Loading

          திக்கு தெரியாமல் நெடுஞ்சாலைதனில் ஓடிக் கொண்டிருந்த நிரஞ்சனா, தூரத்தில் ஏதோ வாகனம் வரும் வெளிச்சப் புள்ளி தெரிய, அதை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

    வழியெங்கும் மரங்கள் சூழ்ந்த இருளின் நடுவே, குத்து மதிப்பாகதான், அந்த தார் சாலையில் ஓடிக் கொண்டிருந்தாள்.

   அதே ரோட்டில்தான் எதிர் திசையில், கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் அடங்கிய மினி டெம்போவினை, ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான், மதுவினால் கூகுள் என்று நாமகரணம் சூட்டப்பட்ட ராகுல்.

  கட்டுமான பொருட்கள் அடங்கிய மினி டெம்போவை, பத்திரமாக தமது கம்பெனியின் அருகே இருக்கும் குடோனில் நிறுத்தி விட்டுதான், ஆபீஸில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமது பைக்கை எடுத்துக் கொண்டு, இவனது இல்லம் செல்ல வேண்டும். இது அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான்.

   வண்டியை ஓட்டி கொண்டு வந்து கொண்டிருந்த ராகுலுக்கு, யாரோ ரோட்டில் ஓடி வருவது போல் தெரிந்தது.

  அருகே வரவர தான் அது ஒரு பெண் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

  வாகனத்தை கண்டவுடன் கைநீட்டி அதை நிறுத்த முயற்சி செய்தால் நிரஞ்சனா, அந்த முயற்சிக்கு பலனாக அதுவும் நின்றது.

   அதிலிருந்து இறங்கிய ராகுல், அவளின் தோற்றத்தை கண்டு அதிர்ந்து நின்றான்.

       இவ்வேளையில் உடையெங்கும் இரத்தப் புள்ளிகள் சூழ்ந்திருந்த அவளது தோற்றத்தை கண்டு, இந்த குளிர்கால இரவு நேரத்திலும் அவனுக்கு வியர்வை பூத்தது.

     “சார் சார் ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. இங்கிருந்து என்னை கூட்டிட்டு போங்க ப்ளீஸ். என்னை கடத்தி வச்சிருந்தவங்க, என்னை காணோம்னு துரத்திட்டு வந்தாலும் வந்துடுவாங்க.”

  ராகுலுக்கு அவளின் தோற்றம் வித்தியாசமாக பட்டாலும், அவள் வேதனையில் அழும்போது, அவனால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

         இந்த இரவு நேரத்தில் பணம் பறிப்பதற்காக, இவ்வாறு சிலர் நடிப்பதை அவன் கேள்விப்பட்டதுண்டு. சில சமயம் அவனும் கூட அதில் ஏமாந்து போனதும் உண்டு.

         பாவம் பார்த்து வண்டியை நிறுத்தியதனால் ஏற்பட்ட, பல வழிப்பறிகள் பற்றிய செய்திகள், ஏனோ இந்த சமயம் அவன் நினைவுக்கு வந்தது.

       இருந்தும் அவளின் முகத்தில் தெரிந்த பதட்டமும் கவலையும் இவனுக்கு உண்மை என்றே கூறியது.

“முதல்ல பதட்டப்படாம தெளிவா  என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.”

   நிரஞ்சனா அழுகையினூடே கூறத் தொடங்கினாள்.

  “யாரோ மந்திரவாதிங்க சிலர், என்னை கடத்திட்டு வந்துட்டாங்க. நான் எங்க இருக்கன்னு கூட எனக்கு தெரியல. என் ஃபேமிலி கிட்ட போகணும், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார்.”

பதட்டத்தோடு இவள் வந்த பாதையினை, திரும்பி திரும்பி பயத்தோடு பார்த்துக் கொண்டே, இவனிடம் பேச, ராகுலும் அவளை வண்டியினுள் ஏறுமாறு கூறினான்.

   அவளை வாகனத்தின் பின்பக்கத்தில், பொருட்களோடு பொருட்களாக ஏறி அமர்ந்து கொள்ள சொல்லி,  வெளியே தெரியாத வண்ணம் அவளின் மீது, ஒரு தார்பாயை போட்டு மூடினான்.

   “இந்தக் காட்டத் தாண்டுற வரைக்கும் இப்படியே இருங்க, வெளியே என்ன சத்தம் கேட்டாலும் சரி, வண்டி  நின்னாலும் இல்ல ஏதாவது பேச்சு குரல் கேட்டாலும் சரி, தயவு செய்து இந்த தார்பாயை விலக்கிப் பார்த்திடாதீங்க.”

ராகுல் டிரைவர் இருக்கையில் அமர்ந்து வண்டியினை கிளப்பி சிறிது தூரமே சென்றிருப்பான், அப்போது சில கட்டுமஸ்தான ஆட்கள் காட்டுப் பாதையில் இருந்து ரோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

  வந்தவர்கள் இவனது வண்டியை நிறுத்தி,

  “இந்த வழியா ஏதாவது ஒரு பொண்ணு போனதை பார்த்தியா?”

“கியா? தும் கியா பாத் கரேகோ, ஹமே ஹமே சமஜ்னையாத்தா?”

“என்னடா இவன் கியாமுயாங்கிறான் ஆள பாத்தா வெளியூர்க்காரன் மாதிரி இருக்கிறான், கண்டிப்பா அந்த பொண்ணு இவன் வண்டியில ஏறி இருக்காது. பின்னாடி எல்லாம் ஒரே கட்டிட பொருளுங்களா தான் கிடைக்குது. அது எங்கயாவது இந்த காட்டுக்குள்ள தான் ஒளிஞ்சிருக்கனும்.”

  “அதுதான் பாதிப்பேர் காட்டுக்குள்ள தேடிக்கிட்டு இருக்காங்களே, வா நாம அந்தப் பக்கம் போய் தேடி பார்க்கலாம்.”

  அவர்கள் இவன் வண்டியை தாண்டி மறுபக்கம் இருந்த காட்டினுள் தேட சென்றனர்.

  ராகுல் வண்டியை இயக்கி அங்கிருந்து நகரத் தொடங்கினான்.

  அங்கிருந்து ஒரு நாற்பது கிலோமீட்டர் தாண்டி தான் வண்டியை நிறுத்தினான்.

வண்டியின் பின்புறம் வந்து தார்ப்பாயை விளக்கியவன்,

“வெளிய வாங்க பயப்படாதீங்க, நாம அங்க இருந்து தூரமா வந்துட்டோம், இன்னும் கொஞ்சம் தூரத்துல பஸ் ஸ்டாண்ட் வந்துடும். உங்க பேரன்ட்ஸ் நம்பர் இருந்தா சொல்லுங்க நான் போன் பண்ணி தரேன்.”

   “அது எனக்கு நினைவுல இல்லயே, எல்லாரோட நம்பரும் என் போன்லதான் இருக்கு. நான் எதையும் மனப்பாடம் செஞ்சு வச்சுக்கல.”

  “என்னங்க இது, ஒருத்தரோட நம்பர் கூடவா உங்களுக்கு ஞாபகத்திற்கு வரல? எப்பவும் கையிலயே போனை வச்சுக்கிட்டு இருப்பீங்களோ?”

  தான் கூறியதைக் கேட்டு அவள் முகம் போன போக்கை பார்த்து, அதற்கு மேல் எதுவும் அவனால் கூற முடியவில்லை.

   “சரி இன்னும் கொஞ்ச தூரத்துல பஸ் ஸ்டாண்ட் வந்துடும், நான் உங்களை அங்க இறக்கி விட்டுடவா? இல்ல போலீஸ் ஸ்டேஷன்ல வேணா விட்டு விடவா?”

“வேண்டாம் எனக்கு யாரைப் பார்த்தாலுமே பயமாதான் இருக்கு, ப்ளீஸ் சார் என்னை நீங்களே என் வீட்டில் கொண்டு போய்  விட்டுடறீங்களா?”

    ராகுலுக்கும் அவளின் இக்கட்டான நிலமை புரிந்தது. ஆனாலும் தன்னிடம் உள்ள கட்டுமான பொருட்களை, உரிய இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டுமே, இதை இப்படியே வைத்துவிட்டு எவ்வாறு இவளுடன் செல்ல முடியும்.

       அத்தோடு அவள் இருக்கும் கோலத்தை முதலில் கலைக்க வேண்டும் என்று நினைத்தவன், அருகே சுற்றி முற்றி தேடினான்.

        அவன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்று தூரம் தள்ளி ஒரு கோயில் இருந்ததை கண்டான்.

     அங்குள்ள நீரால் முதலில் இவள்மேல் உள்ள  ரத்த துளிகளை அகற்ற வேண்டும் என்று முடிவு செய்து, அவளை அழைத்துக் கொண்டு அக்கோவிலை நோக்கி சென்றான்.

    கோவிலை நெருங்கும்போது ஏனோ நிரஞ்சனாவால் தெளிவாக நடக்க முடியவில்லை. அவள் மேல் உள்ள செய்வினை விளைவால், நிற்க முடியாமல் தள்ளாடத் தொடங்கினாள்.

   சரியாக கோயிலின் வாசற்படியை மிதிக்கும் போது மயங்கி சரியப் போனவளை, ஒரு கை கொண்டு ராகுல் பிடித்துக் கொண்டான். அவளின்   மற்றொரு புறத்தை கோவிலின் உள்ளிருந்து வந்த இன்னொரு கரம் தாங்கியது.

   ராகுல் நிமிர்ந்து பார்த்தபோது அங்கே மஞ்சள் பூசிய முகத்தோடு நெற்றி நிறைய குங்குமம் வைத்து, தெய்வம்சம் பொருந்திய ஒரு பெண்மணி, கோவிலின் உள்ளிருந்து நிரஞ்சனாவை ஒரு புறம் தாங்கிக் கொண்டிருந்தார்.

     “எவ்வளவு ஜென்மம் எடுத்து இவ தடம் புரண்டாலும், இவளை தாங்கி பிடிக்கிறதே உனக்கு வேலையா போச்சு இல்லையா? இப்பவாச்சும் இவ உன் கைய விட்டு போகாம பாத்துக்கோ.”

   ராகுல் அவரை புரியாமல் பார்க்க, அவர் புன்னகை சிந்தினார்.
  
“தவறி விழப் போறா பாருப்பா, கெட்டியா பிடிச்சுக்கோ”

     “நல்லா தான் பேசிட்டு வந்துட்டு இருந்தாங்க, என்ன ஆச்சுன்னு தெரியலம்மா.”
 
      “முதல்ல அவள தூக்கிட்டு கோவிலுக்குள்ள வாப்பா. அந்த மரத்தடியில் இருக்கிற பைப்கிட்ட அவ கையையும் காலையும் நல்லா அழுத்தி கழுவு. அவள பிடிச்சது நீரோட போகட்டும்.”

    அவர் சொன்னது போலவே செய்தவன், பிறகு நிரஞ்சனாவை கைகளில் தூக்கிக் கொண்டு கோவிலினுள் நுழைந்தான்.

  “இப்படி மண்டபத்துல அவள படுக்க வைப்பா, நான் இதோ வரேன்.”

    ராகுலும் அவர் கூறியபடியே கோவில் மண்டபத்தில் அவளைப் படுக்க வைத்தான். அவனுக்கு அவளை எங்கோ பார்த்தது போன்று நினைவு, தன் நினைவடக்குகளில் எவ்வளவு தேடியும், எவ்வளவு யோசித்தும் விடைதான் கிடைக்கவில்லை. அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவள் அருகே அமர்ந்து விட்டான்.

     “அவ தலையை எடுத்து உன் மடிமேல வச்சு, அந்த அம்மனை வேண்டிக்கிட்டு, இந்த தீர்த்தத்தை அவளுக்கு புகட்டுப்பா.”

  அவனும் அவர் கூறியது போலவே நிரஞ்சனாவிற்கு தீர்த்தத்தை புகட்டினான்.

   அவர் கண்களை மூடிக் வேண்டி கொண்டு, தன் கையில் இருந்த நீரை அவள் முகத்தினில் தெளிக்க, நிரஞ்சனாவின் இமைகளுக்குள் இருந்த கருவிழிகள் அசயத் தொடங்கியது.

  பின்பு சிறிது நேரத்திலேயே மெதுவாக நிரஞ்சனா தன் கண்களை திறந்தால். அவள் கண் திறந்ததும் முதலில் பார்த்தது, தன் தலையை மடிமீது தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்த ராகுலைத்தான்.

    பதறி எழ முயன்றவள், தன் உடலின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், மீண்டும் அவன் மடியையே தஞ்சம் அடைந்தால்.

   “என்னம்மா உடம்புல தெம்பு வந்ததும், உதறிட்டு போலாம்னு பாத்தியோ. எல்லா நேரமும் தாங்கி பிடிக்க தம்பி இருக்குமுன்னு தைரியமா? எப்பவும் அவசரம் கூடாது, நிதானமாவே துணையோடு எழுந்து நில்லும்மா

  முதல்ல இந்த சேலையை வாங்கிக்கோம்மா, அதோ அந்த மறைவுக்கு பின்னாடி போய் மாத்திக்கிட்டு வா போ.”

  அவள் புடவையை வாங்கிக் கொண்டு செல்ல, ராகுல் தனது அலைபேசியிலிருந்து ஓனரான வாசுதேவனுக்கு அழைத்தான்.

   அவரிடம் சுருக்கமாக நடந்தவைகளை கூறினான்.

   “நீ இருக்கிற இடத்தை எனக்கு லொகேஷன் அனுப்பு ராகுல், நான் உடனே என் வீட்டு டிரைவரை கார் எடுத்துட்டு அங்க அனுப்பி வைக்கிறேன்.

    அவன் கிட்ட வண்டியை கொடுத்துட்டு நீ அந்த பொண்ணை கூட்டிட்டு, அவங்க ஊர்ல கொண்டு போய் பத்திரமா இறக்கி விட்டுட்டு வா. பார்த்து பத்திரம், ஏதாவது பிரச்சனைனா உடனே எனக்கு கூப்பிடு.”

அவன் அவருக்கு நன்றி கூறி அழைப்பை துண்டித்து விட்டு, வாட்ஸ் அப்பில் அவன் இருந்த லொகேஷனை அவருக்கு அனுப்பி வைத்தான்.

   பிறகு அவனது தாய்க்கு அழைத்தான், எங்கே நடந்தவற்றை கூறினால் அவர் பயந்து விடுவாரோ என்று நினைத்து, வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகவும், அதனால் தனக்காக காத்திருக்காமல் உணவினை உண்டு விட்டு, நிம்மதியாக உறங்குமாறு கூறி அழைப்பை துண்டித்தான்.

நிரஞ்சனா தான் அணிந்திருந்த தாவணியை கலைந்து விட்டு, புடவை உடுத்தி வந்தாள்.

  “ரெண்டு பேரும் இப்படி அம்மன் முன்னாடி வந்து நின்னு, கெட்டது எதுவும் நெருங்க கூடாதுன்னு நல்லா மனதார வேண்டிக்கங்க.”

  அவர்களும் அவர் சொன்னது போலவே செய்தனர். அவர் அவர்கள் இருவரின் கைகளிலும் ஒரு தாயத்தினை கட்டினார்.

    “எந்த நேரத்திலும் இது உங்க கைய விட்டு, எப்பவும் நீங்க கூடாது. இது உங்க கையில இருக்கிற வரைக்கும், எந்த கெட்டதும் உங்க ரெண்டு பேரையும் நெருங்காது, நல்லபடியா ஊர் போய் சேருங்க.”

   திருநீற்றினை இருவரது நெற்றியிலும் வைத்து ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பி வைத்தார்.

   வாசுதேவன் ராகுலுக்கு அழைத்து தனது கார் டிரைவர் அங்கு வந்து விட்டதாக கூறினார். உடனே ராகுல் அங்கு சென்று, டிரைவரிடம் நன்றி கூறி டெம்போ சாவியை கொடுத்துவிட்டு, கார் சாவியை வாங்கி வந்தான்.

   பிறகு இருவரும் அம்மனை நன்றாக வேண்டிக்கொண்டு தமது பயணத்தினை தொடங்கினர்.

  நிரஞ்சனாவிடம் அவளது ஊர் பெயரினை கேட்டு அறிந்து கொண்ட ராகுல், தமது அலைபேசியில்  அங்கு செல்வதற்கான வழியினை மேப் மூலம் அறிந்து கொண்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

வழியில் நிரஞ்சனாவிற்கு உணவு வாங்கிக் கொடுக்கவும் அவன் மறக்கவில்லை.

   வேடந்தூரில் மாலையில் ஆரம்பித்த ஊர் மக்களின் பொதுக்கூட்டமானது, சச்சரவுகளினோடே இன்னும் நடந்து கொண்டிருந்தது.

    “அட நிறுத்துங்கப்பா இன்னும் எவ்வளவு நேரம் தான், இதே மாதிரி பேசிக்கிட்டு இருக்க போறீங்க. சாயந்திரம் ஆரம்பிச்ச கூட்டம் அர்த்த ராத்திரி ஆயிடும் போல இருக்கு, எப்ப தான்யா முடிப்பீங்க?”

“சுந்தரம் ஐயா இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்ல, அவரு வெளியூர் போயிருக்கிறதுனால தானே, இப்போ யோசிக்க வேண்டியதா இருக்கு.”

    “ஆமா பின்ன என்ன பண்றது, அவர் ஏதோ அவசரம்னு வெளியூர் போனவர் இன்னும் திரும்பல.”

    “நாளைக்கு வேற, குருந்த மரத்துக்கு அடியிலிருந்து மண் எடுக்க வேணும். ஏற்கனவே நாள் குறிச்சிட்டோமே, அதனால நீங்களே பாருங்கன்னு அவர் சொல்லிட்டாரு.”

    “அவர் ஹாஸ்பிடல்ல இருக்கிறதால இப்போதைக்கு அங்கிருந்து வர முடியாதாம். நம்ம வேலப்பன் ஐயா குடும்பத்திலயும் அந்த பொண்ணு ஓடிப் போனதால, எல்லாரும் சங்கடத்தில் இருக்காங்க, அவங்களும் யாரும் வர மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.”

    “அதுதான் ஐயாவே சொல்லிட்டாரே அதனால கண்டிப்பா நாளைக்கு, குருந்த மரத்துக்கு அடியிலிருந்து மண்ணெடுத்து, நம்ம குல தேவிக்கு சிலை செய்யப் போறோம், எல்லாருக்கும் இதுல சம்மதம் தானப்பா?”

  “அப்புறம் என்ன நாளைக்கு இங்க கோவில்ல வேலை முடிஞ்சதும், நேரா கொற்றவை கோயிலுக்கு போய், அங்க பார்த்துட்டு வந்துடலாம், என்னப்பா சொல்றீங்க? ஏற்கனவே அவங்க பாதை போடுற வேலையெல்லாம் முக்கால்வாசி முடிஞ்சிடுச்சு.”

    “நாம எல்லாரும் கோயில் வரைக்கும் போய், வேற என்ன தேவைப்படுதுன்னு ஒரு பார்வை பாத்துட்டு வந்துடுவோம் அப்பதான் திருவிழாவின் போது என்ன தேவைப்படும் என்கிறது தெரியும்.”

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சூப்பர் … நிரஞ்சனாவுக்கு கூகுள் இருக்கானா … எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தாங்க வருவானா ?? உனக்கு எதுக்குமா மன்னவன் … ஆமா வேந்தன் பிரச்சனை என்னாச்சு …

    1. Author

      நாளைக்கு வருவாங்க சிஸ்🙂