
அகம்-19

“அ… அழகரு..!” அத்தை மகளின் நடுங்கிய குரல் அவன் செவியோரம் கேட்டதும், தான் பயணித்துக் கொண்டிருந்த மகிழுந்தை வேகமாய்ப் பதற்றத்துடன் நிறுத்தியிருந்தான் துடிவேல் அழகர்.
“என்னாச்சுடி கரு கரு..?” என்னவோ ஏதோவென்ற பபயத்தில் வார்த்தைகள் வர மறுத்துச் சண்டித்தனம் செய்தது.
“அழகரு.. தாத்தா!” என்றவள் அதற்குமேல் பேச முடியாதவளாய் ஏங்கி ஏங்கி அழத் துவங்கியிருந்தாள்.
“ஏய் கிறுக்கச்சி! அழாமல் என்ன ஏதுன்னு சொல்லுடி! ஃபோன் போட்டுட்டு அழுதுக்கிட்டு கிடந்தால் நான் என்ன நினைக்கட்டும்.?” கோபம் விரவியக் குரலில் அவன் கேட்க,
“மாமா! சீக்கிரம் வா மாமா! பயமா இருக்கு!” என்றவள் இணைப்பை துண்டித்திருக்க, வாகனத்தைக் கிளப்பித் திருப்பினான் அழகர்.
“என்ன ஆச்சு அழகு? ஏன் பதற்றமா இருக்கே? தங்கச்சி என்ன சொல்லிச்சு?” பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த காத்தவராயன் வினவ,
“அங்கே ஏதோ பிரச்சனை, உன் தொங்கச்சி சொல்றது ஒண்ணும் விளங்கலை! கிறுக்கச்சி ஃபோன் பண்ணிட்டு அழுதுட்டு கிடக்கா! காத்தவராயா, பெரியப்பா நம்பருக்கு ஃபோன் போட்டு ஸ்பீக்கரில் போடு!” என நண்பனுக்கு உத்தரவிட்டான் அழகர்.
“ஹான்! பெரியப்பா, அங்கே ஏதாச்சும் பிரச்சனையா? கருவிழி அழுதுக்கிட்டே ஃபோன் பண்ணினா. என்ன ஏதுன்னு எனக்கு ஒண்ணும் விளங்கலை.யாருக்கும் எதுவும் இல்லையே?” தவிப்பாய் அவன் கேட்க,
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை அழகரு! நீ திருமங்கலம் தானே போன? பொறுமையாய் வேலையை முடிச்சுட்டு வா! நாங்க இருக்கோம் எல்லாத்தையும் பார்த்துக்கிறோம்.!” எனச் சொல்லிவிட்டு சரவணன் இணைப்பைத் துண்டித்துவிட, பெரியப்பாவின் சொல்லை ஏற்று, பணியை முடித்துவிட நினைத்தாலும், கருவிழியின் அழுகுரல், மேற்கொண்டு எதையுமே சிந்திக்க விடாதபடி அவனைப் படுத்தி எடுத்தது.
அவள் “அழகரு..!” என அழுகையை அடக்கியபடியே பேசியது, மீண்டும் மீண்டும் செவிக்குள் வந்து போக, வாகனத்தின் வேகத்தை அதிகரித்து வீடு நோக்கி தன் பயணத்தைத் துவக்கினான்.
“என்னதான் ஆச்சு அழகு? ஏன் ஒருத்தரும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறாங்க?”
“தெரியலை! நீ அம்மாவுக்கு ஃபோன் போடு!” எனக் காத்தவராயனைப் பணித்தவன், ‘என்ன நடந்திருக்கும்? ஏதேனும் பெரிய பிரச்சனையா? ஏன் என்கிட்டே சொல்லாமல் மறைக்கிறாங்க?’ யோசனையோடு அழைப்பு எடுக்கப் படுவதற்காய்க் காத்திருந்தான்.
“என்னைய்யா! சோலியெல்லாம் முடிஞ்சுதா? மதிய சாப்பாட்டுக்கு வருவியா?” என அரசி கேட்க,
“ம்மா! அங்கண என்னதான் நடக்குது? இந்தக் கிறுக்கச்சி ஃபோன் போட்டு அழறா! பெரியப்பா நாங்க பார்த்துக்கிறோம்ன்னு சொல்றாரு! நீ என்னடான்னா மதியச் சாப்பாட்டுக்கு வருவியான்னு கேட்கிறே? என்னதான் நடக்குதுன்னு சொல்லுங்களேன்.!” கோபமும் எரிச்சலுமாய், ஸ்பீக்கரில் போடப்பட்டிருந்த அலைபேசி வழியே கத்தினான் அழகர்.
“ஏய்! கொஞ்சம் பொறுமையாத்தான் இரேன்டா! ரொம்பப் பெரிய விஷயமெல்லாம் இல்லை. உங்க தாத்தாவுக்குப் பிரஷர் கூடிப் போய் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு. இப்போ நல்லாத்தான் இருக்காரு. உங்க தாத்தன் தான் உனக்குத் தகவல் சொல்ல வேணாம்ன்னு உங்க அப்பனுக்கும், பெரியப்பனுக்கும் சொல்லி இருக்காரு. நீ பொறுமையாய் வேலையை முடிச்சுட்டு வா! இல்லைன்னா அதுக்கும் வைவாரு!”
“நீ எங்கம்மா இருக்கே?”
“நானும் அக்காவும், சோறு சமைச்சு கொடுத்துவிட வீட்டுக்கு வந்துட்டோம் அழகரு. உன் அய்த்தை மவ, கருவிழி தான் அழுதுக்கே உட்கார்ந்திருக்கா. எம்புட்டு சொல்லியும் கேட்க மாட்டேங்குறா!”
“நெசமாவே தாத்தாவுக்கு ஒண்ணும் இல்லைதானே மா?” எதையாவது மறைக்கிறார்களோ? என்ற சந்தேகம் மேலோங்க மீண்டும் உறுதிப்படுத்துவதற்காய் கேட்டான் அழகர்.
“ஏய்! நெசமாத்தேன் சொல்றேன். தாத்தாவுக்கு ஒண்ணும் இல்லைய்யா! இரத்த அழுத்தம் அதிகமாகிப் போச்சுன்னு சொன்னாங்க! வேற ஒண்ணும் இல்லை. கண்ணு முழிச்சு எங்கக் கிட்டே பேசவெல்லாம் செஞ்சாரு. ஓய்வு எடுக்கட்டும்ன்னு தூக்க மருந்து கொடுத்துருக்காக! எனக்கு என்னன்னா, இவரு மயங்கி விழும் அளவுக்கு இவருக்கு என்ன கவலை? என்னத்துக்கு இரத்த அழுத்தம் அதிகமாச்சுன்னு தான் தெரியலை.!” அரசியின் குரலில் தெரிந்த கவலை அவனுக்குப் புரிந்தது.
“சரிம்மா! நான் கிளம்பிட்டேன். வந்துட்டே இருக்கேன்!” எனச் சொல்லிவிட்டு, அவர் மறுப்பு சொல்வதற்குள் இணைப்பை துண்டித்திருந்தான் துடிவேல் அழகர்.
“அழகு! உங்க அம்மா தான் வர வேணாம்ன்னு சொல்லுறாங்களே? இந்நேரத்துக்குப் போய் நின்னால் வைவாங்க அழகு!”
“இல்லை! இல்லை! நான் பதறிடக் கூடாதுன்னு இப்படிச் சொல்லியிருப்பாக! உன் தொங்கச்சி வேற மூக்கை ஊறிஞ்சிக்கிட்டு கிடக்கா. நேரில் போய்ப் பார்க்காமல் நெஞ்சு ஆறாது.!” எனச் சொன்னவன், வாகனத்தை விரைவாய் செலுத்தி, அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனையின் வாசலில் நின்றிருந்தான்.
“காத்தவராயா! நீ வண்டியை பார்க்கிங்கில் விட்டுடு! நான் உள்ளே போய் என்னன்னு பார்க்கிறேன்.!” சாவியை நண்பனின் கரத்தில் தந்தவன், வேக நடையுடன் மருத்துவமனையின் உள்ளே நுழைந்தான். கண்கள் அவன் கருவிழியைத் தேடித் துளாவியது. மனதோடு அவளின் குரல் கேட்க, அவளைத் தேடி அலைபாயும் மனதை முயன்று அடக்கியபடி, தன் தேடுதலைத் தொடர்ந்தான்.
“என்னத்துக்கு இப்படித் தேடிட்டு கிடக்க? ஒரு ஃபோன் போட்டால் தங்கச்சி வரப் போவுது!” எனச் சொன்னபடியே அழகரின் தோளில் கைப்போட்டு அவனுடன் சேர்ந்து நடந்தான் காத்தவராயன்.
“உன் தொங்கச்சி லேசா சிணுங்கினாலே மனுஷனுக்குக் கையும் ஓடலை! காலும் ஓடலை! நான் என்ன செய்யட்டும்?”
“முழுசா முத்திப் போறதுக்குள்ளே கல்யாணத்தைப் பண்ணித் தொலைங்க பக்கிங்களா! கூட இருக்கிறவன் உசிரையெல்லாம் எடுக்கிறீங்க!” பொறுமை காற்றில் பறக்க உரைத்தவன்,
“ஜென்ரல் வார்டு தான், கேட்டுட்டு தான் வந்தேன்.!” எனச் சொன்னவன் சொக்கேசன் அனுமதிக்கப் பட்டிருந்த அறைக்கு அழைத்துப் போனான்.
“அய்யா!” என்றபடியே கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்த தாத்தவை நோக்கி அவன் போக,
“அழகரு..!” பக்கவாட்டிலிருந்து பாய்ந்து ஓடி வந்து அழகரை அணைத்திருந்தாள் கருவிழி.
“நீ என்னத்துக்கு அழகரு வந்தே? உன் தாத்தனுக்கு ஒண்ணும் இல்லை. சாதாரண மயக்கம்தேன்.. இதுக்குப் போய் இந்தச் சீமை சித்தராங்கி ஃபோன் போட்டாள்ன்னு நீயும் ஓடி வந்தியாக்கும்?”
“பொழுதன்னைக்கும் அவளை வஞ்சுக்கிட்டே இருக்காதீங்க அப்பத்தா! பயந்து போய்த் தானே அழுதுருக்கா!” எனச் சொன்னவன், உறங்கிக் கொண்டிருந்த சொக்கேசனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கருவிழியை வெளியே அழைத்துப் போனான்.
“என்னத்துக்குடி இப்படி மழை பெஞ்சது மாதிரி அழுதுக்கிட்டே கிடக்க?” இடைவெளியே இல்லாது அழுதழுது பேசவே முடியாத அளவிற்குத் தேம்பினாள் பெண்.
“ம்ப்ச்! ஒண்ணும் இல்லைடி! தாத்தா நல்லா தானே இருக்கார். ஏன் இப்படி மூச்சு விடாமல் அழறே?” தோளோடு சாய்த்துக் கொண்டான் அழகர்.
“நான்.. நான்.. ரூம்க்குள்ளே போய்ப் பார்த்து.. பார்த்துப் பயந்துட்டேன் மாமா! தாத்..தா, தலை தொங்கிப் போய்.. ப.. பயமா இருந்துச்சு! தாத்தா எ.. எழுப்பினேன்..! எ.. எ.. எழுந்துக்கவே இல்லை! அழுகையா வருது அழகரு..! ஹிட்லருக்கு ஒண்ணும் ஆகாதுல்ல அழகரு! எழுந்திருச்சு என்னைத் திட்டச் சொல்லு அழகரு! அ.. அவரு இப்படிப் படுத்திருக்கிறது பார்க்க ப.. பயமா இருக்கு!”
“ஏய் கிறுக்கச்சி! ஒண்ணும் இல்லைடி! ப்ரஷர் கூடிப் போச்சு. வேற ஒண்ணும் இல்லை! நீ ஏன் ஏதேதோ கற்பனை பண்ணிக்கிறே? தாத்தா தான் எழுந்து பேசினாருன்னு அம்மா சொன்னாங்களே?” அழுதழுது களைத்த வதனத்தை மறைத்தபடி விழுந்து கிடந்த கற்றைக் கூந்தலை காதோரமாய் ஒதுக்கினான் அழகர்.
“தாத்தா பேசினதை நான் பார்க்கலை மாமா! நீ ஏன் என்னை விட்டுப் போன? நீ என் கூட இருந்திருந்தால் எனக்குப் பயமாய் இருக்காது. உன்னால் தான் போ அழகரு! ரொம்பப் பயந்துட்டேன் தெரியுமா?”
“இங்கே பாருடி கரு கரு.. நீ ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை! எல்லாத்துக்கும் பயப்படக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் நிதானமா இருக்கணும்! பயந்து, உணர்ச்சி வசப்பட்டு எந்தச் செயலையும் செய்யக் கூடாது. அவசரப்பட்டு அழுதுட்டே இருந்தால் எதுவும் சரியாகிடாது டி! ரொம்பச் சின்ன விஷயம், இதுக்கே இப்படி அழுதால், ரொம்பப் பெரிய விஷயமெல்லாம் எப்படிச் சமாளிப்பே?”
“நீ இருந்தால் போதும் மாமா! நான் எதுவா இருந்தாலும் சமாளிச்சுடுவேன்.!” அவளை அறியாமலே அவள் சொல்லியிருக்க,
“எல்லா நேரமும் நான் கூடவே இருக்க முடியுமா? நான் இல்லாமல் போனால்..?” அவனும் தன்னையறியாமலே பதில் சொல்லியிருந்தான்.
“மாமா! என்ன பேசுறே? இப்படியெல்லாம் பேசாதே..!” முதன்முதலாய் அழகர் இல்லாமல் போனால் என்ற எண்ணமே அவளுக்கு எல்லையில்லா பயத்தைக் கொடுக்க, அவன் தோளில் சாய்ந்தபடியே அவன் கரத்தை இறுக பற்றிக் கொண்டாள் கருவிழி.
“ஏன்டா! சாதாரண மயக்கத்துக்கு இம்புட்டு அலப்பறையா? மனுசன் மயங்கித்தான் விழுந்துருக்காரு. உங்க அலப்பறையைப் பார்த்து, அவர் திரும்பவும் மயங்கி விழுந்தாலும் ஆச்சர்யப் படுறதுக்கு இல்லை.! நீ ஃபோன் போட்டு அழறதும்.. பொறுக்க முடியாமல் இவன் ஓடி வர்ரதும்.. தாங்க முடியலை டா டேய்..! திருமங்கலத்தில் நாம வரச் சொன்னவிங்க வந்து காத்துக் கிடக்காய்ங்களாம். உன் தாத்தன் கண்ணு முழிச்சதும், சோலியெல்லாம் முடிஞ்சுதான்னு கேட்பார். என்ன பதில் சொல்றேன்னு பார்க்கிறேன்.!” காத்தவராயன் சலிப்பாய் சொல்ல,
“அவ சின்னப் புள்ளை டா! தாத்தா மயக்கத்தில் இருக்கிறதைப் பார்த்ததும் சட்டுன்னு பயந்துட்டா! இந்த மாதிரி சூழ்நிலையெல்லாம் அவளுக்குப் பழக்கமில்லையே..!” அக்கறை வழியும் குரலில் அழகர் பேச,
“ஆமா! எங்க வீட்டிலெல்லாம் நெதமும் யாராச்சும் மயங்கி விழுந்துட்டே கிடக்காய்ங்க! நாங்க வாங்க பழகலாம்ன்னு நெதமும் பழகிட்டே இருக்கோம். உங்க தாத்தனுக்கு வாக்கப்பட்டு வந்த உங்க அப்பத்தாவே ஒருசொட்டுக் கண்ணீர் வடிக்காமல் உட்கார்ந்து கிடக்கு. நீங்க என்னடான்னா ஆளே இல்லாத தியேட்டரில் கமர்ஷியல் படம் ஓட்டுறீங்க! உன் அத்தை மவளை அங்கிட்டு பத்தி விட்டுட்டு வா! சோலியைப் பார்க்கப் போவோம்.!” எனச் சொன்னான் காத்தவராயன்.
“அழகரு! நீ எங்கேயும் போகாதே ப்ளீஸ்..!” அவளின் அந்த ப்ளீஸ் என்ற வார்த்தை மந்திரம் போட்டு அவனை அசையாமல் இருந்த இடத்திலேயே அமர வைத்தது.
“நல்லா இருக்கு அழகு! ரொம்ப நல்லா இருக்கு. நாளை பின்னே அந்த ரோஹனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, என்னை விட்டு போகாதே அழகருன்னு கையைப் பிடிச்சுக்கிட்டு நிப்பா. அப்போவும் இவ கூடவே இருப்பியா? எம்மா தங்கச்சி, நீ அந்த ரோஹனை விரும்பறேன்னு சொல்றே, எந்நேரமும் அழகர் பின்னாலேயே சுத்தறியே இது நல்லா இருக்கா? நாளை பின்னே அவனுக்கு வர்ரவக் கேட்க மாட்டாளா?” நண்பனின் மனதைப் புரிந்து கொள்ள மறுக்கிறாளே என்கிற கோபம் ஆற்றாமை, எல்லாம் சேர்ந்து காத்தவராயனை இப்படிப் பேச வைத்தது.
“இந்தாரு காக்கா விரட்டி! அவளே அழுதுட்டு கிடக்கா, என்னத்துக்கு இப்படிப் பேசுற? வாயை மூடிக்கிட்டு நில்லு!”
“நீ சும்மா இரு அழகு! எம்மா தங்கச்சி சொல்லும்மா? பொழுதன்னைக்கும் அவன் கூடவே தான் சுத்துற, ஆனால் நீ ரோஹனைத் தானே லவ் பண்ணுற.? நாளைக்கு ரோஹனைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகும் இப்படித்தான் இருப்பியா? இப்போ நான் கேட்கிற இதே கேள்வியை, நாளைக்கு அழகருக்குன்னு உரிமையாய் வர்ரவக் கேட்பாளே, அப்போ என்ன சொல்லுவ?” அவள் பதில் சொல்லாது விடப் போவதில்லை என்ற முடிவுடன் பேசினான் காத்தவராயன்.
“எம் மாமன் மவன், நான் அப்படித்தான் உரிமையோட பழகுவேன். யாரு வேணும்னாலும் வரட்டும், என் அழகருக்கிட்டே எனக்குத்தான் முதல் உரிமை.!”
“உன் அழகருன்னு பட்டா போட்டு வச்சிருக்கியா தங்கச்சி? நெடுமாறனும், வீரபத்ரனும் கூட, உன் மாமன் மயனுங்கதேன். அவிங்ககிட்டே உனக்கு எந்த உரிமை உணர்வும் வரலையா?” காத்தவராயன் கேட்ட கேள்வியில் ஸ்தம்பித்து எழுந்து நின்றுவிட்டாள் கருவிழி. கண்கள் கலங்கி மீண்டும் அழுகை வரும்போல் இருந்தது.
அழகரின் வாழ்வில் அவன் மனைவியாய் இன்னொரு பெண்ணை நினைத்துப் பார்க்கவே நெஞ்சை அடைத்தது. கண்களில் குளம் கட்டி நின்றக் கண்ணீர் பார்வையோடு, பாதையையும் மறைக்க, அவசரமாய் நகர முயன்றவள் தடுமாறி விழப் போக, அவள் விழ விடாமல் தாங்கிப் பிடித்திருந்தான் துடிவேல் அழகர். அவன் தாங்கிப் பிடித்த அதே நேரம், கண்களில் தேங்கி நின்ற கண்ணீர், அவள் கன்னம் தொட்டு கரையைக் கடக்க, நீர் வழியும் விழிகளோடு அழகரையே பார்த்துக் கொண்டிருந்தாள் கருவிழி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கருவிழி என்னம்மா இது … இது காதல்னு புரியல போல … காத்தவராயன் செம்ம … அப்பத்தா அழுகல … நீங்க என்ன கமர்ஷியல் படம் ஓட்டுறீங்க 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
அதானே.. காத்தவராயனுக்கு மட்டும் தான் கருவிழியின் செயலும் அழகரின் நேசமும் புரியுது. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் 💜💛
வீட்ல இருக்க அத்தனைபேரும் சொல்றாங்க “ஒன்னும் இல்லை வேலைய முடிச்சிட்டு வந்து சேருனு” ஆனா அழகருக்கு அவன் அத்தை மகள் அழுதது மட்டும் தான் மண்டைக்குள்ள போய் இருக்கு.
இப்படி அவ தேடும் போதெல்லாம் போய் நிக்காம ஒரு நாள் தவிக்க விட்டிருந்தா அழகர் தன் வாழ்க்கைல எவ்ளோ முக்கியம்னு புரிஞ்சிருந்திருப்பா கரு கரு.
“எங்க வீட்ல மட்டும் என்ன தினமும் ஒருத்தர் மயங்கி விழுந்து அதுக்கு நாங்க பழகுறோமா?” 🤣🤣
காத்தவராயன் அழகர் மனச புரியவைக்கிறது மட்டும் இல்லாம விழியோட மனசையும் அவளுக்கு புரியவைக்க முயற்சி செய்றான்.
உண்மை தான் டா 😍 இவனுக்கு அது புரியணுமே.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💜💚