

அந்த பப் பில், ஆண் பெண் வித்தியாசம், பண வித்தியாசம், நல்லவர் கெட்டவர் வித்தியாசம் அத்தனையும் மறந்து குதித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். சமத்துவத்தை எது எதிலோ கொண்டு வரப் போராடுகின்றனர். அதிலெல்லாம் பிரச்சனை வர, இந்த இடத்தில் மட்டும் சமத்துவம் ஆறாய் பெருகி ஓடியது. கண்டு கொள்ளத்தான் யாரும் இல்லை.
இருட்டில் மறைந்த ஒரு மேசையில் அவன் கவிழ்ந்து கிடக்க, அங்கு வேலை செய்பவன் அவனது சட்டையில் எதையோ தேடினான். தேடியது கிடைக்கும் முன் படுத்துக்கிடந்தவன் சடாரென எழுந்து, “போடி.. நீ இல்லனா எனக்கு வாழ்க்கை இல்லையா? உன்னை விட பெஸ்ட்டா ஒருத்தி கிடைப்பா” என்று கத்தினான்.
“சார்.. அட்ரஸ் சொல்லுங்க வீட்டுக்கு அனுப்புறேன்”
மதுவின் மகிமையில் சிவந்து போன கண்களை அவன் பக்கம் திருப்பியவன், “யார் மேன் நீ?” என்றான் குழறலாக.
அவனோ பதில் சொல்ல முடியாமல் விழித்தான். அவன் இங்கு வேலைக்கு சேர்ந்தே இரண்டு நாள் தான் ஆகிறது. இது போல் கிடப்பவர்களை அவர்களது டிரைவர்கள் மூலம் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இவனை இன்று தான் பார்க்கிறான். உடன் யாரும் வராததால் முகவரி கேட்டான்.
“சார் நீங்க வீட்டுக்குப் போகனும்ல? அட்ரஸ் சொல்லுங்க”
“ம்ம்.. ம்ம்”
அவன் முணகிக் கொண்டு கிடக்க, “இதென்னடா தலை வலி” என்று இருந்தது.
அவனது சட்டை பாக்கெட்டில் கைபேசி ஒளிர்ந்து கொண்டிருக்க, அதை எடுக்கப் போனான்.
போதையில் கிடந்தவன் அவனது கையைப்பிடித்துத் தடுக்க, “சார்.. ஃபோன் அடிக்குது. எடுத்து பேசுங்க. ஆட்லீஸ்ட் அட்ரஸாவது சொல்லுங்க” என்று கடுப்பாகவே பேசினான் வெயிட்டர்.
கைபேசியை எடுத்தவன், அதை பார்க்க முடியாமல் கண்ணை சுருக்கி பார்க்க, கைபேசி ஒளிர்வது நின்று விட்டது.
அதைத் தூக்கிப் போட்டு விட்டு, மிச்சம் மீதி இருந்ததை உள்ளே தள்ள ஆரம்பித்து விட்டான். மீண்டும் கைபேசி ஒளிர, இப்போது வெயிட்டரே எடுத்து விட்டான்.
“ஹலோ செந்தில்?”
“சார்.. நான் பப்ல வேலை பார்க்குற வெயிட்டர் பேசுறேன். அந்த சார் குடிச்சுட்டு படுத்துக் கிடக்குறாரு” என்றவன் பப் பெயரை கூற, உடனே வருவதாக கூறி வைத்து விட்டான் மறுபக்கம் இருந்தவன்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில், இருவர் அவன் முன்னால் வந்து நின்றனர்.
குடித்துக் கிடந்த செந்தில், நண்பர்களை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவனது உடமைகள் எல்லாம் சரி பார்த்து விட்டு, பில்லை கட்டி விட்டு, செந்திலை தூக்கி அவனது காரில் போட்டனர்.
“நீ என் பைக் எடுத்துட்டு வா” என்று ஒருவன் சாவியை மற்றவனிடம் கொடுத்து விட்டு, செந்திலின் காரை எடுத்து விட்டான்.
“ஏய்.. போடி.. போ.. நீ இல்லனா உலகத்துல பொண்ணா இல்ல.. ?எனக்கு ஆயிரம் பொண்ணு கிடைப்பாங்க” என்று செந்தில் திடீரென கத்த, காரை ஓட்டிவன் பல்லைக் கடித்தான்.
“அப்புறம் என்ன இதுக்குடா இந்த கருமத்த குடிச்சுட்டு கிடக்குற?”
“வலிக்கிதே… வலிக்குதுடா.. ரொம்ப வலிக்குது.. அய்யோ இந்த ஹார்ட்ட யாராச்சும் பிச்சு போடுங்களேன்” என்று தன் சட்டையை பிய்க்க ஆரம்பித்தான்.
“நினைச்சேன். அவளால என்னைக்காவது இப்படி சட்டைய கிழிச்சுட்டு அலைய போறனு. இப்ப நடந்துருச்சு”
“எனக்கு… எனக்கு பிடிக்கல.. அவள பிடிக்கல.. என்னை பைத்தியமாக்கிட்டா மச்சி”
“தெரிஞ்ச விசயம் தான்”
காரை லாவகமாக ஓட்டியவன், செந்திலுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
பத்து நிமிட பயணத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்தனர். காரை அதன் இடத்தில் நிறுத்தி விட்டு, இரண்டு நண்பர்களும் செந்திலை பிடித்துத் தூக்கிக் கொண்டு கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.
அது பெரிய பெரிய பணக்காரர்கள் தங்கும் பகுதி. அந்த நேரத்தில் முழு அமைதியுடன் இருக்க, மெல்லிய குரலில் புலம்பிக் கொண்டிருந்த செந்திலை அதட்டி, தூக்கிக் கொண்டு போய் லிஃப்டில் போட்டனர்.
நிற்கக்கூட முடியாமல் படுத்துக் கிடந்தான்.
“இவனுக்கு ஏன்டா இந்த நிலைமை?”
“எல்லாம் அவளால வந்தது. தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். எங்க கேட்டான்? இப்ப பாரு புலம்பி சாகுறான்” என்று கடுப்பாக நண்பனை பார்த்தான்.
அவர்கள் இறங்க வேண்டிய தளம் வந்ததும், செந்திலை தூக்கி நிறுத்தினான்.
“ஹரிஷ்.. நீ டோர ஓபன் பண்ணு. இவன இழுத்துட்டு வர்ரேன். இந்தா சாவி.”
செந்தில் பாக்கெட்டில் இருந்து எடுத்துத் தூக்கிப் போட்டான்.
ஹரிஷ் கதவை திறக்கச் செல்ல, செந்திலை இழுத்துக் கொண்டு வந்தான்.
கதவை திறந்து அவனை உள்ளே இழுத்துச் சென்றவர்கள், நேராக குளியலறைக்குள் இழுத்துச் சென்று, தண்ணீரை திறந்து விட்டனர்.
தலை நிறைய தண்ணீர் விழ, செந்தில் அப்போதும் எதையோ புலம்பிக் கொண்டிருக்க, “இது திருந்தாது. நான் போய் எழுமிச்சை பழம் இருந்தா எடுத்துட்டு வர்ரேன்” என்று சென்று விட்டான்.
ஹரிஷ் செந்திலின் சட்டையை கழட்டி விட்டு ,தண்ணீரை முகத்தில் அடித்து எழுப்பினான்.
பழச்சாறை தயாரித்துக் கொண்டு அவன் வரும் முன், செந்திலுக்கு வேறு உடை மாற்றி விட்டு இழுத்துக் கொண்டு வந்தான் ஹரிஷ்.
சோபாவில் தள்ளி விட்டவன், “வாய மூடுடா.. சும்மா அவளையே நினைச்சுட்டு இருக்க? அவ தான் உன்னை வேணாம்னு போயிட்டாள்ள? சும்மா புலம்பிட்டே இருக்க. அறிவு இருக்கா? எருமை எருமை” என்று எரிந்து விழுந்தான்.
“இவன் திருந்த மாட்டான்டா. அன்னைக்கே சொன்னேன். அவ சரி இல்ல. உனக்கு வேணாம்னு. காதல் கண்ண மறைக்குது அறிவ மறைக்குதுனு பைத்தியம் மாதிரி அவ பின்னாடியே போனான். இப்ப என்ன கழட்டி விட்டுட்டாளா? இந்தா இதைக்குடி. குடிச்சுட்டு என்ன நடந்துச்சுனு சொல்லித்தொலை”
பழச்சாறை கையில் திணிக்கவும் கண்ணீரோடு அதை பார்த்தவன், “தப்பு தான் மச்சான். உன் பேச்ச கேட்டுருக்கனும். அவ எனக்கு சரி வர மாட்டானு சொன்னப்போவே கேட்டுருக்கனும்” என்றான்.
“முதல்ல அதை குடிடா” என்று ஹரிஷ் எரிச்சலாக கூற, செந்திலும் குடித்தான்.
“இப்ப என்ன நடந்துச்சு? அவ உன்னை கழட்டி விட்டுட்டாளா?”
“அவ என்னை லவ்வே பண்ணலடா.. இவ்வளவு நாளா லிவ்விங்ல இருந்துட்டு, இப்ப சாதாரணமா கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லிட்டா”
“நினைச்சேன்” என்றவன் சிரிக்க, ஹரிஷ் முறைத்தான்.
“ஏன்டா?”
“நான் தான் சொன்னேனே.. இத எப்பவோ எதிர் பார்த்தேன். அவ எல்லாம் குடும்பத்துக்கு செட்டாக மாட்டா. நல்ல குடும்பப் பொண்ணா பார்த்து லவ் பண்ணித்தொலைனு சொன்னேன். பெரிய இவன் மாதிரி போனான். இப்ப பாரு. கல்யாணம்னு சொன்னதும் அசால்ட்டா ஜகா வாங்கிட்டா. இப்பவாவது சனியன் ஒழிஞ்சதுனு தலை முழுகிட்டு வீட்டுல பார்க்குற பொண்ண கல்யாணம் பண்ணு”
“அவனே நொந்து இருக்கான்” என்று ஹரிஷ் ஆரம்பிக்கும் போதே, செந்தில் குறுக்கிட்டான்.
“உன் பேச்ச கேட்டுருக்கனும். ஆனா என் லவ் மேல நிறைய நம்பிக்கை இருந்துச்சுடா. எவ்வளவு லவ் பண்ணேன் தெரியுமா? அது அவள என் கூட நிரந்தரமா வச்சுருக்கும்னு நம்புனேன்”
“என்ன தான் ஆச்சு?”
“எங்க வீட்டுல பொண்ணு பார்த்துட்டாங்க. எனக்கு அந்த பொண்ண பிடிக்கல. வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன். கல்யாணம் பண்ணுறதுனா நீ வேற ஒருத்திய தான் பண்ணனும்னு சொல்லிட்டா”
“பின்ன? இவள போயா கல்யாணம் பண்ணுவாங்க? வீடு நாசமா போயிடும்”
“டேய் நீ வாய மூடு” என்று அதட்டிய ஹரிஷ், “நீ பேசி பார்த்தியா?” என்று செந்திலிடம் கேட்டான்.
“பேசுனேன். ஒரு வாரமா எவ்வளவோ கேட்டேன். அசால்ட்டா ப்ரேக் அப் பண்ணி என்னை குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சுட்டா”
நின்றிருந்த அழுகை மீண்டும் வர, செந்தில் முகத்தை மூடிக் கொண்டு சோபாவில் படுத்து விட்டான்.
“இவனே இனி சரி ஆகிடுவான். அதான் பிடிச்ச பேய் போயிடுச்சே. இனி திருந்திடுவான். டேய் நல்லா தூங்கி எந்திரி. காலையில வர்ரோம். அழுது புலம்பி மறுபடியும் குடிக்க போயிடாத”
செந்திலிடமிருந்து பதில் வராமல் போக, இருவரும் சலிப்பாக தலையசைத்தனர்.
“கிளம்பலாம்” என்ற ஹரிஷ் திரும்ப, பின்னால் கையைக்கட்டிக் கொண்டு, கதவில் சாய்ந்தபடி நின்று இருந்தாள் அவள்.
யாரைப்பற்றி இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்களோ அவளே தான் நின்று இருந்தாள்.
நண்பர்கள் இருவரும் அதிர்ந்து விட, அவள் அலட்டிக் கொள்ளவே இல்லை. இரண்டு கைகளையும் பின்னால் கோர்த்துக் கொண்டு உள்ளே வந்தாள்.
சோபாவில் செந்தில் படுத்துக் கிடந்தான். அவனை இருவரும் மறைத்து நின்றதால், வாசலில் இவள் வந்து நின்றதை யாருமே கவனிக்கவில்லை.
உள்ளே வந்தவள் செந்திலை எட்டிப் பார்த்தாள். அவன் கண்ணை மூடி படுத்து இருந்தான்.
ஹரிஷ் அதிர்ச்சியில் பேச மறந்து நின்று விட, அவள் மற்ற இருவரையும் பார்த்தாள்.
“இங்க எதுக்கு இவன கூட்டிட்டு வந்தீங்க?”
“என்னது?”
“இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க? காதுல விழலையா?”
“இங்க நீ என்ன பண்ணுற? முதல்ல வெளிய போ”
“இத நான் சொல்லனுமே..” என்றவள் அசையாமல் கிடந்த செந்திலை ஒரு முறை பார்த்தாள்.
“ஏன்னா இது என்னோட ஃப்ளாட்”
அலட்டிக் கொள்ளாமல் அவள் கூறியதில், இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“இன்னைக்கு கிளம்பிட சொன்னேன். ரெண்டு பேரும் இவன கூட்டிட்டு கிளம்பலாமே?”
சற்று முன் பேசியதை கேட்டிருப்பாளோ என்ற பயம் சற்று விலக, ஹரிஷ் நண்பனை பார்த்தான். அவனோ அவளை முறைப்பதும், செந்திலை பார்ப்பதுமாக நின்று இருந்தான்.
“என்ன உங்க ஃப்ரண்டுக்கு இங்க இருந்து கிளம்ப மனசில்லையா?”
கேட்டவள் பதிலுக்காக காத்திராமல், செந்திலை ஒரு முறை பார்த்து விட்டு, அருகே இருந்த அறைக்குள் நுழைந்தாள். எதையோ எடுத்துக் கொண்டு கதவை பூட்டி விட்டு வந்தாள்.
செந்தில் எழுந்து அமர்ந்து இருந்தான். உதைத்து எழுப்பி இருந்தனர். அவன் தலையை குனிந்து கொண்டு அமர்ந்து இருக்க, அவள் முன்னால் வந்து நின்றாள்.
“இப்ப சொல்லு” என்று அவள் கேட்க, செந்திலுக்கு வார்த்தையே வரவில்லை. அவளை வெறித்துப் பார்த்தான்.
நண்பர்கள் இருவருக்குமே செந்திலின் மீது கோபம் வந்தது. இவ்வளவு நேரம் புலம்பி விட்டு அவள் முன்னால் பேசாமல் அமர்ந்து இருக்கிறானே?
“நான் உன்னை ஏமாத்திட்ட மாதிரி குடிச்சு சீன் க்ரியேட் பண்ணாத. நான் எப்பவுமே தெளிவா தான் இருந்தேன். நீயும் தெளிவா இருக்கனும். இருந்துருக்கனும். இப்போ இது முடிஞ்சு போச்சு. இனி இந்த ஃப்ளாட் பக்கம் நீ வரக்கூடாது.”
வார்த்தைகளை நிதானமாக அவள் பேச, மூவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.
“நாளைக்கு காலையில என் பிஏ வந்து சாவி வாங்கிப்பான். அதுக்குள்ள கிளம்ப சொல்லுங்க” என்று கதவு பக்கம் நடந்தவள், சட்டென திரும்பி பார்த்தாள்.
“நீ… மித்.. யோகமித்ரன். வெல்.. உன் ஃப்ரண்ட்டுக்கு நல்ல குடும்ப பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வை” என்று நக்கல் சிரிப்போடு கூறிவிட்டு சென்று விட்டாள்.
ஹரிஷ் மித்ரனை பார்க்க, மித்ரன் அவள் சென்ற பாதையை முறைத்துக் கொண்டிருந்தான்.
“திமிரு.. உடம்பெல்லாம் திமிரு” என்று மித்ரன் பல்லைக் கடிக்க, ஹரிஷுக்கு ஒரு மாதிரியாகி விட்டது.
“எல்லாத்தையும் கேட்டுருக்காடா”
“இல்லாததையா சொன்னோம்? அப்பவாது உரைக்குதானு பார்ப்போம். ஆனா இது திருந்தாது” என்றவன் வேகமாக செந்திலின் பக்கம் திரும்பினான்.
“டேய்.. எந்திரி. இனி இங்க நீ ஒரு நிமிஷம் கூட இருக்க கூடாது”
“இந்த நேரத்துல இவன எங்க கூட்டிட்டுப்போவ?”
“நடு ரோட்டுல கூட படு. இங்க படுக்காத. எந்திரி”
மித்ரன் செந்திலை போட்டு உலுக்க, “அட விடு டா. நாளைக்கு வேற இடம் பார்த்துட்டு மாறிக்கலாம். இன்னைக்கு விடு. கிளம்புவோம். நீ யோசிச்சு நல்ல முடிவா எடுப்பனு நினைக்கிறேன். மறுபடியும் குடிச்சனா கழுத்துலயே மிதிச்சு கொன்னுடுவேன்” என்று ஹரிஷ் மிரட்டி விட்டு மித்ரனை தள்ளிக் கொண்டு வெளியே வந்தான்.
“அந்த சம்பூர்ணாவுக்கு எவ்வளவு திமிரு.. குடும்பப் பொண்ணா பார்த்து கட்டி வைக்கனுமாம். பின்ன இவளையா கட்டி வைப்பாங்க. ச்சை” என்று மித்ரன் பொங்கியபடி லிஃப்டில் நுழைந்தான்.
பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆயுதம். அது எப்போது திருப்பி தாக்கும் என்று காலமே அறியும். சிந்திய பாலை கூட கழுவி துடைத்து தடமில்லாமல் செய்து விடலாம். கொட்டிய வார்த்தைகள் ஆழ் மனதில் சென்று புதைந்து போகும். அதை அழிக்கவோ மறைக்கவோ முடியாது. தான் பேசிய வார்த்தைகளுக்கு நன்மையோ தீமையோ அனுபவித்து தான் தீர வேண்டும்.
வாசம் வீசும்
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தத்துவம் நிரம்ப சரி
நன்றி
கரெக்ட் தான் யாரையும் பத்தி தவறா பேச என்ன இருக்குது … அது அவங்கவங்க வாழ்க்கை … அவங்கவங்க முடிவு
அதே தான்