
விடியும் முன்..!
அத்தியாயம் 12
மயானமொன்றின் நடுவே அமைந்திருந்த அந்த மண் பாதையைக் கண்டதும் அவன் விழிகளில் மெல்லிய அதிர்வு பரவ ஏனென்று தெரியாமல் இனம் புரியா ஒரு வித பயம் நெஞ்சில்.
இவ்வளவு நேரம் இருந்தா தார் வீதி நிறைவுற தொடங்கியிருந்த மண்பாதையே அவர்களின் பயண வழியாக.
தோழனின் திகைத்த முகத்தைக் கண்டு கிருஷ்ணாவும் எழுந்து வந்து மாயனம் என அறிந்தவின் மனதில் கலவர மேகங்கள் சூழ்ந்தன.
“கிராமத்துல தான் நல்ல எடவசதி இருக்கும்னு சொல்லுவாங்க..அப்றம் எதுக்குடா சுடுகாட்ல ரோடு போட்டு வச்சிருக்கீங்க..ஆத்தா மாரியாத்தா என்ன காப்பாத்து..” சத்தமாக புலம்பியவனின் வார்த்தைகள் செவியை அடைந்தாலும் எதிர்வினை இல்லை,சத்யாவிடம் இருந்து.
“தம்பி..எவளோ தூரம் இந்த வழில போகனும்னு தெரியுமா..?” என்ற சாரதியின் கேள்விக்கு திடுக்கிட்டு கலைந்தவனுக்கு பதில் தெரியாதே.
“ஒரு நிமிஷம்ணா..கேட்டு சொல்றேன்..” என்று விட்டு தோழனுக்கு அழைப்பெடுத்து தெளிவு படுத்திக் கொண்டான்.
“அண்ணா..இது கொஞ்சம் பெரிய சுடுகாடு தானாம்..ஒரு கா கிலோமீற்றர் இருக்குமாம்..”என்கவே கிருஷ்ணாவுக்கு நிம்மதி.
“அண்ணா..எவ்ளோ நேரம் ஆகும்னா..?” பதட்டம் நிறைந்த குரலில் கேட்டது,அவனையன்றி வேறு யாராக இருந்திட முடியும்..?
“அஞ்சாறு நிமிஷம் எடுக்கும் தம்பி..”
“அஞ்சு நிமிஷமா..”
“ஆமா தம்பி..மண் ரோடுல..வெளியா பாருங்க..குழியா நெறஞ்சு இருக்கு..மெதுவா தான் போனும்..” என்று விட்டு பேரூந்தை துவக்க தன்னிடத்துக்கு வந்தமர்ந்த இருவரின் மனநிலைகளும் வேறு வேறாய் இருந்தது.
ஆட்டம் பாட்டம் என லயித்திருந்தவர்களுக்கு பேரூந்து நின்று ஓரிரு நிமிடத்துக்குள் கிளம்பியிருக்க நடந்த விடயங்கள் பெரிதாய் கவனத்தில் பதியவில்லை.
சத்யாவுக்கும் தேவையிவ்லாமல் சொல்லி ஏன் குழப்பிட வேண்டும் என்கின்ற எண்ணம்.கிருஷ்ணாவையும் அடக்கி வைத்து அவனுமே வாய் திறக்கவில்லை என்றாலும் மனதுக்குள் பலவித யோசனைகள்.
பேரூந்து அந்த பாதை வழியே நகர்ந்து கொண்டிருந்தாலும் அடிக்கடி குழியில் இறங்கி ஏறியதால் அத்தனை குலுக்கல்.
கொஞ்ச தூரம் நகரும் போதோ மாயனமொன்றின் ஊடு வண்டி செல்வது உள்ளிருந்தவர்களுக்கு புரிய சிலர் பயப்படவில்லை.சிலர் பயந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
இன்னும் சிலரோ பயத்தின் உச்சியில் கடவுளின் பெயர்களை ஜெபம் போல் உச்சரித்துக் கொண்டு வர அதில் அதிக சத்தமாய் இருந்தது,கிருஷ்ணாவின் குரல் தான்.
கம்பியை இறுகப் பற்றிக் கொண்டு யன்னல் புறமல்லாத தன் புறம் திரும்பி கண்களை இறுகப் பொத்தி பயபக்தியுடன் கடவுளின் பெயர்களை உச்சிரித்து வந்தவனின் முகபாவத்தை கண்டு சிரிப்பு பீறிட்டாலும் அதை அடக்கிழ சத்யாவின் இதழ்களில் மெல்லிய முறுவல்.
பாதி தூரம் பேரூந்து நகர்ந்திருக்கும்.திடீரென்று புழுதிக் காற்றொன்று வீச அதிவேகமாய் அடைக்கப்பட்டது,யன்னல்கள்.
ஆங்காங்கே தூரத்தில் நின்றிருந்த பெரிய மரங்கள் அசைந்தாடுவது கண்ணாடிகளின் ஊடு தெரிய இருந்த யாவருக்குமே அது வித்தியாசமாய்த் தான் தோன்றிற்று.
சூரிய வெளிச்சம் சற்றே மங்க புழுதிக் காற்று புயலென சுழற்றி அடிக்க சடுதியாய் நின்றது,வண்டி.
“என்னாச்சுன்னா..எதுக்கு வண்டிய நிறுத்துனீங்க..?”
“நா நிறுத்தல்ல தம்பி..காலைல கூட வண்டி கண்டிஷன் எல்லாம் செக் பண்ணித்தான் வண்டிய எடுத்ததே..இப்போ ஏன் மக்கர் பண்ணுதுன்னு தெரியல..கொஞ்சம் பொறுங்க..காத்து கொறஞ்சதும் எறங்கி பாத்துர்லாம்..”
“ம்ம்..சரிண்ணா..”
உள்ளிருந்தவர்களுக்கு சற்றே பயம் பிறப்பெடுக்க இவர்களின் சம்பாஷணையைக் கேட்டும் இன்னுமே சலசலப்பு அதிகமானது.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த தர்ஷினிக்கோ பயத்தில் விழிகள் கலங்கியிருக்க விட்டால் அழுது விடுவாள் போல் அவள் நிலை.
தவறியேனும் பேய்க்கதை சொன்னாலே அன்றிரவு முழுக்க விட்டத்தை பார்த்த படி விழித்திருக்கும் ரகம் அவள்.இதில் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பயப்படாமல் இருப்பாளா என்ன..?
சத்யாவுக்கு தான் எதுவும் செய்து கொள்ள இயலாத நிலை.கீழே இறங்கிப் பார்ப்பதற்கும் புழுதிக் காற்று ஓய வேண்டுமே..?
பத்து நிமிடங்களை மொத்தமாய் மென்று முழுங்கிய பின்னரே ஓய்வடைந்து காணாமல் போனது,புழுதிக்காற்று.
சாரதியும் நடத்துனரும் இறங்கி வண்டியை சரி பார்க்க கோளாறு பிடிபடவில்லை.சிறிது நேர தாமதத்தை உணர்ந்து சத்யாவும் இறங்கிப் பார்க்க அவர்களின் தத்தளிப்பு அவனுக்கும் புரியத்தான் செய்தது.
“தம்பீ..நீங்க பேசனீங்கல்ல உங்க ப்ரெண்ட் அவர் கிட்ட சொல்லி தெரிஞ்ச மெகானிக் யாராவது இருந்தா கூட்டிட்டு வர சொல்றீங்களா..? மெகானிக் வந்து பாத்தா தான் வண்டி ஓடும் போல இருக்கு…”
“சரிண்ண இருங்க..” என்றபடி விலகி நடந்தவனுக்கும் எல்லாவற்றுக்கும் தோழனை அழைப்பது சங்கடம் என்றாலும் வேறு வழி இல்லையே.
அழைப்பெடுக்க அடுத்த கணமே ஏற்றிருந்தான்,இளஞ்செழியன்.
“ஹலோ சொல்லு சத்யா..ஏதாச்சும் ப்ராப்ளமா..?”
“ஆமாடா..நாங்க இப்போ அந்த சுடுகாட்டுக்கு பக்கத்துல இருக்கோம்..வண்டி ரிப்பேர் ஆயிருச்சு..தெரிஞ்ச மெகானிக் யாராயாச்சும் அனுப்பி விட்றியா..?”
“சரி சரி மச்சான்..நா மெகானிக்க கூட்டு வர்ரேன்..எப்டியும் இன்னும் ஒரு அர மணி நேரம் ஆகும்..கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..”
“சரி சரி டா…” என்றவாறு அழைப்பை துண்டித்தாலும் எதிர் முனையில் இருந்த செழியனுக்கு தான் அந்த சுடுகாட்டின் நடுவில் நிற்பதை எண்ணி மனம் படபடத்தது.
நிலவரத்தைச் சொல்லி தோழன் மனதில் கலவரத்தை உண்டு பண்ணவும் அவன் விரும்பவில்லை.வேகமாக தன் புல்லட்டை கிளப்பிக் கொண்டு சென்றான்,சத்யாவின் தோழன்.
அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்கின்ற விடயத்தை சொல்ல வந்தவர்களில் பலரின் முகத்தில் பீதி இழையோடினாலும் ஒரு சிலர் ஆர்வமாய் கீழிறங்குவது புரிய சத்யாவும் அதை தடுக்கவில்லை.
நகன்கைந்து பேர் அவனிடம் வந்து சற்று காலாற நடந்து விட்டு வருவதாக கூற அமானுஷ்யம் மேல் நம்பிக்கை இல்லாதவனுக்கு மறுக்க காரணம் இல்லையே.
சரியென்று தலையசைத்து விட்டு மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டி சுற்றும் முற்றும் பார்த்தபடி அவனிருக்க சில நிமிடங்கள் கடந்திருக்கும்.
எதையோ பார்த்து விட்டு கத்திக் கொண்டு ஓடி வந்தது என்னவோ அவனிடம் அனுமதி கேட்ட நடை பயலிச் சென்றவர்களே.
●●●●●●●
நேரம் பதினொரு மணி நாற்பத்தைந்து நிமிடம்.
அந்த சொகுசு அறையில் விழி மூடி உறக்கத்தில் இருந்தான்,ஆகாஷ்.
சகா கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே கிளம்பியிருக்க ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்திருந்த பெண்கள் இருவருக்கும் அத்தனை பயமாய் இருந்தது.
“எனக்குன்னா ரொம்ப பயமா இருக்கு மகி..டாக்டர் வேற இங்க கூட்டி வந்து பூட்டிட்டு அவர் பாட்டுக்கு கெளம்பிட்டாரு..வீட்ல கூட சொல்லல..எனக்கு ரொம்ப நர்வஸா இருக்கு..”
“எனக்கு என்னமோ டாக்டர் தப்பு பண்றாருன்னு தோணுது தென்றல்..” என்றவளின் குரல் கிசுகிசுப்பாய் வர பார்வையோ யன்னல் புறம் சென்று அலசியது.
“ஏன் என்னடி சொல்ற..?”
“ஆமா தென்றல்..இன்னிக்கி காலைல செத்தாரே..அவருக்கு டாக்டர் ஏதோ ஊசி போட்டாரு..அப்றம் தான் அவருக்கு மூச்சு நின்னு போனதே..அதுவர உசுரோட தான் இருந்துச்சு மனுஷன்..அதான் பயமா இருக்கு..”
“எதே..? என்னடி சொல்ற..? நீ எப்போ பாத்தா இந்த விஷயத்த..?”
“இன்னிக்கி காலைல டாக்டர் எல்லாரயும் வெளிய போக சொல்லி இருந்தாருல்ல..அந்த நேரம் நா உள்ளத் தான் இருந்தேன்..அவரு என்ன பாத்துட்டாரு..இதப்பத்தி அந்த ஆகாஷ் கிட்ட சொன்னா மாதுரிய கொன்னுருவேன்னு மெரட்டுனாரு..அதான் நானும் பேசாம இருந்துட்டேன்..”
“ஏய் என்னடி சொல்ற..? இது எப்போ நடந்துச்சு..? ஒன்னுமே சொல்லல நீ..”
“என்னன்னு சொல்றது டி..எனக்கு இப்ப கூட பயமா இருக்கு..ஆனா மனசுல வச்சிக்கவும் முடியல..அந்த ஆகாஷ்கும் ஏதோ ஊசி போட்டு அவரு தான் தூங்க வச்சாரு..ரொம்ப தப்பு பண்றாரு..”
தென்றலால் இன்னுமே மகிழினி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.பாரபட்சமின்றி பழகும் அவனின் குணத்தின் மீது அவளுக்கு தனி ஈர்ப்பு உள்ளதே.
“ஆனா என்னால நம்ப முடியல டி..உனக்கே தெரியும் அவர் மேல எனக்கு சின்ன அட்ராக்ஷன் இருக்குன்னு..சட்டுன்னு நம்ப முடியல..” தோழியின் கலவர முகத்தை கண்டாலும் மனதை மறையாமல் கூறினாள்,தென்றல்.
“உனக்கு பைத்தியம்..மகாபாரதத்துல வர்ர பஞ்ச பாண்டவங்க பேருல யாரு வந்தாலும் நீ அட்ராக்ட் ஆகித் தொலயுற..செம்ம கடுப்பாகுது எனக்கு..? அப்டியேஏஏஏஏஏ..” என்றவளின் பேச்சு பாதியில் நின்றது,செவிப்பறையில் வந்து மோதிய காலடிச் சத்தத்தில்.
●●●●●●●
ஒவ்வொரு இடமாய் தேடி களைத்துப் போய் விட்டிருந்தான்,வீரய்யா.
இருந்த ஆட்களை எல்லாம் அனுப்பி சுற்றும் முற்றும் எல்லாம் தேடியதாயிற்று.
இன்னும் ஒரு இடத்தில் இருந்து கூட சரியான தகவல் வந்து சேரவில்லையே.
அவனின் பதட்ட முகத்தைப் பார்த்த பாண்டிக்கும் நடந்து முடிந்த விடயத்தின் தீவிரம் புரிய அவனுக்குள் இருந்த பயம் இன்னும் அதிகமானது தான் மிச்சம்.
அலைபேசியை தலையில் தட்டிய படி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவனிடம் ஏதோ சொல்லத் தோன்றினாலும் திட்டி விடுவான் என்கின்ற பயத்தில் நாவைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்த பாண்டிக்கு அதற்கு மேலும் பொறுமை காக்க இயலவில்லை.
“அண்ணே..வேணுன்னா ஒரு ஐடியா சொல்லட்டுமா..?”
“என்னடா சொல்லித் தொல..” அத்தனை கடுப்பு அவனின் குரலில்.
“அண்ணே நம்மள தவிர அவனுக்கு வேற யாராச்சும் எதிரிங்க இங்க இருந்தாங்கன்னா அவங்க கடத்தி இருக்கலாம்ல..”
“டேய் அவன் இந்த ஊரே கெடயாது..அவன் சொந்த ஊரு ஏதோ ஒரு தூரத்துல இருக்குற அடிமட்ட கிராமம்..அவனுக்கு எப்டிடா இங்க எதிரிங்க இருக்கப் போறாங்க..வெண்ண..” நாக்கை மடித்து திட்டியவனின் செயல் தானாகவே தாழ்ந்தது,பாண்டியின் சிரசு.
அதே நேரம்,
அலைபேசியை வெறித்துக் கொண்டிருந்த பரமுவுக்கு உள்ளுக்குள் அத்தனை பபடபடப்பாய் இருந்தாலும் சேதுவின் வார்த்தைகளுக்காக வேண்டி இயல்பாய் இருப்பதாக காட்டிக்கொள்ள அது சேதுவுக்கும் புரிந்தது.
“மாப்ள..இந்த பயலுக்கும் அண்ணனுக்கும் எப்டி சண்ட வந்துச்சு..எதுக்கு அவரு இவன தூக்க சொன்னாரு..?” இயல்பாக்கும் பொருட்டு கேட்ட பரமுவிற்கு சிறு புன்னகையே சேதுவின் பதிலாய்.
“சொல்லு மாப்ள..”
“நம்ம அண்ணன் சரக்கு கடத்துறதா சொன்னார்ல..அத ஒரு தடவ மீடியா கிட்ட காட்டிக் கொடுத்தது இவன் தான்..அண்ணன் ரெண்டு மாசம் ஜெயில்ல கூட இருந்தாரு..அவரு பொண்டாட்டி கூட விட்டுட்டுப் போனாங்கல்ல..அந்தக் கோபம் தான்..இவன கடத்தி கைகால ஒடக்கனும்னு..”என்றவரின் குரல் இறுதியில் நடுங்கிற்று.
திடுமென கேட்ட சத்தத்தில் சற்று நகர்ந்து வந்து வெளியே எட்டிப் பார்த்தான்,பரமு.
கீழே காக்கி உடையில் இருவர் சுற்றும் பார்த்தபடி நின்று கொண்டிருக்க இதயம் நின்று துடித்தது.
●●●●●●●●
நேசம் என்ற வார்த்தைக்குள் காதல் எப்போதும் உள்ளடங்குவதில்லை.
ஆனால்,காதல் என்ற வார்த்தைக்குள் நேசம் எப்போதும் உள்ளடங்கியிருக்கும்.
அவளுக்கு ஆரம்பத்தில் இருந்த அவனின் மீதான உணர்வை நேசம் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியா விடினும் அந்த உணர்வு தான் இப்போது காதலாய் உருவெடுத்து நிற்கிறது என்பதில் ஐயமேதும் இல்லை.
அவன் கேட்ட கேள்விக்கு அவள் பதில் சொல்ல இயலாமல் தடுமாற என்றுமில்லாத வழக்கமாய் பையனும் வற்புறுத்தவில்லை.
தனக்கு தேவையான பதில் கிடைக்காவிடின் அத்தனை எளிதாய் விட்டு விடும் ரகம் அல்ல அவன்.அவனறிந்து அவள் முன் முதன் முதலாய் அவனுக்குள் சிறு பிறழ்வுகள்.
அவள் மீது அவன் பார்வை வழமைக்கு மாறாக இரசனையாய் படிய அவனுக்குள் பூக்கும் உணர்வுகள் வேறாக இருந்தது.
ஒரு கணம் அவனின் குறுகுறு பார்வையை கண்டு அதிர்ந்தி தடுமாறி அலைபேசிக்குள் தலையை நுழைத்தவளோ மறந்தும் விழி நிமிர்த்தவில்லை.
தள்ளி நின்று கொண்டே ஒற்றைப் பார்வையால் அவளின் வாய்த்துடுக்குக்கு பூட்டுப் போட அவனால் மட்டுமே முடியும்.
அடித்து சொல்லியும் அடங்கி விடாத அவளின் நா பையனின் நீள் நயனங்களிடம் மட்டும் மண்டியிடும் மாயம் நிச்சயம் காதல் ஆயிற்றே.
இருவரிடையே பலத்த அமைதி.மூச்சுக்காற்று சத்தம் கூட பேரிரைச்சலாய் உருவெடுத்திருக்கும்,அதுவே இரவு நேரமென்றால்.
இந்த நொடி இருவரும் உணர்வுகளின் வசம் சிக்கித் தவிக்க அதிகமாய் தன்னைத் தொலைத்து நின்றது,
அவள் தான்.
அவனை உணராத உணர்வுகள் ஆட்சி செய்ய தவிக்க வைத்து உணர்ந்தவளிடம் அவனின் காதலுக்கு சாட்சி கூறிக் கொண்டிருந்தன.
அவனின் உணர்வுப் போராட்டம் அவளுக்குப் புரியவில்லை. அதை விட பெரிய பிரளயம் அவளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கவே அமைதி காத்தாள்.
இமை தாழ்த்தி இதழ்களை அழுந்த மூடி நடுங்கும் விரல்களுடன் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவளின் விரல்களில் இழையோடிய மெல்லிய நடுக்கத்தை கண்டதும் முற்றிலும் தலைகீழானது பையனின் மனநிலை.
இத்தனை நேரமும் உள்மனத் தவிப்பால் அதைக் கவனிக்க மறந்திருந்தது,பையனின் விழிகள்.
தன் தவிப்போ ஓடி ஒளிய ஏதோ ஒரு துள்ளலும் சுவாரஷ்யமும் விழிகளில் வந்து ஒட்டிக் கொள்ள இமைக்காமல் அவள் முகத்தையே பையன் பார்த்துக் கொண்டிருக்க ஆழமான அவன் பார்வையில் அவளின் உறுதி மொத்தமும் ஆட்டம் காண விரல்கள் இன்னும் இன்னுமே வலுவாய் நடுங்கியன.
விரல்களில் இருந்து வழுக்கப் பார்த்த அலைபேசியை இறுகப்பற்றியவளுக்கு விழிகளில் கொஞ்சமாய் நீர்க் கோர்க்கத் துவங்கிட கால்களிலும் சிறு தள்ளாட்டம்.
அவன் முன் இத்தனை தடுமாறிடுவோம் என்று உணரும் வரை அவளுக்கே தெரிந்திருக்காது.இனம் புரியாத அவஸ்தையில் வெகுவாய் சிக்கிக் கொண்டவளுக்கு மீளும் வழி தெரியவில்லை.
கவலை வந்தால் கூட அடிக்கடி நடைபெறாவிடினும்
அதீத உணர்ச்சி வசப்பட்டால் அவளுக்கு விழிகளில் நீர் கட்டுவது வாடிக்கை.அழுகை என்றிட முடியாது.நீர் மட்டும் விழிகளில் சேர்ந்து கொள்ளும்.
சில நேரங்களில் தானாக வற்றிப் போனாலும் உணர்வுகளின் ஆதிக்கம் கூடுதலாய் இருக்கும் போது மட்டும் தன்னைக் கேளாமல் அணை கடக்கும்.
பையனின் அருகாமையிலும் ஆழப் பார்வையிலும் எத்தனையோ முறை விழித்திரவம் வடிந்தோடியிருக்கிறது என்றாலும் பையன் அதைக் கண்டதில்லை.
கண்டதில்லை என்பதை காணவிட்டதில்லை அவள்.அவன் மீது காதல் இருந்தாலும் தன் பலவீனத்தை பையனின் முன்னே காட்டுவதில் அவளுக்கு கொஞ்சமேனும் இஷ்டமில்லை.
பதட்டத்தில் விழிகள் கலங்கத் துவங்க விழி நிமிர்த்தாவிடினும் அவனுக்கு அது புலப்பட இன்னுமே பார்வையை திருப்பவில்லை.இன்னுமே துளைத்துப் பார்த்து வைத்தான்,அவள் விழிகளை.
ஏன் பார்க்கிறான்..?
சத்தியமாய் அவனுக்கேத் தெரியாது.
அவளை பார்க்கும் போது அவனின் விழிகளில் வெளிப்படும் கோபம்,எரிச்சல்,வெறுப்பு,நகைப்பு,கிண்டல்,
ஆக்ரோஷம் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டவளால் அந்த விழிகளில் தெரியும் துள்ளலையும் சுவாரஷ்யத்தையும் அத்தனை எளிதாய் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
உயிரைக்குத்தும் பார்வையில் உருகி நிற்க முயன்றிடும் இதயத்தை இறுகப் பிடித்துக் கொண்டு போராடுபவளின் உணர்வுப் போராட்டத்தை அவனுமே முற்றாக உணர்ந்து கொள்ளா இயலாது.அது அவளுக்கான உணர்வல்லவா..?
அவனின் பார்வை ஆர்வமாய் அவள் மீது படிவதென்பதே அவள் உயிருக்குள் புகுந்து உறையச் செய்ய அவளறிந்து காதலாய் பார்த்திருந்தானெனில்..?எத்தனை முறை செத்துப் பிழைத்திருப்பாளோ..?
விழி மூடி தலை தாழ்த்தி அமர்ந்திருந்தவளின் தோரணையில் மாற்றம் இல்லை.முகத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகளை புறங்கைத் துடைக்க எச்சில் விழுங்கிக் கொண்டவளின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.ஒட்டிக் கொண்டிருந்த இமை முடிகள் சற்றே நனைந்திருக்க இன்னுமே அவனின் பார்வை அவளின் முகத்தை விட்டு நகரவில்லை எனப் புரிந்தவளின் மனம் அவனுக்கு அர்ச்சித்து தள்ள அதற்கு மேலும் அவளால் முடியவில்லை.
விருட்டென எழுந்து கடந்திட அதைக் கண்டவனின் இதழ்கள் மெலிதாய் விரிய எப்போதும் போல் பக்கமாய் விரல் நுழைத்து சிகை கோதிய படி சிரித்தான்,பையன்.
வேறொரு இருக்கையில் வந்தமர்ந்தவளுக்கு ஆழமாய் மூச்சு வாங்க அவனின் முன் இத்தனை தடுமாறுவது ஏனென தன்னையே நொந்து கொண்டவளுக்கு கண்ணீர் வழிந்தே விட்டது.
ஒற்றைப் பார்வை இத்தனை ஆட்டுவிக்குமா..? தெரியவில்லை.
ஆனால்,அவனின் ஒற்றைப் பார்வை காதல் கொண்ட அவளை இதை விட ஆட்டி வைக்கும்.
கவலையேதும் இல்லை.
அதீத மகிழ்வா..? அதுவும் புரியவில்லை.
ஆனால்,கண்ணீர் மட்டும் வழிந்தது.
இரு கைகளாலும் முகத்தை மூடி தன்னை சமப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்,
மித்ரஸ்ரீயவள்.
ரிஷியின் மனைவியானவள்.
தொடரும்.
🖋️அதி..!
2024.03.18
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்னது ஏற்கனவே ரிஷிக்கும் மித்ராவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சா … இவங்க ஏன் இரணதீரபுரம் போறாங்க … காலேஜ் பசங்க எல்லாம் பேய் கிட்ட மாட்ட போறாங்களோ