
அத்தியாயம் 54
கண் முன் பதற்றத்துடன் நின்று கொண்டிருக்கும் தங்கை கணவனைப் பார்த்த ருக்குவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
தங்கையின் திருமணவாழ்வு என்னும் செடி வாடிப்போய் உயிர் விடும் நிலையில் இருப்பது போல் தோற்றமளித்தாலும், வேரில் நன்றாகவே உயிர் இருக்கிறது எனக் கணித்தவள் தங்கையின் எதிர்கால வாழ்க்கைக்காக அவசரமாக வேண்டுதல் வைத்தாள்.
ஆனால் இந்த முறை முன்னெச்சரிக்கையாக அம்மனுக்கு பத்து மாதம் தொடர்ச்சியாக பட்டு சாத்துவதாக வேண்டிக்கொண்டாள்.
“நான் போய் உங்க பொண்டாட்டியை வரச் சொல்றேன். அவகிட்டையே என்ன ஏதுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. ஆனா அதுக்கு அப்புறமாவது அவளைக் கஷ்டப்படுத்தாம இருங்க அதுவே போதும்.” மென்மை பாதியும், வன்மை மீதியுமாய் சொல்லிவிட்டு நகர்ந்தாள் ருக்கு.
நாகா வந்து அரைமணி நேரம் கடந்திருந்தது. “நான் வந்து இவ்வளவுநேரம் ஆச்சு. இவங்க போன் பண்ணிச் சொல்லியும் வேணும் னே லேட்டா வர இல்ல. உடம்பு முழுக்கக் கொழுப்பு தான் நிறைஞ்சிருக்கு. வா உன்னைக் கவனிச்சுக்கிறேன்.” மனதோடு நினைத்தவண்ணம், நேரம் போகாமல் அந்த வீட்டைச் சுற்றி வரத் துவங்கினான் நாகா.
சகோதரிகளின் குழந்தைப் பருவ புகைப்படத்தில் பார்த்த அடுத்த கணத்தில் தன மனைவியை இனம் காண முடிந்தது. “பூசணிக்கா சின்னப்பிள்ளையில் அழகாத்தான் இருக்கா.” என்க, அப்ப இப்ப அழகா இல்லையா என மனசாட்சி கேள்வி எழுப்ப, “அப்படிச் சொன்னா அது அப்பட்டமான பொய்.” என்றவன் தலையைத் தாழ்த்திப் பிடறியை வருடிக்கொண்டான்.
“ஊர்மி நான் சொன்னது தான் நடந்துச்சு பார்த்தியா? ஒன்னு இல்ல இண்டு குழந்தைங்க மொத்தமா. இன்னும் எட்டு மாசத்தில், குட்டி கை, குட்டி காலோடு பிங்க் கலரில் இரண்டு குழந்தைங்க நம்ம வீட்டில் இருக்கப் போகுதுன்னு நினைச்சுப் பார்க்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு.” பேசிக்கொண்டே லீலாவும், ஊர்மியும் வீட்டுக்குள் வர, நாகா தான் கேட்ட செய்தியில் திகைத்து நின்றான்.
நாகாவைப் பார்த்ததும், கொண்டிருந்த சந்தோஷம் சற்றே அதிகரித்தது லீலாவிற்கு. இருந்தாலும் அவன் செய்த அலப்பறைகளை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க இயலாதவளாய், “வாங்க” என்று பொத்தாம் பொதுவாக அழைத்துவிட்டாள் நகர்ந்தாள்.
“நீ எதுக்கு இங்க வந்த?” என்பது போல் தெனாவெட்டாக ஒரு பார்வை பார்த்தாள் ஊர்மி.
“குழந்தைன்னு ஏதோ பேசினாங்களே உங்க அக்கா.” நாகா சற்றே தயக்கத்துடனும், சின்ன எதிர்பார்ப்புடனும் கேட்டான்.
“ஆமா அக்கா கன்சீவ்வா இருக்காங்க, அதுவும் ட்வின்ஸ். இப்ப அதனால உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?” வேண்டுமென்றே தான் மாற்றி சொன்னாள். அவன் மேல் மலையென இருந்த கோபம், தந்தையாய் தன் மகவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவன் உரிமையில் கை வைக்கச் சொன்னது. தவறென்று தெரிந்தாலும் செய்தாள்.
அவள் சோர்ந்த முகத்தைப் பார்த்ததும் இளகிய மனது அவள் இடக்கான பதிலில் மீண்டும் கல்லாகிப் போக, “இது என்னடி” எனத் தான் கையோடு கொண்டு வந்திருந்த விவாகரத்துப் பத்திரத்தை அவள் முகத்துக்கு மிக அருகே காட்டிக் கேட்டான்.
“கடவுளே எல்லோர் முன்னாடியும் இவன் ஏதாவது உளறி வைச்சுட்டா பிரச்சினை ஆகிடுமே. இப்ப இருக்கிற நிலமையில் இவனை நம்பி அக்காங்க இவன் கூட தனியா வேற அனுப்ப மாட்டாங்களே.” உள்ளுக்குள் தவிக்க ஆரம்பித்தாள் அவள்.
“என்னடி, என்ன சொல்லி சமாளிக்கலாம் னு யோசிக்கிறியா? நான் உனக்கு அந்த வீட்ல என்னடி குறை வைச்சேன். உன் மனசாட்சியைத் தொட்டு சொல்லு அன்னைக்கு நீ பண்ணது தானே தப்பு.
நான் கேட்ட கேள்விக்கு ஒழுங்கா நீ பதில் சொன்னியா? நீ பாட்டுக்கு மயிராக் கூட மதிக்காம, நான் பேசிக்கிட்டு இருக்கும் போது கதவைத் திறந்துட்டுப் போற. அத்தளை இளக்காரமாப் போயிட்டேன் இல்ல நான்.
பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு நீ பாட்டுக்கு இங்க வந்து உட்கார்ந்துகிட்ட, உன்னாலே என் ஒட்டு மொத்த குடும்பமே என்னை ஏதோ கொடுமைக்காரன் மாதிரி பார்க்குது. செஞ்சது எல்லாம் பத்தாதுன்னு இப்ப விவாகரத்துப் பத்திரம் அனுப்பி இருக்க.” அவள் முகத்தில் காகிதங்களை வீசுவது போலவே பேசினான் நாகா.
வேகமாக வந்து அவன் வாயை பொத்தியவள், “இப்ப எதுக்கு இப்படி நாலு தெருவுக்குக் கேட்கிற மாதிரி கத்திக்கிட்டு இருக்கீங்க. அமைதியா இருங்க, எதுவா இருந்தாலும் நாம இரண்டு பேரும் தனியாப் பேசிக்கலாம்.” அக்காக்களின் வருகையை சுற்றி முற்றி சரிபார்த்துக்கொண்டே சொன்னாள் ஊர்மி.
அவள் பயந்தது போலவே, “ஏங்க, ஊர்மியோட நிலைமை புரிஞ்சுமா நீங்க இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட புத்தியே கிடையாதா? தயவுசெஞ்சு கிளம்பிப் போயிடுங்க, எங்களுக்கு எங்க ஊர்மி முக்கியம்.” கோபமாகப் பேசிக்கொண்டே அருகே வந்திருந்தாள் ருக்கு.
“நான் என் பொண்டாட்டி கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். பெட்டர் நீங்க இதுல தலையிடாதீங்க. போய் உங்களுக்குன்னு ஏதாவது வேலை இருக்கும் அதைப் பாருங்க.” முடிந்தவரை பொறுமையாகப் பேசினான். அது எதிரே நிற்பவள் தன் அண்ணன் மனைவி என்பதால் அல்ல, தன் அப்பாவின் மருமகள் என்பதால் மட்டுமே.
“ருக்குக்கா, ஆயிரம் இருந்தாலும் அவர் என் புருஷன். நான் என்ன வேண்ணா பேசுவேன். அதுக்காக நீ பேசக்கூடாது. நீ உள்ள போ நான் பேசிக்கிறேன்.” ஊர்மி சொல்ல, ருக்குவுக்கு கோபமெல்லாம் இல்லை. தெய்வாவை ஊர்மி பேசினால் தானும் இப்படித்தான் செய்வோம் என்பது புரிந்தது அவளுக்கு.
“இல்லடி இப்ப தான் நம்ம வீட்டில் ஒரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு. இதுக்கு அப்புறமும் இவரை நம்பி நான் உன்னைத் தனியே அனுப்ப முடியாது. எதுவா இருந்தாலும் இங்கேயே எங்க எல்லோர் கண்ணு முன்னாடியும், பேசிட்டுப் போகச் சொல்லு.” தங்கையின் குழந்தைகளுக்காக குழந்தையைப் போல் அடம்பிடித்தாள் ருக்குமணி.
“அக்கா சின்ன விஷயத்தை இவ்வளவு பெருசுபடுத்தாத. அன்னைக்கு இவர் கோபப்பட்டாருன்னா, இன்னைக்கும் கோபப்படுவாரா என்ன. அதெல்லாம் நான் என்னை நல்லாவே பார்த்துக்கிறேன். நீ கொஞ்சம் உள்ள போ.” என்றவள் தமக்கை மறுபடித் தடுக்கும் முன்னர், நாகாவின் கரம் பிடித்து இழுத்து வந்து ஒரு அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றினாள்.
“என்னை வேண்டாம் னே முடிவு பண்ணிட்டியா டி?” தவறு செய்துவிட்டு தாயிடம் மன்னிப்புக் கேட்டு கெஞ்சும் குழந்தையின் மனநிலையில் இருந்தான் நாகா.
மனதார மன்னிப்புக் கேட்க கொஞ்சமாக அவனுள் ஒட்டிக்கொண்டிருந்த ஈகோவும், என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டாய் அல்லவா என்கிற பிடிவாதமும் அவனைத் தடுத்தது. ஆனால் மன்னிப்புக் கேட்டு அவளோடு உறவை நல்ல முறையில் வளர்த்துக்கொள்ள மனம் பேரவா கொண்டது.
“என்னை வேண்டாம் னு முடிவு பண்ணி தானே அன்னைக்கு என் கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளுனீங்க. கழுதை தொலைந்ததுன்னு சந்தோஷமா டைவேர்ஸ் நோட்டீஸில் கையெழுத்துப் போட வேண்டியது தானே.” ஊர்மி சொல்ல,
“என்னைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலையா நீ. ஏதோ கோபத்தில் அன்னைக்கு அப்படி நடந்து இருக்கலாம். அதுக்காக என்னை விட்டு ஒரேடியா போயிடலாம் னு எப்படி முடிவு பண்ணுவ. என்னை விட்டுட்டு இருந்திடுவியா நீ.
நீ என் பொண்டாட்டி, நான் உன் புருஷன். இந்த உறவு இவ்வளவு சீக்கிரத்தில், அதுவும் ஒரு பத்து பக்க காகிதத்தில் பிரிச்சிடக் கூடியதா என்ன?” கேட்டவனுக்கு தொண்டை கரகரப்பது போல் இருக்க, அவனை உற்றுக் கவனித்தாள் ஊர்மி.
“என்னால முடியலங்க. ஒரு சமயம் நல்லாப் பேசுறீங்க, ஒரு சமயம் கோபமாப் பேசுறீங்க, ஒரு சமயம் கொஞ்சுறீங்க, ஒரு சமயம் அடிக்கறீங்க. என்னால உங்களை புரிஞ்சுக்கவே முடியல. இந்த அழகில் நான் எப்படி உங்க கூட சந்தோஷமா வாழ முடியும். நாம ஒன்னா இருக்கிறது நம்ம இரண்டு பேருக்குமே கஷ்டம் தான். அதனால தான் இப்படி ஒரு முடிவு பண்ணேன்.” முயன்று பேசினாள்.
“என் மேல் முழு நம்பிக்கை வரும் வரை நாம வாழ வேண்டாம். நீ என்கூட இரு அது மட்டும் போதும்.” நாகா சொல்ல அவனையே கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தாளே தவிர பேசவில்லை.
அவள் அமைதியில் கோபம் கொண்டவனாக, “உன் மேல என்ன தான் கோபம் இருந்தாலும், நான் இப்ப வரைக்கும் விவாகரத்து பத்தி யோசிக்கவே இல்லை. ஆனா நீ என்னை விட்டுப் போகணும் னு முடிவே பண்ணிட்ட இல்ல. ஒன்னு தெரிஞ்சிக்கோ விவாகரத்துக்கு நீ மட்டும் ஒத்துகிட்டா பத்தாது. நானும் ஒத்துக்கணும். ஆனா என் உயிரே போனாலும் இந்தக் கொடுமைக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.” உறுதியாகச் சொன்னான்.
“ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க. என்னோட உங்களால சந்தோஷமா வாழ முடியாதுன்னா டிவோர்ஸ் கொடுத்துட்டு வேற யாராவது கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா இருக்கலாம் இல்ல?” வேண்டுமென்றே தான் சொன்னாள். அரசு மூலமாக கணவனின் மனம் அறிந்தாலும், அதை அவன் வாயால் கேட்க மனம் உந்தியது அவளை.
“புருஷன்கிட்ட இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றதுக்கு உனக்கு வேண்ணா அசிங்கமா இல்லாம இருக்கலாம். ஆனா பொண்டாட்டியைக் கண் முன்னாடி வைச்சுக்கிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க என்னால முடியாது.
நம்ம கல்யாணம் ஆன சில நாள்களுக்கு ஆயிரம் பேசி இருக்கலாம். ஆனா எப்ப உன்னோட நானும், என்னோட நீயும், ஒன்னா கலந்தோமோ அதுக்கப்புறம் என்னால மனசால கூட இன்னொரு பொண்ணை நினைச்சுப் பார்க்க முடியாது. என்னை நல்லாக் கவனிச்சு இருந்திருந்தா என்னோட மாற்றம் தெரிந்திருக்கும்.” நாகா உறுதியாக சொல்ல அந்த நொடி மனதில் வந்து போன குற்றாலச் சாரலை ஊர்மியால் மறக்கவே முடியவில்லை.
இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, “விவாகரத்துக்கு முடியாதுன்னு சொல்றதுக்கு இதெல்லாம் ஒரு காரணமா? தெரியாமக் கேட்கிறேன் ஊரு உலகத்தில் எல்லோரும் உங்களை மாதிரியா இருக்காங்க?”
“வேறு எந்த வெண்ணைங்களைப் பத்தியும் எனக்குக் கவலை கிடையாது. நான் இப்படித் தான். இந்த ஜென்மத்துல என் பொண்டாட்டி நீ மட்டும் தான். உன்னைத் தவிர வேறு யார் மேலும் என்னோட நிழல் கூட நான் பட விடமாட்டேன்.” என்றவன் மனைவி தன்னை உற்று நோக்குகிறாள் என்பது புரியவும்,
“ஒரு ஆம்பளையை வளர்வதற்கு முன்னாடி எத்தனை பேர் வேண்ணாலும் துணியில்லாமப் பார்த்திருக்கலாம். ஆனா ஒரு வயசுக்கு மேல எந்த ஒரு ஆம்பிளையும் ஒரு பொண்ணு முன்னாடி அப்படி நிற்க மாட்டான், கட்டின பொண்டாட்டியைத் தவிர. கற்பு பொண்ணுங்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் இருக்கு.
நீ மட்டும் உன் கற்ப என்கிட்ட இழக்கல, நானும் என்னோட கற்ப உன் கிட்ட தான் முதல்ல பறிகொடுத்திருக்கேன். அடிச்சுக்கிறோமோ, கடிச்சுக்கிறோமோ, கொஞ்சிக்கிறோமோ இல்லை ஒருத்தரை ஒருத்தர் கொன்னுக்கிறோமோ இனி நமக்கு நாம மட்டும் தான்.
நான் சாகுற வரைக்கும் எனக்கு எல்லாமா நீ மட்டும் தான் இருக்கணும், இருப்ப, இருக்க வைப்பேன்.” அழுத்தம் திருத்தமாகச் சொன்னவனை, இவ்வளவு நேரம் நல்லாத் தானே டா இருந்த என்பது போல் பார்த்த வைத்தாள் அவள்.
“நீ என் வீட்டுக்கு என்னோட வாழ வந்தா மட்டும் தான் உன் அக்கா, தங்கச்சிங்க என் அண்ணன், தம்பிங்களோட வாழ வருவாங்க. நீ நினைக்கிற மாதிரி அவ்வளவு சீக்கிரத்தில் நான் விவாகரத்துக்கு ஒத்துக்க மாட்டேன்.
எனக்கு நீ வேணும், என் பொண்டாட்டியா என் பக்கத்துல எப்பவுமே நீ இருக்கணும். பிடிச்சு இருக்கியோ பிடிக்காம இருக்கியோ. ஆனா என் பக்கத்தில் நீ இருந்தாகணும்.” உறுதியாய் சொன்னான் நாகா.
“நீங்க சொல்றதோட அர்த்தம் என்னன்னு உங்களுக்குப் புரியுதா இல்லையா?” முளைத்து விட்ட கோபத்தில் கேட்டாள் ஊர்மி.
“ஏன் புரியல, ரொம்ப நல்லாப் புரியுது. உன்மேல் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்துறேன். உன் விருப்பத்துக்கு மாறா உன்னை என் வீட்டுக்கு கவர்ந்துட்டுப் போக நினைக்கிறேன்.” என்றவன் அவள் முறைப்பைப் பார்த்து, “உனக்குத் தகுந்த மரியாதையும், மதிப்பும் நான் கொடுத்து தான் வைச்சு இருந்தேன். ஆனா நீ தான் அதைக் கெடுத்துக்கிட்ட.” என்றான்.
“ஏது நீங்க என்னை மரியாதையோட நடத்துனீங்களா? ஊர் உலகத்தில் போய் பாருங்க, ஒவ்வொரு புருஷனும் பொண்டாட்டியை எவ்வளவு மரியாதையோட நடத்துறாங்கன்னு.”
“எவனைப் பத்தியும் எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்த வரைக்கும், நீ தான் என் பொண்டாட்டின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் நான் உன்னை மரியாதையோட தான் நடத்தினேன்.
அதுக்கு முன்னாடின்னு கேட்காதே, அப்ப நடந்ததுக்கு எல்லாம் உன்கிட்ட மனசார மன்னிப்புக்கேட்டேன். நீயும் ஏத்துக்கிட்ட. அப்புறம் தான் நம்ம வாழ்க்கை ஆரம்பிச்சது. ஆனா நீ என்னை மன்னிக்கவே இல்லல்ல. தாம்பத்தியத்தை பிச்சையாப் போட்டு என்னை அசிங்கப்படுத்திட்டு, கூடவே பணத்தையும் போட்டு என்னை அவமானப்படுத்திட்ட.” என்றான்.
“என்னோட தன்மானத்தைக் காப்பாத்த நான் செய்தது உங்களை அவமானப்படுத்துற மாதிரி உங்களுக்குத் தோணுச்சுன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்”
“அப்ப நீ பண்ணது தப்புன்னு கடைசிவரைக்கும் ஒத்துக்க மாட்ட அப்படித்தானே”
“நான் பண்ணது உங்களுக்குத் தப்பா தெரியலாம், ஆனா எனக்கு அது தப்பா தெரியல.” என்றாள் ஊர்மி.
“அதே மாதிரி தான் நீ என்னை அசிங்கப்படுத்தும் போது, உன்னை நான் கஷ்டப்படுத்தினதும் எனக்குத் தப்பா தெரியல.” மனசாட்சியை அடகு வைத்துப் பேசினான் அவன்.
“இப்ப நீங்க கடைசியா என்னதான் சொல்ல வரீங்க”
“உங்க அக்கா, தங்கச்சிங்ககிட்ட என்ன சொல்லுவன்னு எனக்குத் தெரியாது. நான் இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வருவேன். நீ என் கூட நம்ம வீட்டுக்கு வர அவ்வளவு தான்.
நீ என்கிட்ட அதிகம் பேச வேண்டாம். என் கூட ஒன்னாப் படுக்க வேண்டாம். எனக்குத் தேவையான சின்னச் சின்ன வேலைகளை செஞ்சுக்கிட்டு, என் கூடவே இருந்திடு. நானும் உன்னை ரொம்ப தொந்தரவு பண்ண மாட்டேன்.
எப்படியும் நீ என் பக்கத்துல இருந்தா அதுவே எனக்குப் போதும். கடைசி வரைக்கும் இப்படியே வாழ்ந்தால் கூட எனக்குப் போதும்.” என்றவனின் கண்களைப் பார்த்த ஊர்மிக்கு என்னவோ போல் இருந்தது. அவன் வாய் ஒன்று சொன்னாலும் கண்கள் வேறு சொல்வது போல் தோன்றியது.
இருந்தாலும் சமாளித்தபடி, “வர முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவீங்களாம்.” புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“வெரி சிம்பிள், உனக்கு டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன். உன்னோட அக்கா, தங்கச்சிங்களை என் வீட்டுக்கு வந்து வாழ விடமாட்டேன். நானே வாழாத போது மத்தவங்களைப் பத்தி எதுக்காக நான் யோசிக்கணும். நான் சொல்ல வந்தது எல்லாத்தையும் தெளிவாச் சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்.” என்றுவிட்டு சென்றுவிட்டான் நாகா.
“ஊர்மி உன் புருஷன் கிளம்பிட்டாரு போல.” வீட்டின் நிசப்சத்தை உணர்ந்து அறையில் இருந்து வெளியே வந்த லீலா விசாரித்தாள்.
உள்ளே சென்ற குரலில் ஆம் என்றாள் ஊர்மி. “என்ன சொன்னாரு.” என்ன முயன்றும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை லீலாவால்.
“நாம எல்லாரும் இங்க வந்ததுக்குக் காரணம் அவர் தான்னு சொல்லி, மாமா உட்பட எல்லோருமா சேர்ந்து அவரை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க போல. ரொம்பப் புலம்பிட்டு போறாரு மனுஷன்.” பச்சையாகப் பொய் சொன்னாள்.
“ஏதோ கோவமா பேசின மாதிரி சத்தம் கேட்டுச்சு.” முதல் முறை போல் தங்கை சொல்வதை அப்படி நம்பி ஏமாறத் தயாராக இல்லை லீலா.
“நான் வீட்டை விட்டுப் போன்னு சொன்னா உடனே போயிடுவியான்னு கேட்டாரு. என் மேல் உனக்குப் பாசமே இல்ல அது இதுன்னு கேட்டுட்டு இருந்தார்.
என்ன இருந்தாலும் அவருக்கு என் மேல் அத்தனை பாசம் கா.” ஊர்மி நாகாவின் கண்களின் தவிப்பை நினைத்தபடியே சொல்ல, “அவ்வளவு பாசம் இருக்கிறவரு தான், அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி உன்னை அவமானப்படுத்தினாரா?” கோபமாகக் கேட்டாள் லீலா.
“அவருக்குப் பாசத்தை கூட கோவமாத் தான் அக்கா காட்டத் தெரியும். அவர் பெருசா நல்லவர் இல்ல தான். ஆனா வடிவேல் மாமாவுக்கு அப்புறம் என் மேல தான் ரொம்ப பாசம் வைச்சு இருக்காரு.
என் கழுத்தில் தாலி கட்டின வரைக்கும், உன்னை விட்டுட்டு இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தவர், எப்ப நாங்க எங்க வாழ்க்கை ஆரம்பிச்சோமோ இனி வேற ஒரு பொண்ணோட நிழலுக்கு கூட என்கிட்ட இடம் இல்லைன்னு சொல்றாருக்கா. எனக்கு அப்பவே என்னமா மாதிரி ஆகிடுச்சு.” ஊர்மி சிரித்துக்கொண்டே சொல்ல, “ஏய் என்னடி சொல்ற நிஜமாவா உனக்கு அவர் மேல இருந்த கோவம் எல்லாம் போயிடுச்சா?” ஆச்சர்யமாகக் கேட்டாள் லீலா.
கோபத்தை இழுத்துப்பிடித்துக்கொண்டே இருப்பதால் யாருக்கும் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஆனால் கோபம் குறையும் நேரம் என்பது ஒவ்வொருக்கும் வித்தியாசப்படும். ஊர்மியின் மனதைரியம், மற்றும் நாகாவின் மீது அவளுக்கு இருந்த அன்பு, அவள் மீது நாகாவுக்கு இருந்த பேரன்பு எல்லாம் சேர்த்து அவள் மனதை இளக்கி இருந்தது.
“ஒன்னு அவர் பண்ண தப்பை மறந்து மன்னிச்சு அவரை ஏத்துக்கணும். இல்லையா அவரை மொத்தமா ஒதுக்கி வைச்சிடணும். இரண்டும் இல்லாம நானும் கஷ்டப்பட்டு அவரையும் கஷ்டப்படுத்தி சுத்தி இருக்கிற எல்லோரையும் ஏன் கஷ்டப்படுத்தணும்.
அவர் மறுபடி அன்னைக்கு மாதிரி தப்பா நடந்துக்க மாட்டாருன்னு என்ன நிச்சயம் னு தானே கேட்கப் போறீங்க. அந்தக் கிருஷ்ணன் சிசுபாலனுக்குக் கொடுத்த வரம் மாதிரி என்னால் என் புருஷனோட நூறு தனித்தனி தவறுகளை மன்னிக்க முடியும். ஒரே தப்பை நூறு முறை செய்யுறவன் தான் திருந்த மாட்டான். சின்னச்சின்னத் தப்பா செய்யுறவர் மாறிடுவாருன்னு நம்பிக்கை இருக்கு.” அக்காவுக்குச் சொல்வது போல் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.
தன் அடாவடித்தனத்தையும், வாயாடித்தனத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆரம்பத்தில் சொன்ன அவனே தான், நான் மட்டுமே மனைவி என்று முடிவு செய்த பிறகு என்னை எனக்காக அப்படியே ஏற்றுக்கொள்ள முயற்சி செய்தான். நானும் அப்படியே அவரின் குணங்களோடு ஏற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என நினைத்தாள்.
அவன் தன்னைக் கட்டாயப்படுத்தி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறான் என்பது புரிந்தாலும் கூட, ஊர்மிக்கு அதுவும் உள்ளுக்குள் சந்தோஷமே.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
14
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அப்போ ராதா இல்லத்துக்கு பொண்ணுங்க கிளம்ப போறாங்களா … அங்க போய் மறுபடியும் பிரச்சனை வர போகுதோ … என்னமோ போங்க பா …