
நினைவுகள் – 2
அந்த வீட்டின் ஆணிவேரான ருக்குமணியின் மடியில், அவரது பேத்தி குப்புறப் படுத்துக் கொண்டு அழ…
அருகில் அவளது மாமனும், பிரபல மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான சுகம் மருத்துவமனையின் சேர்மன் மற்றும் சிறந்த இதய நிபுணரான கிருஷ்ணமூர்த்தி சமாதானம் செய்துக் கொண்டிருந்தார். ” அழாத அனு… உன்னை நீ ஆசைப்பட்ட மாதிரி டாக்டராக்குவது என் பொறுப்பு. மாமா இருக்கேன்ல நீ ஏன் கவலைப்படுற.” என.
” ஆமாம் டா… தங்கம்… முதல்ல கண்ணைத் துடை. வந்து ஒரு வாய் சாப்பிடு. இவ்வளவு நாள் பப்ளிக் எக்ஸாம் வருதுன்னு உடம்பை கவனிக்காமல் இருந்த. அப்புறம் ரிசல்ட்டை நினைச்சு கவலைப்பட்டுட்டு இருந்த. இனியாவது எதையும் நினைச்சு கவலைப்படாமல் சாப்பிடு. மாமி உனக்கு ஊட்டி விடுறேன் வாடா.” எனக் கொஞ்சிக்கொண்டிருந்தாள் இதயமருத்துவரின் சகதர்மினி ரஞ்சிதம்.
அந்த பூவைப் போல மென்மையானவர். குடும்பத்தலைவி. படித்தது பி.ஏ. வீட்டை நிர்வாகம் செய்கிறார். வீடு தான் அவரது உலகம்.
அதுவரை காஃபிக் குடித்துக் கொண்டே இவர்கள் செய்யும் அலட்டலைப் பார்த்து விட்டு இதற்கு மேல் முடியாது என்று பொங்கி எழுந்தவன், தன் அத்தை கௌரியைப் பார்க்க.
அவரோ மகளின் அழுகையில் கலங்கிப் போய் அமர்ந்து இருந்தார்.
அத்தையைப் பார்த்தவன் கண்களாலே,”நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று விட்டு அனுவின் அருகில் சென்றான்.
” ஏய் அனு… முதல்ல ஒழுங்கா எழுந்துரு. நாம என்ன எழுதுறோமோ, அதற்கு உண்டான மார்க் தான் வரும். எதுக்கு இப்போ சீன் போட்டுட்டு இருக்க. உன்னோட நைன் ஹன்ரெடுக்கெல்லாம் டாக்டர் சீட் கிடைக்காது. நீ வேறு ஏதாவது கோர்ஸ் எடு.” என்றான் விஸ்வரூபன்.
அவன் சொல்லி முடித்த அடுத்த நொடியே அவர்களின் பாட்டி, ” ஏன் பா ராசா. நம்ம ஹாஸ்பிடல்ல உங்க அத்தைக்கும் பங்கு உண்டு. அவளுக்குப் பிறகு இவள் தானே பார்த்துக்கணும். அப்புறம் ஏன் டாக்டருக்குப் படிக்க வேண்டாம் என்று சொல்லுற. பணம் கட்டி சீட்டுக்கு ஏற்பாடு பண்ணு.” என.
” பாட்டி… அவளுக்கு அந்த அக்கறை இருந்திருந்தா, ஒழுங்கா படிச்சிருப்பா. அவளுக்கே இன்ட்ரெஸ்ட் இல்லை. விடுங்க பாட்டி. வேண்டும்ன்னா ஒரு டாக்டர் மாப்பிள்ளை பார்த்துடுவோம்.”
என்று விஷம புன்னகையை முகத்தில் படர விட்டுக் கொண்டே அனன்யாவை பார்த்துக் கூறினான் விஸ்வரூபன்.
அதுவரை அழுதுக் கொண்டிருந்தவள், வேகமாக எழுந்து வந்து விஸ்வரூபனின் தோளில் சாய்ந்துக் கொண்டு, ” ஏன் மாமா? நீங்களே என்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று பார்க்குறீங்களா? எனக்கு ஓகே தான்.” என்று அவனைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே கூற…
அவள் காதைப் பிடித்து திருகிய விஸ்வரூபன்,” உன்னை மாதிரி வாயாடிப் பொண்ணு எல்லாம் எனக்கு வேண்டாம். என் கண் பார்த்து நடக்குற பொண்ணு தான் வேணும். அப்புறம் என் மனசுல உள்ளதை நான் சொல்லாமலே அவ புரிஞ்சிக்கணும். அவளை நான் அதே மாதிரி புரிஞ்சிக்கணும்.” என்று கருவிழிகள் கனவில் மிதக்க கூற.
” ஹலோ மாம்ஸ். கனவுல இருந்து ரியாலிட்டிக்கு வாங்க… இப்போ உள்ள பொண்ணுங்க எல்லாம் அப்படிக் கிடையாது. உங்களை விட நாங்க அதிக எக்ஸ்ஸெப்படேஷன் வச்சுருக்கோம். தென் இந்த நாளை உங்க டைரில குறிச்சு வச்சுக்கோங்க. ச்சோ.. டைரி எழுதுற பழக்கம் உங்களுக்கு கிடையாதுல. உங்க ஐபோன் நோட் பேட்ல குறிச்சுவச்சுக்கோங்க. ஒன்னு என்னையே கெஞ்சி கல்யாணம் பண்ணீப்பிங்க. இல்லை என்னை விட பெரிய வாயாடியை கல்யாணம் பண்ணீப்பிங்க. ” எனக் கூறியவள், கலகலவென நகைக்க. இவ்வளவு நேரம் இருந்த நிலை மாறி, அந்த இடமே கலகலப்பானது.
அங்கே தேவதைகளோ, இருவர் பேசும் போதும் ததாஸ்து ! எனக் கூறியதை அறியாமல் அவர்கள் இருவரும் ஒருவரை, ஒருவர் வம்பிழுத்துக் கொண்டிருந்தனர்.
இன்று…
“அம்மா! கோவிலுக்கு போயிட்டு வரேன்.” ராதிகா கூற.
தன் மகளை நிமிர்ந்து பெருமிதம் பொங்க பார்த்தவர், ” ஏன்டா… ஏதாவது குழப்பமா? திடீர்னு கோவிலுக்குப் போறேன்னு சொல்ற? அப்பாவை வேணும்னா எழுப்பவா?” என.
” ஐயோ! அம்மா! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அவருக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை. ரெஸ்ட் எடுக்கட்டும். நான் போயிட்டு வந்துடுறேன். ஆனாலும்மா நீங்க இன்னும் மாறவே இல்லை.” என்றவள் லேசாக சிரித்தாள்.
” ஆனால் நீ மாறிட்டே அம்மு.”
“அதெல்லாம் இல்லை மா… நான் எங்கே மாறினேன். நான் அதே ராதிகா தான். “
” சரி, சரி. சீக்கிரம் கோவிலுக்கு போயிட்டு வா. உங்க அப்பா சாப்பிடாமல் உனக்காக வெயிட் பண்ணுவார். அப்புறம் ஹாஸ்பிடலுக்கு லேட்டாயிடுச்சின்னு நீயும் அறைகுறையா சாப்பிட்டு கிளம்புவ…” என.
” சீக்கிரம் வந்துடுவேன்.” என்று கூறியவள், அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
மனதிற்குள்ளோ, ‘ ஐந்தரை வருடம் பிரிவு அம்மாவை மாற்றியிருக்கிறது. எதற்கெடுத்தாலும் பயப்படும் சுபாவம் மாறியிருக்கிறது. அப்போது வெளிநாட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு பிடிவாதமா இருந்தவங்க, இப்போ சென்னைக்கு நீ வேணும்னா போ. நாங்க இங்கே இருக்கிறோம்னு சொல்றாங்க.’ என்று நினைத்தவளின் முகத்தில் புன்னகை எட்டி பார்த்தது.
கோவிலுக்கு செல்லும் மகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.
‘காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. என்னமோ இப்போ தான் டூவெல்த் ரிசல்டுக்காக படபடப்புடன் கோவிலுக்கு அவள் போன மாதிரி இருக்கிறது. அதற்குள் எட்டு வருடம் முடிந்து விட்டது.
அந்த டீன் ஏஜ் ராதிகா இப்போ இல்லை. மெச்சூர்டான டாக்டர். கல்யாணம் பண்ணிக்க சொன்னால் மட்டும் சின்ன புள்ள மாதிரி வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கா. கார்டியாலஜிஸ்ட் ஆகணுமாம். அதற்கான எக்ஸாம் எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்.
இரண்டு வருடமாக ஒரு பெரிய ஹாஸ்பிடலில் டாக்டராக ப்ராக்டீஸ் பண்ணிக் கிட்டே, மேற்படிப்புகான என்ட்ரன்ஸ்க்கும் தயாராகி, ஒரு வழியாக எக்ஸாம் எழுதி விட்டாள். அவளுக்கு எப்படியும் சீட் கிடைத்து விடும். அப்புறம் இந்த தஞ்சாவூரை காலி செய்து விட்டு கிளம்ப வேண்டும்.’ என்று மகளைப் பற்றிஸநினைத்தவர் பெருமூச்சு விட்டுக் கொண்டே வேலைகளை கவனிக்கச் சென்றார்.
*************
ராதிகா வழக்கம் போல பிரகதீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு சுற்று பிரகாரத்தில் அமர்ந்தாள். அவளது மனமோ நிலையில்லாமல் தவித்தது.
எப்படியும் ரிசல்ட் வந்ததும், சென்னைக்கு ஷிப்ட் ஆகிடுவோம். இங்கு அடிக்கடி வர முடியாது. அதனால் தான் மனம் அலைப்பாய்கிறதோ என்று எண்ணினாள்.
சிந்தனைகள் தறிக்கெட்டு எங்கெங்கோ ஓடியது.
‘ஹாஸ்பிடலுக்கு போகணும் டைமாகிடுச்சு.’என்று எண்ணகயவள், அனிச்சை செயலாக மீண்டும் ஒரு முறை கருவறையைப் பார்த்தாள்.
அவள் நின்றிருந்த இடத்திலிருந்து பிரகதீஸ்வரரை பார்த்தால் தெரியாது. இருந்தாலும் பார்வையை அவ்விடத்தில் செலுத்தி ஒரு கும்பிடு போட்டுக் கிளம்ப எத்தனித்தாள்.
அங்கோ சாமியை தரிசனம் செய்து விட்டு, கீழே இறங்குவதற்காக படிக்கு அருகே வந்து நின்றிருந்த இருவரையும் பார்த்தவளின் உள்ளம் படபடவென அடித்துக் கொண்டது.
முகமெல்லாம் வியர்த்து, இதயம் துடித்தது.
இனி யாரை அவளுடைய வாழ்க்கையில் எப்போதும் பார்க்கவேக் கூடாது என்று எண்ணியிருந்தாளோ, அவர்களே அவளின் கண் முன்னே வர… உலகமே தட்டாமாலையாக சுற்றியது.
கோவில் சுவரைப் பற்றி தன்னை சமாளித்துக் கொண்டாள்.
அவர்கள் பார்ப்பதற்கு முன்பு கிளம்பி விட வேண்டும் என்று எண்ணியவள், மீண்டும் ஒரு முறை அங்கு பார்வையை செலுத்தினாள்.
அங்கு அந்த நெடியவன், அவளுக்கு நெற்றியில் விபூதியைப் பூசி கண்ணை மூடி ஊதிக் கொண்டிருந்தான்.
மீண்டும் இருவரையும் கண்களில் வலியுடன் நிரப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
ஆனால் விதி அவளை அப்படி போக விடல்லை. அவள் இரண்டு எட்டு எடுத்து வைக்கும் முன்னே, யார் கண்ணில் படாமல் சீக்கிரம் சென்று விட வேண்டும் என்று எண்ணினாளோ, அவர்கள் பார்வையில் பட்டு விட்டாள்.
மேலிருந்து கீழே வேகமாக இறங்கிக் கொண்டே அந்தப் பெண், “ராது…” என அழுகையுடன் கூடிய குரலில் கத்தினாள்.
அந்தக் குரல், இன்னும் வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேற சொல்லியது.
” ஏய் பார்த்து அனு மா.” என்ற குரலில் திரும்பிப் பார்க்க…
தடுமாறி கீழே விழ இருந்தவளை தாங்கி அணைத்து நின்றான் அவன்.
அவர்களை ஏக்கமாக பார்த்தவள், அங்கிருந்து மறைந்தாள்.
ஏக்கத்துடன் செல்லும் ராதிகாவை, வலி நிறைந்த விழிகளால் நிரப்பிக் கொண்டான் விஸ்வரூபன்.
அவனது மௌனத்தைக் களைத்தாள் அனன்யா.
” என்ன மாமா! இப்படி மரம் மாதிரி நிக்குறீங்க. அங்க பாருங்க நம்ம ராது போறோ. நம்ம ராது தானே. சீக்கிரம் கூப்பிடுங்க மாமா! ” என்று பதறினாள் அனன்யா
அவளை ஒரு பார்வை பார்த்தவன் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தான்.
” நீங்க கூப்பிட மாட்டிங்களா? சரி என்னைய விடுங்க மாமா… நான் போய் அவளைக் கூப்பிடுறேன். இல்லைன்னா அவ போயிடுவா. அவக் கிட்ட பேசணும் மாமா. ப்ளீஸ் மாமா.”என்றுக் கெஞ்ச…
அவன் அசையவில்லை. அவளையும் தன் பிடியிலிருந்து விடவில்லை. ராதிகா இவர்களின் பார்வையிலிருத்து மறைந்து விட்டாள்.
அனன்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. விஸ்வரூபன் அதையும் பொருட்படுத்தவில்லை.
கோவிலிலிருந்து அவளை ரூமிற்கு அழைத்துச் செல்வதிலே கவனமாக இருந்தான்.
ரூமிற்கு சென்றதும், இண்டர்காமில் அவள் குடிப்பதற்கு மாதுளம் ஜூஸ் ஆர்டர் குடுத்து விட்டு, ரூம் வெகேட் பண்ணுவதற்கான ஏற்பாடையும் செய்ய சொன்னான்.
அவர்களது உடமையை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான். அவன் செய்வதை பார்த்துக் கொண்டிருந்த அனன்யா, ” மாமா… ஏன் இப்படி இருக்கீங்க? ராதிகாவை பார்க்கணும்ங்குறதுக்காகத் தான் நான் இங்கே வந்தேன். ஆனால் அவளைப் பார்த்தும், பேச முடியாமல் போயிடுச்சு. நீங்க தான் எல்லாத்துக்கும் காரணம்.” என்றாள்.
“ பேசணும்னு நீ நெனச்சா மட்டும் போதாது. உன் ஃப்ரெண்டும்
நினைக்கணும்.”என்று இயந்திரத்தனமான குரலில் விஸ்வரூபன் கூற.
“அவ என் மேல கோவத்துல இருக்கா. நான் அவளுக்கு புரிய வைக்கணும். ப்ளீஸ் எப்படியாவது அவ வீட்டை கண்டு பிடிச்சு கூட்டிட்டு போங்க மாமா.” என கெஞ்சினாள்.
“தேவை இல்லாதது. இதுக்காகத் தான் தஞ்சாவூர் கோவிலைப் பார்க்கணும்னு அடம்பிடிச்சியா அனு? இது முன்னேயே எனக்கு தெரிந்திருந்தால் அழைச்சிட்டே வந்திருக்க மாட்டேன்.” என்றான் இறுகிய குரலில் …
அவன் கூறியதைக் கேட்ட அனு நம்ப மாட்டாமல் அதிர்ச்சியில் அவனை பார்த்து நின்றாள்.
” மாமா…” என.
“ஆமாம். நீ கோவிலுக்கு போகணும்ன்னு ஆசைப்பட்டதால தான் வந்தேன். உனக்காகத் தான் வந்தேன். அப்புறம் அவங்க வீடு தெரியலைன்னா தான் தேடணும். எனக்குத் தெரியும்.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.
“அப்போ எனக்கு இப்பவே ராதிகாவைப் பார்க்கணும். அவக் கிட்ட கூட்டிட்டு போங்க. அவளைப் பார்த்து மன்னிப்பு கேட்கணும். இல்லண்ணா நான் செத்துப் போயிடுவேன்.” என்று ஹிஸ்டிரியா பேஷண்ட் போல கத்தினாள் அனன்யா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

