Loading

 

     தன் காதுகளில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்ப மறுத்த சிவகாமி அம்மா, மீண்டும் அதே கேள்வியை கேட்டார்.

   “எ… என்ன சொன்ன? நீ யாருன்னு சொன்ன?”

   “உங்களால நம்ப முடியலையா? ஆனா அது தான் நிஜம், உங்க பையனால ஏமாத்தப்பட்ட பொண்ணுங்கல்ல நானும் ஒருத்தின்னு சொல்றேன்?”

    அவ்வளவு தான் இவ்வளவு நேரமும் உடல்நிலை காரணமாக சாந்தமாக பேசிக் கொண்டிருந்தவர், தன் மகனின் குணத்தின் மீது யாரோ முன்பின் தெரியாத ஒருத்தி, சேற்றை அள்ளி வீசுவதை கேட்க முடியாமல், பொங்கி எழுந்து விட்டார்.

     “ஏய்…”

     அந்த ஒரு சத்தத்திலேயே நிலாவின் சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.

    “எங்க வந்து என்ன பேசிட்டு இருக்க?  என் பையனை யார்னு நினைச்ச நீ? அவனைப் பத்தி என்கிட்டயே தப்பு தப்பா சொல்லிட்டு இருக்க? பெத்தவ என் மனசு நோக கூடாதுன்னு பொண்ணு போட்டோவைக் கூட பாக்காம, இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டவன் என் பையன், பொண்ணுங்க கிட்ட எப்படி பழகணும்னு அவனுக்கு நான் கத்து கொடுத்திருக்கேன். அவனை பத்தி என்ன வார்த்தை சொல்லிட்ட?

     முதல்ல யார் நீ? என் பையனை பத்தின இந்த தப்பான புரளியை ஊருக்குள்ள பரப்பறதுக்கும், இந்த கல்யாணத்தை நிறுத்துறதுக்கும் இங்க யார் உன்னை அனுப்பி வைச்சது?”

    உதயநிலா ஒரு நிமிடம் நடுங்கித் தான் போனாள், இருந்தும் தனது பயத்தை வெளி காட்டாமல், முகத்தில் தைரியத்தை தேக்கி வைத்துக் கொண்டு,

    “இங்க பாருங்க ம்மா உங்க புள்ள உங்க கிட்ட வேணா ஒழுக்கசீளரா நடந்திருக்கலாம், ஆனா வெளிய இருக்கிற பொண்ணுங்க கிட்ட, அவர்  எப்படி நடந்துக்கிட்டார்னு, மத்தவங்க சொன்னா தானே உங்களுக்கு தெரியும்?

   என்னை காதலிக்கிறதா சொல்லி ரகசியமா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. தன் குடும்பத்தார் சம்மதத்தோட வந்து, என்னை அவரோட மனைவின்னு சொல்லி ஊரறிய மரியாதையோட  அழைச்சிட்டு போறதா, எனக்கு வாக்கு கொடுத்தார்.

   ஆனா இப்போ உங்க கம்பெனியில ஒரு பிரச்சனை வந்ததும், பணத்துக்காக அந்த பொண்ணை கட்டிக்க தயாராகிட்டாரு.

   நீங்களே சொல்லுங்க, இப்ப கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணோட அப்பா தானே, உங்க புது ப்ராஜெக்ட்டோட பாட்னர்.”

    இந்த விஷயம் சிவகாமிக்கு தெரியாது, இது மருதுபாண்டியும் அவரது தந்தை ஈஸ்வர பாண்டியரும் மட்டுமே அறிந்த உண்மை. பாண்டியன் குரூப் தற்போது ஒரு பெரிய ப்ராஜெக்ட்டை கையில் எடுத்துள்ளது. அதற்கு அதிக பணம் தேவைப்பட, தொழில் பங்குதாரராக ரிதன்யாவின் தந்தையை அறிமுகப்படுத்தினார் மருது பாண்டியின் நண்பர்.

    அந்த சந்திப்பின் போது குடும்பத்தை பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டனர், ரிதன்யாவின் தந்தை தனது பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருப்பதாக கூற, மருதுபாண்டிக்கு விஷ்வாவை இவருடைய பெண்ணுக்கு கட்டி வைத்தால், இதன் மூலம் இரட்டிப்பு லாபம் பெறலாம் என்று மூளையில் சிந்தனை தோன்றியது. அதை தனது தந்தையிடம் கூற அவருக்கும் விஷ்வாவிற்கு கிடைத்த நல்ல சம்பந்தமாகவே தெரிந்தது. அதனால் முதலில் கல்யாணத்தை முடித்துக் கொண்டு, பிறகு வீட்டில் இருப்பவர்களிடம் கூறி கொள்ளலாம் என்று கூறினார்.

   அதன்படி விஷ்வாவிற்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திருப்பதாக சிவகாமியிடம் கூறி, அவர் மூலமாக திருமணத்தை நிச்சயம் செய்திருந்தார் ஈஸ்வர பாண்டியன். அதனால் நிலா கூறியதை கேட்டு அதிர்ந்து போய் நின்ற சிவகாமியை பார்த்து,

   “ஓஓஓ…அப்போ இதுவே உங்களுக்கு தெரியாதா? இது தான் நீங்க உங்க பையனை புரிஞ்சு வைச்சிருக்கறதா? இல்ல இந்த விஷயம் எனக்கு எப்படி தெரியுமுன்னு யோசிக்கறீங்களா?

   புதுசா ஆரம்பிக்க போற ப்ராஜெக்ட்டுக்கு பைனான்ஸ் தேவைன்னு, என்கிட்ட உங்க பிள்ளை அடிக்கடி சொல்லிட்டு இருந்தாரு, ஆனா அதுக்காக அவர் தன்னையே அடமானம் வைப்பாருன்னு, நான் நினைச்சு கூட பார்க்கல.”

     “இல்ல இல்லை என் பையன் காசுக்காக ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு, அவ்ளோ கீழ்தரமானவன் கிடையாது, இதுக்கு மேலேயும் என் பிள்ளையை பத்தி, நீ ஒரு வார்த்தை தப்பா பேசினே அப்பறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்.”

    “நீங்க நீதி நியாயம்னு நேர்மையாய் இருக்கிறவங்கன்ற நம்பிக்கைல தான், உங்க புள்ள என்னை ஏமாத்திட்டதை சொல்லி, நியாயம் கேட்க வந்தேன். ஆனா நீங்க புள்ள பாசத்துல, கண்ணுக்கு முன்னாடி இருக்க எதையுமே நம்ப மாட்டேங்கறீங்க.

     இதோ என் கழுத்துல இருக்க இந்த சங்கிலியை, உங்க புள்ள தான் எங்க கல்யாணத்தப்போ அவரோட பரம்பரை சங்கிலின்னு சொல்லி, என் கழுத்துல   போட்டாரு. இதையாவது உங்க பையனோடது தான்னு நம்புவீங்களா? இல்ல இதுவும் பொய்னு சொல்லப் போறீங்களா?”
  
   அதை கையில் வாங்கி பார்த்த அடுத்த நிமிடம், சிவகாமியின் கைவிரல்கள் நடுங்கத் தொடங்கியது. அவரது முக மாற்றத்தை கண்டவளோ, இது தான் சரியான சந்தர்ப்பம் என்று,

   “வேணும்னா நீங்களே உங்க பிள்ளைக்கு போன் பண்ணி கேளுங்க? அவர் கழுத்துல உங்க பரம்பரைச் சங்கிலி இருக்கான்னு?”

    அவசரமாக தன் போனை தேடி எடுத்தவர், தன் மகனுக்கு அழைத்திருந்தார்.

   “அம்மா எங்க இருக்கீங்க? இன்னும் நீங்க வீட்ல இருந்து கிளம்பலையா?”

   “விஷ்வா நான் உனக்கு போட்ட அந்த பரம்பரைச் சங்கிலி இப்போ உன் கழுத்துல இல்லையா?”

    திடீரென்று தன் தாய்  இப்படி கேட்க திடுக்கிட்டவன், ஒருவேளை அவருக்கு விஷயம் தெரிந்து விட்டதோ என்று நினைத்து,

  “அம்மா…அது…காலையில நான் வரும் போது.”

    “நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு விஷ்வா, இப்போ உன் கழுத்துல அந்த பரம்பரை சங்கிலி இருக்கா, இல்லையா?”

     பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவனோ,

    “இல்லம்மா.”

   அடுத்த நிமிடமே சிவகாமியின் கைகளில் இருந்து நழுவிய போன் போலவே, தன் மகன் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும் துகள் துகளாக உடைந்து சிதறியது.

     வேரற்றக் கொடி போல, அங்கிருந்த நாற்காலியில் அவர் அப்படியே அமர்ந்து விட்டார்.

    மண்டபத்தில் விஷ்வாவோ, எதற்காக தன் அன்னை திடீர் என்று இவ்வாறு கேட்டு விட்டு, உடனே போனையும் வைத்து விட்டார் என்று தெரியாமல் பதறிக் கொண்டிருந்தான். அவனது பதட்டத்தைக் கண்டு அருகில் வந்த ராஜலட்சுமி, என்ன ஏது என்று விசாரித்தார்.

     அவன் நடந்தவைகளை கூற, உடனே தான் வீட்டுக்கு சென்று பார்த்து வருவதாக கூறியவர், அப்போதே அந்த மண்டபத்தில் இருந்து கிளம்பி விட்டார் ராஜலட்சுமி.

    சிவகாமியின் நிலையை பார்க்கும் போது, நிலாவிற்கும் பாவமாகத் தான் இருந்தது. இருந்தும் அவரது மகனின் உண்மையான சுயரூபம், அவருக்கு தெரிந்து தானே ஆக வேண்டும். ஒருவேளை இவர் கண்டித்தால் அவன் திருந்தவும் வாய்ப்பு இருக்கின்றது அல்லவா, அதோடு அவனால் பல பெண்களின் வாழ்க்கை சீர்குலையாமல் போகவும், நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதற்காகவே தனது மனதை கல்லாக்கி கொண்டவள்,

    “பேசிட்டீங்களா உங்க பிள்ளை கிட்ட? என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கு அடையாளமா உங்க பரம்பரை சங்கிலியையும் எனக்கு போட்டு விட்டுட்டு, இப்போ உங்க குடும்ப சூழ்நிலைக்காக, வேறொரு பொண்ணு கழுத்துல தாலி கட்ட தயாராகிட்டார் உங்க புள்ள?

   இதுக்கு மேலேயும் இந்த சங்கிலி எனக்கு வேண்டாம், நீங்களே வச்சுக்கோங்க. இப்படிப் பட்டவரோட  இனி வாழவும் நான் தயாரா இல்ல.  ஆனா எனக்கு ஒரே ஒரு ரிக்வெஸ்ட் இருக்கு.

   தயவு செஞ்சு உங்க பிள்ளையை இன்னொரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சு, அந்த பொண்ணோட வாழ்க்கையும் கெடுத்துறாதீங்க.

   எனக்கு தெரிஞ்சு அவர் ரெண்டு மூணு பொண்ணுங்க கூட பழகிட்டு இருக்கார். கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பொண்ணு கண்ணீர் வடிச்சா, அது உங்க வம்சத்தையே அடியோடு சாய்ச்சிடும். நான் கிளம்புறேன்.”

    அவளை நிற்கச் சொல்லக் கூட அவருக்கு மனதில் தெம்பு இல்லை, சிவகாமி அம்மா கண்கள் சொருக அப்படியே நாற்காலியில் பின்னால் சாய்ந்து விட்டார்.

   நிலாவும் அதற்கு மேல் அங்கு நிற்காமல், உடனே அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டாள்.

   இதற்கு மேல் எப்படியும் இந்த திருமணம் நடக்காது, ஒருவேளை சிவகாமி அம்மா நடந்தவைகளை பற்றி எதுவும் கூறாமல், இந்த திருமணத்தை நடத்த முயன்றாள், அடுத்து என்ன செய்து திருமணத்தை நிறுத்துவது என்ற சிந்தனையோடு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தாள் நிலா.

ராஜலட்சுமி வீட்டுக்குள் நுழையும் போது, சிவகாமி நாற்காலியில் கண்மூடியபடி சாய்ந்து அமர்ந்திருந்தார். அருகில் சென்று அவர் கைகளைப் பற்றியவர்,

“அக்கா என்ன ஆச்சு? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க? அங்க மண்டபத்துல நிச்சயத்துக்கான ஏற்பாடு நடந்திட்டு இருக்கு, வாங்க போவோம்.”

அவரிடம் இருந்து தனது கைகளை உருவிக் கொண்ட சிவகாமி,

“இந்தக் கல்யாணம் நடக்காது ராஜி? நடக்கவும் கூடாது?”

“ஐயோ என்ன சொல்றீங்க க்கா? எதுக்காக இப்படி அபசகுனமா பேசறீங்க? இது நம்ம புள்ள கல்யாணம்… நீங்க முதல்ல எழுந்து வாங்க, நாம மத்ததை எல்லாம், மண்டபத்துக்கு போய் பேசிக்கலாம். விஷ்வா உங்களை இன்னுமும் காணோம்னு பதட்டமாகி இருப்பான்.”

“ராஜி என் புள்ள மேல நான் நிறைய நம்பிக்கை வச்சிருந்தேன்,
அதை எல்லாம் அவன் ஒரு நிமிஷத்துல உடைச்சுட்டான்.

ஒரு பொண்ணு கூட கல்யாணம் பண்ணி வாழ்ந்துட்டு இருந்தவனை, எப்படி இன்னொரு பொண்ணோட கழுத்துல தாலி கட்ட வைக்கிறது?”

“என்ன சொல்றீங்க உங்க பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா?”

அறை வாசலில் நின்றபடி ரிதன்யாவின் தந்தை கேசவன் கிட்டத்தட்ட கத்தியே இருந்தார்.

மணமகனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு, அவரை பார்ப்பதற்காக மண்டபத்தில் இருந்து, தன் மனைவி விமலாவோடு வந்திருந்தார் கேசவன். அவரோட ஈஸ்வரபாண்டியனும் உடன் வந்திருந்தார்.

“முன்ன பின்ன தெரியாத ஊருன்னாலும், பெரிய பாரம்பரியமான குடும்பம், நல்ல பையன்னு நினைச்சு தான், எங்க ஒரே பொண்ணை இவ்வளவு தூரம் தள்ளி வந்து, இங்க கட்டிக்குடுக்க முடிவு செஞ்சோம். இப்படி எங்க முகத்துல கரியை பூசிட்டீங்களே?”

“விமலா நீ கொஞ்சம் சும்மா இரு. ஐயா நான் உங்க தொழில் பங்குதாரராக இருக்க தான் வந்தேன், ஆனா நீங்க தானே என் பொண்ணை கேட்டு வந்தீங்க. உங்க மேல இருந்த மரியாதைனாலையும், பையன் மேல இருந்தா நம்பிக்கையாலையும் தானே, என் பொண்ணை கொடுக்க முன் வந்தேன்.

இப்போ அவங்க அம்மாவே பிள்ளையைப் பத்தி, இப்படி தப்பு தப்பா சொல்லிட்டு இருக்காங்க. இனி நான் எந்த தைரியத்துல என் பொண்ணை உங்க பையனுக்கு கொடுக்கறது.”

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஆத்தீ எனக்கே படபடப்பா இருக்கு .. நிலா உன்னைலாம் என்ன பண்றது … இன்னும் என்ன நடக்க போகுதோ … விஷ்வா தான் பாவம் …

    அவங்க அம்மா மனசு எவ்ளோ கஷ்டப்படும் … விஷ்வா வை என்ன சொல்ல போறாங்களோ …