
யான் நீயே 19
வீரன் லிங்குவுடன் நள்ளிரவு கடந்த பின்னரே வந்து சேர்ந்தான்.
வீடே ஒருவித அமைதியில் கட்டுண்டிருந்தது.
மகா கண்ணீரில் மூழ்கியிருக்க… அபிராமி தேற்றும் வழி அறியாது அவரின் கையை பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
‘மாலை தாங்கள் அறிந்து கொண்ட விசயம் உண்மையாட்டு இருந்துச்சுன்னா… இப்போ மருதன் எடுத்திருக்கும் முடிவு அமிழ்தனுக்கு எத்தனை வலியாட்டு இருக்கும்’ என்று நினைத்த மீனாட்சிக்கு மனம் அத்தனை கனத்து இருந்தது.
“மீனாளுக்கும் அமிழ்தனுக்கும் ஒருத்தருக்கொருத்தர் விருப்பம் இருக்குமாட்டி” என்று மகா சொல்ல வாய் திறக்க… மீனாட்சி பார்வையாலே அடக்கிவிட்டார்.
சற்று நேரத்திற்கு முன்பு தான் இரவு நேரம் என்பதைக்கூட கருத்தில் கொள்ளாது… மருதன் வசந்திக்கு அழைத்து,
நடந்ததை முழுவதும் சொல்லாது,
மேலோட்டமாக குருமூர்த்தி மற்றும் அவரின் பேச்சினைக் கூறியவர்,
“எம் புள்ளையா வூட்டுல இருக்கும் வரைக்கும் பதக்குன்னு இருக்கும். என்னவோ மனசு சஞ்சலமாவே கிடக்கு. மீனாள் கழுத்துல தாலி ஏறுனாதேன் அமைதியாவுமாட்டிக்கு. நைட்டே கெளம்பி வந்துடுங்க. பிரேம், நாச்சியா கல்யாணத்தோட சேர்த்தே… கௌதம், மீனாள் கல்யாணத்தை முடிச்சிப்புடுவோம்” என்றார்.
வசந்திக்கு வேறென்ன வேண்டுமாம், அடுத்த அரை மணி நேரத்தில் புறப்பட்டுவிட்டதாக அழைத்து தெரிவித்தார்.
“பாண்டியா உனக்கொன்னும் சங்கடமில்லையே?”
மருதன் கேட்க பாண்டியன் இல்லையென்று தலையசைத்தார்.
அவருக்கு உள்ளுக்குள் ‘மகனின் ஆசை இத்தனை சீக்கிரம் முடிவுக்கு வந்திருக்க வேண்டாம்’ என்று வருத்தமாக இருந்தபோதும் அதைப்பற்றி மூச்சு விடவில்லை.
பாண்டியனுக்கு நன்கு தெரியுமே மருதன் வசந்தி மீது வைத்திருக்கும் அன்பும், வசந்தியின் குணமும்… ஆனால் அவரும் அறியாதது, மருதனுக்கு வீரன் என்றால் உயிர் என்று.
மகா வெளியில் சொல்ல முடியாது மருகிட…
“இதுதேன் நடக்கணும் விதியிருந்தாக்கா… அதை யாரால மாத்த முடியும் மதினி” என்று தேறுதலாக பேசினார் அபிராமி.
மீனாட்சி நடப்பதை அமைதியாக பார்த்திருந்தார். அப்படியே தனது கணிப்பு உண்மையாக இருக்கும்பட்சத்தில், வீரன் மீனாளை எளிதில் விட்டுவிடமாட்டானென்று நம்பிக்கையாக இருந்தார்.
வீரன் மீனாளின் சொல்லுக்காக விலகி அமைதியாக நிற்கிறான் என்பது தெரிந்திருந்தால், ஏதேனும் முயற்சி எடுத்திருந்திருப்பாரோ?
அனைவரின் ரத்த அழுத்தத்தையும் உயர வைத்து தான் அவர்கள் சேர வேண்டுமென்றால், என்ன செய்திட முடியும்?
வீட்டிற்குள் வந்த வீரன் நேராக மீனாளின் அறைக்குத்தான் சென்றான்.
“புள்ள தூங்குது அமிழ்தா!” மருதன் சொல்லிட கேட்டுக்கொண்டவனாக தலையசைத்த போதும், அறைக்குள் சென்றிருந்தான்.
லிங்கம் வீரனின் அதிரடியை சொல்லிட… அனைவரும் வியப்பாகக் கேட்டிருந்தனர்.
“அப்போ அவனை போலீஸ் புடிச்சிக்கிட்டு போயிடுச்சா லிங்கு?” மகா வேகமாகக் கேட்டார்.
“ஆமாம் அத்தை… அரசுக்கு புறம்பா அம்புட்டு செய்திருக்கான். இப்போதேன் கைது பண்ணி விசாரணைக்கு கூட்டிட்டு போயிருக்காய்ங்க” என்ற லிங்கு,
“அந்த கோகுலை விட்டாச்சு மாமா” என்றான்.
“அவனால ஒண்ணும் ஆவாதே?” பாண்டியன் தான் பதறி வினவினார்.
“சிமெண்ட் தொழிற்சாலை அவென் பேருல இருக்குது. எப்படியும் அவனையும் கைது பண்ணுவாங்கன்னு… அண்ணே விட்டுருச்சு. இனி நம்மளை நெருங்கவே யோசிப்பானுவ” என்றான் லிங்கம்.
சில நிமிடங்கள் அங்கு அமைதி.
“அதேன் அவனுவலால இனிமேட்டுக்கு எந்த பிரச்சினையும் இல்லைன்னு லிங்கு சொல்றானே! பொறவு என்னத்துக்கு அவசரவசரமா கல்யாணம்? பைய செய்வோமே?” என்றார் மகா.
அவருக்கு எப்படியாவது மீனாளுக்கு வீரனை கட்டி வைத்திட வேண்டும். அதற்கு கௌதமுடனானா திருமணத்தை நிறுத்திட புது புது காரணங்களை தேடி மருதனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
“முடிவெடுத்ததை மாத்தி தடங்கல் பண்ண வேண்டாமட்டி மகா. குருமூர்த்தி லேசுப்பட்ட ஆளில்லை. எல்லாத்தையும் சரிகட்டி நாளைக்கே வெளி வந்துபுடுவியான். ஒண்ணுக்கெடக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா… அப்புறம் அய்யோ அம்மான்னாலும் வராது” என்று துண்டை உதறி தோளில் போட்டவர், “பாண்டியன் படுக்க அந்த கயித்து கட்டில எடுத்துப்போடு… நான் வெளி கட்டிலுல சாய்ஞ்சிக்கிறேன்” என்றவர் முடிவெடுத்தது எடுத்துதான் என்று எழுந்து சென்றுவிட்டார்.
“நீயி எங்கடே படுக்குற?” பாண்டியனுக்கு கட்டிலை இழுத்துப்போட்ட மகா லிங்கத்திடம் கேட்க, அவனோ யாருடைய திருமணத்தைப்பற்றி பேசுகிறார்கள் என்பது புரியாது குழம்பியபடி மகாவின் கேள்வி காதில் விழுகாதவனாக அமர்ந்திருந்தான்.
“லிங்கு உன்னைத்தேன் மதினி கேக்குறாய்ங்க?” அபிராமி உரக்கக் கேட்டிட…
“ஆங்… ம்ம்மா” என்ற லிங்கம், “யாரு கல்யாணத்தை நிறுத்தனும்?” எனக் கேட்டான்.
மகா திரண்டுவிட்ட கண்ணீரை சேலை தலைப்பில் துடைத்திட…
“இவேன் ஒருத்தன்… கூறுக்கெட்டத்தனமா கேட்டுகிட்டு. மதினியே ஆத்தமாட்டமா வெசனத்துல இருக்காய்ங்க. நீயி வேற ஏம்டே” என்ற அபி, “மீனாளுக்கும் கௌதமுக்குந்தேன்” என்றார்.
“எப்போ?” என்றான் அதிர்வாக.
“அவளுக்கு கல்யாணமின்னா நீயி ஏண்டே இந்த பதறு பதறுற?” மீனாட்சி ஆராய்வாக வினவினார்.
“எனக்கென்ன… எனக்கொன்னும் இல்லையே?” என்று உதட்டினை இழுத்து வைத்துக் கூறிய லிங்கம், “மீனாகிட்ட சொல்லிட்டீங்களா? சரின்னுட்டாளா?” என்று அடுத்தடுத்து வினவினான்.
“நாளைக்குதேன் விடிஞ்சதும் கேட்கணும்” என்ற மகா, “அவள் ஒத்துக்கக்கூடாது மீனாட்சி” என்று வான் நோக்கி வணங்கினார்.
“அச்சோ மதினி… என்னதிது. பொம்பளை புள்ளைக்கு நடக்கிற விசயம். இப்படி அச்சாணியமா என்னத்துக்கு நெனக்கிற” என்று அதட்டிய அபிராமி, “யாரை கட்டிக்கிட்டாலும் நம்ம புள்ள சந்தோஷமா இருக்கணும் நெனை” என்றார்.
“நீயி ஏன் இன்னமும் இங்கனவே இருக்க? வூட்டுக்கு போ. கதவு பூட்டிடாமதேன் கொண்டியை மாட்டிவிட்டிருக்கு. மாட்டுக்குலாம் வைக்க போடல. போட்டுடு. கரியன் இந்நேரத்துக்கு என்ன ரகளையை கூட்டியிருக்கானோ?” என்றவராக லிங்கத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
வயல்கள் கடந்து சென்று கொண்டிருந்த லிங்கத்திற்கு என்னடா காதலென்று இருந்தது.
‘காதல் அப்படின்னாலே வலித்தேன் போலிருக்கே!’ என்று நினைத்தவன், இன்னமும் தானே உணராத தன்னுடைய காதலை ஆராய்கையில் அங்கையின் முகம் மின்னி மறைய தலையை உலுக்கிக் கொண்டவன், அவ்வெண்ணத்தையே விரட்டியவனாக நடையை எட்டிப்போட்டான்.
கதவு திறந்தே இருக்க…
மீனாளின் அறைக்குள் சென்ற வீரன், அவள் முதுகுக்காட்டி படுத்திருக்க… அவளின் காலருகே இடைவெளிவிட்டு மெத்தையில் அமர்ந்தான்.
வீரனின் இருப்பை அவள் மனம் காட்டியதோ…
“மாமா” என்று வேகமாக எழுந்திருந்தாள்.
“தூங்கலையா?” எனக் கேட்டவன் அழுது சிவந்து வீங்கியிருந்த அவளின் முகத்தை துடைத்து,
“எல்லாம் முடிஞ்சுது. இனிமேட்டு அவென் உம் பக்கம் திரும்பக்கூட மாட்டியான். நிம்மதியா இரு” என்றதோடு, “சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.
அவனையே இமைக்காது பார்த்திருந்தவள், அவன் என்னவென்று கேட்டதும் ஏதும் சொல்லாது அவனின் தோளில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
“தோசை கொண்டாரட்டுமா?”
“ம்ஹூம்… வேணாம். பசியில்லை மாமா” என்றவள், “அந்த போட்டோ” என்று விசும்ப…
“போலியான விசயத்துக்குலாம் வெசனப்படுவாய்ங்களா? எல்லாத்தையும் பக்காவா கிளியர் பண்ணிப்போட்டேன். எதை பத்தியும் நெனச்சு சுருங்காம, பிரேம் நாச்சியா கல்யாணத்தை சந்தோஷமா பார்த்து ரசி” என்றான், மருதனின் முடிவினை அறியாது.
“என்ன மாமா பண்ண அவனை?”
வீரன் சிரித்தானே தவிர அவளிடம் ஒன்றும் சொல்லவில்லை.
“என்னன்னு சொல்லத் தெரியல மாமா. உள்ள ஒரே சலம்பலா இருக்கு” என்றவள் வீரனின் விரல்களோடு தன் கரத்தினைக் கோர்த்துப் பிடித்தாள்.
அப்போதுதான் கவனித்தான் மீனாளின் கரத்தில், போகி அன்று அவன் கட்டிவிட்ட மஞ்சள் கயிறு இன்னமும் இருந்தது.
காணும் பொங்கல் அன்று கிணற்றில் அவிழ்த்து போடுவது அவர்கள் வழக்கம். மாதங்கள் சென்றும் அவள் கழட்டாது கட்டியிருக்கிறாள். வீரனுக்கு இதிலிருந்து, தான் என்ன புரிந்துகொள்ள வேண்டுமென்றே தெரியவில்லை.
அந்த கயிறுக்கு தினமும் மஞ்சள் தேய்ப்பாள் போலும்… வண்ணம் மங்காது பளிச்செனவே இருந்தது.
தான் வேணாமென்று அத்தனை அடமாக இருப்பவள், இப்போது காட்டும் நெருக்கம், உரிமையெல்லாம் வீரனுக்கு விளங்காத பாடம் தான்.
வீரனுக்கு மீனாளின் இந்த இலகு நிலையை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை.
இது அவளிடம் பயத்தினால் உண்டான தவிப்பிற்கான மன அமைதிக்காக ஏற்பட்ட நிலை என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், மேற்கொண்டு எதையும் ஆராயாது அவளை தன் தோள் தாங்கியவாறு அமர்ந்திருந்தான்.
“உன்னைய நிறைய கஷ்டப்படுத்துறேன்ல மாமா?”
இப்போது எதற்காக இந்த கேள்வியென்று மனதில் நினைத்தானேத் தவிர அவளிடம் கேட்கவில்லை.
“எனக்கே புரியுது. என்ன பண்ணட்டும் தெரியல” என்றவள், “நீயி சாப்பிட்டியா மாமா?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் நல்லா நெறையவே உண்குனேன்” என்றவன், “இப்போ இது சரியான நேரமா தெரியல. மதியானமே வாங்கிப்புட்டேன். வூட்டுக்கு நீயி வந்ததும் கொடுக்கணும் இருந்தேன். அதுக்குள்ள என்னென்னவோ நடந்துப்போச்சு” என்று தன்னுடைய சட்டை பையில் கை விட்டான்.
“கொலுசு அறந்துப்போச்சு சொன்னியே! மயில் கொலுசு கம்ப்யூட்டர் டிசைனாம்… எப்போவாவது சிங்கிள் பீஸ்’தேன் வரும். அதான் நானே கஸ்டமைஸ் பண்ணி செஞ்சுத்தாரா சொல்லியிருந்தேன். இன்னைக்குத்தேன் கொடுத்தாய்ங்க” என்றவன் கொலிசினை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
மீனாளுக்கு சிறு வயதிலிருந்தே மயில் வடிவம் கொண்ட கொலுசின் மீது தான் விருப்பம். அந்த வடிவம் தவிர்த்து வேறெதையும் போட மாட்டாள். இப்போதும் கொலுசு அறந்து போயிருக்க, நாச்சிக்கு நகை செய்திட கடைக்கு சென்ற போது, மகா நான்கைந்து கடைகள் ஏறியிறங்கி விட்டார். கிடைக்கவில்லை. அதனால் இன்னமும் கொலுசு போடாமல் தான் இருந்தாள்.
மெல்லிய நெளிவு கம்பியான வடிவத்தில் கொக்கி சேருமிடத்தில் நீண்ட தோகை கொண்ட இரு மயில்களின் அலகுகள் ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டு இருப்பதைப்போலிருந்த கொலுசின் நடுவில் வட்ட வடிவில் ஒற்றை கெம்புக்கல் பதித்து அதனில் மூன்று மணி முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன… மயில்கள் அளவான அளவில் அத்தனை அழகாக இருந்தது.
“ரொம்ப சூப்பரா இருக்கு மாமா” என்றவள், “நீயே வரைஞ்சியா மாமா?” எனக் கேட்டவளாக கொலுசினை காலில் அணிந்திட…
“ம்” என்றவன் பட்டென்று எழுந்து கொண்டான்.
பொங்கல் அன்று தற்செயலாக சொல்லியது. வேண்டுமென்றுகூட கேட்கவில்லை. தனக்கு பிடித்தது கிடைக்கவில்லையென்றாலும் தனக்காக மெனக்கெடல் செய்து வாங்கி வந்ததில் தெரிந்த அவனின் அன்பு அவளை எப்போதும்போல் நெஞ்சம் நிறைய வைத்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவள்.
எங்கே அவளின் பாதத்தை இழுத்து தன் மடியில் வைத்து கொலுசினை தானே போட்டுவிட்டுவிடுவோமோ என்கிற மனதின் ஆசை அவனை நிலைக்கொள்ளச் செய்திட… உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவன் திரும்பி நின்றவனாக,
“செத்த நேரம் கண்டதையும் நெனைக்காம படுத்து எந்திரி. நான் வாரேன்” என்று வெளியேறிவிட்டான்.
திடீரென வீரனின் குரலில் ஏற்பட்ட மாறுபாட்டை உணர்ந்த மீனாள் என்னவென்று ஆராயும் முன்பு மருதன் வந்தார்.
வெளியில் திண்ணையில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் உறக்கம் வராது பலவற்றை யோசித்தபடி படுத்திருந்த மருதன், வீரன் வேகமாக அவன் வீட்டை நோக்கி செல்வதை கண்டு எழுந்து வந்திருந்தார்.
“ஆத்தா மீனாள்…”
“ஐயா!”
“ரொம்ப அஞ்சிட்டியோ?” என்று அவளின் தலையை பரிவாய் வருடியவராகக் கேட்டார்.
மீனாளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீரன் தான் அவளின் மொத்த திடமுமென்று நடந்த நிகழ்வில் உணர்ந்திருந்தாளே! திடம் மட்டுமா? அவனிடத்தில் மட்டுமே தான் தானாக இருக்க முடியுமென்பதையும், இத்தனை நாள் அவனை விலக்கி வைத்திட அவள் சொல்லிய காரணம் ஒன்றுமேயில்லை என்பதையும் அறிந்திருந்தாளே!
மீனாள் மௌனமாக தனக்குள் தான் உணரும் மாற்றங்களை எண்ணியவாறு இருந்திட…
மெல்ல தன் சொல்லால் அவளின் தலையில் இடியையும், இதயத்தில் ஈட்டியையும் இறக்கியிருந்தார் மருதன்.
“ஐயா!?”
மருதன் சொல்லியதை நம்ப முடியாது, அதிர்வாகவும் கேள்வியாகவும் அவரை ஏறிட்டாள்.
“என்னத்தா?” என்றவர், “பொங்கல் அப்பவே முடிவு பண்ணிட்டோம். உன் படிப்பும் முடியட்டுமேன்னு இருந்தேன். இனியும் தாமதம் செய்யக்கூடாதுன்னு தோணுது. அதேன் அத்தையை இன்னைக்கே வர சொல்லிப்புட்டேன். விடிஞ்சதும், நாச்சியாக்கு மொத நலங்கு. அது முடிஞ்சதும் நம்ம வூட்டாளுவ மட்டும் வச்சு பரிசம் போட்டுக்கிடலாம். உன் அண்ணே கல்யாணத்தன்னைக்கே உனக்கும் கௌதமுக்கும் கல்யாணம்” என்றவர், “உறங்குடே… இனிமேட்டு லீவு தானே! பரிசம் போட்டதும் உனக்கு வேண்டியதை போயி வாங்கிட்டு வந்திடலாம். அவசர ஏற்பாடுங்கிறதால ரெண்டு மூணு நாளைக்கு அலைச்சலா இருக்குமாட்டி” என்று எழுந்து சென்றார்.
வசந்தியிடம் பிள்ளைகளுக்கு விருப்பமிருந்தால் என்று அன்று சொல்லியிருந்தவருக்கு, குருமூர்த்தியின் இன்றைய பேச்சால் மகளிடம் அவளுக்கு விருப்பமா எனக் கேட்க வேண்டுமென்பதை மறந்திருந்தார்.
மருதன் சொல்லியதை ஏற்க முடியாது அதிர்விலிருந்தவளுக்கு மறுத்து சொல்ல வேண்டுமென்றே தோன்றவில்லை.
கண்ணில் நீர் வடிய வீரனுக்கு அழைத்துவிட்டாள்.
வீட்டிற்கு வந்த வீரன் அப்போதுதான் சோர்வு நீங்க வெந்நீரில் குளித்து முடித்து படுக்கையில் சரிந்தான்.
அடுத்த நொடி அலைப்பேசி அலற, எடுத்து பார்த்தவன்…
‘இன்னும் தூங்கலையா இவள்’ என்று எண்ணினான்.
“என்ன தங்கம்?”
“ஐயா என்னென்னவோ சொல்றாய்ங்க… உனக்குத் தெரியுமா?” தலையுமின்றி, வாலுமின்றி அவள் கேட்க வீரன் புரியாது அமைதி காத்தான்.
“என்ன மாமா எதுவும் பேசமாட்டேங்கிற… நான் வேணாமின்னாக்கா நீயும் வுட்டுப்புடுவியா?” எனக் கேட்டவள், கேவி வந்த அழுகையை அவனுக்கு காட்ட மறுத்தவளாக அழைப்பை துண்டித்திருந்தாள்.
மீனாள் என்ன கேட்டாள்? எதற்காக இறங்கி ஒலித்தது அவளது குரல்? ஏன் துண்டித்தாள்? எதுவும் தெரியாது குழம்பியவன் பட்டியில் கரியன் கத்தும் சத்தம் கேட்டதும் கீழிறங்கி வந்தான். அவனுக்கு முன்பாக லிங்கம் வந்து அவனுடன் மல்லுகட்டிக்கொண்டு இருந்தான்.
“என்னடே இந்நேரம் கத்திட்டு இருக்கான்?” என்றபடி வந்த வீரனிடம்,
“நீயெப்போ வந்தண்ணே?” என்ற லிங்கம், “நா வந்தப்பவே வைக்கோல் போட்டுட்டுதேன் போனேன். உண்காம முரண்டு புடிச்சிட்டு இப்போ கத்துறியான்” என்று கரியனை பற்றி குற்றப்புகார் வாசித்தான் லிங்கம்.
“என்னடே கரியா… லிங்கு நம்ம தம்பிதானே! அவென் வச்சாக்கா உண்க வேண்டியதுதேனே” என கரியனிடம் கேட்டுக்கொண்டே தீவினத்தை அள்ளி கரியனின் வாயருகே நீட்டினான் வீரன்.
அதுவும் அவன் கையால் ஒரு வாய் உண்டதும் மற்றதை தானே மெல்ல ஆரம்பித்தது.
“இந்த வூட்டுல எல்லாத்துக்கும் நீதேன் வேணுமாட்டிக்குண்ணே” என்ற லிங்கம், “ஏனோ உறக்கமே வரல” என்றான்.
“ஏண்டே?”
“உனக்கு விசயம் தெரியுமா தெரியாதா?”
இதே கேள்வியைத்தான் மீனாளும் வேறுவிதமாகக் கேட்டிருந்தாள்.
“ஆளாளுக்கு தெரியுமான்னு கேக்குறீய்ங்களே தவிர… என்னன்னு சொல்லமாட்டேங்கிறீய்ங்க” என்ற வீரன் மடித்துக் கட்டியிருந்த வேட்டியை கீழிறக்கி விட்டவனாக அங்கிருந்த மேடையில் அமர்ந்தான்.
“மீனாளுக்கும் கௌதமுக்கும் கல்யாணமாம்.”
“அதான் எப்பவோ பேசி வச்சிட்டாய்ங்களேடே” என்றான் வீரன். தனக்குத் தெரியும் என்பதைப்போல்.
“ம்க்கும்… இப்புடி அசால்ட்டா இருந்தீன்னா… பொறவு தேவதாஸ், ரோமியோ, சலீம் கதைத்தேன் உம் கதை” என்ற லிங்கம், “நாச்சியா பிரேம் கல்யாணத்தன்னைக்கே மீனாள் கௌதம் கல்யாணமாம். பெருசுங்கலாம் முடிவு பண்ணியாச்சு. வசந்தி பெரிம்மா குடும்பத்தோட வந்துக்கிட்டு இருக்கு. விடிஞ்சா நிச்சயம். குருமூர்த்தி பையன் கோகுல் பண்ண அலப்பறையில மாமா அஞ்சி மீனாள் கல்யாணத்தை உடனே நடத்திப்புடனுமின்னு நிலையா நின்னிக்கிறார். அப்பத்தாக்கூட ஏதும் சொல்லல போலிருக்கு. அத்தை மட்டும் வேணாமின்னு சுருங்கி உட்கார்ந்திருக்கு. அந்த கோகுல் உன் காதலை கலைக்கத்தேன் இம்புட்டு ஆடுனியான் போல. நீயி என்னத்த செய்யப்போற?” என்று ஆத்தமாட்டாது படப்படத்தான் லிங்கம்.
“இதுல நானென்ன செய்யணும் லிங்கு?”
“அண்ணே…” என்று இழுத்த லிங்கம், “எனக்கு இளையவனா இருந்தியின்னா, நானே தூக்கிட்டு போயி மீனாகுட்டி கழுத்துல தாலி கட்டுன்னு மிரட்டியிருப்பேன். கல்யாணம் கட்டிக்கிட்டு உங்க வம்படிய வச்சிக்கோங்கன்னு சொல்லியிருப்பேன். இப்போ எதாவது பண்ணு. உனக்காக இல்லை. மீனாகுட்டிக்காக. உன்னையத்தவிர வேறு யாரோடவும் அவள் சந்தோஷமா வாழமாட்டியா(ள்)” என்றான். அவனுக்கு ஜோடி மாறுவதில் கொஞ்சமும் பிடித்தமில்லை.
“அவளுக்கு வேணுமின்னா அவ தான் கேக்கணும் லிங்கு.” அமைதியிலும் அமைதியாய் சொல்லிய வீரன் சென்றுவிட்டான்.
வீரனின் இந்த பதிலில் லிங்கு விக்கித்து நிற்க… அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று தெரியாத நிலையில்…
‘தான் தான் ஏதும் செய்ய வேண்டும்’ என நினைத்தான்.
தனதறைக்கு வந்தவனின் கால்கள் தன்னைப்போல் சன்னல் பக்கம் சென்று நின்றது.
தூரத்தில் தெரிந்த மீனாளின் அறையில் நிலைத்தது அவனின் பார்வை புள்ளி.
மனம் கனத்திலும் கனமாய் கனத்து கிடந்து.
“நான் என்ன பண்ணனுமாட்டிக்கு தங்கப்பொண்ணு?” கேட்டவனுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.
“நீயி எனக்குத்தான்னா அது யாராலையும் மாத்த முடியாது” என்று சொல்லிக்கொண்டவன் சன்னலின் திரையை இழுத்து மூடிவிட்டு வந்து படுத்துக்கொண்டான்.
முன் அதிகாலையில் தான் உறக்கம் கொண்டதால் சூரியன் சுள்ளென கதிர் வீசிய பின்னரும் வீரன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
“அண்ணே… அண்ணே…” லிங்கு பலமுறை கதவினை தட்டியும் வீரன் அசைந்து கொடுக்கவில்லை.
அலைப்பேசி அழைப்பு விடுக்க… மூன்றாவது அழைப்பில் மெல்ல துயில் கலைந்து கண்களை கசக்கியபடி எழுந்தமர்ந்த வீரன், கதவு தட்டும் ஓசையில்…
“வரேன்…” என்று குரல் கொடுத்தான்.
“நாச்சியை மனையில உட்கார வச்சாச்சுண்ணே. வெரசா வா. நீயி அங்குட்டு இல்லைன்னு என்னைய சாமி ஓட்டுறா(ள்)” என்று சொல்லி லிங்கம் கீழே சென்றிட… வீரன் வேகமாக குளித்து தயாராகி படியிறங்கிட… இறுதி படியில் உர்ரென்று நின்றபடி அங்கு நடப்பதை பார்த்திருந்தாள் மீனாள்.
முற்றத்து வெட்டவெளி நடுவில் தான் நாச்சியை அமர வைத்திருந்தனர்.
வீடே பெண்களால் நிறைந்திருந்தது.
மீனாள் நின்றிருந்ததுக்கும் அடுத்த மேல் படியில் நின்றுகொண்ட வீரன் தங்கையைத்தான் பார்த்திருந்தான்.
நலங்கு வைப்பதற்கு ஏதுவாக சாதாரண புடவையில் எவ்வித அலங்காரமும் இல்லாமல் அமர்ந்திருந்தாலும், அவளின் முகம் காட்டிய பூரிப்பில் அண்ணனாக வீரனின் முகம் கனிவு கொண்டது.
“அத்தை மொத வையுங்க” என்று அபிராமி சொல்லிட…
“நானென்னத்துக்கு” என்று அங்கு தள்ளி நின்றபடி பார்த்திருந்த மீனாட்சி, “அத்தை முறைக்கு மகாவை மொத வைக்க சொல்லு” என்றார்.
“நீங்க என்னத்துக்கு தயங்குறீங்க தெரியுமாட்டி… இந்த குடும்பம் நல்லாயிருக்கணுமின்னு மனசார நெனக்கிற நீங்க வச்சாதேன் நலங்கு முழுமையடையுமாட்டிக்கு” என்ற அபிராமி மீனாட்சியை கை பிடித்து இழுக்க…
“அடியே கூறு கெட்டவளே… கட்டுகழுத்தி மொத வைக்கட்டும்” என்று அபிராமியின் கன்னத்திலே இடித்தார் மீனாட்சி.
“அதேன் சம்பிரதாயம் தெரிஞ்சு அயித்தயே ஒதுங்கி நிக்கிறாய்ங்களே! நீயி என்னத்துக்கு புடிவாதம் புடிக்கிற?” என்று வசந்தி பேச…
“மாமியாரு தன் மவளை வாழ்த்தனும் அபி நெனக்கிது. இதுல என்ன வசந்தி இருக்கு. பல தலைமுறை பார்த்தவங்க. அவங்க வாழ்த்துனாக்கா புள்ளை நல்லாயிருக்குமில்லியா?” கூட்டத்தில் ஒரு பெண்மணி பேசிட… மற்றவர்களும் ஆமோதித்தனர்.
அங்கு வசந்தியை தவிர்த்து யாரும் மீனாட்சிக்கு கணவர் இல்லாத குறையை பெரியதாக பார்க்கவில்லை. காலம் மாறி வருகையில், தாமும் மாறுவதுதானே நல்லாதாக இருக்கும். அந்த மாற்றம் வசந்திக்கு இல்லைபோலும்.
“என்னயிருந்தாலும் அயித்த எப்படி வைக்க?” என்று வசந்தி நீட்டி முழுக்க…
“அப்பத்தா!” தனக்கு பின்னால் ஒலித்த வீரனின் கணீர் குரலில் மீனாளின் உடல் அதிர்ந்து தூக்கிப்போட்டிட… மீனாட்சி மறுக்காது சென்று பேத்திக்கு நலங்கு வைத்து நகர்ந்தார்.
“என் குரலுக்கே நடுங்குற…?” வீரன் மீனாளுக்கு மட்டும் கேட்கும் விதமாகக் கேட்டிட…
“நீயி இங்கன வந்து நின்னதையே கவனிக்கல மாமா” என்றாள் மீனாள்.
“நெனப்புலாம் எங்க இருக்குமாட்டி?”
“உன்மேலதான்னு சொன்னாக்கா நம்புவியா மாமா?” சட்டென்று துளிர்த்தவிட்ட கண்ணீரை இதழ் கடித்து அடக்கினாள்.
தள்ளியிரு என்றவள் இப்போது என்ன நினைக்கின்றாள்? தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள்? என்கிற அவனது குழப்பம் தற்போதைய அவளின் பேச்சில் அதிகரித்தது.
“எதுவாயிருந்தாலும் வெளிப்படையா சொல்லு தங்கம்?” சற்று காட்டமாகத்தான் வினவினான். வீரனின் பொறுமை அவ்வளவுதான்.
“என் வாழ்க்கை மாமா. நானே போராடிக்கிறேன். நானே பேசிக்கிறேன்” என்றவள், முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“நானா எதையோ செய்யணும் எதிர்பாக்குற… ஆனால் என்னான்னு வெளங்கமாட்டேங்குது” என்ற வீரனை முறைத்தவள்,
“இப்போலாம் என் எதிர்பார்ப்பு என்னான்னுகூட உன்னால புரிஞ்சிக்க முடியாமப்போச்சா மாமா?” என்றாள் தழுதழுப்பாக.
“நமக்கு ஒன்னு வேணுமின்னாக்கா நாமதேன் நம்மகிட்ட வர வச்சிக்கணுமாட்டிக்கு தங்கம்” என்றவனிடம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தது.
பேரனின் ஒற்றை விளிப்பிற்கு மீனாட்சி நலங்கு வைத்து தொடங்க… “சொன்னவங்க சொன்னாத்தேன் கேப்பீங்க” என்று சொல்லிவிட்டு அடுத்து மகா தொடங்கி பலர் வைத்து நகர… அங்கை தானும் வைப்பதாகக் கூறி அவ்விடத்தை கலகலப்பாக்கினாள்.
“அப்பு அமிழ்தா நீயும் வைய்யீ” என்று உறவுக்கார பெண்மணி கூறிட, சற்று முன்னர் மீனாளிடம் பேசியதன் விளைவாக சுருங்கியிருந்த முகத்தில் நொடியில் பூரிப்பை காட்டியவன் நிறைந்த மனதோடு நலங்கு வைத்திட, நாச்சியின் கண்கள் பனித்தது.
அடுத்து லிங்கம் வைத்திட… தங்கையை முகம் முழுக்க மஞ்சள் நிறைந்து காணவே அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்தது.
“நாச்சி கண்ணு” என்று மஞ்சளை பூசியபடி விளித்தவனின் கண்கள் கலங்கிட… அருகிலிருந்த வீரன் தன் தம்பியை தோளோடு அணைத்திட…
“நானு” என்று நாச்சி அமர்ந்தவாக்கிலே இரு கரம் விரிக்க… அவளது உடன் பிறப்புக்கள் இரண்டு பேரும் அவளின் இருபக்கம் சென்று அணைவாக பிடித்துக்கொண்டனர்.
இக்காட்சியை காணொளியாக்கிக் கொண்டிருந்த அங்கை மகாவின் கையில் அலைப்பேசியை கொடுத்துவிட்டு,
“என்னைய விட்டுப்போட்டு என்ன பாசமலர் படம் காட்டுறீய்ங்க” என்று அவர்களுக்கு நடுவில் இடித்துக்கொண்டு நின்றாள்.
“ஏத்தா மீனாள் நீயும் போவேன்” என்று சித்தி முறை பெண் மீனாளை தள்ளிவிட, லிங்கம் அவளை இழுத்து தனக்கும் நாச்சிக்கும் நடுவில் நிறுத்திக்கொண்டான்.
அக்காட்சியில் பிரேம் இல்லாதது மட்டுமே குறை.
“வீரனுக்கு மீனாளையும், அங்கையை சின்னவனுக்கும் முடிச்சிப்புட்டா… இதுங்க காலத்துக்கும் ஒன்னுமண்ணா இருந்துகிடுங்க.” மூத்த பெண்மணி சொன்னவாறு கையால் திருஷ்டி எடுத்து நெட்டி முறித்திட…
ஏற்கனவே அவர்களின் பாசத்தில் பொறாமை கொண்டு பார்வையால் எரித்தபடி நின்றிருந்த வசந்தி…
“இந்த பெரியாத்தா வந்தோமா? நலங்கு வச்சோமா? சாப்பிட்டோமான்னு போயிட்டே இரும். இங்க முடிச்சிப்போடுற வேலையெல்லாம் வேணாமாட்டிக்கு. எம் புள்ள கௌதமுக்கு, எம் அண்ணே மவளை பேசி முடிச்சிருக்கு. அதுங்களுக்கும் இதே முகூர்த்தத்துலதேன் கல்யாணம். அதுக்கான அழைப்பு இன்னைக்கு ரா பொழுதுக்குள்ள உனக்கு வந்து சேரும்” என்று நொடிப்பாக பேசிவிட்டு அங்கு நில்லாது சென்றுவிட்டார் வசந்தி.
அந்த பெரியாத்தா வசந்தி பேசிச்சென்றதில் வாயடைத்து நிற்க…
“நீங்க மனசுல வச்சிக்காதீங்க ஆத்தா” என்று அபி, மகா, மீனாட்சியென அனைவரும் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மீனாள் தன் கண்ணீரை மறைக்க, புறங்கையால் தொடைத்தபடி அங்கிருந்து வெளியேறிட… லிங்கம் தன் அண்ணனை ஏறிட்டான்.
‘இதில் அவளது விருப்பமில்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது’ எனும் பொருள் பொதிந்த பார்வையை தன்னுடைய இளையலுக்கு பதிலாகக் கொடுத்த வீரன் பிரேமிடமிருந்து அழைப்பு வர சென்றுவிட்டான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
40
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆமா மருதன் கிட்ட போய் மாமா மீனா வேணும்னு வீரன் போய் கேட்டா …. மீனா என்னால முடியாதுன்னு சொல்லிட்டா என்ன ஆகுறது … மீனாவுக்கு என்ன தான் வேணும் … நீ போய் அப்பா கிட்ட பேசு மாமானு சொல்லணும்னு அவன் எதிர்பார்க்கிறான்… ஏற்கனவே புரிதல் இல்லாம பெரிய பிரச்சனை நாச்சியா விஷயத்துல ஆகி இப்போதான் சரியா இருக்காங்க …
காதல் ஜோடி எல்லாம் ஒண்ணு சேர தான் போறாங்க … ஆனா எப்போ எப்படி தெரியல …
சீக்கிரமே சிஸ்
மருதன் பெண்ணின் பாதுகாப்பின் மீதுள்ள பயத்தினில் மீனாளின் விருப்பத்தை கூட கேளாமல் விட்டுவிட்டார்.
எல்லோரும் வீரனுக்கு வேண்டுமென்றால் அவனே அனைத்தையும் பார்த்துகொள்வான் என்றுள்ளனர்.
வீரனோ மீனாளுக்கு வேண்டும் என்றால் அவள் தான் பேச வேண்டும் என்றெண்ணி அமைதிகாக்கின்றான்.
மீனாள் அவளது மனதை முழுதாய் அறிந்த நொடி எல்லாம் கைமீறி விட்டது.
பயத்தினால் எழுந்த பதட்டம் போக ஆறுதல் வேண்டி நெருங்குகிறாள் என்று தவறாக எண்ணிவிட்டான் வீரன்.
மீனாளாவது மனதை விளக்கி கூறலாம். இப்போதும் அவனை “வேண்டாம் என்றால் விட்டுவிடுவாயா” என்று கேள்வி கேட்டுக்கொண்டுள்ளாள்.
ஆமா ஆமா…
நன்றி 😊
வாயை திறந்து பேசு, தங்கப்பொண்ணு…