ் சரியா ஆர்வி?”

“எப்போ எப்படி எத்தனைமுறை வந்தாலும் லவ் லவ் தான் அன்வி. அதுல பர்ஸ்ட், செக்கென்ட் அப்படின்னு சீரிஸ்லாம் கிடையாது. லைஃப்ல நமக்கான லவ் கிடைக்கிற வரை வந்துகிட்டே தான் இருக்கும்” என்றவன், “லவ்வைப்பற்றிய என்னோட புரிதல் இதுதான்” என்றான்.

“ஹ்ம்ம்…” என்று அவனைத் தவிர அறைக்குள் அனைத்தையும் விழிகளை சுழற்றிப் பார்த்தவள்…

“இப்போ நான் என்னோட ஃப்ரெண்ட் ஆர்விக்கிட்ட சொல்றேன்… ஓகேவா?” என்றாள்.

“நான் உன்னோட ஃப்ரெண்ட் தான அன்வி!”

“ஆமா… ஆனா இல்லை” என்றவள், “எனக்குள்ள இப்போலாம் நீ ரெண்டா தெரியுறடா” என்றாள்.

“புரியல!” அவளை புரிந்தும் அவ்வாறு கூறினான்.

“அது…”

“என்ன சொல்லணுமோ சீக்கிரம் சொல்லுடா! வேலையிருக்கு” என்று கணினி பக்கம் திரும்பினான்.

“இப்போலாம் உன்னை வேற மாதிரி பார்க்கத் தோணுதுடா!”

நெஞ்சம் நனைத்த சாரலின் குளுமையாய் அவளை பார்த்தான்.

உதட்டின் மேல் துளி வியர்வை பூத்திருக்க, கண்களை இறுக மூடி, மூச்சு விடாது உடலில் அழுத்தம் கொண்டு இருக்கையை பற்றியபடி இருந்தவள், அவனின் பார்வையை உணராது…

“நீ… நீ சிரிக்கிறது, பேசுறது, நடக்கிறது, ஹேர் சரி பண்றது… இப்படி எல்லாத்தையும் அட்மயர் பண்றேன். உன் கையை நிறைய முறை பிடிச்சிருக்கேன். ஆனால் இப்போ, முன்ன மாதிரி சாதாரணமா பிடிக்க முடியல. சக்தி அண்ணாகிட்ட நீ க்ளோஸ் ஆகிட்ட… அவர்கிட்ட உன்னோட ஒட்டுதல் லைட்டா ஜெலஸ் ஃபீல்… இப்படி இன்னும் நிறைய” என அவள் சொல்லிக்கொண்டே போக… அவனிடத்தில் காதலின் மொத்தத்தின் பிரதிபலிப்பாய் குவிந்து நின்றது அவனது வழமையான இளமுறுவல்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 71

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
69
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஆர்விக் காதல் வெற்றி.