Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 15

 

(I)

 

இதழ்களுக்குள் அடங்கிய சிரிப்புடன் மருத்துவர் நகர்ந்திட,தடுக்கத் தவித்த மனதை அடக்கிக் கொண்டான்,பையன்.

 

ஆயினும்,அது சொற்ப நொடிகளுக்கு தான்.ஆயிரமாயிரம் காரணங்களை உரைத்து அவன் தடுக்க முனைந்தாலும்,உயிரின் ஆழத்தில் அவளுக்கென பிரசன்னமாகியிருக்கும் தேடல் உந்தித் தள்ளிட,அப்படியே மருத்துவரை பின் தொடர்ந்தன,அவனின் பாதங்கள்.

 

அவன் பின் தொடர்ந்து வருவதைக் கண்டும் தன் நடையை நிறுத்தாமல்,அவரின் பாதை நீள “டாக்டர்” என்று அழைத்தே விட்டான்,ஆர்யா.

 

முதலிரு முறை அழைத்தும் அவர் நடையை இடை நிறுத்த மறுத்திட,மீண்டும் அழுத்தி அழைத்தான்,அவரை.

 

நடையை தொடர்ந்தவர்,நின்றது என்னவோ அவன் வழமையாய் அமரும் மரத்தடியின் அருகில் தான்.அங்கு தான் அவரின் வண்டியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 

அவர்கள் இருவரையும் தவிர அப்பொழுது யாரும் இருக்கவில்லை,அங்கு.

 

நமுட்டுச் சிரிப்புடன் அவர் திரும்பி நின்றாலும்,முகமோ பொய்யாய் இப்போது தான் அவனைக் காண்பது போன்ற பாவனையை வெளிப்படுத்தி நின்றது.

 

“என்ன ஆர்யா..? என்ன விஷயம் ஏதாச்சும் கேக்கனுமா..?” அவர் கேட்கத் துவங்கும் போதே,வானம் இருட்டத் துவங்கிட,சடசடவென்ற இடி சத்தம் காதை நிறைத்திட்டாலும்,அதுவொன்றும் கவர்ந்திடவில்லை,பையனின் கவனத்தை.

 

அவர் அப்படிக் கேட்டதும் பையனுக்கு கோபம் வந்தது.அவர் வேண்டுமென்று அவ்வாறு கேட்பதை அவரின் முகபாவம் தெள்ளத் தெளிவாய் எடுத்துக் காட்டியதே.

 

“அந்த பொண்ணு யாரு டாக்டர்..? இன்னிக்கி காட்டித் தர்ரேன்னு சொன்னீங்கல..” நிதானமான வார்த்தைகளில் எத்தனை முயன்றும் மறைத்திட கொஞ்சம் கோபம் தோய்ந்திருக்க,அவனுக்குமே சட்டென வார்த்தைகளை கொட்டி விட்டதில் புதுமை தான்.

 

“ஓஹ் ஆமால..” கமுக்கமாய் சிரித்தவருக்கு,அவனை சீண்டிப் பார்த்திடும் ஆவல்.

 

“நீ யாருன்னு நெனக்கிற ஆர்யா..?” அவர் அவனிடம் கேட்க,அவனுக்கோ கோபமாய் வந்தது.அவனுக்கு தெரியாததால் அவரிடம் கேட்டுத் தொலைத்தால்,தன்னிடம் பதில் கேள்வி கேட்கிறாரே என்று.

 

“தெரியாதுன்னு தான டாக்டர் உங்க கிட்ட கேக்கறேன்..” அழுத்தமாய் அவன் பதில் சொல்லிட,மெல்லியதாய் மழையும் தூறத் துவங்கிற்று.

 

அண்ணாந்து வானத்தை பார்த்திட,வானெங்கும் கருநிறப் பூச்சு.சுற்றமெங்கும் மெல்லிய இருளும் பரவியிருந்தது.

 

“இவங்களா இருக்கும்னு ஒரு தடவயாச்சும் தோணி இல்லயா..?” என்க,அவனுக்குள் மின்னலடித்தது,யாழவளின் வதனமே.

 

அன்று வாயிலில் வைத்து அவளைக் கண்ட கணம்,தான் தேடுவது அவளைத் தான் என்று அவன் நம்பி விட்டிருந்தானே,எந்த வித மாறுதலுமின்றி.எப்படி அந்த நம்பிக்கை வந்தது என்பது இன்னுமே கேள்விக்குறி தான்.

 

அதன் பின்,அவளைக் கண்ட ஓரிரு தடவைகளில் அவளாக இருக்கக் கூடுமோ என்கின்ற எண்ணம் மனதோரம் நனைத்துப் பார்த்ததுண்டு.அவள் விழிகளில் காதலைக் காணாதது,அவ்வெண்ணத்தை அப்படியே புரட்டிப் போட்டு விடும்.

 

இறுகிய இதயச் சுவரை,ஆர்ப்பரித்த அவள் விம்பம் அலையென வந்து மோத,மெல்லியதாய் திடமது ஆட்டம் கண்டாலும்,அதை பிரதிபலிக்கா விழிகள் அவனுக்கு பெரும் பலமே.

 

“இல்ல டாக்டர்..”அப்படித் தான் சொன்னான்.உண்மை..உண்மை..சத்தியமான உண்மை..நம்பித் தானே,ஆக வேண்டும்.அரிச்சரிந்திரனின் தம்பியாயிற்றே,நம்பாமல் என்ன செய்திட..?

 

“தோ அந்தப் பொண்ணு..” என்றவரோ,தூரத்தில் சென்ற ஒருத்தியைக் காட்டிட,படக்கென்று திரும்பியவனோ,அடுத்த நொடி சிறு கோபத்துடன் பார்த்தான்,மருத்துவரை.

 

“பொய் சொல்லாதீங்க டாக்டர்..” கொஞ்சம் காரம்,அவன் வார்த்தைகளில்.மருத்துவரின் இதழ்களில் குறுநகை.

 

“நா பொய் தான் சொல்றேன்னு உங்களுக்கு எப்டி தெர்யும் ஆர்யா..?” இரு புருவமுயர்த்தி வினவிட,பதிலில்லை அவனிடம்.

 

என்னவென்பான் அவன்..?

அவனைக் கேளாமலே,அவளை அவன் தேடலுக்குரியவளாக அவன் அகம் நிரப்பிக் கொண்டிருக்க,அது அவளாகத் தான் இருந்திட வேண்டும் என்றா..?

 

“சில விஷயங்கள்ல நம்ம மனசு ஃபீல் பண்றது மோஸ்ட்லி கரெக்டா தான் இருக்கும்..கண்ண மூடி ரெண்டு செக்கன் மனச அது பாட்டுக்கு விட்டா போதும்..அதுவே கரெக்டா எல்லாத்தயும் காட்டிக் கொடுக்கும்” என்றவரின் வார்த்தைகள்,அத்தனை ஆழமாய்.

 

“அந்த பொண்ணு உங்க பின்னாடி தான் நிக்கிது..பட்டுன்னு திரும்ப வேணாம்..” முதலில் அவர் உரைத்ததற்கு,திரும்ப முயன்ற பாதங்கள் அவர் அடுத்து கூறியதில் தரித்திட,அவரை நோக்கி ஊன்றப்பட்டிருந்த பாதங்கள்,இக்கணம் சிறு திரும்பலுடன் வளைந்து தரித்தது.

 

அவர் கூறியதும் அவனிதயம் படபடக்கத் துவங்கிற்று.சுழல தவித்த விழிகளை அடக்கி மருத்துவரை பார்த்திட,அர்த்தப் பார்வை வீசினார்,அவர்.

 

“கும்புட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி இருக்குல..இந்த பொண்ணு தான் அன்னிக்கி நா சொன்ன பொண்ணு..நீங்க தேடுன பொண்ணு..” என்றதுடன் அவர் கிளம்பிச் சென்றிட,தடுமாறிப் போய் நின்றிருந்தான்,பையன்.

 

அவள் விம்பம் வேண்டி,அவன் தேடல் நீண்டாலும்,முழு உருவமாய் அவள் அண்மையில் நிற்கையில்,விம்பம் ஏற்க திணறி மனதில் சிறு தவிப்பு;மெல்லிய படபடப்பு.

 

உயிருக்குள் உயிர்த்த உருவமில்லா உணர்வொன்று,அவனை அவனை வாரிக் கொள்ள,மழையும் தூறிக் கொண்டிருந்தது.

 

தேகத்தை மழையின் தூறல் நனைத்திட,அகத்தை இனம் புரியா உணர்வின் சாரல் குளிர்வித்தது.அகத்திலும் தேகத்திலும் ஒருமிக்க குளிர்மை பரவிய மாயம் அவன் அறியவில்லை.

 

கொண்டிருந்த உறுதியை ஏதோ மெதுவாய் கரைத்திட,அவனே கொஞ்சம் தளர்வது போல்.

 

“சீனியர்” என அவள் அழைத்தது,அவன் செவியில் விழ, மூச்சைடத்த உணர்வு.யாரென்று புரிந்து விட்டது.விழிகள் இறுக மூடிக் கொள்ள,அவளாய் இருக்கக் கூடாது என படபடத்து தடதடத்தது இதயம்.தேகம் சிலிர்த்திட,மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

 

அறியும் முன் அவளாய் இருக்க வேண்டும் என்கின்ற தவிப்பு.

தெரிந்த பின் அவளாய் இருந்திடக் கூடாது என்கின்ற தவிர்ப்பு.

உறுதியாகிய பின்னர்,ஏனோ இந்தத் தயக்கம்!

 

செவியோரம் முத்தமிட்டு நுழைந்த குரலோசையது,செவிப்பறையுடன் உயிர்கூட்டையும் அதிர வைத்து ஆட்டிப் பார்த்திட,பையனின் இதயம் நின்று துடித்தது.

 

அவன் நினைப்பு பொய்யாகவில்லை என்கின்ற ஆசுவாசம் துளியாய்;எண்ணம் நிறைவேறிய நிம்மதி சிறிதாய்.அவன் நினைத்தவள் ஆயிற்றே.

 

விழிகளை அழுந்த மூடி தன்னை நிதானப்படுத்தியவனோ,மெல்ல திரும்பினாலும்,உடனே இமைகள் உயரவில்லை;விழிகள் நிமிரவில்லை.

 

தரையில் தவழ்ந்திருந்த அவன் பார்வை நிமிர,அவனின் விழிகளில் சிக்குண்டது,குடையுடன் நின்றிருந்தவளின் முதுகுப்பகுதி தான்.

 

அறிந்து விட்டான்,அவள் யாரென்று.அவளிடம் பேச தன்னாலே அவன் கரம் நீள,அதை தடுத்துக் கொண்டது தான் தாமதம்,சடசடவென பெய்யத் துவங்கிற்று,மழை.

 

வார்த்தைகள் மௌனம் பேச,அவளே திரும்பட்டும் என்று பொறுமை காத்தான்,பையன்.அவனின் எண்ணம் அவளுக்கு புரிந்தது போலும்.

 

ஓங்காரமாய் கேட்ட பெரும் இடி சப்தத்தில் தன்னை மீறி அவன் இமைகள் ஒட்டிக் கொள்ள,அவை தாழ் திறந்திடுகையில் கருமணிகளுக்குள் பொதிந்து போனது,அவள் உருவம்;அவன் முழு தேடலில் வடிவம்.

 

அவளைக் கண்டதும் அவன் விழிகள் மேலும் விரிந்து கொள்ள,அப்படியே அவளின் கோலம் அவன் மனதில் பதிந்து போனது,அவனின் இசைவின்றி.

 

ஒற்றைக் கையால் குடையை கொஞ்சம் பின்னே சரித்துப் பிடித்தவாறு நின்றிருந்தவளோ,இடியோசையில் இருந்து மீண்டும் இன்னும் விழிகளை திறக்கவில்லை.

 

ஈரம் ஏற்ற ஓரிரு மயிரிழைக் கற்றகைள் நுதலைத் தழுவி ஒட்டியிருக்க,ஆங்காங்கே கன்னத்திலும் ஈரத்துளிகள்.அழுத்தமாய் இமைகள் மூடி விழிகள் தமக்குள் பொத்திக் கிடக்க,இதழ்களோ தன்னை மீறி கடவுளின் பெயர்களை உச்சரித்தன.

 

திறந்திடா விழிகளுடன் அவள் நின்றிருந்த தோற்றம்,மூடிடா அவன் விழிகளுக்குள் விழுந்து உணர்வில் கலந்து உயிரில் உறைந்து போனது,அவனுக்கே தெரியாமல்.

 

நெற்றியில் புரண்ட கேசத்தின் நுனியில் தொற்றிக் கொண்டிருந்த நீர்த்திவலைகள்,இமைகளில் வந்து மோதினாலும்,அவன் இமைகள் இம்மியளவும் நகரவில்லை.

 

வேகமெடுத்த இதயத்துடன் ஆழமாகிய சுவாசத்தை ஆசுவாசப்படுத்தும் விதமாய்,இதழ்களும் பிளந்து கொண்டன.

 

இசைவின்றி அவள் ஆட்படுத்த,சில நொடி அசைவில்லை,பையனிடம்.அவள் என்பது அவனுக்கு கொஞ்சம் அதிர்வும் கூட.

 

ஓய்ந்த இடி சப்தத்தில் அவள் விழி திறக்க,தன் முன்னே தன் மேல் பார்வையை பதித்தவாறு நின்றிருந்தவனைக் கண்டு பயந்து போனாள்,வெகுவாய்.

 

“எவ்ளோ நேரம் மொறச்சி பாத்துகிட்டு இருக்கோ தெரிலயே..”உள்ளுக்குள் மூண்க கலவரம் அவள் விழிகளில் அச்சுப் பிசகின்றி விரிய,விரிந்த விழிகள் அவனுக்குள் இம்சையை இசைத்தது.

 

அவள் அவனை நோக்கி குடையை நீட்டவும் தான்,அவனுக்கு சுயமே மீண்டது.தலையை உலுக்கி கழுத்தை வருடி தன்னை இயல்புக்கு கொண்டு வந்தான்,சிரமத்துடன்.

 

ஏன் என்ற கேள்வி அவன் விழிகளில்.அவளுக்கு அது புரிந்து தொலைக்க வேண்டுமே.எதுவும் புரியாமல் பார்த்து வைத்திட,அவனுக்குள் சின்னச் சின்ன பிரளயங்கள்.

 

“எதுக்கு வந்த..?” இயல்பிலில்லை,பையன்.

 

“இந்த குடய தர்ரதுக்கு..” பம்மிய பாவத்துடன் அவள் சொல்ல,அச்சத்துடன் மிரட்சியை காட்டிக் கொடுத்த விழிகள் அவனை மெது மெதுவாய் ஆட்படுத்தின,ஆர்ப்பின்றி.

 

கண்ணோரங்கள் இடுங்கிட,அவன் பார்த்த பார்வையில் அவளுக்கு சர்வமும் நடுங்கிற்று.அதற்கும் அவள் பதறித் தொலைத்து விழி உருட்ட,அந்த விம்பமோ, அவன் நெஞ்சில் மீளாமல் ஒட்டிக் கொண்டது.

 

“நா இல்ல நா இல்ல சாமி..அதிதி அக்கா தான்..” பதட்டத்தில் உளறியவள் குடையை இன்னும் நீட்டியவாறு இருக்க,வாங்கிக் கொள்ள மறுத்தான்,அவன்.

 

“போய் அவ கிட்டவே கொடு..” அவன் கடுப்படித்திட,அவளுக்கு அழுகை வரும் போல் இருந்தது.குடையை கொண்டு சென்று கொடுத்தால்,அதிதி தன் தலையை உருட்டுவாள் என்று நொந்து போனாள்.

 

இருவிழிகளையும் சிறிதாய் சுருக்கி,கருமணிகளை மையத்துக்கு நகர்த்தி,மறுமொழி பேசாமல்,இமைகள் கொஞ்சம் நிமிர்ந்திட,”வாங்கிக் கொள்ளேன்” என அவள் விழிகள் ஒப்பித்த இறைஞ்சலில்,அவன் சிறுக சிறுக சிதைந்து போக,எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்,பையன்.

 

சட்டென அலைபாய்ந்த விழிகள் மீண்டும் அவளைத் தழுவ,முகபாவத்தில் மாற்றமின்றி அவள் நின்றிருந்த கோலம் அவனை என்ன செய்ததோ,நீட்டிய குடையைப் பற்றியிருந்தான்,புத்தி மறுத்தும் கேளாமல்.

 

“ஹப்பாடி” இதழ்கள் அசைய அவள் பெருமூச்சு விட்டதும் தப்பித்திடவில்லை,அவன் பார்வையில் இருந்து.

 

தன் வேலை முடிந்து விட்ட திருப்தியில்,அவள் நிம்மதிப் புன்னகை சிந்திட,அது அவனை சிதற விட,விட்டால் போதுமென ஓடியவளைக் காண்கையில் அவனிதழ்களில் எழுந்த புன்னகையை மீசை நுனியைக் கடித்து மென்று தின்றான்,பையன்.

 

மழை அடித்து ஊற்றியது.தேகத்தை நனைத்த சாரலில் தன்னை ஒப்புவித்த படி தரித்தவனின் பார்வை,அவள் விம்பம் மறையும் வரை அவளையே வட்டமடித்தது.

 

●●●●●●●●●

 

“அப்பு சாப்ட வாடா..ரெண்டு நாளா ஒரு மாதிரியா தான் இருக்க நீ..” தாயுமானவரின் குரல் கேட்டு கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவனுக்கு இரு நாட்களால் ஏகப்பட்ட குழப்பங்கள்.

 

அன்று அவன் தேடியது,அவளைத் தான் என தெரிந்த கொண்ட பின்னர் அவளை மீளவும் சந்தித்திட நேர்ந்திடாவிடினும்,அதன் பின்னர் எத்தனையோ யோசனைகள் எழுந்தன.

 

மருத்துவர் கூறியதைப் பார்க்கையில் அவளுக்கு தன் மீது காதல் இருக்கிறது.அன்று அவளின் தவிப்பும் காதல் என்றில்லாவிடினும் அக்கறைக்கு சான்று பகர்ந்தன.

 

ஆனால்,அவள் விழிகளில் அவன் கண்டது என்னவோ மிரட்சியையும் பயத்தையும் மட்டும் தான்.காதலின் கடுகளவும் விழிகளில் தெரியாதிருக்க,அவனுக்கு முற்றிலும் குழம்பிய மனநிலை.

 

அவள் மனதில் தன்னைப் பற்றிய நிலைப்பாடு என்னவென்று அவனுக்கு அறிய வேண்டியதாய் இருந்தது;அறிந்து கொள்ள மனம் பரபரத்தது.ஏனோ..?

 

ஒன்று மட்டும் குறித்துக் கொள்ள வேண்டி இருந்தது.அன்று தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியது அவளாக இருக்கக் கூடும் என்கின்ற ஊகத்தில் தாறுமாறாய் திட்டியவனோ,இந்த க்ஷணம் தனக்குள் சந்தேகம் வந்தும் கூட அவளிடம் கோபப்படவில்லை.அவள் மீது கோபம் வரவுமில்லை,அவனுக்கு.

 

தாயுமானவர் உணவைப் பிசைந்து ஊட்டிட,அதை வாங்கிக் கொண்டவனின் முகம் சிந்தனையில் இருப்பதை கவனித்தார்,மனிதரும்.

 

“அப்பு என்னடா யோசன..?”

 

“அப்பா ஒரு பொண்ணு நம்மள லவ் பண்றதுன்னு எப்டிபா கன்ஃபார்ம் பண்றது..?”

 

“அவங்க பார்வயே வச்சே தெரியும் டா..” என்றவருக்கு,தன் காதலியின் நினைப்பு.

 

“இல்லன்னா..? சரி மாதும்மா உன்ன லவ் பண்றத நீ எப்டி கண்டு பிடிச்ச..”

 

“அப்போ எனக்கு புரியலடா..அதான் அவ ஃப்ரெண்ட் கிட்ட போய் மெரட்டி உருட்டி என்னன்னு கேட்டேன்..அவ தான் உண்மய ஒளறிட்டா..” என்கவும் பையனுக்குள்ளும் அதே யோசனை.

 

மறுநாள் கல்லூரிக்கு சென்று முதல் வேலையாக மித்ராவை பிடித்து அதட்ட,அதில் பயந்து மொத்தத்தையும் கொட்டி விட்டாள்,அவள்.

 

“அவளுக்கு லவ் எல்லாம் வராது..அவ லவ்வுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டா..வீட்ல பாக்கறவன தான் கல்யாணம் பண்ணுவேன்னு சுத்தற ஆளு அவ..அன்னிக்கி நீங்க அவளுக்கு ஹெல்ப் பண்ணுனீங்களாம்..அதுல இருந்து அவ உங்கள ஒரு நல்ல மனுஷனா தான் பாக்கறா..ஆம்பளன்னா அவ எதிர்பாக்கற கேரக்டர் உங்க கிட்ட இருக்கு..அதான் ஒரு அக்கற உங்க மேல..ஒரு சூப்பர் ஹீரோ மாதிரி தான் நீங்க அவளுக்கு..இங்க காலேஜ்ல தயா சாரும் அவளுக்கு அப்டி தான்..நீங்க தப்பா எடுத்துக்காதீங்கண்ணா..”

 

தோழியைப் பற்றி அவர்களின் மனதில் எந்த விதமான தவறான எண்ணங்களும் உருப்பெறக் கூடாது என அவள் கெஞ்ச,அவளுக்கு காதல் இல்லை என்கின்ற நிம்மதி அவனுள் விரவிப் பரவினாலும்,அவள் தன்னை காதலித்திடவில்லை என்கின்ற சிறு ஏமாற்றமும் துளிர்த்திடாமல் இல்லை.

 

மனித மனங்கள்,அது விசித்திரங்களின் உறைவிடங்கள்.

 

மித்ராவின் வார்த்தைகள் அவனுக்குள் இதத்தையும் தளர்வையும் ஒரு சேர விதைத்திட,அதை அப்படியே பின் தள்ளி ஒதுக்கினான்,அவன்.

 

அவனுக்கே தன் நடத்தை உசிதமாய்த் தோன்றாதிருக்க,இனி இயல்பாக இருக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டான்,இனி மேல் தான் அவனியல்புகளும் இறுக்கங்களும் கரைந்திடப் போகிறது என்று தெரியாமல்.

 

அவள் மீது அவனுக்கு காதல் இல்லை.காதலுக்கான தூதுகள் முழுதாய் அவன் அகத்தை நிரப்பிக் கிடப்பதை அவன் இன்னும் உணர்ந்திடவுமில்லை.

 

அக்கறையின் இடைநிலையில் அவள்!

ஈர்ப்பின் கடைநிலையில் அவன்!

 

சின்ன சின்னப் பூகம்பங்கள்,என்றோ ஒரு நாள் காதலாகும்..

இறுகிய அவன் இதயத்தில் விண்ணூஞ்சலென காதலாடும்..

 

யாழ்,அவனிதயத்தை மீட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை!அதன் பின் அவனிதயத்தை அவளிடம் இருந்து மீட்கும் நாள் அவன் அகராதியிலும் இல்லை !

 

●●●●●●●●

 

*(II)*

 

விழிகள் வீங்கிச் சிவந்திருக்க,வெளியே நின்றிருந்தவளைப் பார்க்கவும் பாவமாகத் தான் இருந்தது,தாதியருக்கு.

 

நான்கு நாட்களாய் டாக்டரை சந்திக்க அவள் வருவதும்,அவனோ வேலையிருப்பதாய் பொய் கூறி அவளை சந்திக்க மறுப்பதும் தொடர்ச்சியாட நடந்தேறியிருந்தன.

 

“டாக்டர் அந்த பொண்ணு இன்னிக்கும் வந்துருக்கு..” தாதி சொல்லிவிட்டு அவன் முகம் பார்த்திட,மென் புன்னகையே அவன் பதிலாய் இருந்தது.

 

அவளை சந்தித்திட அவன் விரும்பவில்லை என்பதை விட,அவளை அலைய வைத்திட விரும்பினான் என்பதே உண்மை.

 

தன்னிடம் புன்னகை பூத்து விட்டு,கோப்பொன்றில் ஆழ்ந்து போனவனை பெருமூச்சுடன் நோக்கி விட்டு,கடந்து போனார்,அவர்.

 

வெளியில் அமர்ந்து இருந்த தென்றலுக்கு அவன் தன்னை வேண்டுமென்று தவிர்ப்பது புரிந்தாலும் தன் கோபத்தை காட்டிட முடியா நிலை.

 

இரு மணி நேரங்கள் கழிந்த போதும் வெளியே வரவில்லை,டாக்டர்.வேலை ஏதும் இல்லாதிருக்க,இருக்கையில் சாய்ந்து உறங்கி விட்டிருந்தான்.

 

தென்றலுக்கு இருப்புக் கொள்ளவில்லை.எப்படியேனும் அவனை இன்று சந்தித்தே ஆக வேண்டும் என்கின்ற தீர்மானத்தில் வந்திருக்க,அதை நிறைவேற்றாது வீடு செல்லவும் விரும்பவில்லை,அவள்.

 

ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்து எழுந்து சென்று அவள் அவனின் பிரத்தியேக அறைக் கதவை திறந்து விட,அங்கு உறங்கியிருந்த டாக்டரை கண்டதும் கோபம் உச்சியை தொட்டு அதற்கு அழுகை தான் வந்தது.

 

கதவு திறக்கும் அரவம் அவனுக்கு விழிப்பு தட்ட வைத்திட,இமை சுருக்கி கண்களை திறந்தவனுக்கு கதவின் அருகே நிற்கும் தென்றலைக் கண்டதும் ஏனோ சினம்.

 

“உன்ன யாரு உள்ள வர சொன்னா..?” வழமைக்கு மாறாய் அவள் எகிறிப் பாய,அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

 

“உங்க கூட பேசனும்..” கலங்கிய விழிகளை சிமிட்டியவாறு அவள் உரைத்திட,அவனின் முகத்தில் அலட்சிய பாவம்.

 

“என்ன பேசனும்..? சொல்ல வேண்டியத சொல்லிட்டு கெளம்பு..” எகத்தாளமாய் சொன்னான்,அவன்.அவனியல்புகள் அவளின் முன் மட்டும் மாறிப் போய் நிற்கின்றன.

 

அவனின் அலட்சியம் அவளை காயப்படுத்த அதை கோபமாக கூட வெளிப்படுத்த முடியா நிலையில்,அவள்.

 

“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல..”

 

“அதுக்கு நா என்ன பண்றது..? உனக்கு விருப்பம் இல்லன்னு போய் உங்க வீட்ல சொல்லனுமா..?”

 

அவன் பதிலில் அவளுக்கு அழுகை வர அடக்கிக் கொண்டாலும்,விழிகளில் அது தெரிந்தது.

 

“பெரிய கண்ணகி நீங்க..? கண்ணால எரிக்கிறீங்க..?” நக்கல் சிரிப்புடன் அவன் வார்த்தைகள்.

 

“என் மனசுல இன்னொருத்தர் இருக்காரு அத்தான்..”

 

“அதுக்கு என்னால ஒன்னும் பண்ண முடியாது..கல்யாணம் பண்ணும் போது மொத்தமா அவன தூக்கி எறிஞ்சிட்டு என்ன மனசுல சேத்துக்கு ரெடி பண்ணிக்கோ..”

 

அவன் பேசப் பேச அவளுக்கு அத்தனை வலி.அவனாவது தன்னை புரிந்து கொள்வான் என்று அவள் எண்ணியிருக்க,அது பொய்த்துப் போனதில் அத்தனை வலி.

 

அவளின் நிலை அவனுக்கு புரிந்தது போலும்.

 

“நீ லவ் பண்றவனுக்கு இப்போ கல்யாணம் ஆகி இருக்குன்னு சொல்றாங்க..அதுக்கு என்ன சொல்றது..? எப்டின்னாலும் நீ ஒருத்தன கட்டிக்க தான வேணும்..அது நானா இருந்துட்டு போறேன்..பொத்தி கிட்டு ஒத்துக்கோ..”

 

“அப்டி அவரு வேற கல்யாணம் பண்ணி இருந்தா நா கண்டிப்பா ஒத்துக்கறேன்..”

 

“அப்போ அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கன்ஃபார்மா தெரிஞ்சா நீ மாறுவ..?”

 

“ம்ம்..” என்று இதழ்கள் உதிர்த்தாலும்,அதில் என்ன மறைபொருள் என்று அவள் மட்டுமே தெரிந்தது.சத்தியமாக துளி விருப்பம் கூட இல்லை,அவள் உதிர்த்த வார்த்தைகளில்.

 

“ஓகே அப்போ கன்ஃபார்ம் பண்ணலாம்..”

 

“அதுக்கு முன்னாடி..”

 

“அதுக்கு முன்னாடி என்ன பண்ணனும் தென்றல்…?” அவன் திமிராய் கேட்க,அவள் பதிலில் அவன் விழிகளில் அதிர்வு.

 

காதல் தேடும்.

 

2025.04.17

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. டாக்டர் சித்து ரொம்ப ஓவரா தான் பண்றார் … தென்றல் யாரை காதலிச்சுருப்பா …

    ஆர்யா தவிப்பை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க …