Loading

சக்கரை தழுவிய நொடியல்லவா!

அத்தியாயம் 18

நேற்று போல இன்றும் படுக்கையுடன் வெளியேறினான் சித்தார்த். இப்படியே விட்டால் சரிவர மாட்டானென நினைத்தவள், தனக்கும் ஒரு படுக்கையை எடுத்துக்கொண்டு கூடத்துக்கு வர, அங்கு ஏற்கனவே இளங்கோ படுத்திருந்தார். சிந்து ஆனந்தியுடன் அறையில் படுக்க, கூடத்தில் படுத்திருந்த இளங்கோவுக்கு அன்று மாலை அன்பு வந்து தன்னை சந்தித்த நினைவு தான்.

“என்ன மச்சான்.. சித்தார்த் இப்படி எல்லாம் பண்றான்?”

“அதான் அன்பு எனக்கும் புரியமாட்டுது. நல்லா இருந்த புள்ள இப்படி செய்றான். கேட்டா குண்டக்க மண்டக்க தான் பதில் சொல்றான். ஆனா மெய்யாலுமே அவன் மதுவ அடிச்சிருக்க மாட்டான், மது தான் தெரியாம இடிச்சிருக்கும். ஏன்னா அவன் நேத்து ஹால்ல தான் தூங்கினான். மதும்மா மட்டும் தான் ரூம்ல தூங்குச்சு”

“தனித்தனியா இருக்காங்களா?” என்றார் அதிர்வாக. அவருக்குப் பயம் பிடித்துக்கொண்டது. “எங்க மேல தான் கோபம், அதான் இப்படி இருக்கானு நினைச்சேன் ஆனா மதும்மாக்கிட்டயும் ஏன் தள்ளி இருக்கான். பிடிச்சு தான கட்டிக்கிட்டான். அப்போ மதும்மா மேலயும் கோபமா இருக்கானா? அவளயும் கஷ்டப்படுத்துறானா? வேற வழியில்லாம அவன நம்பி தான என் பொண்ண விட்டேன்” என நெஞ்சை நீவியபடி அங்கிருந்த இருக்கையில் அமர,

இளங்கோ “நீ பேஜாராகாத அன்பு. நான் அந்தாண்ட தான இருக்கேன் எம்மருவள நான் பத்திரமா பார்த்துக்கிறேன். இன்னைக்கு காலையில நாஸ்ட்டா கூட மதும்மாவ என்னோட சேர்த்தி துண்ண வச்சின்னு தான் வந்தேன். அவேன் காண்டாக்கிறான் சரியாகிடுவான். நீங்களும் கொஞ்சம் பொறுமையாருங்க” என நம்பிக்கை கொடுத்து அனுப்பிவைத்திருந்தார்.

இப்போது பார்க்க மதுவும், சித்தார்த்தும் ஆளுக்கொரு பாய், தலையணையுடன் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, இளங்கோ “இங்க பாரு சித்தார்த்து.. நாங்க வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல, வம்மா கட்டிக்கிட்டு வந்த பொண்ண நோவடிக்காத. ஒழுங்கா அந்தப் புள்ளையோட வாழுற வழியபாரு. உள்ளே போ” எனக்கூறி படுத்துவிட்டார். அறைக்குள் வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே நின்றனர்.

சித்தார்த் “நீ மேல படு.. நான் கீழ படுக்குறேன்”

“நானும் கீழ தான் படுப்பேன்”

“அப்போ நீ கீழ படு.. நான் மேல படுக்குறேன்”

“நானும் மேல தான் படுப்பேன்” எனக்கூற முறைத்தவன்,

“கொழுப்பு டி உனக்கு”

“கொழுப்புலாம் இன்னும் வரல.. இப்போதைக்கு சுகர் மட்டும் தான் இருக்கு. ஏதுக்கும் அடுத்த தடவை ஹாஸ்பிடல் போகும்போது கொலஸ்ட்ரால் செக் பண்றேன்”

“அதான என்னடா இரண்டு நாளா வாய திறக்கலயே.. ஒருவேலை திருந்திடுச்சோனு நினைச்சேன்.. நீ திருந்துற கேஸ் இல்ல” என்றவன் கட்டிலில் தலையணையை போட்டு நெற்றியில் கையை வைத்துப் படுத்தான்.

வேகமாக அவளும் கட்டிலில் அவனுக்கருகில் தலையணையை போட்டு அவனைப் பார்த்தபடி படுத்திருந்தாள். வெகுநாள் கனவல்லவா அவனுடனான வாழ்க்கை. அருகில் படுத்துக் குறுகுறுவென அவள் பார்ப்பது அவனுக்கும் தெரியும் ஆனால் அவள் மேலுள்ள கோபத்தில்,

“அந்தப் பக்கம் திரும்பிப் படுக்குறியா இல்ல நான் மாடிக்குப் போய்ப் படுக்கவா?” எனக் கடுப்பாகக் கத்தினான்.

“கத்தாத.. கத்தாத சித்தத்து” எனத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். என்னதான் அவனுடன் சரிக்கு சரி வாய் பேசினாலும், அவன் கோபத்தில் தள்ளி இருக்கும்போது வலிய சென்று பேசினாலும் மனதோரம் அவன் கோபமும், அந்தக் கோபத்தால் அவள் பெற்றவர்களையும், கூடப் பிறந்தவனையும் தள்ளி வைத்து, அவர்களை அவமானப்படுத்தியது அவள் மனதின் இரணவேதனையாகத் தான் இருந்தது.

ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவன் கோபத்தை தணிக்க வேண்டும் என நினைத்தாள். அவன் கோபம் தணிந்தாலே எல்லாமே சரியாகிவிடுமே! அவன் ஒன்றும் அவர்களின் எதிரியல்லவே! அதனால்தான் தான் என்ன அவமானப்பட்டாலும் பரவாயில்லையெனப் பொறுத்துக்கொண்டாள். அவளுக்கு அவன் கோபம் குறைய வேண்டும் அவ்வளவே!

அதையே நினைத்துக்கொண்டு படுத்தவள் மனதில் இன்று காலை அஸ்வந்த் வந்தது, ஆது வந்தது எல்லாம் ஓடியது ஆனால் இதை எல்லாம் தாண்டி அவளுக்குப் பெற்றவர்களைத் தேடியது. என்ன இருந்தாலும் பெற்றவர்களின் செல்லப்பிள்ளை அல்லவா அவள்? அன்புவையும், ஈகையையும் மனது வெகுவாகத் தேடியது.

சித்தார்த்திடம் கேட்கவும் முடியாது. அங்குச் செல்லமாட்டேன் எனக்கூறி தானே இந்த வீட்டிற்கு வந்தாள். அப்படியிருக்கும்போது அங்குச் செல்கிறேன் எனக் கேட்கவே முடியவில்லை அவளால். தாய்வீட்டு ஏக்கத்திலேயே கண்களில் கண்ணீர்வடிய எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை.

காயப்பட்டவளுக்கு ஏற்பட்ட வலியைவிட அதிகமாக வலித்தது காயப்படுத்தியவனுக்கு. மெல்ல அவளைத் திரும்பிப் பார்த்தான். தூக்கத்தில் திரும்பி அவனைப் பார்த்தவாறு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

“சாரிடி.. என்னால முடியல.. நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாற்றியத என்னால தாங்க முடியல.. நானே நினைச்சாலும் தடுக்க முடியாம வார்த்தை உன்னைக் காயப்படுத்துற போலத் தான் வருது. என்ன செய்யச் சொல்ற? இப்போ இப்படி வலிய வலிய வரீயே ஒரு தடவை.. ஒரே ஒரு தடவை என் கால் அட்டன் பண்ணி விஷயத்தைச் சொல்லிருக்கலாம்ல.

எங்கம்மா நம்ம கல்யாணம் நடந்திடக்கூடாதுனு என்கிட்டயே அவ்ளோ திருகுதாளம் பண்ணுச்சு. நான் குடிக்கிற பால்ல என்னமோ கலந்தத என் கண்ணால பார்த்தேனே! அப்போவே தெரியும் என் அம்மாவும், தங்கச்சியும் எந்த எல்லைக்கும் போய் நம்மள சேரவிடமாட்டங்கனு.

என்கிட்டயே இப்படினா உங்ககிட்ட என்னெல்லாம் வில்லத்தனம் பண்ணிச்சோ! ஆனா அதை மறச்சி நீங்கப் பண்ணினதும் பெரிய தப்பு தான. அவங்க என்ன பண்ணினாங்கனு என்கிட்ட சொல்லிருந்தா எல்லாத்தையும் நான் சரி பண்ணி நம்ம கல்யாணத்த நல்லபடியா நடத்திருந்துப்பேனே! இப்படி பண்ணீட்டிங்களே நீங்க அந்தக் கோபம் தான் மனசுல கிடந்து அறுக்குது.

எங்கம்மாவும், தங்கச்சியும் என்ன பண்ணினாங்கனு எனக்குத் தெரியுற அன்னைக்கு இருக்கு அவங்களுக்கு. நானும் உன்கிட்ட கோப படக்கூடாதுனு தான் நினைக்கிறேன் ஆனா என்ன அறியாம கோபம் வருது என்ன பண்ண நீயே சொல்லு?

நான் இங்க இருந்தா உன்னைக் காயப்படுத்திட்டே தான் இருப்பேன். உன்னை நல்ல இடத்துல செட்டில் பண்ணி வைச்சிட்டு நான் திரும்ப டிரைனிங் கிளம்புறேண்டி. காலம் எல்லாத்தையும் மாற்றும் திரும்பி வரும்போது உன்னோட சித்தத்துவா வர முயற்சி பண்றேன்” எனத் தூங்கிக் கொண்டிருந்தவள் நெற்றியில் முத்தத்தைப் பதித்து, அவள் காயத்தை தடவியபடியே உறக்கத்தைத் தழுவினான்.

மறுநாள் காலையில் எழுந்தவன் முதலில் பார்த்தது தன்னருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவன் தாராவைத் தான். கைகளால் கன்னத்தைத் தாங்கியபடி அவனைப் பார்த்தவாறே படுத்திருந்தாள். சிறிது நேரம் அவளையே பார்த்தவன் தலையை உலுப்பி எழுந்தான்.

“மாயக்காரி.. பார்த்தாலே வசியம் பண்ணிடுறா” என முணுமுணுத்துக் கொண்டே எழுந்து குளியலறைக்கு சென்றான். தண்ணீர் சத்தத்தில் விழிப்பு வர எழுந்து அமர்ந்தாள் மதுதாரா.

நேற்று முழுக்க நடந்த நிகழ்வின் காரணமாக அழுதபடி தூங்கியவளுக்கு காலை எழும்பும் போதே தலைவலியோடு தான் அன்றையபொழுது விடிந்தது. கைகளால் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தாள் அவன் பார்க்கும்போது.

‘என்ன செய்கிறது?’ எனக் கேட்கத் துடித்த மனதைக் கட்டுப்படுத்தியபடி அவளைப் பார்த்தவாறே வெளியே சென்றவன் திரும்பி வரும்போது கையில் காபியுடன் ஒரு மாத்திரையையும் கொண்டுவந்தான். அவன் வந்த நேரம் அவள் குளித்துக்கொண்டிருந்தாள்.

காபியை மேஜையில் வைத்து மூடி அங்கு மாத்திரையையும் வைத்து விட்டு வெளியே சென்றுவிட்டான். குளித்து முடித்து வந்தவள் பார்த்தது அவளுக்கான காபியையும், மாத்திரையையும். இதழினோரம் புன்னகையுடன் காபியைக் குடித்து மாத்திரையையும் போட்டு அதை வைக்க அடுப்படிக்கு சென்றாள்.

ஆனந்தி “மஹாராணிக்கு காபி கலக்க முடியாதோ? அத கூட நாந்தேன் செஞ்சு தரனுமோ? எம்புள்ளையவுட்டு என்னாண்ட வேலை வாங்குறயா? இனி உனக்குத் தேவைனா நீயே செஞ்சிக்கனும். நான் ஒன்னியும் உவ்வூட்டு வேலைக்காரி இல்ல” எனப் பாத்திரத்தை நங்கு நங்குனு போட்டார்.

இவள் காபி டம்ளரை கழுவ செல்ல அங்குப் பாத்திரத்தைக் குவித்து வைத்திருந்தாள் ஆனந்தி. ‘என்ன இவ்ளோ பாத்திரம் இருக்கு.. டம்ளர மட்டும் கழுவவா? இல்ல மொத்தத்தையும் கழுவனுமா?’ என யோசிக்க,

“இன்னா.. சொன்னாத்தே வேலை செய்யனுமோ? திங்கிற சோத்துக்கு அத்தியாவது செய். கீளீனா கழுவி வைக்கனும்”

“சரி அத்தை” எனக்கூறி அத்தனையும் கழுவி வைக்க, காலை வேலைக்கான சமையலை தானே முடித்தார் ஆனந்தி.

“இந்தாடி இத அல்லாத்தையும் எடுத்து அந்த டேபிள்ல வச்சிப்போட்டு, சித்தார்த்து மாடிக்குப் போனான் அவன போய்ச் சாப்பிட கூட்டியா”

“சரிங்க அத்தை” என அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு மாடிக்குச் செல்ல அவனோ காலையில் உடற்பயிற்சி செய்து முடித்து, சுவற்றில் கையை ஊண்டி வீட்டின் பின்புறத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவள் கொலுசுச் சத்தத்தை வைத்தே அவள் வருகிறாளெனத் தெரிந்தும் திரும்பாமல் நின்றிருந்தான்.

‘எவ்ளோ நாள் தான் நீ மூஞ்சை திருப்புவனு பார்க்குறேன். காலையில காபி, மாத்திரை எல்லாம் குடுக்க தெரியுது, ஆனா பாசமா ஒரு வார்த்தை பேசுறியா? இந்த மாத்திரை செய்ற வேலைய உன்னோட ஒத்த வார்த்தை செஞ்சிருக்கும். ஆனாலும் வெடிமுத்து ரொம்ப ஸ்ட்ரிட் பா’ என மனதில் நினைத்தபடி மெல்ல அவனை நோக்கி வந்தாள்.

“க்கூம்” எனச் சத்தம் கொடுக்க, அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. மெதுவாக அவள் கைகளை அவன் இடையை உரசியவாறு கொண்டு சென்று வயிற்றோடு இறுக்கி அணைத்து அவன் முதுகில் முகத்தைப் பதித்தாள்.

அவனுக்கோ அவளது அணைப்பை தடுப்பதற்கு மனமும் இல்லை, ஏற்பதற்கு அவன் கோபம் விடவும் இல்லை. கண்களை இறுக மூடி, சுவற்றை பிடித்திருந்த பிடியில் இறுக்கத்தைக் கூட்டினான்.

“நகரு” என அழுத்தமாகக் கூற, மெல்ல அவனிடமிருந்து விலகியவள், அவனைத் தன்னை நோக்கி வம்படியாகத் திருப்பினாள்.

அவனோ அவளை முறைக்க, அவன் கண்களைப் பார்த்தவாறே “ஐ லவ் யூ” என இத்தனை வருடக்காதலைக் கூறி இறுக அணைத்து அவன் நெஞ்சில் முத்தம் பதித்தாள். ஆனந்தத்தில் மூச்சடைத்தது அவனுக்கு.

இந்தத் தருணம் அவர்களின் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது. காதல் கொண்ட இரு உள்ளங்கள் தங்களின் அன்பை வார்த்தையால் பரிமாறுவது என்பது அவர்களின் வாழ்விலேயே ஒரு முக்கியமான நிகழ்வல்லவா!

அவன் நினைக்கவே இல்லை. அவள் இப்படி அதிரடியாகத் தன் காதலை தெரிவிப்பாளென. இந்த நொடி அவன் வாழ்வில் பொக்கிஷமான நொடியல்லவா? அதைத் தன் கோபத்தால் கெடுக்க மனம்வரவில்லை.

கைகள் தானாக அவளைத் தன்னுடன் இறுக்கி அணைத்தது. அவளுக்கு அவனிடமிருந்து பதில் தேவையே இல்லையே. அவனுடைய காதலின் ஆழம் தான் அவளுக்கே தெரியுமே. தன்னை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் அவளைக் கட்டிக் கொண்டு வந்ததே அவன் காதலினால் தானே! ஆனாலும் அவனது அந்த இறுக்கமே அவளுக்கான பதிலாகத் தான் இருந்தது.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. எவ்ளோ நாளைக்கு தான் நீ முறைச்சுட்டு நிக்கிற அப்படின்னு பார்க்கலாம் சித்தத்து …

    1. Author

      அதான எத்தனை நாளுக்கு முறைப்ப🤪

      மிக்க நன்றி😍

  2. தன் பெற்றோரை அலட்சியப்படுத்தியதில் கோவம் எழுந்தாலும், இப்போதைக்கு அவனது கோவத்தை குறைத்து இயல்பாக்குவதே முக்கியம் என்று எண்ணுகிறாள் மது.

    என் அம்மா செய்தது தவறு என்றால், அதனை என்னிடமிருந்து மறைத்து நீங்கள் செய்ததும் தவறுதான் என்ற எண்ணத்தினில் சித்தார்த்.

    அந்த வீட்டினில் யாரும் அவள் மேல் அக்கறை செலுத்த இல்லை என்று தெரிந்தும் கோவத்தில் விட்டேத்தியாக செயல்படுகிறான்.

    இதில் பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு செல்ல போகிறானா? உடல்நிலையை கருத்தில் கொண்டு செயல்பட்டால் நலம்.

    அவள் வீட்டினருடனும் விலக்கி வைத்தாயிற்று, தானும் கவனிக்காமல் விலகி செல்வது எந்த வகையில் நலம்?

  3. இவ்ளோ மனசுல வச்சிருக்கிறதை நேர்ல சொன்னாலே போதுமானது…‌மனசுல வச்சு அழுத்திட்டே இருக்கிறதால ஒரு பயனும் இல்லனு சித்தார்த்க்கு புரிய வைங்க ரைட்டர்ஜி… லவ்னா ஓவர் லவ்ஸ் கோபம்னா ஓவர் கோபம்….
    நல்லாயிருக்கே இவங்க கதை